குரங்கு விபச்சாரம் செய்ததாக புகாரியில் ஹதீஸ் உள்ளதா? அது சரியானதா?

குரங்கு விபச்சாரம் செய்ததாக புகாரியில் ஹதீஸ் உள்ளதா? அது சரியானதா?

புகாரியில் அப்படி ஒரு ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அது ஏற்கத்தக்க ஹதீஸ் அல்ல. அந்த ஹதீஸ் இதுதான்:

صحيح البخاري

3849 – حَدَّثَنَا نُعَيْمُ بْنُ حَمَّادٍ، حَدَّثَنَا هُشَيْمٌ، عَنْ حُصَيْنٍ، عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ، قَالَ: «رَأَيْتُ فِي الجَاهِلِيَّةِ قِرْدَةً اجْتَمَعَ عَلَيْهَا قِرَدَةٌ، قَدْ زَنَتْ، فَرَجَمُوهَا، فَرَجَمْتُهَا مَعَهُمْ»

அம்ர் இப்னு மைமூன் அறிவித்தார்.

அறியாமைக் காலத்தில் விபச்சாரம் புரிந்த ஒரு பெண் குரங்கைக் குரங்குகள் பல சூழ்ந்து கொண்டு கல்லெறிந்து தண்டிப்பதைக் கண்டேன். நானும் அவற்றுடன் சேர்ந்து கொண்டு கல்லெறிந்தேன்.

புகாரி 3849

பதில் :

இச்செய்தியில் ஏராளமான பொய்களும், முரண்பாடுகளும் உள்ளன.

முதலாவதாக இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சம்மந்தப்பட்ட செய்தி அல்ல. எனவே இது ஹதீஸ்களில் சேராது.

அறியாமைக் காலத்தில் அதாவது  நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நபியாக நியமிக்கப்படுவதற்கு முன்னர் நடந்ததாக இச்செய்தி அமைந்துள்ளது.

இதை அறிவிக்கும் அம்ருபின் மைமூன் என்பவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தவராக அல்லது அதற்கு முந்திய காலததவராக இருந்தால் தான் ஜாஹிலிய்யா காலத்தில் நடந்ததைப் பார்த்திருக்க முடியும்.

இவரோ நபித்தோழருக்கு அடுத்த காலத்தவர். அறியாமைக் காலத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்தாலும் அதை இவர் பார்த்திருக்க முடியாது.

அந்த வகையில் இது பொய்யான செய்தியாகிறது. நான் பார்த்தேன் என்று இவர் கூறுகிறார். இவர் அக்காலத்தில் வாழவே இல்லை எனும் போது அறிவிப்பாளரை எடை போட்டு பதிவு செய்யும் புகாரி அவர்கள் இந்தப் பொய்ச் செய்தியை பதிவு செய்திருக்கக் கூடாது. அறிவிப்பாளரை எடை போடுவதில் மற்றவர்களுக்கு ஏற்படும் தவறுகள் புகாரிக்கும் ஏற்படும் என்பதற்கு இது ஆதாரமாக அமைந்துள்ளது.

பொதுவாக மார்க்கச் சட்டதிட்டங்கள் யாவும் மனிதர்களுக்கே வகுக்கப்பட்டுள்ளன. மிருகங்களுக்கு எந்தச் சட்டதிட்டமும் கிடையாது. இது எல்லோரும் அறிந்து வைத்துள்ள பொதுவான அடிப்படையாகும்.  இந்த அடிப்படைக்கு முரணான கருத்தை இந்தக் கட்டுக்கதை உள்ளடக்கியிருக்கின்றது.

குரங்களுக்கிடையே திருமண உறவு என்ற கட்டுப்பாடு இருந்ததாகவும், அதை ஒரு குரங்கு மீறியதாகவும் ஒழுக்கமுள்ள மற்ற குரங்குகள் விபச்சாரம் செய்த குரங்கைக் கல்லெறிந்து கொன்றதாகவும் கதை கூறப்படுகின்றது.

திருமணம் செய்து குடும்பம் நடத்த வேண்டும் என்ற எந்தச் சட்டமும் குரங்குகள் உட்பட எந்த மிருகத்துக்கும் கிடையாது. அவை விரும்பியவாறு இச்சையைத் தீர்த்துக் கொள்கிறது.  இதுதான் உலகத்தில் எதார்த்தமாக நடந்து கொண்டிருக்கின்றது. இதற்கு மாற்றமான இந்தச் செய்தியை அறிவுள்ளவர்கள் வடிகட்டிய பொய் என்று உடனே அறிந்து கொள்வார்கள்.

மேலும் குரங்குகள் திருமணம் செய்து வாழ்ந்தன என்று வைத்துக் கொண்டாலும் ஒரு குரங்கு தனது மனைவியான குரங்கிடம் சேர்கிறதா? மனைவியல்லாத குரங்கிடம் சேர்கிறதா என்பதை எப்படி மனிதர்கள் அறிய முடியும்?

புகாரியில் இடம் பெற்றாலும் இது பொய்யாகும். இதை நாம் அலட்சியப்படுத்தி விட வேண்டும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன