மாமனிதர் நபிகள் நாயகம்

மாமனிதர் நபிகள் நாயகம்

நூலின் பெயர் : மாமனிதர் நபிகள் நாயகம்

ஆசிரியர் : பீ.ஜைனுல் ஆபிதீன்

பக்கங்கள் : 216 விலை : 33.00

மார்க்கத்தின் எச்சரிக்கை!

அன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும். இந்த இணையதளத்தில் உள்ளவைகளைப் பிரச்சாரம் செய்வதற்காக யாரும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் சில சகோதரர்கள் நமது ஆக்கங்களை அப்படியே பயன்படுத்தி தமது ஆக்கம் போல் காட்டுகின்றனர். இன்னாருடைய கட்டுரையில் இருந்து, அல்லது புத்தகத்தில் இருந்து இது எடுக்கப்பட்டது என்று குறிப்பிடாமல் புகழடைவதற்காக இவ்வாறு செய்கின்றனர்.

சில இணைய தளங்களும் என்னுடைய ஆக்கங்களை அப்படியே வெளியிட்டு தம்முடைய ஆக்கம் போல் காட்டுகின்றன. மேலும் சில புத்தக வியாபாரிகளும் எனது நூல் உட்பட மற்றவர்களின் நூல்களைச் சிறிது மாற்றியமைத்து அனாமதேயங்களின் பெயர்களில் வெளியிட்டுச் சம்பாதிக்கின்றனர்.

உலகைப் பற்றியும் இவர்களுக்கு வெட்கம் இல்லை. மறுமையைப் பற்றியும் பயம் இல்லை. இஸ்லாத்தில் இவ்வாறு செய்ய அனுமதி இல்லை. இவர்கள் நல்லது செய்யப் போய் மறுமையின் தண்டனைக்கு தம்மைத் தாமே உட்படுத்திக் கொள்கின்றனர். பிறரது ஆக்கங்களைப் பயன்படுத்துவோர் இது இன்னாருடைய ஆக்கம் என்று குறிப்பிடாமல் தன்னுடைய ஆக்கம் போல் காட்டுவது மார்க்க அடிப்படையில் குற்றமாகும். இவர்களுக்கு அல்லாஹ் விடுக்கும் எச்சரிக்கையை இங்கே சுட்டிக் காட்டுகிறோம்.

தாங்கள் செய்தவற்றுக்காக மகிழ்ச்சியடைந்து, தாம் செய்யாதவற்றுக்காகப் புகழப்பட வேண்டுமென விரும்புவோர் வேதனையிலிருந்து தப்பித்து விட்டார்கள் என்று நீர் நினைக்காதீர்! அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உள்ளது.

திருக்குர்ஆன் 3:188

மாமனிதர் நபிகள் நாயகம்

பதிப்புரை

நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் வாழ்ந்த நாகரீகமில்லாத சமுதாயத்தினர் இஸ்லாத்தைத் தங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டனர்.

உலகில் உள்ள எல்லா மதங்களையும் ஆராய்ச்சி செய்து இது தான் சரியான மார்க்கம் என்று முடிவு செய்து அவர்களில் யாரும் இஸ்லாத்தை ஏற்கவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இறைவன் தூதராக நியமித்ததைக் கண்ணால் கண்டு விட்டு அவர்களை இறைத் தூதர் என்று நம்பினார்களா? என்றால் அதுவும் இல்லை.

திருக்குர்ஆனை அலசி ஆராய்ந்து பார்த்து விட்டு இது இறைவனின் வேதமாகத் தான் இருக்க முடியும் என்று முடிவு செய்து இஸ்லாத்தை ஏற்றார்களா? என்றால் அப்படியும் இல்லை. திருக்குர்ஆன் வசனங்களில் நூறில் ஒரு பகுதி அருளப்படுவதற்கு முன்பே பலர் இஸ்லாத்தை ஏற்று விட்டனர்.

மாறாக அவர்கள் முஹம்மது நபியைத் தான் கண்டார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது நாற்பது வருட வாழ்க்கையில் ஒரே ஒரு பொய் கூட சொல்லி அவர்கள் கண்டதில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் யாரையும் ஏமாற்றியதாகவோ, யாருக்கும் அநீதி இழைத்ததாகவோ அவர்கள் அறிந்ததில்லை.

ஊரில் மிகப் பெரும் செல்வந்தராக இருந்தும் அதனால் ஏற்படும் செருக்கு எதனையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் அம்மக்கள் கண்டதில்லை. மாறாக தமது செல்வத்தைப் பிறருக்கு வாரி வழங்குவதில் இன்பம் காண்பவராகவே அவர்களைக் கண்டார்கள்.

சுயநலனில்லாத அவர்களின் பரிசுத்த வாழ்க்கையைத் தான் அம்மக்கள் கண்டார்கள்.

 நூறு சதவிகிதம் இவரை நம்பலாம்  என்று நபிகள் நாயகத்தின் மீது அவர்களுக்கு ஏற்பட்ட நம்பிக்கை தான் இஸ்லாத்தை அவர்கள் ஏற்பதற்கு முதல் காரணமாக இருந்தது.

எந்த ஒரு மனிதனும் தனது கடந்த கால வாழ்க்கையை மக்களுக்கு நினைவூட்டி என்னை நம்புங்கள் எனக் கூற முடியாது. ஏனெனில் எவரது கடந்த கால வாழ்க்கையும் முழு அளவுக்குத் தூய்மையாக இருக்க முடியாது.

மகான்களேயானாலும் அவர்களின் இப்போதைய நிலையைத் தான் பார்க்க வேண்டுமே தவிர கடந்த காலத்தைப் பார்க்கக் கூடாது என்பதை வலியுறுத்தும் வகையில்  நதி மூலமும் ரிஷி மூலமும் பார்க்கக் கூடாது  என்ற சொல் வழக்கு இங்கு உள்ளது.

தாம் இறைத்தூதர் என்பதற்கு தமது கடந்த கால வாழ்க்கையையே சான்றாகக் காட்டும் தைரியம் நபிகள் நாயகம் அவர்களுக்கு மட்டுமே இருந்தது.

இதை முன் வைத்தே இறைத்தூதர் என்பதை நிலைநாட்டுமாறு திருக்குர்ஆனும் அவர்களுக்குக் கட்டளையிட்டது.

அல்லாஹ் நாடியிருந்தால் இதை உங்களுக்குக் கூறியிருக்க மாட்டேன். அவனும் இதை உங்களுக்கு அறிவித்திருக்க மாட்டான். உங்களிடம் இதற்கு முன் பல வருடங்கள் வாழ்ந்துள்ளேன். விளங்க மாட்டீர்களா?  என்று (முஹம்மதே!) கூறுவீராக!

திருக்குர்ஆன் 10:16

எனவே இஸ்லாத்தை அறிந்து கொள்வதற்கு முன் நபிகள் நாயகத்தைத் தான் முதலில் அறிய வேண்டும்.

நபிகள் நாயகத்தை அறிந்து கொள்ள பல வரலாற்று நூல்கள் வெளிவந்துள்ளன. ஆனால் அவை நபிகள் நாயகத்தின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான நிகழ்ச்சிகளின் தொகுப்பாக உயிரோட்டமில்லாத நடையில் உள்ளன. நபிகள் நாயகத்தின் குணநலன்களை அப்படியே கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தும் வகையில் அவை அமையவில்லை.

நபிகள் நாயகம் அவர்களின் குண நலன்களைப் பற்றி எழுதப்பட்ட சில நூல்களில் பெரும்பாலும் கட்டுக் கதைகள் தான் உள்ளன. ஆதாரப்பூர்வமான நிகழ்ச்சிகளின் தொகுப்பாக அவை அமையவில்லை.

இந்தக் குறையை நிறைவு செய்யும் வகையில் தான் மாமனிதர் நபிகள் நாயகம் என்ற நூலை வெளியிடுகின்றோம்.

நபிகள் நாயகத்தின் ஆளுமையை அறிந்து கொள்ள விரும்பும் ஒவ்வொருவருக்கும் இந்நூல் உதவும் என்று பெரிதும் நம்புகிறோம்.

நபீலா பதிப்பகம்.

உள்ளடக்கம்

முன்னுரை

வரலாற்றுச் சுருக்கம்

மக்கா வாழ்க்கை

மதீனா வாழ்க்கை

சக்தி வாய்ந்த இரண்டு தலைமை

சொத்தும் சேர்க்கவில்லை! சொகுசாகவும் வாழவில்லை!

உண்டு சுகிக்கவில்லை!

உடுத்தி மகிழவில்லை!

சுகபோகங்களில் திளைக்கவில்லை!

நபிகள் நாயகத்தின் அரண்மனை

வாரிசுகளுக்கு விட்டுச் சென்றது என்ன?

செழிப்பான நிலையிலும் தேர்ந்தெடுத்துக் கொண்ட வறுமை

ஏன் இந்த எளிய வாழ்க்கை?

வாழ்க்கைச் செலவுக்கு என்ன செய்தார்கள்?

புகழுக்காக ஆசைப்பட்டார்களா?

ஆன்மீகத் தலைமையாலும் பலனடையவில்லை

முரண்பாடின்மை

அனைவருக்கும் சம நீதி

குடும்பத்தினருக்குச் சலுகை காட்டவில்லை!

பிறர் நலம் பேணல்

துணிவும் வீரமும்

பிற மதத்தவர்களிடம் அன்பு

ஆண்களுக்குப் பெண்கள் அடிமைகளல்லர்

மாமனிதர் நபிகள் நாயகம்

சிந்தனையாளர்கள், சீர்திருத்தவாதிகள், ஆட்சித் தலைவர்கள், பயனுள்ள பல கண்டுபிடிப்புகளை உலகுக்கு வழங்கியவர்கள், மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியவர்கள், மாவீரர்கள், வாரி வழங்கிய வள்ளல்கள், பண்டிதர்கள் மற்றும் மதங்களைத் தோற்றுவித்தோர் என பல்லாயிரக்கணக்கான சாதனையாளர்கள் உலகில் தோன்றி மறைந்துள்ளனர்.

இத்தகைய சாதனையாளர்களிலிருந்து முக்கியமான இடத்தைப் பிடித்த நூறு சாதனையாளர்களைத் தேர்வு செய்து  த ஹன்ட்ரட்  (the hundred) என்ற நூலை மைக்கேல் ஹார்ட் (micheal harte) எனும் வரலாற்று ஆய்வாளர் எழுதினார். இது  நூறு பேர்  என்ற பெயரில் தமிழிலும் மொழி பெயர்த்து வெளியிடப்பட்டது.

மனித குலத்தில் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர்களை அவர் வரிசைப்படுத்தும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முதல் இடத்தை அளித்தார். முதல் சாதனையாளராக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அந்த நூலில் அவர் குறிப்பிடுகிறார்.

மைக்கேல் ஹார்ட் கிறித்தவ மதத்தில் ஆழ்ந்த நம்பிக்கையுள்ளவராக இருந்தும் கூட  மக்களிடம் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவர் என்றால் முதலிடம் நபிகள் நாயகத்துக்குத் தான்  என்று குறிப்பிடுகிறார்.

வரலாற்று நாயகர்கள் குறித்து நடுநிலையோடும், காய்தல் உவத்தலின்றியும் யார் ஆய்வு செய்தாலும், எந்தக் கோணத்தில் ஆய்வு செய்தாலும் அவரால் நபிகள் நாயகத்துக்குத் தான் முதலிடத்தைத் தர முடியும்.

பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்து மறைந்த ஒரு மனிதர் அன்று கூறிய, நடைமுறைப்படுத்திக் காட்டிய அனைத்தையும் அப்படியே பின்பற்றும் ஒரு சமுதாயம் உலகில் இருக்கிறது என்றால் அது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சமுதாயம் மட்டும் தான்.

வணக்க வழிபாடுகள் மட்டுமின்றி கொடுக்கல் வாங்கல், குடும்ப வாழ்க்கை, தனிப்பட்ட வாழ்க்கை என எந்தப் பிரச்சினையானாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டவாறு நடக்கக் கூடிய சமுதாயம் பதினான்கு நூற்றாண்டுகளாக உலகில் இருந்து வருகிறது.

அனைத்துப் பிரச்சினைகளுக்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாம் வழிகாட்டி  என்று உலகில் கால் பகுதிக்கும் அதிகமான மக்கள் நம்புகின்றார்கள். இத்தகையோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்லும் காட்சியையும் உலகம் காண்கிறது.

உலகில் எந்தத் தலைவருக்கும் இந்தச் சிறப்புத் தகுதி கிடைத்ததில்லை என்பதை யாராக இருந்தாலும் ஒப்புக் கொள்ளத் தான் வேண்டும்.

மனைவி, மக்கள், பெற்றோர், உற்றார் மற்றும் அனைவரையும் விட, ஏன் தம் உயிரையும் விட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அதிகம் நேசிக்கக் கூடிய பல கோடிப் பேர் இன்றும் வாழ்கிறார்கள்.

உலக மக்களால் காட்டுமிராண்டிகள் வாழும் பூமியாக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த பாலைவனத்தில் பிறந்த ஒருவரால் இவ்வளவு உயர்ந்த நிலையை அடைய முடிந்தது எப்படி?

இக்கேள்விக்கான விடை தான் இந்நூல்..

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிறப்பு முதல் இறப்பு வரையிலான வாழ்க்கை வரலாற்று நூலாக இது இருக்குமோ என்று யாரும் கருதிவிட வேண்டாம்.

இது வரலாற்று நூல் அல்ல.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டிய ஆன்மீகப் பாதையை விளக்கும் நூலும் அல்ல.

இஸ்லாம் மார்க்கத்தின் கொள்கை கோட்பாடுகளையோ, அதன் சட்டதிட்டங்களையோ விளக்குவதற்காகவும் இந்நூல் எழுதப்படவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிகழ்த்திக் காட்டிய அற்புதங்களைப் பட்டியலிட்டு பிரமிப்பை ஏற்படுத்துவதும் இதன் நோக்கமன்று.

மாறாக 1400 ஆண்டுகளுக்கு முன் உலகில் பிறந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏனைய தலைவர்களிடமிருந்து எப்படி தனித்து விளங்கினார்கள்?

நபிகள் நாயகம் (ஸல்) போன்ற ஒரு மனிதரை உலகம் கண்டதில்லை  என்று எண்ணற்ற முஸ்லிம் அல்லாத தலைவர்களும், சிந்தனையாளர்களும், வரலாற்றாசிரியர்களும் ஏற்றிப் போற்றுவது ஏன்?

நூற்றி ஐம்பது கோடிக்கும் அதிகமான மக்கள் அவர்களை இன்றளவும் அப்படியே பின்பற்றுவது ஏன்? என்பன போன்ற கேள்விகளுக்கான விடையே இந்நூல்.

முஸ்லிமல்லாத நண்பர்கள் நபிகள் நாயகத்தைப் பற்றி அறிந்து கொள்ள விரும்பினால் அவர்களது சிறப்பையும், தகுதிகளையும் நிச்சயம் அறிந்து கொள்ள இந்நூல் உதவும்.

முஸ்லிம்களுக்குக் கூட நபிகள் நாயகம் (ஸல்) குறித்து அறிந்து கொள்ள வேண்டிய செய்திகள் இதில் உள்ளன.

வரலாற்றுச் சுருக்கம்

இன்றைய சவூதி அரேபியாவில் உள்ள மக்கா என்னும் நகரத்தில் கி.பி. 571 ஆம் ஆண்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்தார்கள்.

குலப் பெருமையையும், சாதி வேற்றுமையையும் வேரோடு பிடுங்கி எறிந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அன்று அரபு மண்ணில் உயர்ந்த குலமாகக் கருதப்பட்ட குரைஷ்  என்னும் குலத்தில் பிறந்தார்கள்.

தாயின் வயிற்றிலிருக்கும் போதே தந்தை அப்துல்லாஹ்வையும், தமது ஆறாம் வயதில் தாயார் ஆமினாவையும் இழந்து அனாதையாக நின்றார்கள்.

பின்னர் பாட்டனார் அப்துல் முத்தலிபின் அரவணைப்பிலும், அவர் மரணித்த பின் பெரிய தந்தை அபூதாலிபின் பராமரிப்பிலும் வளர்ந்தார்கள்.

சிறு வயதில் யாருக்கும் பாரமாக இருக்கக் கூடாது என்பதால் அற்பமான காசுக்காக ஆடு மேய்த்தார்கள். ஓரளவு விபரம் தெரிந்தவுடன் தமது பெரிய தந்தையுடன் சேர்ந்து சிரியா நாட்டுக்குச் சென்று வியாபாரம் செய்தார்கள். இதனால் இளமையில் கல்வி கற்பதற்கான வாய்ப்பு அவர்களுக்குக் கிடைக்கவில்லை. இதனால் எழுதவோ, படிக்கவோ அவர்களுக்குத் தெரியாது.

தமது 25 வது வயதில் வியாபாரத்தைக் கற்றுத் தேர்ந்தார்கள். மக்காவில் மிகப் பெரிய செல்வச் சீமாட்டியாகவும், பெரும் வணிகராகவும் திகழ்ந்த கதீஜா அம்மையார் நபிகள் நாயகத்தின் ஒழுக்கம், பண்பாடு, நேர்மை மற்றும் வியாபாரத் திறமை ஆகியவற்றைக் கேள்விப்பட்டு நபிகள் நாயகத்தை மணந்து கொள்ள விரும்பினார். நபிகள் நாயகத்தை விட அதிக வயதுடையவராகவும், விதவையாகவும் இருந்த கதீஜா அம்மையாரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மணந்து கொண்டார்கள்.

இதன் மூலம் மக்காவில் மிகப் பெரிய செல்வந்தர் என்ற நிலைக்கு உயர்ந்தார்கள்.

தமது நாற்பது வயது வரை அவர்கள் சாதாரண மனிதராகவும், ஒரு வியாபாரியாகவும் தான் இருந்தார்கள். நாற்பது வயது வரை எந்த ஒரு இயக்கத்தையும் அவர்கள் தோற்றுவிக்கவில்லை. எந்த ஒரு கொள்கைப் பிரச்சாரமும் செய்ததில்லை.

நாற்பது வயது வரையிலான நபிகள் நாயகத்தின் வரலாற்றுச் சுருக்கம் இது தான்.

நாற்பது வயதுக்குப் பின்னுள்ள நபிகள் நாயகத்தின் வாழ்க்கை இரு பெரும் அத்தியாயங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

ஒன்று மக்கா வாழ்க்கை.

மற்றொன்று மதீனா வாழ்க்கை.

இது குறித்தும் ஓரளவு அறிந்து கொள்வோம். நாற்பது வயது வரை சராசரி மனிதர்களில் ஒருவராக இருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது நாற்பதாம் வயதில் தம்மைக் கடவுளின் தூதர் என்று பிரகடனம் செய்தார்கள்.

அகில உலகையும் படைத்தவன் ஒரே கடவுள் தான்; அந்த ஒரு கடவுளைத் தவிர யாரையும், எதனையும் வணங்கக் கூடாது என்பது தான் கடவுளிடமிருந்து தமக்கு வருகின்ற முக்கியமான செய்தி  என்றார்கள்.

கொலை, கொள்ளை, வட்டி, சூதாட்டம், விபச்சாரம், போதைப் பொருட்கள், பொய், பித்தலாட்டம், மோசடி, ஏமாற்றுதல், போன்ற எல்லாத் தீமைகளிலிருந்தும் மனிதர்கள் விலகி இருக்க வேண்டும்  என்ற செய்தியும் கடவுளிடமிருந்து தமக்கு வருவதாகக் கூறினார்கள்.

