கணவனிருந்தும் விதவைகளாக…

ஏகத்துவம் 2006 ஜூன்

கணவனிருந்தும் விதவைகளாக…

நமது நாட்டில் ஒரு பெண் ஒருவனைத் திருமணம் செய்து, புகுந்த வீட்டிற்கு வருகிறாளென்றால் அந்தப் பெண் மட்டும் அவனுக்கு அடிமையல்ல! அந்தப் பெண்ணின் வீட்டார்கள் அத்தனை பேர்களும் கணவனுக்கும் அவனது வீட்டாருக்கும் அடிமையாய் இருக்கிறார்கள். அவனுடைய வீட்டிலுள்ளவர்கள் எல்லோருக்குமே அடிமை சாஸனம் எழுதிக் கொடுத்தவர்கள் போல் செயல் படவேண்டும் என்ற நிலை உள்ளது.
ஒரு பெண் ஒருவனைத் திருமணம் செய்வதென்பது, ஒரு முள் மரத்தில் அழகான சேலையைப் போடுவதைப் போலத் தான். ஏதாவது பிரச்சனை ஏற்பட்டு, பெண் வீட்டுக்காரர்கள் மாப்பிள்ளை வீட்டுக்காரர்களைப் பற்றி சொல்லும் போது, "என்ன செய்வது? விடுங்க! நாம பெண்ணு வீட்டுக்காரங்க! கொஞ்சம் விட்டுக் கொடுத்துத் தான் போக வேண்டும். முள்ளில் சேலையைப் போட்டாச்சு! என்ன செய்றது? பாத்துத் தான் எடுக்கணும்” என்று சலிப்புடன் கூறுவர். மனைவி என்பவள் கணவனுக்கு அடிமையாகி விடுகிறாளென்பதற்கு அடையாளம் தான் அவளுக்கு அவன் கட்டுகிற தாலி அல்லது கருக மணி! அவளது குடும்பமே கணவனுக்கு அடிமை என்பதற்கு அடையாள முத்திரையாக, திருமண நாளன்று பெண்ணுடைய சகோதரன் மாப்பிள்ளையின் கால்களை ஒரு செம்புத் தண்ணீரால் குனிந்து கழுவி விடுவான்.
குனிந்து கழுவிக் கொண்டு அடிமைப் பட்டிருக்கும் அந்தப் பெண்ணின் சகோதரனிடம், "நீ மட்டுமல்ல! உன் குடும்பத்தினர் எல்லோருமே இனி எனக்கு அடிமை தான். அதற்கு ஒப்புதல் முத்திரை தான் இந்தத் தங்க மோதிரம்” என்று மாப்பிள்ளை போடுவார். இந்த அடிமைத் தனத்தை முக மலர்ச்சியுடன் ஏற்று அந்தப் பெண் வீட்டார்கள் மாப்பிள்ளையை வரவேற்று உள்ளே கூட்டிச் செல்வார்கள்.
அந்த வட்டாரத்துக்காரர்ககளும் ஊர் பெரியவர்களும் ஆலிம் பெருந்தகைகளும் மாப்பிள்ளையுடன் சென்று அந்த அடிமைத்தனத்திற்கு அங்கீகாரம் தந்து விடுகிறார்கள். இது தான் அந்த நிகழ்ச்சியின் தத்துவம்.

ஒரு பிரச்சனை என்றால் மாமியார் மட்டுமல்ல! வீட்டிலுள்ள பெருசுகள் முதல் சிறுசுகள் வரை, குஞ்சிலிருந்து குருனா வரை அவளுக்கு எதிராக ஒன்று திரண்டு விடுவார்கள். இவள் ஏற்றுக் கொண்ட மாப்பிள்ளையும் ஒரு மாதிரியாக அமைந்து விட்டால் நரகம் தான். ஒன்று அப்பெண் தானாகவே தற்கொலை செய்து கொள்வாள். அல்லது அவர்களே கொன்று விடுவார்கள். இப்படித்தான் பல ஊர்களில் நடக்கிறது

இப்படி நடப்பது கொஞ்சமென்றால் இது போன்ற பிரச்சனையில் தாங்க முடியாமல் அந்தப் பெண்ணே தாய் வீட்டிற்கு வந்து விடும். அல்லது அந்தக் குடும்பத்தினரோ அல்லது கணவனோ அவளைத் தாய் வீட்டிற்கு அனுப்பி விடுவார்கள். இப்படிப்பட்ட பஞ்சாயத்துத்துகள் தான் இப்போது அதிகம் நடக்கிறது.
கணவனிருந்தும் விதவைகள் முஸ்லிம் (?) ஜமாஅத்களின் விந்தைகள்
இப்படி எத்தனை பெண்கள் தங்களுடைய தாய் வீட்டில் குழந்தைகளோடு சிரமப்பட்டு, கண்ணீரும் கம்பலையுமாக கணவர்கள் இருந்தும் விதவைகளாக காலந் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள்.

இதைப் பற்றி எந்த ஆலிம் பெருந்தகைகள் கவலைப் படுகிறார்கள்? இதைப் பற்றி எத்தனை மவ்லானாக்கள் உபதேசம் புரிகிறார்கள்? இதற்கு அவர்கள் அல்லாஹ்விடம் என்ன பதில் கூறப் போகிறார்கள்?

இந்த அவலத்தை சுன்னத் வல் ஜமாஅத் பெரியவர்கள், ஆலிம்கள் கண்டு கொண்டதாகவே தெரிய வில்லை. கல்யாண மற்றும் சுன்னத் விருந்தா? உடனே போய் கலந்து கொண்டு அல் ஃபாதிஹா போட ஓடும் பெருங் கூட்டம் இதுபோன்ற பஞ்சாயத்தென்றால் பிடிக்கிறது ஓட்டம். என்ன செய்வது? இது தான் மிக வேதனை! நமக்கு வந்த சோதனை!

ஒவ்வொரு முஸ்லிமும் ஏக இறைவனை மட்டும் ஈமான் கொண்டு நம்பிடவில்லை. அல்லாஹ்வை நம்புவதுடன் மறுமை நாளையும் சேர்த்து உறுதியாக நம்பி வாழ்பவனே உண்மையான முஸ்லிம்.
இஸ்லாத்தின் தனித் தன்மையே ஏக இறைவனையும் இறுதி நாளையும் நம்புவதாகும். இந்த நம்பிக்கை எந்த அளவுக்கு ஆழமாக மனதில் பதிந்துள்ளதோ அந்த அளவுக்கு இறையச்சம் மிகுந்து தீமைகள் குறைந்து நன்மைகள் பெருகும் வாய்ப்பு உண்டு.

அதனாலேயே குர்ஆனிலும் நபிமொழிகளிலும் இவற்றை நம்ப வேண்டும் என்று வலியுறுத்தி சொல்லப்பட்டுள்ளது. மறுமை நாளை நம்பியவர்கள் தான் அல்லாஹ் தடுத்தவற்றை விட்டும் விலகி இருப்பார்கள். இதனால் தான் தடுக்கப்பட்ட சில விஷயங்களை அல்லாஹ் குர்ஆனில் குறிப்பிடும் போது அல்லாஹ்வை நம்புவதோடு அவர்கள் மறுமை நாளையும் நம்பக் கூடியவர்களாக இருந்தால் என்று நிபந்தனை வைக்கிறான்.

