தவறான கொள்கையில் இருந்த முன்னோரின் நிலை என்ன?

தமிழகத்தில் ஏகத்துவ சிந்தனை வருவதற்கு முன்னர் மத்ஹபுகளை பின்பற்றி இறந்தவர்களின் நிலை என்ன?

குரான், ஹதீஸ் ஆகியவற்றின் தமிழாக்கமும் தமிழகத்தில் பீஜே போன்ற சிந்தனையாளர்களும் இல்லாமல் இருந்தபோது மத்ஹப்களைத் தானே மக்கள் பின்பற்றவேண்டிய நிலை இருந்தது. அவர்கள் செய்த பித்அத்கள் எப்படி பாவமாகும் ?

-கே.ஜி.அஹ்மத் பாஷா, வி.களத்தூர்

பதில்:

ஏகத்துவப் பிரச்சாரத்தை நாம் துவக்குவற்கு முந்தைய மக்களின் நிலை குறித்து நாம் எப்படி தீர்ப்பளிக்க முடியும்? இது குறித்த முடிவை அல்லாஹ் தான் நன்கறிந்தவன். இவ்வாறுதான் இந்தக் கேள்விக்கு நாம் பதிலளிக்க வேண்டும்.

ஏனெனில் தாங்கள் தற்போது எழுப்பியுள்ள கேள்வியைப் போலவே மூஸா (அலை) அவர்களிடத்தில் ஃபிர்அவ்ன் கேள்வி எழுப்பினான். ஃபிர்அவ்ன் எழுப்பிய அந்தக் கேள்விக்கு மூஸா (அலை) அவர்கள் அளித்த பதிலை அல்லாஹ் திருக்குர்ஆனில் எடுத்துக்காட்டியுள்ளான். அந்த பதிலைத்தான் ஒவ்வொரு முஸ்லிமும் இந்தக் கேள்விக்கு பதிலாகச் சொல்ல வேண்டும்.

இதோ ஃபிர்அவ்ன் கேட்ட கேள்வியும், அதற்கு மூஸா நபியவர்கள் அளித்த பதிலும்:

"மூஸாவே! உங்களிருவரின் இறைவன் யார்?'' என்று அவன் கேட்டான்.  "ஒவ்வொரு பொருளுக்கும் அதற்குரிய தோற்றத்தை வழங்கி பின்னர் வழி காட்டியவனே எங்கள் இறைவன்'' என்று அவர் கூறினார். "முந்தைய தலைமுறையினரின் நிலை என்ன?'' என்று அவன் கேட்டான். "அது பற்றிய ஞானம் எனது இறைவனிடம் (உள்ள) பதிவேட்டில் இருக்கிறது. என் இறைவன் தவறிட மாட்டான். மறக்கவும் மாட்டான்'' என்று அவர் கூறினார்.

திருக்குர்ஆன் 20:49-52

முந்தையவர்களின் நிலை குறித்த ஞானம் அல்லாஹ்விடமே உள்ளது; அவன் தவறிட மாட்டான். மறக்கவும் மாட்டான் என்பதுதான் உங்களது கேள்விக்கான பதில்.

மேலும் இந்தக் கேள்வியை நீங்கள் மற்றொரு கோணத்திலும் சிந்திக்க வேண்டும். அதாவது ஏகத்துவ சிந்தனை வருவதற்கு முன் நமது முன்னோர்கள் செய்தது அனைத்தும் சரி என்று நாம் வாதிட்டால் இதே கேள்வியை இஸ்லாத்தை ஏற்காதவர்கள் கேட்டால் அவர்களுக்கு நாம் என்ன பதிலளிப்போம்?

குர்ஆன் மற்றும் ஹதீஸ்களது செய்திகள் முஸ்லிம்களுக்கே கிட்டவில்லை; அப்படியானால் முஸ்லிமல்லாத எங்களுக்கு எப்படி எட்டியிருக்கும்? எங்களது முன்னோர்களுக்கு எப்படி எட்டியிருக்கும்?

எனவே ஏகத்துவப் பிரச்சாரம் தமிழகத்தில் வருவதற்கு முன்னமே வாழ்ந்து மரணித்த அனைத்து இஸ்லாமியரல்லாத மக்கள் செய்த தீய செயல்களும் எப்படி பாவமாகக் கருதப்படும்? என்று பிறமத சகோதரர்கள் அவர்களது முன்னோர்கள், மூதாதையர்கள் குறித்து கேள்வி கேட்டால் அதற்கும் மூஸா (அலை) அவர்கள் அளித்த பதில் தான் சரியான பதிலாகும் என்பதை சிந்தித்தால் விளங்கிக் கொள்ளலாம்.

Leave a Reply