நீதிபதிகள் மூன்று வகை என்ற ஹதீஸ் சரியா?

நீதிபதிகள் மூன்று வகை என்ற ஹதீஸ் சரியா?

நீதிபதிகள்  மூன்று  வகைப்படுவர்.  அவர்களில்  ஒரு வகையினர் சுவனத்திற்கும், இரு வகையினர் நரகத்திற்கும் செல்வர்: உண்மையை  அறிந்து  அதன்படி  தீர்ப்பு  வழங்கியவர் சுவனம் செல்வர்.  உண்மையை அறிந்திருந்தும் அநீதமாக தீர்ப்பு  வழங்கியவரும், உண்மையை அறியாமலேயே  தீர்ப்பு  வழங்கியவரும்  நரகம்  புகுவார்.

அறிவிப்பவர் : புரைதா (ரலி)

நூல் : அபூதாவூது

இந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதா?

கே.எஸ்.சுக்ருல்லாஹ்

பதில் :

நீங்கள்  குறிப்பிடும்  செய்தி  திர்மிதீ,  அபூதாவூத்,  இப்னுமாஜா, பைஹகீ,  தப்ரானீ,  ஹாகிம் மற்றும்  பல  ஹதீஸ்  நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

3102 حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حَسَّانَ السَّمْتِيُّ حَدَّثَنَا خَلَفُ بْنُ خَلِيفَةَ عَنْ أَبِي هَاشِمٍ عَنْ ابْنِ بُرَيْدَةَ عَنْ أَبِيهِ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الْقُضَاةُ ثَلَاثَةٌ وَاحِدٌ فِي الْجَنَّةِ وَاثْنَانِ فِي النَّارِ فَأَمَّا الَّذِي فِي الْجَنَّةِ فَرَجُلٌ عَرَفَ الْحَقَّ فَقَضَى بِهِ وَرَجُلٌ عَرَفَ الْحَقَّ فَجَارَ فِي الْحُكْمِ فَهُوَ فِي النَّارِ وَرَجُلٌ قَضَى لِلنَّاسِ عَلَى جَهْلٍ فَهُوَ فِي النَّارِ قَالَ أَبُو دَاوُد وَهَذَا أَصَحُّ شَيْءٍ فِيهِ يَعْنِي حَدِيثَ ابْنِ بُرَيْدَةَ الْقُضَاةُ ثَلَاثَةٌ رواه أبو داود

நபிகள்  நாயகம்  (ஸல்)  அவர்கள்  கூறினார்கள் :

மூன்று  வகையான  நீதிபதிகள்  உள்ளனர்.  இவர்களில்  ஒருவர்  சொர்க்கத்திற்கும்  மற்ற இருவர்  நரகத்திற்கும்  செல்வர்.  உண்மையைப்  புரிந்து  அதனடிப்படையில்  தீர்ப்பளிப்பவர் சொர்க்கத்திற்குச்  செல்வார்.  உண்மையைப்  புரிந்தபின்  அநியாயமாகத்  தீர்ப்பளித்தவர் நரகத்திற்குச்  செல்வார். (உண்மையை)  அறியாமல்  மக்களுக்குத்  தீர்ப்பளிப்பவர் நரகத்திற்குச்  செல்வார்.

அறிவிப்பவர் : புரைதா  பின்  ஹஸீப்  (ரலி)

இதுதான் நீங்கள் சுட்டிக்காட்டும் ஹதீஸாகும்.

இந்தக் கருத்தில் அறிவிக்கப்பட்டுள்ள ஹதீஸ்கள் யாவும் பலவீனமானவையாகும். அவற்றில் மேலே உள்ள அறிவிப்பு தான் ஓரளவு பரவாயில்லாத அறிவிப்பு என்று இந்த ஹதீஸின் அடியில் அபூதாவூத் குறிப்பிடுகிறார்.

மேற்கண்ட அறிவிப்பை பொருத்தவரை அதிலும் பலவீனம் உள்ளது. இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஹலப் பின் ஹலீஃபா என்பவர் இடம் பெற்றுள்ளார்.

இவர் நம்பகமானவர் என்றாலும் இவர் தனது கடைசிக் காலத்தில் மூளக்குழப்பத்துக்கு உள்ளானார்.

மூளக்குழப்பத்துக்கு உள்ளானவர்களின் அறிவிப்பை மூன்று வகையாகப் பிரித்துப் பார்க்க வேண்டும்.

குறிப்பிட்ட ஹதீஸை இவர் மூளை குழம்பிய பின் அறிவித்தார் என்று உறுதி செய்யப்பட்டால் அந்த ஹதீஸ் பலவீனம் என்று முடிவு செய்யப்படும்.

மூளை குழம்புவதற்கு முன் குறிப்பிட்ட ஹதீஸை அறிவித்தார் என்று உறுதியானால் அந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது என்று முடிவு செய்யப்படும்.

குறிப்பிட்ட ஹதீஸை மூளை குழம்புவதற்கு முன் அறிவித்தாரா? மூளை குழம்பிய பின்னர் அறிவித்தாரா என்று ஆதாரம் கிடைக்காவிட்டால் அதை நிறுத்தி வைக்க வேண்டும்.

மேற்கண்ட ஹதீஸ் இந்த மூன்றாவது தரத்தில் உள்ளதாகும். இதை மூளை குழம்பிய பின்னர் அறிவித்தாரா? பின்னர் அறிவித்தாரா என்பதற்கு ஆதாரம் கிடைக்கவில்லை என்பதால் இதை நிறுத்தி வைக்க வேண்டும். அதாவது பலவீனமான ஹதீஸ் என்று முடிவு செய்ய வேண்டும்.

Leave a Reply