நீச்சல் குளத்தில் பெண்கள் குளிக்கலாமா?

கேள்வி:

லண்டனில் இருக்கும் ஒரு சிலர் பெண்கள் நீச்சல் தடாகம் சென்று நீச்சல் பண்ணலாம் என்றும் நீங்கள் தான் அவ்வாறு பதில் தந்ததாகவும் கூறுகிறார்களாம். இதன் உண்மையை நானும் அறிய விரும்புகிறேன்.

நஸ்ருத்தீன்

பதில்:

பெண்கள் அவர்களுக்கென்று பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள நீச்சல் குளங்களுக்குச் சென்று குளிப்பது தவறில்லை. ஆனால் சில ஒழுங்கு முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.

நீச்சல் குளத்தின் பொறுப்பாளர் உட்பட எந்த அந்நிய ஆணும் அவர்கள் குளிப்பதைப் பார்க்க முடியாதவாறு பாதுகாப்பு இருக்க வேண்டும். பெண்களோடு குளிக்கும் போது தனது அந்தரங்கப் பகுதிகளை மற்ற பெண்களிடம் வெளிப்படுத்தாமல் இருக்க வேண்டும். இந்த ஒழுங்கு முறைகளைக் கடைப்பிடித்து குளிப்பது தவறல்ல.

பாதுகாப்பான சூழ்நிலை இருந்தாலும் பெண்கள் நீச்சல் குளங்களுக்கு அறவே செல்லக்கூடாது என்று சிலர் தவறாகக் கூறுகின்றனர். இதற்கு இவர்கள் பின்வரும் ஹதீஸை ஆதாரமாகக் காட்டுகின்றனர்.

2727 حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ حَدَّثَنَا أَبُو دَاوُدَ أَنْبَأَنَا شُعْبَةُ عَنْ مَنْصُورٍ قَال سَمِعْتُ سَالِمَ بْنَ أَبِي الْجَعْدِ يُحَدِّثُ عَنْ أَبِي الْمَلِيحِ الْهُذَلِيِّ أَنَّ نِسَاءً مِنْ أَهْلِ حِمْصَ أَوْ مِنْ أَهْلِ الشَّيامِ دَخَلْنَ عَلَى عَائِشَةَ فَقَالَتْ أَنْتُنَّ اللَّاتِي يَدْخُلْنَ نِسَاؤُكُنَّ الْحَمَّامَاتِ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَا مِنْ امْرَأَةٍ تَضَعُ ثِيَابَهَا فِي غَيْرِ بَيْتِ زَوْجِهَا إِلَّا هَتَكَتْ السِّتْرَ بَيْنَهَا وَبَيْنَ رَبِّهَا قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ رواه الترمذي

அபுல் மலீஹ் அல்ஹதலீ கூறுகிறார்:

ஹிம்ஸ் அல்லது ஷாம் நாட்டைச் சார்ந்த சில பெண்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம் வந்தனர். அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள் உங்கள் பெண்களை குளியல் குளங்களுக்கு நீங்கள் தான் அனுப்புகின்றீர்களா? ஒரு பெண் தன்னுடைய கணவன் வீடு அல்லாத வேறு இடத்தில் தன் ஆடையை (கழற்றி) வைத்தால் அவள் தனக்கும், தன்னுடைய இறைவனுக்கும் இடையேயுள்ள திரையைக் கிழித்து விடுகிறாள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன் என்று கூறினார்கள்.

நூல் : திர்மிதீ

இந்தச் செய்தியை சரியான அடிப்படையில் புரிந்து கொண்டால் இவர்கள் கூறும் கருத்துக்கு இது ஆதாரமாகாது என்பதை அறியலாம்.

ஆயிஷா (ரலி) அவர்கள் குளிப்பது தொடர்பாக இதைக் கூறினாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்ன வார்த்தை எதுவென நாம் பிரித்துப் பார்க்க வேண்டும்.

ஒரு பெண் தன்னுடைய கணவன் வீடு அல்லாத வேறு இடத்தில் தன் ஆடையை (கழற்றி) வைத்தால் அவள் தனக்கும், தன்னுடைய இறைவனுக்கும் இடையேயுள்ள திரையைக் கிழித்து விடுகிறாள்.

இது தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்ன வாக்கியமாகும்.

பெண்கள் ஆடையை அவிழ்ப்பது பற்றித்தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள். ஆடையை அவிழ்க்காமல் குளிக்கும் நிலை இருந்தால் அதை இந்தத் தடை பொருந்தாது.

மேலும் கணவனுடைய வீடு என்றால் வீடு என்று இதற்குப் பொருள் கொள்ளக் கூடாது. கணவன் அல்லாத மற்றவர்கள் முன்னால் என்று தான் பொருள் கொள்ள வேண்டும்.

