ஜாக் செல்லும் சறுகல் பாதை

ஏகத்துவம் பிப்ரவரி 2006

ஜாக் செல்லும் சறுகல் பாதை

மனோ இச்சைக்குத் தக்க மார்க்கத்தை வளைத்ததால் தான் தர்ஹா வழிபாடு, மத்ஹபு மாயை, தரீக்காக்கள் பற்று, தாயத்து தட்டு போன்ற கலாச்சாரங்கள் தோன்றின.

அந்தத் தரித்திர நிலை மாறி மார்க்கத்துக்குத் தக்க மனோ இச்சையை வளைக்கும் நிலை இப்போது தோன்றி தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

மனோ இச்சைக்குத் தக்க மார்க்கத்தை மாற்றுவது அசத்திய வாதிகளின் வேலை.

மார்க்கத்திற்குத் தக்க மனோ இச்சையை மாற்றிக் கொள்வது ஏகத்துவவாதிகளின் நிலை.

அசத்தியவாதிகளுக்கும் நமக்கும் உள்ள வேறுபாடே இது தான். ஆனால் இன்று ஜாக் அந்தப் பாதையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

குர்ஆன், ஹதீஸ் ஆகிய இரண்டு அடிப்படைகளில் மட்டும் செயல்பட வேண்டும் என்பதற்காக நிர்ணயித்து நிர்மாணிக்கப்பட்ட இந்த இயக்கம், மார்க்கத்துக்குத் தக்க மனோ இச்சையை மாற்றாமல், மனோ இச்சைக்குத் தக்க மார்க்கத்தை வளைக்கத் துவங்கி விட்டனர்.

இதை நாம் வெறும் கற்பனையாகச் சொல்லவில்லை. சரியான, நிதர்சனமான சான்றுகளின் அடிப்படையிலேயே கூறுகின்றோம். அண்மையில் ஹஜ் பெருநாள் அன்று நாகர்கோவில், கோட்டாற்றில் வரலாற்றிலேயே முதன் முறையாக,நபிவழியின் அடிப்படையில் பெருநாள் தொழுகையைத் திடலில் தொழுவதற்கு தவ்ஹீத் ஜமாஅத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர். அதற்கான அறிவிப்பை வெளியிட்டது தான் தாமதம். ஜாக் இயக்கவாதிகள் கோபத்தில் கொந்தளிக்கத் துவங்கினர். குமரி மாவட்ட ஜாக் வகையறாக்கள் குராபிகளை விடவும் கேடாகக் குமுறினர்.

அவர்கள் கொட்டிய கொடுஞ் சொற்களை, ஆபாச அர்ச்சனை வார்த்தைகளைக் கேட்பதற்குக் காதுகள் கூசியது போலவே எழுதுவதற்கும் கூசுகின்றன.

இவர்களின் தலைவர் – இல்லை – அமீர் தனது தொண்டர்களின் எண்ணங்களைப் பெருநாள் காலையில் சுப்ஹ் தொழுகைக்குப் பின்னரும், அதன் பின்னர் தொடர்ந்த உரைகளிலும் எதிரொலித்துள்ளார்; எரிமலையாக வெடித்துள்ளார்.

அவர் வீசிய வினாப் பொறிகள் இதோ:

1. நாகர்கோவிலில் குராபிகள் திடலில் தொழுகை நடத்துகிறார்களே! அங்கு போய் இவர்கள் (தவ்ஹீதுவாதிகள்) தொழ வேண்டியது தானே?

2. பள்ளிவாசலில் பெருநாள் தொழுகையைத் தொழுவதற்குத் தடை இருக்கிறதா?

3. நபி (ஸல்) அவர்கள் காலத்தில் பள்ளிகள் சிறியதாக இருந்தன. அதனால் திடலில் தொழுதார்கள்.

4. திடலில் கண்டிப்பாகத் தொழுது தான் ஆக வேண்டுமா?

இது அமீரின் ஆக்கப்பூர்வமான (?) கேள்விக் கணைகள் மட்டுமல்ல! ஜாக் பிரச்சாரப் பரிவாரங்களும், பீரங்கிகளும் வைக்கின்ற பரிசுக்குரிய, பாராட்டுக்குரிய கேள்விகளாகும். இவற்றுக்கான பதிலைப் பார்க்கும் முன் பெருநாள் தொழுகையைத் திடலில் தொழுவதன் அவசியத்தைப் பார்ப்போம்.

திடலில் தொழுகை

நபி (ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலும், ஹஜ்ஜுப் பெரு நாளிலும் (பள்ளியில் தொழாமல்) முஸல்லா எனும் மைதானத்திற்குச் செல்பவர்களாக இருந்தார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஸயீது அல் குத்ரீ (ரலி),

நூல்: புகாரி

மேற்கண்ட ஹதீஸில் இடம் பெறும் முஸல்லா என்ற சொல்லுக்கு தொழுமிடம் என்று சிலர் மொழி பெயர்க்கின்றார்கள். முஸல்லா என்றால் தொழுமிடம் என்ற பொருள் உள்ளது என்றாலும் இந்த ஹதீஸில் கூறப்படுவது முஸல்லா என்ற பெயருடைய மைதானத்தைத் தான்.

கஸீர் பின் ஸல்த் (ரலி) என்ற நபித் தோழருடைய வீட்டிற்கு முன்னால் முஸல்லா என்ற மைதானம் ஒன்று இருந்தது. அந்த மைதானத்தில் நபி (ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகைகளை நிறைவேற்றியதாகத் தான் ஹதீஸ்களில் காணப்படுகின்றன.

நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் பெருநாள் தொழுகையைத் தொழுததாக எந்த ஒரு ஆதாரப்பூர்வமான ஹதீஸும் இல்லை.

மஸ்ஜிதுல் ஹராமைத் தவிர ஏனைய பள்ளிகளில் தொழுவதை விட எனது இந்தப்பள்ளியில் (மஸ்ஜிதுத் நபவீ) தொழுவது ஆயிரம் தொழுகைகளை விடச் சிறந்ததாகும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி)

நூல்: புகாரி

இந்த ஹதீஸின் அடிப்படையில் மஸ்ஜிதுந் நபவீயில் தொழுவது மற்ற சாதாரண பள்ளிகளில் தொழுவதை விட ஆயிரம் மடங்கு சிறந்ததாகும். பெருநாள் தொழுகைகளைப் பள்ளியில் தொழுவது சரியான நடைமுறையாக இருந்திருந்தால் ஆயிரம் மடங்கு நன்மைகளைப் பெற்றுத் தரக் கூடிய மஸ்ஜிதுந் நபவீயில் நபி (ஸல்) அவர்கள் தொழுதிருப்பார்கள் .

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த விஷயத்தில் நன்மைகள் அதிகமோ அதைத் தான் நடைமுறைப்படுத்துவார்கள். அந்த அடிப்படையில் நபி (ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகைகளைத் திடலில் தொழுதிருக்கும் போது, அதைப் புறக்கணித்து விட்டு பள்ளியிலேயே தொழுவது நபிவழிக்கு மாற்றமானதாகும்.

புனித நகரமான மக்காவாக இருந்தாலும் பெருநாள் தொழுகை

திட-ல் தான் நடத்தப்பட வேண்டும். கஃபாவில் தொழுவது ஒரு லட்சம் மடங்கு சிறந்தது என்று கூறி நபிவழிக்கு மாற்றம் செய்ய முடியாது. ஆனால் மக்காவில் இந்த நடைமுறை புறக்கணிக்கப்பட்டு வருகின்றது. புனித மிக்க ஒரு நகரத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது கட்டளை, காற்றில் பறக்க விடப்படுவது வேதனைக்குரிய விஷயமாகும்.

மாதவிடாய் காலத்தில் பெண்கள் பள்ளிக்கு வர முடியாது. பெருநாள் தொழுகையைப் பள்ளிவாசலில் தொழும் போது மாதவிடாய்ப் பெண்களுக்கு பெருநாள் சந்தோஷங்களில் பங்கெடுக்க முடியாத நிலை ஏற்பட்டு விடுகின்றது. இதன் மூலம் அவர்களுடைய உரிமையை நாம் மறுப்பதோடு பரக்கத்தும், புனிதமும் மிக்க அந்த நாளில் அவர்கள் (குத்பா) உரையைக் கேட்பது, தக்பீர் கூறுவது, துஆச் செய்வது போன்ற நற்செயல்களில் ஈடுபடுவதை விட்டும் தடுத்தவர்களாகி விடுகிறோம்.

ஓர் ஊரிலுள்ள முஸ்லிம்கள் அனைவரும் ஒரே இடத்தில் கூடி தொழுகை நடத்தும் போது அதில் சகோதரத்துவம் வலுப்படுகின்றது. எல்லோரும் ஓரணியில் நின்று தொழுகின்ற இந்தக் கட்டமைப்பு, இஸ்லாத்தில் தீண்டாமை இல்லை என்பதை உலகிற்குப் பறை சாற்றுவதுடன் மாற்று மதத்தவர்களிடம் இஸ்லாத்தைப் பற்றிய ஓர் உயர்ந்த எண்ணத்தைத் தோற்றுவிக்கின்றது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகைக்குத் திடலைத் தேர்வு செய்ததில் இது போன்ற எண்ணற்ற நன்மைகள் அடங்கியுள்ளன.

இந்த நபிவழியைப் புறக்கணித்து பள்ளிவாசலில் பெருநாள் தொழுகை தொழுவது பல தவறான நடைமுறைகளுக்கு வழிவகுத்துள்ளது. பல ஊர்களில் பெண்கள் பெருநாள் தொழுகையே தொழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டு விடுகின்றது. குறிப்பாக ஹனஃபி மத்ஹபில் பெண்களைப் பெருநாள் தொழுகை தொழுவதற்கு அனுமதிப்பதில்லை. அபூஹனீபா இமாமின் சட்டத்தில் இவ்வாறு இல்லாவிட்டாலும் நடைமுறையில் ஆண்கள் மட்டுமே பெருநாள் தொழுகை தொழுகின்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வலியுறுத்திய இந்த வணக்கத்தைப் பெண்களுக்குக் கிடைக்காமல் தடுப்பவர்கள் அல்லாஹ்விடம் பதில் சொல்லியாக வேண்டும்.

இன்னும் சில ஊர்களில் ஏதேனும் வீட்டில் வைத்து பெண்களுக்கென பெருநாள் தொழுகை ஏற்பாடு செய்து நடத்துகின்றார்கள். இதுபோன்று ஏற்பாடு செய்யப்படும் தொழுகைகள் ஒரே ஜமாஅத்தாக நடைபெறுவதில்லை. ஒரு வீட்டில் பல ஜமாஅத்கள் நடத்தி தொழுகின்றார்கள். நபி (ஸல்) அவர்கள் காலத்தில் இப்படி பெண்கள் தனியாக ஓரிடத்தில் கூடி ஜமாஅத்தாகப் பெருநாள் தொழுகை தொழுததாக எந்த ஒரு ஹதீஸையும் நம்மால் காண முடியவில்லை. திடல் தொழுகையைப் புறக்கணிப்பது தான் இத்தகைய பித்அத்கள் உருவாவதற்குக் காரணம் என்பதை மறுக்க முடியாது.

இவற்றைக் கருத்தில் கொண்டும், திடலில் தொழுவது தான் நபிவழி என்ற அடிப்படையிலும் பெருநாள் தொழுகைகளை கண்டிப்பாகத் திடலில் தான் நிறைவேற்ற வேண்டும். திடல் இல்லாவிட்டால் அதற்கென விலைக்கு வாங்கியாவது இந்த நபிமொழியைப் பேண வேண்டும்.

இந்த அடிப்படையில் தான் நாகர்கோவில் கோட்டாரில் தவ்ஹீது ஜமாஅத்தினர் இந்த ஆண்டு ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையைத் திடலில் தொழுவது என்று முடிவெடுத்தனர். இதைத் தாங்கிக் கொள்ள முடியாத ஜாக்கினரும், அவர்களது அமீரும் எழுப்பிய கேள்விகளைத் தான் ஆரம்பத்தில் குறிப்பிட்டோம். இப்போது இவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கான பதிலைப் பார்ப்போம்.

"குராபிகள் திடலில் தொழுகை நடத்துகிறார்களே! அங்கு போய் இவர்கள் (தவ்ஹீதுவாதிகள்) தொழ வேண்டியது தானே?” என்று கேட்கும் சறுகல் பாதையில் சறுகிக் கொண்டிருக்கும் ஜாக்கிடம் நாம் ஒரு கேள்வியைத் திருப்பிக் கேட்கிறோம்.

இவர்கள் ஏன் தமிழகத்தின் பல பகுதிகளில் பள்ளிகளைக் கட்டினர்? எதற்காக?இவ்வாறு இவர்களிடம் நாம் கேட்கும் போது இவர்கள் தரும் பதில் இரண்டாகத் தான் இருக்க முடியும். 1. குராபிகள் இணை வைப்பவர்கள். எனவே அவர்களின் பின்னால் நின்று தொழ முடியாது. 2. குராபிகளின் பள்ளிகளில் தவ்ஹீதுவாதிகள் தொழுவதற்கு அவர்கள் விதித்த தடை.

இந்த இரண்டு காரணங்களால் தான் அவர்களும் பிரிந்தார்கள். அவர்களுடன் இணைந்திருந்த நாமும் பிரிந்தோம். இந்த இரு காரணங்களும் இன்றளவும் அவர்களிடம் இருக்கப் போய் தான் குராபிகள் பின்னால் தொழுவதில்லை. இதை அவர்கள் நன்கு தெரிந்து கொண்டே இவ்வாறு நம்மைப் பார்த்து குராபிகள் பின்னால் தொழச் சொல்கின்றனர்.

ஏன்? இவர்கள் திட்டமிட்டே இதுவரை திடலில் தொழும் நபிவழியை விட்டு வந்திருக்கின்றனர். நாங்கள் செய்யாத அந்த நபிவழியை நீங்களும் செய்யக் கூடாது என்ற எண்ணம் தான் இதற்குக் காரணம்.

குராபிகள் கூட நடைமுறைப் படுத்திக் கொண்டிருக்கும் இந்த நபிவழியை இவர்கள் பின்பற்ற மாட்டேன் என்று கங்கணம் கட்டுகின்றார்கள் என்றால் அவர்களை விட இவர்கள் மோசமாகப் போய் விட்டார்கள் என்று தானே அர்த்தம்? இந்த லட்சணத்தில் ஜாக் (குர்ஆன் மற்றும் நபிவழி இயக்கம்) என்ற பெயர் வேறு!

உண்மையில் நாம் ஏற்கனவே ஏகத்துவத்தில் எழுதியது போல், தவ்ஹீது ஜமாஅத்தினர் எதைச் செய்தாலும், அது குர்ஆன், ஹதீஸாக இருந்தாலும் அதற்கு மாற்றமாகச் செய்ய வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றனர் என்பது அழுத்தம் திருத்தமாக உறுதிப்பட்டு விடுகின்றது.

பள்ளிவாசலில் பெருநாள் தொழுகையைத் தொழுவதற்குத் தடை இருக்கிறதா? என்று கேட்கின்றனர்.

இந்தக் கேள்வியை எண்ணிப் பார்த்து ஒரு பக்கம் வேதனைப்பட வேண்டியுள்ளது. மறுபக்கம் இந்த வேடிக்கையை நினைத்து சிரிக்கவும் வேண்டியிருக்கிறது. தவ்ஹீது ஜமாஅத்தினர் மீது கொண்டிருக்கும் காழ்ப்புணர்ச்சியும், கசப்புணர்ச்சியும் ஏன் இவர்களை இந்த அளவுக்குத் தரம் தாழ்த்தி விட்டது?

இது உண்மையில் பக்கா குராபிகளின் வாதம்! நாம் வரதட்சணை வாங்கக் கூடாது என்று வீரிய பிரச்சாரம் மேற்கொண்ட உடனே வெறி கொண்ட ஆலிம் கூட்டம் நமக்கு எதிராகக் கிளப்பிய வெற்றுக் கேள்வி தான் இது! குர்ஆன், ஹதீஸ் அடிப்படையைத் தங்கள் பாதையாகக் கொள்ளாததால் இந்தக் கேள்வியைக் குராபிகள் எழுப்புகின்றனர் என்று சொல்லி அதைக் கிண்டல் அடித்தோம்; கேலி செய்தோம்.

ஒரு பிச்சைக்காரன் யாசகம் கேட்கின்றான். அவனுடைய பாத்திரத்தில் கையை விட்டு, இன்னொருவன் காசை எடுக்கின்றான். "ஏன் இவ்வாறு பிச்சைக்காரனிடமிருந்து காசை எடுக்கின்றாய்?” என்று கேட்கும் போது, "பிச்சைக்காரன் பிச்சை போடு என்று தானே சொன்னான். என்னிடமிருந்து எதையும் எடுக்காதே என்று சொன்னானா?” என்று கேட்பது போல் இருக்கிறது என்ற உதாரணங்களை எல்லாம் கூறி குராபிகளைக் கிண்டல் செய்தோம். அந்த வாதத்தை இப்போது இந்த ஜாக் அமீர் கையில் எடுத்திருக்கிறாரே என்பதை நினைத்து சிரிக்க வேண்டியிருக்கிறது.

இதே கேள்வியை ஜாக்கின் கடைநிலை உறுப்பினர் கேட்டால் கூட ஏதோ விவரம் தெரியாமல் கேட்கிறார் என்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அதன் அமீர், மதீனா பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்ற மார்க்க அறிஞர் எனப்படுபவர் கேட்பதை அப்படி எடுத்துக் கொள்ள முடியாது.

அடிப்படை தெரியாத அறிஞர்

இதன் மூலம் இவருக்கு இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படையே தெரியவில்லை என்பது வெட்ட வெளிச்சமாகி விடுகின்றது.

அப்படியானால் தடை இருக்கின்றதா? என்ற கேள்வியே கேட்கக் கூடாதா? என்று வினவலாம். எனவே இது குறித்து சற்று விளக்கமாகப் பார்ப்போம்.

பொதுவாகவே குராபிகள் வணக்க விஷயத்தையும், உலக விஷயத்தையும் போட்டுக் குழப்பிக் கொள்வார்கள்.

நாம் மார்க்கத்தில் பித்அத் – புதிய காரியம் கூடாது என்று சொல்லும் போது, "நபி (ஸல்) அவர்கள் ஒட்டகத்தில் போனார்கள். நீ காரில் போகலாமா? இது பித்அத் இல்லையா?” என்று கேட்பார்கள். இப்படி அவர்கள் கேட்பதற்குக் காரணம், வணக்க வழிபாட்டையும் உலக விஷயத்தையும் போட்டுக் குழப்பிக் கொண்டது தான்.

அது போலவே கமாலுத்தீன் மதனியும் குழம்பிக் கொண்டிருக்கிறார். அதனால் தான் தடை இருக்கிறதா? என்ற கேள்வியை எழுப்புகின்றார்.

அவனே பூமியில் உள்ள அனைத்தையும் உங்களுக்காகப் படைத்தான். பின்னர் வானத்தை (படைக்க) நாடி அவற்றை ஏழு வானங்களாக ஒழுங்குபடுத்தினான். அவன் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன். (அல்குர்ஆன் 2:29)

இந்த வசனத்தின் படி உலகத்தில் படைக்கப்பட்ட பொருள்கள் அனைத்தும் மனிதன் பயன்படுத்து வதற்காகத் தான். இந்தப் பயன்பாடு என்பது உணவு, உடை, உலோகம்,வாகனம் என்று எல்லாவற்றையும் எடுத்துக் கொள்ளும்.

உலகத்தில் மனித வாழ்வுக்குத் தேவையான பண்டங்கள், பொருட்களை ஒவ்வொன்றாகக் குறிப்பிட்டு, பட்டியல் போட்டு இது உனக்குக் கூடும் என்று மார்க்கம் சொல்லாது.

ஆடு சாப்பிடலாம்; மாடு சாப்பிடலாம்; மீன் சாப்பிடலாம் என்று உணவு வகைகளைப் பட்டியல் போட்டால் குர்ஆன், ஹதீஸ் இரண்டும் மலையளவு பாகங்களாக வெளி வந்தாலும் போதாது என்றாகி விடும்.

அதனால் எது தடுக்கப்பட்டதோ அதை மட்டும் மார்க்கம் சொல்லி விடும்.

உதாரணத்திற்கு,

தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப் பட்டவை உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளன. கழுத்து நெறிக்கப்பட்டவை, அடிபட்டவை, (மேட்டிலிருந்து) உருண்டு விழுந்தவை, (தமக்கிடையே) மோதிக் கொண்டவை, மற்றும் வன விலங்குகள் சாப்பிட்ட பிராணிகள் ஆகியவற்றில் (உயிர் இருந்து) நீங்கள் முறையாக அறுத்தவை தவிர (மற்றவை தடை செய்யப்பட்டுள்ளன.) பலி பீடங்களில் அறுக்கப் பட்டவையும்,அம்புகள் மூலம் குறி கேட்பதும் (உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளன.) இவை குற்றமாகும். (அல்குர்ஆன் 5:3)

இந்த வசனத்தில் கூறப்படுவதைப் போல் உணவுகளில் எவையெல்லாம் தடுக்கப்பட்டுள்ளன என்ற விபரம் மட்டும் மார்க்கத்தில் விளக்கப்படும். அது போன்று "உலோகத்தில் தங்கமும், உடையில் பட்டும் ஆண்களுக்குத் தடை” என்று கூறப்படும்.

இந்த அடிப்படையில் அல்லாஹ்வால் தடை செய்யப் பட்டவைகளைத் தவிர மற்றவை அனுமதிக்கப்பட்டவை என்று நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

உதாரணமாக, "முயல் இறைச்சி சாப்பிடக் கூடாது” என்று ஒருவர் கூறுகின்றார் என்று வைத்துக் கொள்வோம். அப்போது நாம் அவரிடம், முயல் இறைச்சி சாப்பிடக் கூடாது என்று தடை உள்ளதா? என்று கேட்கலாம். இவ்வாறு மனித வாழ்வியல் சம்பந்தப்பட்ட, உலக விவகாரங்களில் தடையிருக்கின்றதா? என்று பார்க்க வேண்டும்.

எனவே தடையிருக்கின்றதா? என்று கேட்பது வாழ்வியல் தொடர்பான உலக விஷயங்களில் தான். வணக்க விஷயங்களில் அல்ல.

வணக்கத்திற்கு அவசியம் உத்தரவு தான்

வணக்க விஷயத்தில் தடை இருக்கின்றதா? என்று பார்ப்பதும், கேட்பதும் கடைந்தெடுத்த மடைமைத் தனமாகும். வணக்க விஷயத்தில் உத்தரவு இருக்கின்றதா? என்று தான் பார்க்க வேண்டும். தடையிருக்கின்றதா? என்று பார்க்கக் கூடாது. அந்த உத்தரவு நபி (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் ஆகிய மூன்று அம்சங்களில் அமைந்திருக்கும்.

அதனால் தான்…

நாம் உத்தரவிடாத வணக்கத்தைச் செய்பவரின் வணக்கம் மறுக்கப்படும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள். (புகாரி 2697, முஸ்லிம் 3243)

இந்த அடிப்படையில் தான் கூட்டு துஆ, தராவீஹ் இருபது ரக்அத்துகள் போன்றவற்றை பித்அத் என்று நாம் கூறுகின்றோம்.

வணக்கத்தில் தடையிருக்கின்றதா? என்று பார்க்க ஆரம்பித்தால் அது தான் பித்அத்துக்கள் நுழைவதற்குரிய தலைவாசல் ஆகி விடும். கூட்டு துஆ, கத்தம் பாத்திஹா, தராவீஹ் இருபது ரக்அத்துகள் என்று எல்லாவற்றையும் திறந்து விடுவதற்கு இது வசதியாக அமைந்து விடும்.

எனவே வணக்க வழிபாடுகளில், இபாதத்துகளில் தடையிருக்கின்றதா? என்று பார்க்கக் கூடாது; தடை இருக்கின்றதா? என்று கேட்கக் கூடாது.

அப்படிக் கேட்டால் என்ன ஆகும்?

உதாரணத்திற்குத் தொழுகையை எடுத்துக் கொள்வோம். ஒருவர் தொழுகையில் தலையை ஆட்டுகின்றார். அவரிடம் போய் "நீங்கள் ஏன் தலையை ஆட்டுகின்றீர்கள்?தலையை ஆட்டாதீர்கள்” என்று சொன்னால் அவர் நம்மிடத்தில், "தொழுகையில் தலையை ஆட்டுவதற்குத் தடை இருக்கிறதா?” என்று கேட்பார்.

அது போலவே ருகூவு செய்து முடித்த பின்னர் தனது இரு கைகளையும் தனது முதுகுக்குப் பின் ஒருவர் கட்டுகின்றார். அவரிடம் போய் "இது போன்று செய்யாதீர்கள்” என்று சொன்னால், அவரும், "இப்படிச் செய்யக் கூடாது என்பதற்குத் தடை இருக்கின்றதா?” என்று கேட்பார்.

இதற்கு என்ன பதில்?

பெருநாள் தொழுகையைப் பள்ளியில் தொழுவதற்குத் தடை இருக்கின்றதா? என்று கேட்கும் கமாலுத்தீன் மதனீ இதற்கு என்ன பதில் கூறுவார்? தொழுகையில் மேற்கண்ட காரியங்களைச் செய்வதற்குத் தடையில்லை; அதனால் செய்யலாம் என்று கூறுவாரா? அல்லது கூடாது என்று தடுக்கப் போகிறாரா?

இதற்குச் சரியான பதிலைத் தர வேண்டும்.

நோன்பில் பீடி குடிக்கத் தடை இருக்கின்றதா?

நோன்பில் உண்ணுவது, பருகுவது, உடலுறவு கொள்வது தான் தடுக்கப் பட்டுள்ளது. நோன்பு வைத்துக் கொண்டு ஒருவர் பீடி குடிக்கின்றார். அவரிடம் போய் கேட்டால்,புகைப்பதற்குத் தடை இருக்கின்றதா? என்று கேட்டால் கமாலுத்தீன் மதனீ என்ன பதில் சொல்வார்?

எனவே இபாதத்தில் தடை இருக்கின்றதா? என்று பார்க்கக் கூடாது. உத்தரவு இருக்கின்றதா? என்று தான் பார்க்க வேண்டும்.

இவ்வாறு நாம் கூறும் போது, இபாதத்திலும் தடை இருக்கின்றதா? என்று பார்ப்பதற்கு அனுமதி இருக்கின்றது என்று கூறி, நபி (ஸல்) அவர்கள் ருகூவில் கிராஅத் ஓதுவதைத் தடை செய்தார்கள் என்பதை ஆதாரமாகக் காட்டி சிலர் வாதிடலாம். இங்கு நாம் ஓர் அடிப்படையைப் புரிந்து கொள்ள வேண்டும்.

உலக விஷயங்களில் தடையைப் பார்க்க வேண்டும் என்று நாம் சொல்லும் போது,தடையை மட்டும் தான் பார்க்க வேண்டும், அனுமதி தொடர்பாக மார்க்கம் எதையுமே கூறாது என்பது பொருளல்ல.

கடல் பிராணிகள் அனைத்தும் அனுமதிக்கப்பட்டவை, அதில் செத்தவை கூட அனுமதி தான் என்றும் மார்க்கம் கூறியுள்ளது.

இது போலத் தான் வணக்க வழிபாடுகள் விஷயத்திலும் சில அம்சங்களில் தடை செய்யப் பட்டிருக்கும். அந்தத் தடையைப் பேணிக் கொள்ள வேண்டுமே தவிர இதை அடிப்படையாக வைத்து எல்லா இபாதத்துகளிலும் தடையிருக்கின்றதா? என்று கேள்வி கேட்க முடியாது.

ருகூவில் குர்ஆன் ஓதுவதற்குத் தடை என்ற விஷயத்தையே எடுத்துக் கொள்வோம்.

இதை வைத்து வணக்க வழிபாடுகள் விஷயத்திலும் தடை இல்லாவிட்டால் செயல் படுத்தலாம் என்று வாதிட்டால், அவர்களிடம் நாம் இன்னொரு கேள்வியைக் கேட்போம்.

ருகூவில் அத்தஹிய்யாத் துஆவை ஓதலாமா? என்பது தான் அந்தக் கேள்வி.

ருகூவில் அத்தஹிய்யாத் ஓதத் தடையிருக்கின்றதா? என்ற கேள்விக்கு இவர்கள் பதில் சொல்லியாக வேண்டும்.

இவ்வாறு கேட்டால் ஓதக் கூடாது என்று தான் பதில் கூறுவார்கள். எனவே இபாதத்துகளைப் பொறுத்த வரை தடை இல்லாவிட்டால் எதையும் செய்து கொள்ளலாம் என்ற வாதம் தவறானது என்பது இதன் மூலம் நிரூபணமாகின்றது.

வணக்க வழிபாடுகள் விஷயத்தில் தடை இருக்கின்றதா? என்ற வாதத்தை முன் வைத்து ஒரு செயலைச் செய்வது பைத்தியக்காரத்தனம் என்பதும் நிரூபணமாகின்றது. மார்க்கத்தின் அடிப்படையை விளங்கியவர்கள் இந்தக் கேள்வியை ஒருக்காலும் கேட்க மாட்டார்கள். இது முற்றிலும் குராபிகளின் வாதமாகும்.

இந்த வாதத்தைச் சொல்லியே இணை வைப்பு ஆலிம்கள் மக்களைத் தங்கள் பக்கம் தக்க வைத்துக் கொண்டு, சத்தியத்தின் பக்கம் வர விடாமல் தடுத்துக் கொண்டு உள்ளனர்.

தர்ஹா வழிபாடு, தரீக்கா வழிபாடு, தனி நபர் வழிபாடு, பித்அத், தாயத்து, தட்டு எல்லாவற்றிற்கும் மூல முதல் ஆதாரமாக அமைந்திருப்பது, கமாலுத்தீன் மதனீ எழுப்பிய தடை இருக்கின்றதா? என்ற கேள்வி தான். குராபிகளின் இந்த ஆழமான,ஆணித் தரமான (?) ஆதாரத்தைத் தான் கமாலுத்தீன் மதனீ கையில் எடுத்துள்ளார். ஜாக்கின் சறுகலுக்கு இதை விடச் சான்று தேவையில்லை.

இவர்கள் தடையிருக்கின்றதா? என்று கேட்பது இன்று ஏற்பட்டதல்ல.

ஏற்கனவே பெண் வீட்டு விருந்துக்கும் இதே கேள்வியைக் கேட்டு நியாயப்படுத்தினார்கள்.

பெண் வீட்டு விருந்து

குராபிகள் எடுத்து வைத்த அதே வாதத்தை, அவர்களின் செயல்பாடுகளை அப்படியே செய்வதன் மூலம் இவர்களும் அவர்களை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றார்கள். அதற்கு இன்னொரு சிறந்த எடுத்துக்காட்டு, இன்று பெண் வீட்டு விருந்துக்களில் ஜாக் அமைப்பினர் கலந்து கொண்டு வெளுத்துக் கட்டுவதாகும்.

இஸ்லாத்தில் பெண் வீட்டு விருந்து என்பதே கிடையாது. இது முதல் அடிப்படை! அப்படி விருந்து வைத்தால் கூட அதில் மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் மருந்துக்குக் கூட அதில் போய் கலக்கக் கூடாது. இது இரண்டாவது அடிப்படை! ஏனென்றால் இது மிகப்பெரும் சமூகக் கொடுமையான வரதட்சணை ஆகும்.

இன்று பெற்றோர் இறந்த பிறகு அவர்களிடமிருந்து கிடைக்க வேண்டிய சொத்துக்கள் பெண் மக்களுக்குக் கிடைப்பதில்லை. ஆண் மக்கள் அந்தச் சொத்தை அப்படியே அபகரித்து அனுபவித்துக் கொள்கின்றார்கள். அதற்கு அவர்கள் கூறும் காரணம், பெண் மக்களுக்கான கல்யாணச் செலவு தான். கழுத்தில் போட்ட நகை, கையில் கொடுத்த தொகை, வைத்த விருந்து ஆகியவற்றிற்கு நிறைய செலவாகி விட்டது; எனவே அதைப் பெண்ணுக்குச் சேர வேண்டிய சொத்தில் கழித்துக் கொள்கிறோம்; அதற்கு இது சரியாகி விட்டது என்று காரணம் கூறுகின்றனர். இப்படி வாரிசுக்குச் சேர வேண்டிய சொத்தை மறுப்பது வரம்பு மீறுதலாகும். இதற்குத் தண்டனை நிரந்தர நரகம் என்று அல்குர்ஆன் 4:13,14 வசனங்கள் கூறுகின்றன. நிரந்தர நரகத்திற்குத் தூண்டும் இந்தப் பாவத்தை ஒரு ஏகத்துவவாதி செய்யத் துணியலாமா?

குமரி மாவட்டத்தில் இன்று இரு வீட்டார் அழைப்பு என்ற பெயரில் பெண் வீட்டுத் தலையில் விருந்துச் செலவில் பாதியைக் கட்டி விடுகின்றனர். கல்யாண வீட்டுச் சாப்பாடு என்றால் போதும்; மார்க்கத்தை எல்லாம் தூர வைத்து விடுவது குராபிகளின் செயல். ஆனால் இதைச் சர்வ சாதாரணமாக இந்த ஏகத்துவவாதிகள் (?) செய்து வருகின்றனர்.

இதற்கு எடுத்துக்காட்டாக அண்மையில் நாகர்கோவிலில் நடந்த ஒரு திருமணத்தைக் கூறலாம். இந்தத் திருமணத்திற்காக சம்பந்தப் பட்டவர்கள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தை அணுகி திருமணப் பதிவேடு கேட்டனர். இது குறித்து நாம் விசாரித்த போது, பெண் வீட்டு சார்பில் விருந்து ஏற்பாடு செய்யப் பட்டிருந்ததைத் தெரிந்து,திருமணப் பதிவேடு கொடுக்க மறுத்து விட்டோம்.

நாம் மார்க்கத்தைக் கருத்தில் கொண்டு, திருமணப் பதிவேடு கொடுக்க மறுத்த திருமணத்திற்கு தவ்ஹீதின் கேந்திரமாகத் திகழும் (?) மஸ்ஜிதுல் அஷ்ரஃப் ஜமாஅத் தனது திருமணப் பதிவேட்டை மகிழ்ச்சியோடு கொடுத்துத் திருமணத்தை நடத்தி வைத்தது. இதில் கேடு கெட்ட விஷயம் என்னவென்றால் மணப் பெண்ணை மேடையில் புர்கா இல்லாமல் வைத்துக் கொண்டு எல்லோரையும் ரசிக்க வைத்ததுடன், போட்டோவும் எடுத்து, தங்களது கொள்கையைப் படு விமரிசையாகப் பறை சாற்றியிருக்கின்றார்கள்.

இந்த லட்சணத்தில் மஸ்ஜிதுல் அஷ்ரஃபின் இமாமும், கதீஜத்துல் குப்ரா மற்றும் ஃபிர்தவ்ஸியா ஆகிய மதரஸாக்களின் ஆசிரியருமான செய்யது அலீ என்பவர் தனது உரையில், இந்த மாப்பிள்ளை தவ்ஹீது அடிப்படையில் நடப்பவர் என்ற கருத்தில் புகழாரம் சூட்டியிருக்கின்றார். திருமணத்தின் போது மணப்பெண்ணை போட்டோ எடுக்கும் அசிங்கத்தை குராபிகள் கூட செய்தில்லை. ஆனால் இவர்கள் தவ்ஹீது என்ற போர்வையில் இந்தத் தரங்கெட்ட வேலையைச் செய்திருக்கின்றார்கள்.

மேலப்பாளையத்தில் இந்த அமீர் வந்து நடத்திய ஒரு திருமணத்தில், பெண் வீட்டில் ஆயிரக் கணக்கானோரை அழைத்து விருந்து போட்டனர். இது சரியா? என்று ஒரு கொள்கைச் சகோதரர் கேள்வி எழுதிக் கொடுத்தார். அதற்கு இந்த அமீர்,தடையில்லை என்று அருமையான பதிலைச் சொன்னார். என்ன ஒரு அற்புதமான பதில். மிகப் பெரிய சமூக நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தும் ஒரு செயலை, தடையில்லை என்று சர்வ சாதாரணமாகக் கூறி விட்டுச் செல்கின்றார். வரதட்சணை வாங்குவதற்குத் தடை இருக்கின்றதா? என்று குராபிகள் கேட்டார்கள். அதையே இப்போது இவர்களும் கேட்கின்றார்கள்.

சுய விளக்கங்கள் கூறுவோரின் சுயரூபங்கள்

ஹதீஸ் குழப்பத்தை ஏற்படுத்தும்; அதாவது நபி (ஸல்) அவர்களின் வழிமுறை குழப்பத்தை ஏற்படுத்தும் என்று சொன்ன உத்தமர், உன்னத மகான் இவர் தான் என்பதையும் நாம் இங்கு சுட்டிக் காட்டக் கடமைப்பட்டுள்ளோம்.

குழப்பத்தை ஏற்படுத்தும் ஹதீஸ்

அல்ஜன்னத் மாத இதழில் ஒரு கேள்விக்குப் பதில் அளிக்கும் போது,, ஸஹர் பாங்கு சொல்வதால் குழப்பம் ஏற்படும் என்று கூறி, ஸஹர் பாங்கு சொல்லத் தேவையில்லை என்று எழுதியுள்ளார்கள்.

ஹதீஸைச் செயல்படுத்தினால் குழப்பம் ஏற்படும் என்று மத்ஹபுவாதிகள் கூறிய அதே காரணத்தை இப்போது இவர்கள் கூறியுள்ளார்கள் என்பதைப் பார்க்கும் போது இவர்கள் குர்ஆன், ஹதீஸை விட்டு விலகி எங்கோ சென்று விட்டார்கள் என்பதையே இது காட்டுகின்றது.

அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும் போது நம்பிக்கை கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் தமது அக்காரியத்தில் சுய விருப்பம் கொள்ளுதல் இல்லை. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்பவர் தெளிவாக வழி கெட்டு விட்டார். (அல்குர்ஆன் 33:36)

இத்தூதர் உங்களுக்கு எதைக் கொடுத்தாரோ அதை வாங்கிக் கொள்ளுங்கள்! எதை விட்டும் உங்களைத் தடுத்தாரோ (அதிலிருந்து) விலகிக் கொள்ளுங் கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன். (அல்குர்ஆன்59:7)

அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் ஒன்றைக் கற்றுத் தந்திருக்கும் போது,தமது மனோ இச்சையின் அடிப்படையில் அதை மறுப்பது தெளிவான வழிகேடாகும் என்பதை இந்த வசனங்கள் விளக்குகின்றன.

அல்லாஹ் இவ்வளவு கடுமையாக எச்சரித்திருந்தும் தமது மனோ இச்சையின் அடிப்படையில் வியாக்கியானம் கொடுத்து நபிவழியைப் புறக்கணிக்கின்றனர். அவர்கள் கொடுக்கும் வியாக்கியானங்களையும் அவற்றின் விளக்கத்தையும் பார்ப்போம்.

"தூங்குபவர்கள் எழுந்து ஸஹர் செய்ய வேண்டும் என்ற காரணத்தை மட்டும் அடிப்படையாக வைத்துச் சொல்லப்பட்டதாகும். ஸஹர் நேரத்தை மக்களுக்குத் தெரிவிப்பது தான் இதன் நோக்கம். இன்று நேரத்தைத் தெரிந்து கொள்வதற்கு எத்தனையோ வழிமுறைகள் கையாளப் படுகின்றன. நேரத்தை அறிந்து கொள்வது என்ற காரணம் நிறைவேறிவிடுமானால் அதுவே போதுமானதாகக் கொள்ளலாம்”என்று வியாக்கியானம் கூறியுள்ளனர்.

காரணத்தோடு ஒரு விஷயம் சொல்லப்பட்டால் அந்தக் காரணம் இல்லாவிட்டால் பின்பற்றத் தேவையில்லை என்பது இபாதத்துகள் அல்லாத ஏனைய உலக விஷயங்களுக்குத் தான்.

தூங்கும் போது விளக்குகளை அணைத்து விடுங்கள். ஏனெனில், தீங்கிழைக்கக்கூடியது (எலி) திரியை இழுத்துச் சென்று வீட்டில் இருப்பவர்களை எரித்து விடக்கூடும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி), நூல்: புகாரி 3316

தூங்கும் போது விளக்குகளை அணைத்து விடுங்கள் என்று கூறும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதற்குக் காரணமும் இந்த ஹதீஸில் கூறுகின்றார்கள். விளக்கின் திரியை எலி இழுத்துச் சென்று தீ விபத்து ஏற்படும் என்பது தான் அந்தக் காரணம். இந்தக் காரணம் இப்போது பொருந்தாது. இப்போது மின்சார விளக்குகளை நாம் பயன்படுத்துவதால் எலி இழுத்துச் சென்று தீ விபத்து ஏற்படும் என்று நாம் அஞ்சத் தேவையில்லை. எனவே இந்தக் காலத்தில் உறங்கச் செல்லும் போது மின்சார விளக்குகளை அணைக்கத் தேவையில்லை. இது போன்ற உலக விஷயத்தில் காரணம் கூறப்பட்டு, அந்தக் காரணம் இல்லை என்றால் அதைச் செயல்படுத்தத் தேவையில்லை என்று கூறலாம். ஆனால் வணக்க வழிபாடுகள் விஷயத்தில் இது பொருந்தாது.

ஸஹர் பாங்காக இருந்தாலும் தொழுகைக்காக அழைக்கப்படும் பாங்காக இருந்தாலும் பாங்கு என்பது ஒரு வணக்கமாகும். இது போன்ற இபாதத்துகளில் காரணம் இருந்தால் செய்ய வேண்டும். காரணம் இல்லாவிட்டால் அந்த வணக்கத்தையே விட்டு விட வேண்டும் என்பதெல்லாம் கிடையாது.

தொழுகைக்கு அழைக்கப்படும் பாங்கையே எடுத்துக் கொள்வோம். தொழுகைக்கான நேரத்தை மக்களுக்கு அறிவிப்பதற்காகத் தான் பாங்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

மக்களின் எண்ணிக்கை அதிகமான போது, அவர்கள் அறிந்திருக்கின்ற ஏதாவது ஒரு முறையில் தொழுகையின் நேரத்தை அறிந்து கொள்ள ஆலோசித்தனர். அப்போது நெருப்பை மூட்டுவதன் மூலமோ, மணி அடிப்பதன் மூலமோ அறிந்து கொள்ளலாம் என கருத்துச் சொல்லப்பட்டது. ஆனால் பாங்கின் வாசகங்களை இரட்டை இரட்டையாகவும் இகாமத்தின் வாசகங்களை ஒற்றையாகவும் சொல்லுமாறு பிலால் (ரலி) கட்டளையிடப்பட்டார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி 606

தொழுகையின் நேரத்தை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பது தான் தொழுகைக்கான பாங்கின் நோக்கம் என்பது தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. "இன்று நேரத்தைத் தெரிந்து கொள்வதற்கு எத்தனையோ வழிமுறைகள் கையாளப்படுகின்றன. நேரத்தை அறிந்து கொள்வது என்ற காரணம் நிறைவேறிவிடுமானால் அதுவே போதுமானதாகக் கொள்ளலாம்” என்று இவர்கள் கூறும் வியாக்கியானத்தின் அடிப்படையில் தொழுகைக்கு பாங்கு சொல்லத் தேவையில்லை என்று இவர்கள் வாதிடுவார்களா?

"நீங்கள் பூமியில் பயணம் மேற்கொள்ளும் போது மறுப்போர் உங்களைத் தாக்கக் கூடும் என்று அஞ்சினால் தொழுகையைச் சுருக்கிக் கொள்வது உங்கள் மீது குற்றம் ஆகாது (4:101) என்று தானே அல்லாஹ் கூறுகின்றான். தற்போது மக்களுக்குப் பாதுகாப்பு ஏற்பட்டு விட்டதே?” என்று நான் உமர் (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: "உங்களுக்கு ஏற்பட்ட வியப்பு எனக்கும் ஏற்பட்டது. எனவே இது குறித்து நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அப்போது, "அல்லாஹ் உங்களுக்கு வழங்கிய கொடையாகும். அவனது கொடையை நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: யஅலா பின் உமைய்யா (ரலி), நூல்: முஸ்லிம் 1222

இறை மறுப்பாளர்கள் தாக்குவார்கள் என்ற அச்சம் இருந்தால் பயணத்தின் போது தொழுகையை சுருக்கிக் கொள்ள இறைவன் அனுமதி அளித்தான். இந்தக் காரணம் நீங்கி விட்டதால் இப்போது சுருக்கித் தொழத் தேவையில்லையே என்ற சந்தேகத்தை உமர் (ரலி) அவர்கள் கேட்கும் போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக உங்களுக்கு முன் சென்றோர் மீது கடமையாக்கப் பட்டது போல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. (அல்குர்ஆன் 2:187)

இந்த வசனத்தில் இறையச்சம் ஏற்பட வேண்டும் என்பதற்காக நோன்பு கடமையாக்கப் பட்டுள்ளது என்று அல்லாஹ் கூறுகின்றான். இன்று யாராவது ஒருவர் எனக்கு இறையச்சம் நிறைய இருக்கின்றது, அதனால் நான் நோன்பு நோற்கத் தேவையில்லை என்று வாதிட்டால் ஏற்றுக் கொள்ள முடியுமா?

காரணத்தோடு ஒரு விஷயம் சொல்லப்பட்டால் அந்தக் காரணம் இல்லாவிட்டால் பின்பற்றத் தேவையில்லை என்பது வணக்க வழிபாடுகளுக்குப் பொருந்தாது என்பதை விளங்கிக் கொள்ள இதுவே போதுமானதாகும்.

தங்களது கருத்தை நியாயப் படுத்துவதற்காக மேலும் சில வாதங்களையும் முன் வைத்துள்ளனர்.

இரண்டு பாங்குக்கும் இடையிலுள்ள இடைவெளி மேடையில் ஏறி இறங்கும் நேரம் தான் என்று ஹதீஸில் இடம் பெறுகின்றது. அதாவது இரண்டு பாங்குக்கும் இடையில் அதிகப்படியாக ஐந்து நிமிட இடைவெளி தான் இருக்கும் என்று தெரிய வருகின்றது… ஐந்து நிமிட இடைவெளிக்குள் இரண்டு பாங்குகள் சொல்லும் போது மக்களிடம் குழப்பமான நிலை ஏற்படும் என்று கூறியுள்ளனர்.

மேடையில் ஏறி, இறங்கும் நேரம் தான் என்று ஒரு அறிவிப்பாளர் கூறுவதை மட்டும் அடிப்படையாக வைத்து, ஐந்து நிமிட இடைவெளி என்று முடிவு செய்ய முடியாது. ஏனெனில் மற்றொரு அறிவிப்பில், ஸஹருக்கும், சுப்ஹுக்கும் இடையில் ஐம்பது வசனங்கள் ஓதும் அளவுக்கு இடைவெளி இருக்கும் என்று அனஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள். (புகாரி 1921)

ஐம்பது வசனங்கள் ஓதும் நேரம் என்பது சாதாரணமாக நிறுத்தி நிதானமாக ஓதினால் இருபது நிமிடத்திலிருந்து அரை மணி நேரம் வரை தேவைப்படும். எனவே இரண்டு பாங்குக்கும் இடையில் அரை மணி நேரம் இடைவெளி விடலாம். ஆனால் இவர்களாக ஐந்து நிமிட இடைவெளி என்று தீர்மானித்துக் கொண்டு அதனால் குழப்பம் ஏற்படும் என்று கூறுகின்றனர்.

ஒரே ஊரில் பல பள்ளிகள் இருப்பதால் எல்லா பள்ளிகளிலும் பாங்கு சொல்லும் போது இது முதலாவதா, இரண்டாவதா என்பது தெரியாமல் மக்களிடம் குழப்பம் அதிகரித்து விடும் என்றும் கூறியுள்ளனர்.

ஸஹர் பாங்கு என்ற நபிவழியைப் புறக்கணிப்பதற்காக, நேரம் அறிந்து கொள்ள எத்தனையோ வழிமுறைகள் இருப்பதாக வாதிட்டார்கள். ஆனால் அதே சமயம், "இரண்டு பாங்கு சொல்லப்படும் போது பாங்கின் நேரத்தை வைத்து இது எந்த பாங்கு என்பதைத் தீர்மானிக்கலாம்” என்று கூறாமல் "குழப்பம் அதிகரிக்கும்” என்று கூறுகின்றனர் என்றால் இவர்களுக்கு ஹதீஸைச் செயல் படுத்துவதில் எந்த அளவுக்கு ஈடுபாடு உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த ஸஹர் பாங்கை, இது போன்ற பொருந்தாத காரணங்களைக் கூறி புறக்கணிக்கின்றனர். மக்களிடம் வழக்கத்தில் இல்லை என்றால் உரிய முறையில் அறிவிப்புச் செய்து விட்டு அதை நடைமுறைப்படுத்த வேண்டும். இத்தனை மணிக்கு ஸஹர் பாங்கு சொல்லப்படும்,இத்தனை மணிக்கு சுப்ஹ் பாங்கு சொல்லப்படும் என்பதை போஸ்டர்கள் மூலமோ,பிரசுரங்கள் மூலமோ அறிவிப்புச் செய்தால் எந்தக் குழப்பமும் ஏற்படாது. இன்று பல ஊர்களில் தவ்ஹீது ஜமாஅத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் ஸஹர் பாங்கு சொல்லப்படுகின்றது. அந்த ஊர்களிலெல்லாம் எந்தக் குழப்பமும் ஏற்படவில்லை. குழப்பம் இவர்களுடைய கொள்கையில் தான் உள்ளது.

விரலசைத்தல், நெஞ்சின் மீது கை கட்டுதல், இரவுத் தொழுகை போன்றவற்றுக்குத் தெளிவான ஆதாரங்கள் இருந்த போதும், மக்களிடம் நடைமுறையில் இல்லை என்பதால் அதைக் குழப்பம் என்று குராபிகள் கூறினர். இப்போது அதே வழிமுறையைப் பயன்படுத்தி, இவர்களும் தாங்கள் செயல் படுத்தவில்லை என்பதற்காக, நபிவழியைக் குழப்பம் என்று கூறுகின்றார்கள் என்றால் இவர்கள் எந்த நிலைக்குச் சென்று விட்டார்கள் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இதன் மூலம் இவர்கள் தங்களைக் கிப்லாவாக்கி, அதற்குத் தக்க ஹதீஸ்களைத் திருப்பவும், வளைக்கவும் முனைந்துள்ளார்கள்.

திடல் தொழுகையும் திரிபு வாதமும்

அன்றைய யூத, கிறித்தவர்கள் குர்ஆனின் கட்டளைக்குத் தங்களை மாற்றிக் கொள்ள மறுத்து, திரிபு வாதம் செய்தது போல் – இன்றைய குராபிகள் மார்க்கத்துக்குத் தக்கவாறு தங்களை மாற்றிக் கொள்ளாமல் திரிபு வாதம் செய்வது போல் – இவர்களும் திடல் தொழுகை விஷயத்தில் திரிபு வாதம் செய்கின்றனர். அதிலும் நாம் திடல் தொழுகையை அமுல் படுத்தி விட்டோம் அல்லவா? அதனால் இதை அவர்கள் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

திடலில் கண்டிப்பாகத் தொழுது தான் ஆக வேண்டுமா? இது ஜாக் பரிவாரத்தின் அடுத்த கேள்வி!

இப்படிப்பட்ட வாதங்களைச் சத்தியத்தைப் பின்பற்றும் ஒருவர் எழுப்ப முடியுமா?என்பதை ஜாக்குக்கு வக்காலத்து வாங்குவோர் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

உண்மையில் இதுவும் ஒரு கேலிக் கூத்தான கேள்வியாகும். விரல் அசைக்கும் ஹதீஸை நாம் எடுத்து வைத்தவுடன் குராபிகள் இந்த வாதத்தைத் தான் எடுத்து வைத்தனர். அதே வாதத்தை இன்று இவர்களும் தூக்கிப் பிடிக்கின்றனர்.

இப்படிக் கேட்கும் இவர்களிடம் திரும்பத் திரும்ப, பல அடுக்கடுக்கான கேள்விக் கணைகளைத் தொடுக்கலாம்.

தொழுகையில் தக்பீர் சொன்னதும் நெஞ்சில் கைகளை வைத்துத் தான் ஆக வேண்டுமா? ருகூவில், சுப்ஹான ரப்பியல் அழீம் என்று சொல்லித் தான் ஆக வேண்டுமா? இப்படித் தொழுகையில் செய்ய வேண்டிய சுன்னத்துக்களையே ஏராளமாகப் பட்டியல் போடலாம். இவ்வளவு ஏன்? பெருநாள் தொழுகையைத் தொழுது தான் ஆக வேண்டுமா? என்று கூடக் கேட்கலாம். இப்படிச் சிந்திக்க ஆரம்பித்தால் ஒரு சுன்னத்தைக் கூட நடைமுறைப் படுத்த முடியாது. இப்படி நகைப்பிற்குரிய கேள்வியைத் தான் இன்று இவர்கள் கிளப்பிக் கொண்டிருக்கின்றார்கள்.

இவர்கள் இன்று இவ்வாறு கூறக் காரணம் இந்த சுன்னத்தை நாம் அமல் படுத்துகிறோம் என்பதைத் தவிர வேறு இல்லை.

ஏனென்றால் பெருநாள் தொழுகையைத் திடலில் தொழ வேண்டும் என்ற கருத்தில் தான் இவர்கள் ஏற்கனவே இருந்தனர். தற்போது நாம் அதை நாகர்கோவிலில் செயல்படுத்திய பிறகு தான் இந்தக் கேலிக் கூத்தான கேள்விகளை எல்லாம் கேட்டு,திடல் தொழுகையை மறுக்கின்றார்கள். இதற்கு அவர்களது இதழிலிருந்தே நாம் ஆதாரம் காட்ட முடியும்.

பெருநாள் தொழுகையை திறந்த வெளியில் தான் தொழ வேண்டும்

நபி (ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகையை பள்ளியில் தொழுததாக ஆதாரம் இல்லை.

முதலில் நாம் குறிப்பிட்டுள்ள உம்மு அதிய்யா (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸில் முஸல்லா தொழும் இடத்திற்குப் புறப்பட்டுச் செல்லுமாறு வந்துள்ளது. பள்ளியாக இருந்தால் மஸ்ஜித் என்ற வாசகம் இடம் பெற்றிருக்கும்.

நபி (ஸல்) அவர்கள் பெருநாள் தொழுகைக்கு ஒரு வழியில் சென்று மற்றொரு வழியில் திரும்பி வருவார்கள் என்ற புகாரி, முஸ்லிமில் வரும் ஹதீஸும் அவர்கள் பள்ளியில் தொழ வைக்கவில்லை என அறிவிக்கின்றது.

ஏனெனில் அவர்களின் வீடு பள்ளிவாசலிலேயே அமைந்திருந்தது.

ஒரு பெருநாளில் மழை பெய்ததால் தொழுகையைப் பள்ளிவாசலில் தொழ வைத்தார்கள் என்று அபூதாவூத், இப்னுமாஜா ஆகிய நூல்களில் வரும் ஹதீஸ் பலவீனமானதாகும். ஏனெனில் ஈஸா பின் அப்துல் அஃலா என்ற ஒருவர் வழியாக இது அறிவிக்கப் பட்டுள்ளது. இவர் யாரென்றே அறியப்படாதவர்.

அல்ஜன்னத் நவம்பர் 2002 இதழில் 24ம் பக்கத்தில் இவ்வாறு எழுதியுள்ளார்கள்.

இந்தக் கட்டுரையைத் தங்கள் இதழில் எழுதிய காலத்திலும் இவர்கள் பள்ளியில் தான் தொழுது கொண்டிருந்தார்கள். ஆனாலும் உள்ளதை மறைக்காமல் அப்படியே எழுதினார்கள். இன்று மாறுகின்றார்கள்; மறுக்கின்றார்கள் என்றால் நாம் இதைக் கோட்டாரில் சொல்லி, அங்கேயே நபிவழிப்படி திடல் தொழுகையைச் செயல்படுத்திக் காட்டியதைத் தான் அவர்களால் தாங்க முடியவில்லை.

தாங்களே கூறி வந்த கருத்துக்கு மாற்றமாக இன்று இவர்கள் திடல் தொழுகையை மறுப்பதற்குத் தனி நபர் மீதுள்ள காழ்ப்புணர்ச்சியும், அதற்காக மார்க்கத்தையே மாற்றத் துணிந்ததும் தான் காரணம்.

இதில் இன்னும் வேதனை என்னவென்றால் சில ஜாக் வெறியர்கள், "ஐந்து வேளைத் தொழுகைகளையும் திடலில் போய் தொழ வேண்டியது தானே?” என்றும் கேலி செய்துள்ளனர்.

இவர்கள் யாரிடம் இந்தக் கேள்வியைக் கேட்கின்றார்கள்? நம்மிடமா? அல்லது நாம் யாரை வழிகாட்டியாகக் கொண்டு இந்த சுன்னத்தை நடைமுறைப் படுத்துகின்றோமோ அந்த அல்லாஹ்வின் தூதரிடம் இந்தக் கேள்வியைக் கேட்கின்றார்களா?

குர்ஆன், ஹதீஸ் என்ற பெயரை வைத்துக் கொண்டு இவர்கள் எந்த நிலைக்குச் சென்று விட்டார்கள் என்று பாருங்கள். திடல் தொழுகையை அறிவித்து நமது ஜமாஅத் சார்பில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளையும் இவர்கள் கிழித்து எறிந்துள்ளனர்.

அஷ்ரப் பள்ளியில் அரங்கேறிய அநியாயம்

அல்லாஹ்வின் பள்ளிவாசல்களில் அவனது பெயர் கூறப்படுவதைத் தடுத்து,அவற்றைப் பாழாக்க முயல்பவனை விட பெரும் அநீதி இழைத்தவன் யார்? பயந்து கொண்டே தவிர அவற்றில் நுழையும் உரிமை அவர்களுக்கு இல்லை. அவர்களுக்கு இவ்வுலகில் இழிவும், மறுமையில் கடுமையான வேதனையுமுண்டு.

(அல்குர்ஆன் 2:114)

இந்த வசனம் தவ்ஹீதுவாதிகள் பலருக்கு மனப்பாடமே ஆகி விட்டது. அந்த அளவுக்கு அந்த வசனத்தைத் திரும்பத் திரும்ப மக்கள் மன்றத்தில் வைத்தோம். காரணம் தவ்ஹீதைச் சொன்னவுடன் முதன்முதலில் பள்ளிவாசலில் தொழுவதற்குத் தான் குராபிகள் தடை விதித்தனர்; அடித்து விரட்டினர்; "தொழக் கூடாது” என்று கரும் பலகைகளில் சாக்பீஸால் எழுதினால் அழிந்து விடும் என்று கருதிப் பெயிண்டால் எழுதி வைத்தனர்.

காவல் துறை, நீதி மன்றம் என்ற இது தொடர்பான வழக்குகள் இன்றும் நிலுவையில் உள்ளன. ஐந்து நேரத் தொழுகைகளின் போது அடிக்கடி இந்த அத்துமீறல்கள், அடிதடித் தகராறுகள், அக்கிரமங்கள் அரங்கேறிக் கொண்ருக்கும் வேளையில் தான் தனிப் பள்ளி கட்டினோம். சில இடங்களில் ஏற்கனவே இருந்த பள்ளிகளும் அல்லாஹ்வின் கிருபையால் நம் கைவசமாயின. அப்படிக் கைவசமான ஒரு பள்ளி தான் கோட்டாரில் உள்ள பள்ளிவாசல்.

இன்று அந்தப் பள்ளியின் அவல நிலையைப் பாருங்கள். வெகு வேகமாக ஏகத்துவம் வளர்ந்து கொண்டிருக்கும் இந்தக் குறுகிய கால கட்டத்திலேயே அல்லாஹ்வின் அருட்கொடையை மறுக்கும் நிலைக்கு ஜாக் சென்று கொண்டிருக்கின்றது.

தவ்ஹீத் ஜமாஅத்தைச் சேர்ந்த ஒரு சகோதரர் அந்தப் பள்ளியில் தொழுது கொண்டிருக்கின்றார். அவர் தொழுது கொண்டிருக்கும் போதே அவரது காதில் விழுமாறு கிண்டல் செய்கின்றனர் ஜாக்கினர்.

குராபிகள் செய்த அதே வேலையை நூற்றுக்கு நூறு அப்படியே பின்பற்றுகின்றனர். தொழுது முடித்தவுடன் பள்ளியின் செயலாளர் – நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். குராபி பள்ளியின் செயலாளர் அல்ல. தவ்ஹீது பள்ளியின் செயலாளர் – தொழுத சகோதரரைப் பார்த்து, "நீ இங்கு தொழ வரக் கூடாது” என்று எச்சரிக்கை விடுக்கின்றார். அதற்கு அந்தச் சகோதரர் மேலே இடம் பெற்றுள்ள 2:114 வசனத்தைச் சுட்டிக் காட்டியிருக்கின்றார்.

"அந்த வசனம் எங்களுக்குத் தெரியும்” என்று பதில் அளித்துள்ளார். இதன் பொருள் என்ன? "இந்த வசனத்தின் இறைக் கட்டளையை மறுத்து, நிராகரித்துத் தான் உன்னை வெளியே தூக்கி எறிகின்றேன்” என்று அவர் எக்காளமிட்டிருக்கின்றார்.

சுன்னத் வல் ஜமாஅத்தில் நடந்த இந்த அட்டூழியங்களை எதிர்த்துத் தானே போர்க் குரல் உயர்த்தி, போர்க் கொடி தூக்கினோம். தனிப் பள்ளி கட்டினோம்.

இன்று இந்த அக்கிரத்தை, அநியாயத்தை, அழிச்சாட்டியத்தை குர்ஆன், ஹதீஸின் படி செயல் படுகின்றோம் என்று ஜம்பம் அடிக்கும் ஜாக்கின் நிர்வாகச் சக்கரவர்த்திகள் அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றனர்.

எனவே தவ்ஹீத் ஜமாஅத்தின் மீது கொண்டுள்ள வெறுப்பிலும், வீராப்பிலும் இவர்கள் எத்தகைய அக்கிரமத்தையும் செய்யத் தயங்க மாட்டார்கள் என்பதற்கு இவை நிதர்சனச் சான்றுகள்; சாட்சியங்கள்.

நம் மீது கொண்டுள்ள வெறுப்பு காரணமாக அல்லாஹ்வின் மீது போர் தொடுக்கும் அநியாயத்தைக் கூட செய்யத் துணிந்து விட்டார்கள் என்பதைப் பார்க்கும் போது, ஜாக் சறுகல் பாதையில் சரியான வேகத்தில் சென்று கொண்டிருக்கின்றது என்பதை நாம் தெளிவாக உணரலாம்.