நபிகள் நாயகம் புரோகிதத்தின் மூலம் வாழ்க்கை நடத்தினார்களா?

நபிகள் நாயகம் புரோகிதத்தின் மூலம் வாழ்க்கை நடத்தினார்களா?

இஸ்லாம் புரோகிதத்தை எதிர்ப்பதாகக் கூறப்படுகிறது. இது உண்மையில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இஸ்லாம் மார்க்கத்தைப் பிரச்சாரம் செய்தது முதல் மரணிக்கும் வரை எந்தத் தொழிலும் செய்யவில்லை. எனவே இஸ்லாம் எனும் மதத்தை வைத்துத் தான் அவர்கள் பிழைப்பு நடத்தியிருக்க வேண்டும்.

புரோகிதர்கள் எப்படி பக்தர்களிடம் காணிக்கைகளைப் பெற்று வாழ்க்கை நடத்துகிறார்களோ அது போலவே நபிகள் நாயகமும் நடத்தியிருக்க வேண்டும். இல்லையென்றால் எவ்வாறு பல மனைவியருடன் வாழ்ந்த நபிகள் நாயகம் (ஸல்) தமது வாழ்க்கைச் செலவினங்களைச் சமாளித்திருக்க முடியும்?

என்பதும் மாற்றாரின் விமர்சனங்களில் ஒன்றாகும். இந்த விமர்சனம் இந்தியாவில் எழுப்பப்படாவிட்டாலும் மேலை நாட்டவர்கள் இத்தகைய விமர்சனங்களைச் செய்கின்றனர்.

மதீனாவுக்கு விரட்டப்பட்டு அங்கே ஒரு ஆட்சியை நிறுவிய நபிகள் நாயகம் (ஸல்) அந்த ஆட்சியைப் பயன்படுத்தி வாழ்க்கைச் செலவினங்களைச் சமாளித்திருக்க முடியும் எனவும் இவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

ஏனெனில் நபிகள் நாயகம் (ஸல்) ஆட்சித் தலைவராக இருந்த போதும் தமது வருமானத்துக்காக எந்தத் தொழிலும் செய்யவில்லை.

மக்காவில் இருந்தவரை மதத் தலைமையின் மூலம் வாழ்க்கை நடத்தினார்கள். மதீனா வந்ததும் மதத் தலைமை, ஆட்சித் தலைமை ஆகிய இரு தலைமைகள் மூலமும் வாழ்க்கை நடத்தினார்கள் எனவும் இவர்கள் கூறுகின்றனர்.

இதுவும் தவறான குற்றச்சாட்டாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதத் தலைமை, ஆட்சித் தலைமை இரண்டையும் தமது வாழ்க்கையை நடத்துவதற்கு ஒரு போதும் பயன்படுத்தியதில்லை. இது பற்றி மிகவும் விரிவாக விளக்குவோம்.

சிறு வயதிலேயே பெற்றோரை இழந்து அனாதையான நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், விபரம் தெரிந்த நாள் முதல் உழைக்கலானார்கள். மரணிக்கும் வரை உழைத்தார்கள். சின்னஞ்சிறு பாலகராக இருந்த சமயத்தில் கூட தம் பெரிய தந்தை அபூதாலிபுக்கோ, தன் பாட்டனார் அப்துல் முத்தலிபுக்கோ அவர்கள் பாரமாக இருந்ததில்லை. தம் வாழ்க்கைத் தேவைக்கு தாமே உழைத்தார்கள் அந்த மாமனிதர்.

மதீனத்து மாமன்னராக அன்றைய உலகில் மிகவும் அதிக அதிகாரங்களையும், கட்டுப்பாடான தோழர்களையும் கொண்டவராக, வல்லரசுகளையும் நடுநடுங்கச் செய்தவராக உயர்ந்த நிலையைப் பெற்றிருந்த சமயத்தில் தன் சிறு பிராயத்தை நினைவு கூறும் போது,

எந்த நபியும் ஆடு மேய்க்காதவராக இருந்தது கிடையாது என்றார்கள். அவர்களின் தோழர்கள்  அல்லாஹ்வின் தூதரே தாங்களுமா? என்று கேட்டார்கள் அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆம்! மக்காவாசிகளிடம் சில கீராத்  கூலிக்காக நான் ஆடு மேய்ப்பவனாக இருந்திருக்கிறேன்  என்றார்கள்.

அபூஹுரைரா (ரலி) அறிவிக்கும் இந்தச் சம்பவம் புகாரியில் இடம்பெற்றுள்ளது.

அரபு நாட்டில் அன்று வழக்கிலிருந்த  தீனார்  எனும் நாணயத்தில் பன்னிரெண்டில் ஒரு பங்கு  கீராத்  எனப்படும்.

சின்னஞ்சிறு பிராயத்திலேயே   அவர்களின்  இரத்தத்திலேயே   உழைக்க வேண்டும் என்ற எண்ணம்  ஊறிப் போய் இருந்ததது. இளமைக் காலத்தில் பெரிய தந்தை அபூதாலிபுடன் சேர்ந்து வியாபாரத்தில் ஈடுபட்டார்கள், அண்டை நாடுகளுக்கெல்லாம் சரக்குகளை ஒட்டகத்தில் ஏற்றிச் சென்று வியாபாரம் செய்வார்கள். அபூதாலிபின் செல்வ நிலையும், நபிகளின் கடின உழைப்பால் மிகவும் உயர்ந்தது. மக்காவில் வாழ்ந்த முக்கியமான சில வணிகர்களில் குறிப்பிடத்தக்கவர்களாக ஆனார்கள்.

சிறு வயது முதல் உழைத்துப் பழகியவர் உழைத்து உழைத்து உயர் நிலையை அடைந்தவர், இருபத்தி ஐந்து வயதிலேயே பெரும் வணிகராக ஆனவர், உழைக்காமல் உண்பதற்காக மதத்தை உருவாக்கியிருப்பாரா?

தமது இருபத்தி ஐந்தாம் வயதில் மக்காவிலேயே மிகப் பெரிய செல்வச் சீமாட்டியாகத் திகழ்ந்த அன்னை கதீஜா (ரலி) அவர்களைத் திருமணம் செய்தார்கள். தமது எல்லாச் சொத்துகளையும் தம் கணவருக்கே அன்னை கதீஜா (ரலி) அவர்கள் உடமையாக்கினார்கள். இதனால் நபியவர்களின் செல்வ நிலை மேலும் உயர்ந்தது. பல தலைமுறைகளுக்குப் போதுமான சொத்தைப் பெற்றிருந்த நபிகளார் வயிற்றுப் பிழைப்புக்காக மதத்தை உருவாக்கினார்கள் என்பது நம்பக் கூடியது தானா?

இஸ்லாத்தைப் பிரச்சாரம் செய்வதற்கு முன் போதிய செல்வத்தைப் பெற்றிருந்தவர், ஏழை எளியவர்களின் நலனுக்காகத் தம் செல்வங்களை எல்லாம் வாரி வழங்கிய வள்ளல், கொடுத்தே பழகிய கைகளுக்குச் சொந்தக்காரர், பிழைப்புக்கு வழியாக மதத்தை உருவாக்கினார் என்பது அபத்தமான குற்றச்சாட்டு அல்லவா?

உண்மையைச் சொல்வதென்றால் அவர்கள் தம்மைக் கடவுளின் தூதரென அறிவிப்பதற்கு முன்னர் தான் செழிப்பான வாழ்க்கைக்கு உரியவராக இருந்தார்கள். இறைவனின் தூதர், நபி என்று தம்மை அறிவித்துக் கொண்ட பின் இருந்த செல்வங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்தார்கள். தம்மை நம்பியவர்கள் கஷ்டப்படும் போதெல்லாம் அனைத்துச் செல்வங்களையும் வாரி இறைத்தார்கள்.

முடிவில் அவர்களைச் சமூகப் புறக்கணிப்பு செய்து  அபூதாலிப் கணவாய்  எனும் இடத்தில் ஒதுக்கி வைத்த போது உண்பதற்குக் கூட உணவு இன்றி காய்ந்து போன சருகுகளையும், சுட்ட தோலையும் உண்டு வாழ்வைக் கழிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். இவ்வுலகச் செல்வங்களைப் பொறுத்தவரை அவர்கள் இறைத்தூதராக ஆன பின் இழந்தது தான் அதிகம். தான் பிரச்சாரம் செய்யும் மார்க்கம் உண்மையானது, மறுமை வாழ்வே நிறந்தரமானது என்ற நம்பிக்கையினால் தான் பிரச்சாரம் செய்தார்கள். இவ்வுலகில் உயர்ந்த இடத்தை அடைவதற்காக அல்ல.

இருக்கின்ற சொத்துகளைக் கூட காப்பாற்ற எண்ணாமல் கொள்கையைக் காப்பதற்காக அனைத்தையும் துறந்துவிட்டு அகதியாய் வெளியேறத் துணிந்தார்கள். உலக வரலாற்றில் எந்த மனிதனின் வாழ்விலும் காண முடியாத அளவுக்கு கொள்கைவாதியாக இன்றளவும் காட்சி தந்து கொண்டிருக்கிறார்கள்.

அவர்கள் மதீனாவுக்கு அகதியாய் வந்து, பிறகு மதீனாவின் தனிப் பெரும் தலைவராக உயர்ந்த சமயத்திலும் கூட அரசுப் பணத்தையோ மக்களின் காணிக்கைகளையோ எதிர்பார்த்து வாழ்க்கை நடத்தவில்லை.

 தன் சொந்த உழைப்பால் உண்ணுவதை விட உயர்ந்த உணவை எவரும் உண்ண முடியாது  என்று உழைப்பின் பெருமையைப் பறைசாற்றினார்கள் . (புகாரி)

இப்படிச் சொன்னவர்கள் தம் வாழ்க்கைத் தேவைக்காக உழைக்காமல் இருந்திருப்பார்களா?

ஒரு மனிதன் யாசிப்பதை விட ஒரு கயிற்றை எடுத்துக் கொண்டு காட்டுக்குச் சென்று விறகு வெட்டி அதை விற்று வாழ்க்கை நடத்துவது சிறந்தது.  என்று கூறியவர்கள் (புகாரி) பிறரிடம் எதிர்பார்த்து வாழ்க்கை நடத்தியிருப்பார்களா?

உஹத் மலை அளவுக்கு என்னிடம் தங்கம் இருந்தால் மூன்று நாட்களுக்கு மேல் என் மார்க்கத்திற்கு தேவையானதைத் தவிர அதில் எதுவுமே என்னிடம் எஞ்சியிருப்பதை நான் விரும்ப மாட்டேன்.

நூல்கள் : புகாரி, முஸ்லிம்

என்று கூறியவர்கள் மதத்தின் மூலம் செல்வம் திரட்ட எண்ணியிருப்பார்களா?

ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து  அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வும், மக்களும் என்னை நேசிக்கக் கூடிய ஒரு காரியத்தை எனக்குக் கூறுங்கள்  என்றார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்  உலகத்தை அளவுக்கதிகமாக நேசிக்காதே. அல்லாஹ் உன்னை நேசிப்பான். மக்களிடம் உள்ளவற்றைப்பெற வேண்டுமென விரும்பாதே! மக்கள் உன்னை விரும்புவார்கள்  என்று விடையளித்தார்கள்.

நூல்கள் : இப்னுமாஜா, தப்ரானி, ஹாகிம்

மக்களை எதிர்பார்த்து வாழ்ந்தால் மக்களின் நேசம் கிடைக்காது என்று கூறிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதற்கு மாற்றமாக நடந்திருக்க முடியுமா? அப்படி நடந்தால் அந்த மக்கள் தான் அவர்களை நேசித்திருப்பார்களா?

அப்படியானால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கை எப்படித் தான் நடந்தது? முழு நேரமும் மார்க்கப் பிரச்சாரத்திற்காகவே தம்மை அர்ப்பணித்துக் கொண்டவர்கள் வயிற்றுத் தேவைக்கு என்ன தான் செய்தார்கள்?

மக்களிடம் யாசிக்கவும் கூடாது! அவர்கள் தரும் அன்பளிப்புக்காகக் காத்திருக்கவும் கூடாது. சொந்த உழைப்பிலேயே காலம் தள்ளவும் வேண்டும். சொந்த உழைப்பில் ஈடுபடும் போது பிரச்சாரத்திற்கும், ஆட்சியை நடத்துவதற்கும் இடையூறு ஏற்படவும் கூடாது. முழு நேரத்தையும் பிரச்சாரத்திற்கு பயன்படுத்திக்கொண்டு, ஆட்சியையும் கவனித்துக் கொண்டு சொந்த உழைப்பையும் செய்ய வேண்டிய நிலை நபியவர்களுடையது.

உலகத் தேவைக்காக உழைக்கும் போது ஆட்சியையும், மார்க்கத்தையும் மறந்தால் இரண்டுக்குமே அது ஆபத்தாகும். இரண்டையும் கவனித்துக் கொண்டு மக்களை நம்பியே வாழ்ந்தால் அது அவர்களின் தகுதிக்குக் கேடாகும்.

இதையெல்லாம் மிகவும் கவனமாகக் கருத்தில் கொண்டு மிகுந்த ஜாக்கிரதையுடன் ஒரு வழியைத் தேர்ந்தெடுத்தார்கள். அந்த வழியைத் தேர்ந்தெடுத்ததன் மூலம் குடும்பத்தையும், ஆட்சியையும், மார்க்கத்தையும் ஒரு சேர நிர்வகித்தார்கள்.

மதீனாவுக்குச் சென்றதும் நூறு ஆடுகளைக் கொண்ட ஒரு ஆட்டுப் பண்ணையைத் தம் வாழ்க்கைச் செலவுக்காக ஏற்படுத்திக் கொண்டார்கள். அதற்காக மேய்ப்பவரையும் ஏற்படுத்திக் கொண்டார்கள். அதில் கிடைக்கும் வருமானத்தில் தம் வாழ்க்கைச் செலவைச் சமாளித்தார்கள். இதற்கான சான்று வருமாறு :

நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைச் சந்திப்பதற்காகச் சென்றேன். அப்போது அவர்களின் ஆடு மேய்ப்பவர் அப்போது தான் பிறந்த ஒரு குட்டியைத் தூக்கிக் கொண்டு வந்தார். நமது ஆடு ஈன்றது  கிடாய்க்  குட்டியா? பெட்டையா? என்றார்கள். அவர்  கிடாய்  என்றார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு ஆட்டை அறுத்து விருந்து சமைக்கச் சொன்னார்கள். பிறகு என்னை நோக்கி  நான் உமக்காகத் தான் இந்த ஆட்டை அறுத்தேன் என்று எண்ண வேண்டாம். நம்மிடம் நூறு ஆடுகள் உள்ளன அவற்றில் ஒரு ஆடு, குட்டியை ஈன்றால் உடனேயே அதற்குப் பதிலாகப் பெரிய ஆடு ஒன்றை நாம் அறுத்து உண்போம் என்று கூறினார்கள்.

லகீத் இப்னு ஸபுரா (ரலி) அறிவிக்கும் இந்தச் செய்தி அபூதாவூதில் இடம் பெற்றுள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எவ்வளவு திட்டமிட்டு தம் வாழ்க்கைச் செலவைச் சமாளித்தார்கள் என்பது இதிலிருந்து தெரிகின்றது.

நூறு ஆடுகளைக் கொண்ட பண்ணையில் சராசரியாக மாதத்திற்கு எட்டு ஆடுகள் அதிகமாகும். நமது நாட்டு ஆடுகளைப் போலன்றி அதிக அளவு பால் தரக்கூடியதாகவும் அரபு நாட்டு ஆடுகள் இருந்தன. அன்றாடச் செலவுக்குப் போதுமான அளவுக்குப் பால் கிடைக்கும். மாதம் எட்டு ஆடுகள் லாபம் கிடைக்கும். இதை வைத்துத் தான் வாழ்க்கைச் செலவைச் சமாளித்தார்கள்.

மூலதனமாகப் போட்ட நூறு ஆடுகள் குறையாதவாறு பார்த்துக் கொண்டார்கள். ஐந்தாறு நாட்களுக்கு ஒரு முறை ஒரு ஆட்டுக்குட்டி பிறந்தவுடன் பெரிய ஆடு ஒன்றை விற்று விடுவார்கள். அல்லது அறுத்து விடுவார்கள். இது தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனா சென்ற பிறகு உள்ள வாழ்க்கை.

ஐந்தாறு நாட்களுக்கு ஒரு ஆடு அல்லது அதன் விலை போதுமென்றாலும் பல மனைவியரைக் கொண்டிருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இது எப்படிப் போதுமாகும்? என்ற கேள்வி சிலருக்கு எழலாம். இந்தக் கேள்வி முற்றிலும் நியாயமான கேள்வியே.

நாம் நம்முடைய வாழ்க்கையைப் போல் நபியவர்களின் வாழ்வையும் பார்ப்பதால் இந்த ஐயம் எழுகின்றது. நபிகள் நாயகம் அவர்களின் வாழ்க்கை மிகவும் எளிமையானது. தமக்கு வருகின்ற வருவாயைக் கொண்டு எந்த அளவுக்கு வாழ்க்கை நடத்த இயலுமோ அந்த அளவுக்கு அவர்கள் தம் தேவைகளைக் குறைத்துக் கொண்டார்கள். அவர்களின் வாழ்க்கைச் சித்திரத்தை கண்முன்னே கொண்டு வரும் சான்றுகளைத் தருகிறோம். அது போல் வாழ்க்கை நடத்தினால் நாமும் கூட பத்திற்கு மேற்பட்ட நபர்களைக் கொண்ட குடும்பத்தைச் சமாளிக்க முடியும்.

மக்கள் நல்ல செல்வ நிலையை அடைந்து விட்ட காலத்தில் நபியவர்கள் தமது வயிற்றை நிரப்புவதற்கு மட்டரகமான பேரீச்சம்பழம் கூட கிடைக்காமல் சில நாட்கள் சுருண்டு படுத்து விடுவதை நான் கண்டிருக்கிறேன். என நுஃமான் பின் பஷீர் (ரலி) கூறினார்கள்.

நூல் : முஸ்லிம்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் குடும்பத்தினர் தொடர்ந்து இரண்டு நாட்கள் வயிறார கோதுமை ரொட்டி உண்டது கிடையாது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை இந்த நிலை தான்.

நூல்கள் :   புகாரி, முஸ்லிம்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ் தன் தூதராக ஆக்கியதிலிருந்து மரணிக்கும் வரை சல்லடையைப் பர்த்ததே இல்லை. (அதாவது மாவைச் சலித்து மிருதுவானதைப் பயன்படுத்தியதே இல்லை) என்று ஸஹ்ல் (ரலி) குறிப்பிட்டார்கள்.  சலிக்காத கோதுமையை எப்படி உண்பீர்கள்? என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. கோதுமையைத் திரிகையில் அரைப்போம். பிறகு வாயால் ஊதுவோம். பறக்க வேண்டியவை பறந்து விடும். எஞ்சியதைத் தண்ணீரில் குழைத்து உண்போம்.  என்று விடையளித்தார்கள்.

ஒரு மாதம் இரண்டு மாதங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இல்லங்களில் அடுப்பு மூட்டப்படாமலேயே சென்று விடும் என ஆயிஷா (ரலி) கூறினார்கள். அப்போது நான் என் சிறிய அன்னையே! அப்படியானால் உங்கள் வாழ்க்கை எப்படித் தான் கழியும்? (எதைத் தான் உண்பீர்கள்?)  என்று கேட்டேன்.  பேரீச்சம் பழங்களும் தண்ணீரும் தான்  என்றார்கள். (புகாரி, முஸ்லிம்)

நபியவர்கள் தங்க நாணயத்தையோ, வெள்ளி நாணயத்தையோ, அடிமைகளையோ விட்டுச் செல்லவில்லை. அவர்கள் விட்டுச் சென்றவை அவர்கள் சவாரி செய்த கோவேறுக் கழுதை அவர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள், வழிப்போக்கர்களுக்கு பயன்படும் விதமாக அவர்கள் தானமாக வழங்கிய நிலம் ஆகியவையே அவர்கள் விட்டுச் சென்றவையாகும். (புகாரி)

கடினமான ஒரு வேட்டியையும், கடினமான ஒரு போர்வையையும் ஆயிஷா (ரலி) அவர்கள் எடுத்துக் காட்டி இவ்விரண்டு ஆடைகள் அணிந்த நிலையிலேயே நபிகள் நாயகம் (ஸல்) மரணித்தார்கள் என்றார்கள். (புகாரி, முஸ்லிம்)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழ்ந்த இத்தகைய எளிமையான வாழ்க்கையை வாழ்வதற்கு அவர்களின் ஆட்டுப் பண்ணை போதுமானது அல்லவா?

அப்படியும் போதாத நிலை ஏற்பட்டது உண்டு. அப்போதும் எவரிடமும் எதையும் எதிர்பார்க்கவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணிக்கும் போது அவர்களின் கவச ஆடை 30 மரக்கால் கோதுமைக்காக ஒரு யூதனிடம் அடமானமாக வைக்கப்பட்டிருந்தது. அதை மீட்காமலேயே மரணித்தார்கள்.

நூல்கள் :  புகாரி, முஸ்லிம்

உயிரையும் தருவதற்குத் தயாரான உற்ற நண்பர்கள் பலரிருந்தும் அவர்களிடம் அடமானம் வைத்தால் அவர்கள் இலவசமாகத் தந்து விடுவார்களோ என்ற பயத்தில் தானோ என்னவோ ஒரு யூதரிடம் அடமானம் வைத்திருக்கின்றார்கள்.

மதத்தை வைத்து எதையும் அவர்கள் சம்பாதிக்கவே இல்லை. மதத்தைக் கூறிய பிறகு இருப்பதை இழந்தார்கள். முன்பை விட கஷ்டப்பட்டார்கள்.

ஆட்சியை வைத்தாவது சம்பாதித்ததுண்டா? என்றால் அதுவும் கிடையாது. மற்றவர்களை விட தமக்கும், தம் குடும்பத்துக்கும் அதிகமான நிபந்தனைகளை விதித்துக் கொண்டார்கள்.

அன்றைக்கு அரசுக்கு வந்த வருமானம்  ஜகாத்  அடிப்படையில் வசூலிக்கப் படுபவையாகத் தான் இருந்தன. இந்த  ஜகாத்  எனும் நிதியைத் தமக்கும் தம் குடும்பத்துக்கும்  ஹராம்  (விலக்கப்பட்டது) என்று பகிரங்கமாக அறிவித்து விட்டார்கள். தம் குடும்பத்தினர் எவராவது அரசு நிதியிலிருந்து எதையும் கேட்டு விடக் கூடாது என்பதற்காக அவர்கள் செய்த முன்னேற்பாடாகக் கூட இதைக் கருதலாம்.

நபிகளின் பேரன் ஹுஸைன் (ரலி)  ஜகாத்தாக  வசூலிக்கப்பட்ட பேரீச்சம் பழங்களில் ஒன்றை எடுத்து வாயில் போட்டதைக் கண்ட நபிகளார்  துப்பு! துப்பு!  என்று கூறி அதைத் துப்பச் செய்து விட்டு இது நமக்கு ஹலால் இல்லை  என்றும் கூறிவிட்டார்கள். (புகாரி, முஸ்லிம்)

உலக முடிவு நாள் வரைக்கும் அவர்களின் பரம்பரையினர் ஜகாத் நிதியைப் பெறக் கூடாது என்று கண்டிப்பாகத் தடை விதித்து விட்டார்கள்.

அரசுச் சொத்தை தமக்கு ஹராமாக்கிக் கொண்டது மட்டுமின்றி, தம் சொந்த உழைப்பால் திரட்டிய செல்வங்களை (ஆட்டு பண்ணை உட்பட) அரசுக்குச் சொந்தமாக்கி விட்டுச் சென்றார்கள்.

 நபிமார்களின் சொத்துகளுக்கு எவரும் வாரிசாக முடியாது  என்பது அவர்களின் அமுத மொழி .

நூல்கள் : அஹ்மத், திர்மிதீ

இதனால் அவர்களின் மரணத்திற்குப் பின்னர் அவர்கள் குடும்பத்தினர் பட்ட கஷ்டம் சொல்லி முடியாது.

அவர்களின் அருமை மகளார் அன்னை ஃபாத்திமா (ரலி) அவர்கள் தம் தந்தை விட்டுச் சென்ற நிலத்தை ஜனாதிபதி அபூபக்ரிடம் கேட்ட போது நபிமார்களின் சொத்துகளுக்கு எவருமே வாரிசாக முடியாது என்பதால் அபூபக்ர் (ரலி) அவர்கள் தர மறுத்து ஏழைகளுக்கு அதைப் பொதுவுடைமையாக்கினார்கள்.

கேட்டாலே கண் கலங்கும் வாழ்க்கைக்குச் சொந்தக்காரர். எவரும் வாழ்ந்து காட்ட முடியாத எளிய வாழ்க்கைக்குச் சொந்தக்காரர். முழு அரசுப் பணத்தையும் அவர் எடுத்துக் கொண்டால் கூட எவருமே ஆட்சேபிக்க மாட்டார்கள் என்ற நிலையில் அதில் கடுகளவையும் தன் மீது ஹராமாக்கி (விலக்கப்பட்டது)  கொண்டவர் தான் அண்ணலார் அவர்கள்.

நபியவர்களுக்கு இன்னொரு விதத்திலும் வருவாய் வந்ததுண்டு. அதாவது போர்க்களங்களில் வெற்றியடையும் போது வென்றவர்கள், தோற்றவர்கள் விட்டுச் சென்ற பொருளை எடுத்துக் கொள்வது உலகெங்கும் ஏற்கப்பட்ட வழக்கமாக இருந்தது.

அந்த அடிப்படையில் கிடைக்கும் பொருட்களை போரில் பங்கு கொண்ட வீரர்களுக்குப் பங்கிட்டு வழங்குவார்கள். நபியவர்களும் பல போர்க்களங்களில் நேரில் ஈடுபட்டதால் அவர்கள் தமக்கும் ஒரு பங்கை எடுத்துக் கொள்வார்கள்.

இன்னும் சில சமயங்களில் நண்பர்கள் அவர்களாக வந்து அன்பளிப்புச் செய்வர். அதை நபியவர்கள் மறுக்க மாட்டார்கள். ஆனால் அவர்களும் திரும்ப அன்பளிப்புச் செய்வார்கள். இப்படி நண்பர்கள் அளிக்கும் அன்பளிப்புகள், போர்க்களங்களில் கிடைத்த பங்குகள், ஆட்டுப் பண்ணையின் மூலம் வரும் வருமானம் ஆகியவை மூலம் தான் நபிகள் நாயகம் (ஸல்) தமது வாழ்க்கைச் செலவைச் சமாளித்தார்கள்.

புரோகிதத்தின் மூலம் ஒரு சல்லிக்காசையும் அவர்கள் பெற்றதில்லை. அவ்வாறு பெற்று வந்த ஏனைய மதத்தின் புரோகிதர்களைக் கடுமையாகக் கண்டித்தே வந்தார்கள்.

ஆட்சித் தலைமையை ஏற்றபின் அரசாங்கப் பணத்தையோ, பொருட்களையோ, இன்ன பிற வசதிகளையோ அவர்கள் எள்ளளவும் அனுபவிக்கவில்லை என்பதே உண்மையாகும்.

Leave a Reply