பிள்ளைகளைத் திருத்துவதற்காக பொய் வாக்குறுதி கொடுக்கலாமா?

பிள்ளைகளைத் திருத்துவதற்காக பொய் வாக்குறுதி கொடுக்கலாமா?

நபிகளார் வாக்கு கொடுத்ததற்காக மூன்று நாட்கள் காத்திருந்தார்கள் என்று நபிமொழி உள்ளதா? பிள்ளைகளைத் திருத்துவதற்காக பொய்யான வாக்குறுதிகளைக் கொடுக்கலாமா?

4344حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ فَارِسٍ النَّيْسَابُورِيُّ حَدَّثَنَا مُحَمَّدُ ابْنُ سِنَانٍ حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ طَهْمَانَ عَنْ بُدَيْلٍ عَنْ عَبْدِ الْكَرِيمِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَقِيقٍ عَنْ أَبِيهِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي الْحَمْسَاءِ قَالَ بَايَعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِبَيْعٍ قَبْلَ أَنْ يُبْعَثَ وَبَقِيَتْ لَهُ بَقِيَّةٌ فَوَعَدْتُهُ أَنْ آتِيَهُ بِهَا فِي مَكَانِهِ فَنَسِيتُ ثُمَّ ذَكَرْتُ بَعْدَ ثَلَاثٍ فَجِئْتُ فَإِذَا هُوَ فِي مَكَانِهِ فَقَالَ يَا فَتًى لَقَدْ شَقَقْتَ عَلَيَّ أَنَا هَاهُنَا مُنْذُ ثَلَاثٍ أَنْتَظِرُكَ قَالَ أَبُو دَاوُد قَالَ مُحَمَّدُ بْنُ يَحْيَى هَذَا عِنْدَنَا عَبْدُ الْكَرِيمِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ شَقِيقٍ قَالَ أَبُو دَاوُد هَكَذَا بَلَغَنِي عَنْ عَلِىِّ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ أَبُو دَاوُد بَلَغَنِي أَنَّ بِشْرَ بْنَ السَّرِيِّ رَوَاهُ عَنْ عَبْدِ الْكَرِيمِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ شَقِيقٍ رواه ابوداود

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைத்தூதராக அனுப்பப்படுவதற்கு முன்பு ஒரு பொருளை வாங்கினேன். அவர்களுக்கு மீதம் தரவேண்டியிருந்தது. எனவே நான், இந்த இடத்தில் இருங்கள் (மீதப் பணத்தைக் கொண்டு) வருகிறேன் என்று வாக்குறுதி வழங்கினேன். (ஆனால்) அதை மறந்து விட்டேன். மூன்று நாட்களுக்குப் பின்னர் எனக்கு நினைவு வந்தது. அங்கே சென்ற போது அதே இடத்தில் அவர்கள் இருந்தார்கள். அப்போது, இளைஞனே எனக்குக் கஷ்டத்தைத் தந்து விட்டாயே? நான் மூன்று நாட்களே இதே இடத்தில் உன்னை எதிர்பார்த்து காத்திருந்தேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அபீ ஹம்சா (ரலி)

நூல் : அபூதாவூத்

இதே செய்தி பைஹகீயிலும் இடம்பெற்றுள்ளது.

இந்தச் செய்தியில் நான்காவது அறிவிப்பாளராக அப்துல் கரீம் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் யாரென அறியப்படாதவர். இவரின் நம்பகத்தன்மை பற்றி குறிப்புகள் கிடையாது.

تقريب التهذيب (2/ 361( 4152عبد الكريم ابن عبدالله ابن شقيق العقيلي البصري مجهول من السادسة د

அப்துல் கரீம் பின் அப்துல்லாஹ் பின் ஷகீக் என்பவர் யாரென அறியப்படாதவர்.

நூல் : தக்ரீபுத் தஹ்தீப்

மேலும் இதன் கருத்தும் ஏற்றுக் கொள்ளும் வகையில் இல்லை. ஒருவர் நில்லுங்கள் வருகிறேன் என்று கூறினால் ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் நிற்கலாம். மூன்று நாட்கள் நின்றால் நம்முடைய எத்தனையோ வேலைகள் பாதிக்கப்படும். மேலும் மூன்று நாட்கள் உணவுக்கு என்ன செய்வது? எங்கு உறங்குவது? போன்ற கேள்விகள் இந்தச் செய்தி பலவீனமானதே என்பதை உறுதிப்படுத்துகிறது.

மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தினமும் ஐந்து வேளைத் தொழுகை நடத்தும் பொறுப்பில் இருந்தார்கள். மூன்று நாட்கள் ஒரு இடத்தில் நின்று கொண்டு இருந்தால் யார் மூன்று நாட்களும் தொழுகை நடத்தி இருப்பார்கள்? சாம்ராஜ்யத்தின் அதிபராக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இருந்தார்கள். அந்த மூன்று நாட்களும் அதை யார் சுமந்து கொண்டார்?

இப்படி அர்த்தமற்ற உளரல் போல் இது அமைந்துள்ளதால் இது ஹதீஸ் அல்ல; கட்டுக்கதை தான்.

குழந்தைகளைத் திருத்துவதற்காக அதைத் தருகிறேன், இதைத் தருகிறேன் என்று பொய்யான வாக்குறுதிகள் தரக்கூடாது என்று சில நபிமொழிகளில் கூறப்பட்டுள்ளது.

4339حَدَّثَنَا قُتَيْبَةُ حَدَّثَنَا اللَّيْثُ عَنْ ابْنِ عَجْلَانَ أَنَّ رَجُلًا مِنْ مَوَالِي عَبْدِ اللَّهِ بْنِ عَامِرِ بْنِ رَبِيعَةَ الْعَدَوِيِّ حَدَّثَهُ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَامِرٍ أَنَّهُ قَالَ دَعَتْنِي أُمِّي يَوْمًا وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَاعِدٌ فِي بَيْتِنَا فَقَالَتْ هَا تَعَالَ أُعْطِيكَ فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَا أَرَدْتِ أَنْ تُعْطِيهِ قَالَتْ أُعْطِيهِ تَمْرًا فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَا إِنَّكِ لَوْ لَمْ تُعْطِهِ شَيْئًا كُتِبَتْ عَلَيْكِ كِذْبَةٌ رواه ابوداود

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்கள் வீட்டில் இருக்கும் போது என் தாய் என்னை, வா நான் உனக்கு (ஒன்றைத்) தருகிறேன் என்று அழைத்தார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நீ (உன் மகனுக்கு எதையாவது) கொடுக்க எண்ணியுள்ளாயா? என்று கேட்டார்கள். நான் அவனுக்கு ஒரு பேரீச்சம் பழத்தைக் கொடுக்க எண்ணியுள்ளேன் என்று கூறினார். நீ அவனுக்கு எதையும் கொடுக்கவில்லையானால் உன் மீது பொய் சொன்ன குற்றம் எழுதப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் ஆமிர் (ரலி)

நூல் : அபூதாவூத்

இதே செய்தி அஹ்மத்,பைஹகீ ஆகிய நூல்களிலும் இடம்பெற்றுள்ளது.

இச்செய்தியின் இரண்டாவது அறிவிப்பாளர் ஒரு மனிதர் என்று இடம்பெற்றுள்ளது. இவர் யார்? இவரின் நம்பத்தன்மை நிலை என்ன என்ற விவரம் தெரியாததால் இந்தச் செய்தி ஆதாரப்பூவர்மானது அல்ல.

எனினும் பொதுவாக பொய் சொல்லக் கூடாது என்ற நபிமொழி பெரியவர்கள், சிறியவர்கள் என்று பாகுபாடு இல்லாமல் தடை செய்துள்ளது.

6094حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا جَرِيرٌ عَنْ مَنْصُورٍ عَنْ أَبِي وَائِلٍ عَنْ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ الصِّدْقَ يَهْدِي إِلَى الْبِرِّ وَإِنَّ الْبِرَّ يَهْدِي إِلَى الْجَنَّةِ وَإِنَّ الرَّجُلَ لَيَصْدُقُ حَتَّى يَكُونَ صِدِّيقًا وَإِنَّ الْكَذِبَ يَهْدِي إِلَى الْفُجُورِ وَإِنَّ الْفُجُورَ يَهْدِي إِلَى النَّارِ وَإِنَّ الرَّجُلَ لَيَكْذِبُ حَتَّى يُكْتَبَ عِنْدَ اللَّهِ كَذَّابًا رواه البخاري

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உண்மை, நிச்சயமாக நன்மைக்கு வழிகாட்டும். நன்மையானது நிச்சயம் சொர்க்கத்திற்கு வழிகாட்டும். ஒரு மனிதர் உண்மை பேசிக்கொண்டே இருப்பார். இறுதியில் அவர் வாய்மையாளர் (சித்தீக் – எனும் பெயருக்கு உரியவர்) ஆகிவிடுவார். (இதைப் போன்றே) பொய் நிச்சயமாகத் தீமைக்கு வழிவகுக்கும்; தீமை நரகத்திற்கு வழிவகுக்கும். ஒரு மனிதர் பொய் பேசிக் கொண்டேயிருப்பார். இறுதியில் அவர் அல்லாஹ்விடம் பெரும் பொய்யர் எனப் பதிவு செய்யப்பட்டு விடுவார்.

அறிவிப்பவர் : இப்னு மஸ்வூத் (ரலி)

நூல் : புகாரி 6094

இந்த நபிமொழியின் அடிப்படையில் குழந்தைகளிடமும் பொய் சொல்லக்கூடாது என்று கூறலாம்.

ஆனாலும் நன்மையை நாடி சொல்லப்படுபவை பொய்யாக ஆகாது என்ற பொதுவான அடிப்படை குழந்தைகளுக்கும் பொருந்தும்.

صحيح البخاري

2692 – حدثنا عبد العزيز بن عبد الله، حدثنا إبراهيم بن سعد، عن صالح، عن ابن شهاب أن حميد بن عبد الرحمن، أخبره أن أمه أم كلثوم بنت عقبة، أخبرته: أنها سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: «ليس الكذاب الذي يصلح بين الناس، فينمي خيرا، أو يقول خيرا»

மக்களிடையே நல்லிணக்கம் ஏற்படுத்துபவனும், நன்மையை நாடுபவனும் பொய்யன் அல்ல என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : புகாரி 2692

நன்மையை நாடி பொய் சொன்னால் அது பொய் அல்ல என்பதில் குழந்தைகளின் நன்மைக்காக பொய் சொல்வதும் அடங்கும். இந்த அடிப்படையில் நம்மிடம் வசதி இல்லாத போது விலை உயர்ந்த பொருளைக் காட்டி அதை குழந்தை வாங்கிக் கேட்கும். வாங்கித் தராவிட்டால் அழுது அடம் பிடிக்கும். இது குழந்தையின் நலனைப் பாதிக்கும் என்பதற்காக சொல்லப்படும் பொய்யில் சேரும்.

குழந்தையின் அழுகையை நிறுத்துவது தான் முக்கியமானது. நாளை வாங்கித் தருகிறேன் என்று கூறி அல்லது இதை விட சிறந்ததை வாங்கித் தருகிறேன் எனக் கூறி அப்போது அழுகையை நிறுத்துவது தான் குழந்தைக்குச் செய்யும் நன்மையாகும்.

வாங்கித் தரவே முடியாது என்று சொன்னால் குழந்தையின் அழுகை நிற்காது. பின்னர் குழ்ந்தையும் அதை மறந்து விடும்.

தன்னிடம் வசதி இல்லை என்று பாடம் நடத்தினால் இந்தப் பொருளாதாரப் பாடம் அக்குழந்தைக்குப் புரியாது. குழந்தையின் நன்மையை நாடி இது போன்ற பொய்கள் சொல்வது குற்றமாகாது.

குழந்தை நிலையைக் கடந்து புரிந்து கொள்ளக் கூடிய நிலையை அடைந்தால் அப்போது பொய் சொல்லக் கூடாது. நிலவரத்தை விளக்கி நமது இயலாமையை அல்லது அப்பொருளின் தீமையைப் புரிய வைக்க வேண்டும்.

07.05.2014. 7:16 AM

Leave a Reply