இறந்தவரைப் பிரார்த்திக்கக் கூடாது

இறந்தவரைப் பிரார்த்திக்கக் கூடாது

ரணித்த மகான்கள் நம்மைப் போலவே உயிருடன் உள்ளனர் என்று ஒரு வாதத்துக்காக வைத்துக் கொள்வோம். ஒருவர் உயிருடன் இருப்பதால் அவரிடம் பிரார்த்திக்கலாமா? அவருக்குக் கடவுள் தன்மை வந்து விடுமா? நாம் கூட உயிருடன் தான் இருக்கிறோம். நம்மில் ஒருவர் மற்றவரிடம் பிரார்த்தனை செய்யலாமா?

ஈஸா நபியவர்கள் இன்று வரை உயிருடன் தான் உள்ளனர். இதை 4:157-159, 5:75, 43:61 ஆகிய வசனங்கள் கூறுகின்றன.

ஈஸா நபியவர்கள் இவ்வுலகில் ஏராளமான அற்புதங்களை நிகழ்த்தினார்கள். அவர்களை அழைத்துப் பிரார்த்திக்கும் கிறித்தவர்களின் நடவடிக்கை தவறானது என்று நம்புகின்ற முஸ்லிம்கள், ஈஸா நபிக்குச் சமமாக இல்லாதவர்களிடம் பிரார்த்திப்பது எந்த வகையில் சரியானதாகும்?

அனைத்தையும் படைத்துப் பரிபாலிக்கும் அனைத்து ஆற்றலும் உள்ளவனிடம் தான் பிரார்த்திக்க வேண்டும். ஒருவர் உயிருடன் இருப்பதால் மட்டும் அவரிடம் பிரார்த்திக்க முடியாது.

இது பற்றி அல்லாஹ் தெள்ளத் தெளிவாக எச்சரிப்பதைப் பாருங்கள்!

உண்மையான பிரார்த்தனை அவனுக்கே உரியது. அவனன்றி இவர்கள் யாரைப் பிரார்த்திக்கிறார்களோ அவர்கள் சிறிதளவும் இவர்களுக்குப் பதிலளிக்க மாட்டார்கள். தண்ணீர் (தானாக) வாய்க்குள் செல்ல வேண்டும் என்பதற்காக இரு கைகளையும் அதை நோக்கி விரித்து வைத்துக் கொள்பவனைப் போலவே அவர்கள் உள்ளனர். அது (தானாக) அவனது வாய்க்குள் செல்லாது. (ஏக இறைவனை) மறுப்போரின் பிரார்த்தனை வீணாகவே இருக்கும்.

திருக்குர்ஆன் 13:14 

அல்லாஹ்வையன்றி யாரை அழைக்கிறார்களோ அவர்கள் எதையும் படைக்க மாட்டார்கள். அவர்களே படைக்கப்படுகின்றனர். அவர்கள் இறந்தவர்கள்; உயிருடன் இருப்போர் அல்லர். எப்போது உயிர்ப்பிக்கப்படுவார்கள்' என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள்.

திருக்குர்ஆன் 16:20 

அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே. நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் உங்களுக்குப் பதில் தரட்டும்!

திருக்குர்ஆன் 7:194 

செவியேற்பவர்களே பதிலளிக்க முடியும். இறந்தவர்களை அல்லாஹ் உயிர்ப்பிப்பான். பின்னர் அவனிடமே அவர்கள் கொண்டு செல்லப்படுவார்கள்.

திருக்குர்ஆன் 6:36 

நீர் இறந்தோரைச் செவியேற்கச் செய்ய முடியாது! அழைப்பைப் புறக்கணித்து ஓடும் செவிடர்களைக் கேட்கச் செய்ய உம்மால் முடியாது.

திருக்குர்ஆன் 27:80 

இறந்தோரைச் செவியுறச் செய்ய உம்மால் முடியாது! செவிடர்கள் பின்வாங்கி ஓடினால் அழைப்பை அவர்களுக்குச் செவியேற்கச் செய்ய உம்மால் முடியாது.

திருக்குர்ஆன் 30:52 

நீங்கள் அவர்களை அழைத்தால் உங்கள் அழைப்பை அவர்கள் செவியுற மாட்டார்கள். செவியேற்றார்கள் என்று வைத்துக் கொண்டாலும் உங்களுக்குப் பதில் தர மாட்டார்கள். கியாமத் நாளில் நீங்கள் இணை கற்பித்ததை அவர்கள் மறுத்து விடுவார்கள். நன்கறிந்தவனைப் போல் உமக்கு எவரும் அறிவிக்க முடியாது.

திருக்குர்ஆன் 35:14 

உயிருடன் உள்ளோரும், இறந்தோரும் சமமாக மாட்டார்கள். தான் நாடியோரை அல்லாஹ் செவியேற்கச் செய்கிறான். மண்ணறைகளில் உள்ளவர்களை நீர் செவியேற்கச் செய்பவராக இல்லை.

திருக்குர்ஆன் 35:22 

கியாமத் நாள் வரை தமக்குப் பதில் தராத, அல்லாஹ் அல்லாதோரை அழைப்பவரை விட மிகவும் வழிகெட்டவர் யார்? அவர்களோ தம்மை அழைப்பது பற்றி அறியாது உள்ளனர். மக்கள் ஒன்று திரட்டப்படும் போது அவர்கள் இவர்களுக்குப் பகைவர்களாக ஆவார்கள். இவர்கள் தம்மை வணங்கியதையும் மறுப்பார்கள்.

திருக்குர்ஆன் 46:5,6 

எதையும் படைக்காதவற்றையா அவர்கள் (இறைவனுக்கு) இணைகற்பிக்கின்றனர்? அவர்களே படைக்கப்படுகின்றனர். இவர்களுக்கு உதவிட அவர்களுக்கு இயலாது. தமக்கே கூட அவர்கள் உதவிக் கொள்ள மாட்டார்கள். (எதையும்) தெரிவிக்க அவர்களை நீங்கள் அழைத்தால் அவர்கள் உங்களைப் பின்பற்ற மாட்டார்கள். நீங்கள் அவர்களை அழைப்பதும், மௌனமாக இருப்பதும் உங்களைப் பொறுத்த வரை சமமானது.

திருக்குர்ஆன் 7:191,192,193 

'வானங்களுக்கும், பூமிக்கும் இறைவன் யார்?' என்று (முஹம்மதே!) கேட்டு, அல்லாஹ் என்று கூறுவீராக! 'அவனன்றி பாதுகாவலர்களைக் கற்பனை செய்து கொண்டீர்களா? அவர்கள் தமக்கே நன்மை செய்யவும், தீமை செய்யவும் ஆற்றல் பெற மாட்டார்கள்' என்று கூறுவீராக! 'குருடனும், பார்வையுள்ளவனும் சமமாவார்களா? இருள்களும், ஒளியும் சமமாகுமா?' என்று கேட்பீராக! 'அல்லாஹ்வுக்கு நிகரானவர்களைக் கற்பனை செய்து விட்டார்களா? அவர்கள் அல்லாஹ் படைத்ததைப் போல் படைத்து, அதன் காரணமாக படைத்தது யார்?' என்று இவர்களுக்குக் குழப்பம் ஏற்பட்டு விட்டதா? ஒவ்வொரு பொருளையும் அல்லாஹ்வே படைத்தவன்; அவன் தனித்தவன்; அடக்கியாள்பவன்' என்று கூறுவீராக!

திருக்குர்ஆன் 13:16 

'அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் பூமியில் எதைப் படைத்தனர் என்று எனக்குக் காட்டுங்கள்! அல்லது வானங்களில் அவர்களுக்குப் பங்கு உண்டா? என்பதற்குப் பதில் சொல்லுங்கள்! நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இதற்கு முன் சென்ற வேதத்தையோ, அறிவுச் சான்றையோ என்னிடம் கொண்டு வாருங்கள்!' என்று (முஹம்மதே!) கேட்பீராக!

திருக்குர்ஆன் 46:4 

இந்த வசனங்களும், இது போன்ற எண்ணற்ற வசனங்களும் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரிடமும் பிரார்த்தனை செய்யக் கூடாது என்பதைத் தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கின்றன.

2:186, 3:38, 7:29, 7:55, 7:56, 7:180, 7:197, 10:12, 10:106, 14:39, 14:40, 17:56, 17:110, 19:4, 21:90, 22:12, 22:13, 22:62, 22:73, 23:117, 27:62, 31:30, 35:13, 35:40, 39:38, 40:12, 40:20, 40:60, 40:66.

மரணித்தவர்கள் ஆன்மாக்கள் உலகில் அல்லாஹ்வின் கட்டுப்பாட்டில் உயிருடன் உள்ளனர்; அவர்கள் இவ்வுலகுக்கு வர முடியாது; இவ்வுலகில் நடப்பதையும், பேசுவதையும் அறிய முடியாது; அவர்களால் யாருக்கும் எந்த உதவியும் செய்ய முடியாது என்பதைத் தக்க ஆதாரங்களுடன் தெளிவுபடுத்தியுள்ளோம்.

இதை உணர்ந்து அல்லாஹ்வுக்கு இணைகற்பிக்காமல் அல்லாஹ்வை மட்டும் வணங்கும் நன்மக்களாக நம்மை ஆக்கி அருள்வானாக!

Leave a Reply