நபில் தொழுவதாக நேர்ச்சை செய்யலாமா?

கேள்வி: ஒரு தேவை நிறைவேறுவதற்காக ஒரு குறிப்பிட்ட அளவு நபில் தொழுவதாக நேர்ச்சை செய்யலாமா? அவ்வாறு செய்வதற்கு அனுமதி இருந்தால் நான்கு நான்கு ரக்அத்துகளாகத் தொழலாமா?

அப்துல் ஹமீத்,

பதில் :

இறைவா! எனக்கு ஏற்பட்டுள்ள இந்தத் துன்பம் விலகினால், அல்லது இதுவரை கிடைக்காமல் இருக்கின்ற பாக்கியம் எனக்குக் கிடைத்தால் உனக்காக நான் தொழுகிறேன்; நோன்பு நோற்கிறேன்; ஏழைகளுக்கு உதவுகிறேன் என்றெல்லாம் மனிதர்கள் நேர்ச்சை செய்கின்றனர்.

இவ்வாறு நேர்ச்சை செய்வதை இஸ்லாம் அனுமதித்தாலும் நேர்ச்சை செய்யாமல் இருப்பதே உயர்ந்த நிலை என்று அறிவிக்கிறது.

இறைவா! நீ எனக்காக இதைச் செய்தால் நான் உனக்காக இதைச் செய்வேன் என்று கூறுவது இறைவனிடம் பேரம் பேசுவது போல் அமைந்துள்ளது. நாம் இறைவனுக்காக எதைச் செய்வதாக நேர்ச்சை செய்கிறோமோ அது இறைவனுக்குத் தேவை என்ற கருத்தும் இதனுள் அடங்கியுள்ளது.

உனக்காக நான் இதைச் செய்கிறேன் என்று இறைவனிடம் நாம் கூறும் போது அதற்கு ஆசைப்பட்டு நமது கோரிக்கையை இறைவன் நிறைவேற்றுவான் என்ற மனப்பான்மையின் வெளிப்பாடாகவும் இது தோற்றமளிக்கின்றது.

எனவே தான் நேர்ச்சை செய்வதைத் தவிர்க்குமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு அறிவுரை கூறியுள்ளனர்.

صحيح البخاري

6608 – حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مَنْصُورٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مُرَّةَ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: نَهَى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ النَّذْرِ، وَقَالَ: «إِنَّهُ لاَ يَرُدُّ شَيْئًا، وَإِنَّمَا يُسْتَخْرَجُ بِهِ مِنَ البَخِيلِ»

நேர்ச்சை செய்வதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். (இறைவன் விதித்த) எதனையும் நேர்ச்சை மாற்றியமைத்து விடப் போவதில்லை. இதனால் கஞ்சர்களிடமிருந்து (செல்வம்) வெளியே கொண்டு வரப்படும் (என்பதைத் தவிர வேறு பயன் இல்லை) என்றும் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி 6608, 6693

صحيح البخاري

6692 – حَدَّثَنَا يَحْيَى بْنُ صَالِحٍ، حَدَّثَنَا فُلَيْحُ بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ الحَارِثِ، أَنَّهُ سَمِعَ ابْنَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، يَقُولُ: أَوَلَمْ يُنْهَوْا عَنِ النَّذْرِ، إِنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ النَّذْرَ لاَ يُقَدِّمُ شَيْئًا وَلاَ يُؤَخِّرُ، وَإِنَّمَا يُسْتَخْرَجُ بِالنَّذْرِ مِنَ البَخِيلِ»

நேர்ச்சை எந்த ஒன்றையும் முற்படுத்தவோ, பிற்படுத்தவோ செய்யாது எனவும் நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)

நூல் : புகாரி 6692

நாம் செய்யும் நேர்ச்சையில் மயங்கி இறைவன் நமது கோரிக்கையை நிறைவேற்ற மாட்டான். அவன் ஏற்கனவே எடுத்திருக்கும் முடிவை நாம் செய்த நேர்ச்சையின் காரணமாக மாற்றவும் மாட்டான் என்பதை மேற்கண்ட நபிமொழிகள் தெளிவுபடுத்துகின்றன.

நேர்ச்சையினால் ஏற்படும் ஒரே நன்மை கஞ்சர்களின் பொருளாதாரம் நல்வழியில் செலவிடப்படுவது தான். இறைவனுக்காக தமது பொருளாதாரத்தை வாரி வழங்கும் வழக்கமில்லாத கஞ்சர்கள், நேர்ச்சை செய்து விட்டதால் விபரீதம் ஏதும் ஏற்படக் கூடாது என்ற அச்சத்தினால் பணத்தைச் செலவிட முன்வருவார்கள். இதுதான் நேர்ச்சையினால் கிடைக்கும் ஒரே பயன் என்பதையும் மேற்கண்ட நபிமொழிகள் விளக்குகின்றன.

நேர்ச்சை செய்வதைத் தவிர்க்குமாறு இன்னும் ஏராளமான நபிமொழிகள் உள்ளன.

அப்படியானால் நமக்கு நேர்ந்துள்ள துன்பங்கள் விலகவும், நமக்குக் கிடைக்காத பேறுகள் கிடைக்கவும் நாம் என்னதான் செய்ய வேண்டும்?

இது போன்ற சந்தர்ப்பங்களில் இறைவனிடம் பிரார்த்தனை செய்வது தான் சிறந்த வழியாகும்.

இறைவா! எனக்கு ஏற்பட்ட இந்தத் துன்பத்தை நீ தான் நீக்க வேண்டும். உன்னைத் தவிர நான் வேறு யாரிடம் முறையிடுவேன்? என்று கோரிக்கை வைப்பதில் தான் பணிவு இருக்கிறது. இறைவனைப் பற்றிய அச்சமும் இதில் தான் வெளிப்படுகின்றது.

உதாரணமாக இரண்டு ரக்அத்கள் தொழுது, அல்லது நோன்பு நோற்று, அல்லது எழைகளுக்கு உதவி செய்து விட்டு இறைவா! உனக்காக நான் செய்த இந்த வணக்கத்தை ஏற்றுக் கொண்டு எனது துன்பத்தை நீக்குவாயாக என்பது போல் இறைவனிடம் பிரார்த்தனை செய்வது நேர்ச்சை செய்வதை விடச் சிறந்ததாகும்.

வணக்க வழிபாடுகள் மூலம் தன்னிடம் உதவி தேடுமாறு இறைவன் நமக்கு வழிகாட்டுகிறான்.

பொறுமை, மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள்! பணிவுடையோரைத் தவிர (மற்றவர்களுக்கு) இது பாரமாகவே இருக்கும்.

திருக்குர்ஆன் 2:45

நம்பிக்கை கொண்டோரே! பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள்! அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்.

திருக்குர்ஆன் 2:153

நேர்ச்சையை நிறைவேற்றுவது அவசியம்

நேர்ச்சை செய்வதால் எந்த நன்மையும் ஏற்படாது என்றும், நேர்ச்சை செய்யாதீர்கள் என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருப்பதால் நேர்ச்சை செய்வது அறவே கூடாது என்று புரிந்து கொள்ளக் கூடாது. அது சிறந்ததல்ல என்றே புரிந்து கொள்ள வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்ததாக வரும் அறிவிப்புகளை இரண்டு வகையாக நாம் பிரிக்கலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒன்றைத் தடை செய்து விட்டு அதை அனுமதிப்பது போன்ற சொற்கள் எதனையும் பயன்படுத்தாமல் இருந்தால் அந்தத் தடை கண்டிப்பான தடை என்று புரிந்து கொள்ள வேண்டும்.

அவர்கள் ஒன்றைத் தடை செய்து விட்டு அதை அனுமதிப்பது போன்ற சொற்களைப் பயன்படுத்தியிருந்தால் அந்தத் தடை கண்டிப்பானது அல்ல; அதைச் செய்யாமல் இருப்பது சிறந்தது என்று அதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

நேர்ச்சையைப் பொருத்த வரை அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்திருந்தாலும் அதை அனுமதித்ததற்கும் சான்றுகள் கிடைக்கின்றன. எனவே நேர்ச்சை செய்வது அறவே தடை செய்யப்பட்டது அல்ல என்று தான் முடிவு செய்ய வேண்டும்.

மேலும் நேர்ச்சை செய்து விட்டால் அதைக் கட்டாயம் நிறைவேற்ற வேண்டும்.

நீங்கள் எதையேனும் (நல்வழியில்) செலவிட்டாலோ, நேர்ச்சை செய்தாலோ அல்லாஹ் அதை அறிகிறான். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளரும் இல்லை.

திருக்குர்ஆன் 2:270

அவர்கள் நேர்ச்சையை நிறைவேற்றுவார்கள். தீமை பரவிய நாளைப் பற்றி அஞ்சுவார்கள்.

திருக்குர்ஆன் 76:7

பின்னர் அவர்கள் தம்மிடம் உள்ள அழுக்குகளை நீக்கட்டும்! தமது நேர்ச்சைகளை நிறைவேற்றட்டும்! பழமையான அந்த ஆலயத்தை தவாஃப் செய்யட்டும்.

திருக்குர்ஆன் 22:29

صحيح البخاري

2651 – حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا أَبُو جَمْرَةَ، قَالَ: سَمِعْتُ زَهْدَمَ بْنَ مُضَرِّبٍ، قَالَ: سَمِعْتُ عِمْرَانَ بْنَ حُصَيْنٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «خَيْرُكُمْ قَرْنِي، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ، ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ» – قَالَ عِمْرَانُ: لاَ أَدْرِي أَذَكَرَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعْدُ قَرْنَيْنِ أَوْ ثَلاَثَةً – قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ بَعْدَكُمْ قَوْمًا يَخُونُونَ وَلاَ يُؤْتَمَنُونَ، وَيَشْهَدُونَ وَلاَ يُسْتَشْهَدُونَ، وَيَنْذِرُونَ وَلاَ يَفُونَ، وَيَظْهَرُ فِيهِمُ السِّمَنُ»

உங்களுக்குப் பின்னர் ஒரு சமுதாயத்தினர் தோன்றுவார்கள். அவர்கள் மோசடி செய்வார்கள். நாணயமாக நடக்க மாட்டார்கள். சாட்சி கூற அழைக்கப்படாமலே சாட்சி கூறுவார்கள். நேர்ச்சை செய்து விட்டு அதை நிறைவேற்றாமல் இருப்பார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுஸைன் (ரலி)

நூல்: புகாரி 2651, 3650, 6428, 6695

صحيح البخاري

6696 – حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ طَلْحَةَ بْنِ عَبْدِ المَلِكِ، عَنِ القَاسِمِ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ نَذَرَ أَنْ يُطِيعَ اللَّهَ فَلْيُطِعْهُ، وَمَنْ نَذَرَ أَنْ يَعْصِيَهُ فَلاَ يَعْصِهِ»

அல்லாஹ்வுக்கு வழிபடுவதாக ஒருவர் நேர்ந்து கொண்டால் அவனுக்கு வழிபடட்டும். அல்லாஹ்வுக்கு மாறு செய்வதாக நேர்ச்சை செய்தால் அவனுக்கு மாறு செய்ய வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : புகாரி 6696

மேற்கண்ட வசனங்களும், நபிமொழியும் நேர்ச்சையை அனுமதிக்கும் வகையில் அமைந்துள்ளன. மேலும் நேர்ச்சை செய்தால் அதைக் கட்டாயம் நிறைவேற்ற வேண்டும் என்பதையும் மேற்கண்ட வசனங்களிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

எனவே ஒருவர் குறிப்பிட்ட ரக்அத்துகள் தொழுவதாக நேர்ச்சை செய்திருந்தால் அந்த நேர்ச்சையை அவர் நிறைவேற்ற வேண்டும்.

ஆனால் நேர்ச்சை செய்யும் எந்த வணக்கமும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித்தந்த முறையில் மட்டும் தான் இருக்க வேண்டும்.

Leave a Reply

About Me

இறைவனின் திருப்பெயரால்…

  • இந்த தளத்தில் உள்ள செய்திகள் ஏகத்துவ கொள்கையை சொல்லும் பல்வேறு இணையதளத்தில் இருந்து எடுத்து தொகுக்கப்பட்டவை (ஆன்லைன்பீஜே, ஆன்லைன் டிஎன்டிஜே, etc).
  • இதில் தவறான கருத்துகள் ஏதேனும் இருப்பின் அதை Facebook page https://www.facebook.com/Thowheed.org என்ற முகவரிக்கு அனுப்பி தெரிவிக்கலாம்.
  • உங்கள் ஆக்கங்களையும்
  • Facebook page https://www.facebook.com/Thowheed.org என்ற முகவரிக்கு
  • என்ற முகவரிக்கு அனுப்பவும். ஆசிரியர் சரிபார்த்தபின் வெளியிடப்படும்.
  • இந்த தளத்திற்கும் எந்த அமைப்பிற்கும் எந்த தொடர்பும் கிடையாது.

You may want to read

Follow Us

Sign up for our Newsletter

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit