ஊர் மெச்ச ஒட்டகக் குர்பானி

ஏகத்துவம் பிப்ரவரி 2006

ஊர் மெச்ச ஒட்டகக் குர்பானி

எந்த ஒரு வணக்கத்தைச் செய்தாலும் அல்லாஹ்வுக்காக மட்டுமே செய்ய வேண்டும். பிறருக்காக செய்யப் படும் வணக்கங்கள் நம்முடைய பார்வையில் வணக்கமாகத் தெரிந்தாலும் இறைவனுடைய பார்வையில் அவை வணக்கமாகக் கருதப்படாது. அத்துடன் மட்டுமின்றி மறுமையில் அது தீய செயலாகவும் கருதப்பட்டு, நரகத்திற்குச் செல்ல வழி வகுத்து விடும்.

எனவே மக்கள் பாராட்ட வேண்டும் என்பதற்காக எந்தவொரு அமலையும் செய்வது இறைவனிடம் கடும் தண்டனைக்குரிய குற்றமாகும்.

இன்று ஹஜ் மற்றும் குர்பானி போன்ற வணக்கங்கள் பேருக்காகவும் புகழுக்காகவும் செய்யப்பட்டு வருவதைப் பார்க்கின்றோம்.

ஊரை அழைத்து விருந்து போட்டு, போஸ்டர் ஒட்டி ஹஜ் செய்யச் செல்வதும்,வரவேற்பு என்ற பெயரில் ஊர்வலம் வருவதும் இதைத் தான் காட்டுகின்றது.

ஹஜ்ஜுக்குத் தான் இப்படி என்றால் குர்பானியிலும் இந்த நோய் புகுந்து விட்டது.

தமிழகத்தில் ஒரு அமைப்பினர் நாகர்கோவில் அருகேயுள்ள ஓர் ஊரில் பல்லாயிரக்கணக்கான ரூபாய் கொடுத்து ஒட்டகம் வாங்கி குர்பானி கொடுத்தனர். இதை எல்லாப் பத்திரிகைகளுக்கும் செய்தியாகக் கொடுத்து, தொலைக்காட்சியிலும் காட்டி அமர்க்களப்படுத்தினர்.

வசதியிருக்கும் போது ஆடு, மாடு, ஒட்டகம் எது வேண்டுமானாலும் குர்பானி கொடுக்கலாம், தவறில்லை. செய்தி என்ற அடிப்படையில் அதைப் பத்திரிகைகளில் வெளியிடுவதும் தவறில்லை.

ஆனால் இது தொடர்பாக அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் கூறிய தகவல் தான் நம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

பொதுவாக மாடு, ஒட்டகம் போன்றவற்றில் ஏழு பேர் கூட்டாகச் சேர்ந்து குர்பானி கொடுப்பதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளது. வசதியிருந்தால் தனியாகவும் கொடுக்கலாம். ஆனால் இதில் எதுவுமே அந்த ஒட்டகக் குர்பானியில் நடக்கவில்லை. வீடு வீடாகச் சென்று ஐந்து, பத்து என்று வசூலித்து ஒட்டகம் வாங்கி குர்பானி கொடுத்துள்ளனர்.

ஒவ்வொரு வீட்டிலும் போய் "உங்களுக்கு ஒட்டக இறைச்சி தருகிறோம்” என்று கூறி வசூலித்துள்ளனர். இப்படி வசூல் செய்து ஒட்டகம் அறுக்க வேண்டும் என்று என்ன வந்து விட்டது? இப்படி மார்க்கம் கூறியுள்ளதா?

இதில் இறையச்சம் எங்கே உள்ளது? மார்க்கம் கூறிய படி, பங்கு சேர்ந்து குர்பானி கொடுத்திருந்தால் அதில் இறையச்சம் உள்ளதா? இல்லையா? என்பதை நாம் ஆராய முடியாது. அதை அல்லாஹ் தான் அறிவான். ஆனால் மார்க்கம் கட்டளையிட்டவாறு இல்லாமல் இப்படி வீடு, வீடாகக் கையேந்தி ஒட்டகக் குர்பானி கொடுப்பதும், அதைப் பத்திரிகை, தொலைக்காட்சிகளில் காட்டி விளம்பரப்படுத்துவதும் நிச்சயமாக இறையச்சம் உள்ள செயல் அல்ல என்பதைக் கூறி விடலாம்.

இது போன்று வணக்கத்தை விளம்பரமாக்குபவர்களையும், பிறர் மெச்ச வேண்டும் என்பதற்காக அமல் செய்பவர்களையும் மார்க்கம் மிக வன்மையாகக் கண்டிக்கின்றது.

அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பாது மக்கள் மெச்சுவதற்காகத் தமது செல்வத்தைச் செலவிடுவோர் (ஷைத்தானின் நண்பர்கள்). யாருக்கு ஷைத்தான் நண்பனாக ஆகி விட்டானோ அவனே கெட்ட நண்பன். (அல்குர்ஆன் 4:38)

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பாது மக்களுக்குக் காட்டுவதற்காக தனது செல்வத்தைச் செலவிடுபவனைப் போல், உங்கள் தர்மங்களைச் சொல்லிக் காட்டியும், தொல்லை தந்தும் பாழாக்கி விடாதீர்கள்! இவனுக்கு உதாரணம் மேலே மண் படிந்திருக்கும் வழுக்குப் பாறை. அதன் மேல் மழை விழுந்ததும் மேலே ஒன்றுமில்லாமல் ஆக்கி விடுகிறது. தாம் பாடுபட்ட எதன் மீதும் அவர்கள் சக்தி பெற மாட்டார்கள். (தன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான். (அல்குர்ஆன்2:264)

அவசர உலகத்தை விரும்புவோருக்கு நாம் நாடியதை நாம் நாடியோருக்கு அவசரமாகக் கொடுத்து விடுவோம். பின்னர் அவர்களுக்காக நரகத்தை ஏற்படுத்துவோம். இழிந்து, அருளுக்கு அப்பாற்பட்டு அதில் கருகுவார்கள். (அல்குர்ஆன்17:18)

நான் நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் சென்றேன். அப்போது அவர்கள், "யார் விளம்பரத்திற்காக நற்செயல் புரிகின்றாரோ அவர் பற்றி அல்லாஹ் (மறுமையில்) விளம்பரப் படுத்துவான். யார் முகஸ்துதிக்காக நற்செயல் புரிகின்றாரோ அவரை அல்லாஹ் (மறுமையில்) அம்பலப் படுத்துவான்” என்று கூறியதைக் கேட்டேன்.

அறிவிப்பவர்: ஜுன்துப் பின் அப்துல்லாஹ் (ரலி),

நூல்: புகாரி 6499

அல்லாஹ்வின் பாதையில் உயிர் துறந்தவர் தான் மறுமையில் முதன் முதலில் (விசாரிக்கப்பட்டு) தீர்ப்பு வழங்கப்படுவார். அவர் அல்லாஹ்வின் முன் கொண்டு வரப்படுவார். அல்லாஹ் அவருக்குச் செய்த அருட்கொடைகளைப் பற்றி அறிவித்துக் காட்டுவான். அதை அவர் அறிந்து கொண்டதும் இந்த அருட்கொடைகளுக்குப் பரிகாரமாக நீ என்ன வணக்கம் செய்தாய் என்று கேட்பான். அதற்கு அவர் "நான் கொல்லப்படும் வரை உனக்காகப் போரிட்டேன்” என்று கூறுவார். "நீ பொய் சொல்கின்றாய். நீ வீரன் என்று பாராட்டப் படவேண்டும்” என்பதற்காகவே போரிட்டாய். நீ வீரன் என்று (நீ கொல்லப்பட்டவுடன்) சொல்லப்பட்டு விட்டது என்று அல்லாஹ் கூறுவான். பிறகு அவர் தொடர்பாக உத்தரவிடப்பட்டு முகங்குப்புற இழுத்துச் செல்லப்பட்டு இறுதியில் நரகத்தில் தூக்கி எறியப்படுவார்.

அடுத்து (விசாரிக்கப்பட்டு) தீர்ப்பு வழங்கப்படுபவர் குர்ஆனைக் கற்று, பிறருக்கும் கற்பித்து, குர்ஆன் ஓதிக் கொண்டிருப்பவர் ஆவார். இவர் அல்லாஹ்வின் முன்னிலையில் கொண்டு வரப்பட்டு அல்லாஹ் அவருக்கு தனது அருட்கொடைகளை அறிவித்துக் காட்டுவான். அவர் இந்த அருட் கொடைகளை அறிந்து கொண்டதும் "இந்த அருட்கொடைகளுக்குப் பரிகாரமாக நீ என்ன அமல் செய்தாய்?” என்று கேட்பான். அதற்கு அவர் "நான் கல்வியைக் கற்று அதை மற்றவர்களுக்கும் கற்பித்தேன். உனக்காகவே நான் குர்ஆன் ஓதினேன் என்று பதில் சொல்வார். நீ பொய் சொல்கிறாய். எனினும் நீ அறிஞன் என்று சொல்லப் படுவதற்காகவே கல்வி கற்றாய். காரி (ஓதத் தெரிந்தவர்) என்று சொல்லப்படுவதற்காகவே குர்ஆன் ஓதினாய். அவ்வாறு (உலகில்) சொல்லப்பட்டு விட்டது” என்று அல்லாஹ் கூறுவான். பிறகு அவர் தொடர்பாக உத்தரவிடப்பட்டு முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு இறுதியில் நரகத்தில் எறியப்படுவார்.

அடுத்ததாக வசதிகளையும் பொருளாதாரத்தின் வகைகளையும் அல்லாஹ் யாருக்கு வழங்கினானோ அவர் (விசாரிக்கப்பட்டு) தீர்ப்பு வழங்கப்படுவார். அவர் அல்லாஹ்வின் முன்னிலையில் கொண்டு வரப்பட்டு அவருக்கு அல்லாஹ் தன் அருட்கொடைகளை அறிவித்துக் காட்டுவான். அவர் அந்த அருட்கொடைகளை அறிந்ததும், "நீ அந்த அருட்கொடைகளுக்காக என்ன பரிகாரம் செய்தாய்?” என்று கேட்பான். அதற்கு அவர் நீ என்னனென்ன வழிமுறைகளில் செலவளிக்க வேண்டும் என்று விரும்புகிறாயோ அந்த வழிமுறையில் உனக்காக நான் செலவளிக்காமல் இருந்ததில்லை என்று பதில் சொல்வார். அதற்கு அல்லாஹ், "நீ பொய் சொல்கிறாய். எனினும் நீ கொடை வள்ளல் சொல்லப் படுவதற்காக தர்மம் செய்தாய். அவ்வாறு சொல்லப்பட்டு விட்டது” என்று கூறுவான். பிறகு இவர் தொடர்பாக உத்தரவிடப்பட்டு முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு இறுதியில் நரகத்தில் தூக்கி எறியப்படுவார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றேன்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 3537

முகஸ்துதிக்காக ஒரு அமலைச் செய்தால் அது அல்லாஹ்விடம் ஏற்றுக் கொள்ளப்படாது என்பதையும், அதற்குக் கூலி நரகம் தான் என்பதையும் மேற்கண்ட வசனங்களும், ஹதீஸ்களும் தெளிவாக எடுத்துக் கூறுகின்றன.

"நான் உங்கள் மீது மிகவும் பயப்படுவது சிறிய இணை வைத்தலாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நபித்தோழர்கள், "அல்லாஹ்வின் தூதரே! சிறிய இணை வைத்தல் என்றால் என்ன?” என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "ரியா (முகஸ்துதி)” என்று பதிலளித்தார்கள். "நீங்கள் உங்கள் அமல்களை உலகத்தில் யாருக்குக் காட்டுவதற்காகச் செய்தீர்களோ அவர்களிடம் செல்லுங்கள். அவர்களிடம் கூலி கிடைக்குமா என்று பாருங்கள்” என்று அடியார்களின் அமல்களுக்குக் கூலி கொடுக்கும் நாளில் அல்லாஹ் கூறி விடுவான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: மஹ்மூத் பின் ரபீத் (ரலி)

நூல்: அஹ்மத் 22528

இந்த அடிப்படையில் பிறர் மெச்ச வேண்டும் என்பதற்காக செய்யப்படும் அமல் இணை வைத்தல் என்ற கொடிய பாவமாக ஆகி விடுகின்றது.

குர்பானியின் முக்கிய நோக்கமே தக்வா எனும் இறையச்சம் தான் என்பதைப் பின்வரும் வசனம் தெளிவாக உணர்த்துகின்றது.

அவற்றின் மாமிசங்களோ, அவற்றின் இரத்தங்களோ அல்லாஹ்வை அடைவதில்லை. மாறாக உங்களிடமுள்ள (இறை) அச்சமே அவனைச் சென்றடையும். அல்லாஹ் உங்களுக்கு நேர் வழி காட்டியதற்காக அவனை நீங்கள் பெருமைப்படுத்திட இவ்வாறே அதை அவன் உங்களுக்குப் பயன்படச் செய்தான். நன்மை செய்வோருக்கு நற்செய்தி கூறுவீராக! (அல்குர்ஆன் 22:37)

இந்த வசனத்திற்கு மாற்றமாக ஊர் மெச்ச வேண்டும் என்பதற்காக ஒட்டகக் குர்பானி கொடுப்பது இறையச்சத்திற்கு உகந்த செயல் அல்ல.

ஒட்டகக் குர்பானி மட்டுமின்றி பொதுவாகவே குர்பானி கொடுப்பதில் இது போன்ற முகஸ்துதிகள் தற்போது மிகுந்து வருகின்றன. ஒரு வருடம் கொடுத்து விட்டால் அடுத்த வருடமும் கொடுத்தாக வேண்டும் என்று நினைப்பதும், கொடுக்காவிட்டால் மக்கள் நம்மை ஏளனமாக நினைப்பார்கள் என்ற எண்ணமும் மக்களிடம் உள்ளது. இதற்காகக் கடன் வாங்கியாவது குர்பானி கொடுக்கின்றார்கள். படைத்தவனை விட மனிதர்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கும் இந்த நிலை மாற வேண்டும்.

இறை நெருக்கத்தையும், இறையச்சத்தையும் மட்டுமே அடிப்படையாகக் கொண்ட குர்பானி என்ற வணக்கத்தை இறைவனுக்காக மட்டுமே செய்து அவனது திருப்தியைப் பெற வேண்டும்.

About Me

இறைவனின் திருப்பெயரால்…

  • இந்த தளத்தில் உள்ள செய்திகள் ஏகத்துவ கொள்கையை சொல்லும் பல்வேறு இணையதளத்தில் இருந்து எடுத்து தொகுக்கப்பட்டவை (ஆன்லைன்பீஜே, ஆன்லைன் டிஎன்டிஜே, etc).
  • இதில் தவறான கருத்துகள் ஏதேனும் இருப்பின் அதை Facebook page https://www.facebook.com/Thowheed.org என்ற முகவரிக்கு அனுப்பி தெரிவிக்கலாம்.
  • உங்கள் ஆக்கங்களையும்
  • Facebook page https://www.facebook.com/Thowheed.org என்ற முகவரிக்கு
  • என்ற முகவரிக்கு அனுப்பவும். ஆசிரியர் சரிபார்த்தபின் வெளியிடப்படும்.
  • இந்த தளத்திற்கும் எந்த அமைப்பிற்கும் எந்த தொடர்பும் கிடையாது.

You may want to read

Follow Us

Sign up for our Newsletter

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit