மனிதகுலத் தோற்றம் குறித்து அறிவை இழந்த பகுத்தறிவாளர்கள்!

ஆக்கம் : பீ.ஜைனுல் ஆபிதீன்

இஸ்லாத்தை விமர்சிக்கும் நோக்கில் இரண்டு நாட்களாக முகநூலில் ஒரு கேள்வி கடவுள் மறுப்பாளர்களால் எழுப்பப்பட்டு கேலியும், கிண்டலும் செய்யப்படுகிறது.

அதாவது ஆதம் என்ற ஆண், ஹவ்வா என்ற பெண் ஆகிய இருவர் மூலம் தான் மனித குலம் பெருகியதாக முஸ்லிம்கள் கூறுகிறார்கள். கிறித்தவர்களும் அவ்வாறே கூறுகிறார்கள்.

அப்படியானால் உடன் பிறந்த அண்ணன் தங்கைகள் மத்தியில் தான் உடலுறவு கொண்டு இருப்பார்கள். இவ்வளவு கேவலமாக மனிதப் பிறப்பு பற்றி பேசும் உங்கள் கடவுள் யோக்கியனா?

இதுதான் அந்த வாதத்தின் சாரம்சமாகும். பக்கம் பக்கமாக இவர்கள் எழுதியுள்ள அனைத்து வாதங்களும் இந்த ஒரு பாராவுக்குள் அடக்கமாகி விடும்.

இதில் முஸ்லிம் பெயர்களிலும் சிலர் பதிவிட்டு கிண்டல் அடிக்கும் கமாண்டுகளும் அடக்கம். ஆனால் அவர்கள் முஸ்லிம்களாக இருக்க வாய்ப்பில்லை என்று தான் நாம் கருதுகிறோம்.

அவர்கள் முஸ்லிம்களாக இருந்தாலும் இஸ்லாமிய அடிப்படையும், அறிவியல் ஞானமும் இல்லாமல் அவர்கள் வளர்க்கப்பட்டது இதற்குக் காரணமாக இருக்கலாம்.

எது எப்படி இருந்தாலும் இக்கேள்விக்கு விடையளிக்கும் கடமை நமக்கு உள்ளது.

மனித குலத்தின் தோற்றம் பற்றி உலகில் நிலவும் கருத்துக்கள் என்ன?

1 – பரிணாம வளர்ச்சி

பரிணாம வளர்ச்சி மூலம் மனிதன் உருவானான் என்ற டார்வினின் கொள்கை கூறுகிறது.

(இதற்கு நிகரான மடமை வேறு இல்லை என்பதை கீழ்க்காணும் லிங்கில் விளக்கியுள்ளோம்.

மனிதன் குரங்கிலிருந்து பிறக்கவில்லை

கடவுள் மறுப்பாளர் யாரும் இது குறித்து நம்மிடம் விவாதிக்க விரும்பினால் நாம் இன்றைய அறிவியல் கண்டுபிடிப்பின் துணை கொண்டு டார்வின் கொள்கை தவறு என்று நிரூபித்துக் காட்டுவோம்.)

டார்வின் கொள்கையை இவர்கள் ஏற்றாலும் இஸ்லாத்துக்கு எதிராக இவர்கள் எழுப்பும் அதே கேள்விக்கும், கேலிக்கும் இவர்கள் உரியவர்களாகி விடுகின்றனர்.

பரிணாமக் கொள்கைப்படி மனிதனுக்கு முந்திய நிலை குரங்கு ஆகும். குரங்குகள் அம்மாவுடனும் புணரும். சகோதரியுடனும் புணரும். இந்தக் கேடுகெட்ட இனத்தின் வழித்தோன்றல் தான் மனிதன் என்று ஆகுமே? அது பரவாயில்லையா?

குரங்குக்கு முந்திய மற்ற உயிரினங்களின் நிலையும் இதுதான். இஸ்லாத்தை எந்தக் காரணத்துக்காக இவர்கள் குறை கூறினார்களோ அதே காரணம் டார்வின் கொள்கையில் இன்னும் கேவலமாக உள்ளதே? தாய்க்கும், தாரத்துக்கும் வித்தியாசம் பார்க்காத மிருகத்தில் இருந்து மனிதன் தோன்றினான் என்பது மட்டும் இவர்களுக்கு இனிக்கிறது.

2- இந்து மதக் கொள்கை

அடுத்து மனிதன் படைக்கப்பட்டது குறித்து இந்துக்களின் நம்பிக்கை.

கடவுளின் தலையில் இருந்து படைக்கப்பட்டவன்,

தோளில் இருந்து படைக்கப்பட்டவன்,

தொடையில் இருந்து படைக்கப்பட்டவன்,

பாதத்தில் இருந்து படைக்கப்பட்டவன்

என்று நான்கு வகைகளாக மனிதனைப் பிரிக்கிறார்கள்.

இந்த நம்பிக்கையை கடவுள் மறுப்பாளர்கள் ஏற்க மாட்டார்கள். அவர்கள் ஏற்றாலும் இதே கேள்வி இருக்கவே செய்யும்.

மேற்கண்ட நான்கு நிலைகளில் படைக்கப்பட்ட ஒவ்வொரு பிரிவினரும் ஒருதாய் ஒரு தந்தையிலிருந்து பிறந்தவர்கள் தான்;

அனைவரும் கடவுளிடமிருந்து நேரடியாகப் படைக்கப்பட்டவர்கள் அல்லர். கடவுள் நான்கு ஜோடிகளைப் படைத்தார். அந்த ஜோடிகளில் இருந்து அந்தப் பிரிவு பல்கிப் பெருகியது என்பதுதான் இதன் கருத்தாகும். இந்த நம்பிக்கைப்படியும் உடன் பிறப்புக்கள் மத்தியில் தான் துவக்கத்தில் இணைதல் ஏற்பட்டு இருக்கும்.

எனவே இந்த நம்பிக்கை உள்ளவர்களும் இக்கேள்வியைக் கேட்க முடியாது.

3 – ஜீனோம் மரபணு ஆய்வு

அடுத்ததாக இன்றைய ஜீனோம் என்ற மரபணு ஆய்வு மூலம் கண்டுபிடிக்கப்பட்ட தத்துவம். ஜீனோம் எனும் மரபணு ஆய்வு குறித்து சில ஆண்டுகளுக்கு முன்னால் செய்யப்பட்ட நவீன ஆய்வு குறித்து இந்தியா டுடேயில் ஜீனோம் ரகசியம் என்று சிறப்பிதழ் போடப்பட்டது.

அந்த ஆய்வு கூறுவதுதான் மனித குல உற்பத்தி குறித்து செய்யப்பட்ட இறுதியான ஆய்வு.

இந்த ஆய்வு என்ன கூறுகிறது?

உலக மக்கள் அனைவரும் ஒரு ஆப்ரிக்கத் தாய்க்கும், ஒரு ஆப்ரிக்கத் தந்தைக்கும் பிறந்தவர்கள் தான்; அந்த ஒரு ஜோடியில் இருந்துதான் மனித குலம் பல்கிப் பெருகியது என்பது தான் அந்த ஆய்வு.

இப்போது முகனூல் போராளிகள், பகுத்தறிவாளர்கள் என்றால் நவீன மரபணு ஆய்வு மூலம் நிரூபிக்கப்பட்ட இந்த முடிவை ஏற்க வேண்டும்.

இஸ்லாத்தை மறுப்பது போல் இதை அவர்கள் மறுக்க முடியாது.

இன்று மரபணு ரகசியம் கண்டுபிடிக்கப்பட்டு அந்த ஆய்வின் முடிவு சொல்வது என்ன? இஸ்லாம் சொன்னதைத் தான் மரபணு ஆய்வும் அப்படியே சொல்கிறது. அதாவது அண்ணன், தங்கைகள் வழியாகத் தான் மனித குலம் முதலில் பல்கிப் பெருகியது என்பது தான் அந்த உண்மை.

இக்கேள்வி கேட்போர் பகுத்தறிவாளர்கள் என்றால்

மனித இனம் ஆப்ரிக்காவிலிருந்து பரவி உலகெங்கும் நிறைந்திருக்கிறது என்பதே உண்மை (_தகவல்: 28.7.2007 விடுதலை நாளிதழ்.)

என்ற கட்டுரையைப் பார்க்கட்டும்.

மனித இனத்தின் மூல இடமே ஆப்ரிக்காதான்; மண்டை ஓடுகளை ஆய்வு செய்து பெற்ற உண்மை. (_ தலைப்பு, மற்றும், உலக மனிதரின் தாய் ஓர் ஆப்ரிக்கப் பெண் _தினமணி -_ அக்டோபர் 22, 1988.)

இந்தக் கட்டுரையையும் வாசிக்கட்டும்.

பகுத்தறிவாளர்கள் ஏற்கும் திராவிடர் கழகத்தின் உண்மை இணைய தளத்திலும் இந்தக் கண்டுபிடிப்பைக் குறித்த விபரத்தைக் காணலாம்.

http://www.unmaionline.com/new/1420-where-has-developed-the-world-s-first-man.html

ஆக

இஸ்லாம்

கிறித்தவம்

டார்வினிசம்

இந்துமதம்

நவீன கண்டுபிடிப்பான ஜீனோம் மரபணு

ஆகிய எந்தக் கோட்பாட்டை ஏற்றாலும் அண்ணன் தங்கைகள் மத்தியில் தான் துவக்கத்தில் உடலுறவு நிகழ்ந்துள்ளது என்பது உறுதியாகிறது.

இஸ்லாத்துக்கு எதிராக இவர்கள் எந்தக் கேள்வியக் கேட்டார்களோ அந்தக் கேள்வி எழமுடியாத வேறு கோட்பாட்டை இவர்கள் ஆதாரத்துடன் நிறுவிக்காட்டட்டும்.

அல்லது வாய் மூடி மவுனம் காக்கட்டும்.

இது குறித்து திருக்குர்ஆன் தமிழாக்கத்தில் நாம் அளித்த விளக்கத்தை இங்கே கூடுதல் தகவலாகப் பதிவு செய்கிறோம்.

504. ஆதமின் பிள்ளைகள் உடன்பிறப்புகளைத் திருமணம் செய்தார்களா?

இவ்வசனங்களில் (4:1, 7:26, 7:27, 7:31, 78:35, 7:172, 7:189, 17:70, 36:60, 39:6) இறைவன் ஒரு ஜோடி மனிதரை மட்டுமே நேரடியாகப் படைத்தான் என்றும், மனித குலம் முழுவதும் அவ்விருவரின் வழித்தோன்றல்களே என்றும் கூறப்படுகிறது.

ஆதம், ஹவ்வா ஆகிய இருவர் வழியாகவே மனித குலம் தோன்றியது என்பது தான் இஸ்லாத்தின் கோட்பாடு. இந்த இருவரைத் தவிர வேறு ஜோடிகள் ஏதும் இறைவனால் நேரடியாகப் படைக்கப்படவில்லை என்பதால் அண்ணன் தங்கைகளுக்கிடையே தான் திருமண உறவு நடந்திருக்க முடியும்.

அண்ணன், தங்கைகளுக்கிடையே திருமணம் செய்யலாமா என்று இப்போது கேட்டால் கூடாது என்று தான் விடை கூறுவோம்.

ஒரே ஒரு ஜோடி மட்டுமே உலகில் படைக்கப்பட்டிருந்த நிலையில் அண்ணன் தங்கைகளுக்கிடையே திருமணம் செய்து கொள்ள அல்லாஹ் அனுமதித்தான். மனிதகுலம் பல்கிப்பெருகிட இது தேவையாக இருந்தது. அவன் அனுமதித்தபோது அவ்வாறு திருமணம் செய்தவர்கள் குற்றவாளிகளாக மாட்டார்கள்.

அப்படியானால் ஒரு ஜோடியை மட்டும் படைக்காமல் இரண்டு ஜோடி மனிதர்களைப் படைத்து இதைத் தவிர்க்க இயலுமே என்று சந்தேகம் எழலாம்.

இறைவன் ஒரு ஜோடி மூலம் மனித குலத்தைப் பரவச் செய்ததற்கு முக்கியமான காரணம் உள்ளது.

ஒட்டுமொத்த மனித வர்க்கமும் ஒரே தாய் தந்தையிலிருந்து உருவானால் தான் பிறப்பின் அடிப்படையில் ஏற்றத் தாழ்வு கற்பிக்கும் வாசல் முற்றாக அடைக்கப்படும். சகோதரத்துவ உணர்வையும், உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற பாகுபாடின்றி மனிதர்கள் அனைவரும் பிறப்பால் சமமானவர்கள் என்ற சமத்துவத்தையும் இது ஏற்படுத்துகின்றது.

இவ்வாறு திருக்குர்ஆன் தமிழாக்கத்தில் நாம் தெளிவுபடுத்தியுள்ளோம்.

30.12.2016. 12:53 PM

Leave a Reply

About Me

இறைவனின் திருப்பெயரால்…

  • இந்த தளத்தில் உள்ள செய்திகள் ஏகத்துவ கொள்கையை சொல்லும் பல்வேறு இணையதளத்தில் இருந்து எடுத்து தொகுக்கப்பட்டவை (ஆன்லைன்பீஜே, ஆன்லைன் டிஎன்டிஜே, etc).
  • இதில் தவறான கருத்துகள் ஏதேனும் இருப்பின் அதை Facebook page https://www.facebook.com/Thowheed.org என்ற முகவரிக்கு அனுப்பி தெரிவிக்கலாம்.
  • உங்கள் ஆக்கங்களையும்
  • Facebook page https://www.facebook.com/Thowheed.org என்ற முகவரிக்கு
  • என்ற முகவரிக்கு அனுப்பவும். ஆசிரியர் சரிபார்த்தபின் வெளியிடப்படும்.
  • இந்த தளத்திற்கும் எந்த அமைப்பிற்கும் எந்த தொடர்பும் கிடையாது.

You may want to read

Follow Us

Sign up for our Newsletter

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit