நாம் நபிக்கு அடிமை என்று குர்ஆன் கூறுகிறதா?

நாம் நபிக்கு அடிமை என்று குர்ஆன் கூறுகிறதா?

னிதர்களாகிய நாம் அல்லாஹ்வுக்கு மட்டும் அடிமையல்ல! அவனுடைய தூதருக்கும் அடிமைதான் என்று சிலர் கூறுகின்றனர். அதற்கு ஆதாரமாக பின்வரும் குரான் வசனத்தையும் கூறுகின்றனர்.

தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள்! பாவங்கள் அனைத்தையும் அல்லாஹ் மன்னிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் என்று தெரிவிப்பீராக!

திருக்குர்ஆன் 39:53

"எனது அடியார்களே"! என்று மக்களை அழைக்குமாறு நபிக்கு அல்லாஹ் கட்டளையிடுகிறான்.

இதன் மூலம் நாம் நபியவர்களுக்கும் அடிமைகளே என்று கூறுகின்றனர். இது சரியா?

முஹம்மது இஹ்ஸாஸ்

பதில்:

இறைவனுக்கு இணை வைக்கின்ற விஷயத்தில் வெறிபிடித்து திரிபவர்கள் இப்படிப்பட்ட வாதத்தை வைக்கின்றனர். இந்தப் பெரும் பாவத்தைச் செய்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் புகழ் சேர்க்க வேண்டும் என்று நினைக்கின்றனர்.

ஆனால் இவ்வாறு கூறுபவர்கள் இஸ்லாத்தை விட்டும் வெளியேறி முழு இணைவைப்பில் விழுந்து விடுகிறார்கள்.

இறைவனுக்கும், மனிதர்களுக்கும் இடையே உள்ள மிகப்பெரிய வேறுபாடு இறைவன் எஜமானாகவும், மனிதர்கள் அவனுக்கு அடிமையாகவும் இருப்பது தான்.

இறைவனுக்கு மட்டும் உரிய இந்த தகுதியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு உள்ளது என்று நம்பிவிட்டால் இதற்கு மேல் பெரிய இணைவைப்பு என்ன இருக்கின்றது?.

இவர்கள் சுட்டிக்காட்டும் வசனத்தின் கருத்து என்ன?

பொதுவாக எல்லா மொழிகளிலும் இது போன்ற சொற்களுக்கு இரண்டு கருத்துக்கள் உள்ளன.

உங்களுக்கும், உங்கள் தகப்பனாருக்கும் பிரச்சனை ஏற்பட்டு இருவரும் பேசிக் கொள்வதில்லை என்று வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் நண்பர் ஒருவரை அழைத்து தந்தையிடம் ஒரு செய்தியைச் சொல்லி அனுப்புகிறீர்கள். என் தந்தையே நான் இனிமேல் உங்கள் மனம் புண்படும்படி நடக்க மாட்டேன் என்று சொல்லி விட்டு வா என்று நண்பரிடம் கூறுகிறீர்கள்.

இந்த வார்த்தையை மட்டும் பார்த்தால் உங்கள் தந்தை உங்கள் நண்பருக்கும் தந்தை போல் தோற்றம் தருகிறது. வார்த்தையில் அந்தக் கருத்து இருந்தாலும் செய்தியைச் சொன்ன நீங்களும், சொல்லி அனுப்பிய உங்கள் நண்பரும், உங்கள் தந்தையும் அவ்வாறு பொருள் கொள்ள மாட்டார்கள். ஏனெனில் மேற்கண்ட வாசகத்தில் ஒரு சொல் மறைந்து நிற்கிறது என்று தான் இதைப் புரிந்து கொள்வோம்.

என் தந்தையே நான் இனிமேல் உங்கள் மனம் புண்படும்படி நடக்கமாட்டேன் என்று சொல்லி விட்டு வா

என்றால்

என் தந்தையே நான் இனிமேல் உங்கள் மனம் புண்படும்படி நடக்கமாட்டேன் என்று (நான் சொன்னதாக) சொல்லி விட்டு வா

என்றுதான் அர்த்தம்.

நான் சொன்னதாக என்ற வார்த்தை இல்லாவிட்டாலும் பயன்படுத்தப்பட்ட சூழ்நிலை இதை நமக்குச் சொல்லித் தந்து விடுகிறது.

உங்கள் நண்பரின் தந்தை வேறு; உங்கள் தந்தை வேறு என்பதால் அதுவே சரியான பொருளை நமக்குச் சொல்லித்தந்து விடுகிறது.

இதுபோல் ஆயிரமாயிரம் சொற்பிரயோகங்கள் அனைத்து மொழி பேசும் மக்கள் மத்தியிலும் பரவலாகக் காணப்படுகிறது. மனிதர்களின் பேச்சு வழக்கில் தான் குர்ஆனும் அருளப்பட்டதால் இது போல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

எழுத்து நடையில் குர்ஆன் அருளப்படவில்லை. பேச்சு நடையில் அருளப்பட்டது.

பேச்சு வழக்கில் அதை எடு இதை எடு என்று சொல்வோம். எதைச் சொல்கிறோம் என்பதை வார்த்தை விளக்காவிட்டாலும் சூழ்நிலை அதை விளக்கி விடும். ஆனால் எழுத்து நடையில் பேனாவை எடு பென்சிலை எடு என்று தான் எழுத வேண்டும். அதாவது பேச்சுக்களுக்கு பொருள் கொள்ளும் போது அது சொல்லப்பட்ட சூழ்நிலைகளும் கவனத்தில் கொள்ளப்படுதல் வேண்டும்.

இன்னும் தெளிவாக இதைப் புரிந்து கொள்ள ஒரு உதாரணத்தைப் பாருங்கள்.

திருக்குர்ஆனின் முதல் அத்தியாயம் அல்ஃபாத்திஹா அத்தியாயம்.

எல்லாப்புகழும் அல்லாஹ்வுக்கே. அவன் அகிலத்தில் அதிபதி. அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் என்று அது ஆரம்பிக்கிறது.

சூழலைக் கவனிக்காமல் சொல்லை மட்டும் பார்த்தால் இது அல்லாஹ்வின் வார்த்தை அல்ல எனக் கூறலாம். அல்லாஹ் சொல்வதாக இருந்தால் இப்படி படர்க்கையாகக் கூறாமல்

எல்லாப் புகழும் எனக்கே. நான் அகிலத்தின் அதிபதி. நான் அளவற்ற அருளாளன். நிகரற்ற அண்புடையோன்

என்று தான் கூற வேண்டும்.

சொல்லமைப்பை மட்டும் வைத்துக் கொண்டு 39:53 வசனத்துக்கு இந்தக்கேடு கெட்டவர்கள் அர்த்தம் செய்தது போல் இதற்கும் அர்த்தம் செய்வார்களா?

இச்சொல்லமைப்பு அல்லாஹ் கூறுவது போல் இல்லை. எனவே இது அல்லாஹ்வைப் புகழ்வதற்காக முஹம்மது நபி சுயமாகச் சொன்ன வார்த்தை என்று இவர்கள் கூறுவார்களா?

எனவே தான் நம்முடைய தமிழாக்கத்தில் அடைப்புக் குறிக்குள் மறைந்து கிடக்கும் வார்த்தையைப் போட்டுள்ளோம்.

தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள்! பாவங்கள் அனைத்தையும் அல்லாஹ் மன்னிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் என்று (அல்லாஹ் கூறுவதைத்) தெரிவிப்பீராக!

என்று நாம் நமது தமிழாக்கத்தில் தெளிவுபடுத்தியுள்ளோம்.

நபிகள் நாயகத்துக்கோ, வேறு நபிமார்களுக்கோ மனிதர்கள் அடிமைகள் அல்லர் என்று பல வசனங்கள் தெளிவாகக் கூறுவதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

மனிதர்கள் இறைவனைத் தவிர வேறு யாருக்கும் அடிமைகளாக இருக்க முடியாது. மக்கள் தனக்கு அடிமையாக இருக்க வேண்டும் எனக் கூற எந்த இறைத் தூதருக்கும் தகுதியில்லை என்று குர்ஆன் தெளிவாகக் கூறுகின்றது.

مَا كَانَ لِبَشَرٍ أَنْ يُؤْتِيَهُ اللَّهُ الْكِتَابَ وَالْحُكْمَ وَالنُّبُوَّةَ ثُمَّ يَقُولَ لِلنَّاسِ كُونُوا عِبَادًا لِي مِنْ دُونِ اللَّهِ وَلَكِنْ كُونُوا رَبَّانِيِّينَ بِمَا كُنْتُمْ تُعَلِّمُونَ الْكِتَابَ وَبِمَا كُنْتُمْ تَدْرُسُونَ (79)3

எந்த மனிதருக்காவது அல்லாஹ் வேதத்தையும், அதிகாரத்தையும், நபி எனும் தகுதியையும் வழங்கினால் (அதன்) பின் "அல்லாஹ்வையன்றி எனக்கு அடிமைகளாக ஆகி விடுங்கள்!'' என்று கூறுகின்ற அதிகாரம் அவருக்கு இல்லை. மாறாக, "வேதத்தை நீங்கள் கற்றுக் கொடுப்போராக இருப்பதாலும், அதை வாசித்துக் கொண்டிருப்பதாலும் இறைவனுக்குரியோராக ஆகி விடுங்கள்!'' (என்றே கூறினர்)

திருக்குர்ஆன் 3:79

நபிமார்கள் உட்பட பூமியில் உள்ளவர்கள் அனைவரும் அல்லாஹ் ஒருவனுக்குத் தான் அடிமையாக இருக்க வேண்டும்.  இதைப் பின்வரும் வசனமும் தெளிவுபடுத்துகின்றது.

إِنْ كُلُّ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ إِلَّا آتِي الرَّحْمَانِ عَبْدًا(93)19

வானங்களிலும், பூமியிலும் உள்ள ஒவ்வொருவரும் அளவற்ற அருளாளனிடம் அடிமையாகவே வருவார்கள்.

திருக்குர்ஆன் 19:93

திருக்குர்ஆனில் பல இடங்களில் மனிதர்களை எனது அடியார்களே என்று அல்லாஹ் அழைக்கின்றான். அது போன்று  39:53 வது வசனத்திலும் எனது அடியார்களே என்று இறைவனே அழைத்துள்ளான்.

இறைவனுடைய இந்த அழைப்பை மக்களிடம் எடுத்துச் சொல்லுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு உத்தரவிடப்படுகின்றது. இதுவே குர்ஆனைச் சரியாக புரிந்துகொள்ளும் முறை.

நபிமார்களும் அல்லாஹ்வின் அடிமைகளாகத் தான் இருக்க முடியும். அவர்கள் எவ்வளவு தான் இறைவனுக்கு நெருக்கமானாலும் இறைவனுக்கு அடிமை என்ற நிலையிலிருந்து மாற முடியாது. பின்வரும் ஆதாரங்கள் இதை தெளிவுபடுத்துகின்றது.

وَأَنَّهُ لَمَّا قَامَ عَبْدُ اللَّهِ يَدْعُوهُ كَادُوا يَكُونُونَ عَلَيْهِ لِبَدًا(19)72

அல்லாஹ்வின் அடியார் (முஹம்மது) அவனிடம் பிரார்த்திக்க எழும் போது (மக்கள்) கூட்டம் கூட்டமாக அவரை நெருங்கி விடுகின்றனர்.

திருக்குர்ஆன் 72:19

سُبْحَانَ الَّذِي أَسْرَى بِعَبْدِهِ لَيْلًا مِنَ الْمَسْجِدِ الْحَرَامِ إِلَى الْمَسْجِدِ الْأَقْصَى الَّذِي بَارَكْنَا حَوْلَهُ لِنُرِيَهُ مِنْ آيَاتِنَا إِنَّهُ هُوَ السَّمِيعُ الْبَصِيرُ (1)17

மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து, சுற்றுப்புறத்தைப் பாக்கியம் மிக்கதாக நாம் ஆக்கிய மஸ்ஜிதுல் அக்ஸா வரை தனது சான்றுகளைக் காட்டுவதற்காக ஓர் இரவில் தனது அடியாரை (முஹம்மதை) அழைத்துச் சென்றவன் தூயவன். அவன் செவியுறுபவன்; பார்ப்பவன்.

திருக்குர்ஆன் 17:1

1130 حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ قَالَ حَدَّثَنَا مِسْعَرٌ عَنْ زِيَادٍ قَالَ سَمِعْتُ الْمُغِيرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ إِنْ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيَقُومُ لِيُصَلِّيَ حَتَّى تَرِمُ قَدَمَاهُ أَوْ سَاقَاهُ فَيُقَالُ لَهُ فَيَقُولُ أَفَلَا أَكُونُ عَبْدًا شَكُورًا رواه البخاري

முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் "தமது பாதங்கள்' அல்லது "கணைக்கால்கள்' வீங்கும் அளவுக்கு நின்று தொழுவார்கள். இது பற்றி அவர்களிடம் கேட்கப்படும்போது "நான் நன்றியுள்ள அடிமையாக இருக்க வேண்டாமா?'' என்று கேட்பார்கள்.

நூல் : புகாரி 1130

3445 حَدَّثَنَا الْحُمَيْدِيُّ حَدَّثَنَا سُفْيَانُ قَالَ سَمِعْتُ الزُّهْرِيَّ يَقُولُ أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ عَنْ ابْنِ عَبَّاسٍ سَمِعَ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ عَلَى الْمِنْبَرِ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لَا تُطْرُونِي كَمَا أَطْرَتْ النَّصَارَى ابْنَ مَرْيَمَ فَإِنَّمَا أَنَا عَبْدُهُ فَقُولُوا عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ رواه البخاري

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

"கிறித்தவர்கள் மர்யமின் மகன் ஈசாவை வரம்பு மீறி உயர்த்தியதைப் போல் நீங்கள் என்னை வரம்பு மீறி உயர்த்தி விடாதீர்கள். ஏனெனில், நான் அல்லாஹ்வின் அடிமை தான். (அப்படி ஏதாவது என்னைப் பற்றிச் சொல்வதாயிருந்தால்) "அல்லாஹ்வின் அடிமை' என்றும் "அல்லாஹ்வின் தூதர்' என்றும் சொல்லுங்கள்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்'' என மிம்பரின் (உரை மேடை) மீதிருந்தபடி உமர் (ரலி) அவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன்.

நூல் : புகாரி 3445

இந்த ஆதாரங்கள் நபிகள் நாயகமும் அல்லாஹ்வின் அடிமை என்று கூறுவதாலும், அல்லாஹ்வைத் தவிர யாருக்கும் மனிதர்கள் அடிமைகள் அல்லர் என்று கூறுவதாலும் இதற்கு ஏற்பத்தான் 33:59 வசனத்துக்குப் பொருள் கொள்ள வேண்டும்.

எனது அடியார்களே அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழக்காதீர்கள் என்று அல்லாஹ் கூறுவதைத் தெரிவிப்பீராக என்பதுதான் இதன் பொருளாகும்.

Leave a Reply