அல்லாஹ்வையும், இறுதி நாளையும் அவர்கள் நம்பி இருந்தால் தமது கருவறைகளில் அல்லாஹ் படைத்திருப்பதை மறைப்பதற்கு அவர்களுக்கு அனுமதி இல்லை. (அல்குர்ஆன் 2:228)

நபி (ஸல்) அவர்களும் கூட மறுமை நாளை முன் வைத்து பல கட்டளைகளை இட்டுள்ளார்கள்.

இவர்கள் இறுதி நாளை நம்பியவர்களா?

இன்று முஸ்லிம்கள் பெரும்பாலும் மறுமை நாளை நம்பியிருந்தாலும் அதற்குப் பயந்து இவ்வுலகில் நடப்பதில்லை. மறுமையை நம்பாதவர்கள் எப்படி நடந்து கொள்வார்களோ அதே போன்று இவர்களும் நடக்கிறார்கள். இதன் விளைவாக அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மாறு செய்து விடுகிறார்கள். மனிதனுக்கு மனிதன் செய்ய வேண்டிய கடமைகளை முறையாகச் செய்வதில்லை.
இவ்வாறு இவர்கள் செய்யும் குற்றங்களில் ஒன்று தான் மனைவியைத் துன்புறுத்தி அவளுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை முறையாக நிறைவேற்றாமல் இருப்பது. எத்தனையோ கண்வன்மார்கள் தன்னை நம்பி வந்த பெண்ணை அனுபவித்து விட்டு அவளுடைய கையில் ஒரு குழந்தையைக் கொடுத்து விடுவதுடன் அவளிடம் சண்டையிட்டு அவளை அவளுடைய தாய் வீட்டிற்கு அனுப்பி விடுகிறார்கள்.
இதன் பின்பு அவர்கள் அப்பெண்ணுடைய நிலையையும் அக்குழந்தையின் நிலையையும் எண்ணிப் பார்ப்பதில்லை. யாரோ, எவரோ என்று கண்டும் காணமால் இருந்து விடுகிறார்கள். இவ்வாறு பிரச்சனைகள் ஏற்படும் போது மார்க்கம் கூறும் வழிமுறைகளை கடைப்பிடிப்பதில்லை.

நாங்கள் உண்மை முஸ்லிம்கள் அல்லாஹ்வையும் நபி (ஸல்) அவர்களையும் நேசிக்கும் உண்மை விசுவாசிகள் என மார் தட்டிக் கொள்ளும் பல முஸ்லிம்கள் பெண்களுக்கு எதிரான பலவிதமான கொடுமைகளைப் புரிவதோடு அவற்றுக்குத் துணை போவதைப் பார்க்கும் போது நெஞ்சு பொறுக்கவில்லை. அந்த அளவுக்குக் கொடிய கொடுமை கொடி கட்டிப் பறக்கிறது. இதையெல்லாம் கவனிக்கும் போது இவர்கள் இறைவனையும் இறுதி நாளையும் நம்பியவர்களா? என சந்தேகப்பட வேண்டி உள்ளது. அந்த அளவுக்குக் கொடுமைகள் புரிகிறார்கள்.
பெண்ணுக்கு மட்டுமல்ல! பெண்ணைப் பெற்றவர்களுக்கும் அவர்கள் மண்டை ஒட்டை மண்ணில் கொண்டு வைக்கும் வரை பிரச்சனை ஒய்ந்த பாடில்லாமல். நீண்டு கொண்டே செல்கிறது

இருண்ட காலமான அய்யாமுல் ஜாஹிலிய்யா காலத்தில் பெண்கள் கீழ்த் தரமாகவும் இழிவாகவும் நடத்தப் பட்டார்கள். இஸ்லாம் வந்து அவற்றைத் தகர்த்து தரை மட்டமாக்கி பெண்களுக்குரிய உயர்வுகளையும் உரிமைகளையும் கொடுத்து உலகை வியக்கச் செய்தது. பெண்ணுலகை விழிக்கச் செய்தது.
ஆனால் இன்று பெரும்பாலான முஸ்லிம்கள் தலை கீழாக மாறி அறியாமைக் கால பழக்க வழக்கத்தையும் மிஞ்சும் வகையில் அதற்கும் மேலாக, மிக மோசமான நிலைக்குச் சென்று விட்டார்கள். ஜாஹிலிய்யா (அறியாமை)க்காரர்கள் கூட பிறந்த குழந்தைகளை புதைக்கின்ற கெடுமையைத் தான் செய்தார்கள். ஆனால் இவர்கள் அதை விடக் கொடிய காரியத்தையல்லவா செய்கிறார்கள். அது என்ன கொடிய கொடுமை? அதுதான் மனித சமூக வைரஸ் வரதட்சணை வன்கொடுமை.
மற்ற மாபாதகச் செயல்கள் அந்த அறியாமைக் கால மக்களிடம் மலிந்திருந்தாலும் பெண் சமுதாயத்தை சீரழிக்கின்ற சமூகக் கொடுமையாகிய வரதட்சணைக் கொடுமையை அவர்கள் செய்திடவில்லை. அவர்கள் கூட செய்யாத இந்த வரதட்சணை வன் கொடுமையை இஸ்லாமிய பெயர் தாங்கிகளான ஜமாஅத் பெரியவர்களும், வரதட்சணையின் தீமையை பிற மக்களிடம் முறையாகப் போதிக்கக் கடமைப்பட்டுள்ள மார்க்கமறிந்த ஆலிம்களும் சேர்ந்து இந்தக் கொடுமையை அரங்கேற்றுவது தான் ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.
இப்படிப்பட்ட ஆலிம்களும் சமூகப் பெரியோர்களும் பெண்களுக்கு எதிராக நடக்கும் உரிமை மீறல்களுக்கும், அக்கிரமங்களுக்கும் எதிராக எப்படி குரல் கொடுப்பார்கள்? குரல் கொடுப்பவர்களையும் குரல் கொடுக்கத் தூண்டுபவர்களையும் தடுப்பதில் திறம்பட செயல் படுகிறார்களே தவிர பெண்களுக்கு ஒரு போதும் நியாயத்தைப் பெற்றுத் தர மாட்டார்கள்.

இஸ்லாம் நமக்கு கிடைத்த அரியதோர் பொக்கிஷமாகவும் மாபெரும் பாக்கியமாகவும் உள்ளது. இப்படிப்பட்ட இந்த இஸ்லாத்தை கடைப்பிடிக்காமல் இருந்ததற்கு அவர்கள் எல்லோரும் அல்லாஹ்விடம் பதில் சொல்லியே தீரவேண்டும்.

திருமணமென்பது வெறும் மகிழ்ச்சியும் குதூகலமும் மட்டுமன்று. மாறாக அது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே பாசப் பிணைப்பையும் கணவனுடைய தேவையை மனைவி நிவர்த்தி செய்வதும் மனைவியுடைய தேவையை கணவன் நிவர்த்தி செய்வதுமாகும். பெண்ணுடைய நலத்திற்கு முழுவதுமாக கணவன் பொறுப்பேற்றுக் கொள்ளும் ஒரு உறுதியான ஒப்பந்தமாகும். இதை அவன் அல்லாஹ் முன்னாலும் அவையோர் முன்னாலும் ஒப்புக் கொண்டேன் என்று கூறி கொடுக்கும் ஓர் உறுதிமொழியாகும். இதைக் கீழ் வரும் குர்ஆன் வசனம் நமக்கு விளக்கிச் சொல்கிறது

உங்களிடம் கடுமையான உடன்படிக்கையை அவர்கள் எடுத்து, நீங்கள் ஒருவர் மற்றவருடன் இரண்டறக் கலந்திருக்கும் நிலையில் எப்படி நீங்கள் அதைப் பிடுங்கிக் கொள்ள முடியும்? (அல் குர்ஆன் 4:21)

சிறிய விஷயத்திற்காகவெல்லாம் சண்டை போடாமல் பெண்ணிடத்தில் குறைகள் தென்பட்டால் அதைப் பொறுத்துக் கொள்வது தான் நல்லது. அதன் மூலம் வேறு ஏதோ ஒரு வகையில் நல்ல பலனை பின்னால் அல்லாஹ் ஏற்படுத்துவான் என்று பொறுத்து நல்ல முறையில் மனைவியரிடம் நடந்து கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிடுகிறது. அதுமட்டுமல்லாமல் பெண்களிடம் ஆண்கள் முறையாக நடந்து கொள்ள வேண்டும் என்று கட்டளையும் குர்ஆனும் ஹதீஸும் சொல்கிறது

நம்பிக்கை கொண்டோரே! பெண்களை வலுக்கட்டாயமாக அடைவது உங்களுக்கு அனுமதி இல்லை. அவர்களுக்கு நீங்கள் வழங்கியதில் எதையும் பிடுங்கிக் கொள்வதற்காக அவர்களைத் துன்புறுத்தாதீர்கள்! அவர்கள் வெளிப்படையான வெட்கக் கேடானதைச் செய்தால் தவிர. அவர்களுடன் நல்ல முறையில் குடும்பம் நடத்துங்கள்! நீங்கள் அவர்களை வெறுத்தால், நீங்கள் வெறுக்கும் ஒன்றில் அல்லாஹ் ஏராளமான நன்மைகளை அமைத் திருப்பான். (அல்குர்ஆன் 4:19)

நம் மனைவிடம் கனிவாகப் பேச வேண்டும், நம் தோற்றத்தையும் செயல்களையும் இயன்ற வரை அழகிய வடிவில் வைத்துக் கொள்ள வேண்டும். நம் மனைவியர் நம்மிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென நாம் நினைப்பது போல் நாம் அவர்களிடமும் நடந்து கொள்ள வேண்டும்.

அந்தப் பெண்களுக்குக் கடமைகள் இருப்பதைப் போன்றே நியாயமான உரிமைகளும் அவர்களுக்கு உண்டு என அல்லாஹ் கூறுகிறான்.
"இறை நம்பிக்கை கொண்ட ஓர் ஆண் இறை நம்பிக்கையுள்ள ஒரு பெண்ணை (முழுமையாக) வெறுத்து ஒதுக்க வேண்டாம். அவளிடமிருந்து அவர் ஒரு குணத்தை வெறுத்தாலும் மற்றொரு குணத்தைக் கண்டு திருப்தி கொள்ளட்டும்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலீ)
நூல்: முஸ்லிம் 2915
பெண்கள் விஷயத்திலும் அவர்களின் உரிமையைப் பேணும் விஷயத்திலும் ஆண்கள் மிகவும் கவனமற்றவர்களாக, அலட்சிய மானவர்களாக இருக்கிறார்கள். அதிலும் கணவன்கள் தம் மனைவியர்கள் விஷயத்தில் மிகவும் அலட்சியமாகவே ஏனோ தானோ என இருக்கிறார்கள். சிலர் வரம்பு மீறி மோசமாக நடந்து கொள்கிறார்கள். இதற்குக் காரணம் அல்லாஹ்வைப் பற்றிய அச்சம், மறுமை பயம், இஸ்லாமிய அறிவு ஆகியவை அவர்களிடத்தில் இல்லாததேயாகும்.
மேலும் மதரஸாக்களில் இஸ்லாத்தை அதன் தூய்மையான முறையில் கற்றுத் தராததாலும் நபி (ஸல்) அவர்களின் தூய்மையான சொல், செயல், அங்கீகாரத்தை மட்டுமே போதிக்காமல் கண்ட கண்ட கதை கப்ஸாக்ளைப் போதிப்பதாலும் இவ்விளைவுகள் ஏற்படுகிறன.

மேலும் இஸ்லாத்திற்கு மாற்றமாக நடப்பவர்கள் யாராகயிருந்தாலும் தாட்சனியமில்லாமல் கண்டிப்பவர்கள் இல்லாதது மற்றும் ஒரு காரணமாகும். ஒரு சிலர்கள் மட்டும் கண்டிப்பதால் போதிய பலனில்லாமல் போய்விடுகிறது.
கணவன் மனைவிடம் எப்படி நடந்திட வேண்டும்? குறிப்பாகப் பெண்கள் விஷயத்தில் மார்க்கம் எப்படிப் போதிக்கிறது என்பதைப் பற்றி பார்ப்போம்
மனைவியிடம் சிறந்தவரே மனிதரில் சிறந்தவர் பொதுவாக கணவன்மார்கள் தம் மனைவியிடம் காட்ட வேண்டிய மென்மையையும் பாசத்தைûயும் அவளிடம் காட்டாமல் பிறரிடம் காட்டுகிறார்கள். ஊருக்கெல்லாம் நல்லது செய்து நல்லவன் என்ற பட்டத்தை வாங்குவான். ஆனால் தன்னுடைய மனைவியிடம் மிகவும் மோசமான மனிதனாக நடந்து கொள்வான். இப்படிப் பட்டவர்கள் எவ்வளவு தான் ஊர் உலகத்திடம் நல்ல பெயர் வாங்கினாலும் தன் மனைவியிடம் நன்முறையில் நடந்து கொள்ளாவிட்டால் அவன் சிறந்தவனாக முடியாது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

"இறை நம்பிக்கை கொண்ட வர்களில் முழுமையான நம்பிக்கை கொண்டவர் அவர்களில் நற்குணம் கொண்டவரே! உங்களில் சிறந்தவர் உங்கள் மனைவியரிடம் நற்பண்பால் சிறந்து விளங்குபவரே!” என்று நபி(ஸல்) அவரகள் கூறினார்கள்
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: திர்மதி 1082
திருமணம் என்பது வெறும் உடல் சுகத்திற்காக மட்டும் நடத்தப்படுவது கிடையாது. மாறாக திருமணம் என்றாலே இரு மனங்கள் இணைந்து ஒருவரையொருவர் புரிந்து கொண்டு வாழ்வதாகும். இதில் யாரும் யாருக்கும் அடிமையில்லை. கணவன் உண்ட பின்பு அவன் வைத்த மீத உணவைத் தான் மனைவி உண்ண வேண்டும் என்று எழுதப்படாத சட்டமாக இன்று வழக்கில் நடைமுறைப்படுத்தப்படுகிறது. கணவனுடன் சேர்ந்து உண்ணுவதை பெரும் குற்றமாகப் பாவிக்கிறார்கள்.

இன்னும் சில கணவன்மார்கள் வெளியில் தான் விரும்பும் உணவை உண்டு விட்டு வீட்டிற்கு வருவார்கள். வீட்டில் இவனுக்காகக் காத்திருக்கும் மனைவியோ வீட்டில் உள்ள பழைய உணவை உண்பாள். தான் உண்டதை தன் மனைவிக்கும் வழங்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு இல்லை. மனைவியை உணர்வுகள் அற்ற ஆடு மாடுகளை போன்று நடத்துகிறார்கள். கணவனுக்கு மனைவி எந்த விதத்திலும் இளைத்தவள் இல்லை. அவன் உண்ணக் கூடியது பிரியாணியாக இருந்தாலும் பழைய கஞ்சியாக இருந்தாலும் அதில் மனைவியையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது.
உண்ணும் போதும், உடுத்தும் போதும் மனைவியை விட்டு விடாதீர்கள். மனைவியிடம் வெறுப்பை வீட்டிலே தவிர வேறெங்கும் வெளிப்படுத்தாதீர்கள்.
அறிவிப்பாளர்: முஆவியா (ரலி)
நூல்: அஹ்மத் 19160
ஒரு மனிதர் நபியவர்களிடம் "மனைவிக்குக் கணவன் செய்ய வேண்டிய கடமைகள் என்ன?” என்று கேட்டார் அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நீ உண்ணும் போது அவளுக்கு உணவளிப்பதும் நீ அணியும் போது அவளுக்கு அணிவிப்பதும் (கண்டிக்கும் போது) முகத்தில் அடிக்காதிருப்பதும் கெட்ட வார்த்தைகளைப் பயன்படுத்தாமல் இருப்பதும் வீட்டில் தவிர மற்ற இடங்களில் வெறுக்காமல் இருப்பதும் ஆகும்” என்று கூறினார்கள்
அறிவிப்பவர்: முஆவியா பின் ஹைதர் (ரலி)
நூல்கள்: அபூதாவூத் 1830, அஹ்மத் 19162

பெண்களும் சாமானியர்களல்ல. அவர்களும் தங்களது கை, கால் வாயை வைத்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டார்கள்.

முகத்தில் அடிக்கக் கூடாது என வைராக்கியம் உடையவனைக் கூட முகத்தில் பளார் பளார் என விளாசித் தள்ளும் அளவுக்குக் கோபத்தை ஏற்படுத்துவார்கள். எனினும் அதில் ஆண்கள் நிதானத்தையே கடைப் பிடிக்க வேண்டும். காரணம் பெண்கள் கோணலான, வளைந்த விலா எலும்பால் படைக்கப்பட்டவளன்றோ?

உங்கள் மனைவிக்கு உணவை ஊட்டி விடுங்கள்

திருமண வாழ்வில் ஒருவருக்கொருவர் பாசமாக நடந்து கொண்டால் தான் அவ்வாழ்வு இனிக்கும். முகத்தை திருப்பிக் கொண்டு செல்வதினால் வெறுப்புகள் அதிகமாகும். எனவே பாசத்தை ஏற்படுத்தும் முகமாக நபி (ஸல்) அவர்கள் கணவன்மார்களை தன் மனைவிமார்களுக்கு உணவு ஊட்டி விடுவது கூட தர்மம் என்று கூறுகிறார்கள். சமுதாயத்தில் இந்த தர்மத்தைச் செய்தவர்கள் எத்தனை நபர்கள் இருக்கிறார்கள்?.

"அல்லாஹ்வின் திருப்தியை மட்டுமே நாடி நீர் எதைச் செலவு செய்தாலும் அதற்காகக் கூலி வழங்கப்படுவீர். உமது மனைவியின் வாயில் நீர் ஊட்டும் உணவு உட்பட” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸஃத் பின் அபீவக்காஸ் (ரலி)
நூல்: புகாரி 56

தாறுமாறாக அடிக்க வேண்டாம்

மனிதர்கள் என்றால் தவறு ஏற்படவே செய்யும். பெரிய தவறு ஏற்பட்டால் பரவாயில்லை. சின்ன தவறுக்கும் பெரிய தண்டனை கொடுத்து அரக்கத்தனமாக நடந்து கொண்டு, இதைப் பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாத, அலட்டிக் கொள்ளாத ஜென்மங்களும் இருக்கிறார்கள்

பாருங்களேன்! ரசத்தில் உப்பு போட வில்லை என்பதற்காக மனைவியைக் கூப்பிட்டு அகப்பையால் ஓங்கி அடி கொடுக்கிறார் கணவர். அல்லாஹ் தான் இவர்களையும் இவர்களைப் பார்த்துக் கொண்டிருப்பவர்களையும் காப்பாற்ற வேண்டும். இது போல ஆனத்துடன் ரசமும் ஏன் சேர்த்து சமைக்கவில்லை? என்பதற்காக தாண்டவம் ஆடும் கணவர்களும் உண்டு.
கணவன் மனைவிக்குள் பிரச்சனைகள் எழும் போது தவறு மனைவியின் தரப்பில் ஏற்பட்டிருந்தால் அவளைக் கண்டிப்பதற்கு, கணவனுக்கு அனுமதி உள்ளது. பலத்த காயங்கள் ஏற்படாதவாறு முகத்தில் அடிக்காமல் அவர்களைக் கண்டிக்கலாம். இது கூட அவர்கள் ஏதும் தவறு செய்தால் தான். ஆனால் இன்று கணவன் மனைவி மீது கோபம் கொண்டு விட்டால் கை, கால் தெரியாமல் கண்ட இடங்களில் கடுமையாக அடித்து விடுகிறான். கோபத்தின் ஆரம்பம் பைத்தியம், அதன் இறுதி கைசேதம் என்று கூறுவதைப் போல் நன்கு அடித்து விட்டுப் பின்பு வருந்துகிறார்கள். இதனால் இருவருடைய உறவுகளும் சில வேளைகளில் அறுந்து விடுகிறது. இதற்காகத் தான் நபி (ஸல்) அவர்கள் ஆண்களுக்குப் பெண்கள் விஷயத்தில் இந்த அருமையான யோசனையை கூறியுள்ளார்கள்.

"நீங்கள் உங்கள் மனைவியரை அடிமையைப் போல் அடிக்க வேண்டாம். பிறகு அதே நாளின் இறுதியில் அவர்களுடனேயே உறவு கொள்வீர்கள்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸம்ஆ (ரலி)
நூல்: புகாரி 5204

கேவலமாகத் திட்ட வேண்டாம்

கணவன் மனைவியைத் திட்டும் போதும், ஒரு வரம்பு இல்லாமல் கொச்சையான வார்த்தைகளால் மனம் புண்படும் படி பேசி விடுகிறான். சில கணவன்மார்கள் மனைவியுடைய கற்பைப் பற்றியே அவதூறாக அவளை நேருக்கு நேராக வைத்துக் கொண்டு கண்டபடி ஏசுகிறார்கள். இதுவும் அவர்களுடைய இல்வாழ்கைக்கு பெரும் கேடாக வந்து அமைகிறது. எனவே நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு மோசமான வார்த்தைகளை யாரிடத்தில் கூறினாலும் அது பெரும் தண்டனையைப் பெற்றுத் தரும் என்று எச்சரித்துள்ளார்கள்.
"ஒரு அடியார் பின் விளைவைப் யோசித்துப் பார்க்காமல் ஒன்றைப் பேசி விடுகிறார். அதன் காரணமாக அவர் (இரு) கிழக்குத் திசைகளுக்கிடையே உள்ள தொலைவை விட அதிகமான தூரத்தில் நரகத்தில் விழுகிறார்” என்று நபியவர்கள் கூறினாôர்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 6477

மனைவியை அலட்சியப் படுத்துபவன் பாவி

இன்று பலர் தாங்கள் அல்லாஹ்வின் பாதையில் செல்வதாக எண்ணிக் கொண்டு தன் குடும்பத்தைத் தெருவில் விட்டு விட்டு எல்லாம் அல்லாஹ் பார்த்துக் கொள்வான் என்று கூறி புறப்பட்டு விடுகிறார்கள். இவர்கள் நன்மை செய்வதாக எண்ணி தீமையை சம்பாதித்துக் கொள்கிறார்கள். குடும்பத்தைக் கவனிப்பது அல்லாஹ்வின் பாதை என்பதை இவர்கள் புரிந்து கொள்ளவில்லை.
மனைவி மக்களிடத்தில் உலக இன்பங்களைத் தவிர வேறு எதுவும் நன்மை இல்லை என்று நினைக்கின்றானர். பள்ளிவாசலிலே கிடப்பதை விட குடும்பத்தின் தேவைகளை நிவர்த்தி செய்வதே முக்கியம். மனைவி மக்களைக் கவனிக்காது வணக்க வழிபாடுகளில் ஈடுபடுபவர்கள் நிச்சயம் இறைவனை நெருங்க முடியாது.
நல்ல மனிதனாக, இறைவனுக்குக் கட்டுப்பட்டு நடப்பவனாக அவன் இருந்தாலும் தன் குடும்பத்தை நல்ல முறையில் கவனிக்காவிட்டால் அவனைப் பாவி என்று நபி (ஸல்) அவர்கள் உணர்த்தியுள்ளார்கள்

"தன் பொறுப்பில் உள்ளவர்களை (கவனிக்காமல்) வீணாக்குவது அவன் பாவி என்பதற்குப் போதுமானதாகும்” என்று நபியவர்கள் சொன்னார்கள்.
அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலீ)
நூல்: அபூதாவூத் 1442

உள்ளதை வைத்துதிருப்தி கொள்

எவ்வளவு தான் நாம் பெண்களுக்கு உபதேசங்களைச் செய்தாலும் அவர்களைக் கண்டித்தாலும் அவர்கள் பிழை செய்யாமல் இருப்பதில்லை. அல்லாஹ் இயற்கையாகவே அவர்களை இவ்விதத்தில் படைத்துள்ளான். எனவே எந்தக் கணவனும் தன் மனைவி முழுக்க முழுக்க தவறே செய்யாமல், தான் நினைப்பது போல் எல்லாம் நடக்க வேண்டும் என்று எண்ணக் கூடாது. வாழ்வில் நெழிவுகளும் சுழிவுகளும் ஏற்படத் தான் செய்யும். சண்டை பிரச்சனைகள் வந்து பிறகு இருவரும் சுமூகமாக இணைவது எத்தனை எத்தனை சுகம்?

பெண் (வளைந்த) விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டிருக் கிறாள். ஒரே (குண) வழியில் உனக்கு அவள் ஒருபோதும் இணங்கமாட்டாள் அவளை நீ அனுபவித்துக்கொண்டே இருந்தால் அவளின் கோணல் இருக்கவே அனுபவிக்க வேண்டியது தான். அவளை நீ (ஒரேயடியாக) நிமிர்த்தப்போனால் அவளை ஒடித்தே விடுவாய். அவளை ஒடிப்பது என்பது அவளை மணவிலக்கச் செய்வதாகும் என நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள்
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 2913
நபியவர்கள் தமது மனைவியர்களில் ஒருவரிடம் இருந்தார்கள். மூமின்களின் அன்னையரில் ஒருவர் பணிப்பெண் ஒருவரிடம் உணவுள்ள தட்டு ஒன்றைக் கொடுத்தனுப்பினார்கள். வீட்டிலிருந்த நபி (ஸல்) அவர்களின் (மற்றொரு) மனைவி அந்தப் பணிப் பெண்ணின் கையைத் தட்டி அதை உடைத்து விட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் அந்த உடைந்த தட்டை ஒன்று சேர்த்து உணவை அதில் எடுத்து வைத்து (தம் தோழர்களிடம்) உண்ணுங்கள் என்று கூறினார்கள். அவர்கள் உண்டு முடிக்கும் வரை தட்டையும் அதைக் கொண்டு வந்த பணிப் பெண்ணையும் அங்கேயே நிறுத்திக் கொண்டார்கள். (அனைவரும் உண்டு முடித்த பின்பு) உடைந்த தட்டைத் தம்மிடமே வைத்துக் கொண்டு (உடையாத) நல்ல தட்டைக் கொடுத்து விட்டார்கள்.
அறிவிப்பாளர்: அனஸ் (ரலீ)
நூல்: புகாரீ 2481

ஐஸ் வைத்த அண்ணலார்

பொதுவாக பெண்கள் நம்மைத் துருவித் துருவி விசாரிப்பார்கள். தன் கணவன் தனக்கு மட்டும் தான் சொந்தம் என்று அவர்கள் கருதுவதே இதற்குக் காரணம். நாம் நினைத்துக் கூட பார்த்திருக்காத சந்தேகங்கள் எல்லாம் அவர்களுக்குத் தோன்றும். நம்மேல் உள்ள பாசம் தான் இதற்கு காரணம். என் கணவன் எப்படியும் செல்கிறான் என்று ஒரு மனைவி இருந்தால் அவள் தன் கணவன் மீது நேசம் அற்றவளாக இருக்கிறாள் என்று அர்த்தம். எனவே இதுபோன்ற கால கட்டங்களில் ஆண்களுக்குக் கோபம் வருவது நியாயமாக இருந்தாலும் கூட கோபப்படாமல் அவர்களை சமாதானம் செய்வது முக்கியம்.

நபி (ஸல்) அவர்கள் பல மனைவியரை மணம் முடித்திருந்ததால் இது போன்ற நிலை அவர்களுக்கும் ஏற்பட்டது. அப்போது அவர்கள் மனைவியை சமாளித்தார்களே தவிர அதட்டவோ, அடிக்கவோ, கோபப் படவோ இல்லை.
(ஒரு முறை கடுமையான தலைவலியினால் சிரமப்பட்ட) ஆயிஷா (ரலி) அவர்கள், "என் தலைவலியே!” என்று சொல்ல, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நான் உயிரோடு இருக்கும் போதே அது (இறப்பு) ஏற்பட்டு விட்டால் உனக்காக நான் (அல்லாஹ்விடம்) பாவமன்னிப்பு கோரி உனக்காக (மறுமை நலன் கோரி) பிரார்த்திப்பேன்” என்று சொன்னார்கள். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், "அந்தோ! அல்லாஹ்வின் ஆணையாக! நான் (விரைவில்) இறந்து போய் விடுவதையே நீங்கள் விரும்புகிறீர்கள் என்று நான் எண்ணுகிறேன். நான் இறந்து விட்டால் அந்த நாளின் இறுதியிலேயே சென்று நீங்கள் உங்களுடைய (மற்ற) துணைவியரில் ஒருவருடன் மணவறை காண்பீர்கள். (என்னை மறந்து விடுவீர்கள்)” என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள், "இல்லை (உனக்கு ஒன்றும் ஆகாது) நான் தான் (இப்போது), "என் தலைவலியே!’ என்று சொல்ல வேண்டியுள்ளது. (உண்மையில் உன் மீதும் உன் குடும்பத்தார் மீதும் அதிக மதிப்பு வைத்துள்ளேன். அதனால் தான் உன் தந்தை) அபூபக்ருக்கும் அவருடைய புதல்வருக்கும் ஆளனுப்பி (வரவழைத்து எனக்குப் பின் என் பிரதிநிதியாக செயல்படும் படி) அறிவித்து விட விரும்பினேன். (தாம் விரும்பியவரை கலீஃபா என) யாரும் சொல்லி விடவோ (தாமே கலீஃபாவாக ஆக வேண்டும் என) எவரும் ஆசைப்பட்டு விடவோ கூடாது என்பதற்காகவே (அவ்வாறு விரும்பினேன்) ஆனால் பின்னர் "(அபூபக்ரைத் தவிர வேறொருவரை பிரதிநிதியாக்க) அல்லாஹ் அனுமதிக்க மாட்டான். இறை நம்பிக்கையாளர்களும் (அதை) ஏற்க மாட்டார்கள்’ என (எனக்கு நானே) சொல்லிக் கொண்டேன். (ஆகவே தான் அறிவிக்கவில்லை)” என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: காசிம் பின் முஹம்மத் பின் அபீபக்ர்
நூல்: புகாரி
நாம் ஒன்றை நினைத்துச் சொன்னால் அவர்கள் வேறோன்றை நினைத்துக் கொண்டு பேசுவார்கள். அந்த நேரத்தில் கோபப்படாமல் அவர்களைக் குளிரும் வகையில் நம் பேச்சை புத்திசாலித் தனமாக அமைத்துக் கொள்ள வேண்டும்.
ü மாபெரும் செல்வம்

"இவ்வுலகம் முழுவதும் பயனளிக்கும் செல்வங்களே! பயனளிக்கும் இவ்வுலகச் செல்வங்களில் மிகவும் மேலானது நல்ல மனைவியே!” என நபியவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு அல்ஆஸ்
நூல்: முஸ்லிம் 2911
பெண்கள் விஷயத்தில் நீங்கள் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். அல்லாஹ்வின் அடைக்கலமாக அப்பெண்களைப் பெற்றிருக்கிறீர்கள். அல்லாஹ்வின் வார்த்தையைக் கொண்டே அவர்களின் கற்புகளை சொந்தமாக்கி இருக்கிறீர்கள். நீங்கள் வெறுக்கும் எவரையும் உங்களின் படுக்கையில் படுக்க வைக்காமல் இருப்பதே அவர்கள் உங்களுக்குச் செய்யும் கடமையாகும். அதை அவர்கள் செய்தால் காயமின்றி அவர்களை அடியுங்கள். உணவும் உடையும் வழங்குவதே நீங்கள் அவர்களுக்கு நல்ல முறையில் செய்ய வேண்டிய கடமையாகும். இது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது இறுதி ஹஜ்ஜின் போது ஆற்றிய இறுதி உரையாகும்
அறிவிப்பாளர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)
நூல்: முஸ்லிம் 2137, அபூதாவூத் 1628
ஒப்புக் கொண்டேன் என்று சபையோர் முன்னிலையில் பெண்ணைக் கரம் பிடித்த நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என எண்ணி விடாதீர்கள். அல்லாஹ்வை அஞ்சி நடந்திடுங்கள் என நபி (ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்கிறார்கள். திருமண ஒப்பந்தம் செய்யும் போதும், இன்ன பிற சமயங்களிலும், ஜும்ஆ நாளிலும் நிகழ்த்தும் சொற்பொழிவுகளில் அடிக்கடிக் கேட்கும் ஒரு வசனத்தில் அல்லாஹ் எச்சரிக்கின்றான் பாருங்கள்!

மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும், பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான். எவனை முன்னிறுத்தி ஒருவரிடம் மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உறவினர்கள் விஷயத்திலும் (அஞ்சுங்கள்!) அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 4:1)

திருமணத்தின் மூலம் ஒரு உறவு மலர்ந்து ஒரு புது வரவு குடும்பத்தில் இணைகிறது. அந்த வரவால், உறவால் இருக்கின்ற உறவுக்கும் இடர் வரக் கூடாது அதுபோல் அரும்பி வரும் புது உறவுக்கும் இடர் வரக் கூடாது என்பதையே "உறவினர்கள் விஷயத்தில் அஞ்சுங்கள்’ எனக் கூறி எச்சரிக்கை செய்யப்படுகிறது

இந்த எச்சரிக்கை மண மக்களுக்கு மட்டுமல்ல எல்லா மக்களுக்கும் தான். எப்படி இந்த எச்சரிக்கையை மணமக்கள் மறந்து விடுகிறார்களோ அது போலவே கூடியுள்ள மற்ற மக்களும் மறந்து விடுகிறார்கள். ஆனால் விருந்து என்றால் பருந்து போல் விரைந்து சென்று சாப்பிட மட்டும் மறப்பதில்லை, மறுப்பதுமில்லை தீமையின் பங்கு தீமை செய்தவர்களுக்கு மட்டுமல்ல! அதைப் பார்த்துக் கொண்டு சும்மா இருந்தவர்களுக்கும் அதை ஆதரித்தவர்களுக்கும் தான் தன்டனை உண்டு. ஒவ்வொருவருக்கும் பொறுப்பு உள்ளது. அந்தந்த பொறுப்பாளரிடமும் அவரவர்களின் பொறுப்புகள் பற்றி கேட்கப்படும். யாரையும் அல்லாஹ் விடமாட்டான். தனக்குச் சாதகமாக இருக்கும் காரியங்களுக்கு, தனக்கு ஆதாயம் கிடைக்கும் என்பதற்காக ஓடிப் போய் முன்னால் நிற்கும் ஒருவர் தீமைகள் நடக்கக் காணும் போது அதைப் போல ஓடிப் போய் தடுக்க வேண்டுமா? இல்லையா?
ஒரு பெண்ணுக்குக் கல்யாணமென்றால் ஒன்று கூடுகின்ற, பெண் வீடு என்று கூட பார்க்காமல் போய் சாப்பிடுகின்ற இவர்கள், விவகாரம் என்றால் முன் வராததேன்? களத்திற்கு வராமல் காணாமல் போவதேன்? "விவகாரம் வரும் போது எங்க போனாய்? இரு வீட்டார்கள் சார்பாகவும் நன்மையென்றால் ஃபாத்திஹா ஓதிய நீங்கள், ஆமீன் போட்ட நீங்கள், பஞ்சாயத்தென்றால் பறந்து, மறந்து போய் விட்டீர்களே ஏன்னப்பா ஏன்?’ என அல்லாஹ் கேட்காமல் விட மாட்டான். தீமைகளுக்கும் அவற்றுக்குத் தக்க கூலி கிடைக்காமல் வெறுமனே சும்மா விடப்படமாட்டாது.

உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளரே!

உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர் ஆவார். தன் பொறுப்புக்கு உட்பட்டவை பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆட்சித் தலைவரும் பொறுப்பாளரே! தன் தன் குடிமக்கள் பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆண்மகன் (குடும்பத் தலைவன்) தன் மனைவி மக்களின் பொறுப்பாளன் ஆவான். தன் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் பற்றி அவன் விசாரிக்கப்படுவான். பெண் (மனைவி) தன் கணவனின் வீட்டிற்கும் அவனுடைய குழந்தைகளுக்கும் பொறுப்பாளி ஆவாள். தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். பணியாள் தன் எஜமானின் உடமைகளுக்குப் பொறுப்பாளியாவான். அவனும் தன் பொறுப்புக்கு உட்பட்வை குறித்து விசாரிக்கப்படுவான்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலீ)
நூல்: புகாரீ 5200
கணவன் மனைவிக்குச் செய்ய வேண்டிய விஷயங்களைப் பார்த்தோம். இனி மனைவி கணவனுக்குச் செய்ய வேண்டியவை என்ன என்பதை காண்போம் .

மனைவியின் கடமைகள்

கணவனின் வீட்டில் நடக்கும் கொடுமைகள் காரணமாக கணவனிருந்தும் விதவைகளாகவாழும் பெண்களின் நிலையையும், மனைவியிடம் கணவன் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என மார்க்கம் வலியுறுத்தும் விஷயங்களையும் கடந்த இதழில் கண்டோம்.

குடும்ப வாழ்வில், ஆண்கள் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுங்குகளை மட்டும் இஸ்லாம்கற்றுத் தரவில்லை. பெண்களுக்கும் உரிய அறிவுரைகளை வழங்குகின்றது. அவர்களும்தக்க முறையோடு நடந்திட வேண்டும் என்பதையும் மார்க்கம் கூறவே செய்கிறது.

கட்டுப்பட்டு நடத்தல்

தம்பதியர் கடமைகளில் மிகவும் முக்கியமானது, மார்க்கத்திற்கு முரணில்லாதமுறையில் கணவனுக்கு எல்லா வகையிலும் கட்டுப்பட்டு நடப்பது மனைவியின்கடமையாகும் இறைவன்இயற்கையிலேயே ஆண்களை வலிமை மிக்கவர்களாகப்படைத்துள்ளான். மேலும் ஆண்கள், பெண்களுக்கும் குடும்பத்திற்கும் செலவுசெய்கிறார்கள் என்ற நிலையில் ஒரு குடும்பத்தை நிர்வகிக்கும் குடும்பத் தலைவன்ஆகின்றான். எனவே பெண்கள், தங்கள் கணவருக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்.இதையே கீழ் வரும் வசனத்தில் அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

சிலரை மற்றும் சிலரை விட அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும், ஆண்கள் தமதுபொருட்களைச் செலவிடுகிறார்கள் என்பதாலும் ஆண்கள் பெண்களை நிர்வாகம்செய்பவர்கள். கட்டுப்பட்டு நடப்போரும், அல்லாஹ்வின் பாதுகாவல் மூலம் மறைவானவற்றைக் காத்துக் கொள்வோருமே நல்ல பெண்கள். பிணக்கு ஏற்படும் என்று(மனைவியர் விஷயத்தில்) நீங்கள் அஞ்சினால் அவர்களுக்கு அறிவுரை கூறுங்கள்!படுக்கைகளில் விலக்குங்கள்! அவர்களை அடியுங்கள்! அவர்கள் உங்களுக்குக்கட்டுப்பட்டு விட்டால் அவர்களுக்கு எதிராக வேறு வழியைத் தேடாதீர்கள்! அல்லாஹ்உயர்ந்த வனாகவும், பெரியவனாகவும் இருக்கிறான். (அல்குர்ஆன் 4:34)

நல்ல மனைவி சிறந்த பொக்கிஷம்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு மனிதன் பெறுகின்ற பொக்கிஷங்களிலேயே சிறந்த ஒன்றை நான் உனக்குஅறிவிக்கவா? (அவள் தான்) நல்ல மனைவியாவாள். கணவன் அவளை நோக்கினால்அவனை மகிழ்விப்பாள். அவன் கட்டளை இட்டால் கட்டுப்படுவாள். அவன் அவளிடம்இல்லாமல் இருக்கும் போது (தன்னுடைய) கற்பை அவனுக்காகப் பாதுகாத்துக்கொள்வாள்.

அறிவிப்பவர்: உமர் (ரலீ)

நூல்: அபூதாவூத் 1412

கட்டுப்படுவதன் உச்சக்கட்டம்

ஒரு மனைவி தனது கணவனுக்கு கட்டுப்படுவது எந்த அளவுக்கென்று அதன்உச்சக்கட்டத்தையே நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

நான் ஒருவருக்கு ஸஜ்தா செய்ய (சிரம் பணிய) கட்டளையிடுபவனாக இருந்திருந்தால்பெண்ணை அவள் கணவனுக்கு ஸஜ்தா செய்யுமாறு கட்டளையிட்டிருப்பேன் எனநபியவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா

நூல்: திர்மிதி 1079

ஒழுக்கம் பேணுதல்

கணவனுக்குச் செய்ய வேண்டிய கடமைகளில் முதல் அம்சம் தனது கணவனின்இடத்தில் வேறொரு ஆடவரை வைக்காமல் இருப்பதாகும். இது கணவனுக்குக் கடும்கோபத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்துவதில் முதலிடத்தை வகிக்கும் விஷயமாகும். இந்தக் கற்பு ஒழுக்கத்தைப் பேணிக் காப்பதை, பெண்மணிகள் கவனத்தில்கொள்வது மிக மிக இன்றியமையாததாகும்.

கட்டுப்பட்டு நடப்போரும், அல்லாஹ்வின் பாதுகாவல் மூலம் மறைவானவற்றைக்காத்துக் கொள்வோருமே நல்ல பெண்கள். (அல்குர்ஆன் 4:34)

தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக்கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! (அல்குர்ஆன் 24:30)

முஸ்லிமான ஆண்களும், பெண்களும்,நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும்,கட்டுப்பட்டு நடக்கும் ஆண்களும், பெண்களும், உண்மை பேசும் ஆண் களும்,பெண்களும், பொறுமையை மேற் கொள்ளும் ஆண்களும், பெண்களும், அடக்கமாகநடக்கும் ஆண்களும், பெண்களும், தர்மம் செய்யும் ஆண்களும், பெண்களும், நோன்புநோற்கும் ஆண்களும், பெண்களும், தமது கற்பைக் காத்துக் கொள்ளும் ஆண்களும்,பெண்களும், அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் ஆண்களும்,பெண்களும் ஆகியஅவர்களுக்கு அல்லாஹ் மன்னிப்பையும், மகத்தான கூலியையும் தயாரித்துள்ளான். (அல்குர்ஆன் 33:35)

"உங்கள் படுக்கையை அடுத்தவர் களுக்கு வழங்காமல் இருப்பதும், உங்கள் அனுமதிஇல்லாமல் மற்றவர்களை வீட்டில் அனுமதிக் காமல் இருப்பதும் பெண்களின் மீதுகடமையாகும்” என்று நபியவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அம்ர் பின் அல்அஹ்வஸ் (ரலீ)

நூல்: திர்மிதி 1083

அலங்காரங்களை வெளிப்படுத்தக் கூடாது

ஒழுக்கத்திற்குக் கேடு விளை விக்கும் எல்லா காரியங்களையும் இஸ்லாம் தடைசெய்கிறது. ஒரு பெண்தன் அலங்காரங்களை கணவனுக்கு மட்டுமே காட்டும்முறையில் நடந்துக்கொள்ள வேண்டும். பிற ஆடவர்களைக் கவரும் வகையில்அலங்காரங்களை வெளிப்படுத்தக் கூடாது.

தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக்கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமதுஅலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம்.தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தமதுதந்தையர், தமது கணவர்களுடைய தந்தையர், தமது புதல்வர்கள், தமது கணவர்களின்புதல்வர்கள், தமது சகோதரர்கள், தமது சகோதரர்களின் புதல்வர்கள், தமதுசகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள்,ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள்மீது) நாட்டமில்லாத பணியாளர்கள்,பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம்தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப் படுத்த வேண்டாம்.அவர்கள் மறைத்திருக்கும்அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காகதமது கால்களால் அடித்து நடக்கவேண்டாம். நம்பிக்கை கொண்டோரே!அனைவரும் அல்லாஹ்வை நோக்கித்திரும்புங்கள்! இதனால் வெற்றி அடைவீர்கள்.

(அல்குர்ஆன் 24:31)

நபியே! (முஹம்மதே!) உமது மனைவியருக்கும், உமது புதல்வியருக்கும், (ஏனைய)நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளைத் தொங்கவிடுமாறு கூறுவீராக!அவர்கள் (ஒழுக்கமுடைய பெண்கள் என்று) அறியப்படவும், தொல்லைப்படுத்தப்படாமல்இருக்கவும் இது ஏற்றது. அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்றஅன்புடையோனாகவும் இருக்கிறான்.

(அல்குர்ஆன் 33:59)

மேற்கூறிய வசனங்கள் பெண்களின் ஒழுக்கம் தொடர்பாக அறிவுரை கூறும்வசனங்களாகும்.

பெண்கள் அலங்காரத்தில் வெளிப்படையாகத் தெரிபவற்றைத் தவிர வேறு எதையும்வெளிப்படுத்திக் காட்டக் கூடாது.

அன்னியப் பெண்ணொருத்தியிடம் எதையெல்லாம் பார்த்து ஒரு ஆண் ரசிக்கவிரும்புவானோ அவை கண்டிப்பாகமறைக்கப்பட வேண்டும். காரணம் அவளைமுழுமையாக ரசிக்கும் உரிமை அவளது கணவனுக்கு மட்டுமே உரியதாகும்.முறையின்றி பார்ப்பவனுக்குஇதில் எந்த உரிமையும் கிடையாது

ஒழுக்க வாழ்வில் மிகவும் மோசமாகஉலகம் பின்னடைந்து உள்ளதற்கு முதல் காரணம்பெண்ணின் அரைகுறை ஆடைகளும் ஆன்களைச் சுண்டி இழுக்கும்அலங்காரங்களுமேயாகும்.

பெண்கள் தங்கள் முகங்களையும் முன் கைளையும் தவிர மற்ற பாகங்களைஅந்நியஆண்களிட மிருந்து மறைத்துக் கொள்ள வேண்டும். புர்கா அணிதல் வேண்டும்

சில பெண்கள் புர்கா அணியாமல் மெல்லிய துணிகளை ஆடையாக அணிந்து கொண்டுவெளியில் நிற்பதும், வெளியில் செல்வதும் இஸ்லாமிய ஒழுக்க அறிவுரைக்குமுரணாக செயலாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரண்டு சாராரை (இன்னும்) நான்கண்டதில்லை. ஒரு சாரார், அவர்களிடம் மாட்டு வால்களைப் போன்ற சாட்டைகள் இருக்கும். அவற்றைக் கொண்டு மக்களை அடித்துக் கொண்டிருப்பர்.

இன்னொரு சாரார் பெண்கள் ஆவர். இவர்கள் ஆடை அணிந்தும் நிர்வாணமாகஇருப்பார்கள். தளுக்கு நடை போட்டு ஆண்களை வளைத்துப் போடுவார்கள். அவர்களின்தலைகள் ஒட்டகத்தின் திமில்களைப் போன்று (கொண்டை போடப்பட்டு) இருக்கும். எவ்வளவோ தொலைவுக்கு சொர்க்கத்தின் நறுமணம் வீசும். ஆனால் இவர்கள்அதன்வாடையைக் கூட நுகர மாட்டார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 3971

எனவே எல்லா வகையிலும் இஸ்லாத்தின் அடிப்படையில் குர்ஆன் மற்றும் நபி (ஸல்)அவர்களின் அழகிய முன் மாதிரியின் பிரகாரம் நடந்து இவ்வுலகத்திலும் மறுஉலகத்திலும்நிம்மதியாக வாழ்ந்து நல் வழி பெறுவோமாக!

About Me

இறைவனின் திருப்பெயரால்…

  • இந்த தளத்தில் உள்ள செய்திகள் ஏகத்துவ கொள்கையை சொல்லும் பல்வேறு இணையதளத்தில் இருந்து எடுத்து தொகுக்கப்பட்டவை (ஆன்லைன்பீஜே, ஆன்லைன் டிஎன்டிஜே, etc).
  • இதில் தவறான கருத்துகள் ஏதேனும் இருப்பின் அதை Facebook page https://www.facebook.com/Thowheed.org என்ற முகவரிக்கு அனுப்பி தெரிவிக்கலாம்.
  • உங்கள் ஆக்கங்களையும்
  • Facebook page https://www.facebook.com/Thowheed.org என்ற முகவரிக்கு
  • என்ற முகவரிக்கு அனுப்பவும். ஆசிரியர் சரிபார்த்தபின் வெளியிடப்படும்.
  • இந்த தளத்திற்கும் எந்த அமைப்பிற்கும் எந்த தொடர்பும் கிடையாது.

You may want to read

Follow Us

Sign up for our Newsletter

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit