இஸ்லாத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளும் பதில்களும்

நூலின் பெயர் : குற்றச்சாட்டுகளும் பதில்களும்

ஆசிரியர் : பீ.ஜைனுல் ஆபிதீன்

பக்கங்கள் : 136

விலை ரூபாய் : 25.00

பதிப்புரை

இஸ்லாம் குறித்து எழுப்பப்படும் எல்லாக் குற்றச்சாட்டுகளுக்கும் விளக்கம் அளிக்கும் நோக்கத்தில் மூன்று நூல்களை நாம் வெளியிட்டுள்ளோம்.

இஸ்லாம் பெண்களைக் கொடுமைப்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளிப்பதற்காக முதல் நூலை வெளியிட்டோம்.

அந்த நூலில் தலாக், பர்தா, பலதாரமணம், பாகப்பிரிவினையில் பாரபட்சம் போன்ற பெண்கள் சம்பந்தமாக முஸ்லிமல்லாதவர்கள் எழுப்பும் எல்லாக் குற்றச்சாட்டுகளுக்கும் மிக விரிவாக விளக்கமளிக்கப்பட்டது. அந்த நூல் பல பதிப்புகள் வெளியானதிலிருந்து அதன் தாக்கத்தை அறிந்து கொள்ளலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல திருமணங்கள் செய்தது ஏன்? என்ற குற்றச்சாட்டுக்கு விளக்கம் அளிப்பதற்காக இரண்டாவது நூலை வெளியிட்டோம்.

இவ்விரு குற்றச்சாட்டுகள் தவிர எஞ்சிய எல்லாக் குற்றச்சாட்டுகளுக்கும் விளக்கம் அளிப்பதற்காகக் குற்றச்சாட்டுகளும், பதில்களும் என்ற மூன்றாவது நூலை வெளியிட்டோம். அதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் குடும்ப வாழ்க்கை குறித்து எழுப்பப்படும் எல்லாக் குற்றச்சாட்டுகளுக்கும் தக்க சான்றுகளுடன் விளக்கம் அளிக்கப்பட்டது.

அந்த நூலில் பல குற்றச்சாட்டுகள் விடுபட்டிருந்தன. இன்னும் கூடுதல் விளக்கம் சேர்க்கப்பட வேண்டிய நிலையும் இருந்தது. எனவே அந்த நூலை முற்றிலும் மாற்றியமைத்து விடுபட்ட குற்றச்சாட்டுகள் அனைத்திற்கும் உரிய விளக்கங்களைச் சேர்த்து முற்றிலும் புதிய வடிவில் மீண்டும் உங்கள் கைகளில் தவழவிடுகிறோம்.

இந்த நூல் இஸ்லாம் குறித்த எல்லா ஐயங்களையும் நீக்கும் என்று பெரிதும் நம்புகிறோம். அந்த நம்பிக்கை வீண் போகாதிருக்க வல்ல இறைவனை இறைஞ்சுகிறோம்.

-அன்புடன்

நபீலா பதிப்பகம்

பொருளடக்கம்

குடும்பக் கட்டுப்பாட்டை இஸ்லாம் எதிர்க்கிறது

தாய் மொழியை இஸ்லாம் அவமதிக்கிறது

இஸ்லாம் உயிர் வதையை அனுமதிக்கின்றது

இஸ்லாமியக் குற்றவியல் சட்டங்கள்

இஸ்லாத்திலும் ஜாதிகள் உள்ளன

எம்மதமும் சம்மதமா?

இஸ்லாமியப் போர்கள்

முஸ்லிமல்லாதவர்களைக் கொல்லச் சொல்லும் இஸ்லாம்

இந்துக்களைக் காஃபிர்கள் என்று இஸ்லாம் ஏசுகிறது

ஜிஸ்யா வரி

திக்கை வணங்கும் முஸ்லிம்கள்

ஹஜ் பயணமும், புனித யாத்திரையும்!

கருப்புக் கல் வழிபாடு?

நபிகள் நாயகம் புரோகிதத்தின் மூலம் வாழ்க்கை நடத்தினார்களா?

குடும்பக்கட்டுப்பாட்டை இஸ்லாம் எதிர்க்கிறது

மக்கள் தொகைப் பெருக்கத்தின் காரணமாக இந்தியாவில் வறுமை தலைவிரித்தாடுகிறது. இந்த நிலையில் குடும்பக் கட்டுப்பாட்டை இஸ்லாம் எதிர்க்கிறது. முஸ்லிமல்லாதவர்கள் குடும்பக் கட்டுப்பாட்டைக் கடைபிடித்து வரும் போது முஸ்லிம்கள் மட்டும் மக்கள் தொகையைப் பெருக்கிப் பெரும்பான்மையாகி வருகின்றனர். இதன் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்குத் தடையாக இருந்து வருகின்றனர்.

இந்தியாவில் உள்ள முஸ்லிம் அல்லாதவர்கள் முஸ்லிம்கள் மீதும், இஸ்லாத்தின் மீதும் கூறும் குற்றச்சாட்டுகளில் இதுவும் ஒன்றாகும்.

இந்தக் குற்றச்சாட்டைப் பல வழிகளில் அலசிப்பார்க்க வேண்டும்.

மக்கள் தொகைப் பெருக்கத்தால் உணவு மற்றும் இடப் பற்றாக்குறையும், வறுமையும் ஏற்படும் என்ற வாதம் சரியானதா என்பதை முதலில் பார்ப்போம்.

வறுமையும், உணவுப் பற்றாக்குறையும் மக்கள் தொகை மிகவும் குறைவாக இருந்த காலகட்டங்களிலும் உலகெங்கும் இருந்துள்ளன. இன்று உலகில் வாழும் மக்கள் தொகையை 600 கோடியிலிருந்து வெறும் ஆறு கோடியாகக் குறைத்தாலும் வயிற்றுக்கு உணவு கிடைக்காதவர்கள் இருக்கத்தான் செய்வார்கள். இதுதான் எதார்த்த நிலையாகும்.

மக்கள் தொகை குறைவாக இருந்த காலத்திலும், மக்கள் தொகை மிகுதியாக உள்ள காலத்திலும் தேவைகளுக்கு அதிகமாகவே உணவுப் பொருள்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இன்று 600 கோடி மக்கள் வாழ்கிறார்கள் என்றால் 1000 கோடி மக்களுக்குப் போதுமான உணவுகள் உலகில் உள்ளன.

உணவுப் பொருள்கள் சிலருக்குக் கிடைக்காமல் போவதற்குக் காரணம் விநியோக முறையில் ஏற்படும் தவறுகளும், பலருக்குப் போதுமான உணவுகள் ஒரு சிலரிடம் குவிந்து கிடப்பதும் தான். ஏழை நாடுகள் உணவுக்காக அலை மோதும் போது பணக்கார நாடுகள் உணவுப் பொருள்களைக் கடலில் கொட்டுவதை நாம் பார்க்கிறோம்.

ஏழை நாடுகளில் வாழும் பரம ஏழைகள் ஒரு கவள உணவுக்கு ஏங்கும் போது பணத்திமிர் பிடித்த ஏழை நாட்டுச் செல்வந்தர்கள் உணவையும், பொருளாதாரத்தையும் விரயம் செய்து வருகின்றனர். இதுதான் சிலருக்கு உணவுகள் கிடைக்காமல் போவதற்கு உண்மைக் காரணம்.

இந்தியாவில் 120 கோடி மக்கள் வாழ்கிறார்கள். இவர்களில் 5 கோடி மக்களிடம் 200 கோடி மக்களுக்குத் தேவையான செல்வங்கள் குவிந்து கிடக்கின்றன.

இந்திய மக்கள் தொகையை 120 கோடியிலிருந்து 10 கோடியாகக் குறைத்தால் வறுமையும், பசியும் நீங்கிவிடப் போவதில்லை. அப்போதும் அதில் ஒரு கோடிப் பேர் பட்டினி கிடக்கும் நிலை தான் ஏற்படும். 5 லட்சம் பேரிடம் 20 கோடி மக்களுக்கான உணவுகள் குவிந்திருக்கும் நிலை தான் ஏற்படும். அப்போதும் பற்றாக்குறையும், பசியும் ஒரு பக்கத்தில் இருக்கத் தான் செய்யும்.

உலக மக்கள் தொகையை வெறும் நூறு நபர்களாகக் குறைத்தால் கூடப் பத்துப் பேருக்கு உணவு கிடைக்காது என்பது தான் எதார்த்தமான நிலை. எனவே உணவுப் பற்றாக்குறை என்ற காரணத்தைக் கூறிக் குடும்பக்கட்டுப்பாட்டை நியாயப்படுத்த முடியாது.

மக்கள் தொகைப் பெருக்கத்தால் இடப்பற்றாக்குறை ஏற்படுமா? என்றால் அதுவும் தவறாகும்.

உலகில் உள்ள நிலப்பரப்புகளில் ஐந்து சதவிகிதம் இடம் கூட மனிதர்களால் பயன்படுத்தப்படவில்லை. 95 சதவிகிதத்திற்கும் அதிகமான இடங்கள் உபரியாகத் தான் உள்ளன.

குறிப்பிட்ட இடத்தில் தான் குடியிருப்போம் என்ற மக்களின் மனநிலை காரணமாகவே பெரும் நகரங்களில் இட நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மேலும் பெரு நகரங்களில் ஏற்பட்டுள்ள நெருக்கடியையும் மனிதன் நவீன வசதிகளைப் பயன்படுத்தி சமாளிக்கக் கற்றிருக்கிறான்.  சிமெண்ட் போன்ற கலவையைக் கண்டுபிடித்து ஒரு வீடு கட்டுவதற்கு உரிய இடத்தில் பல மாடிக் கட்டடங்களை எழுப்பி அதையும் மனிதன் சமாளிக்கிறான்.

ஏனைய பொருட்களின் பற்றாக் குறையும் இத்தகையது தான்.

ஆகவே மக்கள் தொகைப் பெருக்கத்தால் தான் வறுமையும், பற்றாக்குறையும் ஏற்படும் என்பதும், மக்கள் தொகை குறைவதால் பசியும், வறுமையும் பறந்தோடி விடும் என்பதும் பொய்யான வாதமாகும்.

இன்னும் சொல்லப் போனால் மக்கள் தொகை பெருகுவதால் உலகத்துக்கு ஏராளமான நன்மைகள் கிடைத்தன; இனியும் கிடைக்கும் என்பதே உண்மையாகும்.

மனிதனுக்கு நெருக்கடியும், நிருபந்தமும் ஏற்படும் போது தான் அவன் அறிவைப் பயன்படுத்தித் தீர்வு காண முயல்கிறான். எத்தகைய பிரச்சனைகளையும் சமாளிக்கும் திறனுடன் தான் மனிதன் படைக்கப்பட்டுள்ளான்.

மக்கள் தொகை குறைவாக இருந்த போது நெல்லை விதைத்து ஆறு மாதங்கள் கழித்து அறுவடை செய்தான். மக்கள் தொகை பெருகும் போது மூன்று மாதங்களில் அறுவடை செய்யக் கூடிய அதிக விளைச்சலைத் தரக்கூடிய வீரிய ரக நெல்லைக் கண்டுபிடித்தான். இன்னும் மக்கள் தொகை பெருகும் போது காலையில் விதைத்து விட்டு மாலையில் அறுவடை செய்யக் கூடிய நெல்லை மனிதன் நிச்சயம் கண்டுபிடிக்கத் தான் போகிறான். அப்போது தாறுமாறாக உணவுகள் குவியக் கூடிய அற்புதத்தை உலகம் காணத் தான் போகிறது.

மக்கள் தொகை குறைவாக இருந்த காலத்தில் மழை நீர், கிணற்று நீர், ஆற்று நீர் ஆகியவற்றை மட்டும் பருகி வந்த மனிதன் இன்று ஆழ் கிணறுகளைத் தோண்டுகிறான். செயற்கை மழை பெய்ய வைக்கிறான். கடல் நீரைக் குடிநீராக்குகிறான். கழிவு நீரையும் குடிப்பதற்கு ஏற்றதாக மாற்றுகிறான். இது மக்கள் தொகைப் பெருக்கத்தினால் மனிதனுக்குக் கிடைத்த நன்மை.

ஒரு கோழிக்குஞ்சு கோழியாக வளர்வதற்கு ஆறு மாதங்கள் காத்திருக்க வேண்டும். மக்கள் தொகை குறைவாக உள்ள போது இது தான் நிலைமை. மக்கள் தொகை பெருகிய பின் மிக விரைவாகவும், அதிக எடையுடனும் வளரக் கூடிய கோழி இனங்களைக் கண்டுபிடித்து விட்டான். சேவல் இல்லாமல் தினந்தோறும் முட்டை இடும் கோழி இனத்தையும் மனிதன் கண்டுபிடித்துள்ளான்.

ஒரு படி பால் கறப்பதற்கே தாளம் போட்ட நிலை மாறி 100 லிட்டர் வரை பால் கறக்கும் பசுக்களையும் மனிதன் கண்டுபிடித்து விட்டான். ஆடுகள், மாடுகள், தாவரங்கள், மீன்கள் மற்றும் அனைத்திலும் அசுர வளர்ச்சியை மனிதன் ஏற்படுத்தி விட்டான். இதற்கெல்லாம் காரணம் மக்கள் தொகைப் பெருக்கமே.

அது மட்டுமின்றிக் காய்கள், பழங்கள் மட்டுமின்றி ஆடு, மாடு போன்றவற்றையும் பல மடங்கு பெரிய அளவில் உருவாக்குவதில் மனிதன் வெற்றி கண்டு விட்டான். ஐந்து கோழிகள் தேவைப்படக்கூடிய குடும்பத்திற்கு ஒரு கோழியே போதுமானது என்ற நிலை விரைவில் ஏற்படவுள்ளது. கோழியை ஒரு ஆட்டின் அளவுக்குப் பெரிதாக உற்பத்தி செய்வதை மனிதன் கண்டுபிடித்து விட்டான். மனித குலம் பல்கிப் பெருகியது தான் இந்தக் கண்டுபிடிப்புகளுக்குக் காரணம்.

குடிசை வீடுகள் மாடி வீடுகளாக மாறியதும், அகல் விளக்குகள் மின் விளக்குகளாக மாறியதும், மாட்டுவண்டிகள் பேருந்துகளாகவும், விமானங்களாகவும் மாறியதும், எல்லாத் தயாரிப்புகளும் இயந்திர மயமானதும் மக்கள் தொகைப் பெருக்கத்தினாலேயே.

சந்திரன், செவ்வாய் கிரகங்கள் பற்றி மனிதன் ஆராய்ச்சி செய்வதற்கும் மக்கள் தொகைப் பெருக்கம் தான் காரணமாக இருக்கிறது.

சாதாரண நடைமுறை உண்மையையே இதற்குச் சான்றாகக் கூறலாம்.

நம்முடைய பாட்டன்மார் காலத்தில் ஒரு தேவைக்காக நூறு முட்டைகள் வாங்க முயன்றால் கடைத் தெருவில் அவ்வளவு இருப்பு இருக்காது. இன்றைக்கு இலட்சம் முட்டைகள் வேண்டுமானாலும் வாங்கலாம். இருப்பு உள்ளது. வாங்குவதற்குப் பலரிடம் பணம் தான் இருப்பதில்லை. உணவுப் பொருளுக்கு எந்தப் பற்றாக்குறையும் மக்கள் தொகைப் பெருக்கத்தினால் ஏற்படவில்லை. விநியோக முறையில் உள்ள தவறுகளால் தான் சிலருக்குக் கிடைப்பதில்லை என்பதை இதிலிருந்து அறியலாம்.

இன்னொரு கோணத்திலும் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

மனிதனை இறைவன் படைக்கும் போது வெறும் வயிற்றை மட்டும் கொடுத்து அனுப்பவில்லை. மூளையையும் கொடுத்தே அனுப்புகிறான்.

பிறக்கவிருந்த 1000 சிசுக்களைக் குடும்பக் கட்டுப்பாடு என்ற பெயரில் அழித்து விடுவதாக வைத்துக் கொள்வோம். அந்த ஆயிரத்தில் ஒருவன், ஐம்பதாயிரம் மக்களின் வறுமையைப் போக்கும் வழியைக் கண்டுபிடிக்கும் ஆற்றலுடையவனாக இருப்பான். பெரிய விஞ்ஞானியாக  அவர்களில் இருக்கக் கூடும். குடும்பக் கட்டுப்பாடு என்ற பெயரில் அத்தகையோர் உருவாகாமல் தடுப்பது மனிதக் குலத்திற்குக் கேடு விளைவிக்குமே தவிர நன்மை பயக்காது என்பதையும் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

எனவே குடும்பக் கட்டுப்பாடு செய்வதை இஸ்லாம் ஊக்குவிக்கவில்லை. ஆனால் தனிப்பட்ட நபர்கள் தமது சுய விருப்பத்தின் படி தமது குடும்பத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ள விரும்பினால் அதைச் சில நிபந்தனைகளுடன் இஸ்லாம் அனுமதிக்கின்றது. எல்லோரும் குடும்பக் கட்டுப்பாடு செய்ய வேண்டும் என்று அரசாங்கம் கட்டாயப்படுத்தவோ, பிரச்சாரம் செய்யவோ உரிமை இல்லை என்பது தான் இஸ்லாத்தின் நிலைப்பாடாகும்.

காண்டம் (ஆணுறை) போன்றவற்றைப் பயன்படுத்திக் கர்ப்பம் அடைவதைத் தவிர்த்துக் கொள்ளலாம். பெண்களுக்கு எதிர்காலத்தில் பின்விளைவுகளை ஏற்படுத்துகின்ற, கருத்தடை மாத்திரைகளைப் பயன்படுத்துவது, காப்பர் டி போன்ற சாதனங்களைப் பயன்படுத்துவது, ஆண்களுக்கு மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்துகின்ற வாசக்டமி போன்ற அறுவை சிகிச்சைகளைச் செய்வது, குழந்தை பெறுகின்ற தன்மையை ஆணோ பெண்ணோ அடியோடு நீக்கிக் கொள்வது போன்றவற்றை இஸ்லாம் கடுமையாக எதிர்க்கிறது.

தனது எதிர்காலத்தைப் பாழாக்கிக் கொள்வதும், கடவுள் கொடுத்த குழந்தை பெறும் தன்மையை அடியோடு நீக்கி விடுவதும் குற்றம் என இஸ்லாம் கூறுகிறது.

ஒரு தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றன என்பதால் அவர்கள் குழந்தை பெறும் தன்மையை நிரந்தரமாக நீக்கிக் கொள்கின்றனர் என்று வைத்துக் கொள்வோம். எதிர்பாராமல் இரண்டு குழந்தைகளும் மரணித்து விட்டால் குழந்தை பெறும் தன்மையை யாரால் திருப்பித் தர இயலும்? இப்படி அறிவுபூர்வமாக இஸ்லாம் சிந்திக்கச் சொல்கிறது.

சுருங்கச் சொல்வதென்றால் தாயின் உடல் நலக்குறைவு, இயலாமை போன்ற காரணங்களுக்காகச் சுயக் கட்டுப்பாட்டுடன் குறைவான குழந்தைகளைப் பெற்றெடுத்தால், அல்லது குழந்தை பெறுவதை அறவே தவிர்த்துக் கொண்டால் அது அவர்களின் உரிமை. அதை இஸ்லாம் தடுக்கவில்லை.

இது நமக்கு மிகவும் பயனளிக்கும் திட்டம் என்று பிரச்சாரம் செய்தால் அதில் எள் முனையளவு கூட உண்மை இல்லை என்பதால் இஸ்லாம் அதை எதிர்க்கும்.

குடும்பக் கட்டுப்பாட்டை நிராகரித்து முஸ்லிம்கள் தங்கள் எண்ணிக்கையைப் பெருக்கிக் கொள்கிறார்கள் என்ற குற்றச்சாட்டும் தவறானதாகும்.

குடும்பக் கட்டுப்பாடு என்பது பயனற்ற திட்டம் என்று முஸ்லிம்களுக்கு மட்டும் இஸ்லாம் போதிக்கவில்லை. உலக மக்கள் அனைவருக்கும் போதிக்கின்றது. முஸ்லிமல்லாதவர்களும் இந்தப் போதனையை ஏற்றுக் கொண்டு தமது மக்கள் தொகையைப் பெருக்கிக் கொண்டால் இஸ்லாமோ, முஸ்லிம்களோ இதற்குத் தடையாக இருக்க மாட்டார்கள். மாறாக வரவேற்பார்கள்.

முஸ்லிமல்லாதவர்கள் ஒரு தவறான பிரச்சாரத்தை நம்பி ஏமாந்தால் அதைப் போல் முஸ்லிம்களும் ஏமாற வேண்டும் என்று கூறுவது எந்த வகையிலும் நியாயமாகாது.

மாறாக முஸ்லிம்கள் எவ்வாறு இந்த விஷயத்தில் பொய்ப்பிரச்சாரத்தை மெய்யென நம்பி ஏமாறாமல் இருக்கிறார்களோ அதுபோல் மற்றவர்களும் ஏமாறாமல் இருக்க முயல்வது தான் அறிவுடைமையாகும்.

ஏதோ இந்தியாவில் பெரும்பான்மையாக ஆவதற்காக இந்திய முஸ்லிம்கள் செய்து கொண்ட முடிவல்ல இது.

மாறாக முற்றிலும் முஸ்லிம்களே வாழ்கின்ற நாடுகளிலும் இஸ்லாத்தின் நிலைபாடு இது தான் என்பதை உணர்ந்தால் இது போன்ற குற்றச்சாட்டை யாரும் சுமத்த மாட்டார்கள்.

தாய் மொழியை இஸ்லாம் அவமதிக்கிறதா?

முஸ்லிம்கள் தங்கள் பெயர்களை அரபு மொழியிலேயே சூட்டிக் கொள்கின்றனர். அவர்கள் தமது வழிபாடுகளை அரபு மொழியிலேயே நடத்துகின்றனர். பள்ளிவாசல்களில் தொழுகைக்காக விடப்படும் அழைப்பும் அரபு மொழியிலேயே அமைந்துள்ளது.

அரபு நாட்டில் அரபு மொழியில் இவை அமைந்திருந்தால் அதில் நியாயம் இருக்கும். தமிழ் நாட்டிலோ, அரபு மொழி தெரியாத இன்ன பிற பகுதிகளிலோ அரபு மொழியில் இவை அமைந்திருப்பது மற்ற மொழிகளை மட்டம் தட்டும் காரியமாகும் என்பது இஸ்லாத்திற்கு எதிராகக் கூறப்படும் விமர்சனங்களில் மிகவும் முக்கியமானதாகும்.

இவையெல்லாம் அரபு மொழியில் ஏன் அமைந்துள்ளன என்பதை அறிவதற்கு முன்னால் மொழிகளைப் பற்றி இஸ்லாத்தின் நிலை என்ன என்பதை அறிந்து கொள்வது அவசியமாகும்.

ஒவ்வொரு மொழி பேசக்கூடிய மக்களும் தமது மொழியே உலகில் சிறந்த மொழி என்று நினைக்கின்றனர். அம்மொழியைப் பேசுவதால் தம்மைச் சிறந்த சமுதாயத்தினர் எனக் கருதுகின்றனர்.

படிப்பறிவில்லாத சாதாரண மக்கள் மட்டும் தான் இவ்வாறு நம்புகின்றார்களா? என்றால் பண்டிதர்களும், பகுத்தறிவாதிகளும் இப்படித்தான் நம்புகின்றனர்.

இந்த நம்பிக்கையை இஸ்லாம் எதிர்க்கிறது. மனிதன் தான் நினைக்கின்ற கருத்தை மற்றவர்களுக்குக் கூறுகின்ற ஒரு சாதனம் தான் மொழி. இதைத் தவிர மொழிக்கு எந்த முக்கியத்துவமும் அளிக்கக் கூடாது என்பது இஸ்லாத்தின் நிலைபாடு.

எல்லா மொழிகளும் சமமான மதிப்புடையவை தான். எந்த மொழியும் மற்ற எந்த மொழியையும் விடத் தாழ்ந்ததுமில்லை; உயர்ந்ததுமில்லை. எந்த மொழி பேசுபவர்களும் மற்ற மொழி பேசக்கூடியவர்களை விடச் சிறந்தவர்களுமல்லர்; தாழ்ந்தவர்களுமல்லர் என்று இஸ்லாம் பிரகடனம் செய்கிறது.

தமிழகத்தில் பிறந்து தமிழ்மொழி பேச வேண்டும் என்று முடிவு செய்து கொண்டு யாரும் தமிழகத்தில் பிறக்கவில்லை. பெற்றோர்களும், சுற்றத்தாரும் நம் மீது தமிழைத் திணித்ததால் தமிழ் பேசுகிறோம். வேறு எங்காவது நாம் பிறந்திருந்தால் அங்குள்ள மொழியில் நமது கருத்தைத் தெரிவிப்போம். எனவே இதில் பெருமையடிக்கவோ, சிறுமையாகக் கருதவோ இடமில்லை என்று இஸ்லாம் திட்டவட்டமாக அறிவிக்கிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அரபு மொழி பேசும் சமுதாயத்தில் பிறந்தார்கள். உலகிலேயே அரபுகள் போன்று மொழிவெறி பிடித்தவர்கள் அன்றைக்கு இருந்ததில்லை.

தம்மை அரபுகள் எனக் கூறிக் கொண்ட அந்தச் சமுதாயம் ஏனைய மொழி பேசுவோரை அஜமிகள் (வாயில்லாத ஜீவன்கள்) என்று குறிப்பிடுவர். மற்ற மொழி பேசும் மக்களை மக்களாகக் கூட அவர்கள் கருதியதில்லை. மற்றவர்களின் மொழியை வாயில்லா ஜீவன்களின் சப்தமாகத் தான் அவர்கள் மதித்தார்கள்.

மொழி வெறி பிடித்து அலைந்த அந்தச் சமுதாயத்தில் பிறந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது இறுதிப் பேருரையில் அரபு மொழி பேசுகின்ற எவருக்கும் அரபு மொழி பேசாத எவரையும் விட எந்தச் சிறப்பும் கிடையாது என்று பிரகடனம் செய்தார்கள். தமது தாய் மொழியே அரபு மொழியாக இருந்தும் தமது மொழிக்குக் கூட எந்தச் சிறப்பும் கிடையாது என்று பிரகடனம் செய்த ஒரே தலைவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தான்.

இறைவனின் பார்வையில் எந்த மொழியும் வேறு எந்த மொழியையும் விடச் சிறந்ததில்லை என்பதை இன்னும் தெளிவாக இஸ்லாம் அறிவிக்கிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ்வின் தூதர் என்று முஸ்லிம்கள் நம்ப வேண்டும். அவர்கள் மட்டும் தான் கடவுளின் ஒரே தூதர் என்று முஸ்லிம்கள் நம்பக் கூடாது. மாறாக நபிகள் நாயகத்துக்கு முன் அவர்களைப் போலவே எண்ணற்ற இறைத்தூதர்கள் வந்துள்ளனர் என்றும் முஸ்லிம்கள் நம்ப வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அரபுச் சமுதாயத்தில் தோன்றியது போலவே மற்றவர்களும் அரபுச் சமுதாயத்தில் தான் தோன்றினார்களா? இல்லவே இல்லை.

நபிகள் நாயகத்திற்கு முன்னர் அனுப்பப்பட்ட ஏராளமான இறைத்தூதர்கள் தத்தமது மொழியிலேயே இறைச் செய்தியை எடுத்துரைத்தார்கள். அந்த மொழியிலேயே வேதங்களும் அருளப்பட்டன.

எந்தத் தூதரையும் அவருடைய சமுதாயத்தினர் பேசும் மொழியுடையவராகவே நாம் அனுப்பி வந்திருக்கிறோம்.

திருக்குர்ஆன் 14:4

என்று திருக்குர்ஆன் கூறுகிறது.

நபிகள் நாயகம் காலத்துக்கு முன்னர், தமிழ் பேசும் மக்களுக்குத் தமிழ் பேசும் இறைத்தூதர்கள் வந்துள்ளனர். அவர்கள் யாரென நமக்குத் தெரியாமல் இருக்கலாம். அவர்கள் தமிழில் தான் இறைச் செய்தியை எடுத்துரைத்தனர் என்று முஸ்லிம்கள் நம்ப வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது.

கடவுளின் பார்வையில் மொழிக்கு என எந்தச் சிறப்பும் கிடையாது என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

கடவுளிடம் ஒரு முஸ்லிம் தனது தேவைகளைக் கேட்டுப் பிரார்த்திக்கும் போது அவனுக்கு எந்த மொழி தெரியுமோ அந்த மொழியில் பிரார்த்தனை செய்யலாம். திருமணம் போன்ற சடங்குகளைத் தாய் மொழியிலேயே நடத்திக் கொள்ளவும் இஸ்லாம் அனுமதிக்கின்றது.

எந்த மொழியும் உயர்ந்த மொழியில்லை என்றால் பள்ளிவாசல்களில் தினமும் ஐந்து தடவை கூறப்படும் பாங்கு ஏன் அரபு மொழியில் அமைந்துள்ளது? தமிழ் பேசும் மக்களுக்குத் தமிழ் மொழியிலேயே பாங்கு எனும் அழைப்பை விடுக்கலாமே? என்ற கேள்விக்கு என்ன விடை என்பதைப் பார்ப்போம்.

இதற்குக் காரணம் அரபு மொழி தேவமொழி என்பதல்ல. தொழுகைக்காக விடுக்கப்படும் அழைப்பு உலகமெங்கும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்பதே காரணம். இத்தகைய உலக ஒருமைப்பாடு ஏற்பட வேண்டுமானால் ஏதாவது ஒரு மொழியில் தான் இந்த அழைப்பு அமைந்திருக்க வேண்டும்.

அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்ற பாங்கை அதே பொருளுடைய வேறு அரபுமொழி வார்த்தைகளைப் பயன்படுத்திக் கூறலாமா? என்றால் கூடாது என்றே இஸ்லாம் கூறுகிறது.

நபிகள் நாயகம் எதைக் கற்றுத் தந்தார்களோ அந்த வார்த்தைகளை மட்டும் தான் கூற வேண்டுமே தவிர அரபு மொழியில் இதற்கு நிகரான எந்த வார்த்தையையும் கூறிவிட முடியாது. அரபு மொழிக்குக் கூடுதல் சிறப்பு உண்டு என்பதற்காக இவ்வாறு ஏற்பாடு செய்யப்படவில்லை என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு பகுதியில் உள்ள முஸ்லிம்களும் அவரவர் தாய் மொழியில் தொழுகைக்கான அழைப்பைக் கூறலாம் என்றால் அதனால் குழப்பங்கள் தான் ஏற்படும். உலக ஒருமைப்பாடு சிதைந்து விடும்.

அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு முஸ்லிம் தமிழ்நாட்டுக்கு வருகிறார். தமிழ்மொழியில் பாங்கு சொல்லப்படுகிறது. அவர் இது வரை கேள்விப்பட்டிராத வார்த்தைகளை இப்போது தான் கேள்விப்படுகிறார். இதைக் கேட்டவுடன் அந்தப் பகுதியில் ஒரு பள்ளிவாசல் இருப்பதாக அவர் எண்ண மாட்டார். தொழுகைக்காக அழைப்பு விடப்படுவதாகவும் புரிந்து கொள்ள மாட்டார்.

உலகம் முழுவதும் ஒரே மாதிரியாகத் தொழுகைக்கான அழைப்பு அமைந்திருந்தால் எந்த மொழியினரும் தொழுகைக்கான அழைப்பை அறிந்து கொள்வர். பள்ளிவாசலை அடையாளம் கண்டு கொள்வர். தொழுகை எனும் கடமையை நிறைவேற்ற இது வாய்ப்பாக அமையும்.

நாமே ஏற்றுக் கொண்ட ஒரு உதாரணத்தின் மூலம் இதை நாம் தெளிவாக விளங்கலாம்.

இந்தியாவின் தேசியக் கீதம் வங்காள மொழியில் அமைந்துள்ளது. வங்காள மொழி தான் இந்திய மொழிகளில் சிறந்த மொழி என்பதற்காக இவ்வாறு அமைக்கவில்லை. மாறாக அதை இயற்றியவர் ஒரு சிறந்த கவிஞர் என்பதற்காகவும், அதன் கருத்துக்காகவும் தான் தேசியக் கீதமாக்கப்பட்டது.

தமிழில் அதை விடச் சிறந்த கவிதைகளை எழுத முடியும். ஆனாலும் தேசியக் கீதத்தை நாம் மாற்றுவதில்லை. ஏதாவது ஒரு பாடலைத் தான் தேசியக் கீதமாக ஆக்க முடியும். எந்த மொழியில் அது அமைந்தாலும் மற்ற மொழிகள் பின்னுக்குத் தள்ளப்படும் நிலை ஏற்படத் தான் செய்யும். எனவே நாட்டின் ஒருமைப்பாட்டைக் கவனத்தில் கொண்டு வங்காள மொழி தேசியக் கீதத்தை அனைவரும் ஏற்றிருக்கிறோம்.

தமிழகத்திலுள்ள எல்லா மக்களுக்கும் அதன் பொருள் தெரியாது. ஆனாலும் அப்பாடல் இசைக்கப்படும் போது தேசியக் கீதம் பாடப்படுகிறது என்பது மட்டும் தெரியும்.

இது போல் தான் உலகளாவிய ஒருமைப்பாட்டைக் கவனத்தில் கொண்டு உலகம் முழுவதும் அல்லாஹு அக்பர் எனத் தொடங்கும் பாங்கு சொல்லப்படுகிறது. அதன் பொருள் எல்லா முஸ்லிம்களுக்கும் நிச்சயமாகத் தெரியாது. ஆனால் தொழுகைக்காக அழைப்பு விடப்படுகிறது என்பது தெரியும். இவ்வாறு உலகம் முழுவதையும் ஒருங்கிணைக்கத் தான் அரபு மொழியில் அழைப்பு விடுகின்றனர்.

நிச்சயமாக அரபு மொழி உலகத்திலேயே சிறந்த மொழி என்பதற்காகச் செய்யப்படவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தாய்மொழி தமிழாக இருந்திருந்தால் தமிழில் தான் இந்த அழைப்பு அமைந்திருக்கும்.

ஒருமைப்பாட்டிற்காக எத்தனையோ விஷயங்களில் நாம் மொழியைப் பின்னுக்குத் தள்ளி வைத்திருக்கிறோம். இராணுவத்தினர், காவல் துறையினர் பயிற்சியின் போது லெப்ட், ரைட் எனக் கூறி நடைபோடுகின்றனர். வலது, இடது எனக் கூற வேண்டும் என்று யாரும் வற்புறுத்துவதில்லை. பல்வேறு மொழியினர் வாழும் நாட்டில் கட்டளைகளை அனைவரும் ஒரே மாதிரியாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இதை நாம் ஏற்றுக் கொள்கிறோம். தமிழை விட ஆங்கிலம் சிறந்த மொழி என்பது இதன் கருத்தல்ல.

இதைப் புரிந்து கொள்வது போலவே அரபு மொழியில் பாங்கு கூறப்படுவதையும் புரிந்து கொள்ள வேண்டும். மொழி, இனம், நாடு, குலம், கோத்திரம் ஆகியவற்றின் அடிப்படையில் உயர்வு தாழ்வு கற்பிப்பதை இஸ்லாம் திட்டவட்டமாக மறுக்கிறது. அரபுமொழி மற்ற மொழிகளை விடச் சிறந்த மொழி என்று இஸ்லாம் கூறவில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அரபு மொழிக்கு அதிக முக்கியத்துவம் அளித்து ஏனைய மொழிகளை இஸ்லாம் இழிவுபடுத்தவில்லை என்றால் தமிழகத்தில் வாழும் முஸ்லிம்கள் ஏன் தமிழில் பெயர் சூட்டிக் கொள்வதில்லை. தமிழர்களுக்கு அன்னிய மொழியாக இருக்கும் அரபு மொழியில் பெயர் சூட்டிக் கொள்ளக் காரணம் என்ன? என்பது மற்றொரு சந்தேகம்.

இது குறித்து இஸ்லாம் என்ன கூறுகிறது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

திருக்குர்ஆனிலோ, நபிகள் நாயகத்தின் போதனைகளிலோ உலக முஸ்லிம்கள் அரபு மொழியில் தான் பெயர் வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறப்படவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன் பல இறைத்தூதர்கள் வந்திருப்பதாக முன்னர் குறிப்பிட்டுள்ளோம். இப்ராஹீம், இஸ்மாயீல், மூஸா, ஈஸா, அய்யூப், ஸகரிய்யா, எஹ்யா, யூஸுஃப், யூனுஸ், தாவூத், ஸுலைமான் ஆகியோர் நபிகள் நாயகத்திற்கு முன் அனுப்பப்பட்ட இறைத்தூதர்கள்.

இப்பெயர்களில் ஒன்று கூட அரபு மொழிச் சொல் இல்லை. அந்த இறைத்தூதர்களின் தாய்மொழி எதுவோ அந்தந்த மொழிச் சொற்களே தவிர அரபு மொழிச் சொற்கள் அன்று.

மேற்கண்ட அரபு மொழியல்லாத வேற்று மொழிப் பெயர்களை நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் வாழ்ந்த மக்கள் சூட்டிக் கொண்டனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது மகனுக்கு இப்ராஹீம் என்று பெயரிட்டார்கள். இது அரபு மொழிச் சொல் அன்று.

நபிகள் நாயகம் (ஸல்) காலம் முதல் இன்று வரை உலக முஸ்லிம்கள் மேற்கண்ட பெயர்களைச் சூட்டிக் கொண்டு வருகின்றனர்.

அது மட்டுமின்றி உலகின் பல நாடுகளில் வாழும் மக்கள் தத்தமது மொழியிலேயே தமது பெயர்களைச் சூட்டிக் கொள்கின்றனர்.

பாகிஸ்தானில் வாழும் முஸ்லிம்களின் பெயர்களில் பாதிக்கும் மேற்பட்டவை பாகிஸ்தான் மக்களின் தாய்மொழியான உருதுப் பெயர்களேயன்றி அரபு மொழிப் பெயர்கள் அன்று.

நவாஸ், பேநஸீர் போன்ற பெயர்களை உதாரணமாகக் கூறலாம். இந்தோனேசிய முஸ்லிம்கள் சுகர்னோ, சுகர்டோ போன்ற இந்தோனேசியப் பெயர்களைத் தமக்குச் சூட்டிக் கொள்கின்றனர். ஈரான் முஸ்லிம்கள் பெரும்பாலும் தமது தாய் மொழியான பாரசீக மொழியிலேயே பெயர் சூட்டிக் கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

அரபு மொழியில் தான் பெயர் சூட்டிக் கொள்ள வேண்டும் என்று இஸ்லாத்தில் எந்தக் கட்டளையும் இல்லை என்பதற்காகவே இந்த விபரங்களைக் கூறுகிறோம்.

அப்படியானால் தமிழில் பெயர் சூட்டிக் கொள்ள என்ன தடை?

சட்டப்படி எந்தத் தடையும் இல்லாவிட்டாலும் நமது நாட்டின் நடைமுறை காரணமாக இங்குள்ள முஸ்லிம்கள் தாமாகவே அதைத் தவிர்த்து வருகின்றனர். இவ்வாறு தவிர்ப்பதற்கு நியாயமான காரணங்களும் உள்ளன.

இஸ்லாம் மார்க்கம் சாதி வேறுபாட்டை அறவே ஒழித்துக் கட்டுவதைக் கொள்கையாகக் கொண்ட மார்க்கம். பல்வேறு சாதிகளிலிருந்து இஸ்லாத்தை ஏற்ற முஸ்லிம்கள் இரண்டு தலைமுறை கடந்த பின் தாங்கள் எந்தச் சாதியிலிருந்து இஸ்லாத்தை ஏற்றோம் என்பதைக் கூட மறந்து விடுகிறார்கள்.

நமது நாட்டில் சாதியிலிருந்து மக்களை வேறுபடுத்திப் பார்க்க முடியாத நிலை உள்ளது. இஸ்லாத்தை ஏற்ற பின் ஒருவர் தமது பழைய பெயரையே வைத்திருக்கிறார் என வைத்துக் கொள்வோம். அவர் தமது பெயரைக் கூறிய உடன் நீங்கள் எந்தச் சாதி என்று கேட்கும் வழக்கம் இங்கே உள்ளது. இவன் என்ன சாதிக்காரனாக இருப்பான் என்பதை எந்த வகையிலாவது அறிந்து கொள்ள முற்படுவார்கள்.

நமது நாட்டில் நடைமுறையில் இல்லாத பெயர்களைச் சூட்டிக் கொண்டால் அவரது சாதி என்ன என்று யாரும் கேட்க மாட்டார்கள்.

ராமசாமி என்று கூறினால் என்ன சாதி என்று கேட்கும் சமூக அமைப்பு, அப்துல்லா என்றால் என்ன சாதி என்று கேட்பதில்லை. அந்த ஒரு நன்மையைக் கருதி தமிழக முஸ்லிம்கள் தமிழ்ப் பெயர்களைத் தவிர்க்கிறார்களே தவிர தமிழை இழிவுபடுத்தி அரபு மொழியை உயர்த்துவதற்காக அல்ல.

இந்தோனேசியா, ஈரான் போன்ற நாடுகளில் சாதி அமைப்பு இல்லாததால் தத்தம் மொழியிலேயே பெயர் சூட்டிக் கொள்வது போல் தமிழகத்திலும் சாதி அமைப்பு அடியோடு ஒழிந்து விடும் பட்சத்தில் தமிழக முஸ்லிம்களும் தமிழில் பெயர் சூட்டிக் கொள்வார்கள்.

இஸ்லாம் உயிர் வதையை அனுமதிக்கின்றதா?

மனிதனின் உணவுக்காக உயிரினங்களைக் கொல்ல்லாம் என்று இஸ்லாம் சொல்கிறது. இது ஜீவகாருண்யத்துக்கு எதிரானதல்லவா?

இஸ்லாத்திற்கு எதிராகச் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளில் இதுவும் முக்கியமானதாகும்.

மனிதன் தனது உணவுக்காகச் சில உயிரினங்களைக் கொல்லலாம் என்று இஸ்லாம் கூறுவது உண்மை தான். இதை இஸ்லாம் அனுமதிப்பதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன. அந்தக் காரணங்களை விளங்கிக் கொண்டால் இந்தக் குற்றச்சாட்டை யாரும் சுமத்த மாட்டார்கள்.

மனிதன் தனது நன்மைக்காக உயிரினங்களைக் கொல்லக்கூடாது என்பது போலித்தனமான வாதமாகும். ஏனெனில் உயிரினங்களைக் கொல்லாமல் மனிதன் வாழ முடியாது. உயிர்வதை கூடாது என்று கூறக் கூடியவர்கள் கூட அவ்வாறு வாழ்வது கிடையாது என்பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும்.

மனிதன் உயிர் வாழ்வதற்கு இன்றியமையாத தேவை தண்ணீர். தண்ணீர் அருந்தாமல் எவரும் இவ்வுலகில் வாழ முடியாது.

தண்ணீரில் கிருமி எனும் இலட்சக்கணக்கான நுண்ணுயிரிகள் உள்ளன. தண்ணீரை அருந்தும் போது இலட்சக்கணக்கான உயிர்களையும் சேர்த்துத் தான் அருந்துகிறோம். தண்ணீரைக் கொதிக்க வைத்துச் சாப்பிட்டாலும் அந்த உயிரினங்களை வேக வைத்துச் சாப்பிடுகிறோம்.

அந்த உயிர்களுக்கு மற்ற உயிரினங்களுக்கு இருப்பது போன்ற எல்லா உறுப்புகளும் உள்ளன. மற்ற உயிர்களைப் போலவே இயங்குகின்றன. மற்ற உயிர்களைப் போலவே இனவிருத்தியும் செய்கின்றன.

நமது சாதாரணக் கண்களுக்கு அவை தென்படாவிட்டாலும் அதற்குரிய கண்ணாடிகள் மூலம் அவற்றைப் பார்க்க முடியும்.

உயிர் வதை கூடாது என்பதில் உறுதியான நம்பிக்கையுடையவர்கள் தண்ணீரைக் கூட அருந்தாமல் தவிர்க்க வேண்டும். ஆனால் அவர்களால் அதைத் தவிர்க்க முடியாது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

உயிர்களைக் கொல்லாமல் மனிதன் வாழவே முடியாது என்பது இதிலிருந்து நிரூபணமாகிறது.

அது மட்டுமின்றி சிந்தித்தால் உயிரினங்களில் பல வகைகள் உள்ளன.

மனிதன் பகுத்தறிவு வழங்கப்பட்டு இடம் விட்டு இடம் செல்லக்கூடிய உயிரினமாக இருக்கிறான். ஏனைய நடப்பன, ஊர்வன, பறப்பன யாவும் பகுத்தறிவு இல்லாமல் இடம் விட்டு இடம் பெயரக்கூடிய உயிரினங்களாக உள்ளன. இவ்விரண்டை மட்டும் தான் நாம் உயிரினம் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றோம்.

இடம் விட்டு இடம் பெயராமல் சுயமாக வளர்ச்சி பெறக் கூடியவையும், இனவிருத்தி செய்யக்கூடியவையும் உயிரினங்கள் தான் என்பதை இன்றைய அறிவியல் உலகம் நிரூபித்துக் கொண்டிருக்கிறது.

மரம், செடி, கொடிகள் போன்றவற்றுக்கு உயிர் இருப்பதால் தான் அவை வளர்கின்றன. பல்வேறு பருவங்களை அடைகின்றன. அவற்றில் ஆண், பெண் வேறுபாடு உள்ளது. இனப் பெருக்கமும் செய்கின்றன.

உயிரினங்களை வதை செய்யக் கூடாது என்பதில் நம்பிக்கை கொண்டவர்கள் பழங்கள், காய்கறிகள், கீரைகள் போன்றவற்றையும் உணவாக உட்கொள்ளக் கூடாது, அவ்வாறு உட்கொண்டால் அவர்கள் உயிரினங்களைக் கொன்றவர்களாகத் தான் ஆவார்கள்.

மனிதனும், ஆடு மாடுகளும் உயிரினங்கள் என்றாலும் இரண்டு உயிர்களுக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. அது போலவே தான் ஆடுமாடுகளுக்கும், தாவரங்களுக்கும் வித்தியாசங்கள் உள்ளன. வித்தியாசம் இருக்கிறது என்பதற்காக அவற்றுக்கு உயிர் இல்லை என்று கூறக் கூடாது.

மேலும் மனிதனுக்குக் கேடு விளைவிக்கிறது என்பதற்காக எத்தனையோ உயிர்களை அனைவரும் கொல்கின்றனர். கொசு, எலி, கரப்பான், பல்லி போன்றவற்றை விஷ மருந்துகளைப் பயன்படுத்திக் கொலை செய்கின்றனர். மனிதனின் நன்மைக்காக இவற்றைக் கொல்வதை அங்கீகரிப்பவர்கள் உண்பதற்காகச் சில உயிரினங்களைக் கொன்றால் மட்டும் உயிர்வதை என்கின்றனர்.

மனிதனுக்குத் தேவையான புரதச் சத்துகள் பல அசைவ உணவில் இருக்கின்றன. விஞ்ஞானிகள் இதை நிரூபித்துள்ளனர். மருத்துவர்களும் பல சமயங்களில் அசைவ உணவைப் பரிந்துரைக்கின்றனர். உயிர் வதை கூடாது என்ற பெயரில் மாமிசத்தைத் தவிர்ப்பவர்களில் கணிசமானோர் புரதச்சத்து குறைவுடையவர்களாக ஆகின்றனர்.

மேலும் பார்வைக் குறைபாடு உள்ளவர்களுக்கு மீன் எண்ணெய் மாத்திரைகளை மருத்துவர்கள் பரிந்துரை செய்கின்றனர். அசைவம் கூடாது என்ற கொள்கை உள்ளவர்களும் அவற்றை உட்கொள்கின்றனர்.

மாடுகளில் பால் கறந்து அருந்துவதை ஜீவகாருண்யம் பேசுவோர் உட்பட அனைவரும் ஒப்புக் கொள்கிறோம். இது ஏன் அவர்களுக்கு உயிர்வதையாகத் தெரியவில்லை? மாடு அசைவ உணவு என்றால் அதன் மாமிசம், எலும்பு, குடல், இரத்தம் ஆகியவை அசைவமாக உள்ளது போல் அதிலிருந்து பெறப்படும் பாலும் அசைவமாகத் தான் கருதப்பட வேண்டும்.

மேலும் மாடுகளுக்குச் சுரக்கக்கூடிய பால் அதன் கன்றுகளுக்காகவே சுரக்கின்றது. முழுமையாகக் கன்றுக்கே பால் சொந்தமாக வேண்டும். தாய்ப்பாலுக்கு நிகரானது ஏதுமில்லை என்பது மனிதர்களுக்கு மட்டுமல்ல. ஏனைய உயிரினங்களுக்கும் அவற்றின் தாய்ப்பால் தான் சிறந்ததாகும்.

கன்றுகளுக்குச் சேர வேண்டிய பாலை மனிதன் பயன்படுத்தும் போது கன்றுகள் வதைக்கப்படுகின்றன. அவை ஏமாற்றப்படுகின்றன. இவை வதை எனத் தெரிந்தாலும் அதனால் மனிதனுக்குக் கிடைக்கும் நன்மைகளைக் கருத்தில் கொண்டு அனைவரும் ஏற்றுக் கொள்கின்றனர்.

காளைமாடுகள் ஏர்களிலும், வண்டிகளிலும் பூட்டப்படுகின்றன. கடுமையான வேலைகள் அவற்றிடம் வாங்கப்படுகின்றன. ஒரேடியாகக் கொல்வதை விட இந்தச் சித்ரவதை கொடுமையானது; கொடூரமானது ஆனாலும் மனிதன் நன்மைக்காக அவற்றைப் பயன்படுத்தித் தான் ஆக வேண்டும் என்பதை அனைவரும் ஒப்பு கொள்கிறோம்.

அப்படியானால் மனிதன் உணவுத் தேவைக்காக அவற்றைக் கொல்வதை மட்டும் ஏன் மறுக்க வேண்டும்?

உயிர்வதை கூடாது என்பது இவர்களின் வாதமா? உண்ணக் கூடாது என்பது இவர்களின் வாதமா? என்பதையும் சிந்திக்க வேண்டும். உயிர்வதை கூடாது என்பது தான் வாதம் என்றால் மேற்கண்டவற்றையும் தவிர்க்க வேண்டும்.

எலி, பாம்பு, பல்லி, தேள், கொசு போன்றவற்றைக் கொல்கிறோம். நமக்குத் தீங்கிழைக்கிறது என்பதற்காக இவற்றைக் கொல்வதை அனைவருமே ஏற்றுக் கொள்கிறோம். இவ்வாறு ஏற்றுக் கொள்ளும் போது மனிதனின் நன்மைக்காக மற்ற உயிர்களை உணவுக்காகக் கொல்லலாம் என்பதையும் ஏற்றுக் கொள்கிறார்கள்.

உயிர்வதை, ஜீவன்களின் மீது காருண்யம் என்றெல்லாம் கூறுபவர்கள் அவற்றில் உண்மையாளர்களாக இல்லை என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

நாளுக்கு நாள் விலைவாசி உயர்ந்து கொண்டிருக்கும் போது அனைவரும் அசைவ உணவுகளைத் தவிர்த்து விட்டால் விலைவாசிகள் தாறுமாறாக ஏறிவிடும். ஏழைகள் எந்த உணவையும் வாங்க முடியாத நிலை ஏற்படும் என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும். அசைவ உணவு உட்கொள்பவர் பலர் உள்ளதால் தான் தட்டுப்பாடின்றிச் சைவ உணவு கிடைக்கின்றது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

மேலும் துருவப் பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு மீனைத் தவிர வேறு எந்த உணவும் கிடைக்காது.

உயிர்களைக் கொல்லக் கூடாது என்று அவர்களுக்குப் போதனை செய்தால் அவர்கள் செத்து மடிந்து விடுவார்கள். கடுமையான குளிர்ப் பிரதேசங்களில் குளிரைத் தாங்கும் வலிமையை அசைவ உணவு தான் அளிக்க முடியும்.

இன்னொரு முக்கியமான அம்சத்தையும் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இடம் விட்டு இடம் பெயரக்கூடிய உயிரினங்கள் சாகப் பட்சிணி, மாமிசப் பட்சிணி என இரு வகைகளாக உள்ளன.

மாமிசத்தை உணவாக உட்கொள்ளக் கூடிய உயிரினங்களின் குடல் அமைப்பும், பல் அமைப்பும் அவ்வுணவை அரைக்கவும், ஜீரணிக்கவும் ஏற்ற வகையில் அமைந்துள்ளன.

அது போல் சாகப் பட்சிணிகளின் குடல் அமைப்பும், பல் அமைப்பும் சைவ உணவை மட்டும் ஜீரணிக்க ஏற்றதாக அமைந்துள்ளன. சாகப் பட்சிணியாக உள்ள பிராணிகள், மாமிசத்தை உட்கொண்டால் அவ்வுணவை ஜீரணிக்க முடியாமல் செத்துப் போய்விடும்.

ஆனால் மனிதனின் பற்களும், குடல் அமைப்பும் எவ்வாறு அமைந்துள்ளன? என்று சிந்தித்தால் நாமே ஆச்சரியப்படும் படி இரு வகை உணவுகளையும் சரியாக ஜீரணிக்க ஏற்றதாக அமைக்கப்பட்டுள்ளன. இரண்டு வகை உணவுகளில் எதை உட்கொண்டாலும் மனிதனின் உடல் அதை அரைத்துச் சக்தியைப் பெற்றுக் கொள்ளக் கூடியதாக உள்ளது.

நமது உடல் அமைப்பு இரண்டு வகையான உணவுகளையும் ஏற்றுக் கொள்ளும் முறையில் இருப்பதால் அதுவே இயற்கை என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இன்னொன்றையும் நாம் சிந்திக்க வேண்டும். ஜீவகாருண்யம் என்று கூறுவோர் இந்துக்களில் ஒரு சாரார் மட்டுமே. ஆயினும் இந்து மதத்தின் ஆதாரங்களிலிருந்து இவர்களின் வாதத்திற்கு ஆதாரம் காட்ட இயலாது.

இந்து மன்னர்களும், அவதாரப் புருஷர்களும், கடவுளர்களும் உயிரினங்களை வேட்டையாடியதைப் புராண இதிகாசங்கள் கூறுகின்றன. யாகங்கள் என்ற பெயரால் குதிரைகள், மாடுகள் கொல்லப்பட்டுள்ளன. இந்து மதத்தில் இதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன.

இன்றைக்கும் கூட முஸ்லிம்களை விட இந்துக்களே அதிக அளவில் அசைவ உணவு உட்கொள்கின்றனர். 500 கோடி மக்களில் மூன்று கோடிக்கும் குறைவான மக்கள் தாம் அசைவ உணவைத் தவிர்ப்பதாகக் கூறிக் கொள்கின்றனர். இதிலிருந்து முழுச் சைவம் என்பது நடைமுறைக்கு ஒவ்வாதது என்பதை அறியலாம்.

மேலும் ஒருவருக்கு அசைவ உணவில் விருப்பமில்லாவிட்டால் அதைத் தவிர்த்துக் கொள்வதற்கு இஸ்லாம் தடையாக இல்லை. அசைவ உணவை உட்கொள்வது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டது தானே தவிர அவசியம் நடைமுறைப்படுத்த வேண்டிய ஒன்றல்ல என்பதையும் உணர வேண்டும்.

இஸ்லாம் கூறுகின்ற முறையில் உயிரினங்களை அறுக்கும் போது அவற்றுக்கு எந்த வேதனையும் தெரியாது என்று சோதனை மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

உயிரினங்களை உணவாகக் கொள்ளும் முஸ்லிமல்லாதவர்கள் அவற்றைத் தண்ணீரில் மூழ்கடித்தோ, அல்லது கழுத்தை நெறித்தோ, தடியால் அடித்தோ, ஈட்டியால் குத்தியோ இன்னும் இது போன்ற வழிகளிலோ பிராணிகளின் உயிரைப் போக்குகின்றனர்.

ஆனால் இந்த வழிமுறைகளில் பிராணிகளைக் கொல்வதை இஸ்லாம் கண்டிக்கிறது. பிராணிகளின் குரல் வளையில் கூர்மையான கத்தி மூலம் அறுத்துத் தான் பிராணிகளைக் கொல்ல வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது.

குரல்வளை மிக விரைவாக அறுக்கப்படுவதால் மூளையுடன் உள்ள தொடர்பு உடனே அறுந்து போகின்றது. இதனால் அப்பிராணிகளால் வலியை உணர முடியாது. இரத்தத்தை வெளியேற்றுவதற்காகவே உடல் துடிக்கிறது; வேதனையால் அல்ல என்பதைச் சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஜெர்மனி நாட்டில் உள்ள ஹனோவர் பல்கலைக் கழகத்தில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அந்த ஆய்வை நடத்தியவர்கள் பேராசிரியர் சூல்ட்ஜ் மற்றும் அவரது துணை ஆய்வாளர் டாக்டர் ஹாஸிம் ஆவார்கள்.

அவர்கள் செய்த பரிசோதனையின் விவரத்தையும் அதன் முடிவுகளின் விவரத்தையும் கீழே தருகின்றோம்.

1-முதலில் உணவுக்காக அறுக்கப்படும் விலங்குகள் தேர்வு செய்யப்பட்டன.

2 -அறுவை சிகிச்சை செய்து அவ்விலங்குகளின் தலையில் மூளையைத் தொடும் படி பல பகுதிகளில் மின்னணுக் கருவிகள் பொருத்தப்பட்டன.

3 -உணர்வு திரும்பியதும். முழுவதுமாகக் குணமடையப் பல வாரங்களுக்கு அப்படியே விடப்பட்டன.

4 -அதன் பிறகு பாதி எண்ணிக்கை விலங்குகள் இஸ்லாமிய ஹலால் முறைப்படி அறுக்கப்பட்டன.

5 -மறு பாதி எண்ணிக்கை விலங்குகள் மேற்கத்தியர் கையாளும் முறைப்படி கொல்லப்பட்டன.

6 – பரிசோதனையின் போது கொல்லப்பட்ட எல்லா விலங்குகளுக்கும் E.E.G. மற்றும் E.C.G பதிவு செய்யப்பட்டன. அதாவது E.E.G. மூளையின் நிலையையும், E.C.G. இருதய நிலையையும் படம் பிடித்துக் காட்டின.

இப்போது மேற்கண்ட பரிசோதனையின் முடிவுகளையும், அதன் விளக்கங்களையும் காண்போம்.

இஸ்லாமிய ஹலால் முறை:

1-இம்முறையில் விலங்குகள் அறுக்கப்பட்ட போது, முதல் மூன்று வினாடிகளுக்கு E.E.G. ல் எந்த மாற்றமும் தென்படவில்லை. அறுக்கப்படுவதற்கு முன்னிருந்த நிலையிலேயே அது தொடர்ந்து நீடித்தது. விலங்குகள் அறுக்கப்படும் போது அவை வலியினால் துன்பப்படவில்லை என்பதை இது காட்டியது.

2-மூன்று வினாடிகளுக்குப் பின் அடுத்த மூன்று வினாடிகளுக்கு விலங்குகள் ஆழ்ந்த தூக்கம் அல்லது உணர்வற்ற நிலைக்கு ஆளாகின்றன என்பதை E.E.G. பதிவு காட்டியது. அந்நிலை உடம்பிலிருந்து அதிகப் படியான ரத்தம் பீறிட்டு வெளியாவதால் ஏற்படுகின்றது.

3 -மேற்கண்ட ஆறு வினாடிகளுக்குப் பின் E.E.G. பூஜ்ய நிலையைப் பதிவு செய்தது. அறுக்கப்பட்ட விலங்கு எந்த வலிக்கோ அல்லது வதைக்கோ ஆளாகவில்லை என்பதை இது காட்டியது.

4 -மூளையின் நிலையை பூஜ்யமாகப் பதிவு செய்த நேரத்திலும், இதயத் துடிப்பு நிற்காமல் தொடர்ந்து துடிப்பதாலும், உடலில் ஏற்படும் வலிப்பினாலும் உடலிலிருந்து முற்றிலுமாக ரத்தம் வெளியேற்றப்படுகிறது. அதனால் அந்த மாமிசம் உணவுக்கேற்ற சுகாதார நிலையை அடைகிறது.

முஸ்லிமல்லாதவர்கள் பிராணிகளைக் கொல்லும் முறை:

1 -இந்த முறையில் கொல்லப்படும் விலங்குகள் உடனே நிலை குலைந்து போய் உணர்வற்ற நிலைக்குப் போகின்றன.

2 -அப்போது விலங்குகள் மிகக் கடுமையான வலியால் அவதியுறுவதை E.E.G. பதிவு காட்டியது.

3 -அதே நேரத்தில் விலங்குகளின் இதயம் ஹலால் முறையில் அறுக்கப்பட்ட விலங்குகளோடு ஒப்பிடும் போது முன்னதாகவே நின்று விடுகிறது. அதனால் உடலில் மிகுதியான ரத்தம் தேங்கிவிடுகிறது. ரத்தம் உறைந்த அந்த மாமிசம் உட்கொள்ளத்தக்க சுகாதார நிலையை அடையவில்லை.

மேற்கண்ட ஆய்வுகள் இஸ்லாமிய ஹலால் முறையே சிறந்தது என்பதை எடுத்துக் காட்டுவதோடு அம்முறையே மனிதாபிமான முறை என்பதையும் நிரூபித்துள்ளது.

எனவே பிராணிகளை இஸ்லாம் கூறும் முறையில் அறுத்தால் அதில் உயிரினங்களுக்கு வதை இல்லை என்பது நிரூபணமாகின்றது.

எனவே இஸ்லாம் ஜீவகாருண்யமில்லாத மார்க்கம் என்பது முற்றிலும் தவறான குற்றச்சாட்டு என்பதில் ஐயமில்லை.

இஸ்லாமியக் குற்றவியல் சட்டங்கள்

முஸ்லிமல்லாதவர்களால் விமர்சனம் செய்யப்படும் விஷயங்களில் இஸ்லாமியக் குற்றவியல் சட்டங்களும் ஒன்றாகும். ஒரு மனிதன் மற்றொரு மனிதனைக் கொலை செய்து விட்டால் கொலை செய்தவன் கொல்லப்பட வேண்டுமென இஸ்லாம் கூறுகின்றது. ஒருவனது அங்கத்தை மற்றொருவன் சேதப்படுத்தி விட்டால் சேதப்படுத்தியவனின் அதே அங்கம் சேதப்படுத்தப்பட வேண்டும். திருடினால் கையை வெட்ட வேண்டும் என்றெல்லாம் கடுமையான சட்டங்களை அமுல்படுத்தச் சொல்கிறது இஸ்லாம்.

இஸ்லாத்தில் உடன்பாடில்லாத பிற மதத்தவர்கள் இந்தச் சட்டங்களையும் விமர்சிக்கின்றனர். இது என்ன கொடுமை! திருடியதற்காகக் கையை வெட்டச் சொல்வது காட்டுமிராண்டித்தனம் அல்லவா? விபச்சாரத்திற்காக மரண தண்டனை வழங்குவது மனிதாபிமானமற்றதல்லவா? நாகரீகத்தின் உச்சிக்கு மனிதன் சென்றுவிட்ட காலத்தில் இந்தக் கொடூரமான மனிதாபிமானமற்ற சட்டங்கள் பொருந்துமா? என்று வினாக்களை எழுப்பி வருகின்றனர்.

தண்டனை வழங்குவதன் நோக்கம்

குற்றவாளிகள் கட்டாயம் தண்டிக்கப்பட வேண்டும். என்று இஸ்லாம் கூறுவது போலவே மற்றவர்களும் கூறுகின்றார்கள். கடுமையான தண்டனைகள் வழங்குவதா? கடுமை குறைந்த தண்டனைகள் வழங்குவதா? என்பதிலேயே இஸ்லாத்துடன் இவர்கள் முரண்படுகிறார்கள். இரண்டு வகையான தண்டனைகளில் எது அறிவுப்பூர்வமானது என்பதை நாம் ஆராய்வோம்.

குற்றவாளி ஒருவன் தண்டிக்கப்பட வேண்டும் என்று விதி ஏற்படுத்தப்பட்டிருப்பதன் நோக்கம் என்ன என்பதைப் புரிந்து கொண்டால் தான் இது விஷயத்தில் நாம் சரியான முடிவுக்கு வர முடியும்.

கொலையாளிகளைக் கொல்வதால் அவனால் ஏற்கனவே கொல்லப்பட்டவனின் உயிர் திரும்பக் கிடைத்துவிடப் போவதில்லை. கற்பழித்தவனுக்கு மரண தண்டனை வழங்குவதால் போன கற்பு திரும்பவும் கிடைத்துவிடப் போவதில்லை. பொருளாதாரம் சம்பந்தப்பட்ட, திருட்டு போன்ற சில குற்றங்களில் வேண்டுமானால் பறிபோனவை சில சமயங்களில் கிடைக்கலாமே தவிர பெரும்பாலான குற்றங்களில் குற்றவாளி தண்டிக்கப்பட்டு விடுவதால் அவனால் பாதிக்கப்பட்டவனுக்குப் பயனேதும் கிடையாது. இழந்ததை மீட்பது தண்டனைகளின் நோக்கம் அல்ல என்பதை இதிலிருந்து விளங்கலாம்.

அப்படியானால் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டியதின் காரணம் என்ன?

குற்றம் செய்தவனுக்கு வழங்கப்படும் தண்டனை மீண்டும் மீண்டும் குற்றம் செய்வதிலிருந்து அவனைத் தடுக்க வேண்டும்.

ஒரு குற்றவாளிக்கு வழங்கப்படும் தண்டனையைக் கண்டு மற்றவர்கள் குற்றம் செய்ய அஞ்ச வேண்டும்.

குற்றவாளியால் பாதிப்புக்கு உள்ளானவன் தனக்கு நீதி கிடைத்துவிட்டதாக நம்ப வேண்டும். அவன் மனநிறைவு அடைய வேண்டும்.

குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்க இந்த மூன்றைத் தவிர வேறு காரணங்களிருக்க முடியாது. குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதன் நோக்கங்கள் இவை தான் என்பதை மாற்றுக் கருத்துடையவர்களும் மறுக்க மாட்டார்கள்.

குற்றம் செய்தவர்கள் மீண்டும் குற்றம் செய்யாமலும், குற்றம் செய்ய நினைப்பவர்கள் அதன் பால் நெருங்காமலும் இருக்க வேண்டுமென்பதற்காகத் தான் உலகமெங்கும் சிறைச்சாலைகள், காவல் நிலையங்கள், நீதிமன்றங்களெல்லாம் ஏற்படுத்தப்பட்டுள்ளன. குற்றவாளிகளுக்கு எந்தவிதமான தண்டனையும் வழங்கக் கூடாது என்று உலகில் எந்த அரசாங்கமும் கூறவில்லை.

குற்றங்களுக்கெதிராகப் பல்வேறு தண்டனைகளை வழங்கி வரும் அரசுகள் இந்த நோக்கத்தில் வெற்றி பெற்றுள்ளார்களா என்றால் நிச்சயமாக இல்லை.

குற்றம் செய்பவனையும், செய்ய நினைப்பவனையும் தடுத்து நிறுத்தும் அளவுக்கு வலிமை மிக்கதாக எந்த நாட்டின் சட்டமும் இல்லாததே இதற்குக் காரணமாகும். அது மட்டுமின்றிக் குற்றவாளிகளுக்குச் செய்து தரப்படுகின்ற வசதிகளைக் காணும் ஒருவன் நாமும் குற்றம் செய்தால் அந்த வசதிகளை அனுபவிக்கலாமே என்று எண்ணுகின்றான். குற்றங்களைத் தடுத்து நிறுத்த வேண்டிய சட்டங்களே குற்றம் செய்யத் தூண்டினால் என்னவாகும்? அறிவு ஜீவிகள் இதைப் பற்றிச் சிந்தித்ததாகத் தெரியவில்லை.

ஒருவன் திருடுகிறான்; அல்லது கற்பழிக்கிறான்; கொலை செய்கிறான்; கொள்ளையடிக்கிறான்; அப்பாவிப் பெண்களின் கற்பைச் சூறையாடுகிறான்; இன்ன பிற குற்றங்களில் ஈடுபடுகிறான். இத்தகைய சமூக விரோதிகளுக்கு வழங்கப்படும் தண்டனை என்ன? சில மாதங்களோ, சில வருடங்களோ சிறைத் தண்டனை வழங்கப்படுகின்றது. இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகளில் தண்டனையின் அளவு இது தான்.

சிறைத் தண்டனை என்பது என்ன? வெளியே வர முடியாது என்ற ஒரு அம்சத்தை நீக்கி விட்டுப் பார்த்தால் எத்தனையோ பரம ஏழைகளின் வாழ்வை விட சிறை வாழ்வு மேலானதாக உள்ளது.

நியாயமாகவும், நேர்மையாகவும் நடக்கும் ஏழைகளுக்கு அன்றாடம் கால் வயிற்றுக் கஞ்சிக்கே வழியில்லை. அநியாயமாகவும், அயோக்கியத்தனமாகவும் நடந்து கொண்ட குற்றவாளிகளுக்கு மூன்று வேளை உணவுக்கு உத்திரவாதம் தரப்படுகின்றது. உயர் தரமான மருத்துவ வசதிகள் அவர்களுக்குச் செய்து தரப்படுகின்றன. அவர்களின் பொழுதைப் போக்குவதற்காக (?) சினிமா போன்ற வசதிகளும் சிறைச் சாலைகளுக்குள்ளேயே செய்து தரப்படுகின்றன. இருக்கின்ற வசதிகள் போதாதென்று குற்றவாளிகளுக்கான வசதியைப் பெருக்க என்ன செய்யலாம் என்பதைக் கண்டறியக் கமிஷன்கள் அமைக்கப்படுகின்றன.

இந்தக் குற்றவாளிகளால் பாதிக்கப்பட்டவர்கள், குற்றவாளிகளை எதுவும் செய்து விடாத அளவுக்குப் பாதுகாப்பு வசதிகள் செய்யப்படுகின்றன.

இதில் வேதனையான அம்சம் என்னவென்றால், எந்த மக்களிடம் இருந்து ஒருவன் திருடுகிறானோ, எந்த மக்களைக் கொலை செய்கிறானோ, எந்தப் பெண்களைக் கற்பழித்தானோ அந்த மக்களின் வரிப் பணத்திலிருந்து தான் இந்த அயோக்கியர்களுக்கு இவ்வளவு வசதிகளும் செய்து தரப்படுகின்றன.

இந்தப் பெயரளவிலான தண்டனை, குற்றவாளிகளின் மனப்பான்மையைக் கடுகளவும் மாற்றியதாகக் காணோம். சிறைச் சாலையிலிருந்து விடுதலை பெற்று வரும் ஒருவன், மீண்டும் குற்றம் புரிந்து விட்டு மாமியார் வீட்டுக்குப் போகிறேன் என்று திமிருடன் கூறிக் கொண்டு மீண்டும் சிறைச் சாலையில் தஞ்சமடைகிறான்.

53 முறை சிறை சென்றவர் மீண்டும் கைது! 15 முறை சைக்கிள் திருடியவன் மீண்டும் கைது! என்றெல்லாம் அன்றாடம் செய்தித் தாள்களில் செய்திகள் வருகின்றன. 53 தடவை குற்றம் புரிகிறான். 53 தடவையும் கைது செய்யப்படுகிறான். 53 தடவை வழங்கப்பட்ட தண்டனைகள் அவனுக்கு எந்த அச்சத்தையும் ஏற்படுத்தக் காணோம். அதை ஒரு தண்டனையாகவே அவன் கருதக் காணோம்.

மணியடித்தால் சோறு! மாமனாரு வீடு! என்று சிறைச் சாலையில் கிடைக்கும் வசதிகள் பற்றி மற்றவர்களும் தெரிந்து கொண்டதால் நேர்மையாக வாழ்ந்து கஞ்சிக்குக் கஷ்டப்படுவானேன்? ஏதேனும் குற்றம் புரிந்தால் சிறைச் சாலைகளில் மூன்று வேளை உணவு கிடைக்குமே; என்றெண்ணி அவர்களும் குற்றங்களில் ஈடுபடத் தொடங்குகின்றனர்.

ஆண்டுதோறும் குற்றவாளிகள் பெருகி வருகிறார்கள். குற்றங்கள் பெருகுகின்றன. குற்றவாளிகளை அதிகப்படுத்துவதற்காக மக்களின் வரிப்பணம் பாழாக்கப்படுகின்றது. அறிவு ஜீவிகள் (?) வக்காலத்து வாங்கும் மனிதாபிமானச் சட்டங்கள் ஏற்படுத்திய விளைவுகள் இவை.

அடுத்ததாக, பாதிக்கப்பட்டவன் இந்தத் தண்டனைகளால் மனநிறைவு அடைவானா? என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும்.

திருடியவனை என்ன செய்யலாம் என்று திருட்டுக் கொடுத்தவனிடம் கேட்டால் ஆறு மாதம் சோறு போடலாம் எனக் கூற மாட்டான். கொல்லப்பட்டவனின் மகனிடம் போய்க் கொலையாளியை என்ன செய்ய வேண்டும் எனக் கேட்டால் பதினாலு வருடம் அரசாங்கச் செலவில் அவனைப் பராமரிக்க வேண்டும் என்று கூறுவானா? தலையைச் சீவ வேண்டும் என்பானா?

கற்பழிக்கப்பட்டவள், அதனால் தனது எதிர்காலமே இருண்டு விட்ட நிலையில் கற்பழித்தவனுக்கு எத்தகைய தண்டனை கொடுத்தால் மனம் நிறைவடைவாள்? என்றெல்லாம் பாதிக்கப்பட்டவர்களின் உணர்வுகளைச் சீர்தூக்கிப் பார்த்துத் தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவனின் நிலையிலிருந்து பார்க்காமல் பாதிக்கப்படாத இடத்தில் உட்கார்ந்து கொண்டு சட்டங்கள் இயற்றப்படுவதால் தான் பாதிக்கப்பட்டவனின் உணர்வுகள் கவனத்தில் கொள்ளப்படுவதில்லை.

இஸ்லாமோ இதையும் கவனத்தில் கொள்கிறது. ஒருவன் பத்துப் பேரைக் கொலை செய்து தூக்குத் தண்டனை பெறுகிறான். உலகின் பல நாடுகளில் கருணை மனுவின் அடிப்படையில் தண்டனையை ரத்து செய்யும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ளது.

கொல்லப்பட்டவர்களுக்குக் குடியரசுத் தலைவர் மாமனோ, மச்சானோ அல்ல என்றாலும் அந்த அதிகாரம் குடியரசுத் தலைவருக்கு அளிக்கப்பட்டிருப்பதிலிருந்து பாதிக்கப்பட்டவனின் நிலையைச் சட்டம் கடுகளவும் கவனத்தில் கொள்ளவில்லை என்பதை அறிந்து கொள்ளலாம்.

இஸ்லாமியச் சட்டம் என்ன கூறுகிறது? ஒருவன் மற்றொருவனின் கண்ணைக் குருடாக்கி விடுகிறான். இஸ்லாத்தில் இதற்கான தண்டனை குற்றவாளியின் கண்ணையும் குருடாக்கி விட வேண்டும். கண்ணுக்குக் கண் பல்லுக்குப் பல் என்பது இஸ்லாத்தின் குற்றவியல் சட்டம்.

அதே நேரத்தில் கண்ணை இழந்தவன் குற்றவாளியை மன்னித்து விடுவதாக அறிவித்தால், அல்லது எதிரியிடமிருந்து ஏதேனும் தொகை கிடைத்தால் போதும் என்று கூறினால் குற்றவாளியின் கண் குருடாக்கப்படாது.

அது போலவே கொல்லப்பட்டவனின் மகன் அல்லது தந்தை அல்லது மற்ற வாரிசுகள் குற்றவாளியின் உயிரை எடுக்க வேண்டாம் என்று கூறுவார்களானால் குற்றவாளி தண்டிக்கப்பட மாட்டான். இது இஸ்லாமியச் சட்டம்.

அதாவது உலக நாடுகள் குடியரசுத் தலைவருக்கு வழங்கிய அதிகாரத்தைப் பாதிக்கப்பட்டவனுக்கு இஸ்லாம் அளிக்கிறது.

சட்டங்கள் இப்படித் தான் இருக்க வேண்டும் என்பதை நியாயமான சிந்தனையுடைய யாரும் மறுக்க முடியாது.

பாதிக்கப்பட்டவன் மனநிறைவு பெறும் வகையில் தண்டனை அளிக்கப்படாவிட்டால் பாதிக்கப்பட்டவனே குற்றவாளியாகும் நிலைமையும் உருவாகும்.

கொலைக் குற்றத்துக்காகக் கைது செய்யப்பட்டவன் ஜாமீனில் விடப்படும் போதும், சிறைச் சாலையிலிருந்து நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்படும் போதும் கொல்லப்பட்டவனின் உறவினர்கள் அவனைக் கொன்று விடுவது அன்றாட நிகழ்ச்சியாகி வருகிறது.

இந்த நிலைமைக்குக் காரணம் என்ன? கொலையாளியை இந்தச் சட்டங்கள் தண்டிக்காது. தண்டித்தாலும் அது போதுமானதாக இருக்காது என்ற எண்ணத்தின் காரணமாகவே கொலை செய்யப்பட்டவனின் உறவினர்களும் கொலையாளிகளாகி விடுகின்றனர்.

குற்றங்கள் அதிகரிப்பதற்கு இதுவும் முக்கியக் காரணமாக உள்ளது எனலாம்.

இனி இஸ்லாமியச் சட்டம் எவ்வளவு அர்த்தமுள்ளது; அறிவுப்பூர்வமானது என்பதைக் காண்போம்.

திருட்டுக் குற்றத்தில் ஈடுபடும் ஆண்கள், பெண்கள் ஆகியோரின் வலது கை மணிக்கட்டு வரை வெட்டப்பட வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது. இப்படிக் கையை வெட்டினால் அவர்கள் தொடர்ந்து திருடமாட்டார்கள். திருடவும் முடியாது. மீண்டும் திருடுவதற்கு மனதாலும் எண்ண மாட்டார்கள் என்பது ஒரு நன்மை. முதன் முதலாகத் திருட எண்ணுபவனும் அதற்குக் கிடைக்கும் தண்டனையை அறியும் போது திருடத் துணிவு பெற மாட்டான். இது மற்றொரு நன்மை.

கை வெட்டப்பட்டவனைப் பார்க்கும் போது அவன் திருடன் என்பதை மற்றவர்கள் அறிந்து கொள்ள இயலும். எனவே அவனிடம் தங்கள் பொருட்களைத் திருட்டுக் கொடுக்காமல் எச்சரிக்கையாக இருந்து கொள்ளலாம்.

 இவர்கள் இங்கே இருக்கிறார்களா? என்று திருடர்களின் புகைப்படங்களைப் பொது இடங்களில் ஒட்டி வைப்பதால் அந்த முகங்களை யாரும் நினைவில் பதிய வைக்க இயலாது. ஆனால் கையை வெட்டினால் அதுவே திருடன் என்பதற்குச் சிறந்த அடையாளமாகி விடுகிறது. இது மூன்றாவது நன்மை.

தண்டனை வழங்கப்படுவதன் நோக்கம் பரிபூரணமாக இப்போது நிறைவேறுகிறது. அது மட்டுமின்றி, குற்றவாளியை வருடக் கணக்கில் சிறையில் போட்டு அவனைப் பராமரித்துப் பாதுகாக்கும் வகையில் ஏற்படும் பொருளாதாரச் செலவுகள் மிச்சமாகின்றன. மக்களின் வரிப்பணம் பாழாகாமல் இந்தச் சட்டம் தடுக்கிறது. சிறைக் கூடங்களை ஒழித்து விட்டு இஸ்லாம் பரிந்துரைக்கின்ற தண்டனைகளை அமுல்படுத்தினால் பற்றாக்குறை பட்ஜெட் போடும் அவசியமிராது.

பாவம்! கையை வெட்டுகின்றீர்களே! என்று பரிதாபப்படுவது தான் மனிதாபிமானம் என்று அறிவு ஜீவிகள் எண்ணுகின்றனர். பரிதாபப்பட வேண்டியது தான். அதை நாம் ஆட்சேபிக்கவில்லை. யாருக்குப் பரிதாபப்படுவது?

மரணப் படுக்கையில் கிடக்கும் தன் மனைவியின் உயிர் காக்கும் மருந்து வாங்கச் செல்லும் ஒருவனிடமிருந்து திருடன் பணத்தை அபேஸ் செய்கிறான். இந்த அயோக்கியனால் பணத்தை மட்டுமின்றித் தன் மனைவியின் உயிரையும் பறிகொடுத்து நிற்கிறானே! அவனுக்காக யார் பரிதாபப்படுவது?

தன் மகளின் திருமணத்திற்காக உழைத்துச் உழைத்து சேர்த்த பணத்தைத் திருடன் பறித்துக் கொள்கிறான். பணத்தையும், மகளின் வருங்காலத்தையும் பறிகொடுத்து நிற்கிறானே அவனுக்கு யார் பரிதாபப்படுவது?

நேர்மையையும், ஒழுக்கத்தையும் விரும்பக்கூடியவன் பாதிக்கப்பட்டு நடுத் தெருவில் நிற்பதைப் பார்த்துப் பரிதாபப்பட மாட்டார்களாம். அவனை நடுத்தெருவில் நிறுத்திய அயோக்கியனுக்காகப் பரிதாபப்படுவார்களாம்? என்னே மனிதாபிமானம்! என்னே காருண்யம்? அறிவை அடகு வைத்துவிட்டு அயோக்கியர்களுக்கு வக்காலத்து வாங்குபவர்கள் தான் அறிவு ஜீவிகளாம்!

பரிதாபப்படுபவர்கள் அதை முழுமையாகப் பட்டுத் தொலைக்க வேண்டியது தானே. எந்தக் குற்றவாளிக்கும் எந்தத் தண்டனையும் தேவையில்லை என்று கூறினால் முழு மனிதாபிமானம் என்று ஏற்றுக் கொள்ளலாம். சிறைச்சாலை போலீஸ், நீதிமன்றம் ஆகியவற்றிற்குச் செய்யும் செலவுகளாவது மிச்சமாகும்.

ஆனால் இவர்கள் இப்படிச் சொல்ல மாட்டார்கள்.

இதிலிருந்து மனிதாபிமானம் காரணமாக இவ்வாறு இவர்கள் வாதிடவில்லை என்பதைச் சந்தேகமற அறிந்து கொள்ளலாம். லஞ்சம், ஊழல் மற்றும் எண்ணற்ற கிரிமினல் நடவடிக்கைகளில் இறங்குவோர் நாளை சிறைச்சாலைக்குச் செல்லும் நிலை ஏற்படலாம். அப்போது தாங்கள் அனுபவிக்க வேண்டும் என்பதற்காகத் தான் குற்றவாளிகளுக்கு வக்காலத்து வாங்குகின்றனர்.

இப்படியே கையை வெட்டிக்கொண்டே போனால் கையில்லாதவர்களின் எண்ணிக்கை பெருகிவிடுமே என்றெல்லாம் புத்திசாலித்தனமான(?) கேள்விகளையும் இந்த அறிவு ஜீவிகள் எழுப்புகின்றனர்.

நிச்சயம் கையில்லாதவர்களின் எண்ணிக்கை பெருகாது. ஒரே ஒரு திருடனுக்குக் கையை வெட்டி விட்டால் மற்ற எவனுக்குமே திருடும் துணிவு ஏற்படாது. வெட்டப்படும் கைகளின் எண்ணிக்கை நிச்சயம் பெருகாது.

சவுதி அரேபிய அரசாங்கம் இந்தத் தண்டனைகளைக் கடுமையான முறையில் கடைப்பிடிக்கின்றது. பல ஆண்டுகளாக இந்தச் சட்டத்தை அமுல்படுத்தி வருகின்றது. அங்கே கையில்லாதவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை. மாறாகத் திருடுவோரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. உலகத்திலேயே குற்றங்கள் குறைவாக நடக்கும் நாடு என்ற பெருமையை அந்த நாடு பெற்றுள்ளது.

உதாரணத்துக்காகத் தான் திருட்டுக் குற்றத்தின் தண்டனை பற்றி இங்கே குறிப்பிட்டுள்ளோம். இஸ்லாம் கூறும் தண்டனை முறைகள் யாவுமே இவ்வாறு தான் அமைந்துள்ளன. கொலை செய்தவனை அரசாங்கம் உடனே கொன்று விடுமானால் கொலை செய்ய எவருமே துணிய மாட்டார்கள். பல்லை உடைத்தால் தனது பல்லும் அரசாங்கத்தால் உடைக்கப்படும் என்பதை அறிந்தால் எவருமே மற்றவனின் பல்லை உடைக்க மாட்டார்கள்.

உலகில் எத்தனையோ அரசுகள் வந்து போய்விட்டன. மக்களின் உயிருக்கும் உடைமைக்கும், கற்புக்கும் பாதுகாப்பு அளிக்கும் பொறுப்பில் அத்தனை அரசுகளுமே தோல்வியைத் தான் தழுவி இருக்கின்றன. எப்போது என்ன நேருமோ என்று அஞ்சி அஞ்சியே மக்கள் வாழும் நிலை ஏற்பட்டு விட்டது.

இந்த நிலை மாற வேண்டுமானால் குற்றவாளிகள் விஷயத்தில் கருணை என்ற பேச்சுக்கே இடமளிக்கக் கூடாது. தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும். இஸ்லாம் சொல்கின்றது என்ற குறுகிய நோக்கில் இஸ்லாமியத் தண்டனைகளைப் புறக்கணிக்காமல் அதனால் ஏற்படும் நல்ல விளைவுகளைக் கருத்தில் கொண்டு அதை அமுல்படுத்த முன் வர வேண்டும்.

காலம் கடந்தாவது சில பேர் இன்று இதை உணரத் தலைப்பட்டுள்ளனர். பெண்கள் கற்பழிக்கப்படுவது பெருகி வருவதைக் கண்டு கற்பழிப்பு குற்றங்களில் ஈடுபடுவோர்க்கு அரபு நாடுகளில் உள்ளது போல் மரண தண்டனை வழங்க வேண்டும் என்று கூற ஆரம்பித்துள்ளனர். பல்வேறு பெண்கள் மாநாடுகளில் இந்தக் கருத்து வலியுறுத்தப்பட்டுள்ளது.

பெயரளவிலான தண்டனைகளால் பயனேதும் இல்லை என்பதை அனுபவப்பூர்வமாக உலகம் அறிந்து வருகிறது. குற்றவியல் சட்டங்கள், குற்றங்களைக் குறைப்பதில் படுதோல்வியடைந்து விட்டதை ஒவ்வொரு அரசும் புரிந்து கொண்டது.

குற்றவாளிகளுக்கு ஒத்தடம் கொடுக்கும் இந்தத் தண்டனைகளை மாற்றி அவர்களுக்கெதிராகச் சாட்டையை உயர்த்திக் கடும் தண்டனைகளை நடைமுறைப்படுத்தினால் அதன் பயனை இந்த அறிவு ஜீவிகள் அனுபவப்பூர்வமாக உணர்வார்கள். அதன் பிறகு இஸ்லாமியச் சட்டத்தை விமர்சிக்க மாட்டார்கள்.

திருடனைப் பிடித்தவுடன் அவனுக்குக் கையை வெட்டிவிட்டால் பிறகு அவன் நிரபராதி என்பது தெரிய வந்தால் போன கை திரும்ப வந்து விடுமா? என்றெல்லாம் சிலர் கேட்கின்றனர்.

எடுத்தேன்; கவிழ்த்தேன் என்று தண்டனை வழங்குமாறு இஸ்லாம் கூறவில்லை. குற்றங்கள் நிரூபிக்கப்பட்ட பின்பே தண்டனை வழங்குமாறு கூறுகின்றது. மரண தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படும் விபச்சாரத்தை நான்கு நேரடியான சாட்சிகள் மூலம் நிரூபிக்க வேண்டும். நான்குக்கும் குறைவானவர்கள் இக்குற்றத்தைக் கூறினால் அவ்வாறு குற்றம் சுமத்தியவர்களுக்கு எண்பது கசையடிகள் வழங்குமாறு இஸ்லாம் உத்தரவிடுகிறது. இஸ்லாமிய ஆட்சி முறையில் தகுந்த சாட்சியங்களின்றிச் சில குற்றவாளிகள் தப்பித்துக் கொள்ள முடியுமே தவிர நிரபராதிகள் தண்டிக்கப்படவே முடியாது என்பது தான் உண்மை.

இஸ்லாத்திலும் ஜாதிகள் உள்ளனவா?

இஸ்லாம் மார்க்கம் ஜாதிகளை ஒழித்துக் கட்டிவிட்டதாகப் பிரச்சாரம் செய்யப்படுகிறது. இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதற்கு முன் எந்த ஜாதியில் இருந்தார்களோ அந்த ஜாதியை இஸ்லாம் ஒழித்து விட்டாலும் வேறு விதமான ஜாதி முறைகள் இஸ்லாத்திலும் உள்ளன என்பதும் பிற மதத்தினரின் விமர்சனங்களில் ஒன்றாகும்.

இவ்வாறு விமர்சனம் செய்வதற்குச் சில சான்றுகளையும் முன்வைக்கின்றனர்.

மிகவும் பரவலாக அனைவரும் அறிந்து வைத்திருக்கின்ற ஷியா, சன்னி போன்ற பிரிவுகளையும், தக்னி, லெப்பை, ராவுத்தர், மரைக்காயர் போன்ற பிரிவுகளையும், ஷாபி, ஹனபி, மாலிகி, ஹம்பலி அஹ்லே ஹதீஸ் போன்ற பிரிவுகளையும் இவர்கள் தங்கள் கூற்றுக்கு ஆதாரமாக எடுத்துக் காட்டுகின்றனர்.

உருது பேசும் முஸ்லிம்கள் தமிழ் முஸ்லிம்களின் குடும்பத்தில் பெண் எடுப்பதோ, கொடுப்பதோ இல்லை என்பதையும் எடுத்துக் காட்டுகின்றனர்.

முஸ்லிம் சமுதாயத்தில் இத்தகைய பிரிவுகள் இருப்பதை நாம் மறுக்கவில்லை. மறுக்கவும் முடியாது. ஆனால் இதை ஆதாரமாகக் கொண்டு இஸ்லாத்திலும் ஜாதிகள் இருப்பதாக வாதிடுவதைத் தான் நாம் மறுக்கிறோம்.

இவ்வாறு மறுப்பதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன.

முதல் காரணம்

முஸ்லிம் சமுதாயத்தில் இத்தகைய பிரிவுகள் இருப்பது அவர்களது அறியாமையினால் அல்லது புரிந்து கொள்வதில் ஏற்பட்ட தவறுகளால் உருவானதாகும்.

இஸ்லாம் மார்க்கத்தின் மூல ஆதாரங்களாக உள்ள திருக்குர்ஆனிலும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் போதனைகளிலும் இத்தகைய பிரிவுகள் பற்றிக் குறிப்பிடவில்லை.

நீங்கள் அனைவரும் ஒரு சமுதாயம் தான்.

திருக்குர்ஆன் 21:92

உங்களை ஒரு ஆண் ஒரு பெண்ணிலிருந்து நாம் படைத்தோம். உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் நாம் ஆக்கியிருப்பது ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வதற்கே. நிச்சயமாக அல்லாஹ்விடம் சிறந்தவர் அல்லாஹ்வை அதிகம் அஞ்சுபவரே!

திருக்குர்ஆன் 49:13

தங்கள் மார்க்கத்தைப் பலவாறாகப் பிரித்து விட்டார்களே அவர்களுடன் (முஹம்மதே) உமக்கு எந்தத் தொடர்பும் இல்லை.

திருக்குர்ஆன் 6:159

பலவாறாகப் பிரிந்துவிடக் கூடாது என்று திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது. எல்லா மக்களுக்கும் மூலப் பிதா ஒருவர் தான். எல்லா மக்களுக்கும் மூல அன்னையும் ஒருவரே என்று திட்டவட்டமாக இஸ்லாம் பிரகடனம் செய்து விட்டது.

இஸ்லாத்தின் போதனைகளை மறந்து விட்டதன் காரணத்தால் தான் இவ்வாறு பிளவுபட்டு விட்டார்களே தவிர இஸ்லாம் பிளவுபடுவதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ளவில்லை.

இரண்டாவது காரணம்

ஜாதி என்பது பிறப்பின் அடிப்படையில் ஒருவனுக்குக் கிடைக்கும் தகுதியாகும். ஒரு சாதியில் பிறந்தவன் இன்னொரு சாதிக்காரனாக மாறவே முடியாது. இது தான் சாதிக்குரிய இலக்கணம்.

முஸ்லிம் சமுதாயத்தில் காணப்படும் இந்தப் பிரிவுகள் பிறப்பின் அடிப்படையில் உருவானதன்று.

ஷியா, சன்னி, ஷாஃபி, ஹனஃபி, மாலிகி, ஹம்பலி, அஹ்லே ஹதீஸ் போன்ற பிரிவுகள் இஸ்லாத்தைப் புரிந்து கொள்வதில் கருத்து வேறுபாடு கொண்டதால் ஏற்பட்ட பிரிவாகும்.

ஷியா பிரிவின் குடும்பத்தில் பிறந்தவன் அவர்களது கொள்கையை நிராகரித்துவிட்டு மற்ற எந்தப் பிரிவில் வேண்டுமானாலும் சேர்ந்து கொள்ளலாம். ஷாஃபி என்பவர் ஹனஃபி பிரிவில் சேரலாம். ஹனஃபி என்பவர் ஷாஃபி பிரிவில் சேரலாம்.

இது பிறப்பின் அடிப்படையில் வருவதன்று. ஒருவன் விரும்பித் தேர்வு செய்வதால் ஏற்படுவது. யாரும் எந்தப் பிரிவில் வேண்டுமானாலும் சேர்ந்து கொள்ளலாம் எனும் போது இந்தப் பிரிவைச் சாதியுடன் சேர்ப்பது எந்த வகையிலும் ஏற்புடையதாகாது.

மரைக்காயர், லெப்பை, இராவுத்தர் போன்ற பிரிவுகளும் அக்காலத்தில் அவர்கள் செய்த தொழிலின் அடிப்படையில் உருவானதாகும்.

குதிரையைப் பயிற்றுவிப்பவர் இராவுத்தர் எனப்படுவார். அன்றைய முஸ்லிம்களில் ஒரு பகுதியினர் அரபு நாடுகளிலிருந்து குதிரைகளை இறக்குமதி செய்து குதிரைகளுக்குப் பயிற்சி அளித்து விற்று வந்தனர். இந்தத் தொழில் காரணமாக அவர்கள் இராவுத்தர் என்று அழைக்கப்பட்டார்களே தவிர பிறப்பின் அடிப்படையிலோ, உயர்வு தாழ்வு கற்பிக்கும் அடிப்படையிலோ இவ்வாறு அழைக்கப்பட்டதில்லை.

மரக்கலத்தில் சென்று வணிகம் செய்த முஸ்லிம்கள் மரக்கலாயர் என்று அழைக்கப்பட்டனர். இதுவே மரைக்காயர் என்று ஆனது.

அரபு நாட்டைத் தாயகமாகக் கொண்ட சிலர் இங்கே வந்து குடியேறினார்கள். அவர்கள் லெப்பை என்று அழைக்கப்பட்டனர்.

யாரேனும் அழைத்தால் ஓ என்று நாம் மறுமொழி அளிப்போம். அன்றைய அரபு நாட்டில் லப்பைக் என்று மறுமொழி கூறிவந்தனர். இங்கு வந்து குடியேறிய அரபு முஸ்லிம்களும் அந்த வழக்கப்படி அடிக்கடி லப்பைக் என்று கூறி வந்ததால் அவர்கள் லப்பை என்றே குறிப்பிடப்பட்டனர். உயர்வு, தாழ்வு கற்பிப்பதற்காக இவ்வாறு அழைக்கப்படவில்லை.

எனவே இதைக் காரணமாகக் கொண்டு இஸ்லாத்தில் ஜாதிகள் உள்ளன எனக் கூறுவது ஏற்க முடியாத விமர்சனமாகும்.

மூன்றாவது காரணம்

கொள்கை, மற்றும் தொழில் காரணமாக இவ்வாறு பல பெயர்களில் முஸ்லிம்கள் பிரிந்து கிடந்தாலும் இதன் காரணமாகத் தீண்டாமையைக் கடைப்பிடிப்பதில்லை. வேறு பிரிவினரிடம் திருமணச் சம்பந்தம் கூடச் செய்து கொள்கின்றனர்.

இதனைச் சாதியாக முஸ்லிம்கள் கருதியிருந்தால் ஒருவர் மற்ற பிரிவில் பெண் எடுக்கவோ, கொடுக்கவோ மாட்டார். எனவே இந்தக் காரணத்தினாலும் இஸ்லாத்தில் ஜாதி கிடையாது என அறிந்து கொள்ள முடியும்.

உருது, தமிழ் என்பது போன்ற பிரிவுகளுக்கிடையே சகஜமாகத் திருமணங்கள் நடப்பதில்லை என்பது உண்மை தான்.

இதற்குக் காரணம் சாதி அமைப்பு அல்ல. தம்பதிகள் தமக்கிடையே நல்லுறவை வளர்த்து இல்லறத்தை இனிதாக்கிட ஒரு மொழியை இருவரும் அறிந்திருப்பது அவசியமாகும்.

ஒருவரது மொழி மற்றவருக்குத் தெரியாத நிலையில் அவர்களது இல்லறம் சிறக்கும் எனச் சொல்ல முடியாது. இது போன்ற காரணங்களுக்காகத் திருமணச் சம்பந்தத்தைச் சிலர் தவிர்க்கின்றனர். உயர்வு தாழ்வு கற்பிப்பதற்காக இல்லை.

தமிழ் முஸ்லிம் உயர்ந்தவன் இல்லை. உருது முஸ்லிம் தான் உயர்ந்தவன் என்ற அடிப்படையில் திருமணச் சம்பந்தத்தைத் தவிர்த்தால் தான் அதைச் சாதியாகக் கருத முடியும்.

இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையைத் தெரியாத சில முஸ்லிம்கள்  தம்மை உயர்ந்தவர்களாகக் கருதிக் கொண்டு திருமண உறவுகளைத் தவிர்க்கின்றனர். இதற்கும் இஸ்லாத்துக்கு எந்தச் சம்மந்தமும் இல்லை.

இது போன்ற பிரிவுகளையும் கூடத் தவிர்ப்பது இத்தகைய விமர்சனங்களைத் தடுக்கும் என்பதை முஸ்லிம்களும் உணர்ந்து இதைக் கைவிட வேண்டும். என்பதையும் முஸ்லிம்களுக்கு நாம் அறிவுரையாகக் கூறிக் கொள்கிறோம்.

அவர்கள் கைவிடாவிட்டாலும் அதைச் சாதியாகக் கருதுவது முற்றிலும் தவறாகும்.

எம்மதமும் சம்மதமா?

இஸ்லாத்தைத் தவிர மற்ற மதங்களைப் பின்பற்றக் கூடியவர்கள் எம்மதமும் சம்மதமே என்று கருதுகின்றனர். இஸ்லாமியர்களின் வழிபாட்டு முறைகளை மற்ற சமயத்தவர்கள் கடைபிடிக்கத் தயாராக உள்ளனர். ஆனால் முஸ்லிம்கள் மற்ற மதத்தினர் வழிபாட்டு முறைகளைக் கடைப்பிடிக்க மறுக்கின்றனர் என்பதும் இஸ்லாம் குறித்து பிறமதத்தவர்கள் செய்யும் விமர்சனமாகும்.

தங்கள் விமர்சனத்திற்கு ஆதரவாகப் பல சான்றுகளை முன்வைக்கின்றனர்.

முஸ்லிம்கள் தங்கள் பண்டிகையின் போது வழங்கும் உணவுப் பொருட்களை முஸ்லிமல்லாதவர்கள் மனநிறைவுடன் பெற்றுக் கொள்கின்றனர். ஆனால் முஸ்லிமல்லாத மக்கள் தங்கள் பண்டிகைகளின் போது வழங்கும் உணவுகளை முஸ்லிம்கள் உண்பதில்லை.

முஸ்லிம்கள் தாங்கள் அறுக்கும் மாமிசத்தை மட்டும் தான் உண்ணுகிறார்கள். முஸ்லிமல்லாதவர்கள் அறுக்கும் மாமிச உணவுகளை முஸ்லிம்கள் சாப்பிடுவதில்லை.

முஸ்லிம்களின் வழிபாட்டு தலங்களில் முஸ்லிமல்லாதவர்கள் வழிபாடு நடத்துகின்றனர். ஆனால் முஸ்லிம்கள், முஸ்லிமல்லாதவர்களின் வழிபாட்டு தலங்களில் வழிபடுவதில்லை.

முஸ்லிமான ஆணோ, பெண்ணோ முஸ்லிமல்லாதவர்களைத் திருமணம் செய்ய முஸ்லிம்கள் அனுமதிப்பதில்லை. முஸ்லிமாக மாறினால் தான் திருமணம் செய்து தருவோம் என்று நிபந்தனை விதிக்கின்றனர்.

இது போன்ற காரணங்களை எடுத்துக்காட்டி முஸ்லிம்கள் எம்மதமும் சம்மதம் என்ற தத்துவத்துக்கு வேட்டு வைக்கின்றனர் எனக் குற்றம் சாட்டுகின்றனர்.

எம்மதமும் சம்மதம் என்ற தத்துவம் சரிதானா என்பதை முதலில் நாம் ஆய்வு செய்ய வேண்டும்.

உலகில் பல மதங்கள் இருக்கின்றன. ஒரு மதத்தின் கொள்கைக்கு முரணாக இன்னொரு மதத்தின் கொள்கைகள் உள்ளன. கொள்கையில் மட்டுமின்றிச் சட்டத் திட்டங்களிலும் எண்ணற்ற முரண்பாடுகள் உள்ளன. இவ்வாறு முரண்பாடுகள் இருப்பதால் தான் இத்தனை மதங்கள் காணப்படுகின்றன. முரண்பாடுகள் இல்லாவிட்டால்  ஒரே ஒரு மதம் தான் உலகில் இருக்கும். இந்த அடிப்படையை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

மதங்களுக்கிடையே முரண்பாடுகள் இருப்பதை நாம் மறுக்க முடியாத போது முரண்பட்ட இரண்டும் எனக்குச் சம்மதமே என்று கூறுவது பொருளற்றது என்பதை இரண்டாவதாக நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

கடவுள் ஒரே ஒருவன் தான் என்பது ஒரு மதத்தின் கொள்கை.

பல்வேறு பணிகளைச் செய்வதற்குப் பல்வேறு கடவுளர்கள் உள்ளனர் என்பது இன்னொரு மதத்தின் கொள்கை.

இவ்விரு கொள்கைகளில் ஏதேனும் ஒரு கொள்கையைத் தான் ஒருவர் நம்ப முடியும். முதல் கொள்கையை நம்பும் போது இரண்டாவது கொள்கையை மறுக்கும் நிலை ஏற்படும். இரண்டாவது கொள்கையை நம்பும் போது முதல் கொள்கையை மறுக்கும் நிலை ஏற்படும். எனவே இரண்டும் எனக்குச் சம்மதம் தான் என்று கூறுவதில் எந்த அர்த்தமும் இல்லை.

கடவுளுக்கு மனைவியர் உண்டு. மக்கள் உண்டு. கடவுளுக்குத் தூக்கம் உண்டு, கடவுளுக்கு அறியாமை உண்டு என்று ஒரு மதம் கூறுகிறது.

இவற்றில் எதுவுமே கடவுளுக்கு இருக்கக் கூடாது. இவை கடவுள் தன்மைக்கு எதிரான பலவீனங்கள் என இன்னொரு மதம் கூறுகிறது.

முரண்பட்ட இவ்விரு கொள்கைகளில் ஏதேனும் ஒன்றைத் தான் ஒருவர் நம்ப முடியுமே தவிர இரண்டையும் நம்ப முடியாது.

கடவுளுக்கும், மனிதனுக்கும் இடையே புரோகிதர் வேண்டும் என்று ஒரு மதம் கூறுவதை நம்பினால் புரோகிதர் கூடாது என்று இன்னொரு மதம் கூறுவதை நம்ப முடியாது.

இந்துவாக இருப்பவர் அம்மதத்தின் கொள்கைகளையும், கோட்பாடுகளையும் உண்மையாகவே நம்பினால் அவர் வேறு எந்த மதத்தின் கொள்கைகளையும் நம்பவில்லை; நம்ப முடியாது; நம்பக் கூடாது என்பது தான் பொருள்.

முஸ்லிமாக இருப்பவர் அம்மதத்தின் கொள்கைகளையும், கோட்பாடுகளையும் நம்பினால் அவர் வேறு எந்த மதத்தின் கொள்கைகளையும், கோட்பாடுகளையும் நம்பவில்லை; நம்ப முடியாது; நம்பக் கூடாது என்பது அதன் பொருள்.

மதங்கள் மனிதனிடமிருந்து எளிதில் பிரிக்க முடியாத படி ஆழமாக வேரூன்றியுள்ளன. கட்சிகள், சங்கங்கள். இயக்கங்கள் போன்றவை அந்த அளவுக்கு மனிதனிடம் வேரூன்றவில்லை.

மதங்களை விடக் குறைவாகவே மனிதர்களை ஈர்க்கும் வகையில் கட்சிகள் உள்ளன. அந்தக் கட்சிகளை உதாரணத்துக்கு எடுத்துக் கொள்வோம்.

கம்யூனிஸ்ட் கட்சியில் அங்கம் வகிப்பவர் அதே நேரத்தில் காங்கிரசிலோ, திமுக, அதிமுக கட்சிகளிலோ அங்கம் வகிக்க முடியாது. எல்லாக் கொள்கைகளும் எனக்குச் சம்மதமே என்று கூற முடியாது. அவ்வாறு கூறினால் அவர் எந்தக் கொள்கையுமில்லாத சந்தர்ப்பவாதியாகவே கருதப்படுவார்.

மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தில் அங்கம் வகிப்பவர் புதிய தமிழகத்தில் அங்கம் வகிக்க முடியாது. பாட்டாளி மக்கள் கட்சியில் இருப்பவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் அங்கம் வகிக்க முடியாது.

ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்களால் கவனிக்கப்படும் கட்சிகளின் நிலையே இதுவென்றால் மனிதனது அன்றாட வாழ்க்கையில் பின்னிப் பிணைந்திருக்கும் மதங்களில் முரண்பட்ட இரண்டை எப்படி ஒரு நேரத்தில் நம்ப முடியும் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

உளப்பூர்வமாக இல்லாமல் வாயளவில் மட்டுமே பேசப்படும் சித்தாந்தமாக எம்மதமும் சம்மதம் சித்தாந்தம் அமைந்திருப்பதால் இந்தச் சித்தாந்தத்தினால் எந்த நன்மையும் விளையவில்லை. இந்தப் போலிச் சித்தாந்தம் மதங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.

இஸ்லாம் மதங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்திட அறிவுக்குப் பொருத்தமான வழியைச் சொல்கிறது. போலித்தனமில்லாத வழியைக் கூறுகிறது.

எனக்கு என் மார்க்கம் தான் பெரிது. உன் மார்க்கத்தை நீ பெரிதாக மதிப்பதில் நான் குறுக்கிட மாட்டேன் என்பது இஸ்லாத்தின் நிலை

உங்கள் மார்க்கம் உங்களுக்கு என் மார்க்கம் எனக்கு

என்று திருக்குர்ஆன் கூறுகிறது. (109:6)

அதாவது ஒவ்வொரு மதத்தவரும் தத்தமது மதத்தைப் பேணி நடந்து கொள்ளட்டும். அதே சமயத்தில் மற்ற மதத்தவர்கள் தங்கள் மதத்தின் படி நடப்பதைத் தடுக்கவோ, குறுக்கிடவோ கூடாது என்ற இந்தக் கோட்பாட்டில் எந்த முரண்பாடும் இல்லை. போலித்தனமும் இல்லை. நடைமுறையிலும் இது முழு அளவுக்குச் சாத்தியமாகும்.

இந்த நிலையை அனைவரும் ஏற்றுக் கொள்ளும் போது மத நல்லிணக்கம் ஏற்பட்டு விடும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

இனித் தங்கள் விமர்சனத்தை நியாயப்படுத்துவதற்காக எம்மதமும் சம்மதம் எனக் கூறுவோர் எடுத்து வைக்கும் சான்றுகளைப் பார்ப்போம்.

முஸ்லிம்கள் அல்லாஹ்வின் திருப்பெயர் கூறி அறுக்கப்பட்ட உயிரினங்களை மட்டுமே உண்ண வேண்டும் என்பது இஸ்லாத்தின் கட்டளை. இந்தக் கட்டளையின் காரணமாகவே மற்றவர்கள் அறுப்பதை உண்ண மறுக்கின்றார்களே தவிர காழ்ப்புணர்வின் காரணமாக அல்ல.

கடவுளுக்கு எந்தத் தேவையுமில்லை. கடவுளுக்காக எந்தப் பொருளையும் படைக்கக் கூடாது என்பதும் இஸ்லாத்தின் கொள்கை. இந்தக் கொள்கையில் முஸ்லிம்கள் உறுதியுடன் இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் படையல் செய்யப்பட்ட உணவுகளை உண்ண வேண்டாம் என்று இஸ்லாம் கட்டளையிடுகிறது.

கடவுளுக்குத் தேவைகள் இருக்கிறது என்ற நம்பிக்கை வந்து விடக் கூடாது என்பதற்காகவும், பல கடவுள் கொள்கையை நம்பிவிடக் கூடாது என்பதற்காகவும் இஸ்லாம் இவ்வாறு கட்டளையிட்டுள்ளது. இதற்குக் காழ்ப்புணர்வு காரணமில்லை.

முஸ்லிம்கள் எப்படி மற்றவர்கள் மத நம்பிக்கைக்கு மதிப்பளிக்க வேண்டுமோ அது போல் மற்றவர்களும் முஸ்லிம்களின் இந்த நம்பிக்கையை மதித்தால் எந்தப் பிரச்சனையும் ஏற்படாது.

இந்து மதத்தில் சைவ உணவு உட்கொள்ளக் கூடிய பிரிவைச் சேர்ந்த ஒருவர் முஸ்லிமுக்கு நண்பராக இருக்கிறார் என வைத்துக் கொள்வோம். முஸ்லிம் நண்பர் தனது பெருநாள் பண்டிகையைக் கொண்டாடும் போது மாமிச உணவைச் சமைத்து வைத்து நண்பரை அழைத்தால் அவர் அவ்விருந்தை உண்ண மாட்டார். இந்து நண்பர் எதை விரும்ப மாட்டாரோ அந்த உணவை இந்து நண்பருக்குக் கொடுக்காமல் அவர் விரும்புகிற உணவை வழங்குவது தான் அவரையும், அவரது மதத்தையும் மதிப்பதாக ஆகும்.

இந்து நண்பர் முஸ்லிம் நண்பரின் அசைவ உணவை மறுப்பதால் அவர் இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் அவமானப்படுத்தி விட்டதாக யாரும் எண்ணுவதில்லை.

இதே போல் முஸ்லிம்களுக்குத் தடை செய்யப்பட்ட பொருட்களை முஸ்லிம்களுக்கு வழங்காமல் இருப்பதே இஸ்லாத்தை மதிப்பதற்கு அடையாளமாகும். இவ்வாறு இரு சாராரும் நடந்து கொள்வதன் மூலம் ஒரு மதத்தவர் மற்ற மதத்தினரை மதித்து நடக்குமாறு இஸ்லாம் கூறுவதை நடைமுறைப்படுத்துகிறார்கள்.

வழிபாட்டு முறையிலும் இது போன்ற பரந்த மனப்பான்மை ஏற்பட வேண்டும். ஒவ்வொரு மதத்தினருக்கும் வழிபாட்டில் வேறுபாடுகள் உள்ளன. அவரவர் தத்தம் மதத்தின்படி வழிபாடு நடத்திக் கொள்வதை மற்றவர்கள் அங்கீகரிப்பது தான் நல்லிணக்கத்துக்கு வழிவகுக்கும். ஒருவரது வழிபாட்டை மற்றவர் மீது திணித்தால் நல்லிணக்கத்திற்குப் பதிலாகத் துவேஷம் தான் வளரும்.

ஒரு கடவுளைத் தவிர வேறு யாரையும் எதனையும் வணங்கக் கூடாது என்பது தான் இஸ்லாத்தின் உயிர் நாடியான கொள்கை. இந்தக் கொள்கையில் உறுதியுடன் முஸ்லிம்கள் இருந்தால் அதைக் குறை கூறுவது நியாயமாகாது.

திராவிட முன்னேற்றக் கழகத்தில் உறுப்பினராக இருப்பவர் கருணாநிதியின் படத்தை வீட்டில் மாட்டியிருப்பார். அவரது அண்ணா தி.மு.க நண்பர் ஜெயலலிதாவின் படத்தையும் மாட்டுமாறு கூறினால் அவர் ஏற்க மாட்டார். இவ்வாறு கூறுவது சரி தான் என்று யாரும் ஏற்க மாட்டோம். அநாகரீகம் என்போம்.

கடவுள் நம்பிக்கை இதை விட வலிமையானதாகும். எனவே ஒருவரது கடவுளை மற்றவரும் ஏற்க வேண்டும் என்று கருதுவது ஏற்க முடியாததாகும்.

இந்துக்களின் வழிபாட்டு முறையில் முஸ்லிம்களோ, முஸ்லிம்களின் வழிபாட்டு முறையில் இந்துக்களோ குறுக்கிடாமல் இருப்பதும், தமது நம்பிக்கையை மற்றவர்கள் மீது கட்டாயப்படுத்தாமல் இருப்பதும் தான் மத நல்லிணக்கத்திற்கு வழிகோலும்.

முஸ்லிம்கள் முஸ்லிம்களை மட்டுமே திருமணம் செய்ய வேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்துவது உண்மை தான். இதில் மத நல்லிணக்கத்துக்கு எந்த ஊறும் ஏற்படாது என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

சாதிவிட்டுச் சாதி, மதம் விட்டு மதம் திருமணம் செய்யும் போது தான் இரண்டு சமுதாயங்களுக்கிடையே கலவரங்கள் நடந்துள்ளன. இதன் காரணமாகப் பல உயிர்கள் பலியாகியுள்ளன. பெரும்பாலான சாதி மதச் சண்டைகளின் பின்னணியில் பெண் விவகாரமே முக்கிய காரணமாக இருப்பதை யாரும் மறுக்க முடியாது.

எனவே இதைத் தவிர்ப்பதால் மனித குலத்திற்கு எந்தக் கேடும் ஏற்படப் போவதில்லை.

இனக் கவர்ச்சியினால் ஆணின் குறைபாடுகள் பெண்ணுக்கும், பெண்ணின் குறைபாடுகள் ஆணுக்கும் ஆரம்பத்தில் தெரியாது. மோகம் தணிந்த பின் யதார்த்த நிலையை இருவரும் உணர்வார்கள்.

வீட்டில் கடவுள் படங்களை மாட்டுவதிலிருந்து பெற்ற குழந்தைக்குப் பெயர் சூட்டுவது, வளர்ப்பது, சொத்துரிமை போன்ற பல விஷயங்களில் தகராறுகள் ஏற்படும். யாராவது ஒருவர் தனது மதத்தை விட்டுக் கொடுக்க வேண்டும் அல்லது பிரிய வேண்டும் என்ற நிலைமை ஏற்படும்.

பின்னால் ஏற்படக் கூடிய இந்த நிலையைத் தான் இஸ்லாம் முன்கூட்டியே கூறுகிறது. முஸ்லிமான ஆணை மணக்க விரும்பும் பெண்ணோ, முஸ்லிமான பெண்ணை மணக்க விரும்பும் ஆணோ இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால் எதிர்காலத்தில் பிரச்சனை ஏற்படாமல் இருக்கும். முஸ்லிமல்லாத ஆணோ, பெண்ணோ இஸ்லாம் தமக்கு முக்கியமில்லை எனக் கருதி வேறு மதத்தவர்களை மணந்து கொண்டால் அதை யாரும் தடுக்கப் போவதில்லை. ஆரம்பத்திலேயே இதைப் பற்றித் தீர்க்கமான முடிவெடுத்துக் கொள்வது எதிர்காலத்தில் ஏற்படும் பிளவையும், பிணக்கையும் தவிர்க்கும் என்ற தூர நோக்கோடு தான் இஸ்லாம் இவ்வாறு கட்டளையிடுகிறது.

கடவுள் நம்பிக்கையில்லாத நாத்திகர், கடவுள் நம்பிக்கையில்லாத குடும்பத்தில் சம்பந்தம் வைத்துக் கொள்ள விரும்பினால் அதைக் கொள்கைப் பிடிப்பு என்று எடுத்துக் கொள்கிறோம். இஸ்லாம் என்பதும் அது போன்ற ஒரு கொள்கை தான்.

இஸ்லாம் இவ்வாறு வலியுறுத்தியதையும், முஸ்லிம்கள் இவ்வாறு நடந்து கொள்வதையும் இது போன்ற கொள்கைப் பிடிப்பின் வெளிப்பாடாக எடுத்துக் கொண்டால் குழப்பம் ஏற்படாது.

ஒரு சாதியைச் சேர்ந்தவர் என்ன தான் முயன்றாலும் இன்னொரு சாதிக்காரராக முடியாது. இஸ்லாம் இது போன்ற சாதி கிடையாது. யாரும் இஸ்லாத்தின் கொள்கையை ஏற்று முஸ்லிமாக முடியும்.

இதைப் புரிந்து கொண்டால் மத நல்லிணக்கத்துக்கு இஸ்லாம் எந்த வகையிலும் ஊறு விளைவிக்கவில்லை என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

இஸ்லாமியப் போர்கள்

முஸ்லிமல்லாதவர்களை மதமாற்றம் செய்வதற்காகவும், மறுப்பவர்களைக் கொன்று குவிப்பதற்காகவும், பிறநாட்டில் உள்ள அழகு மங்கையரைக் கவர்ந்து செல்வதற்காகவும், அங்குள்ள செல்வங்களைக் கொள்ளையடிப்பதற்காகவும் முஸ்லிம்கள் படையெடுத்து உள்ளனர். இஸ்லாம், பிற மதங்களைச் சகித்துக் கொள்ளாத மார்க்கம் என்பதற்கு அது வாள்முனையில் பரப்பப்பட்ட மார்க்கம் என்பதற்கும் இந்தப் போர்களும் படையெடுப்புகளும் சான்றாக உள்ளன.

முஸ்லிமல்லாதவர்கள் அடிக்கடி எழுப்பிவரும் குற்றச்சாட்டுகளில் இதுவும் ஒன்றாகும்.

முகலாய மன்னர்களும், வேறு பல முஸ்லிம் மன்னர்களும் இந்தியாவின் மீது படையெடுத்து வந்ததையும், நபிகள் நாயகம்  (ஸல்) அவர்கள் தம் வாழ்நாளில் ஏராளமான போர்களை நிகழ்த்தியதையும் தங்கள் வாதத்துக்குச் சான்றாக அவர்கள் எடுத்துக் காட்டுகின்றார்கள்.

முஸ்லிம் மன்னர்கள் இந்தியாவின் மீது படையெடுத்து வந்தது உண்மை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல போர்களைச் சந்தித்ததும் உண்மை. ஆயினும் இவற்றை ஆதாரமாகக் கொண்டு எடுத்து வைக்கப்படும் வாதங்கள் தாம் உண்மைக்கு அப்பாற்பட்டவை.

இவர்கள் எடுத்துக் காட்டுகின்ற இரண்டு ஆதாரங்களையும் தனித்தனியாகப் பிரித்துப் பார்க்க வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இந்தக் காரணங்களுக்காகப் போர் செய்திருந்தால் அதைக் காரணமாகக் கொண்டு இஸ்லாத்தை விமர்சனம் செய்வதில் நியாயம் உள்ளது. அவர்களைத் தவிர ஏனைய முஸ்லிம் மன்னர்கள் எந்தக் காரணங்களுக்காகப் போர் செய்திருந்தாலும் அதற்காக இஸ்லாத்தை விமர்சிப்பது அறிவுடைமையாகாது.

ஆகவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சந்தித்த போர்களைப் பற்றி மட்டும் விளக்குவது தான் நமது பொறுப்பாகும். ஆயினும் நாம் வாழக்கூடிய நாட்டில் முஸ்லிம் மன்னர்கள் படையெடுத்து வந்தது, பற்றியே பிரதானமாகப் பேசப்படுவதால் இஸ்லாத்துக்கும், முஸ்லிம் மன்னர்களின் படையெடுப்புகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லாவிட்டாலும் அதுபற்றிச் சுருக்கமாக ஆராய்ந்து விட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சந்தித்த போர்களைப் பற்றி ஆராய்வோம்.

அன்றைய காலத்தில் போர்கள் சர்வ சாதாரணமாக நடந்து வந்தன. மன்னர்களின் சுயநலத்திற்காகப் போர்கள் செய்யப்பட்டன.

அன்றைக்குத் தனித்தனி நாடுகளாக விளங்கிய சேர, சோழ, பாண்டிய நாட்டு மன்னர்கள் ஒருவருடன் ஒருவர் போர் புரிந்த வரலாறு உண்டு. அன்றைக்குத் தனிநாடாக விளங்கிய வடநாட்டின் மீது பாண்டிய மன்னன் படை நடத்திச் சென்று வெற்றி பெற்ற வரலாறும் உண்டு.

இந்த நாட்டைச் சுரண்டுவதற்காக ஆரியர்கள் படையெடுத்து வந்த வரலாறும் உண்டு.

மத நம்பிக்கையில்லாத திராவிடர்கள் மீது ஆரியர்கள் இந்து மதத்தைத் திணித்த வரலாறும் உண்டு.

பல நாடுகள் மீது படையெடுத்துச் சென்ற அலெக்சாண்டரின் வீர(?) வரலாறும் உண்டு. வெள்ளையர்கள் இந்த நாட்டைக் கைப்பற்றிக் கொண்ட சமீபத்திய வரலாறும் உண்டு.

தங்கள் நாட்டு எல்லைகளை விரிவுபடுத்திக் கொள்வதற்காகவும், பகைமை கொண்டிருந்த அண்டை நாட்டு மன்னனுக்குப் பாடம் புகட்டுவதற்காகவும், வளங்களை வாரி செல்வதற்காகவும் எத்தனையோ படையெடுப்புகளை உலகம் சந்தித்துள்ளது. அது போன்ற ஒரு படையெடுப்பே முகலாயர்களின் படையெடுப்பு.

முஸ்லிம் படையெடுப்புகள்

வெண்ணி, வாகை, புள்ளலூர், பரியலம், மணிமங்கலம், நெய்வேலி, பெண்ணாடகம், விழிஞம், தெள்ளாறு, திருப்புறம்பியம், வெள்ளூர், தக்கோலம், நொப்பம், கூடல், கலிங்கம், ஈழம், சுமந்திரம், மகேந்திரமங்கலம் மற்றும் கண்ணனூர் ஆகிய போர்கள் தமிழக அளவில் இந்து மன்னர்கள் நிகழ்த்திய போர்களில் சில. இன்னும் ஏராளமான போர்கள் தமிழக அளவிலும், இந்திய அளவிலும் நிகழ்ந்துள்ளன.

இந்தப் போர்களுக்கெல்லாம் எவை காரணமாக இருந்தனவோ அவை தாம் முஸ்லிம் மன்னர்களின் படையெடுப்புக்கும் காரணங்களாக இருந்தன. நிச்சயமாக மதத்தைப் பரப்புவதோ, மதமாற்றம் செய்வதோ இதற்குக் காரணங்களாக இருந்ததில்லை.

முஸ்லிம் மன்னர்கள் 800 ஆண்டு காலம் இந்த நாட்டை ஆட்சி புரிந்தனர்.

அவர்கள் இந்துக்களின் வழிபாட்டுத் தலங்களை இடிக்கவில்லை. ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஆலயங்கள் இதற்கு இன்றளவும் சாட்சியமளித்துக் கொண்டிருக்கின்றன. இந்துக் கோவில்களைக் கட்டிய முஸ்லிம் மன்னர்களும், அவற்றுக்கு மானியம் வழங்கிய முஸ்லிம் மன்னர்களும் இருந்துள்ளனர்.

இஸ்லாம் தடை செய்துள்ள ஆடல் பாடல்களை அவர்கள் தடை செய்ததில்லை. வட்டியை அவர்கள் ஒழித்ததில்லை. குற்றங்களுக்கு இஸ்லாம் கூறக்கூடிய தண்டனைகளை அவர்கள் சட்டமாக்கவில்லை. அரசுப் பதவிகளில் முஸ்லிமல்லாதவர்களைப் பெருமளவு நியமித்திருந்தார்கள். முஸ்லிமல்லாத பெண்களை மணந்தார்கள்.

இன்னும் இஸ்லாத்தின் ஆயிரமாயிரம் கட்டளைகளைப் புறக்கணித்தவர்கள் இஸ்லாத்தை இந்த நாட்டில் பரப்ப வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக எப்படி இருந்திருக்க முடியும்?

இஸ்லாத்தை விட்டு வெகுதூரம் விலகியிருந்த முஸ்லிம் மன்னர்கள் வாளால் மிரட்டி இந்திய மக்களை முஸ்லிம்களாக்கினார்கள் என்று நியாய உணர்வுடைய எவருமே கூறத் துணிய மாட்டார்.

நவீன ஆயுதங்களுடன் இந்த நாட்டை அடிமைப்படுத்திய வௌ்ளையர்களை 200 ஆண்டுகளில் நாட்டு மக்கள் விரட்டியடித்துள்ளனர். அதற்கு முன்பே அவர்களை வெளியேற்ற ஏராளமான போராட்டங்கள் நடந்துள்ளன.

ஆனால் முஸ்லிம் மன்னர்கள் கத்தி, அரிவாள், வாள், கேடயம் போன்ற சாதாரண ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்ட காலத்தில் படையினரின் எண்ணிக்கையே வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கின்ற காலத்தில் 800 ஆண்டுகள் ஆட்சி புரிந்துள்ளனர். முஸ்லிம் மன்னர்கள் மதமாற்றம் செய்வதில் ஈடுபட்டிருந்தாலோ, வாள் முனையில் மிரட்டியிருந்தாலோ ஒரு சதவிகிதத்திற்கும் குறைவாக இருந்த அவர்களை இந்த நாட்டு மக்கள் வெறும் கையாலேயே அடித்து விரட்டியிருப்பார்கள். முஸ்லிம் மன்னர்கள் இந்நாட்டில் 800 ஆண்டுகள் ஆட்சி புரிந்தது அவர்கள் மக்களைக் கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்யவில்லை என்பதற்குச் சான்றாக உள்ளது.

ஆயினும் ஒரு விஷயத்தை நாம் உறுதியாகச் சொல்ல முடியும். மோசமான நடத்தையுடைய முஸ்லிம் மன்னர்களின் மோசமான ஆட்சி, அதற்கு முன் நடந்த படு மோசமான இந்து மன்னர்களின் ஆட்சிகளை விட சிறப்பானதாக இருந்தது. இல்லையென்றால், மிகச் சிறு படையுடன் வந்தவர்களை இந்திய மக்கள் பல நூற்றாண்டுகள் வரை சகித்துக் கொண்டிருக்க முடியாது.

படு மோசமான ஆட்சியாளர்களைக் கண்டு வெறுப்புற்றிருந்த மக்களுக்கு முஸ்லிம்களின் ஆட்சி சிறப்பானதாகத் தென்பட்டதாலேயே அவர்களை ஆளவிட்டார்கள்.

முஸ்லிம் மன்னர்கள் பரங்கியர்களிடம் தான் ஆட்சியைப் பறிகொடுத்தார்களே மக்கள் அவர்களை விரட்டியடிக்க எந்தப் போராட்டமும் நடத்தியதில்லை.

இந்து மன்னர்கள் நடத்திய போர்களை இந்துமதம் தான் தூண்டிவிட்டது என எப்படிக் கூற முடியாதோ அது போலவே முஸ்லிம்கள் நிகழ்த்திய போர்களை எல்லாம் இஸ்லாம் தூண்டிவிட்டது என்றும் கூற முடியாது.

சுருங்கச் சொல்வதென்றால் வாள்முனையில் எந்த மதத்தையும் பரப்ப முடியாது. பரப்ப முடியும் என்றாலும் இந்தியாவை ஆண்ட முஸ்லிம் மன்னர்கள் நிச்சயமாக யாரையும் வற்புறுத்தி மதமாற்றம் செய்ததில்லை. அப்படியே செய்திருந்தார்கள் என்பதை ஒரு வாதத்திற்காக ஏற்றுக் கொண்டாலும் அதற்கும், இஸ்லாத்துக்கும் சம்பந்தமில்லை. ஏனெனில் திருக்குர்ஆனில் கூறப்பட்டவையும், நபிகள் நாயகம் (ஸல்) காட்டிய வழியும் தான் இஸ்லாம். முஸ்லிம் பெயர் தாங்கிகளின் தவறான செயல்களுக்கு இஸ்லாம் பொறுப்பாகாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏராளமான யுத்தங்களில் ஈடுபட்டுள்ளார்களே! அவர்களும் நாடு பிடித்துள்ளார்களே? இதற்கு என்ன கூறுகிறீர்கள்? என்ற அடிப்படையான விஷயத்துக்கு வருவோம்.

அது பற்றி நாம் விரிவாக விளக்க வேண்டியுள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சந்தித்த போர்க்களங்கள் எந்த அடிப்படையிலானவை? என்பதை விரிவாகக் காண்போம்.

நபிகள் நாயகம் அவர்களின் போர்கள் நாடு பிடிப்பதற்காகவா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், அவர்களின் முன்னூற்றுக்கும் சற்று அதிகமான தோழர்களும், மக்காவின் எதிரிகளுடன் பத்ர் எனுமிடத்தில் போர் புரிந்தனர். ஆயிரம் பேர் கொண்ட எதிரிகளின் படை இந்த முதல் போரிலேயே படுதோல்வி கண்டு ஓடலாயிற்று. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மாபெரும் வெற்றி பெற்றனர். அனைவரும் அறிந்து வைத்துள்ள வரலாற்று நிகழ்ச்சி இது.

நாடு பிடிப்பது அவர்களின் நோக்கம் என்றால் அவர்கள் என்ன செய்திருக்க வேண்டும்? தோல்வியுற்று ஓடுபவர்களை விரட்டிச் சென்றிருக்க வேண்டும்.

விரட்டிச் சென்று அவர்களைக் கொன்று குவித்திருக்க வேண்டும். மேலும் முன்னேறி எதிரிகளின் தலைநகரம் மக்கா வரை சென்று வெறியாட்டம் போட்டிருக்க வேண்டும். அந்த ஒரு போரிலேயே மக்கா அவர்களின் கைவசமாக ஆகிவிடக் கூடிய அருமையான சூழ்நிலை இருந்தது. வெற்றியடைந்த எந்தத் தலைவரும் நடந்து கொள்ளும் முறையும் அது தான்.

பத்ர்  எல்லையைத் தாண்டி அவர்கள் ஓரடியும் எடுத்து வைக்கவில்லை. நாடு பிடிப்பது அவர்களின் நோக்கமில்லை என்பதற்கு இதை விட வேறு என்ன சான்று வேண்டும்?

உம்ரா வணக்கத்தை நிறைவேற்றுவதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆயிரத்துக்கும் அதிகமான தம் தோழர்களுடன் புறப்பட்டு மக்காவுக்குச் சென்றனர். ஹுதைபியா எனும் இடம் வரை வந்து விட்டனர். மக்காவுக்குள் அனுமதிக்க எதிரிகள் மறுத்தனர். நபியவர்களுக்கு ஆத்திரமூட்டும் அளவுக்குப் பிடிவாதம் பிடித்தனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நாடு பிடிப்பதை மட்டும் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அரை மணி நேரத்திற்குள் மக்கா நகரம் அவர்களின் வசமாகியிருக்கும்.

ஆனாலும் நபியவர்கள் பல விஷயங்களில் விட்டுக் கொடுத்து அவர்களுடன் சமாதான உடன்படிக்கை செய்து கொண்டனர். மக்காவுக்குச் சென்று உம்ராவை நிறைவேற்றாமலேயே திரும்பி வந்தனர். இதுவும் அனைவராலும் அறியப்பட்ட வரலாறு தான்.  நாடு பிடிக்கும் எண்ணம் நபியவர்களுக்கு இருந்ததில்லை என்பதற்கு இவையே போதுமாகும்.

கொள்ளையிடுவதற்காகவா?

எதிரி நாட்டு வளங்களைக் கொள்ளையிடுவதற்காகப் போர் நடத்தினார்களா? என்றால் நிச்சயமாக இல்லை.  தாயிஃப்  நீங்கலாக உள்ள மற்ற பகுதிகள் எதுவும் மதினாவை விட வளமானதாக இருந்ததில்லை. பொருளாதாரத்தைக் கொள்ளை அடிப்பது போருக்கான நோக்கமாக இருக்கக் கூடாது என்று திருக்குர்ஆன் அவர்களுக்குத் தெளிவான கட்டளையும் பிறப்பித்துள்ளது.

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் (போருக்குச்) சென்றால் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்! உங்களுக்கு ஸலாம் கூறியவரிடம் இவ்வுலக வாழ்க்கையின் பொருட்களைப் பறிப்பதற்காக  நீ நம்பிக்கை கொண்டவன் இல்லை என்று கூறி விடாதீர்கள்! அல்லாஹ் விடம் ஏராளமான செல்வங்கள் உள்ளன. இதற்கு முன் நீங்களும் இவ்வாறே இருந்தீர்கள். அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிந்தான். எனவே தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கிறான்.

 திருக்குர்ஆன் 4:94

கொள்ளையடிப்பது அவர்களின் குறிக்கோளாக இருக்கலாகாது என்று குர்ஆன் தெளிவான கட்டளையிட்டிருக்கும் போது அவர்கள் நடத்திய போருக்கு இது காரணமாக இருக்க முடியாது.

பழிவாங்குவதற்கா?

எதிரிகள் ஏற்கனவே செய்த கொடுமைகளுக்குப் பழிவாங்குவதற்காக போர்க்களங்களைச் சந்தித்தார்களா? நிச்சயமாக அதுவுமில்லை.

மக்காவில் வெற்றி வீரராக நபியவர்கள் நுழைந்த நேரத்தில் பழிவாங்குவதற்குரிய அத்தனை காரணங்களும் இருந்தன. சக்தியும் இருந்தது. நபிகள் நாயகத்தைக் கல்லால் அடித்தவர்கள் அங்கே நின்றார்கள். அவர்களைக் கொலை செய்யத் திட்டம் தீட்டியவர்களும், அவர்கள் நாடு துறக்கக் காரணமானவர்களும், அவர்களின் தோழர்களைச் சுடுமணலில் கிடத்தியவர்களும், தூக்கில் தொங்கவிட்டவர்களும், மதீனாவுக்குச் சென்ற பின்பும் பல முறை அவர்களுடன் போர் புரிந்தவர்களும், இப்படிப் பலரும் அங்கே நின்றார்கள். தங்களின் கதி என்னவாகுமோ என்று பயந்து போய் நின்றார்கள்.

அனைவருக்குமே பொதுமன்னிப்பு வழங்கியது தான் அவர்கள் வழங்கிய தண்டனை. பழி வாங்குவதற்குரிய அத்தனை நியாயங்களும் அவர்கள் பக்கம் இருந்தன. ஆனாலும் எவரையும் பழி வாங்கவில்லை. இந்த ஒரு நிகழ்ச்சியே அவர்களின் உயர் பண்புக்கு போதுமான சான்றாகும்.

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு, நீதிக்குச் சாட்சிகளாக ஆகி விடுங்கள்! ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.

திருக்குர்ஆன் 5:8

என்று இறைவன் கட்டளையிட்டிருக்கும் போது எப்படி அவர்கள் அதை மீறியிருப்பார்கள்?

ஒரு போர்க்களத்தில் பெண்ணொருத்தி கொல்லப்பட்டுக் கிடப்பதைக் கண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதை ஆட்சேபித்து பெண்களையும், சிறுவர்களையும் கொலை செய்வதைத் தடை செய்தார்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)

நூல்கள் : புகாரி, முஸ்லிம்

போர்க்களத்தில் போரிடுங்கள்! வரம்பு மீறாதீர்கள்! சிறுவர்களையும், மத குருமார்களையும் கொல்லாதீர்கள் என்பது நபிமொழி.

அறிவிப்பவர் : புரைதா (ரலி)

நூல் : முஸ்லிம்

போர்க்களத்தில் எந்தத் தர்மமும் ப