ஒட்டகத்தின் சிறுநீரில் மருத்துவ குணம் உண்டா?

ஒட்டகத்தின் சிறுநீரில் மருத்துவ குணம் உண்டா?

புகாரி 5686 வது ஹதீஸில் ஒட்டகத்தின் சிறுநீர் மருந்தாகப் பயன்படுத்தப்பட்டதாக உள்ளது. இது சவூதியில் நடைமுறையில் உள்ளது. இது பற்றிய விளக்கம் தேவை.

முஹம்மத் பஷீர்

பதில்:

மருத்துவத்துக்காக ஒட்டகத்தின் பாலையும் அதன் சிறுநீரையும் பருகுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் எனப் பின்வரும் செய்தி கூறுகின்றது.

233حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ قَالَ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ عَنْ أَيُّوبَ عَنْ أَبِي قِلَابَةَ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ قَدِمَ أُنَاسٌ مِنْ عُكْلٍ أَوْ عُرَيْنَةَ فَاجْتَوَوْا الْمَدِينَةَ فَأَمَرَهُمْ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِلِقَاحٍ وَأَنْ يَشْرَبُوا مِنْ أَبْوَالِهَا وَأَلْبَانِهَا فَانْطَلَقُوا فَلَمَّا صَحُّوا قَتَلُوا رَاعِيَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَاسْتَاقُوا النَّعَمَ فَجَاءَ الْخَبَرُ فِي أَوَّلِ النَّهَارِ فَبَعَثَ فِي آثَارِهِمْ فَلَمَّا ارْتَفَعَ النَّهَارُ جِيءَ بِهِمْ فَأَمَرَ فَقَطَعَ أَيْدِيَهُمْ وَأَرْجُلَهُمْ وَسُمِرَتْ أَعْيُنُهُمْ وَأُلْقُوا فِي الْحَرَّةِ يَسْتَسْقُونَ فَلَا يُسْقَوْنَ قَالَ أَبُو قِلَابَةَ فَهَؤُلَاءِ سَرَقُوا وَقَتَلُوا وَكَفَرُوا بَعْدَ إِيمَانِهِمْ وَحَارَبُوا اللَّهَ وَرَسُولَهُ رواه البخاري

உக்ல் அல்லது உரைனா குலத்தாரில் சிலர் (மதீனாவிற்கு) வந்தனர். அவர்களுக்கு மதீனாவின் தட்ப வெப்பநிலை ஒத்துக் கொள்ளவில்லை. எனவே பால் கறக்கும் ஒட்டகங்களின் சிறுநீரையும், பாலையும் பருகிக்கொள்ளுமாறு அவர்களை நபியவர்கள் பணித்தார்கள். அவ்வாறே அவர்களும்  நடந்து உடல் நலம் தேறினர்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)

நூல் : புகாரி 233

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ஒட்டகப் பாலும் அதன் சிறுநீரும் மருந்தாக பயன்படுத்தப்பட்டது. இது அன்றைய காலத்து மக்களின் மருத்துவ முறையாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மார்க்க அடிப்படையில் இந்த வழிகாட்டலைக் கற்றுக் கொடுக்கவில்லை. மாறாக அன்றைய காலத்தில் அவர்களுக்கு இருந்த உலக அறிவை அடிப்படையாக வைத்தே இவ்வாறு கூறியுள்ளார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மார்க்கம் தொடர்பாகக் கட்டளையிட்டால் அதை ஏற்றுச் செயல்படுத்துவது நம் மீது கடமை. ஆனால் உலக விஷயம் தொடர்பாக ஏதேனும் கூறினால் அது வஹீ அடிப்படையில் கூறப்பட்டதல்ல. எனவே அதை ஏற்பதற்கும், ஏற்காமல் இருப்பதற்கும் நமக்கு அனுமதி வழங்கியுள்ளார்கள்.

உலக விஷயம் தொடர்பாக அவர்கள் ஏதாவது கருத்து தெரிவித்து அக்கருத்தில் நமக்கு உடன்பாடு இல்லாவிட்டால் அதை நாம் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை. பின்வரும் சம்பவம் இதைத் தெளிவாக உணர்த்துகின்றது.

4358حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَعَمْرٌو النَّاقِدُ كِلَاهُمَا عَنْ الْأَسْوَدِ بْنِ عَامِرٍ قَالَ أَبُو بَكْرٍ حَدَّثَنَا أَسْوَدُ بْنُ عَامِرٍ حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ وَعَنْ ثَابِتٍ عَنْ أَنَسٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ بِقَوْمٍ يُلَقِّحُونَ فَقَالَ لَوْ لَمْ تَفْعَلُوا لَصَلُحَ قَالَ فَخَرَجَ شِيصًا فَمَرَّ بِهِمْ فَقَالَ مَا لِنَخْلِكُمْ قَالُوا قُلْتَ كَذَا وَكَذَا قَالَ أَنْتُمْ أَعْلَمُ بِأَمْرِ دُنْيَاكُمْ رواه مسلم

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த போது மதீனாவாசிகள் பேரீச்சை மரங்களை ஒட்டுச் சேர்க்கை செய்து கொண்டிருந்தனர். தாங்கள் பேரீச்சை மரங்களை சூல் கொள்ளச் செய்வதாக அவர்கள் கூறினர். நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். இவ்வாறே நாங்கள் செய்து வருகிறோம் என்று மக்கள் கூறினர். நீங்கள் இவ்வாறு செய்யாவிட்டால் நன்றாயிருந்திருக்கலாம் என்று சொன்னார்கள். ஆகவே, அவர்கள் அ(வ்வாறு செய்வ)தை விட்டு விட்டனர். அந்த வருடத்தில் கனிகள் உதிர்ந்து விட்டன அல்லது குறைந்து விட்டன. அதைப் பற்றி மக்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் தெரிவித்தனர். அப்போது அவர்கள், நான் ஒரு மனிதனே; உங்கள் மார்க்க விஷயத்தில் நான் உங்களுக்கு ஏதேனும் கட்டளையிட்டால் அதை நீங்கள் கடைப்பிடியுங்கள். (உலக விவகாரத்தில்) சொந்தக் கருத்தாக உங்களுக்கு நான் ஏதேனும் கட்டளையிட்டால் நானும் ஒரு மனிதனே என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர் : ராஃபிஉ பின் கதீஜ் (ரலி)

நூல் : முஸ்லிம்

மற்றொரு அறிவிப்பில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், உங்கள் உலக விவகாரங்கள் பற்றி (என்னை விட) நீங்களே நன்கு அறிந்தவர்கள் என்று சொன்னதாக உள்ளது.

ஒட்டகத்தின் பாலிலும், சிறுநீரிலும் மருத்துவ குணம் இருந்து அதைப் பயன்படுத்த விரும்பினால் நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். அல்லது அதைவிடச் சிறந்த மருத்துவ முறை கண்டறியப்பட்டால் அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதனால் நபிவழியை நாம் மீறியவர்களாக மாட்டோம்.

صحيح البخاري

243 – حَدَّثَنَا مُحَمَّدٌ يَعْنِي ابْنَ سَلاَمٍ، قَالَ: أَخْبَرَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ أَبِي حَازِمٍ، سَمِعَ سَهْلَ بْنَ سَعْدٍ السَّاعِدِيَّ، وَسَأَلَهُ النَّاسُ، وَمَا بَيْنِي وَبَيْنَهُ أَحَدٌ: بِأَيِّ شَيْءٍ دُووِيَ جُرْحُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ فَقَالَ: مَا بَقِيَ أَحَدٌ أَعْلَمُ بِهِ مِنِّي، «كَانَ عَلِيٌّ يَجِيءُ بِتُرْسِهِ فِيهِ مَاءٌ، وَفَاطِمَةُ تَغْسِلُ عَنْ وَجْهِهِ الدَّمَ، فَأُخِذَ حَصِيرٌ فَأُحْرِقَ، فَحُشِيَ بِهِ جُرْحُهُ»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு உஹதுப் போரில் காயம் ஏற்பட்டு இரத்தம் பீரிட்டு ஓடியது. இதை நிறுத்த சாம்பலை அந்த இடத்தில் பூசி இரத்தம் கசிவதை நிறுத்தியதாக புகாரியில் ஹதீஸ் உள்ளது.

(புகாரி 243, 2903, 2911, 3037, 4075, 5248, 5722)

இன்றைய காலத்தில் விபத்து ஏற்பட்டு இரத்தம் ஓடினால் சாம்பலைப் பூசுவது நபிவழியைப் பின்பற்றுவதாக ஆகாது. அன்றைக்கு அது தான் ஒரே வழியாக இருந்ததால் அதைத் தான் செய்ய வேண்டிய அவசியம் இருந்தது. ஆனால் இன்று இரத்தம் ஓடுவதை நிறுத்த சிறந்த வழிமுறைகள் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதைப் பயன்படுத்துவது தான் நபிவழியைப் பின்பற்றும் சரியான வழியாகும்.

26.04.2011. 12:36 PM

Leave a Reply