தடைகளைத் தாண்டி நடைபோடும் தவ்ஹீத் ஜமாஅத்

தடைகளைத் தாண்டி நடைபோடும் தவ்ஹீத் ஜமாஅத்

ஏகத்துவம், ஜனவரி 2005 இதழில் வெளிவந்த கட்டுரை


வ்ஹீத் ஜமாஅத்திற்குத் தடைகள் என்பது புதியவை அல்ல! அந்தத் தடைகள் சமுதாய ரீதியாக இருப்பினும் சரி! அல்லது ஆட்சியாளர்கள் மூலம் ஏற்படுத்தப்படும் தடைகளானாலும் சரி! அவற்றையெல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளால் தகர்த்தெறிந்து கொண்டு வருகின்றது.

அந்த அடிப்படையில் கடந்த டிசம்பர் 6 அன்று தவ்ஹீத் ஜமாஅத்திற்கு ஒரு புதிய அனுபவம். இது வரை இன்னொரு முகாமிலிருந்து டிசம்பர் ஆறை நாம் சந்தித்துக் கொண்டிருந்தோம். ஆனால் இப்போது நமக்கென்று உள்ள சொந்த முகாமில் இருந்து கொண்டு சுடர் முகம் தூக்கி இந்த நாளைச் சந்தித்துள்ளோம்.

இவ்வாறு நம்முடைய அமைப்பிலிருந்து டிசம்பர் 6 ஐ சந்திக்கவிருந்த வேளையில்,ஆட்சிப் பொறுப்பேற்ற நாளிலிருந்து இது வரை எந்தத் தடையும் போட்டிராத அதிமுக அரசு அதற்குத் தடை போட்டது. மாற்று முகாம் தங்களுக்குக் கூட்டம் வராது என்பதைச் சரியான முறையில் அனுமானித்து, பத்திரிகைகளில் செய்தி வந்தால் போதும் என்பதை மட்டும் மையக் குறிக்கோளாகக் கொண்டு முற்றுகைப் போர் என்று அறிவித்திருந்தது. எனவே அரசின் இந்தத் தடை அவர்களுக்கு லாபம் தான். ஆனால் நமக்கு அது நட்டம்.

எவ்வாறு நாம் நினைத்திருந்தோம்? நாம் நடத்தவிருக்கும் ஆர்ப்பாட்டத்திற்கு தவ்ஹீது வட்டத்தைத் தாண்டி பொதுமக்களை எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். அதுவும் தர்ஹாக்கள் கூடாது, மத்ஹபுகள் கூடாது, மவ்லிதுகள் கூடாது, தொழுகையில் நபிவழியைப் பின்பற்றி விரலசைத்தல் ஆகியவற்றின் மூலம் நம்மை தவ்ஹீதுவாதிகள் என்று அடையாளம் காட்டிக் கொண்டு, கூட்டணிக்காக கொள்கையை விட மாட்டோம் என்பதைத் தெளிவாக அறிவித்து நடத்தும் இந்தப் போராட்டத்திற்கு வருகின்ற பொதுமக்களின் வரத்தை இந்தத் தடை பாதிக்குமே என்று கவலைப்பட்டோம்.

தடை உடைத்த மக்கள் வெள்ளம்

எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! இத்தனை தடைகளையும் தாண்டி நம் சகோதரர்கள் பெண்களையும் அழைத்துக் கொண்டு மடை உடைத்த வெள்ளம் போல் தடையை உடைத்து மக்கள் வெள்ளமாகத் திரண்டனர். எத்தனை தடைகள் வந்தாலென்ன? அவை அத்தனையையும் தாங்கும் தடந்தோள்கள் எங்களுக்கு உண்டு என்று அணி அணியாய் வந்த அந்த மக்கள் கூட்டத்தைக் கண்டு அல்லாஹ்வுக்கு மீண்டும் மீண்டும் நாம் நன்றிகளைச் சமர்ப்பித்துக் கொண்டிருந்தோம்.

அதுவும் பெண்கள், பிள்ளை குட்டிகளை அழைத்துக் கொண்டு வந்த போது, நீங்கள் கைதாக வேண்டாம் என்று நாம் சொன்னால், நாங்கள் என்ன சளைத்தவர்களா?நாங்களும் கைதாகின்றோம் என்று கைதான காட்சி நம் உள்ளங்களை நெகிழச் செய்தது.

இது போன்ற சமுதாயப் பிரச்சனைகளை நாம் கையில் எடுப்போம் என்று அன்று நாம் ஒன்றாக இருந்த அமைப்பிடமே கேட்டோம்; கெஞ்சினோம். அந்தத் தலைமையோ இந்த விவகாரங்களைக் கையில் எடுத்தால் நமது வருவாய் பாதித்து விடும் என்று கணக்குப் போட்டு கழன்று விட்டது. அதனால் சமுதாயப் பிரச்சனைகளுக்கு நாம் கண்ட தனி இயக்கமும் மக்கள் கூட்டத்தைக் கண்டவுடன் தடுமாறி தடம் மாறினார்கள். தவ்ஹீத் என்றதும் முகம் சுளிக்க ஆரம்பித்தனர். நாம் ஒரு சிகரத்தை எட்டி விட்டோம் என்று சித்த பிரமைக்குள்ளானார்கள். இறுதியில் தவ்ஹீத்வாதிகளைக் கழற்றி விடவும் செய்தார்கள்.

நாம் இப்படி ஏமாற்றப்படுவோம் என்று கடுகளவும் எண்ணியிருக்கவில்லை. காரணம் நமக்கு மறைவான ஞானம் இல்லை. சமுதாயப் பிரச்சனைகளை நாமே கையில் எடுத்து போராட வேண்டும் என்ற சிந்தனையின் கன்னி முயற்சி தான் டிசம்பர் ஆறு அன்று நடந்த முதல் போராட்டம். தவ்ஹீத் ஜமாஅத்தின் தனி முத்திரை பதித்த போராட்டம்.

காக்கிச் சட்டையைக் கண்டாலே கை, கால் தந்தி அடிக்கும் சமுதாயத்தினரை லத்தியல்ல, துப்பாக்கி ஏந்தி வரும் காவல் துறையினரைக் கூட துணிவாகப் பார்க்கும் சிங்கங்களாக ஆக்கியது எது? ஏகத்துவம் அல்லவா? இம்மையின் நம்பிக்கையை நிர்மூலமாக்கி, மறுமையின் நம்பிக்கையை அவர்களின் நெஞ்சங்களில் பதிய வைத்தது சத்தியக் கொள்கை அல்லவா?

அந்தக் கொள்கையின் சொந்தக்காரர்களுக்கு அடக்குமுறையை எதிர்த்து நிற்பதற்கு யாரும் பாடம் படித்துக் கொடுக்கவும் வேண்டுமா? மீன்களுக்கு நீந்தவும் மான்களுக்குப் பாயவும் கற்றுக் கொடுக்க வேண்டுமா? இனிமேல் இதற்கு இன்னோர் இயக்கத்தினர் தேவையில்லை. அல்லாஹ்வின் அருளால் இவர்களுக்கு இவர்களே போதும் என்பது நிரூபணம் ஆனது மட்டுமல்ல.

இது போன்ற போராட்டங்களுக்கு மற்ற மக்கள் வருவதற்கும், இயக்கம் வளர்வதற்கும் தடையாக இருப்பது தவ்ஹீது கொள்கை என்று பொய்யர்கள் கூறிய போலிக் காரணம் பொல பொலவென்று உடைந்து சுக்கு நூறாய் தகர்ந்து போனது. அவர்களது இந்த வாதம் பொய்யாகப் போனது மட்டுமல்ல.

இவர்கள் போய் விட்டதால் ஷிர்க், பித்அத் ஜமாஅத்துகள் எல்லாம் எங்களை அன்போடு வரவேற்று அரவணைக்கின்றனர் என்று கதையளந்தவர்களின் கனவுகளும் கலைந்து தவிடு பொடியாகிப் போய் விட்டன என்பதை இரு தரப்புக்கும் வந்த கூட்டத்தைப் பற்றி காவல்துறையின் கைதுப் பட்டியலும் பத்திரிகைச் செய்திகளும் தெளிவாக எடுத்துரைக்கின்றன.

இந்தத் தடை நமக்குப் பல உண்மைகளை அறிய உதவியதோடு மாபெரும் வெற்றியாகவும் அமைந்து விட்டது. இவை ஆட்சியாளர்கள் ஏற்படுத்திய தடைகள்! இவற்றை வெற்றிகரமாகத் தாண்டுவதற்கு உதவிய அல்லாஹ்வுக்கே புகழைச் சாட்டுகின்றோம்.

சமுதாய ரீதியிலான தடைகள்

இந்த ஏகத்துவ ஜோதியைத் தமிழகத்தில் பரப்பிய போது சமுதாயம் மிகக் கடுமையாக எதிர்த்தது. காவல்துறையிடம் போய் இவர்கள் தீவிரவாதிகள் என்று பொய் புகார் கொடுத்து பிரச்சாரத்தைத் தடுத்து நிறுத்தினார்கள். பல இடங்களில் காவல்துறை அவர்களுக்குத் துணை நின்று நம்மைத் தடுத்தது. சில இடங்களில் காவல்துறை சட்டத்தின் பக்கம் நின்று நமக்குத் துணையாக இருந்தது.

திட்டு, ஏச்சு பேச்சுக்களுடன் நிற்காமல் அரிவாள் வெட்டு, வீச்சு என்றளவுக்கு எதிர்ப்பு எல்லை தாண்டிச் சென்றது. எல்லாம் வல்ல அல்லாஹ் அந்தத் தடைகளையும்,காட்டுத் தர்பார்களையும் சந்திக்கும் துணிவையும் திராணியையும் நமக்குத் தந்தான். அதே தடை இப்போதும் தொடராமல் இல்லை. இன்றும் அந்தத் தடைகள் தொடர்ந்தாலும் அதையும் அல்லாஹ்வின் உதவியால் எதிர்கொண்டு வருகின்றோம்.

நம்பிக்கை கொண்டோரே! மத குருமார்களிலும், பாதிரிகளிலும் அதிகமானோர் மக்களின் செல்வங்களைத் தவறான முறையில் உண்ணுகின்றனர். அல்லாஹ்வின் வழியை விட்டும் (மக்களைத்) தடுக்கின்றனர். "அல்லாஹ்வின் பாதையில் செலவிடாமல் தங்கத்தையும், வெள்ளியையும் சேர்த்து வைப்போருக்கு துன்புறுத்தும் வேதனை உண்டு'' என்று எச்சரிப்பீராக

அல்குர்ஆன் 9:34

அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுப்பதன் மூலம் அல்லாஹ் இந்த வசனத்தில் கூறும் பட்டியலில் இவர்கள் தங்களை இணைத்துக் கொண்டுள்ளனர். ஏகத்துவப் பிரச்சாரத்தைத் தடுப்பதை இவர்கள் பெருமையாகவும் நினைத்து, மெயில் அனுப்பி மகிழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். ஆனால் அல்லாஹ்வோ இவர்களைக் கடுமையாக எச்சரிக்கின்றான். மக்களும் இவர்கள் மீது கடுமையான வெறுப்பில் இருக்கின்றார்கள்.

அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்தாமல் விட மாட்டான்.

அல்குர்ஆன் 9:32

அல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்துபவன்.

அல்குர்ஆன் 61:8

ஏகத்துவப் பிரச்சாரத்தைத் தடை செய்யும் இவர்களுக்கு இந்த வசனங்களை நினைவு படுத்திக் கொள்கிறோம்.