ஜமாஅத் தொழுகையில் பயணி இரண்டு ரக்அத்துடன் முறிக்கலாமா?

ஜமாஅத் தொழுகையில் பயணி இரண்டு ரக்அத்துடன் முறிக்கலாமா?

லுஹர் தொழுகை ஜமாஅத்தாக நிறைவேற்றப்படும் போது லுஹரை இரண்டு ரக்அத்களாகவும், அஸரை இரண்டு ரக்அத்களாகவும் சேர்த்து தொழ நினைக்கும் பயணி இந்த ஜமாஅத்தில் இணைந்து கொள்ளலாமா?

நிஸார்

பதில்:

பயணிகள் தனியாகத் தொழும்போது, அல்லது பயணியை இமாமாக்கி தொழும்போது நான்கு ரக்அத் தொழுகைகளை இரண்டு ரக்அத்தாக தொழும் சலுகை அளிக்கப்பட்டுள்ளது. நான்கு ரக்அத்துகளாகத் தொழவும் அவருக்கு அனுமதி உண்டு.

ஆனால் உள்ளூர் இமாம் தொழுகை நடத்தும் போது அவர் நான்கு ரக்அத்கள் முடிந்து தான் சலாம் கொடுப்பார். பயணிகள் இரண்டு ரக்அத்துடன் முடிக்க நினைத்தால் இமாமை விட்டு விலகினால் தான் சாத்தியமாகும். அவ்வாறு விலகுவதற்கு அனுமதி உண்டா? என்பதற்கு விடை கண்டால் இதற்கான விடையும் அதனுள் அடங்கிவிடும்.

தக்க காரணம் இருந்தால் இமாமைப் பின்பற்றி தொழுபவர் இமாமை விட்டும் இடையில் பிரிந்து தொழுவதற்கு அனுமதி உள்ளது.

صحيح البخاري

701 – حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ بَشَّارٍ ، قَالَ: حَدَّثَنَا غُنْدَرٌ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَمْرٍو، قَالَ: سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، قَالَ: كَانَ مُعَاذُ بْنُ جَبَلٍ يُصَلِّي مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ يَرْجِعُ، فَيَؤُمُّ قَوْمَهُ، فَصَلَّى العِشَاءَ، فَقَرَأَ بِالْبَقَرَةِ، فَانْصَرَفَ الرَّجُلُ، فَكَأَنَّ مُعَاذًا تَنَاوَلَ مِنْهُ، فَبَلَغَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «فَتَّانٌ، فَتَّانٌ، فَتَّانٌ» ثَلاَثَ مِرَارٍ – أَوْ قَالَ: «فَاتِنًا، فَاتِنًا، فَاتِنًا» – وَأَمَرَهُ بِسُورَتَيْنِ مِنْ أَوْسَطِ المُفَصَّلِ، قَالَ عَمْرٌو: لاَ أَحْفَظُهُمَا

701 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது :

முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் தொழுதுவிட்டுத் தமது சமுதாயத்தாருக்குத் தலைமை தாங்கித் தொழுவிப்பார்கள். முஆத் (ரலி) அவர்கள் இஷாத் தொழுகை தொழுவித்த போது அல்பகரா அத்தியாயத்தை ஓதினார்கள். ஒரு மனிதர் (தொழுகையிலிருந்து) விலகிச் சென்று விட்டார். எனவே முஆத் (ரலி) அவர்கள் அந்த மனிதரைக் கடுமையாக ஏசினார். போலும். (இந்தச் செய்தி) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எட்டிய போது (முஆத் ரலி அவர்களிடம்) நீர் குழப்பவாதியா? நீர் குழப்பவாதியா? நீர் குழப்பவாதியா? என்று மூன்று முறை கேட்டார்கள். நடுத்தர அத்தியாயங்களிலிருந்து இரண்டை ஓதுமாறு முஆத் (ரலி) அவர்களைப் பணித்தார்கள்.

நூல் : புகாரீ 701

صحيح البخاري

705 – حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ، قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ: حَدَّثَنَا مُحَارِبُ بْنُ دِثَارٍ، قَالَ: سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ الأَنْصَارِيَّ، قَالَ: أَقْبَلَ رَجُلٌ بِنَاضِحَيْنِ وَقَدْ جَنَحَ اللَّيْلُ، فَوَافَقَ مُعَاذًا يُصَلِّي، فَتَرَكَ نَاضِحَهُ وَأَقْبَلَ إِلَى مُعَاذٍ، فَقَرَأَ بِسُورَةِ البَقَرَةِ – أَوِ النِّسَاءِ – فَانْطَلَقَ الرَّجُلُ وَبَلَغَهُ أَنَّ مُعَاذًا نَالَ مِنْهُ، فَأَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَشَكَا إِلَيْهِ مُعَاذًا، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «يَا مُعَاذُ، أَفَتَّانٌ أَنْتَ» – أَوْ «أَفَاتِنٌ» – ثَلاَثَ مِرَارٍ: «فَلَوْلاَ صَلَّيْتَ بِسَبِّحِ اسْمَ رَبِّكَ، وَالشَّمْسِ وَضُحَاهَا، وَاللَّيْلِ إِذَا يَغْشَى، فَإِنَّهُ يُصَلِّي وَرَاءَكَ الكَبِيرُ وَالضَّعِيفُ وَذُو الحَاجَةِ» أَحْسِبُ هَذَا فِي الحَدِيثِ،

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் நீரிறைக்கும் இரு ஒட்டகங்களுடன் இரவின் இருள் படர்ந்த நேரத்தில் வந்தபோது முஆத் (ரலி) அவர்கள் (மக்களுக்கு இஷாத் தொழுகை) தொழுவித்துக் கொண்டிருந்தார்கள். உடனே தமது ஒட்டகத்தை விட்டுவிட்டு முஆத் (ரலி) அவர்களை நோக்கி வந்தார். அப்போது முஆத் (ரலி) அவர்கள் அல்பகரா அத்தியாயத்தை அல்லது அந்நிஸா அத்தியாயத்தை ஓதினார்கள். உடனே அந்த மனிதர் (தொழுகையை விட்டுவிட்டுச்) சென்று விட்டார். இது பற்றி முஆத் (ரலி) அவர்கள் தம்மைக் கடிந்து பேசியதாக அந்த மனிதருக்குத் தெரிய வந்த போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து முஆத் (ரலி) அவர்களைப் பற்றி அவர் முறையிட்டார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முஆதே! குழப்பம் விளைவிப்பவரா, நீர்? என்று கேட்டார்கள். ஸப்பிஹிஸ்ம ரப்பிக்கல் அஃலா (86), வஷ்ஷம்ஸி வளுஹாஹா (91), வல்லைலி இஃதா யக்‌ஷா (92) ஆகிய  அத்தியாயங்களை ஓதி நீர் தொழுவித்திருக்கக் கூடாதா? ஏனெனில் உமக்குப் பின்னால் முதியவர்களும், பலவீனர்களும், அலுவல் உடையவர்களும் தொழுகின்றனர் என்றும் சொன்னார்கள்.

நூல் : புகாரி  705

صحيح البخاري

6106 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبَادَةَ، أَخْبَرَنَا يَزِيدُ، أَخْبَرَنَا سَلِيمٌ، حَدَّثَنَا عَمْرُو بْنُ دِينَارٍ: حَدَّثَنَا جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ: أَنَّ مُعَاذَ بْنَ جَبَلٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، كَانَ يُصَلِّي مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ يَأْتِي قَوْمَهُ فَيُصَلِّي بِهِمُ الصَّلاَةَ، فَقَرَأَ بِهِمُ البَقَرَةَ، قَالَ: فَتَجَوَّزَ رَجُلٌ فَصَلَّى صَلاَةً خَفِيفَةً، فَبَلَغَ ذَلِكَ مُعَاذًا، فَقَالَ: إِنَّهُ مُنَافِقٌ، فَبَلَغَ ذَلِكَ الرَّجُلَ، فَأَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، إِنَّا قَوْمٌ نَعْمَلُ بِأَيْدِينَا، وَنَسْقِي بِنَوَاضِحِنَا، وَإِنَّ مُعَاذًا صَلَّى بِنَا البَارِحَةَ، فَقَرَأَ البَقَرَةَ، فَتَجَوَّزْتُ، فَزَعَمَ أَنِّي مُنَافِقٌ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " يَا مُعَاذُ، أَفَتَّانٌ أَنْتَ – ثَلاَثًا – اقْرَأْ: وَالشَّمْسِ وَضُحَاهَا وَسَبِّحِ اسْمَ رَبِّكَ الأَعْلَى وَنَحْوَهَا

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் தொழுதுவிட்டுப் பிறகு தம் கூட்டத்தாரிடம் சென்று அவர்களுக்கு நபி (ஸல்) அவர்களுடன் தொழுத அதே தொழுகையைத் தொழுவிப்பது வழக்கம். அவர்களுக்கு அல்பகரா' எனும் அத்தியாயத்தை ஓதினார். அப்போது ஒரு மனிதர் விரைவாகத் தொழுதுவிட்டு சென்றார். இச்செய்தி முஆத் (ரலி) அவர்களுக்கு எட்டியது. அப்போது அவர்கள், அவர் ஒரு நயவஞ்சகர் என்று சொன்னார்கள். அந்த மனிதருக்கு இச்செய்தி எட்டியதும் அவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்று, அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உழைக்கும் வர்க்கத்தினர். எங்கள் ஒட்டகங்கள் மூலம் நீர்ப் பாய்ச்சுவோம். இந்நிலையில் முஆத் அவர்கள் நேற்றிரவு எங்களுக்குத் தொழுவித்த போது அல்பகரா'வை ஓதினார்கள். ஆகவே, நான் விரைவாகத் தொழுதேன். இதனால் அவர் என்னை நயவஞ்சகன் என்று சொன்னாராம் என்று கூறினார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முஆத் (ரலி) அவர்களிடம், முஆதே! நீர் குழப்பவாதியா? என்று மூன்று முறை கேட்டார்கள். மேலும், ஸப்பிஹிஸ்ம ரப்பிக்க, வஷ்ஷம்ஸி வளுஹாஹா போன்ற அத்தியாயங்களை ஓதுவீராக! என்றும் சொன்னார்கள்.

நூல் : புகாரி 6106

இமாம் தொழுகையை நீட்டும்போது அதில் தொடர்வதற்கு இயலாத நிலையில் உள்ள ஒருவர் இமாமை விட்டு விட்டு தனியாகத் தொழுததை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டிக்கவில்லை. மாறாக நீட்டித் தொழுத இமாமைத் தான் கண்டித்தார்கள். தக்க காரணம் இருந்தால் இமாமை விட்டுப் பிரிந்து தனியாகத் தொழலாம் என்பதை இதில் இருந்து அறியலாம்.

பயணிக்கு இறைவன் கடமையாக்கியது இரண்டு ரக்அத்கள் தான். அதை அவர் முடித்த பிறகு அவர் இமாமிடமிருந்து விலகி ஸலாம் கொடுத்து விட்டு அதே இமாமுடன் சேர்ந்து அஸரையும் முடிப்பது குற்றமாகாது. ஏனெனில் அவர் தனக்கு இறைவன் கடமையாக்கியதை நிறைவு செய்து விட்டார். கடமையில் எதுவும் அவருக்கு மீதம் இருக்கவில்லை.

இமாம் மூன்றாவது ரக்அத் தொழும் போது ஜமாஅத்தில் சேரும் பயணி அவருடன் சேர்ந்து இரண்டு ரக்அத்களை முடித்து விட்டு இமாம் ஸலாம் கொடுக்கும் போது அவரும் ஸலாம் கொடுத்து விட்டால் அவரது கடமையில் எதுவும் மீதமில்லை என்பதால் அதுவும் அனுமதிக்கப்பட்டது தான்.

அல்லது அந்தப் பயணி விரும்பினால் இமாமுடன் சேர்ந்து நான்கு ரக்அத்களைத் தொழுதால் அதுவும் குற்றமில்லை.

Leave a Reply