ஈது பிறை பார்ப்பதிலும் இதே நிதானம் தொடரட்டும்

ஏகத்துவம் அக்டோபர் 2006

ஈது பிறை பார்ப்பதிலும் இதே நிதானம் தொடரட்டும்

நோன்பு மற்றும் பெருநாட்கள் உலகெங்கிலும் ஒரே நாளில் அமைவதில்லை. ஒரு நாள்அல்லது இருநாட்கள் வித்தியாசத்தில் தான் அமைகின்றன. இதற்கு அடிப்படைக்காரணம் இந்த நாட்கள் பிறையை மையமாக வைத்துத் தீர்மானிக்கப் படுவதால் தான்.

உலகத்தில் முஸ்லிம்களைத் தவிர்த்து மற்ற சமுதாய மக்களின் பண்டிகைகள் மற்றும்திருவிழாக்கள் சூரியக் கணக்கின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகின்றன. அதனால்வருட ஆரம்பத்திலேயே, நாட்காட்டி வெளியாகும் போதே இந்தப் பண்டிகை இந்த நாள்தான் என்று குறித்து அந்த நாள் விடுமுறை நாள் என்று முன் கூட்டியே அறிவித்துவிடுகின்றனர்.

ஆனால் முஸ்லிம்களின் நோன்பு மற்றும் பெருநாள் எவராலும் முன்கூட்டியேதீர்மானிக்கப்படுவது கிடையாது. நாட்காட்டியில் இன்ன நாள்தான் என்றுகுறிக்கப்பட்டிருந்தாலும் பிறை பார்க்கப்பட்டதன் அடிப்படையில் அந்நாள் மாற்றப்பட்டுவிடுகின்றது. அதாவது இதை இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால் இந்த நாட்களை அல்லாஹ்வே தீர்மானிக்கின்றான்.

பிறையைப் பார்த்து நோன்பு வையுங்கள். பிறையைப் பார்த்து நோன்பை விடுங்கள்.உங்களுக்கு மேக மூட்டம் தென்பட்டால் ஷஅபான் மாதத்தை முப்பது நாட்களாகமுழுமைப்படுத்துங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 1909

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இந்தக் கட்டளைப் படி தான்நம்முடையநோன்பு மற்றும் பெருநாள் அமைகின்றது. இவ்வாறு பிறை பார்த்து நோன்பு வைப்பது,நோன்பை விடுவது அரசாங்கத்தின் திட்டமிட்டசெயல்பாடுகளுக்கு இடையூறாகஇருந்தாலும் உண்மையில் இது தான் சுவாரஸ்யமாக உள்ளது.

நாளை நோன்பா? இல்லையா? பெருநாளா? இல்லையா? என்று முடிவு தெரியாமல்அதில் உள்ள சஸ்பென்ஸ் தொடர்வதும் அதனால் ஏற்படும் த்ரில்லிங்கும்முஸ்லிம்களுக்கு ஒரு சுமையான சுகம். சுமையான இந்த இன்ப சுகத்திற்கு காலம்காலமாக முஸ்லிம்கள் பழக்கப்பட்டு விட்டனர்.

இன்னபிற மதங்களில் திருநாட்கள் ஏற்கனவே தீர்மானிக்கப்படுவது போன்று அல்லாமல்,இஸ்லாம் அவற்றைக்கடைசிக் கட்டத்தில் தீர்மானிக்கின்றது.

இதன் மூலம் மற்ற எல்லா வணக்க வழிபாடுகளிலும் ஒரு தனித்துவத்தைக்காட்டுவதுபோல் இதிலும் தனக்கென்று ஒரு தனி பாணியை, தனித்துவத்தை இஸ்லாம்நிலைநாட்டுகின்றது.

இன்று ஒரு சில இயக்கங்கள், நோன்பையும் பெருநாளையும் பிற மதங்களில் உள்ளதுபோல் முன்கூட்டியே கணித்துத் தீர்மானித்தால் என்ன?மேற்கத்தியக் கலாச்சாரப்படிஇந்த நாட்களை முதலிலேயே முடிவு செய்தால் என்ன? ஏன் பெருநாட்கள் ஊருக்கு ஊர்,நாட்டுக்கு நாடு மாறுபட வேண்டும்?

உலகெங்கிலும் ஒரே கிறிஸ்துமஸ் போன்று உலகெங்கிலும் ஒரே பெருநாள்ஏன்கொண்டாடக் கூடாது? என்ற வாதத்தை முன்வைத்து இஸ்லாத்தின் தனித்துவத்தைத்தகர்க்க முயற்சி செய்கின்றனர்.

பிறைத் தோற்றம் என்பது சூரியத் தோற்றத்தைப் போன்றதல்ல; பிறைத் தோற்றத்தின்அடிப்படையில் நாள் வித்தியாசம் ஏற்படும் என்பது தெரிந்திருந்தும் ஒரே உலகம், ஒரேபிறை என்ற கருத்தை முன் வைக்கின்றார்கள்.

திட்டமிட்டு யூத, கிறித்தவர்களின் கலாச்சாரத்தை இஸ்லாத்திற்குள் திணிக்கின்றார்கள்.

ஹதீஸுக்கும் அறிவியலுக்கும் ஒத்த நடைமுறை

இவர்களின் அகில உலகப் பிறை என்றபிரச்சாரத்தையெல்லாம் தாண்டி, சென்றஆண்டைப் போல் இந்த ஆண்டும்ரமளான் தலைப்பிறை விஷயத்தில் தமிழகமுஸ்லிம்கள் நிதானத்தைக் கடைப்பிடித்தனர். அவர்கள் கடைப்பிடித்த இந்தஅணுகுமுறை, ஹதீஸுக்கும் அறிவியலுக்கும் மிக இணக்கமாகஅமைந்திருந்தது.

பிறையைப் பார்த்து நோன்பு வையுங்கள். பிறையைப் பார்த்து நோன்பை விடுங்கள்.உங்களுக்கு மேக மூட்டம் தென்பட்டால் ஷஅபான் மாதத்தை முப்பது நாட்களாகமுழுமைப்படுத்துங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 1909

என்ற ஹதீஸின் அடிப்படையில் பிறைபார்த்தனர். பிறை கிடைக்கவில்லை. அதனால்ஷஃபான் மாதத்தை முப்பதாக முழுமையாக்கினர். மக்களின்இந்த அணுகுமுறைமேற்கண்ட ஹதீஸின் கட்டளைக்கு இணக்கமாக அமைந்தது.

அறிவியல் அடிப்படைக்கும் இந்த நடைமுறை ஒத்திருந்தது.

பிறையும் அமாவாசையும்

அமாவாசை அன்று அறவே பிறை தெரியாது என்ற விபரம் அறிவியல் வளர்ச்சிக்குமுன்னரே சாதாரண மக்களுக்குத் தெரிந்த ஒன்றாகும். 22.09.06 அன்றுஅமாவாசையாகும். அன்று மாலை 5.15 மணிக்கு அமாவாசை தொடங்குகின்றது. இதன்பிறகு பிறை 5.50மணிக்குத் தோன்றி 6.11 மணிக்குமறைந்து விடுகின்றது.

இவ்வாறு பிறை தோன்றுவதும் மறைவதும் சூரியன் மறைவதற்கு முன்னால் முடிந்துவிடுகின்றது. ஏனெனில் அன்றைய தினம் சூரியன் மறைவு 6.14 ஆகும். சூரியன்மறைவதற்கு முன்னால் தலைப் பிறை தெரியாது. (இவை மதுரை நகரின் சூரிய, சந்திரநேரங்கள் குறித்து ஹிந்து நாளேடு தெரிவித்த விபரங்களாகும்)

23.09.06 சனிக்கிழமை அன்று பிறைபார்க்க முடியுமா? சனிக்கிழமை அன்று பிறை மாலை6.33 மணிக்குத் தோன்றி 6.45க்கு மறைகின்றது. அன்றைய தினம் சூரியன் மறையும்நேரம்6.13 என்பதால், பிறையின் தோற்றமும் மறைவும் சூரியன் மறைந்த பிறகேநடைபெறுகின்றது. என்றாலும் சூரியன் அஸ்தமித்த சில நிமிடங்களில் பிறை தோன்றிமறைவதால் சனிக்கிழமையன்றும் கண்ணுக்குத் தெரிகின்ற அளவிற்குப் பிறை தோன்றவாய்ப்பில்லை.

எனவே அறிவியல் அடிப்படையில் ஞாயிற்றுக்கிழமை மாலை தான் பிறை பார்க்கும்அளவுக்குத் தோன்றுகின்றது. (அன்றைய தினம் ஷஅபான் முப்பது பூர்த்தியானதால் நாம்பார்க்கத் தேவையில்லை.) திங்கள்கிழமையன்று தான் முதல் நோன்பு நோற்பதற்குப்பொருத்தமான நாளாகின்றது.

எனவே நாம் திங்கட்கிழமை நோற்ற நோன்பானது ஹதீஸ் அடிப்படையிலும், அறிவியல்அடிப்படையிலும் மிகப் பொருத்தமானதாக அமைந்து போகின்றது.

இப்போது இந்த இயக்கங்கள் அறிவித்த நோன்பைப் பார்ப்போம்.

23.09.06 அன்று முதல் நோன்பு என்று ஒரு சாரார் அறிவித்து இருக்கின்றனர். இதன்படிவெள்ளி அன்று பிறை பார்க்கப்பட வேண்டும். 22ஆம் தேதி பிறை பார்க்க முடியுமா?என்றால் பார்க்க முடியாது என்பதை மேலே விளக்கியுள்ளோம்.

இந்த அறிவியல் உண்மையின் அடிப்படையில் தான் சனிக்கிழமை நோன்புகிடையாதுஎன்று கேரள ஹிலால் கமிட்டி அறிவித்தது.

22.09.06 வெள்ளி (அவர்களது கணக்குப்படி பிறை 29) அன்று சூரியன்மறைவதற்கு முன்சந்திரன் மறைவதால் பிறை தெரிவதற்கு வாய்ப்பில்லை. அதனால் 24ம் தேதிஞாயிற்றுக்கிழமை ரமளான் 1 ஆகக் கணக்கெடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேரளஹிலால் கமிட்டி தலைவர் ஏ.டி. அப்துல் காதர் மதனி அறிவித்தார்.

22ஆம் தேதி சூரியன் மறைவதற்கு மூன்று நிமிடங்களுக்கு முன்பாகவே சந்திரன்மறைந்து விடுவதால் கேரளத்தில் எங்கேயும் பிறை தெரிவதற்கு வாய்ப்பில்லை. எனவேஷஃபான் முப்பதைப் பூர்த்தியாக்கி, 24ஆம் தேதி ரமளான் ஆரம்பமாகும் என்று கேரளஜம்யிய்யத்துல் உலமா பொதுச் செயலாளர் அப்துல்ஹமீது மதனீ அறிவித்தார்.

இந்தச் செய்தியை கேரள மாத்யம் என்ற பத்திரிகை வெளியிட்டுள்ளது.

இந்த அறிவியல் கணக்கை நாம் பார்க்கத் தேவையில்லை. மார்க்க அடிப்படையில் பிறை29 அன்று மாலை பிறை பார்க்க வேண்டும். அன்று தெரியாத பட்சத்தில் அந்த மாதத்தை30 ஆகப் பூர்த்தி செய்து அடுத்த நாள் நோன்பு நோற்க வேண்டும்.

எனினும் இதை நாம் இங்கே குறிப்பிடுவதற்குக் காரணம், அறிவியல் அடிப்படையிலும்இவர்களது அணுகுமுறை ஒத்துப் போகவில்லை என்பதைச் சுட்டிக் காட்டுவதற்காகத்தான். இவர்களது நோக்கம் சர்வதேசப் பிறை என்ற பெயரில் சவூதிப் பிறையைக்கொண்டு வர வேண்டும் என்பது தான். இதற்கு நாம் ஒரு போதும் வளைந்து கொடுக்கக்கூடாது.

இரண்டும் கெட்ட இன்னொரு கூட்டம்

மேற்கண்ட இந்தக் கூட்டத்தின் நிலை சவூதிப் பிறை என்றால் மார்க்க விஷயத்தில்தலையிட மாட்டோம் என்று கூறிக் கொள்ளும் ஓர் இயக்கம், சவூதிப் பிறையையும்எடுக்காமல், ஹதீஸ் அடிப்படையில் நாம் பிறைபார்த்த நாளையும் எடுக்காமல்இரண்டும் கெட்டானாக திருவனந்தபுரம் பிறை என்ற பெயரில் நாடகமாடிக்கொண்டிருக்கின்றனர்.

மக்கள் இவர்களைத் தெளிவாக அடையாளம் கண்டு கொண்டனர். இவர்களதுவலையிலும் சமுதாய மக்கள் வீழ்ந்து விடாமல் ஒரு நிதானத்தைக் கடைப்பிடித்துவருகின்றனர். இவர்கள் என்ன தான் மைக் போட்டு அறிவித்தாலும் அதை மக்கள் கண்டுகொள்ளவேயில்லை.

ரமளான் தலைப்பிறை விஷயத்தில் கண்ட இதே நிதானத்தை ஈத் பெருநாள் பிறைவிஷயத்திலும் மேற்கொண்டால் இன்று மக்கள் அனுபவித்த இதே நிம்மதியை,அமைதியை அடையலாம். இல்லையேல் பெருத்த சிரமத்திற்கும், சிக்கல்களுக்கும்உள்ளாக நேரிடும்.

பொதுவாக நோன்பு வைக்கும் போது நிதானத்தைக் காட்டுவதும், பெருநாள் வரும் போதுஅவசரம் காட்டுவதும் ஆகிய இரட்டை நிலை நம்மிடம் உள்ளது. நோன்பை மார்க்கஅறிஞர்கள்முடிவு செய்வார்கள்; பெருநாளை கறிக்கடைக்காரர்கள் முடிவு செய்வார்கள்என்ற விமர்சனமும் உள்ளது.

இதையெல்லாம் கவனத்தில் கொண்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காட்டியமுறைப்படி, பிறை பார்த்து நோன்பு நோற்றது போல், பிறை பார்த்து, பிறைதெரியாவிட்டால் 30 பூர்த்தி செய்து பெருநாளைத் தீர்மானிப்போம். மார்க்கத்திற்கும்முரணில்லாமல் மக்களுக்கும் சிரமம் தராமல் ரமளான் பிறை விஷயத்தில் காட்டியஅதே நிதானத்தை ஷவ்வால் பிறை விஷயத்திலும் அதாவது பெருநாள் அன்றும்கடைப்பிடிப்போம், இன்ஷா அல்லாஹ்!