கோடை தரும் கொடைகள்

ஏகத்துவம் 2006 ஜூன்

கோடை தரும் கொடைகள்

உச்சி வெயில் அல்ல! காலை நேரத்தில் கிழக்கு ஓரத்தில் சூரியனின் சுடர் முகத்தின்சிவப்பு தகத்தகாயம் தெரியத் துவங்கிய மாத்திரத்திலேயே நிலப் பரப்பில் நெருப்புச் சூடுபற்றிக் கொள்கின்றது. அதன் பிறகு அது படிப்படியாக உச்சிக்கு வருகின்ற போது,உஷ்ணத்தின் அளவும் உச்சக்கட்டத்திற்குவந்து விடுகின்றது.

அனல் பந்தான சூரியன் அந்தி நேரத்தில் மேற்கு வானத்தில் அடைந்த பிறகும்,அடக்கமான பிறகும் அதுகிளப்பி விட்ட சூடு தணிந்திடவில்லை.

மின் விசிறிக்குக் கீழ் படுத்துஇருந்தாலும் மேனி, வியர்வை வெள்ளத்தில் மிதந்துகொண்டு இருக்கின்றது. பகல் நேரத்தில் சுட்டெரிக்கும் இந்த வெயிலில் சுருண்டுவிழுந்தவர்களின் உயிரும் பறி போய் விடுகின்றது என்றால் இதன் உக்கிரமத்தைவர்ணிக்கத் தேவை இல்லை.

சின்னஞ்சிறு குழந்தைகளின் முகத்தாமரை மலர்களில் பொக்களங்கள்! மேனிகளில்வியர்க்குருகள்! கோடையின் இந்தக் கோரத் தாக்குதலுக்கு மாணவ, மாணவியர்பலியாகி விடக்கூடாது என்பதற்காக பள்ளிகளுக்குக் கோடை விடுமுறைவிடப்படுகின்றது.

வற்றி விடும் நீர் வறண்டு விடும் ஆறு

கோடைக் கால தாக்குதலின் காரணமாகநிலத்தடி நீர் வற்றி விடுகின்றது. பாய்ந்து ஓடும்ஆறுகள் காய்ந்து வறண்டு விடுகின்றன. குளம் குட்டைகள், எட்டிய தூரம் வரை தெரியும்ஏரிகள் எல்லாம் வற்றிப் பாலைவனமாகி விடுகின்றன.

இப்படிக் கோடையின் கொடூரங்களைப்பட்டியல் போட்டுக் கொண்டே செல்லலாம்.இந்தக் கொடுமையின் ஊடே அல்லாஹ் கோடையிலும் சில அருட்கொடைகளை அருளிஇருக்கின்றான்.

கோடை தரும் கொடைகள்

கொளுத்துகின்ற இந்தக் கோடையின் வெப்பத்தைத் தணிப்பதற்காக திடம்மற்றும் திரவஉணவாக இளநீர், பதநீர், நுங்கு, கிர்ணி, தர்பூசணி, வெள்ளரி போன்றவற்றை கோடைதனது கொடைகளாகத் தந்து கொண்டிருக்கின்றது.

கோடையின் கொடூரத்திலிருந்து தப்பிப்பதற்காக, பனை ஓலையால் முடையப்பட்டவிசிறிகளால் காற்றை வரவழைத்து வெப்பத்தை விட்டும் மக்கள்தங்களைக் காத்துக்கொண்டனர். இன்றைய அறிவியல் உலகம், ஓலைகளை வைத்துக் கிளறும் காற்றுமண்டலத்தைமின் விசிறியின் இலைகளை வைத்துக் கிளறினால் என்ன? என்றுகிளறியதில் பிறந்தது மின் விசிறிகள்.

கொதிக்கும் வெப்பத்தைக் குளித்துத் தணித்தல்

கொதிக்கும் வெயிலிலிருந்து தப்பிப்பதற்காக, குளிரும் நீரில் விழுந்து குளித்துஇளைப்பாறிக் கொள்கின்றான். குளிர்ந்த நீரைக் குடித்து, தாகத்தைத் தணித்து, தன்னைஇதப்படுத்திக் கொள்கின்றான்; தன் இதயத்தை ஈரப்படுத்திக் கொள்கின்றான்.

கொஞ்சம் காசிருந்தால் ஏ.சி.யில்குளிர்ந்து கொள்கின்றான். இது செயற்கை! இந்தச்சுகத்தை இயற்கையாகவே அனுபவிக்க வேண்டும் என்றுஊட்டி, கொடைக்கானல் என்றுகுடும்பத்தோடு செல்கின்றான். இதற்காக முண்டி யடித்துக் கொண்டு முன்பதிவு செய்துகொள்கின்றான்.

எல்லாம் எதற்காக? ஓர் இரண்டு மாதக் கோடையிலிருந்து தப்புவதற்காக!

இப்போது கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்! இந்த உலகத்தில் வருடம்முழுவதும்கோடையாக இருந்தால் நமது பாடு எப்படியிருக்கும்? கொஞ்சம் எண்ணிப் பாருங்கள்!

கோடையைத் தணிப்பதற்குக் காற்று,மாலை நேரத் தென்றல், ஏ.சி., குடிக்கத் தண்ணீர், குளிக்க ஆறுகள், கோடை மழை, ஊட்டி கொடைக்கானல் போன்ற கோடைவாசஸ்தலங்கள் என அல்லாஹ்வின் அருட்கொடைகளைப் பயன்படுத்திக்கொள்கிறோம். இது அனைத்தும் இந்த உலகத்தில் தான். மறுமை உலகம் ஒன்றுள்ளது.அங்குள்ள நரகம், அதில் தங்குவோருக்கு அது தான் நிரந்தர உலகம். அதைப் பற்றிஅல்லாஹ் சொல்வதைக் கேளுங்கள்.

நிரந்தர நெருப்புலகம்

வரம்பு மீறியோரின் தங்குமிடமாக நரகம் காத்துக் கொண்டிருக்கிறது. அதில் யுகம்யுகமாகத் தங்குவார்கள்.

(அல்குர்ஆன் 78:23)

அவனே பெரும் நெருப்பில் கருகுவான். பின்னர் அதில் சாகவும் மாட்டான். வாழவும்மாட்டான்.

(அல்குர்ஆன் 87:12,13)

அவர்களின் மேற்புறத்திலிருந்தும், கால்களுக்குக் கீழே இருந்தும் அவர்களை வேதனைமூடிக் கொள்ளும் நாள்! "நீங்கள் செய்து கொண்டிருந்ததைச் சுவையுங்கள்” என்று(இறைவன்)கூறுவான்.

(அல்குர்ஆன் 29:55)

குளிர் நீரல்ல! கொதி நீரே!

அநீதி இழைத்தோருக்கு நரகத்தை நாம் தயாரித்துள்ளோம். அதன் சுவர்கள் அவர்களைச்சுற்றி வளைத்துக் கொள்ளும். அவர்கள் தண்ணீர் கேட்டால் முகத்தைப் பொசுக்கும்உருக்கிய செம்பு போன்ற கொதி நீர் வழங்கப்படும். அது கெட்ட பானம். கெட்டதங்குமிடம்.

(அல்குர்ஆன் 18:29)

அதற்கு மேல் கொதி நீரைக் குடிப்பீர்கள். தாகம் கொண்ட ஒட்டகம் குடிப்பது போல்குடிப்பீர்கள்.

(அல்குர்ஆன் 56:54,55)

அவனுக்கு முன்னே நரகம் உள்ளது. அவனுக்குச் சீழ் நீர் புகட்டப்படும். அதை மிடறுமிடறாக விழுங்குவான். அது அவனது தொண்டைக்குள்இறங்காது. ஒவ்வொருதிசையிலும் அவனுக்கு மரணம் வரும். ஆனால் அவன் மரணிக்க மாட்டான். இதற்குமேல் கடுமையான வேதனையும் உள்ளது.

(அல்குர்ஆன் 14:16,17)

இப்படி நிரந்தர உலகை நினைவுறுத்துவது தான் கோடை!

"வெப்பம் கடுமையாகும் போது லுஹரைத் தாமதப்படுத்துங்கள். ஏனெனில் கடுமையானவெப்பம் நரகத்தின்வெப்பக் காற்றின் வெளிப்பாடாகும்” என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்கள்: புகாரி 534, முஸ்லிம் 72

இந்தக் கொடிய நரகத்திலிருந்து நிரந்தர சுவனபதி செல்வதற்காக இந்தக்கோடையிலிருந்து பாடம் கற்போமாக! நிரந்தர நரகத்தில் சேர்க்கும் கொடிய பாவமானஇணை வைப்பு என்னும் பாவத்தை விட்டு நம்மையும் நம் சமுதாய மக்களையும்காப்பதற்கு நாளும் உழைப்போமாக! அதுவே நமது இலட்சியமாகும்.