இஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்

ஏகத்துவம் மார்ச் 2006

இஸ்லாத்தின் பார்வையில் ஏப்ரல் ஃபூல்

கே. முஹம்மத் நாஸிர் உமரீ, பேர்ணாம்பட்டு

ஏப்ரல் மாதம் துவங்கியவுடன் முஸ்லிம்களில் சிலர் பிறரை மதிக்காமல், உரியகவுரவத்தைக் கொடுக்காமல், அவர்களிடம் பொய் சொல்லி,அதற்குச் சத்தியமும் செய்துநம்ப வைத்து பிறகு ஏமாற்றுவது, ஏளனமாகச் சிரிப்பது, மேலும் அவர்களுக்கு இழிவைஏற்படுத்துவது போன்ற செயல்களை வழக்கமாக்கிக் கொண்டுள்ளார்கள். இவர்கள் பிறரைஏப்ரல் ஃபூல் – முட்டாளாக்கி அற்ப சந்தோஷத்தை அனுபவிப்பதை பார்க்கிறோம்.

எனவே நாம், நமக்கு வழிகாட்டியாகவந்த குர்ஆனையும், ஹதீஸையும்அடிப்படையாகக் கொண்டு இந்தத் தீமையைப் பற்றி அறிந்து, அதிலிருந்து விலகவும்,நேர்வழி பெறவும் முயற்சிக்க வேண்டும்.

ஹோலி கலாச்சாரம்

பொதுவாக மாணவர்கள் ஏப்ரல் மாதத்தில் பிறருடைய மேலாடைகள் மீது மையைத்தெளித்து அசிங்கப் படுத்துகின்றார்கள். இதை ஏப்ரல் ஃபூலின் ஓர் அடையாளமாகநினைத்து செய்கின்றனர். மையைத் தெளிக்கும் இந்த நடைமுறையானது ஹோலிபண்டிகையின்போது நிறங்களை பரஸ்பரம் வீசிக்கொள்ளும் இந்துக்களின் ஒருபிரிவினருடைய கலாச்சாரத்துடன் ஒத்துப் போகின்றது. எனவே மாற்று மதக்கலாச்சாரம் என்ற அடிப்படையில் முஸ்லிம்கள் இதைக் கைவிட வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் பிற சமுதாயத்தின்சம்பிரதாயங்களை (கலாச்சாரத்தை) ஏற்படுத்திக் கொள்கிறானோ அவனும் அவர்களைச்சார்ந்தவனே! (நூல்: அபூதாவூத் 3512)

இந்த நபிமொழியின் படி பிறர் மீது மையை வீசக் கூடியவனும் ஹோலிப் பண்டிகையைக்கொண்டாடும் இந்துக் களைச் சார்ந்தவனாகவே கருதப்படுவான்.

பொய்க் கலாச்சாரம்

இதைத் தவிர மக்களில் பலர் மற்றவர்களை ஏப்ரல் ஃபூல் (முட்டாள்) ஆக்குவதற்காகபொய் பேசுகின்றார்கள். இது பெருங்குற்றம் ஆகும். பொய் சொல்லி தீமை செய்துகொண்டிருப்பதன் காரணமாக அல்லாஹ்வின்அருளும் அன்பும் இழந்து அவனதுகோபத்திற்கு ஆளாகி விடுகின்றார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பொய் நிச்சயமாகத் தீமைக்கு வழிவகுக்கும். தீமை நரகத்திற்கு வழிவகுக்கும். ஒரு மனிதர் பொய் பேசிக் கொண்டேஇருப்பார். இறுதியில் அவர் அல்லாஹ்விடம் பெரும் பொய்யன் என்று பதிவுசெய்யப்பட்டு விடுவார்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் (ரலி)

நூல்: புகாரி 6094

ஆக இந்தப் பொய்யர்கள் அதிகமான தீமைகளைச் செய்து நரகத்தை அடைகின்றனர்.எனவே நாம் பொய் பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

பொய்ச் சத்தியம் செய்தல்

இன்னும் சிலர் பிறரை முட்டாளாக்குவதற்கு முயற்சி செய்யும் போதுஅவர் நம்ப மறுத்துவிட்டால் உடனே பொய்ச் சத்தியம் செய்து நம்ப வைக்கின்றனர்.

இவர்களைப் பற்றி வல்ல அல்லாஹ் திருமறையில் கூறுகின்றான்:

அதிகம் சத்தியம் செய்யும் இழிந்தவன் எவனுக்கும் நீர் கட்டுப்படாதீர்!

(அல்குர்ஆன் 68:10)

மேலும் இப்படிப் பொய்ச் சத்தியம் செய்வது யாருடைய குணம் என்றால்அல்லாஹ்விற்குப் பிடிக்காத நயவஞ்சகர்களின் குணமாகும்.

இவர்களுடைய இந்தச் சுபாவத்தைப் பற்றி அல்லாஹ் கூறுகின்றான்:

அறிந்து கொண்டே பொய் சத்தியம் செய்கின்றனர். துன்புறுத்தும் வேதனையைஅல்லாஹ் அவர்களுக் குத் தயாரித்துள்ளான். அவர்கள் செய்து கொண்டிருந்தது மிகவும்கெட்டது. (அல்குர்ஆன் 58:14,15)

எனவே நாம் ஒரு போதும் பொய்ச் சத்தியம் செய்யக் கூடாது.

பொய் சாட்சி கூறல்

ஏப்ரல் மாதத்தில் பிற மக்களை முட்டாளாக்க முயற்சித்துக் கொண்டிருக்கும் போது அந்தஇடத்திற்கு அருகில் இருக்கும் சிலர் அந்தப் பொய்யர்களுக்கு ஆதரவு அளித்து, உதவிசெய்யும் முகமாக பொய் சாட்சி பகர்கின்றனர். இதுவும் பெரும் பாவமான காரியமாகும்.

அபூபக்ரா (ரலி) கூறியதாவது: "பெரும் பாவங்களிலேயே மிகப் பெரும் பாவங்களை நான்உங்களுக்கு அறிவிக்கட்டுமா?” என்று நபி (ஸல்) அவர்கள் மூன்று முறை கேட்டார்கள். "ஆம்! அல்லாஹ்வின் தூதரே! அறிவியுங்கள்” என்று நபித் தோழர்கள்கூறினார்கள்.உடனே நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ்விற்கு இணை வைப்பதும், பெற்றோருக்குத்துன்பம் தருவதும்தான்” என்று கூறினார்கள். சாய்ந்து கொண்டிருந்த நபி (ஸல்) அவர்கள்பிறகு எழுந்து அமர்ந்து, "அறிந்து கொள்ளுங்கள். பொய் பேசுவதும், பொய் சாட்சியமும்(பெரும் பாவம் தான்). பொய் பேசுவதும்பொய் சாட்சியமும் (பெரும் பாவம் தான்)” என்றுதிரும்பத் திரும்பக் கூறிக் கொண்டே இருந்தார்கள்.

(நூல்: புகாரி 5976, முஸ்லிம் 126)

ஏமாற்றுதல்

இன்னும் சிலர் உண்மையுடன் பொய்யும் புரட்டும் சேர்த்துப் பேசுவார்கள். இதற்குப் பெயர்ஏமாற்றுதல், மோசடி ஆகும். உதாரணமாக ஏப்ரல் மாதத்தில் ஏமாற்றுவதற்காக, விபத்துநடந்து விட்டது என்றோ, இன்னார் அபாயகரமான (சீரியஸான) நிலையில் இருக்கிறார்என்றோ, மரணித்து விட்டார் என்றோ தொலைபேசி அல்லது தந்தி மூலமாகத் தகவல்அனுப்பி வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:யார் ஏமாற்றுகின்றானோ அவன் என்னைச் சார்ந்தவன்அல்ல.

(நூல்கள்: முஸ்லிம் 147, திர்மிதீ 1236)

"மோசடி செய்பவனுக்கு மறுமை நாளில் அவனுடைய மோசடியை வெளிச்சமிட்டுக்காட்டும் முகமாக அடையாளக் கொடி ஒன்று நட்டப்படும். "இது இன்னாரின் மகன்இன்னாரின் மோசடி’ என்று கூறப்படும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்கூறினார்கள். (நூல்: புகாரி 6178)

நபி (ஸல்) அவர்கள் கூறியதாவது: மோசடி செய்யும் ஒவ்வொருவனுக்கும் ஒருஅடையாளக் கொடி உண்டு. அதுமறுமையில் அவனது புட்டத்திடம் நட்டப்படும். (நூல்:முஸ்லிம் 3271)

முஸ்லிமின் அடுத்த அறிவிப்பில் அவனுடைய மோசடிகளுக்குத் தக்கவாறு அதுஉயர்த்தப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இடம் பெற்றுள்ளது.

எனவே வல்ல அல்லாஹ்வுக்குப் பயந்து ஏமாற்றுதல், மோசடி செய்தல்ஆகியவற்றிலிருந்து முழுவதுமாக விலகி உண்மையாளராக நாம் திகழ வேண்டும்.

கேலி செய்தல்

மக்களில் சிலர் சிலரை ஏப்ரல் ஃபூல் ஆக்கிய பிறகு ஏளனமாகச் சிரிப்பது, கிண்டல்செய்வது, ஆர்ப்பரிப்பது என்று எப்படியெல்லாம் அவமரியாதை செய்ய முடியுமோஅனைத்தையும் கையாளுகின்றனர். இந்தக் கெட்ட குணத்திற்குச் சொந்தக்காரர்கள் யார்என்றால் இறை நிராகரிப்பாளர்கள் தாம்.

(ஏக இறைவனை) மறுப்போருக்கு இவ்வுலக வாழ்க்கை அழகாக்கப் பட்டுள்ளது. அவர்கள்நம்பிக்கை கொண்டோரைக் கேலி செய்கின்றனர். (இறைவனை) அஞ்சியோர் கியாமத்நாளில் அவர்களுக்கு மேலே இருப்பார்கள். அல்லாஹ், நாடியோருக்கு கணக்கின்றிவழங்குகிறான்.

(அல்குர்ஆன் 2:212)

தாராளமாக (நல் வழியில்) செலவிடும் நம்பிக்கை கொண் டோரையும், தமதுஉழைப்பைத் தவிர வேறு எதையும் பெற்றுக் கொள்ளாதவர்களையும் அவர்கள் குறைகூறி கேலி செய்கின்றனர். அல்லாஹ் அவர்களைக் கேலி செய்கிறான். அவர்களுக்குத்துன்புறுத்தும் வேதனை உண்டு.

(அல்குர்ஆன் 9:79)

இந்த வசனங்களில் அல்லாஹ், நயவஞ்சகர்களின் பண்பைப் பற்றிக் கூறிவிட்டுஅவர்களுக்குரிய தண்டனையைப் பற்றியும் கூறுகின்றான். எனவே நாம் இந்தத் தீயபழக்கத்தைக் கைவிட வேண்டும்.

இழிவாகக் கருதுவது

இறுதியாக ஒன்றைத் தெரிந்து கொள்ள வேண்டும். பிறரை ஏப்ரல் ஃபூல் (முட்டாள்)ஆக்கியவர்கள் ஏன் அவர்களைப் பார்த்து, கை கொட்டி ஏளனமாகச் சிரிக்கின்றார்கள்? ஏன்கேலி, கிண்டல் செய்து அற்ப சந்தோஷம் அடைகின்றார்கள்? என்று சிந்தித்தால் ஓர்உண்மை விளங்கும்.

அதாவது அவர்கள் தம்மைப் புத்திசாலியாகவும், உயர்ந்தவர்களாகவும் கற்பனை செய்துகொள்கின்றார்கள். எனவே ஆணவம் தலைக்கேறிய பிறகு மற்றவர்களை, தம்மை விடஅறிவில் குறைந்தவர்கள், இழிவானவர்கள்என்று முடிவு செய்வதன் காரணத்தால் தான்அவர்களுக்கு உரிய மரியாதை செலுத்தாமல், அனாவசியமாகக்கருதி, கேவலமாகநடத்தி இழிவு படுத்துகின்றனர்.

இதைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பரிபூரண முஸ்லிம் யாரென்றால்,எவரது நாவிலிருந்தும், கரத்திலிருந்தும் பிற முஸ்லிம்கள் பாதுகாப்பு பெற்றுஇருக்கின்றார்களோ அவர் தான். (நூல்: புகாரி 10, 6484)

வல்ல அல்லாஹ் நம் அனைவரையும் குர்ஆன், ஹதீஸிற்குக் கட்டுப்பட்டு உண்மைவிசுவாசிகளாக வாழ அருள்புரிவானாக!

About Me

இறைவனின் திருப்பெயரால்…

  • இந்த தளத்தில் உள்ள செய்திகள் ஏகத்துவ கொள்கையை சொல்லும் பல்வேறு இணையதளத்தில் இருந்து எடுத்து தொகுக்கப்பட்டவை (ஆன்லைன்பீஜே, ஆன்லைன் டிஎன்டிஜே, etc).
  • இதில் தவறான கருத்துகள் ஏதேனும் இருப்பின் அதை Facebook page https://www.facebook.com/Thowheed.org என்ற முகவரிக்கு அனுப்பி தெரிவிக்கலாம்.
  • உங்கள் ஆக்கங்களையும்
  • Facebook page https://www.facebook.com/Thowheed.org என்ற முகவரிக்கு
  • என்ற முகவரிக்கு அனுப்பவும். ஆசிரியர் சரிபார்த்தபின் வெளியிடப்படும்.
  • இந்த தளத்திற்கும் எந்த அமைப்பிற்கும் எந்த தொடர்பும் கிடையாது.

You may want to read

Follow Us

Sign up for our Newsletter

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit