நபித்தோழர்கள் நம்மைப் போன்ற மனிதர்களா?

நபித்தோழர்கள் நம்மைப் போன்ற மனிதர்களா?

பித்தோழர்கள் எம்மை போன்று சாதாரண மனிதர்களா?

முஹம்மது இஹ்ஸாஸ்

பதில்

நீங்கள் நபித்தோழர்களைப் பற்றி மனிதர்களா என்று கேட்கிறீர்கள். நபித்தோழர்களை விடப் பண்மடங்கு சிறந்தவர்களான நபிமார்கள் அனைவருமே மனிதர்கள் தான் மனிதத்தன்மையில் நம்மைப் போன்றவர்கள் தான் என்று குர்ஆன் கூறுகிறது. இந்நிலையில் நபித்தோழர்கள் நம்மைப் போன்ற மனிதர்களா என்று கேள்வி கேட்பது வியப்பாக உள்ளது.

உண்ணுதல், பருகுதல், மலம் ஜலம் கழித்தல், மனைவியருடன் இல்லறத்தில் ஈடுபடுதல், வியாபாரம் செய்தல், மற்றும் இன்பம், கவலை, துன்பம், துக்கம் போன்ற அனைத்து உலகரீதியிலான தன்மைகளிலும் நபித்தோழர்கள் நம்மைப் போன்ற மனிதர்கள் தான். அவர்கள் மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்டவர்கள் கிடையாது.

நபிமார்களானாலும் நபித் தோழர்களானாலும் மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்டவர்கள் கிடையாது.

நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் வாழ்ந்த நபித்தோழர்கள் மற்றும் இணை வைப்பாளர்களைப் பார்த்து நபியவர்கள் பின்வருமாறு கூற வேண்டுமென்று அல்லாஹ் கட்டளையிடுகின்றான்.

"நான் உங்களைப் போன்ற மனிதன் தான். (எனினும்) உங்கள் கடவுள் ஒரே ஒரு கடவுளே என எனக்கு அறிவிக்கப்படுகிறது. தமது இறைவனின் சந்திப்பை எதிர்பார்ப்பவர் நல்லறத்தைச் செய்யட்டும்! தமது இறை வணக்கத்தில் எவரையும் இணை கற்பிக்காது இருக்கட்டும்'' என்று (முஹம்மதே!) கூறுவீராக!

திருக்குர்ஆன் 18:110

மேலும் 41:7 வது வசனத்திலும் இதே கருத்து கூறப்பட்டுள்ளது.

நபியவர்களும்,  நபித்தோழர்களும் நம்மைப் போன்ற மனிதத் தன்மைக்கு உட்பட்டவர்கள் தான் என்பதை இதிலிருந்து நாம் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

அதே நேரத்தில் நபித்தோழர்களில் பெரும்பான்மையினர் இறை நம்பிக்கையிலும், இறையச்சத்திலும் நம்மை விட மிகச் சிறந்த மனிதர்களாகத் திகழ்ந்துள்ளனர்.

இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால் உயிருடன் வாழ முடியாது என்ற அசாதாரண நிலை இருந்த துவக்க காலத்தில் நபித்தோழர்கள் இஸ்லாத்தை ஏற்றதால் பல வகைகளில் மற்றவர்களை விட அவர்கள் சிறந்து விளங்குகிறார்கள் என்று இஸ்லாம் கூறுகிறது.

எழுதப் படிக்கத் தெரியாத இத்தூதரை இந்த நபியை (முஹம்மதை) அவர்கள் பின்பற்றுகின்றனர். தங்களிடம் உள்ள தவ்ராத்திலும், இஞ்சீலிலும் இவரைப் பற்றி எழுதப்பட்டிருப்பதை அவர்கள் காண்கின்றனர். இவர் நன்மையை அவர்களுக்கு ஏவுகிறார். தீமையை விட்டும் அவர்களைத் தடுக்கிறார். தூய்மையானவற்றை அவர்களுக்கு அனுமதிக்கிறார். தூய்மையற்றவைகளை அவர்களுக்கு அவர் தடை செய்கிறார். அவர்களுடைய சுமையையும், அவர்கள் மீது (பிணைக்கப்பட்டு) இருந்த விலங்குகளையும் அவர் அப்புறப்படுத்துகிறார். இவரை நம்பி, இவரைக் கண்ணியப்படுத்தி, இவருக்கு உதவியும் செய்து இவருடன் அருளப்பட்ட ஒளியையும் பின்பற்றுவோரே வெற்றி பெற்றோர்.

திருக்குர்ஆன் : 7;157[/perfectpullquote]

கிராமவாசிகளில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புவோரும் உள்ளனர். தாம் செலவிடுவதை அல்லாஹ்விடம் நெருங்குவதற்குரிய காரணமாகவும் இத்தூதரின் (முஹம்மதின்) பிரார்த்தனைக்குரியதாகவும் கருதுகின்றனர். கவனத்தில் கொள்க! அது அவர்களுக்கு (இறை) நெருக்கத்தைப் பெற்றுத் தரும். அவர்களை அல்லாஹ் தனது அருளில் நுழையச் செய்வான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். ஹிஜ்ரத் செய்தோரிலும், அன்ஸார்களிலும் முந்திச் சென்ற முதலாமவர்களையும், நல்ல விஷயத்தில் அவர்களைப் பின்தொடர்ந்தவர்களையும் அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டனர். அவர்களுக்கு சொர்க்கச் சோலைகளை அவன் தயாரித்து வைத்திருக்கிறான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் அவர்கள் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றி.

திருக்குர்ஆன்: 9:99,100

அதில் நீர் ஒரு போதும் வணங்காதீர்! ஆரம்ப நாள் முதல் இறையச்சத்தின் அடிப்படையில் நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாசலே நீர் வணங்குவதற்குத் தகுதியானது. அதில் தூய்மையை விரும்பும் ஆண்கள் உள்ளனர். அல்லாஹ் தூய்மையானவர்களை விரும்புகிறான்.

திருக்குர்ஆன் : 9:108

இந்த நபியையும், ஹிஜ்ரத் செய்தவர்களையும், அன்ஸார்களையும் அல்லாஹ் மன்னித்தான். அவர்களில் ஒரு சாராரின் உள்ளங்கள் தடம் புரள முற்பட்ட பின்னரும் சிரமமான காலகட்டத்தில் அவரைப் பின்பற்றியவர்களையும் மன்னித்தான். அவன் அவர்களிடம் நிகரற்ற அன்புடையோன்; இரக்கமுடையோன். தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்ட அந்த மூவரையும் (இறைவன் மன்னித்தான்.) பூமி விசாலமானதாக இருந்தும் அவர்களைப் பொறுத்தவரை அது சுருங்கி விட்டது. அவர்களது உள்ளங்களும் சுருங்கி விட்டன. அல்லாஹ்வை விட்டு (தப்பிக்க) அவனிடமே தவிர வேறு போக்கிடம் இல்லை என்று அவர்கள் நம்பினார்கள். பின்னர் அவர்கள் திருந்துவதற்காக அவர்களை மன்னித்தான். அல்லாஹ் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

திருக்குர்ஆன்; 9:117,118

அல்லாஹ்வின் பாதையில் செலவிடாதிருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது? வானங்கள் மற்றும் பூமியின் உரிமை அல்லாஹ்வுக்கே உரியது. உங்களில் (மக்கா) வெற்றிக்கு முன் (நல்வழியில்) செலவு செய்து போரிட்டவருக்கு (உங்களில் யாரும்) சமமாக மாட்டார்கள். (வெற்றிக்குப்) பின்னர் செலவிட்டு போரிட்டவர்களை விட அவர்கள் மகத்தான பதவியுடையவர்கள். அனைவருக்கும் அல்லாஹ் அழகியதையே வாக்களித்துள்ளான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.

திருக்குர்ஆன் : 57:10

அவர்களுக்கு முன்பே நம்பிக்கையையும், இவ்வூரையும் தமதாக்கிக் கொண்டோருக்கும் (உரியது). ஹிஜ்ரத் செய்து தம்மிடம் வருவோரை அவர்கள் நேசிக்கின்றனர். அவர்களுக்குக் கொடுக்கப்படுவது குறித்து தமது உள்ளங்களில் காழ்ப்புணர்வு கொள்ள மாட்டார்கள். தமக்கு வறுமை இருந்த போதும் தம்மை விட (அவர்களுக்கு) முன்னுரிமை அளிக்கின்றனர். தன்னிடமுள்ள கஞ்சத்தனத்திலிருந்து காக்கப்படுவோரே வெற்றி பெற்றோர்.

திருக்குர்ஆன் : 59:9

நபித்தோழர்களின் நம்பிக்கை, கொள்கை உறுதி, மற்றும் அர்ப்பணிப்பு மனப்பான்மையை மேற்கண்ட வசனங்களில் அல்லாஹ் புகழ்ந்து போற்றுகிறான்.

صحيح البخاري

3673 – حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنِ الأَعْمَشِ، قَالَ: سَمِعْتُ ذَكْوَانَ، يُحَدِّثُ عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لاَ تَسُبُّوا أَصْحَابِي، فَلَوْ أَنَّ أَحَدَكُمْ أَنْفَقَ مِثْلَ أُحُدٍ، ذَهَبًا مَا بَلَغَ مُدَّ أَحَدِهِمْ، وَلاَ نَصِيفَهُ»

'என் தோழர்களை ஏசாதீர்கள்! ஏனெனில் உங்களில் ஒருவர் உஹத் மலையளவு தங்கத்தைச் செலவிட்டாலும் அவர்களின் இரு கையளவு அல்லது அதில் பாதியளவுக்கு அது ஈடாகாது' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஸயீத் அல்குத்ரி (ரலி)

நூல் : புகாரி : 3673

سنن الترمذي

3862 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى قال: حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ قال: حَدَّثَنَا عَبِيدَةُ بْنُ أَبِي رَائِطَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ زِيَادٍ، عَنْ عَبْدِ اللهِ بْنِ مُغَفَّلٍ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اللَّهَ اللَّهَ فِي أَصْحَابِي، لاَ تَتَّخِذُوهُمْ غَرَضًا بَعْدِي، فَمَنْ أَحَبَّهُمْ فَبِحُبِّي أَحَبَّهُمْ، وَمَنْ أَبْغَضَهُمْ فَبِبُغْضِي أَبْغَضَهُمْ، وَمَنْ آذَاهُمْ فَقَدْ آذَانِي، وَمَنْ آذَانِي فَقَدْ آذَى اللَّهَ، وَمَنْ آذَى اللَّهَ فَيُوشِكُ أَنْ يَأْخُذَهُ.

என் தோழர்கள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! என் தோழர்கள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! எனக்குப் பின் தாக்குதலுக்கான இலக்காக அவர்களை ஆக்கி விடாதீர்கள். யார் அவர்களை நேசிக்கிறாரோ அவர் என்னை நேசித்ததன் காரணமாகவே அவர்களை நேசிக்கிறார். யார் அவர்களை வெறுக்கிறாரோ அவர் என்னை வெறுத்ததன் காரணமாகவே அவர்களை வெறுக்கிறார். அவர்களுக்கு யார் தொல்லை தருகிறாரோ அவர் எனக்கே தொல்லை தருகிறார். எனக்குத் தொல்லை தந்தவர் அல்லாஹ்வுக்கே தொல்லை தந்தவர் ஆவார். அல்லாஹ்வுக்குத் தொல்லை தந்தவரை அல்லாஹ் தண்டிக்கக் கூடும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் முகஃப்பல் (ரலி)

நூல் : திர்மிதி : 3797

صحيح البخاري

2651 – حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا أَبُو جَمْرَةَ، قَالَ: سَمِعْتُ زَهْدَمَ بْنَ مُضَرِّبٍ، قَالَ: سَمِعْتُ عِمْرَانَ بْنَ حُصَيْنٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «خَيْرُكُمْ قَرْنِي، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ» – قَالَ عِمْرَانُ: لاَ أَدْرِي أَذَكَرَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعْدُ قَرْنَيْنِ أَوْ ثَلاَثَةً – قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ بَعْدَكُمْ قَوْمًا يَخُونُونَ وَلاَ يُؤْتَمَنُونَ، وَيَشْهَدُونَ وَلاَ يُسْتَشْهَدُونَ، وَيَنْذِرُونَ وَلاَ يَفُونَ، وَيَظْهَرُ فِيهِمُ السِّمَنُ»

உங்களில் சிறந்தவர் என் காலத்தவரே. அதன் பின்னர் அவர்களுக்கு அடுத்து வரக் கூடியவர். அதன் பின்னர் அவர்களுக்கு அடுத்து வரக் கூடியவர். உங்களுக்குப் பின்னர் ஒரு கூட்டம் வரும். அவர்கள் மோசடி செய்வார்கள். நாணயமாக நடக்க மாட்டார்கள். சாட்சி கூற அழைக்கப்படாமலே சாட்சி கூறுவார்கள். நேர்ச்சை செய்து விட்டு நிறைவேற்ற மாட்டார்கள். அவர்களிடம் பகட்டு வெளிப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இம்ரான் பின் ஹுசைன் (ரலி)

நூல் : புகாரி 2651, 3650, 6428, 6695

நபித் தோழர்களைச் சிறப்பித்துக் கூறும் இது போன்ற வசனங்களும், நபிமொழிகளும் ஏராளமாக உள்ளன. எனவே நபித்தோழர்களை நாமும் மதிக்கிறோம்.

மனிதர்கள் என்ற வகையில் நபித்தோழர்களிடம் எத்தகைய பாரதூரமான காரியங்கள் நிகழ்ந்திருந்தாலும் அவர்களின் தியாகத்தைக் கவனத்தில் கொண்டு அவர்களை அல்லாஹ் மன்னிப்பான் என்று நாம் நம்புகிறோம்.

சொர்க்கவாசிகள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் புகழ்ந்துரைக்கப்பட்ட நபித்தோழர்கள் தமக்கிடையே வாள் ஏந்தி போர் செய்து கொண்டாலும் அந்தச் செயலை நாம் முன்மாதிரியாக எடுத்துக் கொள்ள மாட்டோமே தவிர அவர்கள் தவறுகள் மன்னிக்கப்பட்டு சொர்க்கம் செல்வார்கள் என்று நாம் நம்புகிறோம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சமுதாயத்திலேயே சஹாபாக்கள் சிறந்தவர்கள் என்பதே நமது நிலைபாடு.

ஆனால் சஹாபாக்களைக் கண்ணியப்படுத்தி மதிப்பது வேறு! அவர்களைப் பின்பற்றி நடப்பது வேறு! குர்ஆனுக்கும், நபிமொழிக்கும் முரணாக எவ்வளவு பெரிய நபித்தோழர் நடந்திருந்தாலும் அதை நாம் வாழ்வில் கடைப்பிடிக்கக் கூடாது.

குர்ஆனிலும், நபிவழியிலும் கூறப்படாத வணக்கத்தை எவ்வளவு பெரிய நபித்தோழர் உருவாக்கி அறிமுகப்படுத்தியிருந்தாலும் அதைப் பின்பற்றக் கூடாது என்பதை அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறோம்.

திருக்குர்ஆனும், நபிவழியும் அப்படித்தான் நமக்கு வழிகாட்டுகின்றன என்பதால் அதைப் பின்பற்றியே நாமும் அவ்வாறு கூறுகிறோம்.

Leave a Reply