கணவனும், மனைவியும் வேறு ஒரு உறவினரின் வீட்டுக்குச் செல்கின்றனர். இந்த வீடு கணவனுடைய வீடு இல்லை. இந்த வீட்டில் கணவன் முன்னால் மனைவி ஆடையை அவிழ்க்கக் கூடாது என்று யாரும் சொல்ல மாட்டார்கள். கணவன் முன்னால் என்பதைத் தான் கணவனின் வீடு என்ற சொல்லால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள் என்பதை இதில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

அடுத்தவர் வீடு என்ற காரணத்தால் இது கூடாது என்று யாரும் கூறுவதில்லை. பாதுகாப்பு ஒன்றை மட்டுமே கவனத்தில் கொண்டு இதை அனுமதிக்கின்றனர்.

நவீன நீச்சல் குளங்களில் அன்னியர்கள் பார்க்காமலும், ஆடை அவிழ்க்காமலும் பெண்கள் குளிக்கும் நிலை இருந்தால் அங்கே குளிப்பது தவறல்ல.

இன்றைக்கு பெண்களுக்கான நவீன பாதுகாப்பான நீச்சல் குளங்கள் இருப்பதைப் போன்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இருக்கவில்லை. குளம் குட்டை போன்ற நீர்நிலைகளே பொதுவிடங்களில் இருந்தன. அங்கு சென்று பெண்கள் குளித்து வந்தனர்.

இவர்கள் குளிப்பதை அந்நிய ஆண் பார்க்க நேரிடும். பாதுகாப்பு அற்ற இது போன்ற நீர்நிலைகளுக்குச் சென்று குளிக்கக் கூடாது என்று தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

எனவே இந்த ஹதீஸின் அடிப்படையில் தற்போது இஸ்லாமியப் பெண்கள் ஆறு, குளம், ஏரி போன்ற நீர்நிலைகளுக்குச் சென்று அறைகுறை ஆடையுடன் குளிக்கக் கூடாது என்று கூறலாமே தவிர பாதுகாப்புள்ள இடங்களுக்கும் செல்லக்கூடாது என்று கூற முடியாது.

அதே நேரத்தில் ஆண்களுக்கும், பெண்களுக்கும் தனித்தனி பகுதிகள் ஒதுக்கப்பட்டு மறைக்கப்பட்டு இருந்தால் அப்போது இது தவறாகாது.

மேலும் திருட்டுத்தனமாக இரகசிய கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதா என்பதையும் கண்காணித்துக் கொள்ள வேண்டும்.

கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது என்ற சந்தேகம் வந்தால் அது போன்ற இடங்களில் பெண்கள் குளிக்கக் கூடாது. மறுமையில் மாத்திரமின்றி இவ்வுலகிலும் அவர்களைப் படம் பிடித்து வெளியிட்டு அவமானப்படுத்தும் நிலை ஏற்படலாம் என்பதையும் கவனிக்க வேண்டும்.

அது போல் குற்றாலம் போன்ற இடங்களிலும், தீம்ஸ் பார்க்குகளிலும் ஆண்கள் பார்வையில் படாமல் பெண்கள் குளிக்க முடியாது என்பதால் அது போன்ற இடங்களில் குளித்து ஆண்களின் காட்சிப் பொருளாக ஆகக் கூடாது.

ஆனால் இன்று விடுதிகளில் தங்கும் தம்பதிகள் கூட ரகசியமாகப் படம் பிடிக்கப்படுகின்றனர். அது போல் குளியறையிலும் ரகசிய கேமராக்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்க அதிக வாய்ப்பு உள்ளது. இதையும் கவனத்தில் கொள்வது அவசியம்.

20.03.2012. 13:35 PM

Leave a Reply

About Me

இறைவனின் திருப்பெயரால்…

  • இந்த தளத்தில் உள்ள செய்திகள் ஏகத்துவ கொள்கையை சொல்லும் பல்வேறு இணையதளத்தில் இருந்து எடுத்து தொகுக்கப்பட்டவை (ஆன்லைன்பீஜே, ஆன்லைன் டிஎன்டிஜே, etc).
  • இதில் தவறான கருத்துகள் ஏதேனும் இருப்பின் அதை Facebook page https://www.facebook.com/Thowheed.org என்ற முகவரிக்கு அனுப்பி தெரிவிக்கலாம்.
  • உங்கள் ஆக்கங்களையும்
  • Facebook page https://www.facebook.com/Thowheed.org என்ற முகவரிக்கு
  • என்ற முகவரிக்கு அனுப்பவும். ஆசிரியர் சரிபார்த்தபின் வெளியிடப்படும்.
  • இந்த தளத்திற்கும் எந்த அமைப்பிற்கும் எந்த தொடர்பும் கிடையாது.

You may want to read

Follow Us

Sign up for our Newsletter

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit