ஜின் இனம் மனிதனிடம் பாலியல் சேட்டை செய்யுமா?

ஜின் இனம் மனிதனிடம் பாலியல் சேட்டை செய்யுமா?

பி (ஸல்) அவர்களுடன் போரில் ஈடுபட்டிருந்த – புதிதாகத் திருமணமான நபித்தோழர் வீடு சென்று திரும்புவதற்காக அனுமதி கேட்கிறார். வீட்டு வாசலில் அவரது மனைவி நிர்வாண கோலத்தில் நிறபதைக் கண்டு அவளைக் கொல்ல வாளை உருவுகிறார், அதற்கு அவர் மனைவி, “சற்றுப் பொருங்கள்! வீட்டினுள்ளே என்னை விபச்சாரத்திற்காக ஒருவன் அழைக்கிறான். ஆகவே இந்தக் கோலத்தில் நான் ஓடி வந்தேன்” என்றார். உருவிய வாளுடன் உள்ளே சென்றவர் ஒரு பாம்பைக் காணுகிறார். அதைக் கொன்றும் விடுகிறார். போர் முடிந்து திரும்பி வந்த நபி (ஸல்) அவர்கள் அதைக் கேள்விப்பட்டு அந்த நபித்தோழரை அழைக்கிறார்கள். உங்கள் வீட்டுக்கு வந்தது பாம்பு அன்று; அது ஜின்; அதைக் கொன்றதால் அதே இடத்திலேயே உமக்கும் மரணம் வரும் என்கிறார்கள். அது போலவே ஸஹாபியும் சில வருடங்கள் கழித்து அவர் வீட்டிலேயே மரணமடைந்தார். இந்தச் சம்பவத்தை மதீனாவில் உள்ள இஸ்லாமியப் பல்கலைக் கழகத்திலிருந்து வந்து உரையாற்றிய இலங்கை மவ்லவி மஹ்மூத் தவ்பீக் என்பவர் குறிப்பிட்டார். இது ஆதாரப்பூர்வமான செய்தியா?

முஹம்மது அலி சீனி, புகைரா, ksa

பதில்

இது அர்த்தமற்ற கட்டுக் கதை! மதீனாவில் உள்ள இஸ்லாமியப் பல்கலைக் கழகத்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்டாலும் அதை நம்பக் கூடாது. சவூதியில் உள்ள இஸ்லாமியக் கல்விக் கூடங்கள் வந்த வழியே திரும்பிச் செல்ல ஆரம்பித்துள்ளதை சமீபகாலமாக நாம் கண்டு வருகிறோம். மத்ஹபுகள் அவசியம் தான், தராவிஹ் 20 ரக்அத்துக்கள் தான் என்றெல்லாம் அங்கிருந்து வெளியாகும் பத்வாக்களும் இது போன்ற கட்டுக் கதைகளும் இதை உறுதி செய்கின்றன.

இவ்வாறு நாம் அல்ஜன்னத் இதழில் பதிலளித்து இருந்தோம். இந்தப் பதிலைக் குறித்து இலங்கை ஜம்மியது அன்ஸாருஸ்ஸுன்னா அமைப்பின் தலைவர் அபூபக்கர் சித்தீக் மதனி பின்வருமாறு மறுத்து நமக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அஸ்ஸலாமு அலைக்கும். தஃவாப் பணியில் ஈடுபடுகின்ற தாங்கள் உடல், உள, ஆன்ம நலம் பெற்று வாழப் பிரார்த்தனைகள். தங்களை ஆசிரியராகக் கொண்டு வெளி வருகின்ற அல்ஜன்னத் இதழ் தமிழ் பேசும் முஸ்லிம்களில் அல்குர்ஆன் அஸ்ஸுன்னாவின் அடிப்படையில் வாழ வேண்டுமென்ற ஆர்வமுள்ளவர்கள் மத்தியில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருவது மகிழ்ச்சிக்குரிய விஷயமாகும். இருந்தும் சில விடயங்களில் உங்களது எழுத்தோட்டங்கள் சத்தியத்தை நேசிக்கின்றவர்களது மனதைப் புண்படுத்தும்படி அமைந்து விடுகின்றது. இவை கட்டாயம் தவிர்ந்து கொள்ளப்படல் வேண்டும் என்பதை சகோதர வாஞ்சையோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

“1996 ஜுன், ஜுலை அல்ஜன்னத் இதழில் கேள்வி பதில் பிரிவில் 36ம் பக்கத்தில் முஹம்மது அலி சீனி, புகைரா, ksa  கேட்ட கேள்விக்கு அளித்திருக்கிற பதிலைக் குறிப்பிட்டுக் காட்ட விரும்புகிறோம்.”

குறிப்பிட்ட விடயம் ஆதாரமற்ற கட்டுக்கதை எனக் குறிப்பிட்டுள்ளீர்கள். அத்தோடு மதீனா  இஸ்லாமியப் பல்கலைக் கழகம், சவூதியிலுள்ள பல்கலைக் கழகங்கள் என்பவற்றைத் தரக் குறைவாக விமர்சித்துள்ளீர்கள். இது அந்தக் கேள்விக்குரிய பதிலில் வர வேண்டியதுமில்லை. அத்துடன் மவ்லவி முஹம்மத் தவ்பீக் உரையாற்றிய விடயம் – கேள்வி கேட்டவர் எழுதிய விதத்தில் அல்லாது கொஞ்சம் வித்தியாசமாக ஸஹீஹுல் முஸ்லிமில் இடம் பெற்றுள்ளது. விடயத்தைப் பார்த்தால் புரிந்து கொள்ள முடியும்.

எந்த விடயத்திலும் அவசரப்பட்டு முடிவெடுக்காமல் நிதானமாகச் சிந்தித்து எழுதுவது அல்ஜன்னத்தின் வளர்ச்சிக்கும் இஸ்லாமிய தஃவாவின் வெற்றிக்கும் பேருதவியாக அமையும் என்பதைக் கூறிக் கொள்கிறோம்.

இப்படிக்கு,

அபூபக்கர் சித்தீக் மதனீ,

இது தான் அந்த மடல். இந்த மடலுடன் ஸஹீஹ் முஸ்லிமில் இடம் பெற்றதாகக் கடிதத்தில் கூறப்படும் ஹதீஸின் ஜெராக்ஸ் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது.

இதற்கு பீஜே அளித்த பதில்:

தாங்கள் இரண்டு விடயங்களை உங்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள்! நல்ல எண்ணத்தில் தாங்கள் சுட்டடிக்காட்டிய விடயங்களுக்காக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

முதலாவது விடயம் மதீனாவில் உள்ள பல்கலைக் கழகங்களைத் தரக் குறைவாக விமர்சனம் செய்ததாக நீங்கள் குறிப்பிட்டிருப்பது.

மிகப் பெரிய இமாம்கள், பெரியார்கள், தவறான கருத்தைக் கூறியதாகத் தெரிய வரும் போது தாட்சண்யமின்றி கடந்த பத்து வருடங்களில் விமர்சித்துள்ளோம். அத்தகைய விமர்சனங்களை ஏகத்துவவாதிகள் அனைவரும் மறுப்பின்றி அங்கீகரித்துக் கொண்டோம். மதீனாப் பல்கலைக் கழகம் குறித்து சில தவறுகளைச் சுட்டிக் காட்டும் போது மட்டும் அதற்காக வேதனைப்படுவதை நாம் சரி என ஏற்க முடியாது.

மதீனாவில் உள்ள பல்கலைக் கழகம் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவையல்ல. நமக்கு நெருக்கமானவர்கள் என்பதற்காகத் தவறுகளைச் சுட்டிக் காட்டாமலும் இருக்க முடியாது.

இது இன்று நேற்று எடுக்கப்பட்ட முடிவன்று. ஆரம்பம் முதலே அல்ஜன்னத்தின் நிலைப்பாடு இது தான். “தவறுகள் எவரிடமிருந்து வந்தாலும் அந்தத் தவறுகளை மட்டும் தாட்சண்யமின்றி விமர்சிப்போம். தவறிய மனிதர்களைத் தரக் குறைவாக விமர்சிக்க மாட்டோம்” எனபதைச் சபதம் ஏற்போம் என்ற தலைப்பில் அடிக்கடி வெளியிட்டு வருவதையும் தாங்கள் அறிவீர்கள்.

தராவிஹ் 20 ரக்ஆத்கள் என்று மதீனாவிலிருந்து பத்வா வந்தது உண்மை. மத்ஹபுகளைப் பின்பற்ற வேண்டும் என்று அதிகாரப்பூர்வமாக பத்வா கொடுத்ததும் உண்மை. நீங்களும் நாமும் பிரச்சாரம் செய்து வரும் கொள்கைக்கு இவை எதிரானவை என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை.

நீங்களும் அங்கே த.வாப் பணியில் ஈடுபட்டுள்ள மதனிகளும் அங்கே படித்த காலத்தில் மத்ஹபுகள் கூடாது என்றே உங்களுக்குப் போதிக்கப்பட்டு வந்தது. எட்டு ரக்அத்கள் என்பதை அங்கிருந்து தான் தெளிவாகக் கற்று வந்தீர்கள். அந்த நிலை இன்று மாறி விட்டது. வந்த வழியே திரும்பிச் செல்கிறது என்ற உண்மையைத் தான் நாம் எழுதினோம்.

இது போன்ற விமர்சனம் தரக் குறைவானது என்றால், மத்ஹபுவாதிகள், தர்காவாதிகள், தரீக்காவாதிகள் ஆகியோரின் தவறுகளை சுட்டிக் காட்டுவது எவ்வகையில் நியாயம்? நமக்கு வேண்டப்பட்டவர்களின் தவறுகளைக் கண்டு கொள்ளாமல் வேண்டப்படாதவர்களின் தவறுகளை மட்டும் விமர்சிப்பதில் நமக்கு உடன்பாடில்லை.

அந்தக் கேள்விக்குரிய பதிலில் அது வரவேண்டியதில்லை எனக் குறிப்பிட்டுள்ளீர்கள். கேள்வி கேட்டவர் ஓர் ஆலிம் இப்படிக் கூறுகிறார் என்று குறிப்பிட்டால் மதீனாப் பல்கலைக் கழகத்தைப் பற்றி நாம் குறிப்பிட்டிருக்க மாட்டோம். மதீனாவில் படித்த ஆலிம் என்று கேள்வி கேட்டவர் குறிப்பிட்டுள்ளார். மதீனாவில் படித்தவர் கூறுவதால் அது சரியாகத் தான் இருக்க முடியும் என்ற கருத்தை இது தருகிறது. அதை அகற்றுவது அந்த இடத்தில் அவசியமாகின்றது. அதனால் தான் மதீனா பல்கலைக் கழகத்தைப் பற்றி நாம் குறிப்பட வேண்டியதாயிற்று.

மதீனாப் பல்கலைக் கழகத்தில் படித்து குர்ஆன் ஹதீஸை நிலைநாட்டும் போராட்டத்தில் ஈடுபட்டு தியாகம் செய்பவர்களைக் குறித்து அந்த விமர்சனம் செய்யப்படவில்லை. அங்கே இன்று தரம் குறைந்து விட்டது என்று தான் விமர்சனம் செய்யப்பட்டது. அதற்காக யாரும் புண்பட வேண்டியதுமில்லை, புண்படவும் கூடாது.

இரண்டாவதாக நீங்கள் சுட்டிக்காட்டுவது பதிலில் கூறப்பட்ட விடயம் குறித்ததாகும்.

ஜின்கள் இருப்பதிலோ, அவை பல்வேறு வடிவங்களில் வீடுகளுக்குள் வரும் என்பதிலோ நமக்கு இரண்டாவது கருத்தில்லை. அதை நாம் என்றுமே மறுத்ததில்லை. ஆதாரப்பூர்வமான பல ஹதீஸ்கள் இது பற்றிக் கூறுவதால் யாரும் மறுக்க முடியாது.

ஜின் ஒன்று, ஒரு பெண்ணை விபச்சாரத்திற்கு வற்புறுத்தியதாகவும், அதனிடமிருந்து தப்பித்து அந்தப் பெண் நிர்வாணமாக ஓடி வந்ததாகவும், அந்த மவ்லவி பேசியதாகக் கேள்வியில் கூறப்பட்டுள்ளது.

மேலும், எந்த இடத்தில் அந்த ஜின்னை நபித்தோழர் கொன்றாரோ அதே இடத்தில் மரணம் வரும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாகவும் அந்த மவ்லவி பேசியதாகக் கேள்வியில் கூறப்பட்டுள்ளது. இது பற்றித் தான் கேள்வியும் கேட்கப்பட்டுள்ளது.

நீங்கள் அனுப்பிய ஜெராக்ஸில் இந்த விபரம் அறவே இல்லை.

பாம்பு வடிவில் ஜின் வீட்டில் வந்ததும் பயந்து கொண்டு அந்தப் பெண் வெளியே வந்ததாகவும், கணவர் உள்ளே சென்று பாம்பைக் கொல்வதற்காக ஈட்டியால் குத்தினார். அது அவரைத் தாக்கியது, இருவரும் இறந்து விட்டனர் என்று தான் அந்த ஹதீஸ் கூறுகிறது.

அந்த மவ்லவி உரையாற்றிய விதத்திலல்லாது கொஞ்சம் வித்தியாசமாக” ஹதீஸில் உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளீர்கள். இது கொஞ்சம் வித்தியாசம் என்று யாரும் கருத மாட்டார்கள்.

ஜின் ஒன்று பாம்பு வடிவில் வந்தது என்பதற்கும் மனித வடிவில் வந்து பெண்ணை நிர்வானப்படுத்திப் பலவந்தம் செய்தது என்பதற்கும் மலைக்கும் மடுவுக்குமுள்ள வித்தியாசம் உள்ளது.

பாம்பை அவர் கொன்று அவர் உயிருடன் இருந்ததாகக் கூறுவதும், அவர் இறந்து விட்டார் என்று கூறுவதும் கொஞ்சம் வித்தியாசம் அல்ல; நேர் முரணானது.

எந்த இடத்தில் பாம்பைக் கொன்றாயோ அதே இடத்தில் உனக்கு மரணம் வரும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாகக் கூறுவது கொஞ்சம் வித்தியாசம் அல்ல. நபி (ஸல்) அவர்கள் பெயரால் இட்டுக் கட்டப்பட்ட பச்சைப் பொய்யாகும்.

இந்த விடயங்களைக் குறித்துத் தான் இட்டுக்கட்டப்பட்ட கற்பனை என நாம் விமர்சனம் செய்தோம். ஹதீஸில் உள்ளதைத் தான் பேச வேண்டுமே தவிர அதில் இல்லாததை – கை, கால் வைத்துப் பேசக் கூடாது. அவ்வாறு பேசுவோர் யாராக இருந்தாலும் நாம் விமர்சனம் செய்து தான் ஆகவேண்டும். இதை மறுக்க மாட்டீர்கள் என்று நம்புகிறோம்.

அல் ஜன்னத்

ஆகஸ்ட்-1996

Leave a Reply

About Me

இறைவனின் திருப்பெயரால்…

  • இந்த தளத்தில் உள்ள செய்திகள் ஏகத்துவ கொள்கையை சொல்லும் பல்வேறு இணையதளத்தில் இருந்து எடுத்து தொகுக்கப்பட்டவை (ஆன்லைன்பீஜே, ஆன்லைன் டிஎன்டிஜே, etc).
  • இதில் தவறான கருத்துகள் ஏதேனும் இருப்பின் அதை Facebook page https://www.facebook.com/Thowheed.org என்ற முகவரிக்கு அனுப்பி தெரிவிக்கலாம்.
  • உங்கள் ஆக்கங்களையும்
  • Facebook page https://www.facebook.com/Thowheed.org என்ற முகவரிக்கு
  • என்ற முகவரிக்கு அனுப்பவும். ஆசிரியர் சரிபார்த்தபின் வெளியிடப்படும்.
  • இந்த தளத்திற்கும் எந்த அமைப்பிற்கும் எந்த தொடர்பும் கிடையாது.

You may want to read

Follow Us

Sign up for our Newsletter

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit