இலங்கை ரிசானாவிற்கு மரணதண்டனை! அறிவு ஜீவிகளின் இரட்டை முகங்கள்!

இலங்கை ரிசானாவிற்கு மரணதண்டனை!

அறிவு ஜீவிகளின் இரட்டை முகங்கள்!

குழந்தையைக் கொன்ற குற்றத்திற்காக இலங்கையைச் சேர்ந்த ரிஸானா என்பவருக்கு சவூதி நீதிமன்றம் மரண தண்டனை அளித்துள்ளது. இது இந்தியாவில் உள்ள சில எழுத்தாளர்களால் கடுமையாக விமர்சிக்கப்படுகிறது. ஆனால் இவர்களின் விமர்சனத்திலிருந்து இவர்களுக்கு நிலையான கொள்கையும், தெளிவான பார்வையும், பொது அறிவும் இல்லை என்பது தெரிகிறது.

தனக்குத்தானே முரண்படுவது தான் பொய் என்பதன் அளவுகோல். இது நமது நாட்டு அறிவு ஜீவிகளிடம் அதிகம் காணப்படுகிறது.

டெல்லி மாணவி கற்பழித்துக் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை விதிக்க வேண்டும் என்று இவர்கள் புலம்பினார்கள். சட்டமும், நீதிமன்றமும் முடிவெடுக்க வேண்டிய விஷயத்தில் மக்களைத் தூண்டிவிட்டு அரசாங்கம் தூக்குத் தண்டைனை விதிக்க வேண்டும் என்று பேச வைத்தார்கள்.

போகக்கூடாத நேரத்தில் ஆண் நண்பருடன் நள்ளிரவில் உல்லாசமாகச் சுற்றிய பெண்ணாக இருந்தாலும் அவருக்கு ஏற்பட்ட அநீதிக்காக இவர்கள் குரல் கொடுத்தார்கள்.

பருவ வயது அடைந்த ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டதற்காக மரண தண்டனை அளிக்க வேண்டும் என்பது இவர்களது கொள்கையாக இருந்தால், இவர்களுக்கு சிந்திக்கும் திறனும், மூளையும், மனசாட்சியும் இருந்தால் இலங்கைப் பெண் விஷயமாக எந்த நிலைப்பாட்டை எடுத்திருக்க வேண்டும்?

ஒரு குழந்தையைக் கொன்ற குற்றத்திற்காக ரிஸானாவுக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. டெல்லி மாணவி கொல்லப்பட்டதற்கு மரண தண்டனை நியாயம் என்றால், அதை விட ஆயிரம் மடங்கு நியாயம் நியாயம் குழந்தை கொல்லப்பட்ட வழக்கில் உள்ளது.

குழந்தையின் உயிர், உயிர் இல்லையா?

சிறுமிக்குத் தண்டனையா என்றும் இவர்கள் இப்போது கேள்வி எழுப்புகின்றனர்.

ஆனால் டெல்லி மாணவி கற்பழிப்பு வழக்கில் மைனர் பையனுக்கும், தூக்குத் தண்டனை கொடுக்க வேண்டும் என்றும், மைனர் வயதை 14 ஆகக் குறைக்க வேண்டும் என்றும் இவர்கள் தான் கூப்பாடு போட்டார்கள். அதிகமான மாநில அரசுகளும் இதைக் கொள்கை அளவில் ஒப்புக் கொண்டுள்ளன.

இவர்கள் இத்தனை ஆண்டுகளுக்குப் பின் இப்போது தான் மைனர் என்பதன் அளவுகோலைக் கண்டுபிடித்துள்ளார்கள். ஆனால் பருவ வயதை அடைவது தான் மேஜர் வயது என்று இஸ்லாம் அன்றே கூறிவிட்டது.

சவூதியில் அது தான் சட்டமாக உள்ளதால் 17வயதுப் பெண் அந்தச் சட்டப்படி மேஜர் என்பதால் மைனர் என்ற அடிப்படையில் கருணை கோர முடியாது.

டெல்லி மாணவி பிரச்சினையில் மைனரை மேஜர் ஆக்கப் பார்க்கிறார்கள். சவூதி விஷயத்தில் மேஜரை மைனர் ஆக்க முயல்கிறார்கள். இவர்களது சிந்திக்கும் திறனில் கோளாறு இருக்கிறது என்பதற்கு இதுவும் சான்றாக உள்ளது.

இந்தியக் குழந்தையாக அது இல்லாததால், அதன் விபரீதம் இவர்களுக்கு விளங்கவில்லையா? சில எழுத்தாளர்கள், தங்களின் குழந்தைகள் கொல்லப்பட்டிருந்தால், இதே நியாயத்தைப் பேசுவார்களா? பறி கொடுத்தவர்களின் நிலையில் இருந்தும், பாதிக்கப்பட்டவர்களின் நிலையில் இருந்தும் இதைப் பார்ப்பது தான் சரியான பார்வையாகும்.

அனைவருக்கும் சம நீதி என்பதுதான் நீதி செலுத்துதலில் கவனிக்கப்பட வேண்டிய முக்கிய விஷயமாகும். டெல்லி மாணவிக்கு ஒரு நீதியும், சவூதி குழந்தைக்கு வேறு நீதியும் கேட்பது அனைவருக்கும் சமநீதி என்ற அடிப்படைக்கு எதிரானதாகும்.

அடுத்ததாக இதை தர்க்க ரீதியாக நியாயப்படுத்த அந்தப் பெண்ணானவர் குழந்தையைக் கொல்லவில்லை என்று வேறு கதை அளந்து கொண்டுள்ளனர்.

ஒருவர் குற்றவாளியா? இல்லையா என்பததை பேனா பிடித்தவர்கள் முடிவு செய்ய இயலாது. எந்த நாட்டில் குற்றம் நடக்கிறதோ அந்த நாட்டின் சட்டமும் நீதிமன்றமும் தான் அதை முடிவு செய்ய இயலும்.

குழந்தை கொல்லப்பட்ட போது சாட்சிகளாகவோ, அல்லது உடலைப் பரிசோதித்த மருத்துவர்களாகவோ இவர்கள் இருக்கவில்லை. விசாரணை அதிகாரிகளாகவும் இருக்கவில்லை. மேலும் வழக்கை விசாரித்த நீதிபதிகளாகவோ அல்லது நீதிமன்ற சாட்சிகளாகவோ இவர்கள் இருக்கவில்லை. இது குறித்து முடிவு செய்ய வேண்டிய ஆவணமும், ஆதாரமும், அறிவும் இவர்களிடம் இல்லாத போது அந்தப் பெண் அப்பாவி என்று தீர்ப்பு எழுதுவது தான் அறிவுடையவர்களின் செயலா?

லஞ்சம் ஊழலுக்கு இடமில்லாமல், நியாயமாக விசாரிக்கும் ஒரு நாட்டில் அந்த நாட்டுச் சட்டப்படி குற்றம் நிரூபிக்கப்பட்டதன் அடிப்படையில் தீர்ப்பு அளிக்கப்பட்டிருந்தால், அது தான் குற்றவாளி என்பதற்கான ஆதாரம்.

அஜ்மல் கசாப் அப்பாவி, அவனைத் தூக்கில் போட்டது அநியாயம் என்று சவூதி அறிவு ஜீவிகள் எழுதினால், இவர்கள் அந்த அதிகாரத்தை சவூதி அறிவு ஜீவிகளுக்கு வழங்குவார்களா?

கோவை குண்டு வெடிப்பு அரசாங்கமே நடத்தியது, அதில் கைது செய்யப்பட்ட அனைவரும் அப்பாவிகள் என்று இவர்களைப் போல் கற்பனை செய்து எழுதினால், அதை இவர்கள் ஏற்றுக் கொள்வார்களா?

இவர்களுக்கு கொஞ்சமும் மூளை இல்லை, மனசாட்சியும் இல்லை, உலக அறிவும் இல்லை, சட்ட அறிவும் இல்லை என்பதை இதில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

பெண் என்பதால் மரண தண்டனை கூடாது என்று இவர்கள் நினைத்தால் இப்போதும் இவர்கள் அறிவற்றவர்கள் என்று தான் நிரூபித்துள்ளார்கள். ஆணும் பெண்ணும் சமம் என்று எழுதிவிட்டு குற்றம் செய்வதில் மட்டும் சமம் இல்லை என்று இவர்களது மூளை தீர்ப்பளிக்கிறது என்றால் இது மனநோயில்லாமல் வேறு எதுவாக இருக்க முடியும்?

சவூதியில் வசிக்கும் ஒரு இந்தியக் குழந்தையை, இந்தியப் பெண் கொலை செய்தாலும், சவூதியில் இப்படித்தான் தீர்ப்பு அளிக்கப்பட்டிருக்கும். அப்போது இவர்கள் குழந்தையின் பக்கம் பேசியிருப்பார்களா? அல்லது கொலை செய்தவர் பக்கம் பேசி இருப்பார்களா? நாட்டு மக்கள் அனைவரும் குழந்தையின் பக்கம் தான் நின்றிருப்பார்கள். அதை எதிர்த்து இவர்கள் வாய் திறந்தால் அடித்து உதைக்கப்படடு இருப்பார்கள்.

கோவையில் சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் இவர்கள் பேசிய நியாயம் இப்போது காணாமல் போனது ஏன்? மரண தண்டனை பெற்ற பெண் இந்து மதத்தவராக இருந்திருந்தால், இந்து என்பதற்காக மரண தண்டனை கொடுத்து விட்டார்கள் என்று கதையை மாற்றி எழுதியிருப்பார்கள். நல்ல வேலை கொலை செய்த பெண்ணும் முஸ்லிமாக இருந்ததால் இந்தக் கதையை இவர்கள் எழுத முடியவில்லை.

கொலை செய்த பெண் இந்தியாவைச் சேர்ந்தவராக இருந்திருந்தால், இந்தியர்கள் என்ன கிள்ளுக்கீரையா என்று இந்த கூறுகெட்ட அறிவு ஜீவிகள் புலம்பித் தள்ளியிருப்பார்கள். நல்ல வேளை அப்பெண் இலங்கை வாசியாக அமைந்துவிட்டார்.

மன்னரின் குடும்பப் பெண் விபச்சாரம் செய்த போது மரண தண்டனை அளித்த சவூதியில் அந்நிய நாட்டவர்கள் என்பதற்காக குற்றங்களில் சலுகை காட்டப்படுவது இல்லை. மற்ற விஷயங்களில் சொந்த நாட்டவர்களுக்கு சலுகை அளித்தாலும், கொலைக் குற்றத்தில் எல்லாம் சலுகை காட்ட மாட்டார்கள்.

இந்தியக் குழந்தையை சவுதிக்காரன் கொன்று, அந்தக் குற்றம் நிரூபிக்கப்பட்டால் இதே தீர்ப்புத்தான் வழங்கப்பட்டிருக்கும்.

இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் விமர்சிப்பது தான் இவர்களின் ஒரே நோக்கமாக இருக்கிறது. மக்களைத் தூண்டிவிடக்கூடிய பிரச்சினை வராத வரை நடுநிலை வேஷம் போடுவார்கள். எதில் மக்களைத் தூண்டி விட முடியுமோ அது போன்ற பிரச்சினைகள் கிடைத்தால், இஸ்லாத்தை விமர்சிப்பதற்கு பயன்படுத்திக் கொள்வார்கள். அறிவு ஜீவிகளின் இந்த இரட்டை முகம் மீண்டும் ஒரு முறை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

19.01.2013. 7:43 AM

Leave a Reply