தொழுகையின் அமர்வில் விரலசைத்தல்

ஏகத்துவம் ஏப்ரல் 2007

தொழுகையின் அமர்வில் விரலசைத்தல்

பி. ஜைனுல் ஆபிதீன்

தொழுகையில் அத்தஹிய்யாத், ஸலவாத் மற்றும் துஆக்களை ஓதுவதற்காக அமரும் போது வலது கையின் ஆட்காட்டி விரலை அசைப்பது நபிவழி என்று நாம் கூறி வருகிறோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்துள்ளதாகப் பதிவாகியுள்ள ஹதீஸ்களின் அடிப்படையில் தான் நாம் இதைக் கூறி வருகிறோம்.

இது, தமிழக முஸ்லிம்களுக்கு முன்னர் கேள்விப்படாத ஒரு நடைமுறையாக இருந்ததால் இதற்குக் கடுமையான எதிர்ப்புகளைத் தெரிவித்தனர்.

விரல் அசைப்பதால் மற்றவர்களின் தொழுகை பாதிக்கப்படுகின்றது என்பது போன்ற காரணம் கூறி இந்த நபிவழியை அவர்கள் மறுத்து வந்தனர்.

அது கருத்தில் கொள்ளத் தகுதியில்லாத வாதம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

இந்த வாதம் மக்களிடம் எடுபடாமல் போன பின், விரல் அசைத்தல் தொடர்பான ஹதீஸ் பலவீனமானது என்று கூறி புதுப்புது காரணங்களைக் கூறலானார்கள். அதற்கேற்ப சில ஆதாரங்களையும் முன் வைத்தனர்.

இது பரிசீலிப்பதற்குத் தகுதியுடைய வாதம் என்பதால் இவ்வாறு கூறுவோரின் அனைத்து வாதங்களையும் திரட்டி மறு ஆய்வு செய்தோம்.

அவர்களின் வாதத்தில் உண்மை இருந்தால் அதைத் தயக்கமின்றி ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணத்துடன் தான் மறு ஆய்வு செய்தோம்.

ஆனால் இந்த நபிவழியைப் பலவீனப்படுத்துவதற்குக் கூறப்படும் வாதங்கள் தான் பலவீனமானவையாக உள்ளன என்பது நமது மறு ஆய்விலும் நிரூபணமானது.

எனவே அதுபற்றி முழு விபரத்தைக் காண்போம்.

விரலசைத்தல் பற்றிய ஹதீஸ்

"…நபி (ஸல்) அவர்கள் தமது இடது முன் கையை இடது தொடை மீதும் மூட்டுக்கால் மீதும் வைத்தார்கள். தமது வலது முழங்கையை வலது தொடை மீது வைத்தார்கள். பின்பு தமது வலது கையின் இரண்டு விரல்களை மடக்கினார்கள். (நடுவிரலையும் கட்டை விரலையும் இணைத்து) வளையம் போல் அமைத்தார்கள். பின்னர் ஆட்காட்டி விரலை அசைத்ததை நான் பார்த்தேன்” என்று வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) கூறுகின்றார்கள்.

மேற்கண்ட கருத்தில் அமைந்த செய்தி

1. நஸயீ 879

2. தாரமீ 1323

3. அஹ்மத் 18115

4. இப்னு ஹுஸைமா, பாகம்1; பக்கம் 354

5. இப்னு ஹிப்பான் பாகம் 5; பக்கம் 170

6. தப்ரானீ கபீர், பாகம் 22; பக்கம் 35

7. பைஹகீ பாகம் 1; பக்கம்310

8. ஸுனனுல் குப்ரா இமாம் நஸயீ பாகம் 1; பக்கம் 376

9. அல்முன்தகா இப்னுல் ஜாரூத் பாகம் 1; பக்கம் 62

ஆகிய நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அனைத்து நூல்களிலும் வாயில் பின் ஹுஜ்ர் என்ற நபித்தோழர் வழியாகவே இது பதிவு செய்யப்பட்டுள்ளது.

நபித்தோழர்கள் அனைவரும் நம்பகமானவர்கள் என்பதால் இதில் எந்த விமர்சனமும் இல்லை.

குலைப் பின் ஷிஹாப் பற்றிய விமர்சனம்

வாயில் பின் ஹுஜ்ர் என்ற நபித்தோழர் கூறியதாக அறிவிப்பவர் குலைப் என்பவர் ஆவார். இவரது தந்தை ஷிஹாப் ஆவார்.

குலைப் என்பாரும் நபித்தோழர் என்று சில அறிஞர்கள் கூறுகின்றனர். ஆயினும் நபித்தோழர்களுக்கு அடுத்த தலைமுறையில் மூத்தவர்களில் ஒருவர் என்பதே சரியான கருத்தாகும்.

இவர் நபித்தோழர் அல்ல என்பதால் இவரைப் பற்றி வந்துள்ள விமர்சனங்களின் அடிப்படையில் தான் இவரைப் பற்றி முடிவு செய்ய வேண்டும்.

இவர் நம்பகமானவர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்றாலும் சமீப காலத்தில் இவரைப் பற்றியும் சிலர் விமர்சனம் செய்துள்ளதால் அதையும் நமது மறு ஆய்வுக்கு உட்படுத்துகிறோம்.

இவரைப் பற்றி விமர்சனம் செய்தவர்களின் விமர்சனம் என்ன என்பதை முதலில் அறிந்து கொள்வோம்.

ஒவ்வொரு ஆண்டும் ஜகாத் கொடுக்க வேண்டும் என்ற ஹதீஸை அறிவிக்கும் அம்ரு பின் ஹாரிஸ் என்பார் பலவீனமானவர் என்று காரண காரியத்துடன் ஜகாத் ஆய்வு கட்டுரையில் நாம் விளக்கியிருந்தோம். அந்த விளக்கம் இது தான்:

அம்ரு பின் ஹாரிஸ் பற்றி இப்னு ஹிப்பான் மட்டுமே நம்பகமானவர் என்று கூறியுள்ளார். நம்பகமானவர் என்பதற்கு யாரும் ஏற்காத ஓர் அளவுகோலை இப்னு ஹிப்பான் வைத்துள்ளார். அதாவது யாரைப் பற்றி குறைவுபடுத்தும் விமர்சனம் இல்லையோ அவர்கள் எல்லாம் நம்பகமானவர்கள் என்பது அவரது அளவுகோல்.

இந்த அளவுகோலின் படி உண்மையிலேயே நம்பகமானவர்களும் இந்தப் பட்டியலில் அடங்குவார்கள். யாரென்று அறியப்படாதவர்களும் இந்தப் பட்டியலில் அடங்குவார்கள். யாரென்று தெரியாதவர்களை யாரும் குறை கூறியிருக்க மாட்டார்கள் என்பதால் அத்தகையவர்களும் இப்னு ஹிப்பான் பார்வையில் நம்பகமானவர்கள் பட்டியலில் சேர்ந்து விடுவார்கள்.

எனவே இப்னு ஹிப்பான் அவர்கள் ஒருவரை நம்பகமானவர் என்று கூறினால் அவர் நம்பகமானவராகவும் இருக்கலாம். யாரென்று தெரியாதவராகவும் இருக்கலாம்.

இப்னு ஹிப்பான் யாரையெல்லாம் நம்பகமானவர் பட்டியலில் சேர்க்கிறாரோ அவரைப் பற்றி தஹபி அவர்கள் குறிப்பிடும் போது, "நம்பகமானவர் என்று கருதப்பட்டுள்ளார்” என்று கூறுவார். "இப்னு ஹிப்பானால் நம்பகமானவர் என்று கருதப்பட்டுள்ளார்’ என்பதே இதன் பொருளாகும்.

வருடா வருடம் ஜகாத் கொடுக்க வேண்டும் என்ற ஹதீஸை அறிவிக்கும் அம்ரு பின் ஹாரிஸ் என்பவர் பற்றி, இப்னு ஹிப்பானும், தஹபீயும் மட்டுமே நம்பகமானவர் என்று கூறுகின்றார்கள். எனவே அம்ரு பின் ஹாரிஸின் நம்பகத் தன்மை நிரூபணமாகவில்லை

இவ்வாறு நாம் விமர்சனம் செய்திருந்தோம்.

இதற்கு மறுப்பு எழுதப் புகுந்த அல்ஜன்னத் என்ற மாத இதழில், "விரலசைத்தல் பற்றிய ஹதீஸில் இடம் பெறும் குலைப் என்பார் பற்றியும் இப்னு ஹிப்பான், தஹபீ ஆகியோர் மட்டும் தானே நம்பகமானவர் என்று கூறியுள்ளனர்; அதைச் சரியென ஏற்றுக் கொள்ளும் நீங்கள் அதே தரத்தில் அமைந்த அம்ரு பின் ஹாரிஸ் மட்டும் யாரெனத் தெரியாதவர் என்று விமர்சிப்பது என்ன நியாயம்?’ என்று கேள்வி எழுப்பியிருந்தனர்.

குலைப் என்பார் பற்றி இப்னு ஹிப்பான், தஹபி ஆகிய இருவர் மட்டுமே நம்பகமானவர் என்று கூறியிருந்தால் யாரென்று தெரியாதவர் என்ற முடிவைத் தான் இவர் விஷயத்திலும் எடுப்போம். ஆனால் குலைப் என்பாரைப் பற்றி வேறு பல அறிஞர்களும் நற்சான்று அளித்துள்ளதால் அவரது நம்பகத் தன்மை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஆஸிமின் தந்தையும், ஷிஹாபின் மகனுமாகிய குலைப் என்பார் நபித்தோழர்களுக்கு அடுத்த தலைமுறையைச் சேர்ந்தவர்; நம்பகமானவர்.

நூல்: மஃரிபதுஸ் ஸிகாத் 2/228

அபூசுர்ஆ, இப்னு ஸஅத், இப்னு ஹிப்பான் ஆகியோர் இவரைப் பற்றி நம்பகமான தாபியீ என்று கூறியுள்ளனர். இவர் கூஃபா நகரவாசிகளில் மிகச் சிறந்தவர் என்று அபூதாவூத் கூறியுள்ளார்.

நூல்: அல் இஸாபா, பாகம்: 5, பக்கம்: 668

இவர் உண்மையாளர். இவரை நபித்தோழர் என்று கூறியவர்கள் தவறிழைத்து விட்டனர்.

நூல்: தக்ரீபுத் தஹ்தீப், பாகம்: 1, பக்கம்: 462

இவர் நம்பகமானவராக இருந்தார். அதிக அளவில் ஹதீஸ்களை அறிவித்துள்ளார். இவரது ஹதீஸ்களை அழகியதாக அறிஞர்கள் கருதுகின்றனர். இவரது அறிவிப்புக்களை ஆதாரமாகக் கொள்கின்றனர்.

நூல்: தபகாத் இப்னு ஸஅத், பாகம்: 6, பக்கம்: 123

குலைப் என்பார் பற்றி எந்த அறிஞரும் குறை கூறவில்லை என்பதாலும், அவரது நம்பகத் தன்மையை அறிஞர்கள் உறுதிப்படுத்தி உள்ளதாலும் இவரைக் காரணம் காட்டி விரலசைத்தல் பற்றிய ஹதீஸைப் பலவீனமாக்குவது முற்றிலும் தவறாகும்.

ஆஸிம் பின் குலைப்

விரலசைத்தல் தொடர்பான மேற்கண்ட ஹதீஸை வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) அவர்கள் கூறியதாக குலைப் அறிவிக்கிறார் என்பதைக் கண்டோம். குலைப் இவ்வாறு கூறியதாக அறிவிப்பவர் குலைபுடைய மகன் ஆஸிம் ஆவார். (இவர் ஜகாத் விவாதத்தின் போது விமர்சனம் செய்யப்பட்ட ஆஸிம் அல்ல. அவர் லமுரா என்பரின் மகன். இவர் குலைப் என்பவரின் மகன் ஆவார்.)

குலைப் என்பவரைப் பற்றி விமர்சனம் செய்தவர்கள் தவ்ஹீத் போர்வையைப் போர்த்தியவர்கள் தான். அது போலவே ஆஸிம் என்பவரைப் பற்றி விமர்சனம் செய்பவர்களும் தவ்ஹீத் போர்வையைப் போர்த்தியவர்கள் தான்.

விரலசைப்பதற்கு மக்களிடமிருந்து வரும் எதிர்ப்பைக் கண்டு விட்டு இந்த நபிமொழியை விட்டு விடுவதற்காகப் பல்வேறு காரணங்களைத் தேடி அலைந்தார்கள். அதன் தொடர்ச்சியாகத் தான் ஆஸிம் பின் குலைபைப் பற்றி விமர்சனம் செய்து இந்த ஹதீஸைப் பலவீனமானது என்று நிறுவ ஆரம்பித்தனர்.

ஆஸிம் பின் குலைப் பற்றி விமர்சிக்கும் நூல்களில் அவரைப் பற்றிக் கூறும் போது, "இவர் முர்ஜியாக் கொள்கையுடையவராக இருந்தார்’ என்று கூறப்படுகின்றது.

இதைக் காரணம் காட்டி இவர் பலவீனமானவர் என்று கூறுகின்றனர்.

ஒரு முஃமின் எவ்வளவு பெரிய பாவம் செய்தாலும் அவர் நரகம் செல்ல மாட்டார் என்பது முர்ஜியா கொள்கையாகும்.

இந்தக் கொள்கை தவறானது என்பதில் சந்தேகமில்லை. பாவம் செய்தவர்களை அல்லாஹ் மன்னிக்கவும் செய்யலாம்; தண்டிக்கவும் செய்யலாம் என்பதே சரியான கொள்கையாகும்.

இது போன்ற தவறான கொள்கை உடையவர்களின் ஹதீஸ்களை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்ற கருத்தில் தான் ஆரம்பத்தில் நாமும் இருந்தோம்.

ஆனால் ஹதீஸ் கலையை ஆய்வு செய்து பார்த்தால், ஒருவர் இது போன்ற தவறான கொள்கையுடையவராக இருப்பதால் அவர் அறிவிக்கும் ஹதீஸ்கள் பலவீனமடைவதில்லை. தெளிவான இறை மறுப்பை அடிப்படையாகக் கொண்ட கொள்கையுடையவர்கள் அறிவிக்கும் ஹதீஸ்கள் மட்டுமே நிராகரிக்கப்படுகின்றன. முர்ஜியா கொள்கை என்பது தெளிவான இறை மறுப்பு என்று சொல்ல முடியாது.

தவறான கொள்கையுடையவர்கள் பலர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெயரில் பொய் சொல்ல அஞ்சுவதைக் காண்கிறோம். எனவே தான் ஒருவரது நாணயம், நேர்மை, நினைவாற்றல் ஆகியவற்றின் அடிப்படையில் ஒருவரை எடை போட வேண்டுமே தவிர அவர் கொண்ட கொள்கையின் அடிப்படையில் அவரது நாணயத்தை எடை போடக் கூடாது. எனவே ஹதீஸ் கலையில் இந்தக் கொள்கையுடையவர்கள் அறிவிக்கும் ஹதீஸ்கள் நிராகரிக்கப்படுவதில்லை.

புகாரியில் முர்ஜியாக்கள்

முர்ஜியாக்கள் என்று கண்டறியப்பட்ட ஏராளமான அறிவிப்பாளர்கள் அறிவிக்கும் ஹதீஸ்கள் புகாரியில் பதிவு செய்யப்பட்டுள்ளதற்கு இதுவே காரணம்.

1. அய்யூப் பின் ஆயித் – இவர் முர்ஜியா கொள்கையுடையவர். இவர் அறிவித்த ஹதீஸ் புகாரி 4346ல் பதிவாகியுள்ளது.

2. பிஷ்ர் பின் முஹம்மத் அஸ்ஸக்தியானி – இவரும் முர்ஜியா கொள்கையில் நம்பிக்கையுள்ளவர்.

புகாரியில் 6, 839, 1206, 1242, 1418, 2141, 2548, 2571, 2830, 3796, 3330, 3454, 3485, 4463, 5646,5714, 5987, 6064, 6609, 6618 ஆகிய எண்களைக் கொண்ட ஹதீஸ்கள் இவர் வழியாகவே அறிவிக்கப்பட்டுள்ளன.

3. தர் பின் அப்துல்லாஹ் – இவரும் முர்ஜியா கொள்கையுடையவர் தான்.

இவர் அறிவிக்கும் ஹதீஸ்கள் புகாரியில் 338, 339, 340, 342, 343, 3218, 4731, 7455 ஆகிய எண்களைக் கொண்ட ஹதீஸ்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

4. உமர் பின் தர் – இவரும் முர்ஜியா கொள்கையில் நம்பிக்கையுடையவர் தான்.

இவர் அறிவிக்கும் ஹதீஸ்கள் புகாரியில் 3218, 4731, 6246, 6452, 7455 ஆகிய எண்களைக் கொண்ட ஹதீஸ்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

5. அம்ரு பின் முர்ரா – இவரும் முர்ஜியா கொள்கையில் நம்பிக்கை கொண்டவர் தான்.

இவர் அறிவிக்கும் ஹதீஸ்கள் புகாரியில் 717, 775, 1104, 1176, 1313, 1394, 1596, 3411, 3434, 3488, 3526, 3758, 3769, 3788, 3808, 4146, 4637, 4728, 4770, 4801, 4971, 4972, 4973, 5418, 5934, 5938, 6171, 6359, 7277 ஆகிய எண்களைக் கொண்ட ஹதீஸ்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

6. கைஸ் பின் முஸ்லிம் அல்ஜதலீ – இவரும் முர்ஜியா கொள்கையுடையவர்.

இவர் அறிவிக்கும் ஹதீஸ்கள் புகாரியில் 45, 1559, 1565, 1724, 1795, 2005, 3942, 4346, 4407, 7221, 7268 ஆகிய எண்களைக் கொண்ட ஹதீஸ்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

7. முஹம்மத் பின் ஹாசிம் – இவரும் முர்ஜியா கொள்கையுடையவர் தான்.

இவர் அறிவிக்கும் ஹதீஸ்கள் புகாரியில் 218, 4520, 4801 ஆகிய எண்களைக் கொண்ட ஹதீஸ்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

8. மிஸ்அர் பின் கதாம் – இவரும் முர்ஜியா கொள்கையுடையவர் தான்.

இவர் அறிவிக்கும் ஹதீஸ்கள் புகாரியில் 201, 443, 769, 820, 1130, 1746, 2230, 2394, 2528, 2603, 3419, 3859, 4058, 4797, 5398, 5615, 5826, 6455, 6471, 6664, 7114, 7126, 7268, 7546 ஆகிய எண்களைக் கொண்ட ஹதீஸ்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

முர்ஜியா கொள்கையுடையவர் என்ற காரணத்திற்காக எந்த அறிவிப்பாளரும் பலவீனராக ஆக மாட்டார் என்பதை விளக்குவதற்காக இந்த விபரங்களைத் தருகிறோம்.

ஆஸிம் பின் குலைப், முர்ஜியா கொள்கையுடையவர் என்ற காரணத்திற்காக பலவீனமானவர் என்ற வாதத்தில் இவர்கள் உண்மையாளர்களாக இருந்தால் மேற்கண்ட அறிவிப்பாளர்கள் அனைவரையும் அவ்வாறு கூற வேண்டும். புகாரியில் இடம் பெற்றுள்ள மேற்கண்ட ஹதீஸ்களையும் வேறு நூற்களில் இவர்கள் வழியாகப் பதிவு செய்யப்பட்டுள்ள ஹதீஸ்களையும் பலவீனமானவை என்று அறிவிக்க வேண்டும்.

அவர்களால் அவ்வாறு விமர்சிக்க முடியாது. எனவே ஆஸிம் பற்றிய இவர்களது விமர்சனம் ஏற்புடையது அல்ல என்பதில் சந்தேகமில்லை.

ஆஸிம் பற்றி மற்றொரு விமர்சனம்

தொழுகையைத் துவக்கும் போதும், ருகூவுக்குச் செல்லும் போதும், ருகூவிலிருந்து எழும் போதும், இரண்டு ரக்அத் முடிந்து மூன்றாம் ரக்அத்துக்கு எழும் போதும் கைகளை உயர்த்த வேண்டும் என்ற கருத்தில் ஏராளமான ஹதீஸ்கள் உள்ளன. ஆனால் ஒரேயொரு ஹதீஸில் மட்டும் பின்வருமாறு உள்ளது.

இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள், "நபிகள் நாயகம் (ஸல்) தொழுதது போல் தொழுது காட்டட்டுமா?’ என்று கூறி விட்டுத் தொழுது காட்டினார்கள். ஒரு தடவை தவிர அவர்கள் கைகளை உயர்த்தவில்லை.

நூல்: திர்மிதி 238

ஒரு தடவை மட்டுமே கைகளை உயர்த்தினார்கள் என்ற ஹதீஸை ஆஸிம் பின் குலைப் தான் அறிவிக்கிறார்.

அதன் காரணமாக இந்த ஹதீஸை பலவீனம் என்று கூறும் நீங்கள் விரல் அசைத்தல் பற்றிய ஹதீஸை மட்டும் ஏற்பது ஏன்? என்று மத்ஹப் உலமாக்கள் விமர்சனம் செய்கிறார்கள்.

அதை அப்படியே நம்பி, "அரபு மொழி அறிவு தேவையில்லை’ என்று பிரச்சாரம் செய்யும் மார்க்க அறிவில்லாத ஒருவரும் இவ்வாறு கூறி வருகின்றார்.

ஒரு தடவை தான் கையை உயர்த்த வேண்டும் என்ற ஹதீஸை நாம் ஏற்றுக் கொள்ளவில்லை என்பது உண்மையே! நம்மைப் போல் இன்னும் ஏராளமான அறிஞர்களும் இந்த ஹதீஸை ஏற்றுக் கொள்வதில்லை.

ஆனால் அதற்கு இவர்கள் கூறுகின்ற காரணம் இல்லை. "ஆஸிம் பின் குலைப் அறிவிக்கிறார்” என்ற காரணத்திற்காக அந்த ஹதீஸை நாம் நிராகரிக்கவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகையின் துவக்கத்திலும், ருகூவின் போதும், ருகூவிலிருந்து எழும் போதும், இரண்டு ரக்அத் முடிந்து மூன்றாம் ரக்அத்துக்கு எழும் போதும் கைகளை உயர்த்தியுள்ளனர் என்பதை ஏராளமான நபித்தோழர்கள் அறிவித்துள்ளனர்.

இவ்வாறு ஏராளமான வழிகளில் அறிவிக்கப்படுவதற்கு முரணாக "ஒரு தடவை மட்டுமே கைகளை உயர்த்தினார்கள்’ என்ற, ஒரே ஒருவர் வழியாக அறிவிக்கப்படும் ஹதீஸ் அமைந்துள்ளது.

அதிகமானவர்கள் அறிவிப்பதை மறுக்கும் வகையில் ஒரே ஒருவரின் அறிவிப்பு இருந்தால் அந்தக் காரணத்திற்காக ஒரே ஒருவரின் அந்த ஹதீஸை ஏற்காமல் அதிகமானவர்களின் அறிவிப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற விதியின் அடிப்படையில் தான் இப்னு மஸ்ஊத் (ரலி) ஹதீஸை ஏற்கக் கூடாது என்று நாம் கூறுகிறோம்.

அந்த ஹதீஸை ஏற்கக் கூடாது என்பதற்கு ஆஸிம் பின் குலைபை நாம் காரணமாகக் காட்டவில்லை.

எனவே இந்த வாதமும் தவறான அடிப்படையின் மேல் எழுப்பப்பட்ட வாதமாகும்.

ஸாயிதா பற்றிய விமர்சனம்

ஆஸிம் வழியாக அறிவிக்கும் அறிவிப்பாளர் ஸாயிதா ஆவார். இவரது நம்பகத்தன்மையில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை.

ஆயினும் இவரைத் தொடர்பு படுத்தி வேறு ஒரு விமர்சனத்தை இலங்கையைச் சேர்ந்த சில மவ்லவிகள் செய்து வருகின்றனர்.

அவர்கள் செய்யும் விமர்சனம் என்ன என்பதை அறிந்து கொள்வதற்கு முன் ஹதீஸ் துறை சம்பந்தமான ஒரு விதியைப் புரிந்து கொண்டால் விளங்குவதற்கு எளிதாக இருக்கும்.

ஒரு செய்தியை சலீம் என்பவரிடமிருந்து ஐந்து பேர் அறிவிக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். இந்த ஐந்து பேரில் நால்வர் ஒரு விதமாக அறிவிக்கிறார்கள். ஒருவர் மட்டும் அந்தச் செய்தியை அதற்கு முரணாக அறிவிக்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.

இந்த நிலையில் நால்வர் அறிவிப்பதைத் தான் ஏற்றுக் கொள்ள வேண்டும். அவர்களுக்கு நேர் முரணாக அறிவிப்பவர் நம்பகமானவராக இருந்தாலும் இவர் அறிவிப்பதைத் தள்ளுபடி செய்ய வேண்டும். இவர் அறிவிப்பது ஷாத் – அரிதானது – எனக் கூறப்படும்.

ஏனெனில் ஒருவரிடம் தவறு ஏற்படுவதை விட நால்வரிடம் தவறு ஏற்படுவது அரிதாகும். எனவே தங்கள் ஆசிரியர் கூறியதாக நால்வர் கூறியதை ஏற்றுக் கொண்டு, தனது ஆசிரியர் கூறியதாக ஒருவர் கூறுவதை மறுத்து விட வேண்டும்.

விரல் அசைத்தல் பற்றிய ஹதீஸில் இந்த அம்சம் உள்ளது என்பதே இவர்களின் விமர்சனம்.

அதாவது நபிகள் நாயகம் தொழுத முறையை வாயில் பின் ஹுஜ்ர் அறிவிக்கிறார்.

வாயில் பின் ஹுஜ்ர் கூறியதாக குலைப் அறிவிக்கிறார்.

குலைப் கூறியதாக அவரது மகன் ஆஸிம் அறிவிக்கிறார்.

ஆஸிம் கூறியதாக

சுப்யான்

காலித் பின் அப்துல்லாஹ்

இப்னு இத்ரீஸ்

ஸாயிதா

ஆகிய நால்வர் அறிவிக்கின்றனர்.

இவர்களில் ஸாயிதா மட்டுமே விரல் அசைத்தலைப் பற்றிக் கூறுகிறார். மற்ற மூவரின் அறிவிப்பில் விரல் அசைத்ததாகக் கூறவில்லை.

காலித் பின் அப்துல்லாஹ், சுஃப்யான் ஆகியோர் இதைப் பற்றிக் கூறும் போது "இஷாரா (சைகை) செய்தார்கள்’ என்றே கூறுகிறார்கள்.

இப்னு இத்ரீஸ் அறிவிக்கும் போது "விரலை உயர்த்தினார்கள்’ என்று கூறுகிறார்.

ஆனால் ஸாயிதா மட்டும் விரலை அசைத்ததாகக் கூறுகிறார்.

ஆஸிமுடைய நான்கு மாணவர்களில் மூவர் அறிவிப்பதற்கு மாற்றமாக ஸாயிதா அறிவிப்பதால் இது ஷாத் என்ற தரத்திற்கு இறங்கி விடும். எனவே இது பலவீனமானதாகும் என்பது இவர்களின் விமர்சனம்.

ஹதீஸ் கலையை மிகவும் நுணுக்கமாக ஆராய வேண்டும். மேலோட்டமாக ஆராய்ந்தால் விபரீதமான முடிவுக்குத் தள்ளி விடும் என்பதற்கு இவர்களின் இந்த விமர்சனம் சான்றாகும்.

ஒரு ஆசிரியரின் மாணவர்களில் பலர் அறிவிப்பதற்கு நேர் முரணாக ஒரு சிலர் அறிவிப்பது தான் ஷாத் ஆகும்.

ஒரு ஆசிரியரின் பல மாணவர்கள் அறிவித்ததை விட ஒரே ஒருவர் கூடுதலாக அறிவித்தால் அது ஷாத் என்ற தரத்திற்கு இறங்காது.

முரணாக அறிவிப்பது வேறு! கூடுதலாக அறிவிப்பது வேறு! இந்த நுணுக்கமான வேறுபாட்டைக் கவனிக்காமல் நுனிப்புல் மேய்வதால் இவ்வாறு வாதிடுகின்றனர்.

"15.3.07 அன்று காலை 10 மணிக்கு சலீம் கோழிக்கறி சாப்பிட்டார்’ என்று ஐந்து பேர் கூறுகிறார்கள்.

"15.3.07 அன்று காலை 10 மணிக்கு சலீம் கோழிக்கறி சாப்பிடவில்லை’ என்று ஒருவர் மட்டும் கூறுகிறார்.

இவ்விரு செய்திகளும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவையாகும். இரண்டில் ஏதேனும் ஒன்று தான் உண்மையாக இருக்க முடியும்.

ஒன்று உண்மையானால் மற்றொன்று தானாகவே பொய்யாகி விடும்.

இது தான் முரண்பாடு! இவ்வாறு வரும் போது அதிகமானவர்கள் கூறுவதை ஏற்க வேண்டும்.

"15.3.07 அன்று காலை 10 மணிக்கு சலீம் கோழிக்கறி சாப்பிட்டார்’ என்று ஐந்து பேர் கூறுகிறார்கள்.

ஒருவர் மட்டும் "15.3.07 அன்று காலை 10 மணிக்கு சலீம் சிக்கன் 65 சாப்பிட்டார்’ என்று கூறுகிறார்.

இவ்விரு செய்திகளும் முரண்பட்டவை அல்ல. ஒன்றை ஒன்று மறுக்கும் வகையில் இது அமையவில்லை.

கோழிக்கறி என்று பொதுவாகச் சிலர் கூறுகின்றனர். ஒருவர் மட்டும் உன்னிப்பாகக் கவனித்து அந்தக் கோழிக்கறி எந்த வகை என்பதையும் சேர்த்துக் கூறுகிறார். ஒன்றை ஏற்றால் இன்னொன்றை மறுக்கும் நிலை இங்கே ஏற்படாது. சிக்கன் 65 சாப்பிட்டதை ஏற்கும் போது கோழிக்கறி சாப்பிட்டதையும் சேர்த்தே ஏற்றுக் கொள்கிறோம்.

மூஸா இறந்து விட்டார் என்பதும், மூஸா இறக்கவில்லை என்பதும் முரண்!

மூஸா இறந்து விட்டார் என்பதும், கடலில் மூழ்கி இறந்தார் என்பது முரண் அல்ல!

இந்த அடிப்படையில் மேற்கண்ட அறிவிப்பைக் கவனித்தால் ஸாயிதா கூறுவதும், மற்றவர்கள் கூறுவதும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை அல்ல!

அப்துல்லாஹ் பின் இத்ரீஸ் கூறும் போது "விரலை உயர்த்தினார்கள்’ என்று மட்டும் கூறுகிறார்.

ஸாயிதா கூறும் போது "விரலை உயர்த்தி அசைத்தார்கள்’ என்று கூறுகிறார். அந்த இரண்டுக்கும் இடையே எந்த முரண்பாடும் இல்லை.

இது போல் சுஃப்யான், காலித் ஆகியோர் அறிவிக்கும் போது "இஷாரா செய்தார்கள்’ என்று அறிவிக்கின்றனர்.

ஸாயிதா கூறும் போது "அசைத்தார்கள்’ என்கிறார்.

இவ்விரண்டும் முரண் அல்ல!

இஷாரா என்பது விரிந்த அர்த்தம் கொண்டது. வார்த்தைகளைப் பயன்படுத்தாமல் ஒரு கருத்தைச் சொல்வதே இஷாரா எனப்படும்.

அசைவுகளைக் கொண்ட இஷாராவும் உள்ளது.

அசைவுகள் இல்லாத இஷாராவும் உள்ளது.

ஒருவரை எச்சரிக்கும் போது ஆட்காட்டி விரலை மேலும் கீழும் அசைத்துக் காட்டுவோம். இதுவும் இஷாரா தான். இது அசைவுடன் கூடிய இஷாரா ஆகும்.

சிறுநீர் கழிக்கப் போவதைக் குறிப்பிட ஆட்காட்டி விரலை அசைக்காமல் நிறுத்திக் காட்டுவோம். இதுவும் இஷாரா தான். இது அசைவு இல்லாத இஷாரா ஆகும்.

எனவே இஷாரா என்பதில் அசைத்தார்கள் என்ற கருத்தும் உள்ளது. அசைக்காமல் சைகை செய்தார்கள் என்ற கருத்தும் உள்ளது. இவ்வாறு விரிந்த அர்த்தம் உள்ள சொல்லை இவ்விருவரும் பயன்படுத்துகிறார்கள். இவர்களது வார்த்தையிலிருந்து அந்த இஷாரா அசைவுடன் கூடியதா? அசைவு இல்லாததா? என்பது தெளிவில்லை.

ஸாயிதா இதைத் தெளிவுபடுத்துகிறார்; முரண்படவில்லை.

மனிதன் வந்தான் என்று இவ்விருவரும் கூறுகிறார்கள்; உயரமான மனிதன் வந்தான் என்று ஸாயிதா கூறுகிறார் என்று வைத்துக் கொண்டால் இரண்டும் முரண் என்று யாருமே கூற மாட்டோம்.

மனிதன் என்பதில் உயரமானவரும் இருக்கலாம்; உயரம் குறைந்தவரும் இருக்கலாம். அதை மற்ற இருவர் தெளிவுபடுத்தவில்லை. உயரமான மனிதர் என்று ஒருவர் தெளிவாகக் கூறி விட்டார் என்று புரிந்து கொள்வதைப் போல் இதையும் புரிந்து கொண்டால் இந்த ஹதீஸை ஷாத் என்று கூற மாட்டார்கள்.

இஷாரா என்பது அசைத்தல் என்பதற்கு முரணானது அல்ல என்பதைப் புரிந்து கொள்ளப் பின்வரும் ஹதீஸை சான்றாகக் கொள்ளலாம்.

"நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது ஆட்காட்டி விரலால் அசைத்து இஷாரா செய்தார்கள்” என்று மேற்கண்ட ஹதீஸ் கூறுகின்றது.

இது அத்தஹியாத்தில் விரல் அசைப்பது பற்றிய ஹதீஸ் அல்ல! அதற்கு ஆதாரமாக இதை நாம் எடுத்துக் காட்டவில்லை.

அசைப்பதும், இஷாராவும் முரண் என்றால் முரண்பட்ட இரண்டை இணைத்துப் பேச முடியாது. அசைத்து இஷாரா செய்தார்கள் என்று மேற்கண்ட ஹதீஸில் பயன்படுத்தப்பட்டதிலிருந்து இரண்டும் முரண்பட்டதல்ல என்று அறியலாம்.

"செத்து சாகவில்லை” என்று கூற முடியாது. "சாப்பிட்டு சாப்பிடவில்லை” என்று கூற முடியாது. "அசைத்து இஷாரா செய்தார்கள்” என்று கூற முடியும்.

எனவே இந்த நுணுக்கத்தை இவர்கள் அறியாததால் இந்த வாதத்தை முன் வைக்கின்றனர்.

ஒருவர் அறிவிப்பதை விட மேலதிகமாக அறிவிக்கும் போது என்ன நிலை? ஒருவர் அறிவிப்பதற்கு எதிராக அறிவிக்கும் போது என்ன நிலை? என்பதைக் கூறும் ஹதீஸ் விதிகளைக் காண்க!

முரணாக அறிவிக்கும் போது ஷாத் என்ற நிலை ஏற்படும். நம்பகமானவர் அல்லது உண்மையாளர் ஒருவர் ஒன்றை அறிவிக்க, அவரை விட உறுதியானவரோ, அல்லது அவரை விட அதிக எண்ணிக்கை உடையவர்களோ இரண்டையும் இணைக்க முடியாத அளவுக்கு முரண்பட்டு அறிவித்தால் அது தான் ஷாத் ஆகும்.

ஃபத்ஹுல் பாரி முன்னுரையில் இப்னு ஹஜர்

மனன சக்தி உடைய, நம்பிக்கைக்குரிய அறிவிப்பாளர் (மற்ற அறிவிப்பாளரை விட) கூடுதலாக அறிவிப்பது ஏற்றுக் கொள்ளப்படும். ஷாத் மற்றும் நிராகரிக்கப்பட்ட (முன்கரான) அறிவிப்பாளர் கூடுதலாக அறிவிக்கும் போது அது நிராகரிக்கப்படும்.

நூல்: நவவீயின் முஸ்லிம் விரிவுரை, பாகம் 1; பக்கம் 58

எனவே அத்தஹிய்யாத்தில் விரலை அசைக்க வேண்டும் என்ற ஹதீஸ் எந்த வகையிலும் பலவீனமாக்க முடியாத, வலுவான ஹதீஸ் என்பதே நமது மறு ஆய்விலும் உறுதியாகின்றது.

About Me

இறைவனின் திருப்பெயரால்…

  • இந்த தளத்தில் உள்ள செய்திகள் ஏகத்துவ கொள்கையை சொல்லும் பல்வேறு இணையதளத்தில் இருந்து எடுத்து தொகுக்கப்பட்டவை (ஆன்லைன்பீஜே, ஆன்லைன் டிஎன்டிஜே, etc).
  • இதில் தவறான கருத்துகள் ஏதேனும் இருப்பின் அதை Facebook page https://www.facebook.com/Thowheed.org என்ற முகவரிக்கு அனுப்பி தெரிவிக்கலாம்.
  • உங்கள் ஆக்கங்களையும்
  • Facebook page https://www.facebook.com/Thowheed.org என்ற முகவரிக்கு
  • என்ற முகவரிக்கு அனுப்பவும். ஆசிரியர் சரிபார்த்தபின் வெளியிடப்படும்.
  • இந்த தளத்திற்கும் எந்த அமைப்பிற்கும் எந்த தொடர்பும் கிடையாது.

You may want to read

Follow Us

Sign up for our Newsletter

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit