இறைநேசர்களைக் கண்டறிய முடியுமா?

இறைநேசர்களைக் கண்டறிய முடியுமா?

றுமையில் வெற்றி பெறவேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காக அல்லாஹ்வுக்கு அஞ்சி, அவனது கட்டளைகளை ஏற்றுச் செயல்பட்ட நல்லவர்கள் இறைநேசர்கள் எனப்படுகின்றனர். இறைநேசர்கள் என்பதற்கான இந்த இலக்கணத்தை அனைவரும் அறிந்து கொள்ள முடியும்.

ஆனால் தனிப்பட்ட மனிதர்களை இறைநேசர்கள் என்று கூறமுடியுமா? அறிந்து கொள்ள முடியுமா?

இறைநேசர்கள் என்பதற்கு, இறைவனை நேசிப்பவர்கள் என்றும் பொருள் கொள்ளலாம். இறைவனால் நேசிக்கப்பட்டவர்கள் என்றும் பொருள் கொள்ளலாம். ஒருவரை இறைநேசர் என்று யாரும் முடிவு செய்ய முடியாது என்பதை இந்த இரண்டு அர்த்தங்களுமே தாங்கி நிற்கின்றன.

இறைவனை நேசிப்பவர் என்று பொருள் கொண்டால் அந்த நேசம் அவரது உள்ளத்தில் தான் இருக்கும். அவர் இறைவனை நேசிக்கிறாரா? அல்லது நடிக்கிறாரா? என்று மற்றவர்களால் கண்டுபிடிக்க முடியாது.

இறவனால் நேசிக்கப்பட்டவர் என்று பொருள் கொண்டால் அது இறைவனுக்கு மட்டும் தான் தெரியும். இறைவனின் உள்ளத்தில் உள்ளதை இறைவனைத் தவிர யாரும் அறிய முடியாது என்பதால் இதையும் யாரும் கண்டுபிடிக்க முடியாது.

இறைவனின் உள்ளத்தில் இருப்பதை அறிந்து கொள்வது இருக்கட்டும். ஒரு மனிதனை இன்னொரு மனிதன் மெய்யாக நேசிக்கிறான் என்பதைக் கூட அறிய முடியாது. கணவன் மனைவிக்கு இடையே எவ்வளவு நெருக்கம் இருந்தாலும் கணவன் மெய்யாக நேசிக்கிறானா என்று மனைவியால் கண்டுபிடிக்க முடியாது. மனைவி மெய்யாக நேசிக்கிறாளா என்று கணவனால் கண்டுபிடிக்க முடியாது.

இரு நண்பர்களுக்கிடையே உள்ள நட்பாகட்டும்; இரு உறவினர்களுக்கிடையே உள்ள உறவாகட்டும்; தலைவன் தொண்டனுக்கு இடையே உள்ள நேசமாகட்டும் இவை மெய்யானதுதானா என்று அறுதியிட்டுச் சொல்ல முடியாது.

வெளிப்படையான செயல்களை வைத்துத் தான் ஒரு மனிதன் இன்னொரு மனிதனை அறிய முடியும். ஆனால் அந்த அறிவு முற்றிலும் சரியாக இருப்பதில்லை.

இவனை நம்பி கடன் கொடுத்தேன்; என்னை ஏமாற்றி விட்டான் என்று பலரும் புலம்புவதைக் கான்கிறோம். அவனது உள்ளத்தில் உள்ளதை அறிய முடியாததால் தான் கடன் கொடுத்து ஏமாந்து போகின்றனர்.

ஒருவனை நம்பி நாம் கடையில் சேர்க்கிறோம். அவன் அனைத்தையும் சுருட்டிக்கொண்டு ஓடி விடுகிறான். அவன் ஓடிப் போன பின்பு தான் அவனுடைய உள்ளத்தில் தவறான எண்ணம் இருந்தது தெரிகிறது.

ஓடுவதற்கு முன்னால் அவன் நல்லவனாகத்தான் தெரிந்தான். என் மனைவி என்னை மெய்யாக நேசிக்கிறாள் என்று நம்பி என் சொத்துக்கள் அனைத்தையும் அவள் பெயரில் மாற்றிக் கொடுத்தேன் என்று புலம்பும் கணவர்களைப் பார்க்கிறோம். ஓருடல் ஈருயிராக இணைந்திருந்த மனைவி தன்னை நேசிக்கிறாளா என்று கணவனால் அறிய முடியவில்லை என்றால் அல்லாஹ்வை ஒருவர் நேசிக்கிறார் என்று எப்படி அறிய முடியும்? அப்படி முடிவு செய்தால் அல்லாஹ் நினைப்பதைக் கண்டுபிடிக்கும் ஆற்றலுக்கு நாம் உரிமை கொண்டாடியதாக ஆகும்.

எனவே இவர் அவ்லியா, அவர் அவ்லியா என்று பட்டம் கொடுப்பதில் இருந்து முஸ்லிம்கள் விலகிக் கொள்ள வேண்டும் என்பதற்கு இதுவே போதுமான ஆதாரமாகும்.

ஒருவரை இறைநேசர் என்று யாரும் முடிவு செய்ய முடியாது என்பதற்கு நேரடியான பல ஆதாரங்கள் உள்ளன. அவற்றை ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

Leave a Reply