புறச்செயல்களைப் பார்த்து இறைநேசர் எனலாமா?

புறச்செயல்களைப் பார்த்து இறைநேசர் எனலாமா?

"உம்மைக் கவரும் வகையில் இவ்வுலக வாழ்வைப் பற்றி பேசும், கடுமையான வாதத்திறமை உள்ளவனும் மனிதர்களில் இருக்கிறான். தன் உள்ளத்தில் இருப்பதற்கு அல்லாஹ்வையும் சாட்சியாக்குகிறான்." – திருக்குர்ஆன் 2:204

ஒருவன் நல்லதைப் பேசுகிறான் என்று சொன்னால் அவன் ஈமானுடன் இருக்கிறான் என்று நாம் சொல்ல முடியாது. தன்னை மகான் என்று சொல்லக் கூடியவன் பல நல்ல செய்திகளை எடுத்துச் சொல்லி விட்டு,  அதுதான் என் உள்ளத்தில் இருக்கிறது என்று கூறுவான். அதற்கு அல்லாஹ்வை சாட்சியாக்குவான். ஆனால் அது உண்மை அல்ல என்று இவ்வசனத்தில் இறைவன் கூறுகிறான்.

சிலருடைய வாதம் உங்களுக்கு அழகாக, கவர்ச்சியாக இருக்கிறது என்பதற்காக அவர்களை நல்லவர்களாக நினைத்து விடாதீர்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்.

இறைவன் கூறுகிறான்:

நீர் அவர்களைக் காணும் போது அவர்களின் உடல்கள் உம்மை வியப்பில் ஆழ்த்தும். அவர்கள் பேசினால் அவர்களது பேச்சை நீர் செவியேற்பீர். அவர்கள் சாய்த்து வைக்கப்பட்ட மரக்கட்டைகள் போல் உள்ளனர். ஒவ்வொரு பெரும் சப்தத்தையும் அவர்கள் தமக்கு எதிரானதாகவே கருதுவார்கள். அவர்களே எதிரிகள். எனவே அவர்களிடம் கவனமாக இருப்பீராக! அவர்களை அல்லாஹ் அழிப்பான். அவர்கள் எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர்?

திருக்குர்ஆன் 63:4 

இந்த வசனத்தில் நயவஞ்சகர்களைப் பற்றி இறைவன் கூறுகிறான். அவர்களுடைய தோற்றம் உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும். உங்களுக்கு வியப்பை ஏற்படுத்துகின்ற விதத்தில் அவர்கள் பேசுவார்கள். எனவே அவர்களின் பேச்சை உண்மையென நம்பிவிடாதீர்கள். அவர்களை முஃமீன் என்றும் நம்பி விடாதீர்கள். அவர்கள் தான் உங்களுக்கு முதல் எதிரிகள் என்று இறைவன் கூறுகிறான்.

"அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பினோம்'' எனக் கூறுவோரும் மனிதர்களில் உள்ளனர். (ஆனால்) அவர்கள் நம்புவோர் அல்லர்.

திருக்குர்ஆன் 2:8 

வெளிப்படையான தோற்றத்தை வைத்து நம்மளவில் ஒருவரை நல்லவர் என்று கூறிக் கொண்டாலும், அவர்கள் இறைநேசர்கள் என்றோ, அல்லாஹ்வின் பார்வையிலும் நல்ல்லவர்களாக இருப்பார்கள் என்றோ முடிவு செய்யக்கூடாது என்பதை இவ்வசனத்தில் இருந்தும் அறியலாம்.

Leave a Reply