பெருநாள் வாழ்த்து கூறலாமா?

பெருநாள் வாழ்த்து கூறலாமா?

வாழ்த்து என்றால் அதற்கு அர்த்தம் என்ன?

நீங்கள் நலமாக இருக்க ஆசி வழங்குகிறேன் என்று கூறினால் உங்களிடம் இறைத் தன்மை இருப்பதாக அதன் கருத்து அமைந்துள்ளது.

நீங்கள் நலமாக மகிழ்வுடன் இருக்க, அல்லது கவலைகள் மறக்க அல்லாஹ்விடம் துஆச் செய்கிறேன் என்று கூறினால் இறைவனிடம் ஒரு முஸ்லிம் சகோதரனுக்காக துஆச் செய்யும் பொதுவான அனுமதியில் இது அடங்கும்.

வாழ்த்து என்ற சொல் இரண்டு அர்த்தங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. முக்கியமான மத குருவிடம் வாழ்த்துப் பெற்றேன் என்றால் அப்போது அதன் பொருள் ஆசி பெறுதல் என்பதாக ஆகும்.

ஒருவருக்கொருவர் வாழ்த்து என முஸ்லிம்கள் கூறிக் கொண்டால் அல்லாஹ்விடம் துஆ செய்கிறேன் என்ற கருத்தைக் கொண்டதாகவே இது அமையும். இந்த வார்த்தையைச் சொல்வது குற்றமாகாது.

ஆனால் இது பித்அத்தாக ஆகிவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரு செயல் எப்போது பித்அத் என்ற நிலையை அடையும் என்பதை விளங்கிக் கொண்டால் தான் இதில் நாம் கவனமாக இருக்க முடியும்.

ஒருவர் குறிப்பிட்ட நேரத்தில் இரண்டு ரக்அத் நஃபில் தொழ விரும்பினால் அவர் தொழலாம். குறிப்பிட்ட நாளில் நோன்பு நோற்க விரும்பினால் நோற்கலாம். பொதுவாக நஃபில் தொழ அனுமதி இருக்கிறது என்பதே இதற்குப் போதுமான ஆதாரமாகும்.

ஆனால் நாம் கவனமாக இல்லாவிட்டால் இது கூட பித்அத்தாக மாறிவிடும். நான் காலை எட்டு மணிக்கு நஃபில் தொழுகிறேன். அதனால் அனைவரும் எட்டு மணிக்கு நஃபில் தொழ வேண்டும் என்று ஒருவர் மற்றவருக்குக் கூறினால் – அல்லது அவர் கூறுவதை மற்றவர்கள் ஏற்றுச் செயல்படுத்தினால் – அது பித்அத் ஆகிவிடும்.

நான் முஹர்ரம் மாதம் முதல் நாள் அன்று நோன்பு நோற்பதால் அனைவரும் நோற்க வேண்டும் என்று ஒருவர் கூறினாலோ, அதை மற்றவர்கள் ஏற்றுச் செயல் படுத்தினாலலோ அதுவும் பித்அத் ஆகி விடும்.

ஒருவர் தன்னளவில் தானாக விரும்பிச் செய்ய அனுமதி கொடுத்தால் அவரோடு மட்டும் வைத்துக் கொள்ள வேண்டும். அவர் செய்வதையே அனைவரும் செய்ய வேண்டும் என்று கூறினால் அல்லாஹ்வின் தூதருடைய அதிகாரத்தைக் கையில் எடுத்தவராவார்.

ஒருவர் செய்கிறார் என்பதற்காக அதை மற்றவர்கள் ஏற்றுச் செயல்பட்டால் அல்லாஹ்வின் துதருடைய இடத்தை அந்த மனிதருக்கு அளித்து விட்டார்கள் என்பது பொருள். அனைவரும் இதைச் செய்ய வேண்டும் என்று கூறும் அதிகாரம் யாருக்கும் இல்லை.

ஒருவர் தான் விரும்பும் நாளில் நோன்பு நோற்கலாம் என்பதை ஒப்புக் கொள்ளும் நாம் மிஃராஜ், பராஅத் இரவுகளில் நோன்பு நோற்கக் கூடாது என்று கூறுகிறோம். இதற்குக் காரணம் என்ன? அல்லாஹ்வும், அவனது தூதரும் ஏற்படுத்தாமல் யாரோ ஒருவரால் ஏற்படுத்தப்பட்ட வழக்கம் அனைவரும் செய்ய வேண்டும் என்ற நிலையை அடைந்து விட்டது தான் இதை பித்அத் என்று நாம் கூறுவதற்கான காரணம்.

ஒருவர் தற்செயலாக ரஜப் 27 அன்று நோன்பு நோற்றால் அது பித்அத் ஆகாது. இது அனைவரும் நோன்பு நோற்க வேண்டிய நாள் என்ற நிலையை ஏற்படுத்தினால் அது பித்அத் ஆகிவிடும்.

அனைவரும் ஒரு காரியத்தை ஒரு குறிப்பிட்ட நாளில் செய்ய வேண்டும் என்றால் அது வஹீயின் மூலம் மட்டுமே முடிவு செய்யப்பட வேண்டும்.

ஈத் முபாரக் என்பது எப்படி உள்ளது? அது பெருநாள் அன்று சொல்ல வேண்டிய ஒரு வார்த்தை. அது மார்க்கத்தில் கடைப்பிடிக்க வேண்டிய ஒன்று என்ற நிலை ஏற்பட்டு விட்டது. ஒருவர் தானாக விரும்பி அந்த வார்த்தையின் அர்த்தத்துக்காகச் சொன்னால் அது பித்அத் ஆகாது. ஆனால் ஒவ்வொரு முஸ்லிமும் சொல்ல வேண்டியதாக அது மாறினால் அது மார்க்கத்தில் வலியுறுத்தப்பட்டது என்று ஆகிவிடும்.

ஈத் முபாரக் என்ற சொல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் உருவாக்கவில்லை. அவர்களுக்குப் பின் பல நூறு ஆண்டுகளாக வாழ்ந்த நன்மக்கள் கூட உண்டாக்கவில்லை.

எவரோ ஒருவர் உருவாக்கிய சொல் அல்லாஹ்வின் தூதர் கூறிய சொல்லுக்கு நிகரான இடத்தைப் பெற்று விடுகிறது. அல்லாஹ்வின் தூதருடைய இடத்தை மற்றவர்களுக்கு வழங்கும் இந்தப் போக்கு தான் அனைத்து பித்அத்துகளுக்கும் அடிப்படையாக உள்ளது.

குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட சொல்லை அனைவரும் சொல்ல வேண்டும் என்ற நிலை ஏற்படுவதை அனுமதிப்பது மார்க்கத்துக்கு ஆபத்தாகும்.

ஈத் முபாரக் மட்டுமின்றி ஹேப்பி ரம்ஜான், ஹேப்பி பக்ரீத், பெருநாள் வாழ்த்து, குல்ல ஆமின் அன்தும் பி கைர் என்பது போன்ற எந்தச் சொல்லுக்கும் இது தான் நிலை. ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது ஸலாம் கூறுகிறோம் என்றால் அது அனைவராலும் ஒரே மாதிரியாகச் சொல்லப்படுகிறது. அல்லாஹ்வின் தூதர் அப்படிக் கூறியதால் இது ஸுன்னத் ஆகிறது.

ஈத் முபாரக் என்று எவரோ வழக்கப்படுத்திய சொல்லை அனைவரும் குறிப்பிட்ட நாளில் சொல்ல வேண்டும் என்பது பித்அத் ஆகிவிடும். இது போன்ற விஷயங்களைப் பல வருடங்கள் நாம் சொல்லிப் பழகி விட்டதால் எப்படியாவது நியாயப்படுத்த சிலர் முயல்கின்றனர்.

பத்து வருடப் பழக்கத்தை விட மறுக்கும் இவர்கள் பல நூறு ஆண்டுப் பழக்கமான, பராஅத், மிஃராஜ், ;மீலாது உள்ளிட்ட பித்அத்களை மக்கள் விட்டு விட வேண்டும் கூறும் தகுதியை இழந்து விடுகிறார்கள்.

மிஃராஜ் அன்று நோன்பு தானே வைக்கிறோம். அது தவறா என்று அவர்கள் கேட்பது போல் இது நல்ல அர்த்தம் உடைய சொல் தானே இது தவறா என்று கேட்கின்றனர்.

என்ன செய்கிறோம் என்பதில் கவனம் செலுத்துவது அவசியம் தான். அது போல் யார் சொல்லிச் செய்கிறோம் என்பதும் முக்கியமானது.

ஈத் முபாரக் என்பது பெருநாளுக்கான வாழ்த்து முறை என்று ஆக்கியது அல்லாஹ்வின் தூதர் அல்ல. நோன்பு வைப்பது நல்லது என்றாலும் மிஃராஜ் அன்று நோன்பு வைக்கச் சொன்னது அல்லாஹ்வின் தூதர் அல்ல. வேறு யாரோ என்பதால் தான் அது பித்அத் ஆகிறது. அது போல் தான் இதையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

حدثنا يعقوب حدثنا إبراهيم بن سعد عن أبيه عن القاسم بن محمد عن عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس فيه فهو رد 2697

இம்மார்க்கத்தில் இல்லாத ஒன்றை யாரேனும் உருவாக்கினால் அது ரத்துச் செய்யப்படும் என்பது நபிமொழி-

நூல் : புகாரி 2697

குறிப்பிட்ட சொல்லை அனைவரும் சொல்ல வேண்டும் என்றில்லாமல் குறிப்பிட்ட நாளில் அதைச் சொல்லித் தான் ஆக வேண்டும் என்றில்லாமல் ஆசி வழங்கும் வகையில் இல்லாமல் மார்க்கம் அனுமதித்துள்ள வார்த்தைகளைப் பயன்படுத்தி பெருநாளிலோ மற்ற நாட்களிலோ துஆச் செய்தால் அது தவறில்லை.

பித்அத் என்பது நுணுக்கமான இன்னும் பல தன்மைகளைக் கொண்டது. நீங்கள் கேட்ட கேள்விக்கு இது போதும்.

12.12.2009. 7:41 AM

Leave a Reply

About Me

இறைவனின் திருப்பெயரால்…

  • இந்த தளத்தில் உள்ள செய்திகள் ஏகத்துவ கொள்கையை சொல்லும் பல்வேறு இணையதளத்தில் இருந்து எடுத்து தொகுக்கப்பட்டவை (ஆன்லைன்பீஜே, ஆன்லைன் டிஎன்டிஜே, etc).
  • இதில் தவறான கருத்துகள் ஏதேனும் இருப்பின் அதை Facebook page https://www.facebook.com/Thowheed.org என்ற முகவரிக்கு அனுப்பி தெரிவிக்கலாம்.
  • உங்கள் ஆக்கங்களையும்
  • Facebook page https://www.facebook.com/Thowheed.org என்ற முகவரிக்கு
  • என்ற முகவரிக்கு அனுப்பவும். ஆசிரியர் சரிபார்த்தபின் வெளியிடப்படும்.
  • இந்த தளத்திற்கும் எந்த அமைப்பிற்கும் எந்த தொடர்பும் கிடையாது.

You may want to read

Follow Us

Sign up for our Newsletter

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit