என்றும் மே எட்டாகட்டும்!

ஏகத்துவம் 2006 ஏப்ரல்

என்றும் மே எட்டாகட்டும்!

மே எட்டு! தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்தல் நாள். அக்னி நட்சத்திர வெயிலைப்போன்று அனல் பறக்கும் பிரச்சாரம் முடிந்து, மக்கள் அணியணியாக வாக்குச் சாவடிக்குஅணி வகுத்து வரும் நாள்! நாளைய ஆட்சியாளர்கள் யார் என்று நிர்ணயிக்கும் நாள்! ஒருநாட்டின் பொருளாதார வளர்ச்சி, முன்னேற்றம் போன்றவற்றை நிர்ணயிக்கும் நாள்!

அதனால் வாக்குச் சாவடிக்குச் செல்லும் வாக்காளர்களின் சிந்தனை தெளிவாக இருக்கவேண்டும். அவர்கள் நிதானத்துடன் இருக்க வேண்டும். தான் அளிக்கப் போகும் வாக்கின்மதிப்பையும், அதன் விளைவையும் தெரிந்தவராக இருக்க வேண்டும். தான் யாரைத்தேர்ந்தெடுக்கப் போகின்றோம் என்பதையும் நன்கு உணர்ந்தவராக இருக்க வேண்டும்.எனவே அவரின் சிந்தனையைக் கெடுக்கும் விதமாக மது அருந்தி விடக் கூடாதுஎன்பதில் அரசு அதிகப்பட்ச கவனத்தை எடுத்துக் கொண்டு, அந்நாளில்நாட்டிலுள்ளஅனைத்து மதுக் கடைகளையும் மூடி விடும் படி உத்தரவிடுகின்றது.

அரசின் இந்தச் செயலை நாம் மனமாரவரவேற்கின்றோம். அன்றைய தினம்வாக்களிக்கும் மனிதனின் மதி, மதுவினால் மயங்கி விடக் கூடாது என்பதில் அரசுகாட்டும் கவனத்தையும், கரிசனத்தையும் போற்றுகின்றோம். ஆனால் அதே சமயம்மத்திய, மாநிலஅரசுகளிடம் நாம் ஒரு கேள்வியைக் கேட்கிறோம்.

தேர்தல் நாளில் மட்டும் தான் மது மதியைக் கெடுக்குமா? மற்ற நாட்களில் மது மதியைக்கெடுக்காதா? மற்ற நாட்களில் மதுவின் போதைத் தன்மை வேலை செய்யாதா? என்றஇந்தக்கேள்வியை இங்கு முன் வைக்கின்றோம்.

மதியை மயக்கும் மது அரக்கன்

தேர்தல் அல்லாத மற்ற நாட்களில் மது மதியைக் கெடுக்காது என்று அரசுகளால் ஒருபோதும் பதில் சொல்லமுடியாது. மது அரக்கன் எப்போதும் மதியை மயக்கி விடுவான்.புத்தியைப் பேதலிக்கச் செய்து விடுவான் என்றே அரசுகள் பதில் சொல்லும்.

உண்மை இவ்வாறிருக்கையில், தேர்தல் நாளில் மட்டும் மதுவைத் தடைசெய்வது எந்தவகையில் நியாயம்? அதை எந்த நாளும் தள்ளி வைப்பது தானே நியாயமாகும். எனவேமதுவை எல்லா நாளிலும் தடை செய்ய வேண்டும்என்று மத்திய, மாநில அரசுகளைக்கேட்டுக் கொள்கிறோம்.

தேர்தல் நாளில் மட்டும் மனிதன் முடிவெடுக்கும் நிலையில் இல்லை.எல்லாநாட்களிலும், எல்லா நேரங்களிலும் முடிவெடுக்கும் நிலையில் இருக்கிறான். அன்றாடவாழ்க்கையில் அவசியமான பல விஷயங்களுக்குஅவன் முடிவு எடுக்கும்நிர்ப்பந்தத்தில் இருக்கின்றான்.

வாழ்க்கையில் ஒரு தனி மனிதன் தன் எதிர்காலத்தைக் காக்க, ஒரு தொழிலை,வியாபாரத்தை, விவசாயத்தை, கல்வியை, கல்வியில் தனக்குத் தேவையான பாடத்தை,தனக்கென ஒரு வாழ்க்கைத் துணையை, அதன் பின்னர் தனது பிள்ளைகளுக்கானபிரச்சனைகளை, இவ்வளவு ஏன்? அன்றாடம் தானும் தன்னுடைய குடும்பத்தாரும்சாப்பிடுகின்ற உணவைக் கூட தேர்வு செய்யும் நிர்ப்பந்தத்தில் இருக்கிறான்.

ஒரு நாட்டின் தலை விதியை நிர்ணயிக்க ஒரு நாள் தான் தேர்தல். ஆனால்வாழ்க்கையின் தலைவிதியை நிர்ணயிக்க ஒவ்வொரு நாளும் தேர்தல் நாள் தான். அந்தத்தேர்தல் நாட்களில் மதுக் கடைகளைத் திறந்துவைப்பது நியாயமா?

அவ்வாறு திறந்து வைப்பதால் ஏற்படும் விளைவு என்ன?

சென்னைக்குச் செல்லும் பேருந்தின் ஓட்டுநர் ஒருவர், திறந்து கிடக்கும் மதுக் கடையில்மாலை நேரத்தில் மது அருந்துகின்றார். அதன் பின்னர் பேருந்தில் ஓட்டுநர் இருக்கையில்அமர்கின்றார். பேருந்தில் கைக் குழந்தைகளுடன் சுமார் 50 குடும்பங்கள்பயணிக்கின்றனர்.

மயக்கத்தில் இருந்த இந்த ஓட்டுநர் எதிரில் வரும் பேருந்தில் மோதுகின்றார். அதிலுள்ளபெரியவர்கள், சிறியவர்கள், ஆண்கள், பெண்கள் என அனைவரும், அது போல் எதிரில்வந்த பேருந்தில் உள்ள குடும்பங்களும் அடிபட்டு இறந்து போகின்றனர். இதற்கு யார்காரணம்? அரசு தானே! இதற்கெல்லாம் காரணம் மது விலக்கு இல்லாதது தான்.

காலையிலிருந்து மாலை வரை ரிக்ஷாஇழுக்கின்றான். மாடாய் உழைத்து, ஓடாய்த்தேய்ந்து கை நிறைய சம்பாதிக்கின்றான். அவனது வயது முதிர்ந்த தாய், தந்தையர்,கர்ப்பிணியான மனைவி, கைக் குழந்தைகள் அவனுடைய வருவாய்க்காக வீட்டில்காத்திருக்கின் றனர். இவனோ வெறுங்கையுடன் மட்டுமல்ல! பெருங்குடியுடன் வீடுவந்து சேர்கின்றான்.

"சாப்பாடு போடு!” என்று மனைவியைச் சத்தம் போடுகின்றான். அரிசிக்குவழியில்லையே என்று மனைவி சொல்லும் போது அவளது உச்சந் தலையைப் பிடித்துஉலுக்கி அவளது கன்னங்கள் வீங்கிப் புடைக்கும் அளவுக்குச் சாப்பாடு போடுகின்றான்.

பெரியவர்கள் வேதனையில் முனங்குகின்றனர். பிள்ளைகள் கதறி அழுகின்றனர்.மனைவி அடி உதை வாங்கித் தேம்புகின்றாள். இதற்கெல்லாம் காரணம் என்ன? திறந்துவைக்கப்பட்டிருக்கும் மதுக் கடைகள் தானே!

மேலே கூறப்பட்டவை சில எடுத்துக்காட்டுகள் தான். இன்னும் எடுத்துக் காட்டஇலட்சங்கள் உள்ளன. இப்படிப்பட்ட தீமைகளை உருவாக்கும் தீமைத்தொழிற்சாலைகளை தேர்தலில் மட்டும் மூடினால் போதுமா? எல்லாநாட்களும் மூடவேண்டும். ஆனால் அவ்வாறு எல்லா நாட்களும் ஒரு போதும் மூட முடியாது. அப்படிமூட வேண்டுமானால் இங்கு இஸ்லாமிய ஆட்சி வேண்டும். உண்மையில் இஸ்லாமியஆட்சி ஏற்படுமானால் எந்நாளும் மதுவில்லாத தேர்தல் நாள் தான். இறைவன் நாடினால்அந்நாட்கள் வெகுதொலைவில் இல்லை.\