இறைநேசம் உள்ளம் சம்மந்தப்பட்டது என்பதால் இறைநேசர்களை கண்டறிய  முடியாது

ருவரை இறைநேசர் என்று யாரும் முடிவு செய்ய முடியாது என்பதற்கு நேரடியான பல ஆதாரங்கள் உள்ளன. அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் நேசர்களுக்கு எந்தப் பயமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். அவர்கள் (இறைவனை) நம்புவார்கள். (அவனை) அஞ்சுவோராக இருப்பார்கள்.

திருக்குர்ஆன் 10:62, 63

இறைநேசர்களுக்கு அச்சமும் இல்லை; கவலையும் இல்லை என இறைவன் கூறிவிட்டு, யார் இறைநேசர்கள் என்பதையும் சொல்லித் தருகிறான்.

நம்ப வேண்டியவைகளைச் சரியான முறையில் நம்புவதும், அல்லாஹ்வை அஞ்சுவதுமே இறைநேசர்களுக்கான இலக்கணம் என்று அல்லாஹ் கூறுகிறான்.

அல்லாஹ்வின் மீதும், வானவர்கள் மீதும், நபிமார்கள் மீதும், வேதங்கள் மீதும், மறுமையின் மீதும், விதியின் மீதும் சரியான நம்பிக்கை யாருடைய உள்ளத்தில் இருக்கிறதோ அவர்களும், யாருடைய உள்ளத்தில் இறைவனைப் பற்றிய அச்சம் இருக்கிறதோ அவர்களுமே இறைநேசர்கள் என்று இறநேசர்களின் இலக்கணத்தை அல்லாஹ் சொல்கிறான்.

ஜுப்பா அணிந்திருப்பவர், பெரிய தலைப்பாகை கட்டியவர், பெரிய தாடி வைத்திருப்பவர், பள்ளிவாசலிலேயே அமர்ந்து தவம் செய்பவர், வருடா வருடம் ஹஜ் செய்பவர், எல்லா நேரமும் வணக்கத்தில் மூழ்கியிருப்பவர், பொருளாதாரத்தை வாரி வாரி வழங்குபவர் போன்ற அடையாளங்களை அல்லாஹ் கூறி இருந்தால் இறைநேசர்களை நாம் கண்டுபிடித்து விடலாம். ஆனால் இறைநேசர்களுக்கு அடையாளமாக அல்லாஹ் கூறியவை உள்ளம் சம்மந்தப்பட்டவை.

நம்ப வேண்டியவைகளை ஒருவர் உண்மையாகவே நம்பி இருக்கிறாரா என்பதும், அல்லாஹ்வை ஒருவர் அஞ்சுகிறாரா என்பதும் அவரது உள்ளத்தில் உள்ளவையாகும். இதை யாரும் கண்டுபிடிக்க முடியாது என்பதால் இன்னார் இறைநேசர் என்பதையும் கண்டுபிடிக்க முடியாது என்பது இதிலிருந்து உறுதியாகின்றது.

இறைநேசர்கள் யார் என்பது மறுமையில்தான் தெரிய வரும். சொர்க்கவாசிகள் என்று எடுத்த எடுப்பிலேயே யாருக்கு அல்லாஹ் தீர்ப்பளிக்கின்றானோ அவர்கள்இறைநேசர்கள் என்று அப்போது தான் அறிய முடியும். அல்லாஹ் தீர்ப்பளிப்பதற்கு முன்னர் இறைநேசர் பட்டம் கொடுக்க யாருக்கும் அதிகாரம் இல்லை.

Leave a Reply