கஅபா என்னும் ஆலயத்திலும், அதைச் சுற்றிலும் 360 சிலைகளை நிறுவி தினம் ஒரு சிலைக்கு வழிபாடு நடத்திய சமுதாயத்தில்  ஒரே ஒரு கடவுளை மட்டும் தான் வணங்க வேண்டும்; மற்றவை கடவுள்கள் அல்ல  என்று கூறினால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை வரலாற்றைப் படிக்காதவர்களும் அனுமானிக்க முடியும்.

உண்மையாளர், நம்பிக்கைக்கு உரியவர் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பாராட்டிய மக்கள் இந்தக் கொள்கை முழக்கத்துக்குப் பின் கடும் பகைவர்களாகி விட்டனர். பைத்தியம் என்று பட்டம் சூட்டினார்கள். அவர்களையும், அவர்களது கொள்கையை ஏற்றுக் கொண்ட விரல் விட்டு எண்ணக்கூடிய சிலரையும் சொல்லொணாத துன்பத்துக்கு ஆளாக்கினார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை முதலில் எதிர்த்தவர்களும், கடுமையாக எதிர்த்தவர்களும் அவர்களது குடும்பத்தினர் தாம் என்பது குறிப்பிடத்தக்கது.  உயர் குல்மாகிய தமது குலத்தைச் சேர்ந்த ஒருவரே எல்லோரும் சமம்  என்று பிரச்சாரம் செய்கிறாரே! தாழ்த்தப்பட்டவர்களையும், இழிகுலத்தோரையும், கறுப்பர்களையும், அடிமைகளையும் உயர் குலத்துக்குச் சமம் என்கிறாரே! தம்மோடு சரிக்குச் சரியாக அவர்களையும் மதித்து குலப்பெருமையைக் கெடுக்கிறாரே  என்ற ஆத்திரத்தில் தம்மை மிகவும் உயர் குலம் என்று நம்பிய நபிகள் நாயகத்தின் குலத்தினர் கடுமையாக நபிகள் நாயகத்தை எதிர்த்தார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது பிரச்சாரத்தை இரகசியமாக நடத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கொள்கையின் பால் ஈர்க்கப்பட்ட அப்பாவிகளையும்,  நாதியற்றவர்களையும் கொன்று குவித்தார்கள். சிறுவர்களை ஏவி விட்டு கல்லால் அடிக்கச் செய்தார்கள்.

ஒரு கட்டத்தில் ஊருக்கு ஒதுக்குப் புறமாக உள்ள கணவாய்க்கு நபிகள் நாயகத்தையும், அவர்களது சகாக்களையும் விரட்டியடித்து சமூகப் புறக்கணிப்பும் செய்தனர். பல நாட்கள் இலைகளையும், காய்ந்த சருகுகளையும் மட்டுமே உணவாகக் கொள்ள வேண்டிய நிலைக்கு அவர்கள் தள்ளப்பட்டார்கள்.

நபிகள் நாயகத்துடன் யாரும் பேசக் கூடாது; அவருடன் யாரும் எந்த உறவும் வைத்துக் கொள்ளக் கூடாது  என்றெல்லாம் ஊர்க் கட்டுப்பாடு போட்டார்கள்.

நபிகள் நாயகத்தின் தோழர்கள் ஒரு கட்டத்தில் ஊரை விட்டே ஓட்டம் பிடிக்கும் நிலைக்கு ஆளானார்கள். நபிகள் நாயகத்தின் அனுமதியோடு சிலர் அபீசீனியாவுக்கும், வேறு சிலர் மதீனா எனும் நகருக்கும் குடி பெயர்ந்தார்கள்.

இத்தனை அடக்குமுறைகளையும் மீறி நபிகள் நாயகத்தின் கொள்கை வளர்ந்து கொண்டு தான் இருந்தது.

முடிவில்  இவரை உயிரோடு விட்டு வைத்தால் ஊரையே கெடுத்து விடுவார்; எனவே கொலை செய்து விடுவோம்  என்று திட்டம் வகுத்தார்கள்.

இச்செய்தியை அறிந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது சொத்து, சுகம், வீடுவாசல் அனைத்தையும் அப்படியே போட்டு விட்டு எளிதாக எடுத்துச் செல்ல இயன்ற தங்க நாணயங்களை மட்டும் எடுத்துக் கொண்டு தம் தோழர் அபூபக்ருடன் மதீனா என்னும் நகர் நோக்கி தியாகப் பயணம் மேற்கொண்டார்கள்.

நாற்பதாம் வயதில் ஆரம்பித்த மக்கா வாழ்க்கை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் 53 ஆம் வயது வரை நீடித்தது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில் இருந்த போது அவர்களது கொள்கைப் பிரச்சாரம் பற்றிக் கேள்விப்பட்டு மதீனாவிலிருந்து சிலர் வந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை ஏற்கனவே சந்தித்திருந்தனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய கொள்கை விளக்கத்தையும் ஏற்றிருந்தனர்.

மக்காவில் வசிக்க முடியாத நிலை ஏற்பட்டால் நீங்கள் எந்தத் தயக்கமும் இன்றி மதீனா வரலாம்; எங்கள் உயிரைக் கொடுத்தேனும் உங்களைக் காப்போம்  என்று அவர்கள் உறுதிமொழியும் கொடுத்திருந்தனர். அவர்கள் மதீனா சென்று நபிகள் நாயகம் (ஸல்) போதனை செய்த ஒரு கடவுள் கொள்கையைப் பிரச்சாரம் செய்து ஓரளவு மக்களையும் அவர்கள் வென்றெடுத்திருந்தனர்.

இதன் காரணமாகத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனா நகருக்குப் புறப்பட்டார்கள்.

அவர்கள் எதிர்பார்த்தது போல அவ்வூரில் மகத்தான வரவேற்பு அவர்களுக்குக் காத்திருந்தது. அவ்வூர் மக்கள் நபிகள் நாயகம் (ஸல்) பிரச்சாரம் செய்த கொள்கையையும் ஏற்றார்கள். நபிகள் நாயகத்தைத் தங்களின் தலைவராகவும் ஏற்றுக் கொண்டார்கள்.

மதீனா நகரின் மக்கள் மட்டுமின்றி அதைச் சுற்றியுள்ள மக்களும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டு கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தில் நுழைந்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) தமது 63 ஆம் வயதில் மதீனாவில் மரணிக்கும் போது இன்றைய இந்தியாவை விட அதிக நிலப்பரப்பைத் தமது ஆளுகையின் கீழ் கொண்டு வந்திருந்தார்கள்.

இந்தியா போன்ற பெரும் நிலப்பரப்பை ஒரு நாடாக ஆக்குவதற்கு எண்ணூறு ஆண்டு கால முஸ்லிம்களின் ஆட்சியும், இருநூறு ஆண்டு கால வெள்ளையர்களின் ஆட்சியும் ஆக ஆயிரம் ஆண்டுகள் தேவைப்பட்டன.

ஆயிரம் ஆண்டுகளில் உருவாக்கப்பட வேண்டிய ஒரு அகண்ட ராஜ்ஜியத்தைப் பத்தே ஆண்டுகளில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உருவாக்கினார்கள். அதுவும் அடக்குமுறையினால் இல்லாமல் தமது கொள்கைப் பிரச்சாரத்தின் மூலம் மக்களை வென்றெடுத்து இந்த ராஜ்ஜியத்தை உருவாக்கினார்கள். இத்தகைய சாம்ராஜ்ஜியம் நபிகள் நாயகத்துக்கு முன்போ, பின்போ உலகில் எங்குமே ஏற்பட்டதில்லை எனலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த காலகட்டத்தில் இத்தாலியும், பாரசீகமும் உலகில் மிகவும் வலிமை மிக்க நாடுகளாக இருந்தன. உலகின் மிகப் பெரிய வல்லரசுகளாக இவ்விரு நாடுகளும் இருந்தன. ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பத்தே ஆண்டுகளில் தமது ராஜ்ஜியத்தை உலகின் ஒரே வல்லரசாக உயர்த்தினார்கள்.

அன்றைக்கு உலகில் மிகவும் வலிமை மிக்க இராணுவ பலம் கொண்டதாகவும், கூலிக்காக பணி செய்யாத வீரர்களைக் கொண்டதாகவும் நபிகள் நாயகத்தின் இராணுவம் மட்டுமே இருந்தது. அது போல் கேள்வி கேட்பாரில்லாத வகையில் அதிக அதிகாரம் பெற்ற தலைவராகவும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இருந்தார்கள்.

சக்தி வாய்ந்த இரண்டு தலைமை

ஆட்சித் தலைமை மட்டுமின்றி மற்றொரு தலைமையும் அவர்களுக்கு இருந்தது. அவர்கள் அறிமுகப்படுத்திய இஸ்லாம் என்னும் ஆன்மீகப் பாதைக்கும் அவர்களே தலைவராக இருந்தார்கள். ஒரு வகையில் பார்த்தால் இது ஆட்சித் தலைமையை விட வலிமையானது என்று கூறலாம்.

ஆட்சித் தலைமைக்குக் கட்டுப்படும் போது பயத்தின் காரணமாகவே மக்கள் கட்டுப்படுவார்கள். முழு ஈடுபாட்டுடன் கட்டுப்பட மாட்டார்கள். மதத் தலைமைக்கு பக்தியுடன் கட்டுப்படுவார்கள். ஆன்மீகத் தலைவருக்கு முன்னால் ஆட்சித் தலைவர்களும், அறிஞர்களும் மண்டியிட்டுக் கிடப்பதையும், நாட்டையே ஆளும் தலைவர்கள் கூட ஆன்மீகத் தலைவர்களின் கால்களில் விழுந்து கும்பிட்டு நிற்பதையும் இன்றைக்கும் நாம் பார்க்கிறோம்.

மற்றவர்கள் உருவாக்கிய ஒரு மதத்தில் உள்ள ஆயிரக்கணக்கான ஆன்மீகவாதிகளில் ஒருவராக இருப்பவருக்கே இந்த நிலை என்றால், ஒரு மார்க்கத்தை உருவாக்கி அம்மார்க்கத்தின் ஒரே ஆன்மீகத் தலைவராக இருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்களால் எவ்வளவு மதிக்கப்பட்டிருப்பார்கள் என்பதைக் கூறத் தேவையில்லை.

இதனால், நபிகள் நாயகத்தின் நடை, உடை, பாவனையைக் கூட அப்படியே பின்பற்றக் கூடிய தொண்டர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெற்றிருந்தார்கள்.

கேள்வி கேட்பாரில்லாத ஆன்மீகத் தலைமையும், அசைக்க முடியாத ஆட்சித் தலைமையும் அவர்களிடம் இருந்தும் அவர்கள் எவ்வாறு நடந்து கொண்டார்கள்?

தலைமைக்கு ஆசைப்படுபவரும், இது போன்ற பதவிகளையும், அதிகாரத்தையும் அடைந்தவரும் எவ்வாறு நடந்து கொள்வார்களோ, அவ்வாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நடக்கவில்லை. பதவியையும், அதிகாரத்தையும் பெற்றவர்கள் அவற்றை எவ்வாறு பயன்படுத்துவார்களோ அவ்வாறு அவர்கள் பயன்படுத்தவும் இல்லை.

சொத்தும் சேர்க்கவில்லை சொகுசாகவும் வாழவில்லை

இவ்வளவு மகத்தான அதிகாரமும், செல்வாக்கும் பெற்றிருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதிகாரத்தையும், செல்வாக்கையும் பயன்படுத்தி பொருள் திரட்டினார்களா? தமது வாழ்க்கையை வளப்படுத்திக் கொண்டார்களா? சொத்துகளை வாங்கிக் குவித்தார்களா? அறுசுவை உண்டிகளுடனும், அரண்மனை வாசத்துடனும் சொகுசு வாழ்க்கை வாழ்ந்தார்களா?

இதை முதலில் நாம் ஆராய்வோம்.

ஏனெனில் அரசியலிலோ, ஆன்மீகத்திலோ தலைமைத்துவத்தைப் பெற்றவர்கள் அந்தத் தலைமையைப் பயன்படுத்தி இப்படித் தான் நடந்து கொள்கின்றனர்.

ஒரு நாட்டின் பிரதமராகப் பொறுப்பேற்றவர் சில மாதங்கள் பிரதமராகப் பதவி வகித்து விட்டு பதவி இழந்தார் என்று வைத்துக் கொள்வோம். அவர் அப்பதவியைப் பெறுவதற்கு முன் எவ்வளவு சொத்துகள் வைத்திருந்தாரோ, அவரது குடும்பத்தினருக்கு எவ்வளவு சொத்துகள் இருந்தனவோ அதே அளவு தான் இப்போதும் இருக்குமா? நிச்சயம் இருக்காது. அவர் பதவி வகித்த சில மாதங்களிலேயே பல மடங்கு சொத்துகளைக் குவித்திருப்பார்.

இவ்வாறு சொத்துகள் குவிப்பதற்கு பிரதமர் பதவி கூடத் தேவையில்லை. பிரதமரை விட அதிகாரம் குறைந்த அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் கூட சொகுசான வாழ்க்கை வாழ்ந்து, தமது பெயரிலும், தமது குடும்பத்தினர் பெயரிலும் சொத்துகளைக் குவித்துக் கொள்வதை நாம் காண்கிறோம்.

இதை விடக் குறைந்த அதிகாரம் கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாநிலங்களின் சட்டமன்ற உறுப்பினர்கள், அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள், அதன் உறுப்பினர்கள் கூட அதிகாரத்தைத் தமது சுயநலனுக்காகப் பயன்படுத்திக் கொள்வதை நாம் காண்கிறோம்.

இவர்கள் இப்பதவிகளைப் பெறுவதற்கு முன் எந்த நிலையில் இருந்தார்களோ, அதை விடப் பல்லாயிரம் மடங்கு வசதிகள் உடையவர்களாக மாறி விடுகிறார்கள்.

இதை ஒப்புக்கொள்வதற்கு வரலாற்று அறிவோ, ஆதாரமோ தேவையில்லை. நமது கண் முன்னே வாழ்ந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு தலைவரும் இதற்கு நிதர்சனமான உதாரணமாகத் திகழ்கிறார்கள்.

எந்த ஒரு தலைவர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டாலும் நான் ஊழல் செய்யவில்லை  என்று அவர் மறுத்ததில்லை.  நீ ஊழல் செய்யவில்லையா?  என்று குற்றம் சாட்டியவரையே திருப்பிக் கேட்பது தான் அவரது பதிலாகவுள்ளது.

கேள்வி கேட்க எதிர்க்கட்சிகளும், தண்டிப்பதற்குச் சட்டமும், நீதிமன்றங்களும், அம்பலப்படுத்திட செய்தி ஊடகங்களும் உள்ள இந்தக் காலத்திலேயே இப்படியென்றால், இத்தகைய இடையூறுகள் இல்லாத காலத்தில் அதிகாரத்தைப் பெற்றவர்கள் எவ்வளவு ஆட்டம் போட்டிருப்பார்கள்?

இதற்கு வரலாற்றில் எண்ணற்ற சான்றுகள் உள்ளன. அவர்கள் களியாட்டம் போட்ட அரண்மனைகளும், கோட்டை கொத்தளங்களும், அந்தப்புரங்களும், ஆடம்பரப் பொருட்களும் இன்றளவும் இதற்குச் சாட்சியமளித்துக் கொண்டிருக்கின்றன.

அமரும் ஆசனத்தைக் கூட தங்கத்தில் அமைத்துக் கொண்டவர்கள், காதலிக்காக மக்கள் வரிப் பணத்தில் காதல் மாளிகை எழுப்பியவர்கள் சரித்திரத்தில் இடம் பெற்றுள்ளனர். கேள்வி கேட்பாரற்ற இது போன்ற காலத்தில் தான் நபிகள் நாயகமும் ஆட்சி புரிந்தனர். அவர்களைச் சுற்றிலும் கைசர், கிஸ்ரா, ஹெர்குலிஸ் போன்ற பெரிய மன்னர்களும், சிற்றரசர்களும் ஆட்சி புரிந்தார்கள். அவர்களைப் போல் நபிகள் நாயகமும் ஆட்சி புரிந்திருந்தால் யாரும் குறை கூறியிருக்க மாட்டார்கள்!

தலைமைப் பதவியைப் பெற்ற ஒருவர்

வகை வகையாக உண்டு, உடுத்தியிருக்கிறாரா?

பல வகையான பொருட்களைப் பயன்படுத்தியிருக்கிறாரா?

ஆடம்பரப் பொருட்களைக் குவித்திருக்கிறாரா?

அண்ணாந்து பார்க்கும் மாளிகைகளைக் கட்டினாரா?

ஊரை வளைத்துப் போட்டாரா?

தனது வாரிசுகளுக்குச் சேர்த்து வைத்துச் சென்றிருக்கிறாரா?

என்ற கேள்விகளுக்கு இல்லை என்று விடை அளிக்க முடிந்தால் தான்  அவர் பதவியைப் பயன்படுத்தி பொருள் திரட்டவில்லை  என்று கூற முடியும். மேற்கண்ட எல்லாக் கேள்விகளுக்கும் நபிகள் நாயகத்தைப் பொறுத்தவரை  இல்லை  என்று தான் வரலாறு விடை கூறுகிறது.

உண்டு சுகிக்கவில்லை

மனிதனின் முதல் தேவை உணவு தான். உணவு சுவைபட இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் மனிதன் அதிகம் சம்பாதிக்கிறான். முறைகேடுகளிலும் ஈடுபடுகிறான்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆட்சித் தலைவராகவும், ஆன்மீகத் தலைவராகவும் உயர்ந்து நின்ற காலத்தில் அவர்கள் எத்தகைய உணவை உட்கொண்டார்கள் என்பதை முதலில் ஆராய்வோம்.

மாமன்னர்கள் உண்ட உணவுகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்களால் கூட கண்டதில்லை; சராசரி மனிதன் உண்ணுகின்ற உணவைக் கூட அவர்கள் உண்டதில்லை என்பதற்கு அவர்களின் வரலாற்றில் ஏராளமான சான்றுகள் உள்ளன.

எங்கள் வீடுகளில் மூன்று மாதங்கள் அடுப்புப் பற்ற வைக்கப்படாமலே கழிந்திருக்கிறது  என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) கூறினார்.  என் சிறிய தாயாரே! அப்படியானால் உயிர் வாழ எதை உண்பீர்கள்?  என்று நான் கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி)  பேரீச்சம் பழமும், தண்ணீரும் தான் எங்கள் உணவாக இருந்தன. சில நேரங்களில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த தோழர்கள் கறந்த பாலை அன்பளிப்பாகத் தருவார்கள். அதை அருந்துவோம்  என விடையளித்தார்.

அறிவிப்பவர் : உர்வா

நூல் : புகாரி 2567, 6459

தோல் நீக்கப்பட்ட கோதுமையில் தயாரான ரொட்டியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சாப்பிட்டதுண்டா?  என்று நபிகள் நாயகத்தின் பணியாளர்களில் ஒருவரான ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி) யிடம் கேட்டேன். அதற்கு அவர்  நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இறைவன் தனது தூதராக அனுப்பியது முதல் அவர்கள் மரணிக்கும் வரை சலிக்கப்பட்ட மாவில் தயாரான ரொட்டியைச் சாப்பிட்டதேயில்லை  என்றார்.  நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் உங்களிடம் சல்லடைகள் இருந்தனவா?  என்று கேட்டேன். அதற்கவர்  நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அல்லாஹ் தனது தூதராக அனுப்பியது முதல் அவர்கள் சல்லடையைப் பார்த்ததில்லை  என்றார்.  தோல் நீக்கப்படாத கோதுமை மாவைச் சலிக்காமல் எப்படிச் சாப்பிடுவீர்கள்?  என்று நான் கேட்டேன். அதற்கவர்  தீட்டப்படாத கோதுமையைத் திருகையில் அரைப்போம். பின்னர் வாயால் அதை ஊதுவோம். உமிகள் பறந்து விடும். எஞ்சியதைத் தண்ணீரில் குழைத்துச் சாப்பிடுவோம்  என்று விடையளித்தார்.

அறிவிப்பவர் : அபூ ஹாஸிம்

நூல் : புகாரி 5413

நபிகள் நாயகத்தின் குடும்பத்தினர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை மூன்று நாட்கள் தொடர்ந்து எந்த உணவையும் வயிறார உண்டதில்லை  என நபிகள் நாயகத்தின் நெருங்கிய தோழர் அபூ ஹுரைரா (ரலி) கூறுகிறார்.

நூல் : புகாரி 5374

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தது முதல் அவர்கள் மரணிக்கும் வரை அவர்களது குடும்பத்தினராகிய நாங்கள் தொடர்ந்து மூன்று நாட்கள் வயிறார உண்டதில்லை  என நபிகள் நாயகத்தின் மனைவி ஆயிஷா (ரலி) கூறுகிறார்.

நூல் : புகாரி 5416, 6454

 ஹஜ் பெருநாள் பண்டிகையின் போது கறிக் குழம்பில் மீதமாகக் கிடக்கும் ஆட்டுக் காலை பதினைந்து நாட்களுக்குப் பிறகு (நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சாப்பிடுவதற்காக) எடுத்து வைப்போம். அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சாப்பிடுவார்கள்  என்று நபிகள் நாயகத்தின் மனைவி ஆயிஷா (ரலி) கூறினார்.  இதற்கு என்ன அவசியம் நேர்ந்தது?  என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அவர் சிரித்து விட்டு  குழம்புடன் கூடிய ரொட்டியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் குடும்பத்தினராகிய நாங்கள் மூன்று நாட்கள் வயிறார உண்டதில்லையே  என விளக்கமளித்தார்.

நூல் : புகாரி 5423

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் பத்தாண்டுகள் பணியாளராக இருந்த அனஸ் (ரலி) இடம் நாங்கள் சென்றோம். ரொட்டி தயாரிப்பவர் ரொட்டி தயாரித்துக் கொண்டிருந்தார். எங்களை நோக்கி  சாப்பிடுங்கள்  என்று அனஸ் (ரலி) கூறி விட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிருதுவான ரொட்டியைச் சாப்பிட்டதில்லை. தமது கண்களால் எண்ணெயில் பொறிக்கப்பட்ட ஆட்டைப் பார்த்ததில்லை  எனக் கூறினார்.

அறிவிப்பவர் : கதாதா

நூல் : புகாரி 5385, 5421, 6457

(நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பசியோடு இருந்ததை அறிந்து) எனது வீட்டிலிருந்து கோதுமை ரொட்டியையும், வாசனை கெட்ட கொழுப்பையும் கொண்டு சென்றேன். அவர்களின் வீட்டில் ஒரு சந்தர்ப்பத்திலும் ஒரு மரக்கால் கோதுமையோ, அல்லது வேறு ஏதேனும் தானியமோ இருந்ததில்லை  என்று நபிகள் நாயகத்தின் பணியாளர் அனஸ் (ரலி) கூறுகிறார்.

நூல் : புகாரி 2069, 2508

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் வயிறு ஒட்டிய நிலையில் படுத்திருந்ததை நான் பார்த்தேன். உடனே என் தாயார் உம்மு சுலைம் (ரலி) இடம் வந்து இதைக் கூறினேன். அதற்கவர் என்னிடம் ஒரே ஒரு ரொட்டித் துண்டும், சில பேரீச்சம் பழங்களும் தான் உள்ளன. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மட்டும் வருவார்களானால் அவர்களின் வயிறு நிரம்பும். யாரையேனும் உடன் அழைத்து வந்து விட்டால் அவர்களுக்குப் போதாமல் போய் விடும் என்றார்  என நபிகள் நாயகத்தின் பணியாளர் அனஸ் (ரலி) அறிவிக்கிறார்.

நூல் : முஸ்லிம் 3802

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நெருங்கிய தோழராக இருந்த அபூ ஹுரைரா (ரலி) ஒரு கூட்டத்தினரைக் கடந்து சென்றார். அவர்கள் முன்னே பொறிக்கப்பட்ட ஆடு வைக்கப்பட்டிருந்தது. அவர்கள் அபூ ஹுரைராவையும் சாப்பிட அழைத்தனர்.  நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தீட்டப்படாத கோதுமை ரொட்டியையே வயிறார சாப்பிடாத போது நான் இதைச் சாப்பிட மாட்டேன்  என அபூ ஹுரைரா (ரலி) மறுத்து விட்டார்.

நூல் : புகாரி 5414

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது குடும்பத்தினரிடம்  குழம்பு ஏதும் உள்ளதா?  எனக் கேட்டனர்.  வினிகரைத் தவிர வேறு ஏதும் எங்களிடம் இல்லை  என்று குடும்பத்தினர் கூறினார்கள். அதைக் கொண்டு வரச் செய்து அதைத் தொட்டுக் கொண்டு சாப்பிட்டார்கள்.  வினிகர் சிறந்த குழம்பாக இருக்கிறதே  என இரு முறை கூறினார்கள்.

நூல் : முஸ்லிம் 3824

நான் எனது வீட்டின் நிழலில் நின்று கொண்டிருந்தேன். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னைக் கடந்து சென்றார்கள். அவர்களைக் கண்டதும் அவர்களை நோக்கிச் சென்று அவர்களின் பின்னால் நடக்கலானேன்.  அருகே வா  என்று அவர்கள் அழைத்ததும் அருகில் சென்றேன். என் கையைப் பிடித்துக் கொண்டு நடந்தார்கள். தமது வீட்டுக்குச் சென்றவுடன் காலை உணவு ஏதும் இருக்கிறதா?  என்று கேட்டார்கள். வீட்டிலுள்ளவர்கள்  இருக்கிறது  என்று கூறி விட்டு மூன்று ரொட்டியைக் கொண்டு வந்து வைத்தார்கள்.  குழம்பு ஏதும் உள்ளதா?  என்று நபிகள் நாயகம் (ஸல்) கேட்டார்கள்.  சிறிதளவு வினிகரைத் தவிர வேறு ஏதும் இல்லை  என்று குடும்பத்தினர் கூறினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்  அதைக் கொண்டு வாருங்கள்  என்றார்கள். வீட்டிலுள்ளவர்கள் கொண்டு வந்தனர். எனக்கும், அவர்களுக்கும் தலா ஒரு ரொட்டியை முன்னால் வைத்தார்கள். மூன்றாவது ரொட்டியைச் சரி பாதியாக்கி ஒரு பாதியை எனக்கு முன்னால் வைத்து விட்டு இன்னொரு பாதியைத் தமக்கு வைத்துக் கொண்டார்கள் என்று ஜாபிர் (ரலி) அறிவிக்கிறார்.

நூல் : முஸ்லிம் 3826

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முகத்தில் பசியின் அறிகுறியைக் காண்கிறேன்; எனவே அவர்களுடன் சேர்த்து ஐந்து நபர்களுக்கான உணவைத் தயார் செய்வீராக!  என்று அபூ ஷுஐப் (ரலி) தமது ஊழியரிடம் கூறினார். பின்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை விருந்துக்கு அழைத்தார். அப்போது அவர்களுடன் (விருந்துக்கு அழைக்கப்படாத) இன்னொருவரும் சேர்ந்து கொண்டார்.  இவர் எங்களைப் பின்தொடர்ந்து வந்து விட்டார். இவருக்கும் அனுமதியளிப்பதாக இருந்தால் அனுமதியளிப்பீராக! இல்லாவிட்டால் இவர் திரும்பிச் சென்று விடுவார்!  என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அபூ ஷுஐப் (ரலி)  இவருக்கும் அனுமதி அளிக்கிறேன்  என்றார்.

நூல் : புகாரி 2081, 2456, 5434, 5461

ஒரு நாள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வெளியே புறப்பட்டனர். அப்போது அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரைக் கண்டனர். இந்த நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வரக் காரணம் என்ன? என்று அவர்களிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டனர். அவ்விருவரும் பசி  என்றனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்  நீங்கள் எதற்காக வெளியே வந்துள்ளீர்களோ அதற்காகவே நானும் வந்துள்ளேன் என்றார்கள்… ஹதீஸ் சுருக்கம்.

நூல் : முஸ்லிம் 3799

இந்த வரலாற்றுச் சான்றுகளைப் பல கோணங்களில் நாம் அலசிப் பார்க்க வேண்டும்.

ஏழ்மையிலேயே காலத்தைக் கழிக்கும் ஒருவர் மிகவும் எளிமையான உணவை உட்கொள்வதில் எந்த ஆச்சரியமும் இல்லை.

ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 25 வயது முதல் நாற்பது வயது வரை மிகப் பெரிய செல்வந்தராக இருந்தார்கள். காய்ந்து போன ரொட்டியைச் சாப்பிடும் நிலையில் அவர்கள் இருந்ததில்லை.

செல்வச் செழிப்பை ஏற்கனவே அனுபவித்து பழக்கப்படாத, வாய்ப்பும் வசதியும் கிடைக்கப் பெறாத ஒருவர் இத்தகைய உணவுப் பழக்கத்தைக் கடைபிடித்தால் நாம் ஆச்சரியப்பட முடியாது.

ஆனால், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வலிமை மிக்க ஆட்சித் தலைவராக இருந்தார்கள். அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி எல்லா வசதிகளையும் அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு இருந்தது. அவர்கள் அனுபவித்தால் யாரும் எதிர்க் கேள்வி கூட கேட்க மாட்டார்கள் என்ற நிலையும் இருந்தது. அவர்கள் உருவாக்கிய அரசாங்கக் கருவூலத்தில் ஒரு வேளை பணம் இருந்திருக்காது என்று யாரும் நினைத்து விட வேண்டாம்.

அவர்கள் உருவாக்கிய அரசாங்கம் தன்னிறைவு பெற்றிருந்தது போல் உலகில் இன்று வரை எந்த அரசாங்கமும் தன்னிறைவு பெற்றதில்லை. (இதைப் பின்னர் நாம் விளக்குவோம்)

* அப்படி இருந்தும் தோல் நீக்கப்படாத கோதுமை ரொட்டியைச் சாப்பிட்டு அந்த மாமன்னரால் எப்படி வாழ்க்கை நடத்த முடிந்தது?

* குழம்பு கூட இல்லாமல் வினிகரில் தொட்டு அதையும் ருசித்துச் சாப்பிடுவது எப்படி அவர்களுக்குச் சாத்தியமானது?

* காய்ந்த ரொட்டியும், வினிகரும் கூட இல்லாமல் வெறும் பேரீச்சம்பழத்தை மட்டும் சாப்பிட்டுக் கொண்டு, பச்சைத் தண்ணீரை மட்டும் குடித்துக் கொண்டு பல மாதங்களை அவர்களால் கழிக்க முடிந்தது எப்படி?

* அந்த உணவைக் கூட தினமும் சாப்பிட முடியாத நிலையை எப்படி அவர்களால் சகித்துக் கொள்ள முடிந்தது?

* ஒரு நாள் தயாரிக்கப்பட்ட பழைய குழம்பை பதினைந்து நாட்களுக்குப் பிறகு பயன்படுத்துவதற்கு நிகரான வறுமையான வாழ்க்கையை உலக வரலாற்றில் நம்மால் காண முடியுமா?

* முதலாளியின் பசியைக் கண்டு அவரிடம் வேலை பார்ப்பவர் பரிதாபப்பட்டு தனது வீட்டிலிருந்து உணவு கொண்டு வந்து கொடுக்கும் நிலையை உலகில் எந்த மன்னரேனும், எந்த முதலாளியேனும் சந்தித்திருக்க முடியுமா?

* காய்ந்த ரொட்டியையும், தொட்டுக் கொள்ள வாசனை ஏதும் இல்லாத உருக்கிய கொழுப்பையும் தமது வேலைக்காரர் வீட்டிலிருந்து வாங்கி பசியை நீக்கிய தலைவர் கற்பனைக் கதையில் கூட இருக்க முடியுமா?

* பசிக் களைப்பை அவர்களின் முகத்தில் கண்டு சாதாரணக் குடிமகன் ஒருவர் விருந்துக்கு அழைக்கும் அளவுக்கு அவர்களின் வாழ்க்கை எளிமையாக இருந்துள்ளது எப்படி?

இந்தச் சான்றுகளை ஒரு முறைக்குப் பல முறை படித்துப் பாருங்கள்! நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது பதவியைப் பயன்படுத்தி பொருள் திரட்டவில்லை; செல்வத்தைக் குவிக்கவில்லை என்பது விளங்கும்.

இந்த உணவுப் பழக்கத்தை மட்டும் வைத்து நபிகள் நாயகம் தமது பதவியைப் பயன்படுத்தி செல்வத்தைக் குவிக்கவில்லை என்று எப்படிக் கூற முடியும்? எளிமையான உணவுப் பழக்கம் உடைய எத்தனையோ பேர் வளமான நிலையில் உள்ளனரே? வேறு வகையான சுகபோகங்களை அனுபவிக்கின்றனரே! அது போல் நபிகள் நாயகமும் தமது பதவியின் மூலம் செல்வத்தைக் குவித்து வேறு வகையான சுக போகங்களை அனுபவித்தார்களா என்றால் அதுவும் இல்லை.

உடுத்தி மகிழவில்லை

அவர்கள் அணிந்திருந்த ஆடைகள், இன்றைக்குப் பரம ஏழை கூட அணிவதற்கு வெட்கப்படக் கூடியதாகத் தான் இருந்தன.

மேலே போர்த்திக் கொள்ளும் ஒரு போர்வை, கீழே அணிந்து கொள்ளும் முரட்டு வேட்டி ஆகிய இரண்டையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) எடுத்துக் காட்டி இவ்விரு ஆடைகளை அணிந்த நிலையில் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்தார்கள்  என்று குறிப்பிட்டார்.

நூல் : புகாரி 3108, 5818

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி போர்வை ஒன்றைக் கொண்டு வந்து  இதை உங்களுக்கு அணிவிப்பதற்காக என் கையால் நெய்து கொண்டு வந்துள்ளேன்  என்றார். அவர்களுக்கு அது தேவையாக இருந்ததால் அதைப் பெற்றுக் கொண்டனர். பின்னர் அதை வேட்டியாக அணிந்து கொண்டு எங்களிடம் வந்தனர் என ஸஹ்ல் (ரலி) அறிவிக்கிறார்.

நூல் : புகாரி 1277, 2093, 5810

போர்வையை வேட்டியாக அணிந்து கொள்ளும் அளவுக்கு அவர்களுக்கு உடை பற்றாக்குறை இருந்துள்ளது என்பதையும், உபரியாக ஒரு ஆடை இருந்தால் நல்லது என்று ஆடையின் பால் தேவை உள்ளவர்களாக இருந்துள்ளனர் என்பதையும் இதிலிருந்து அறியலாம்.

மேலும் உடனேயே அதை வேட்டியாக அணிந்து கொண்டதிலிருந்து எந்த அளவுக்கு அவர்களுக்கு ஆடைத் தட்டுப்பாடு இருந்துள்ளது என்பதையும் இந்த நிகழ்ச்சியிலிருந்து அறியலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஓரிரு சந்தர்ப்பங்களில் இறுக்கமான கம்பளிக் குளிராடை அணிந்திருந்ததாகவும், மிகச் சில நேரங்களில் தைக்கப்பட்ட சட்டை அணிந்திருந்ததாகவும் சான்றுகள் உள்ளன. இதைத் தவிர மற்ற சந்தர்ப்பங்களில் ஒரு போர்வையை மேலே போர்த்திக் கொள்வார்கள். இரு கைகளும் வெளியே இருக்கும் வகையில் போர்வையின் வலது ஓரத்தை இடது தோளின் மீதும், இடது ஓரத்தை வலது தோளின் மீதும் போட்டுக் கொள்வார்கள். இதனால் அவர்களின் அக்குள் வரை முழுக் கைகளும் வெளியே தெரியும். பெரும்பாலும் அவர்களின் மேலாடை இதுவாகத் தான் இருந்துள்ளது. போர்வை சிறியதாக இருந்தால் கீழே ஒரு போர்வையைக் கட்டிக் கொள்வார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழும் போது (ஸஜ்தாவில்) தமது அக்குள் தெரியும் அளவுக்கு கைகளை விரித்து வைப்பார்கள்.

நூல் : புகாரி 390, 807, 3654

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மழைத் தொழுகையின் போது தமது அக்குள் தெரியும் அளவுக்கு கைகளை உயர்த்துவார்கள்.

நூல் : புகாரி 1031, 3565

மக்கள் அனைவரையும் திரட்டி நடத்தப்படும் மழைத் தொழுகையின் போது கூட அக்குள் தெரியும் அளவுக்கு போர்வையைத் தான் சட்டைக்குப் பதிலாக அணிந்திருந்தனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸகாத் வரியைத் திரட்ட ஒருவரை அனுப்பினார்கள். நிதி திரட்டி வந்த அவர்  இது எனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டது. இது உங்களுக்கு உரியது என்றார். இதைக் கேட்டதும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்  இவர் தனது வீட்டிலோ, தனது தாய் வீட்டிலோ போய் அமர்ந்து கொள்ளட்டும்! இவருக்கு அன்பளிப்பு வழங்கப்படுகிறதா? என்று பார்ப்போம் எனக் கோபமாகக் கூறினார்கள். பின்னர் அவர்களின் அக்குளை நாங்கள் பார்க்கும் அளவுக்கு தமது கைகளை உயர்த்தி இறைவா! நான் எடுத்துச் சொல்லி விட்டேனா?  எனக் கூறினார்கள்.

நூல் : புகாரி 2597, 6636, 6979, 7174, 7197

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மேலாடை பெரும்பாலும் சிறு போர்வையாகத் தான் இருந்தது என்பதையும், இதன் காரணமாகவே அவர்களின் அக்குள் தெரிந்துள்ளது என்பதையும் இந்தச் சான்றுகளிலிருந்து அறியலாம்.

மாமன்னராகவும், மாபெரும் ஆன்மீகத் தலைவராகவும் இருந்த நிலையில் தம் பதவியையும், அந்தஸ்தையும் பயன்படுத்தி அணிந்து கொள்ளும் ஆடைகளைக் கூட அவர்கள் போதிய அளவுக்குச் சேர்த்துக் கொள்ளவில்லை என்பதற்கு இவை சான்றுகளாக உள்ளன.

உணவு, உடை போன்ற வசதிகளுக்காகத் தான் மனிதன் சொத்துகளைத் தேடுகிறான். எல்லாவிதமான முறைகேடுகளிலும் ஈடுபடுகிறான். மேனியை உறுத்தாத வகையில் மெத்தைகளையும் விரும்புகிறான். இந்த வசதிகளையெல்லாம் நாற்பது வயதுக்கு முன் அனுபவித்துப் பழக்கப்பட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இப்போது நினைத்தால் அந்தச் சுகங்களை அனுபவிக்கலாம் என்ற நிலையில் இருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவற்றைத் தவிர்த்து வாழ்ந்திருக்கிறார்கள் என்பதும் அவர்களின் நேர்மைக்குச் சான்றாக அமைந்துள்ளது.

சுகபோகங்களில் திளைக்கவில்லை

உணவு, உடை மட்டுமின்றி வகை வகையான வீட்டு உபயோகப் பொருட்களைப் பயன்படுத்தினார்களா? அல்லது அலங்காரப் பொருட்களை வாங்கிக் குவித்திருந்தார்களா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு போதும் தட்டில் வைத்து உணவைச் சாப்பிட்டதில்லை. ரொட்டியைத் துணி விரிப்பின் மீது வைத்துத் தான் சாப்பிடுவார்கள்   என்று நபிகள் நாயகத்தின் பணியாளர் அனஸ் (ரலி) கூறுகிறார்.

நூல் : புகாரி 5386, 5415

கூளம் நிரப்பப்பட்ட தோல் தலையணை தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சாய்ந்து கொள்ளும் தலையணையாக இருந்தது என்று ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்.

நூல் : புகாரி 6456

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு பாயின் மீது படுப்பது வழக்கம். அதனால் அவர்கள் மேனியில் பாயின் அழுத்தம் பதிந்து விடும். இதைக் கண்ட நாங்கள்  அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் அனுமதித்தால் இதன் மீது விரித்துக் கொள்ளும் விரிப்பைத் தயாரித்துத் தருகிறோம்; அது உங்கள் உடலைப் பாதுகாக்கும்  எனக் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்  எனக்கும், இந்த உலகத்துக்கும் என்ன உறவு உள்ளது? மரத்தின் நிழலில் சற்று நேரம் இளைப்பாறி விட்டுச் செல்லக்கூடிய ஒரு பயணிக்கும், அந்த மரத்துக்கும் என்ன உறவு உள்ளதோ அது போன்ற உறவு தான் எனக்கும், இவ்வுலகத்துக்கும் உள்ளது  எனக் கூறி அதை நிராகரித்து விட்டார்கள்.

இதை அப்துல்லாஹ் (ரலி) அறிவிக்கிறார்.

நூல்கள் : திர்மிதி 2299, இப்னுமாஜா 4099, அஹ்மத் 3525, 3991

அனைத்து மனிதர்களிடமும் இருக்கக் கூடிய அத்தியாவசியப் பொருட்களில் படுத்துக் கொள்ளும் பாய் முக்கியமானதாகும். பிச்சை எடுத்து உண்பவர்கள் கூட தமது குடும்பத்திற்குத் தேவையான பாய்களை வைத்திருப்பார்கள். ஆனால் மாமன்னராக இருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் இருந்தது ஒரே ஒரு பாய் தான். அது பாயாக மட்டுமின்றி பல்வேறு காரியங்களுக்குப் பயன்படுத்தப்படும் நிலையில் இருந்துள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒரு பாய் இருந்தது. அதைப் பகலில் விரித்துக் கொள்வார்கள். இரவில் அதைக் கதவாகப் பயன்படுத்திக் கொள்வார்கள்  என்று நபிகள் நாயகத்தின் மனைவி ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்.

நூல் : புகாரி 730, 5862

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பாயின் மேல் எதையும் விரிக்காமல் படுத்திருந்தார்கள். இதனால் விலாப்புறத்தில் பாயின் அடையாளம் பதிந்திருந்தது. கூளம் நிரப்பப்பட்ட தோல் தலையணையைத் தலைக்குக் கீழே வைத்திருந்தார்கள். அவர்களின் கால் மாட்டில் தோல் பதனிடப் பயன்படும் இலைகள் குவிக்கப்பட்டு இருந்தன. தலைப் பகுதியில் தண்ணீர் வைக்கும் தோல் பாத்திரம் தொங்க விடப்பட்டிருந்தது. இதைக் கண்டதும் நான் அழுதேன்.  ஏன் அழுகிறீர்  என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள்.  அல்லாஹ்வின் தூதரே! (பாரசீக மன்னர்) கிஸ்ராவும் (இத்தாலியின் மன்னர்) கைஸரும் எப்படி எப்படியோ வாழ்க்கையை அனுபவிக்கும் போது அல்லாஹ்வின் தூதராகிய நீங்கள் இப்படி இருக்கிறீர்களே?  என்று நான் கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்  இவ்வுலகம் அவர்களுக்கும், மறுமை வாழ்வு நமக்கும் கிடைப்பது உமக்குத் திருப்தியளிக்கவில்லையா?  எனக் கேட்டார்கள்.

இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின் இரண்டாவது ஜனாதிபதியாகப் பதவி வகித்த உமர் பின் கத்தாப் (ரலி) அறிவிக்கிறார்.

நூல் : புகாரி 4913

இது போன்ற அற்பமான தலையணையும் கூட போதுமான அளவில் இருந்ததா என்றால் அதுவுமில்லை.

இப்னு அப்பாஸ் என்பவரின் சிறிய தாயாரை நபிகள் நாயகம் (ஸல்) மணந்திருந்தார்கள். இப்னு அப்பாஸ் சிறுவராக இருந்ததால் அடிக்கடி தனது சிறிய தாயார் வீட்டில் தங்கி விடுவார். அப்போது நடந்த நிகழ்ச்சியை அவரே கூறுகிறார்.

நான் எனது சின்னம்மா வீட்டில் ஓர் இரவு தங்கினேன். நான் தலையணையின் அகல வாக்கிலும், நபிகள் நாயகமும், எனது சின்னம்மாவும் தலையணையின் நீள வாக்கிலும் படுத்துக் கொண்டோம்  என்று அவர் கூறுகிறார்.

நூல் : புகாரி 183, 992, 1198, 4572

கூளம் நிரப்பப்பட்ட இந்தச் சாதாரண தலையணை கூட அவர்களிடம் ஒன்றே ஒன்று தான் இருந்துள்ளது. அதனால் தான் நீளமான பகுதியில் நபிகள் நாயகமும், அவர்களின் மனைவியும் தலை வைத்துக் கொள்ள இப்னு அப்பாஸ் அகலப் பகுதியில் தலை வைத்துப் படுத்திருக்கிறார்.

அதிக மதிப்பில்லாத அற்பமான தலையணை கூட ஒன்றே ஒன்று தான் அவர்களிடம் இருந்தது என்ற இந்தச் செய்தி பதவியைப் பயன்படுத்தி எந்தச் சொகுசையும் நபிகள் நாயகம் அனுபவிக்கவில்லை என்பதைச் சந்தேகமற நிரூபிக்கிறது.

வலிமை மிக்க வல்லரசின் அதிபர் வாழ்ந்த இந்த வாழ்க்கையை மிக மிக ஏழ்மை நிலையில் இருப்பவர் கூட வாழ முடியுமா?

நபிகள் நாயகத்தின் அரண்மனை

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது சொந்த ஊரைத் துறந்து மதீனாவுக்கு வரும் போது எடுத்துச் செல்ல இயலாத சொத்துகளை அங்கேயே விட்டு விட்டு எடுத்துச் செல்ல இயன்ற தங்கம், வெள்ளிக் காசுகளை எடுத்துக் கொண்டு மதீனாவுக்கு வந்தனர்.

மதீனாவுக்கு வந்தவுடன் முஸ்லிம்கள் தொழுகை நடத்துவதற்காக ஒரு பள்ளிவாசல் தேவை என்பதால் இரண்டு இளைஞர்களுக்குச் சொந்தமான இடத்தை விலைக்குக் கேட்டார்கள். ஆனால் அவ்விருவரும்  இலவசமாகத் தருவோம்; விலைக்கு விற்க மாட்டோம்  எனக் கூறினார்கள். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வற்புறுத்தி தமது சொந்தப் பணத்தில் அந்த இடத்தை விலைக்கு வாங்கினார்கள்.

நூல் : புகாரி 3906

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது சொந்தப் பணத்தில் விலை கொடுத்து வாங்கிய அந்த இடத்தில் தான் மதீனாவின் புனிதப் பள்ளிவாசல் இன்றளவும் இருக்கிறது.

தொழுகை நடத்துவதற்காக மட்டும் அந்த இடத்தை அவர்கள் வாங்கவில்லை. ஒரு அரசை நடத்துவதற்குத் தேவையான பல பணிகளைக் கருத்தில் கொண்டே அவ்விடத்தை வாங்கினார்கள்.

தொழுகைக்கான விசாலமான பள்ளிவாசல், மக்காவைத் துறந்து வந்த சுமார் எழுபது பேர் நிரந்தரமாகத் தங்கும் வகையில் வெளிப் பள்ளிவாசல், வீர விளையாட்டுகளுக்காகவும், இராணுவப் பயிற்சிக்காகவும் பள்ளிவாசலுக்கு முன் பரந்த திடல் ஆகிய அனைத்தும் அங்கே அமைக்கப்பட்டன.

பள்ளிவாசலை ஒட்டி தமக்கான வீடுகளையும் அமைத்துக் கொண்டார்கள். பள்ளிவாசலுக்குச் சொந்தமான இடத்தில் தமக்காக அவர்கள் வீடு கட்டிக் கொள்ளவில்லை. மாறாக தம் சொந்தப் பணத்திலிருந்து வாங்கிய இடத்தில் மிகச் சிறிய அளவிலான இடத்தைத் தமக்காக ஒதுக்கிக் கொண்டார்கள்.

உலகிலேயே ஒரு மன்னர் தமது சொந்தப் பணத்தில் கட்டிய அரசாங்கத் தலைமையகம் இது ஒன்றாகத் தான் இருக்க முடியும்.

தமது சொந்தப் பணத்தில் வாங்கப்பட்ட நிலத்தில் தமக்காக அவர்கள் எவ்வளவு பெரிய இடத்தை ஒதுக்கியிருப்பார்கள்? இடங்களுக்கு பெரிய மதிப்பு இல்லாத அன்றைய காலத்தில் எவ்வளவு பெரிய இடத்தைத் தமக்காக வைத்திருந்தாலும் அது ஒரு பெரிய சொத்தாகக் கருதப்பட மாட்டாது. அத்தகைய காலகட்டத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வீடு எப்படி இருந்தது என்பதைப் பாருங்கள்!

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நள்ளிரவில் எழுந்து அல்லாஹ்வைத் தொழும் வழக்கமுடையவர்களாக இருந்தனர். முஸ்லிம்கள் தொழுகை நடத்தும் போது தமது நெற்றியை நிலத்தில் வைத்து வணங்குவதை பலரும் பார்த்திருப்பீர்கள். இதை ஸஜ்தா என்று கூறுவார்கள். நபிகள் நாயகம் (ஸல்) தமது வீட்டில் ஸஜ்தா செய்வதற்குக் கூட எவ்வளவு சிரமப்பட்டுள்ளார்கள் என்பதை அறியும் போது அவர்களின் வீடு எவ்வளவு பரப்பளவு கொண்டதாக இருந்தது என்பதை அறிந்து கொள்ளலாம்.

நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முன்னே உறங்கிக் கொண்டிருப்பேன். எனது இரு கால்களையும் அவர்கள் ஸஜ்தாச் செய்யும் இடத்தில் நீட்டிக் கொண்டிருப்பேன். அவர்கள் ஸஜ்தாச் செய்யும் போது தமது விரலால் எனது காலில் குத்துவார்கள். உடனே நான் எனது காலை மடக்கிக் கொள்வேன். அவர்கள் ஸஜ்தாச் செய்து விட்டு எழுந்து நின்று வணங்கும் போது மீண்டும் காலை நீட்டிக் கொள்வேன். இவ்வாறு நடந்ததற்குக் காரணம் அன்றைய காலத்தில் எங்கள் வீட்டில் விளக்குகள் கிடையாது  என நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) கூறினார்.

நூல் : புகாரி 382, 513, 1209

ஒருவர் படுத்துறங்கும் போது அவருக்கு இடைஞ்சல் இல்லாமல் இன்னொருவர் தொழுவது என்றால் 5*5 இடம் போதுமானதாகும். ஆனால், இந்த மாமனிதரின் வீடு அதை விடவும் சிறியதாக இருந்துள்ளது. மனைவி படுத்திருக்கும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத் தொழுவதற்கு இடம் போதவில்லை. மனைவி கால்களை மடக்கிக் கொண்ட பிறகே அவர்களால் தொழ முடிந்துள்ளது என்றால் என்ன ஒரு அற்புதமான வாழ்க்கை என்று பாருங்கள்!

பேரீச்சை மர ஓலையால் வேயப்பட்டதாகத் தான் அந்த அறை கூட அமைந்திருந்தது. அந்த வீட்டுக்குக் கதவுகளோ, ஜன்னல்களோ கிடையாது; திறந்த வாசல் தான். இரவில் பாயையே வாசல் கதவாகப் பயன்படுத்திக் கொள்வார்கள் என்பதை முன்னரே பார்த்தோம்.

மாமன்னரை விட்டு விடுங்கள்! இதை வாசிக்கின்றவர்களில் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள ஒருவராவது இத்தகைய ஒரு வீட்டில் வசிக்க ஒப்புவாரா? தனது வீட்டை விட ஆயிரம் மடங்கு பெரிய இடத்தைச் சமுதாயத்துக்கு வழங்கிய ஒருவர் இப்படி வசிக்க விரும்புவாரா?

இந்த வரலாற்று நிகழ்ச்சி நபிகள் நாயகத்தின் வீட்டின் பரப்பளவை மட்டும் கூறவில்லை.

அத்துடன் மற்றொரு செய்தியையும் சேர்த்துக் கூறுகிறது.

 நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிரம் பணியும் போது நீங்களே கால்களை மடக்கிக் கொள்ளலாமே? விரலால் குத்தும் வரை ஏன் காத்திருக்க வேண்டும்?  என்ற சந்தேகத்தை நீக்குவதற்காக அன்றைய காலத்தில் எங்கள் வீட்டில் விளக்குகள் கிடையாது என்று ஆயிஷா (ரலி) விளக்கம் தருகிறார்.

வீட்டில் விளக்கு இல்லாமல் இருளாக இருப்பதால் தான் விரலால் குத்துவதை வைத்து ஸஜ்தா செய்யப் போகிறார்கள் என்று ஆயிஷா (ரலி) அவர்களால் அறிந்து கொள்ள முடிந்தது.

உலக மகா வல்லரசின் அதிபதியாகத் திகழ்ந்த நபிகள் நாயகத்தின் வீட்டில் விளக்கு என்பதே இருந்ததில்லை என்றால் இதற்கும் கீழே ஒரு எளிமை இருக்க முடியுமா?

பாரசீக ரோமாபுரி மன்னர்களின் அரண்மனைகளில் தொங்கிய சரவிளக்குகள் பற்றி இங்கே கூறப்படவில்லை. ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள உதவும் மண்சட்டிகளில் ஆலிவ் எண்ணெய் ஊற்றி எரிக்கப்படும் திரி விளக்கைத் தான் இங்கே குறிப்பிடுகிறார்கள். இந்த விளக்குகளுக்கு ஊற்றும் எண்ணெய் இருந்தால் காய்ந்த ரொட்டியைத் தொட்டுக் கொள்வதற்குப் பயன்படுத்தியிருப்பார்களே?

ஏதோ ஒரு நாள் இரண்டு நாள் மட்டும் தான் விளக்கு இல்லாமல் இருந்ததா என்றால் அதுவுமில்லை.  அன்றைய காலத்தில் எங்கள் வீட்டில் விளக்குகள் கிடையாது  என்ற ஆயிஷா (ரலி) அவர்களின் கூற்று அவர்கள் வீட்டில் என்றுமே விளக்கு இருந்ததில்லை என்பதைக் கூறுகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வீட்டுச் சுவர் கூட போதுமான உயரம் கொண்டதாக இருக்கவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரவில் தமது வீட்டில் தொழுவார்கள். வீட்டின் சுவர் குறைந்த உயரம் கொண்டதாக இருந்ததால் நபிகள் நாயகம் (ஸல்) தொழுவதை நபித்தோழர்கள் காண்பார்கள்.

நூல் : புகாரி 729

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வசித்த வீட்டின் நிலை இது தான்.

செல்வச் செழிப்பில் புரண்டு, எல்லா விதமான சுகங்களையும் அனுபவித்துப் பழகிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கொண்ட கொள்கைக்காக அனைத்தையும் இழக்கிறார்கள்.

நாட்டை விட்டு விரட்டப்பட்ட பின் அவர்களின் காலடியில் அரபுப் பிரதேசமே மண்டியிடுகிறது. இப்போது அவர்கள் ஆடம்பரமான வாழ்க்கை வாழாவிட்டாலும் சராசரி மனிதன் ஆசைப்படும் வாழ்க்கையையாவது வாழ்ந்திருக்கலாம்.

ஆனாலும் அரசுப் பணத்தில் எதையும் தொடுவதில்லை என்ற கொள்கையின் காரணமாக கடை நிலையில் உள்ள ஏழையின் வாழ்க்கையை விட கீழான வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார்கள்.

அரசியல் தலைமை, ஆன்மீகத் தலைமை ஆகிய இரண்டு தலைமைகள் இருந்தும் இவற்றைப் பயன்படுத்தி அவர்கள் எதையும் தமக்காகச் சேர்க்கவில்லை என்பதற்கு இவை போதுமான சான்றுகளாக உள்ளன.

வாரிசுகளுக்கு விட்டுச் சென்றது என்ன?

எத்தனையோ பேர் உணவு, உடை, வாழ்க்கை முறை போன்றவற்றில் கஞ்சத்தனத்தைக் கடைபிடிப்பர். ஆனால், தங்கள் சந்ததியினரின் எதிர்காலத்திற்காகச் சேமித்து வைத்து விட்டு மரணிப்பார்கள். அவர்கள் மரணிக்கும் போது தான் அவர்களிடம் ஏராளமான செல்வங்கள் இருந்தது உலகுக்குத் தெரியவரும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் இது போல் வாயைக் கட்டி, வயிற்றைக் கட்டி தமது வாரிசுகளுக்காகச் சேர்த்து வைத்திருப்பார்களோ?

இவ்வாறு யாரேனும் நினைத்தால் அது முற்றிலும் தவறாகும். ஏனெனில் அவர்கள் மரணிக்கும் போது பெரிய அளவில் எதையும் விட்டுச் செல்லவில்லை.

உலக மகா வல்லரசின் அதிபராக இருந்த நிலையில் மரணித்த அவர்கள் அற்பமான கடனைக் கூட நிறைவேற்றாத நிலையில் மரணமடைந்தார்கள்.

முப்பது படி கோதுமைக்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது கவச ஆடையை ஒரு யூதரிடம் அடைமானம் வைத்திருந்தார்கள். அதை மீட்காமலேயே மரணித்தார்கள் என்று நபிகள் நாயகத்தின் மனைவி ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்.

நூல் : புகாரி 2068, 2096, 2200, 2251, 2252, 2386, 2509, 2513, 2916, 4467

வந்தவர்களுக்கெல்லாம் அரசுக் கருவூலத்திலிருந்து வாரி வழங்கிய மாமன்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடனாகக் கூட அரசுக் கருவூலத்திலிருந்து எதையும் பெற்றுக் கொள்ளவில்லை. தமது நாட்டின் குடிமகன் ஒருவரிடம் (யூதரிடம்) தமது கவசத்தை அடைமானமாக வைத்து முப்பது படி கோதுமையைப் பெற்றுள்ளனர் என்பதும், அந்தக் கவச ஆடையை மீட்காமலே மரணித்து விட்டார்கள் என்பதும் உலக வரலாற்றில் எந்த மன்னரும் வாழ்ந்து காட்டாத வாழ்க்கையாகும்.

மரணிக்கும் போது அவர்கள் விட்டுச் சென்ற சொத்துகளின் பட்டியலைப் பாருங்கள்!

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணிக்கும் போது தங்கக் காசையோ, வெள்ளிக் காசையோ, அடிமைகளையோ, வேறு எதனையுமோ விட்டுச் செல்லவில்லை. தமது வெள்ளை கோவேறுக் கழுதை, தமது ஆயுதங்கள், தர்மமாக வழங்கிச் சென்ற நிலம் ஆகியவற்றைத் தான் நபிகள் நாயகம் (ஸல்) விட்டுச் சென்றார்கள்.

நூல் : புகாரி 2739, 2873, 2912, 3098, 4461

நபிகள் நாயகம் (ஸல்) ஆட்சியில் நாட்டைக் காக்கும் இராணுவத்தினருக்கு எந்த ஊதியமும் அளிக்கப்படவில்லை. இறைவனின் திருப்தியை நோக்கமாகக் கொண்டே மக்கள் போர்களில் பங்கு கொள்வார்கள். போரில் வெற்றி கிட்டினால் தோற்று ஓடக் கூடியவர்கள் விட்டுச் செல்லும் உடமைகளும், கைது செய்யப்பட்டவர்களும், கைப்பற்றப்பட்ட நிலங்களும் போரில் பங்கு கொண்டவர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும். நபிகள் நாயகமும் இவ்வாறு போரில் பங்கு கொண்டதால் அவர்களுக்கும் இது போன்ற பங்குகள் கிடைத்தன. கைபர், பதக் ஆகிய பகுதிகளில் இவ்வாறு கிடைத்த நிலம் நபிகள் நாயகத்திடம் இருந்தது. அதுவும் அவர்கள் விட்டுச் சென்ற சொத்தாகும்.

பத்து ஆண்டுகள் மாமன்னராக ஆட்சி புரிந்த நபிகள் நாயகம் மரணிக்கும் போது விட்டுச் சென்ற சொத்துகள் இவை தாம்.

அந்த அற்பச் சொத்துக்களும் எனது மரணத்துக்குப் பின் அரசைச் சேரவேண்டும் என்று அறிவித்து விட்டு மரணித்தார்கள்.

செழிப்பான நிலையிலும் தேர்ந்தெடுத்துக் கொண்ட வறுமை

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது ஆட்சியில் தரித்திரமும், பஞ்சமும் தலைவிரித்தாடியிருக்கலாம். அதன் காரணமாக எதையும் அனுபவிக்க முடியாமல் போயிருக்கலாம் என்றெல்லாம் யாரேனும் நினைக்கக் கூடும்.

அவ்வாறு நினைத்தால் அது தவறாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனா நகருக்கு வந்த முதலிரண்டு வருடங்களில் கடுமையான வறுமை தலை விரித்தாடியது உண்மை தான். ஆனால் அவர்கள் கொண்டு வந்த ஸகாத்  என்னும் புரட்சிகரமான பொருளாதாரத் திட்டத்தின் மூலம் செழிப்பும், பொருளாதாரத் தன்னிறைவும் ஏற்பட்டன.

அவர்களது ஆட்சியில் ஏற்பட்டது போன்ற தன்னிறைவை அவர்களுக்குப் பின் இன்று வரை எந்த நாட்டிலும், எந்த ஆட்சியும் அடைய முடியவில்லை. ஆம் அந்த அளவுக்கு அவர்களது ஆட்சியில் செல்வம் கொழித்தது. அந்த நிலையில் தான் இவ்வளவு எளிமையான வாழ்க்கையைத் தேர்வு செய்து கொண்டார்கள்! அவர்களது செழிப்பான ஆட்சிக்குச் சில சான்றுகளைப் பாருங்கள்!

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த ஆரம்ப காலத்தில் யாரேனும் ஒருவர் இறந்து விட்டால் அவரது உடல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்வதற்காக (ஜனாஸா தொழுகை நடத்துவதற்காக) அவர்களிடம் கொண்டு வரப்படும்.  இவர் யாருக்கேனும் கடன் தர வேண்டியுள்ளதா?  என்று அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்பார்கள். ஆம் எனக் கூறப்பட்டால்  கடனை நிறைவேற்றிட எதையாவது விட்டுச் சென்றிருக்கிறாரா?  எனக் கேட்பார்கள். ஆம் என்றால் அவருக்காகப் பிரார்த்தனை செய்வார்கள். இல்லை எனக் கூறப்பட்டால்  உங்கள் தோழருக்காக நீங்களே பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்  என்று கூறி விடுவார்கள். அவரது கடனுக்கு யாரேனும் பொறுப்பேற்றுக் கொண்டால் அவருக்காகப் பிரார்த்தனை செய்வார்கள். பின்னர் அல்லாஹ் அவர்களுக்குப் பல வெற்றிகளை வழங்கிய போது  இறை நம்பிக்கையாளர்களைப் பொறுத்த வரை அவர்கள் விஷயத்தில் அவர்களை விட நானே அதிகம் பொறுப்பாளியாவேன். எனவே, யாரேனும் கடன் வாங்கிய நிலையில் மரணித்தால் அந்தக் கடனை அடைப்பது என் பொறுப்பு. யாரேனும் சொத்தை விட்டுச் சென்றால் அது அவரது வாரிசைச் சேரும்  என்று கூறலானார்கள்.

நூல் : புகாரி 2297, 2398, 2399, 4781, 5371, 6731, 6745, 6763

குடிமக்கள் வாங்காத கடனை குடிமக்கள் தலையில் கட்டுகிற அரசுகளை நாம் பார்த்துள்ளோம். ஊதாரித்தனமாகச் செலவு செய்வதற்காக பணக்கார நாடுகளிடம் கடன் வாங்கி மக்களின் வரிப்பணத்தில் வட்டி கட்டும் ஆட்சிகளையும் நாம் பார்க்கிறோம். மக்கள் வாங்கிய கடனுக்காக மக்களிடம் வட்டி வசூலிக்கும் ஆட்சிகளையும், வட்டிக் கட்டத் தவறினால் ஜப்தி செய்யும் தண்டல்கார அரசுகளையும் நாம் பார்க்கிறோம்.

ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஆட்சியில் ஒவ்வொரு குடிமகனும் எவ்வளவு கடன் பட்டிருந்தாலும், என்ன காரணத்துக்காகக் கடன் பட்டிருந்தாலும் அந்தக் கடன்கள் அனைத்தையும் ஆட்சித் தலைவர் என்ற முறையில் நபிகள் நாயகம் (ஸல்) அடைத்தார்கள். இவ்வாறு அடைப்பது என்றால் அளவுக்கு அதிகமாக செல்வம் குவிந்திருந்தால் மட்டுமே சாத்தியமாகும். இன்றைக்கு மிகப் பெரிய பணக்கார நாடுகளாகக் கருதப்படும் நாடுகள் தங்கள் குடிமக்களின் கடன்களை அடைக்க முன் வந்தால் பிச்சைக்கார நாடுகளாகி விடும்.

குடிமக்கள் ஒவ்வொருவரின் கடனையும் அரசே அடைத்த அற்புத ஆட்சியை, செழிப்பு மிக்க ஆட்சியைத் தான் நபிகள் நாயகம் (ஸல்) நடத்தினார்கள்.

நபிகள் நாயகத்தின் ஆட்சி எந்த அளவு செழிப்பானதாக இருந்தது என்றால் யாரேனும் இல்லை என்று கேட்டு வந்தால் மிகவும் தாராளமாக வாரி வழங்கும் அளவுக்கு செல்வச் செழிப்பு இருந்தது.

இதற்குச் சான்றாக ஒரு நிகழ்ச்சியை மட்டும் இங்கே சுட்டிக் காட்டுவோம்.

நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் பள்ளிவாசலில் இருந்தோம். அவர்கள் எழுந்ததும் நாங்கள் எழுந்தோம். அவர்கள் பள்ளிவாசலின் மையப் பகுதிக்கு வந்த போது அவர்களைக் கண்ட ஒருவர் அவர்களின் பின்புறமிருந்து மேலாடையை இழுத்தார். அவர்களின் மேலாடை முரட்டுத் துணியாக இருந்ததால் அவர்களின் பிடரி சிவந்து விட்டது.  முஹம்மதே எனது இரு ஒட்டகங்கள் நிறையப் பொருட்களைத் தருவீராக! உமது செல்வத்திலிருந்தோ, உமது தகப்பனாரின் செல்வத்தில் இருந்தோ நீர் தரப்போவதில்லை  என்று அந்த மனிதர் கூறினார். இழுத்துக் கொண்டிருக்கும் என் மேலாடையை விடும் வரை பொருட்களைத் தர மாட்டேன்  என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.  நான் விட மாட்டேன்  என்று அவர் கூறினார். இவ்வாறு மூன்று முறை நபிகள் நாயகம் (ஸல்) கூறிய போது மூன்று முறையும் அவர் விட மாட்டேன்  என்றார். அந்தக் கிராமவாசியின் கூற்றை நாங்கள் செவியுற்ற போது அவரை நோக்கி விரைந்தோம்.  நான் அனுமதிக்கும் வரை தமது இடத்தை விட்டு யாரும் நகரக் கூடாது  என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். பின்னர் கூட்டத்திலிருந்த ஒருவரை நோக்கி இவரது ஒரு ஒட்டகத்தில் கோதுமையையும், இன்னொரு ஒட்டகத்தில் பேரீச்சம் பழத்தையும் ஏற்றி அனுப்புவீராக என்றார்கள். பின்னர் மக்களை நோக்கி  நீங்கள் புறப்படுங்கள்! என்றார்கள்.

இதை அபூ ஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்.

நூல் : நஸாயீ 4694, அபூதாவூத் 4145

இரண்டு ஒட்டகங்களை வைத்திருப்பவர் வசதியானவராக அன்று கருதப்பட்டார். இத்தகைய வசதியுடையவரும், யாரென்று தெரியாதவருமான ஒருவர் நாகரீகமற்ற முறையில் கேட்கும் போது ஒரு ஒட்டகம் சுமக்கும் அளவுக்கு பேரீச்சம் பழத்தையும், இன்னொரு ஒட்டகம் சுமக்கும் அளவுக்கு கோதுமையையும் ஏற்றி நபிகள் நாயகம் (ஸல்) அனுப்பினார்கள் என்பது அவர்களின் ஆட்சியில் காணப்பட்ட செழிப்புக்குச் சான்றாகும்.

கேட்டவருக்கெல்லாம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அரசுக் கருவூலத்திலிருந்து வாரி வாரி வழங்கியதற்கு இன்னும் எண்ணற்ற சான்றுகள் உள்ளன. அவற்றை இங்கே குறிப்பிட்டால் அதுவே தனி நூலாகி விடும். சிந்திக்கின்ற மக்களுக்கு இதுவே போதுமானதாகும்.

அரசுக் கருவூலத்தில் கணக்கின்றி செல்வம் குவிந்துள்ள நிலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எளிமையான வாழ்க்கையைத் தேர்வு செய்தது ஏன்?

ஏன் இந்த எளிய வாழ்க்கை

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எளிமையான வாழ்க்கையைத் தேர்வு செய்து கொண்டதற்கு அவர்கள் வகுத்துக் கொண்ட கொள்கையே காரணமாக இருந்தது.

மாமன்னர் என்ற அடிப்படையில் இல்லாவிட்டாலும் வசதியில்லாத குடிமகன் என்ற முறையில் தமது அவசியத் தேவைக்காக அரசுப் பணத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எடுத்துக் கொண்டால் அவர்களது நேர்மைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. அவர்கள் காட்டிய ஆன்மீக நெறிக்கும் அது முரணாக இருக்காது.

அரசுப் பணத்தில் ஊதியமாகவோ, கடனாகவோ, பரிசாகவோ, தர்மமாகவோ எந்த ஒன்றையும் பெறுவதில்லை என்பதை அவர்கள் ஒரு கொள்கையாகவே ஏற்படுத்திக் கொண்டார்கள். தாம் மட்டுமின்றி தமது மனைவி மக்களும் கூட அவ்வாறு பெறக் கூடாது என்று கொள்கை வகுத்தார்கள். இந்தக் கொள்கையை ஊரறியப் பிரகடனம் செய்தார்கள். இந்தக் கொள்கையில் கடைசி மூச்சு வரை உறுதியாக நின்றார்கள். இது தான் அவர்களின் எளிமையான வாழ்க்கைக்குக் காரணமாக இருந்தது.

இந்தக் கொள்கையில் அவர்கள் எந்த அளவு பிடிப்புடனும், உறுதியுடனும் இருந்தார்கள் என்பதற்குப் பின்வரும் நிகழ்ச்சி சான்றாக அமைந்துள்ளது.

நபிகள் நாயகத்தின் தலைமைச் செயலகமாக இருந்த பள்ளிவாசலின் மூலையில் ஸகாத் என்னும் பொது நிதிக்குச் சொந்தமான பேரீச்சம் பழங்கள் குவிந்து கிடந்தன. ஒரு முறை நபிகள் நாயகத்தின் பேரன் ஒருவர் அவற்றிலிருந்து ஒரு பேரீச்சம் பழத்தை எடுத்து வாயில் போட்டு விட்டார். இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பார்த்து விட்டார்கள். உடனே விரைந்து வந்து துப்பு துப்பு  என்று தமது பேரனிடம் கூறி, துப்பச் செய்தார்கள். அத்துடன் நிறுத்திக் கொள்ளவில்லை.  நாம் ஸகாத் (பொது நிதி) பொருளைச் சாப்பிடக் கூடாது என்பது உமக்குத் தெரியாதா?  என்று பேரனிடம் கேட்டார்கள்.

நூல் : புகாரி 1485, 1491, 3072

தமது பேரனின் வாயிலிருந்து பேரீச்சம் பழத்தை வெளியேற்றி விட்டு  முஹம்மதின் குடும்பத்தார் ஸகாத்தைச் சாப்பிடக் கூடாது என்பதை நீ அறியவில்லையா?  எனக் கூறினார்கள் என்று கூறப்படுகிறது

நூல் : புகாரி 1485

பொது நிதியிலிருந்து ஒரே ஒரு பேரீச்சம் பழத்தைக் கூட எடுக்கக் கூடாது; சின்னஞ்சிறு பாலகராக இருந்தாலும் கூட தமது குடும்பத்தார் அதைச் சாப்பிடலாகாது  என்ற அளவுக்கு கொள்கையில் உறுதியாக இருந்துள்ளார்கள் என்பதை இதிலிருந்து அறியலாம்.

மற்றொரு நிகழ்ச்சியைப் பாருங்கள்!

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகையை நடத்தி விட்டு வேகமாக வெளியேறினார்கள். சற்று நேரத்தில் பள்ளிவாசலுக்குத் திரும்பி வந்து விட்டார்கள். ஒரு நாளும் இல்லாமல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வேகமாகப் புறப்பட்டுச் சென்றதையும், உடனேயே திரும்பி வந்ததையும் நபித்தோழர்கள் வியப்புடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.  நான் ஏன் அவசரமாகச் சென்றேன் தெரியுமா? அரசுக் கருவூலத்துக்குச் சொந்தமான வெள்ளிக் கட்டி என் வீட்டில் இருந்தது. அதை ஏழைகளுக்கு விநியோகம் செய்யுமாறு குடும்பத்தாரிடம் தெரிவித்து விட்டு வந்தேன்  என்றார்கள்.

நூல் : புகாரி 851, 1221, 1430

மரணம் எந்த நேரத்திலும் ஏற்பட்டு விடலாம். ஏழைகளுக்குச் சொந்தமான வெள்ளிக் கட்டியை வீட்டில் வைத்து விட்டு மரணித்து விட்டால் குடும்பத்தினர் அதைத் தமக்குரியதாகக் கருதி விடக் கூடும். அவ்வாறு கருதி விடக் கூடாது என்று அஞ்சியே அவசரமாகப் புறப்பட்டுச் சென்று  அது பொதுநிதிக்குச் சொந்தமானது  என்று கூறி விட்டுத் திரும்பியிருக்கிறார்கள்.

எனது படுக்கையில் ஒரு பேரீச்சம் பழம் விழுந்து கிடப்பதைக் கண்டிருக்கிறேன். அது ஸகாத் நிதியைச் சேர்ந்ததாக இருக்குமோ என்ற அச்சம் இல்லாவிட்டால் அதைச் சாப்பிட்டிருப்பேன்  எனவும் அவர்கள் குறிப்பிட்டார்கள்.

நூல் : புகாரி 2055, 2431, 2433

நபிகள் நாயகத்தின் வீடு பள்ளிவாசலுடன் ஒட்டி அமைந்திருந்தது. பள்ளிவாசலில் குவிக்கப்படும் ஸகாத் நிதிக்குச் சொந்தமான பேரீச்சம் பழங்களில் ஒன்றிரண்டு நபிகள் நாயகத்தின் வீட்டுக்குள் வந்து விழுந்திட வாய்ப்பு இருப்பதால் அதைக் கூட சாப்பிட மாட்டேன் என்று அறிவிக்கிறார்கள். பொது நிதியைச் சேர்ந்ததாக இருக்குமோ என்ற சந்தேகம் இருந்தால் கூட அதைத் தவிர்க்கும் அளவுக்கு பேணுதலாக இருந்துள்ளனர்.

இதை விடவும் உயர்வான மற்றொரு பிரகடனத்தையும் அவர்கள் வெளியிட்டார்கள்.

நான் ஆட்சியில் இருக்கும் போது மட்டுமல்ல. என் மரணத்திற்குப் பிறகு எந்த ஆட்சி வந்தாலும் அரசுக் கருவூலத்தின் ஸகாத் நிதியாதாரம் என் வழித் தோன்றல்களுக்குத் தடை செய்யப்படுகிறது. இந்தத் தடை உலகம் உள்ளளவும் நீடிக்கும்  என்பதே அந்தப் பிரகடனம்.

இன்றும் கூட நபிகள் நாயகத்தின் வழித் தோன்றல்களாக இருப்பவர்கள் எந்த அரசிலும் ஸகாத் நிதியைப் பெறுவதில்லை. முஸ்லிம் நாடுகளில் அவர்களுக்குக் கொடுக்கப்படுவதும் இல்லை. இஸ்லாமியச் சட்டப்படி நபிகள் நாயகத்தின் குடும்பத்தினர் ஸகாத் பெறுவதும், அவர்களுக்கு ஆட்சியாளர்கள் வழங்குவதும் குற்றமாகும்.

தமது வழித் தோன்றல்களாக இருப்பதால் மற்றவர்களுக்குக் கிடைக்கும் சலுகையும் கிடையாது என்று அறிவித்ததற்கு நிகரான தூய வாழ்க்கைக்குச் சொந்தக்காரர் உலக வரலாற்றில் ஒருவரும் இல்லை.

தாமும், தமது குடும்பத்தினரும் ஸகாத் நிதியைத் தொடாதது மட்டுமின்றி தம்முடன் தொடர்புடையவர்கள் கூட அதிலிருந்து தூரமாக இருக்க வேண்டும் எனவும் அவர்கள் கட்டளை பிறப்பித்திருந்தார்கள். இதைப் பின் வரும் நிகழ்ச்சியிலிருந்து அறியலாம்.

மக்ஸூம் கோத்திரத்தைச் சேர்ந்த ஒருவரை ஸகாத் நிதியைத் திரட்டுவதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுப்பினார்கள். அப்போது அபூ ராஃபிவு என்பாரும் அவருடன் செல்லலானார். அதைக் கண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸகாத் எனும் பொது நிதி நமக்கு அனுமதிக்கப்பட்டதன்று. ஒரு சமுதாயத்தால் விடுதலை செய்யப்பட்டவர் அவர்களைச் சேர்ந்தவரே  என்று குறிப்பிட்டார்கள்.

நூல்கள் : நஸாயீ 2565, அபூதாவூத் 1407

நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் மனிதர்களில் சிலர் அடிமைகளாக இருந்தனர். அடிமைகளை வைத்திருப்பவர்கள் அடிமைகளை விடுதலை செய்ய வேண்டும் என்பதற்காக நபிகள் நாயகம் (ஸல்) பல நடவடிக்கைகளை எடுத்தார்கள்.

அடிமைகளை விடுதலை செய்தால் விடுதலை செய்தவரே அந்த அடிமைக்கு வாரிசு  என்பதும் அத்திட்டங்களில் ஒன்றாகும். அதாவது அந்த அடிமை மரணித்து விட்டால் அவரது சொத்துகள் விடுதலை செய்தவரைச் சேரும்.

இவ்வாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் விடுதலை செய்யப்பட்டவர் தான் அபூ ராஃபிவு. இதனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவருக்கு வாரிசாகும் நிலையில் இருந்தார்கள். அவரும் ஸகாத் நிதியில் எதையும் பெறக் கூடாது என்பதற்காக அவரை ஸகாத் வசூலிக்கச் செல்லக் கூடாது எனக் கட்டளை பிறப்பிக்கிறார்கள்.

அரசாங்கப் பணத்தைத் தமக்கோ, தம் குடும்பத்துக்கோ எடுத்துக் கொள்ளாமல் இருந்தது மட்டுமின்றி, உலகம் உள்ளளவும் ஒரு காலத்திலும் ஒரு அரசாங்கத்திலும் தமது வழித் தோன்றல்கள் எதையும் பெற்றுக் கொள்ளக் கூடாது என்று பிரகடனம் செய்தது மட்டுமின்றி மற்றொரு புரட்சிகரமான பிரகடனத்தையும் அவர்கள் வெளியிட்டார்கள்.

எனது வாரிசுகள், தங்கக்காசுகளுக்கோ, வெள்ளிக்காசுகளுக்கோ வாரிசாக மாட்டார்கள். என் மனைவியரின் குடும்பச் செலவுக்குப் பின்பு, எனது பணியாளரின் ஊதியத்துக்குப் பின்பு நான் விட்டுச் சென்றவை பொது நிதியைச் சேரும். (எனது வாரிசுகளைச் சேராது என்று நபிகள் நாயகம் அறிவித்தார்கள்.)

நூல் : புகாரி 2776, 3096, 6729

நபிகள் நாயகத்தின் மகள் ஃபாத்திமா (ரலி)க்கு ஏற்பட்ட அனுபவம் அந்த மாமனிதரின் அப்பழுக்கற்ற தன்மையைப் பறைசாற்றும்.

நபிகள் நாயகம் (ஸல்) மரணித்த பின் அவர்களின் உற்ற தோழர் அபூபக்ர் (ரலி) ஆட்சிப் பொறுப்பேற்றார்கள். அவர்களிடம் நபிகள் நாயகத்தின் மகள் ஃபாத்திமா வந்தார். தமது தந்தை விட்டுச் சென்ற கைபர், பதக் ஆகிய பகுதிகளில் உள்ள நிலங்களைத் தம்மிடம் ஒப்படைக்குமாறு அபூபக்ரிடம் கேட்டார்…

எனக்கு யாரும் வாரிசாக முடியாது. நான் விட்டுச் சென்ற யாவும் பொது உடமையாகும்  என்று உங்கள் தந்தை நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். எனவே, அதை உங்களிடம் தர இயலாது. நபிகள் நாயகத்தின் மகளாகிய நீங்கள் எனது எல்லா உறவினர்களை விடவும் விருப்பமானவராக இருக்கிறீர்கள். ஆயினும், நான் தர மறுப்பதற்குக் காரணம் நபிகள் நாயகத்தின் கட்டளை தான்  என்று கூறி மறுத்து விட்டார்.

நூல் : புகாரி 3093, 3094, 3712, 4034, 4036, 4241, 5358, 6725, 6728

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மகளார் மிகவும் ஏழ்மை நிலையில் இருந்தும் தமது அற்பமான சொத்துகளையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பொது உடமையாக்கினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்தவுடன் அவர்களின் மனைவியர் தமக்குரிய வாரிசுரிமையை ஜனாதிபதி அபூபக்ர் (ரலி) இடம் கேட்டுப் பெறுவதற்காக உஸ்மான் (ரலி)யை அனுப்பத் திட்டமிட்டனர். அப்போது ஆயிஷா (ரலி)  எனக்கு யாரும் வாரிசாக முடியாது; நான் விட்டுச் சென்றவை பொது நிதியில் சேர்க்கப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறவில்லையா?  என்று கேட்டு அம்முயற்சியைக் கைவிட வைத்தார்.

நூல் : புகாரி 6730

வாழ்க்கைச் செலவுக்கு என்ன செய்தார்கள்?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அரசுக் கருவூலத்திலிருந்து ஊதியமோ, பரிசோ, அன்பளிப்போ பெறவில்லை என்றால் அவர்கள் வாழ்க்கைச் செலவுக்கு என்ன செய்தார்கள்?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஆட்சித் தலைமை, ஆன்மீகத் தலைமை ஆகிய இரண்டு தலைமைப் பொறுப்புகளையும் நிர்வகிக்கவே நேரம் சரியாக இருந்தது.

அரசாங்கத்தில் எந்த உதவியும் பெறக் கூடாது; அடுத்தவரிடத்திலும் யாசிக்கக் கூடாது  என்ற கொள்கையின் காரணமாக வியாபாரம், அல்லது தொழில் செய்தால் மேற்கண்ட இரண்டு பணிகளையும் செய்ய முடியாது.

தாம் ஏற்றுள்ள சமுதாயப் பணியையும் நிறைவேற்றிக் கொண்டு, கொள்கையையும் விட்டு விடாமல் தமது குடும்ப வருமானத்திற்கு ஒரு வழியைக் கண்டார்கள்.

மக்காவிலிருந்து கொண்டு வந்த பணத்தில் பள்ளிவாசலுக்கான இடத்தை வாங்கியது போக மீதமிருந்த பணத்திலிருந்து நூறு ஆடுகள் கொண்ட ஆட்டுப் பண்ணையை அமைத்துக் கொண்டார்கள். அதற்கு ஒரு மேய்ப்பவரையும் நியமித்துக் கொண்டார்கள். நூறு ஆடுகளில் ஒரு ஆடு குட்டி போட்டதும் பெரிய ஆடு ஒன்றைத் தமக்காக எடுத்துக் கொள்வார்கள். எந்த நேரத்திலும் நூறு ஆடுகள் குறையாமல் இருக்கும் படி பார்த்துக் கொண்டார்கள்.

இதைப் பின்வரும் நிகழ்ச்சியிலிருந்து அறியலாம்.

நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைச் சந்திப்பதற்காகச் சென்றிருந்தேன். அவர்களின் ஆடு மேய்ப்பவர் அப்போது தான் பிறந்த ஒரு குட்டியைத் தூக்கிக் கொண்டு வந்தார். கிடாய்க் குட்டியா? பெட்டையா?  என்றார்கள். அவர் கிடாய்  என்றார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு ஆட்டை அறுத்து விருந்து சமைக்கச் சொன்னார்கள். பிறகு என்னை நோக்கி  நான் உனக்காகத் தான் இந்த ஆட்டை அறுத்தேன் என்று எண்ண வேண்டாம். நம்மிடம் நூறு ஆடுகள் உள்ளன. அவற்றில் ஒரு ஆடு குட்டியை ஈன்றால் உடனேயே அதற்குப் பதிலாக பெரிய ஆடு ஒன்றை நாம் அறுத்து உண்போம்  என்று கூறினார்கள்.

இதை லகீத் பின் ஸபுரா (ரலி) அறிவிக்கிறார்.

நூல் : அபூதாவூத் 123, அஹ்மத் 17172

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எவ்வளவு திட்டமிட்டு தம் வாழ்க்கைச் செலவைச் சமாளித்தார்கள் என்பது இதிலிருந்து தெரிகின்றது.

நபிகள் நாயகம் (ஸல்) வாழ்ந்த எளிமையான வாழ்க்கையைப் பற்றி முன்னர் நாம் விளக்கியுள்ளோம். இத்தகைய எளிமையான வாழ்க்கையை வாழ்ந்திட இந்த வருமானம் போதுமானதாக இருந்தது.

அரபு நாட்டு ஆடுகள் அதிகமாகப் பால் சுரக்கக் கூடியவை. நூறு ஆடுகள் இருக்கும் போது பத்து ஆடுகளாவது பால் கொடுக்கக் கூடியவையாக இருக்கும். நூறு ஆடுகள் கொண்ட பண்ணையில் மாதம் இரண்டு ஆடுகள் குட்டி போட்டாலே போதுமான வருமானம் கிடைக்கும். இந்த வருமானத்தின் மூலம் தான் தமது தேவைகளையும், தமது மனைவியரின் தேவைகளையும் நிறைவேற்றிக் கொண்டார்கள். ஒரே ஒரு மனைவி மட்டும் இருந்தால் இந்த வருமானம் தேவைக்கும் அதிகமான வருமானமாகும். ஆனால் பல மனைவியர் இருந்த காரணத்தினால் அவர்கள் அனைவருக்கும் பங்கிட்டுக் கொடுக்க வேண்டியிருந்ததால் தான் நாம் முன்னர் சுட்டிக் காட்டிய வறிய வாழ்க்கை வாழும் நிலை ஏற்பட்டது.

(நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏன் பல மனைவியரை மணக்க வேண்டும் என்று யாருக்கேனும் சந்தேகம் ஏற்பட்டால்

நபிகள் நாயகம் பல திருமணங்கள் செய்தது ஏன்?

என்ற நமது நூலைப் பார்க்கவும்.)

இவை தவிர இன்னொரு வகையிலும் அவர்களுக்கு வருமானம் வந்தது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், அவர்களின் தோழர்களும் பல்வேறு போர்களைச் சந்தித்தார்கள்.

போரில் ஈடுபடுபவர்களுக்கு எவ்வித ஊதியமும் அன்றைய காலத்தில் வழங்கப்படுவதில்லை. போரில் ஈடுபட்டு வெற்றி பெற்றால் தோற்றவர்களின் உடமைகளை வெற்றி பெற்றவர்கள் எடுத்துக் கொள்ளும் வழக்கம் இருந்தது. போரில் பங்கு கொண்டவர்களுக்கு அதைப் பங்கிட்டுக் கொடுப்பார்கள். அது போல் வெற்றி கொள்ளப்பட்ட நாடுகளில் தனி மனிதர்களுக்கு உரிமையாக இல்லாத பொதுச் சொத்துகளும் வெற்றி பெற்றவர்களுக்குச் சொந்தமாகி விடும். அவற்றையும் வெற்றி பெற்ற நாட்டினர் போரில் பங்கெடுத்தவர்களுக்குப் பங்கிட்டுக் கொடுத்தனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மற்ற வீரர்களைப் போலவே நேரடியாகப் போரில் பங்கெடுத்தார்கள். வாள் வீச்சிலும், குதிரை ஏற்றத்திலும் அவர்கள் தேர்ந்தவர்களாக இருந்ததால் மற்றவர்களை விடத் தீவிரமாகப் பங்கெடுத்தார்கள்.

போரில் பங்கு கொண்ட மற்ற வீரர்களுக்குப் பங்கிட்டுக் கொடுப்பது போல் போர் வீரர் என்ற முறையில் தமக்கும் ஒரு பங்கை எடுத்துக் கொள்வார்கள். குதிரை வைத்திருப்பவர்களுக்கு சாதாரணப் போர் வீரரை விட இன்னொரு மடங்கு அதிகமாகக் கொடுக்கப்பட்டு வந்தது. அந்த அடிப்படையில் குதிரை வீரர்களுக்குக் கிடைத்த பங்குகள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கிடைத்தன.

கைபர், பதக் ஆகிய பகுதிகளில் உள்ள தோட்டங்கள் நபிகள் நாயகத்துக்கு இவ்வாறு தான் கிடைத்தன. இதையும் மரணிக்கும் போது பொது உடமையாக்கி விட்டார்கள் என்பதை முன்னரே நாம் குறிப்பிட்டுள்ளோம்.

இந்தத் தோட்டங்களிலிருந்தும் அவர்களுக்கு வருமானம் வந்தது.

நண்பர்கள், மற்றும் அண்டை வீட்டார் அன்பளிப்புகளாக வழங்கினால் அதை ஏற்றுக் கொள்வார்கள். தாமும் அன்பளிப்புச் செய்வார்கள்.

இந்த வகைகளில் தவிர வேறு எந்த வருமானமும் அவர்களுக்கு இருந்ததில்லை. இதிலிருந்து தான் தமது குடும்பத் தேவைகளை நிறைவேற்றிக் கொண்டார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இந்த அற்புதமான வாழ்க்கை அவர்கள் இறைவனின் தூதர் தான் என்பதற்கு அசைக்க முடியாத ஆதாரமாக அமைந்துள்ளது.

புகழுக்கு ஆசைப்பட்டார்களா?

எந்தச் சுயநலனும் இன்றி யாரேனும் பொதுச் சேவை செய்ய முடியுமா? என்று நினைப்பவர்களுக்கு வேறு விதமான சந்தேகம் தோன்றலாம். சுயநலவாதிகளையே பார்த்துப் பழகியதால் இந்தச் சந்தேகம் ஏற்படலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி சொத்து சுகம் சேர்க்காவிட்டாலும் பதவியினால் கிடைக்கும் அதிகாரத்துக்காகவும், புகழுக்காகவும் அந்தப் பதவிகளுக்கு ஆசைப்பட்டிருக்கலாம் அல்லவா?

எத்தனையோ வசதி படைத்தவர்கள் புகழுக்காக பெருமளவு செலவு செய்வதைப் பார்க்கிறோம். எனவே பண விஷயத்தில் தூய்மையாக நடந்தாலும் பதவியைப் பயன்படுத்தி புகழையும், பாராட்டையும் விரும்பியிருக்கலாம் அல்லவா? என்பது தான் அந்தச் சந்தேகம்.

இந்தச் சந்தேகத்தை நாம் அலட்சியப்படுத்த முடியாது. தனக்கு முன்னால் நாலு பேர் கைகட்டி நிற்கும் போதும், நாலு பேர் புகழும் போதும் ஏற்படும் போதை சாதாரணமானது அல்ல.

சொத்து சுகம் சேர்ப்பதற்காக அதிகாரத்துக்கு வர பலர் விரும்புகிறார்கள் என்றால் சில பேர் இந்தப் புகழ்ப் போதைக்காக அதிகாரத்தை விரும்புகிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.

எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் புகழுக்கு ஆசைப்பட்டார்களா? பதவியின் மூலம் கிடைக்கும் மரியாதையைப் பயன்படுத்திக் கொண்டார்களா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆன்மீகத் தலைமை, ஆட்சித் தலைமை ஆகிய தலைமைகளில் எந்த ஒன்றையும் அவர்கள் தமது புகழுக்காகப் பயன்படுத்தியதில்லை.

ஆட்சித் தலைமையைப் பயன்படுத்தி எந்தப் புகழுக்கும் அவர்கள் ஆசைப்பட்டதில்லை என்பதற்கு அவர்களின் வரலாற்றில் சில நிகழ்ச்சிகளைப் பார்ப்போம்.

ஒரு முறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெருவில் நடந்து சென்றனர். அப்போது ஒரே ஒரு பேரீச்சம் பழம் கீழே கிடந்தது. அதைப் பார்த்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்  இது ஸகாத் வகையைச் சேர்ந்ததாக இருக்குமோ என்ற அச்சம் எனக்கு இல்லாவிட்டால் இதை எடுத்து நான் சாப்பிட்டிருப்பேன்  என்று கூறினார்கள்.

நூல் : புகாரி 2433, 2055, 2431

கீழே கிடக்கும் ஒரே ஒரு பேரீச்சம் பழத்தை எடுத்துச் சாப்பிடுவதில் ஏழைகளுக்கான அரசின் கருவூலத்தைச் சேர்ந்ததாக இருக்குமோ  என்பதைத் தவிர வேறு எந்தக் கூச்சமும், தயக்கமும் இல்லை  என்று அகில உலகமே மதிக்கும் மாமன்னராக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இருக்கும் சமயத்தில் மக்கள் மத்தியில் பிரகடனம் செய்கிறார்கள். இவ்வாறு கூறினால் கவுரவம் போய் விடுமே என்றெல்லாம் அவர்கள் கருதவில்லை.

நமக்குச் சொந்தமான நாலணா கீழே விழுந்து விட்டால் நாலு பேர் பார்க்கும் போது அதை எடுப்பதற்கு நமக்கே கூச்சமாக இருக்கிறது.  இந்த அற்பமான பொருளைக் கூட எடுக்கிறானே என்று மற்றவர்கள் நம்மைப் பற்றி நினைப்பார்களே  என்று கருதுகிறோம். நம்மைப் போன்ற சாதாரண மனிதன் பார்க்கின்ற கௌரவத்தைக் கூட இம்மாமனிதர் பார்க்கவில்லை.

இன்னொரு நிகழ்ச்சியைப் பாருங்கள்!

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒரு ஒட்டகம் இருந்தது. அள்பா  என்று அதற்குப் பெயரிட்டிருந்தார்கள். இந்நிலையில் ஒரு கிராமவாசி ஒரு ஒட்டகத்துடன் வந்தார். (அவரது ஒட்டகத்துக்கும், நபிகள் நாயகத்தின் ஒட்டகத்துக்கும் வைக்கப்பட்ட போட்டியில்) அக்கிராமவாசியின் ஒட்டகம் முந்திச் சென்றது. இது முஸ்லிம்களுக்கு மனக் கவலையை ஏற்படுத்தியது. இதனை அறிந்து கொண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்  இவ்வுலகில் எப்பொருள் உயர்நிலையை அடைந்தாலும் அதைத் தாழ்த்துவது அல்லாஹ்வின் நடவடிக்கையாகும்  என்று கூறினார்கள்.

நூல் : புகாரி 2872, 6501

எத்தனையோ மன்னர்கள் தங்களின் வளர்ப்புப் பிராணிகள் போட்டியில் தோற்றதற்காக அப்பிராணிகளைச் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். தங்களைச் சேர்ந்த எதுவுமே தோல்வியைத் தழுவக் கூடாது என்ற கர்வமே இதற்குக் காரணம்.

மன்னராட்சி முடிந்து மக்களாட்சி நடைபெறும் நாடுகளில் கூட தமது நாட்டு கிரிக்கெட் வீரர்கள் தோல்வியடையும் போது அவர்கள் மீது குடிமக்கள் அழுகிய முட்டைகளையும், தக்காளிகளையும் வீசுவதைப் பார்க்கிறோம். சாதாரண மக்கள் கூட தம்மைச் சேர்ந்தவர்கள் விளையாட்டில் தோற்பதைக் கேவலமாக எண்ணுகின்றனர்.

சாதாரண நிலையில் உள்ள ஒரு கிராமவாசி தனது கோழியோ, ஆடோ சண்டையில் தோற்று விட்டால் அது தனக்கு ஏற்பட்ட பெரிய அவமானம் என்று கருதுகிறான்.

இந்த மாமனிதரைப் பாருங்கள்! இவர் மாமன்னராகவும் திகழ்கிறார். அந்த நிலையில் இவரது ஒட்டகம் போட்டியில் தோற்று விடுகிறது. இவர் அது பற்றி எள் முனையளவும் அலட்டிக் கொள்ளவில்லை. அலட்டிக் கொள்ளாமல் இருப்பது கூட ஆச்சரியமானது அல்ல. அந்த நேரத்தில் அவர்கள் கூறிய அறிவுரை தான் மிகவும் ஆச்சரியமானது.

உயருகின்ற ஒவ்வொரு பொருளும் ஒரு நாள் இறங்கியே ஆக வேண்டும்  என்னே அற்புதமான வாசகம்!

தனது ஒட்டகம் தோற்றது தான் சரி. இப்படித் தோல்வி ஏற்படுவது தான் நல்லது என்று போட்டியில் பங்கெடுத்த எவரேனும் கூறுவதுண்டா?

இந்த ஒட்டகத்தை எந்த ஒட்டகத்தினாலும் முந்த முடியாது என்ற நிலையே கர்வத்தின் பால் கொண்டு செல்லும் என இம்மாமனிதர் நினைக்கிறார். கோழிச் சண்டையில் தனது கோழி வெற்றி பெற வேண்டும் என்று சாதாரண மனிதன் விரும்புவானே அந்த விருப்பம் கூட இவருக்கு இருக்கவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹுனைன் எனும் போர்க்களத்திலிருந்து மக்களுடன் திரும்பி வந்து கொண்டிருந்தார்கள். அவர்களுடன் நானும் இருந்தேன். நபிகள் நாயகத்தை அறிந்து கொண்ட மக்கள் (அவர்கள் மன்னராக இருந்ததால்) அவர்களிடம் தமது தேவைகளைக் கேட்கலானார்கள். கூட்டம் நெருக்கித் தள்ளியதால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முள் மரத்தில் சாய்ந்தார்கள். அவர்களின் மேலாடை முள்ளில் சிக்கிக் கொண்டது.  எனது மேலாடையை எடுத்துத் தாருங்கள்  என்று கூறினார்கள். இம்மரங்களின் எண்ணிக்கையளவு என்னிடம் ஒட்டகங்கள் இருந்தால் அவை அனைத்தையும் உங்களுக்கு நான் பங்கிட்டிருப்பேன். என்னைக் கஞ்சனாக நீங்கள் காண மாட்டீர்கள்  எனவும் கூறினார்கள்.

நூல் : புகாரி 2821, 3148

இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மாபெரும் ஆட்சித் தலைவராக இருந்த போது நடந்த நிகழ்ச்சியாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு போரில் பங்கெடுத்து விட்டு படை வீரர்களுடன் வருகிறார்கள். மாமன்னர் வருகிறார் என்பதைக் கேள்விப்பட்டு மக்கள் பல்வேறு கோரிக்கைகளுடன் அவர்களை வழிமறிக்கிறார்கள். மன்னர்களுக்கு முன்னால் கைகட்டிக் குனிந்து மண்டியிடுவது தான் அன்றைய உலகில் வழக்கமாக இருந்தது. மன்னரிடம் நேரில் பேசுவதோ, கோரிக்கை வைப்பதோ கற்பனை செய்து பார்க்க முடியாத ஒன்றாக இருந்தது.

உலகத்தின் மன்னர்களெல்லாம் இத்தகைய மரியாதையைப் பெற்று வந்த காலத்தில் தான் சர்வ சாதாரணமாக நபிகள் நாயகத்தை மக்கள் நெருங்குகிறார்கள். எந்தப் பாதுகாப்பு வளையமும் இல்லாததால் நெருக்கித் தள்ளப்படுகிறார்கள். அந்த நேரத்தில் இம்மாமனிதருக்கு கோபமே வரவில்லை. மன்னருடன் இப்படித் தான் நடப்பதா என்று சலிப்பு அடையவும் இல்லை. அவரது படை வீரர்களும் தத்தமது வேலைகளைப் பார்த்தார்களே தவிர நபிகள் நாயகத்தை நெருக்கித் தள்ளியவர்கள் மீது பலப் பிரயோகம் செய்யவில்லை. போர்வையைத் தான் சட்டைக்குப் பதிலாக மேலாடையாக நபிகள் நாயகம் அணிந்திருந்தனர். அந்த ஆடையும் முள்ளில் சிக்கி உடலின் மேற்பகுதியில் ஆடையில்லாமல் நிற்கும் நிலை ஏற்பட்டது. அப்போதும் அம்மக்கள் மீது இம்மாமனிதருக்கு எந்த வெறுப்பும் ஏற்படவில்லை.

 என்னை முள்மரத்தில் தள்ளி விட்ட உங்களுக்கு எதுவுமே தர முடியாது  என்று அவர்கள் கூறவில்லை. மாறாக இம்மரங்களின் எண்ணிக்கையளவுக்கு ஒட்டகங்கள் இருந்தாலும் அவற்றையும் வாரி வழங்குவேன்  என்று கூறுவதிலிருந்து புகழையும், மரியாதையையும் அவர்கள் இயல்பிலேயே விரும்பவில்லை என்பதை அறிந்து கொள்ளலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அரசுக் கருவூலத்தில் நிதி இல்லாத நேரத்தில் யாராவது உதவி கேட்டு வந்தால் வசதி படைத்தவர்களிடம் கடனாகப் பெற்று வழங்குவார்கள். ஸகாத் நிதி வசூலிக்கப்பட்டு வந்தவுடன் கடனைத் திருப்பிக் கொடுப்பார்கள். ஒரு தடவை இங்கிதம் தெரியாத மனிதரிடம் வாங்கிய கடனைக் குறித்த நேரத்தில் கொடுக்க இயலவில்லை. அப்போது நடந்தது என்ன என்பதைப் பாருங்கள்!

அபூ ஹுரைரா (ரலி) கூறுகிறார்:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கடன் கொடுத்திருந்த ஒரு மனிதர் அதை வசூலிப்பதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்தார். அப்போது கடுமையான முறையில் அவர் நடந்து கொண்டார். நபிகள் நாயகத்தின் தோழர்கள் அவரைத் தாக்க முயன்றனர். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்  அவரை விட்டு விடுங்கள்! ஏனெனில் கடன் கொடுத்தவருக்கு (கடுமையாகப்) பேசும் உரிமை உள்ளது  எனக் கூறினார்கள். மேலும்,  அதே வயதுடைய ஒட்டகத்தை இவருக்குக் கொடுங்கள் எனக் கூறினார்கள்.  அல்லாஹ்வின் தூதரே! அதை விடக் கூடுதல் வயதுடைய ஒட்டகம் தான் உள்ளது  என்று நபித்தோழர்கள் கூறினார்கள்.  அவருக்கு அதைக் கொடுங்கள். ஏனெனில், அழகிய முறையில் கடனைத் திருப்பிச் செலுத்துபவரே உங்களில் சிறந்தவராவார்  எனக் கூறினார்கள்.

நூல் : புகாரி 2306, 2390, 2401, 2606, 2609

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவில் மாபெரும் ஆட்சித் தலைவராக இருந்த காலகட்டத்தில் நடந்த நிகழ்ச்சி இது.

கொடுத்த கடனைத் திரும்பக் கேட்டு வந்தவர் கடுஞ்சொற்களைப் பயன்படுத்தி கடனைத் திருப்பிக் கேட்கிறார். நபித்தோழர்கள் அவர் மேல் ஆத்திரப்படும் அளவுக்குக் கடுமையாக நடந்து கொள்கிறார்.

ஆட்சியில் உள்ளவர்களுக்கு யாரேனும் கடன் கொடுத்தால் அதைத் திரும்பிக் கேட்க அஞ்சுவதைக் காண்கிறோம். அச்சத்தைத் துறந்து விட்டு திருப்பிக் கேட்கச் சென்றாலும் ஆட்சியில் உள்ளவரைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைப்பதில்லை. அப்படியே வாய்ப்புக் கிடைத்தாலும் ஏதோ பிச்சை கேட்பது போல் கெஞ்சித் தான் கொடுத்த கடனைக் கேட்க முடியும். ஆட்சியிலுள்ளவர்களால் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படும் என்ற அச்சத்தினால் தயங்கித் தயங்கி தனது வறுமையைக் கூறி கூழைக் கும்பிடு போட்டுத் தான் கடனைக் கேட்க முடியும்.

கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்திக் கடனை வசூலிப்பது ஒரு புறமிருக்கட்டும் சாதாரண முறையில் கூடக் கேட்க முடியாது.

அகில உலகும் அஞ்சக் கூடிய மாபெரும் வல்லரசின் அதிபராக இருந்த நபிகள் நாயகத்தைக் கடன் கொடுத்தவர் சர்வ சாதாரணமாகச் சந்திக்கிறார். கொடுத்த கடனைக் கேட்கிறார். அதுவும் கடுமையான சொற்களைப் பயன்படுத்துகிறார். உலக வரலாற்றில் எந்த ஆட்சியாளரிடமாவது யாராவது இப்படிக் கேட்க முடியுமா?

இவ்வாறு கடுஞ்சொற்களை அவர் பயன்படுத்தும் போதும், ஏராளமான மக்கள் மத்தியில் வைத்து அவமானப்படுத்தும் போதும்  தாம் ஒரு இறைத்தூதர்; மாமன்னர்; மக்கள் தலைவர்; இதனால் தமது கௌரவம் பாதிக்கப்படும் என்று அந்த மாமனிதர் எண்ணவில்லை.

தமது நிலையிலிருந்து இதைச் சிந்திக்காமல் கடன் கொடுத்தவரின் நிலையிலிருந்து சிந்திக்கிறார்கள். வாங்கிய கடனைத் தாமதமாகத் திருப்பிக் கொடுப்பதால் கடன் கொடுத்தவருக்கு ஏற்படக் கூடிய சங்கடங்களையும், சிரமங்களையும், மன உளைச்சல்களையும் நினைத்துப் பார்க்கிறார்கள். இதனால் தான்  கடன் கொடுத்தவருக்கு அவ்வாறு பேசும் உரிமை உள்ளது  எனக் கூறி அவரைத் தாக்கத் துணிந்த தம் தோழர்களைத் தடுக்கிறார்கள்.

தமது மரியாதையை விட மற்றவரின் உரிமையைப் பெரிதாக மதித்ததால் தான் இதைச் சகித்துக் கொள்கிறார்கள்.

மேலும் உடனடியாக அவரது கடனைத் தீர்க்கவும் ஏற்பாடு செய்கிறார்கள். கடனாக வாங்கிய ஒட்டகத்தை விடக் கூடுதல் வயதுடைய ஒட்டகம் தான் தம்மிடம் இருக்கிறது என்பதை அறிந்த போது அதையே அவருக்குக் கொடுக்க உத்தரவிடுகிறார்கள்.

கடுஞ்சொற்களை என்ன தான் சகித்துக் கொண்டாலும் இத்தகையவருக்கு வாங்கிய கடனை விட அதிகமாகக் கொடுக்க யாருக்கும் மனம் வராது. முடிந்த வரை குறைவாகக் கொடுக்கவே உள்ளம் தீர்ப்பளிக்கும்.

ஆனால், இந்த மாமனிதரோ தாம் வாங்கிய கடனை விட அதிகமாகக் கொடுக்குமாறு உத்தரவிட்டதுடன் இவ்வாறு நடப்பவர்களே மனிதர்களில் சிறந்தவர் எனவும் போதனை செய்கிறார்கள்.

இதனால் தான் முஸ்லிமல்லாத நடுநிலையாளர்களும் இவரை மாமனிதர் எனப் போற்றுகின்றனர்.

பதவியைப் பயன்படுத்தி எந்தவிதமான புகழையும், மரியாதையையும் அவர்கள் விரும்பவில்லை என்பதற்கு அற்புதமான சான்றாக இது அமைந்துள்ளது.

நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் நடந்து சென்று கொண்டிருந்தேன். நஜ்ரான் நாட்டில் தயாரிக்கப்பட்ட, ஓரப்பகுதி கடினமாக இருந்த போர்வையை அவர்கள் மேலாடையாக அணிந்திருந்தார்கள். அவர்களை எதிர்கொண்ட ஒரு கிராமவாசி அப்போர்வையைக் கடுமையான வேகத்தில் இழுத்தார். அவர் கடுமையாக இழுத்ததால் நபிகள் நாயகத்தின் தோள் பகுதியில் அந்த அடையாளம் பதிந்ததை நான் கண்டேன். இழுத்தது மட்டுமின்றி அக்கிராமவாசி  உம்மிடம் இருக்கும் அல்லாஹ்வின் செல்வத்திலிருந்து ஏதேனும் எனக்குத் தருமாறு உத்தரவிடுவீராக  என்று கூறினார். அவரை நோக்கித் திரும்பிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிரித்தார்கள். அவருக்கு அன்பளிப்பு வழங்குமாறு ஆணையிட்டார்கள்.

நூல் : புகாரி 3149, 5809, 6088

சாதாரண மனிதன் கூட பொது இடங்களில் தனது சட்டையைப் பிடித்து இழுப்பதைச் சகித்துக் கொள்ள மாட்டான். தனக்கு ஏற்பட்ட அவமானமாக அதை எடுத்துக் கொள்வான்.

உலகின் மிகப் பெரிய வல்லரசின் அதிபரான நபிகள் நாயகத்தை முன் பின் அறிமுகமில்லாத ஒரு கிராமவாசி சர்வ சாதாரணமாகச் சந்திக்க முடிகிறது. சந்திப்பது மட்டுமின்றி தன்னை விடத் தாழ்ந்தவனிடம் எப்படி நடந்து கொள்வாரோ அதை விட அநாகரீகமாக இந்த மாமன்னரிடம் அவரால் நடக்க முடிகின்றது.  உம்முடைய செல்வத்தைக் கேட்கவில்லை. உம்மிடம் உள்ள அல்லாஹ்வின் செல்வத்தைக் கேட்கிறேன்  என்று கோரிக்கை வைக்க முடிகின்றது.

இவ்வளவு நடந்த பிறகும் மிக மிகச் சாதாரணமாக அந்தக் கிராமவாசியை நோக்கி நபிகள் நாயகத்தால் சிரிக்க முடிகின்றது. அவரது கோரிக்கையை அவர்களால் ஏற்க முடிகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) பதவியைப் பெற்ற பின் சாதாரண மனிதனுக்குக் கிடைக்கின்ற மரியாதையும், கௌரவத்தையும் கூட தியாகம் செய்தார்கள் என்பதற்கு இதை விட வேறு என்ன சான்று வேண்டும்?.

இந்த நிகழ்ச்சியை ஏதோ ஒரு தடவை அவர்கள் வாழ்வில் நடந்த நிகழ்ச்சியாகக் கருதி விடக் கூடாது.

 மக்களிடம் சர்வ சாதாரணமாக முஹம்மது பழகுகிறார்; யாரும் அவரை நெருங்கலாம்; எப்படி வேண்டுமானாலும் கோரிக்கையை முன் வைக்கலாம்; நீண்ட நாள் பழகிய நண்பனுடன் எடுத்துக் கொள்ளும் உரிமையை எடுத்துக் கொள்ளலாம்; எப்படி நடந்தாலும் அவர் கோபம் கொள்ள மாட்டார்; தேவைக்கேற்ப வாரி வழங்குவார்  என்றெல்லாம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்ததால் தான் அறிமுகமில்லாத கிராமவாசிக்கு இப்படி நடக்க முடிந்தது.

நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் பள்ளிவாசலில் இருந்தோம். அவர்கள் எழுந்ததும் நாங்கள் எழுந்தோம். அவர்கள் பள்ளிவாசலின் மையப்பகுதிக்கு வந்த போது அவர்களைக் கண்ட ஒருவர் அவர்களின் பின்புறமிருந்து மேலாடையை இழுத்தார். அவர்களின் மேலாடை முரட்டுத் துணியாக இருந்ததால் அவர்களின் பிடரி சிவந்து விட்டது.  முஹம்மதே எனது இரு ஒட்டகங்கள் நிறையப் பொருட்களைத் தருவீராக! உமது செல்வத்திலிருந்தோ, உமது தகப்பனாரின் செல்வத்தில் இருந்தோ நீர் தரப்போவதில்லை  என்று அந்த மனிதர் கூறினார். இழுத்துக் கொண்டிருக்கும் என் மேலாடையை விடும் வரை பொருட்களைத் தர மாட்டேன்  என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.  நான் விட மாட்டேன்  என்று அவர் கூறினார். இவ்வாறு மூன்று முறை நபிகள் நாயகம் (ஸல்) கூறிய போது மூன்று முறையும் அவர்  விட மாட்டேன்  என்றார். அந்தக் கிராம வாசியின் கூற்றை நாங்கள் செவியுற்ற போது அவரை நோக்கி விரைந்தோம்.  நான் அனுமதிக்கும் வரை தமது இடத்தை விட்டு யாரும் நகரக் கூடாது  என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். பின்னர் கூட்டத்திலிருந்த ஒருவரை நோக்கி  இவரது ஒரு ஒட்டகத்தில் கோதுமையையும், இன்னொரு ஒட்டகத்தில் பேரீச்சம் பழத்தையும் ஏற்றி அனுப்புவீராக  என்றார்கள். பின்னர் மக்களை நோக்கி  நீங்கள் புறப்படுங்கள்!  என்றார்கள்.

இதை நபிகள் நாயகத்தின் தோழர் அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்.

நூற்கள்: நஸாயீ 4694, அபூதாவூத் 4145

நபிகள் நாயகத்தின் ஆட்சி எந்த அளவுக்குச் செழிப்பாக இருந்தது என்பதற்குச் சான்றாக இந்த நிகழ்ச்சியை முன்னரும் குறிப்பிட்டுள்ளோம். அவர்களின் பெருந்தன்மைக்கும், தன்னடக்கத் திற்கும் இதில் சான்று உள்ளதால் மீண்டும் இதைக் குறிப்பிடுகிறோம்.

பள்ளிவாசலில் நபிகள் நாயகத்தின் உற்ற தோழர்கள் இருக்கும் போது யாரெனத் தெரியாத ஒருவர் சட்டையைப் பிடித்து இழுக்கிறார். பிடரி சிவந்து போகும் அளவுக்கு இழுத்தும் நபிகள் நாயகம் (ஸல்) கோபப்படாமல் இருக்கிறார்கள். அவருக்கு இரண்டு ஒட்டகங்கள் உடைமையாக இருந்தும் அவற்றில் ஏற்றிச் செல்லும் அளவுக்குப் பொருட்களைக் கேட்டும் அதையும் சகித்துக் கொண்டார்கள்.

பிடித்த சட்டையை விடாமலே தனது கோரிக்கையைக் கேட்கிறார். சட்டையை விடும்படி நபிகள் நாயகம் கேட்ட பிறகும் சட்டையை விடாமல் கோரிக்கையில் பிடிவாதமாக இருக்கிறார். இப்படி ஒரு நிலையை எவ்வித அதிகாரமும் இல்லாத நம்மைப் போன்ற சாதாரண மனிதர்கள் கூட சகித்துக் கொள்ள இயலுமா? இவ்வளவு நடந்த பின்பும்  உமது அப்பன் சொத்தைக் கேட்கவில்லை; பொதுநிதியைத் தான் கேட்கிறேன்  என அவர் கூறிய பிறகும் அவரது கோரிக்கையை ஏற்று இரு ஒட்டகங்கள் நிறைய வாரி வழங்க நமது மனம் இடம் தருமா? இந்த மாமனிதரின் உள்ளம் இடம் தருகிறது.

தாம் ஒரு வல்லரசின் அதிபதி என்ற எண்ணம் கூட இல்லாமல் நடந்து கொண்டார்கள்.

சாதாரணக் குடிமக்களுக்குக் கிடைப்பதை விட அதிபர் என்பதற்காக அதிகப்படியான எந்த மரியாதையையும் அவர்கள் பெறவில்லை என்பதற்குப் பின் வரும் நிகழ்ச்சியும் சிறந்த சான்று.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹஜ் பயணம் மேற்கொண்ட போது குடி தண்ணீர் விநியோகிக்கப்படும் தண்ணீர்ப் பந்தலுக்கு வந்தார்கள். குடிக்க தண்ணீர் கேட்டார்கள். நபிகள் நாயகத்தின் பெரிய தந்தை அப்பாஸ், தண்ணீர்ப் பந்தலின் பொறுப்பாளராக இருந்தார். அவர் தமது இளைய மகன் ஃபழ்லு என்பாரை அழைத்து,  வீட்டிற்குச் சென்று உன் தாயாரிடம் நபிகள் நாயகத்துக்காகக் குடிதண்ணீர் வாங்கி வா  என்று கூறினார். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்  இந்தத் தண்ணீரையே தாருங்கள்  எனக் கேட்டார்கள்.  அல்லாஹ்வின் தூதரே! இதில் மக்கள் தங்கள் கைகளைப் போட்டுள்ளனரே  என்று அப்பாஸ் கூறினார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்  பரவாயில்லை! இதனையே எனக்குக் குடிக்கத் தாருங்கள்  எனக் கேட்டு அந்தத் தண்ணீரைக் குடித்தார்கள். பின்னர் புனிதமான ஸம்ஸம் கிணற்றுக்கு வந்தார்கள். அங்கே சிலர் அந்தக் கிணற்று நீரை மக்களுக்கு வழங்கிக் கொண்டும், அது தொடர்பான பணிகளிலும் ஈடுபட்டிருந்தனர். அவர்களை நோக்கி  இந்தப் பணியைத் தொடர்ந்து செய்யுங்கள்! நீங்கள் சிறப்பான பணியையே செய்கிறீர்கள். நானும் இப்பணியைச் செய்வதால் நீங்கள் எனக்காக ஒதுங்கிக் கொள்வீர்கள் என்ற அச்சம் இல்லாவிட்டால் நானும் கிணற்றில் இறங்கி இந்தத் தோளில் தண்ணீர் சுமந்து மக்களுக்கு விநியோகம் செய்திருப்பேன்  என்று கூறினார்கள்.

நூல் : புகாரி 1635

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது வாழ் நாளின் கடைசியில் தான் ஹஜ் கடமையை நிறைவேற்றினார்கள். இந்தக் காலக்கட்டத்தில் மிகப் பெரும் சாம்ராஜ்யத்தை உருவாக்கி நிறைவு செய்திருந்தார்கள் என்பதை முதலில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தாகம் ஏற்பட்டால் எந்த மன்னரும் குடி தண்ணீரைத் தேடிப் போக மாட்டார். குடி தண்ணீர் தான் அவரைத் தேடி வரும். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மற்றவர்கள் தண்ணீர் அருந்துகின்ற பந்தலுக்குச் சாதாரணமாக வருகின்றார்கள். மற்றவர்கள் அருந்துகிற அதே தண்ணீரைத் தமக்கும் தருமாறு கேட்கின்றார்கள். தமது பெரிய தந்தையின் வீட்டிலிருந்து நல்ல தண்ணீர் பெற்றுக் குடிப்பது யாராலும் பாரபட்சமாக எடுத்துக் கொள்ளப்படாது என்ற நிலையிலும் மக்கள் எந்தத் தண்ணீரைப் பருகுகிறார்களோ அதையே பருகுவதில் பிடிவாதமாக இருக்கின்றார்கள். பலரது கைகள் இத்தண்ணீரில் பட்டுள்ளது என்று தக்க காரணத்தைக் கூறிய பிறகும் அந்தத் தண்ணீரையே கேட்டுப் பருகுகின்றார்கள்.

பதவி அதிகாரம் யாவும் சுயநலனுக்குரியது அல்ல; இப்பதவியால் யாரும் எந்த உயர்வையும் பெற முடியாது என்று திட்டவட்டமாக நபிகள் நாயகம் (ஸல்) நம்பியது தான் இதற்குக் காரணம்.

புனிதமான பணிகளில் மக்களுடன் அதிகாரம் படைத்தவர்கள் போட்டியிட்டால், அதிகாரம் படைத்தவருக்காக மக்கள் தங்கள் பங்கை விட்டுக் கொடுப்பதை நாம் காண்கிறோம். ஸம்ஸம் நீரை மக்களுக்கு விநியோகம் செய்வது நல்ல பணி என்று கூறி அப்பணியைச் செய்ய ஆசை இருப்பதை வெளிப்படுத்திய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதைத் தவிர்க்கிறார்கள். தாமும் கிணற்றில் இறங்கி தண்ணீர் விநியோகித்தால் இப்பணியைச் செய்தவர்கள் தமக்காக விட்டுத் தருவார்கள். இது நல்லதல்ல என்ற காரணத்துக்காக இதையும் தவிர்க்கிறார்கள்.

இந்த நிகழ்ச்சியும் மாமனிதரின் சுயநலன் கலக்காத பண்புக்குச் சான்றாகவுள்ளது.

ஒரு அடக்கத்தலத்தின் அருகில் அழுது கொண்டிருந்த ஒரு பெண்ணை நபிகள் நாயகம் (ஸல்) கடந்து சென்றார்கள். இறைவனை அஞ்சிக் கொள்! பொறுமையைக் கடைபிடி!  என்று அப்பெண்ணுக்கு அவர்கள் அறிவுரை கூறினார்கள். அப்பெண் நபிகள் நாயகத்தை அறியாததால்  உன் வேலையைப் பார்த்துக் கொண்டு போ! எனக்கேற் பட்ட துன்பம் உனக்கு ஏற்படவில்லை எனக் கூறினார். அறிவுரை கூறியவர் நபிகள் நாயகம் (ஸல்) என்று பின்னர் அவரிடம் தெரிவிக்கப்பட்டது. உடனே அப்பெண் நபிகள் நாயகத்தின் வீட்டுக்கு வந்தார். வாசலில் எந்தக் காவலர்களையும் அவர் காணவில்லை. அப்பெண் உள்ளே வந்து உங்களைப் பற்றி அறியாமல் பேசி விட்டேன்  எனக் கூறினார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்  துன்பத்தின் துவக்கத்தில் ஏற்படுவது தான் பொறுமை  எனக் கூறினார்கள்.

நூல் : புகாரி 1283, 7154

ஆட்சித் தலைவர்கள் வெளியே வருகிறார்கள் என்றால் வருபவர் ஆட்சித் தலைவர் தான் என்பதை அனைவரும் அறிந்து கொள்ளக்கூடிய வகையில் தான் வருவார்கள்.

கிரீடம் உள்ளிட்ட சிறப்பு ஆபரணங்கள், முன்னும் பின்னும் அணிவகுத்துச் செல்லும் சிப்பாய்கள், பராக் பராக் என்ற முன்னறிவிப்பு போன்றவை காரணமாக மன்னரை முன்பே பார்த்திராதவர்களும் கூட  இவர் தான் மன்னர்  என்று அறிந்து கொள்ள முடியும்.

மன்னராட்சி ஒழிந்து மக்களாட்சி நடக்கும் போது கூட இத்தகைய ஆடம்பரங்கள் இன்றளவும் ஒழிந்தபாடில்லை.

ஆனால், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அழுது கொண்டிருந்த பெண்ணுக்கு அறிவுரை கூறுகிறார்கள். தமக்கு அறிவுரை கூறுபவர் மாபெரும் சாம்ராஜ்யத்தின் அதிபதி என்பது அப்பெண்ணுக்குத் தெரியவில்லை. சாதாரண மனிதர்களைப் போல் சாதாரண உடையில் நபிகள் நாயகம் இருந்ததும், பல்லக்கில் வராமல் நடந்தே வந்ததும், அவர்களுடன் பெரிய கூட்டம் ஏதும் வராததுமே நபிகள் நாயகத்தை அப்பெண் அறிந்து கொள்ள இயலாமல் போனதற்குக் காரணமாகும்.

 உன் வேலையைப் பார்த்துக் கொண்டு போ  என்று அப்பெண் கூறும் போது  நீ யாரிடம் பேசுகிறாய் தெரியுமா?  என்று அப்பெண்ணிடம் அவர்களும் கேட்கவில்லை. உடன் சென்ற அவர்களின் பணியாளர் அனஸ் என்பாரும் கேட்கவில்லை. இதைச் சர்வ சாதாரணமாக எடுத்துக் கொண்டு நபிகள் நாயகம் (ஸல்) சென்று விடுகிறார்கள்.

தமக்கு அறிவுரை கூறியவர் தமது நாட்டின் அதிபதி என்று அறிந்து கொண்டு ஏனைய அதிபதிகளைப் போல வாயிற்காப்போரின் அனுமதி பெற வேண்டியிருக்குமோ என்று நினைத்துக் கொண்டு அவர் வருகிறார். ஆனால் நபிகள் நாயகத்தின் வீட்டுக்கு எந்தக் காவலாளியும் இருக்கவில்லை. உலகிலேயே காவலாளி யாரும் இல்லாத ஒரே ஆட்சித் தலைவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களாகத் தான் இருக்க முடியும்.

தனது செயலுக்கு மன்னிப்புக் கேட்கத் தான் அப்பெண்மணி வருகிறார்.  உங்களை அறியாமல் அலட்சியமாக நடந்து விட்டேன்  எனக் கூறுகிறார். நபிகள் நாயகம் (ஸல்) அதைப் பொருட்படுத்தவே இல்லை. மாறாக, இந்த நிலையிலும் அவருக்கு முன்னர் கூறிய அறிவுரையைத் தான் தொடர்கிறார்கள்.  துன்பம் வந்தவுடனேயே அதைச் சகிப்பது தான் பொறுமை  என்று போதனை செய்கிறார்கள். அப்பெண்ணின் அலட்சியம் நபிகள் நாயகத்தைக் கடுகளவு கூட பாதிக்கவில்லை என்பதற்கு இது சான்றாகவுள்ளது.

பதவியையும், அதிகாரத்தையும் பயன்படுத்தி எந்த மரியாதையையும் அடைய அவர்கள் விரும்பவில்லை என்பதை இதிலிருந்து அறியலாம்.

மற்றொரு அற்புத வரலாற்றைப் பாருங்கள்!

என்னை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஏமனுக்கு ஆளுநராக அனுப்பினார்கள். நான் ஏமன் நோக்கிப் புறப்படும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னுடன் ஊர் எல்லை வரை வந்தார்கள். நான் வாகனத்தில் அமர்ந்திருக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாகனத்திற்குக் கீழே தரையில் கூடவே என்னுடன் நடந்து வந்தார்கள். விடை பெறும் போது,  முஆதே! இவ்வருடத்திற்குப் பின் அநேகமாக என்னைச் சந்திக்க மாட்டீர்! அல்லது எனது பள்ளிவாசலையோ, எனது அடக்கத்தலத்தையோ தான் சந்திப்பீர்  எனக் கூறினார்கள். இதைக் கேட்டு நான் அழலானேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முகத்தைத் திருப்பி மதீனாவை நோக்கி நடந்தார்கள்.

நூல் : அஹ்மத் 21040, 21042

தம்மால் நியமனம் செய்யப்பட்ட ஒரு அதிகாரி வாகனத்தில் இருக்க, அவரை நியமனம் செய்த அதிபர் அவருடன் கூடவே நடந்து சென்ற அதிசய வரலாற்றை உலகம் கண்டதில்லை.

அவரிடம் பேச வேண்டியவைகளை ஊரிலேயே பேசி அனுப்பி இருக்கலாம். சாதாரண நண்பருடன் பேசுவது போல் பேச வேண்டியவைகளைப் பேசிக் கொண்டு செல்கிறார்கள் என்றால் இவர்கள் புகழுக்காக பதவியைப் பெற்றிருப்பார்கள் என்று கற்பனை கூட செய்ய முடியுமா?

சாதாரண பஞ்சாயத்துத் தலைவர் தனது ஊழியரிடம் இப்படி நடக்க முடியாது. சிறு நிறுவனத்தின் முதலாளி ஒருவர் தனது தொழிலாளியுடன் இப்படி நடக்க முடியாது.

உலக வல்லரசின் அதிபரால் இப்படி நடக்க முடிந்தது என்றால் இதிலிருந்து நபிகள் நாயகத்திற்குப் புகழாசை எள்ளளவும் கிடையாது என்பதை அறியலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது கரத்தால் கட்டிய பள்ளிவாசலில் தொழுகையின் போது முன்னோக்கும் சுவற்றில் யாரோ மூக்குச் சளியைச் சிந்தியிருந்தனர். இதனைக் கண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாமே அதை நோக்கிச் சென்று தமது கரத்தால் அதைச் சுத்தம் செய்தார்கள்.

நூல் : புகாரி 405, 406, 407, 409, 411, 414, 417, 6111

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இலேசாகச் சாடை காட்டினால் கூட இந்த வேலையை அவர்களின் தோழர்கள் செய்யக் காத்திருந்தனர். அல்லது யாருக்காவது உத்தரவு போட்டு அதை அப்புறப் படுத்தியிருக்கலாம். சாதாரண மனிதர் கூட பொது இடங்களில் இந்த நிலையைக் காணும் போது யாராவது அப்புறப்படுத்தட்டும் என்று கண்டும் காணாமல் இருப்பார். அல்லது மரியாதைக் குறைந்தவர்களாகக் கருதப்படும் நபர்கள் மூலம் அதைச் சுத்தம் செய்வார்.

ஆனால், மாபெரும் வல்லரசின் அதிபரான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோ சாதாரண மனிதன் எதிர்பார்க்கின்ற மரியாதையைக் கூட விரும்பவில்லை. தாம் ஒரு மன்னர் என்பதோ, தமது தகுதியோ அவர்களுக்கு நினைவில் வரவில்லை. தாம் ஒரு நல்ல மனிதராக நடந்து கொள்ள வேண்டும் என்பது மட்டுமே அவர்களின் விருப்பமாக இருந்தது.

மற்றொரு நிகழ்ச்சியைப் பாருங்கள்!

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நெருங்கிய தோழர் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) தமது வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சியைக் கூறுகிறார்.

நான் அதிகமாக நோன்பு நோற்று வரும் செய்தி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. உடனே, அவர்கள் என்னிடம் வந்தார்கள். கூளம் நிரப்பப்பட்ட தலையணையை அவர்கள் அமர்வதற்காக எடுத்துப் போட்டேன். அவர்கள் அதில் அமராமல் தரையில் அமர்ந்தார்கள். எனக்கும் அவர்களுக்குமிடையே தலையணை கிடந்தது.  மாதந்தோறும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பது உனக்குப் போதுமானதில்லையா?  என்று என்னிடம் கூறினார்கள்.  அல்லாஹ்வின் தூதரே! ஐந்து நாட்கள் நோன்பு வைக்கலாமா?  என்று கேட்டேன்.  ஐந்து நாட்கள் நோன்பு வைத்துக்கொள்  எனக் கூறினார்கள்.  அல்லாஹ்வின் தூதரே! ஏழு நாட்கள் நோன்பு வைத்துக் கொள்ளட்டுமா?  என்று நான் கேட்டேன்.  ஏழு நாட்கள் நோன்பு வைத்துக் கொள்  என்றார்கள். அல்லாஹ்வின் தூதரே!  ஒன்பது நாட்கள் நோன்பு வைத்துக் கொள்ளட்டுமா  என்று கேட்டேன்.  ஒன்பது நாட்கள் நோன்பு வைத்துக் கொள்  என்றார்கள்.  அல்லாஹ்வின் தூதரே! பதினோரு நாட்கள் நோன்பு வைக்கட்டுமா  என்று நான் கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்  ஒரு நாள் விட்டு ஒரு நாள் நோன்பு நோற்பதை விட சிறந்த நோன்பு ஏதுமில்லை  என்ற கூறினார்கள்.

நூல் : புகாரி 1980, 6277

இந்த நிகழ்ச்சியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பல்வேறு குணநலன்கள் பிரதிபலிக்கின்றன.

நபிகள் நாயகம் (ஸல்) காட்டிய ஆன்மீக நெறியில் வரம்புக்கு உட்பட்டே வணக்க வழிபாடுகள் நிகழ்த்த வேண்டும். கடவுளுக்குப் பணி செய்கிறேன் என்று நினைத்துக் கொண்டு மனைவி மக்களை, மனித குலத்தை மறந்து விடக்கூடாது.

அப்துல்லாஹ் பின் அம்ர் என்ற நபித்தோழர் எப்போது பார்த்தாலும் நோன்பு நோற்றுக் கொண்டிருக்கிறார். மனைவி மக்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை இதனால் சரியாகச் செய்யவில்லை. நபிகள் நாயகத்திடம் இவரைப் பற்றிய புகார் வந்ததும் அவர்கள் அவரை அழைத்து வரச் செய்திருக்கலாம். நபிகள் நாயகம் (ஸல்) அழைக்கிறார்கள் என்றால் அவர் ஓடோடி வந்திருப்பார். ஆனால், அவருக்கு அறிவுரை கூறுவதற்காக அவரைத் தேடி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் புறப்பட்டுச் சென்றுள்ளனர். தமது பதவியைப் பயன்படுத்தி அதிகாரம் செலுத்துவதை நபிகள் நாயகம் (ஸல்) விரும்பியதில்லை என்பதை இதிலிருந்து அறியலாம்.

நமது நாட்டின் அதிபதியாகிய நபிகள் நாயகம் நம்மைத் தேடி வந்து விட்டார்களே என்றெண்ணி அவர்கள் அமர்வதற்காக கூளம் நிரப்பப்பட்ட தலையணையை அப்துல்லாஹ் பின் அம்ர் எடுத்துப் போடுகிறார். கண்ணியமாகக் கருதப்படுபவர்கள் இவ்வாறு மரியாதை செய்யப்படுவது வழக்கமாகவும் இருந்தது. இன்றைக்கும் கூட நம்மை விட ஏதோ ஒரு வகையில் சிறப்புப் பெற்றவர்கள் நம்மைத் தேடி வந்தால் வெறும் தரையில் அவர்கள் அமர மாட்டார்கள்.

மாமன்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதன் மீது அமர்ந்தால் பதவிக்காக பெற்ற கவுரவமாகக் கூட அது கருதப்படாது. அவ்வாறு இருந்தும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதைத் தவிர்க்கிறார்கள்.

இருவர் அமரும் போது இருவரும் சமநிலையில் அமர வேண்டும் என்பதால் அந்தத் தலையணையில் அவர்கள் அமரவுமில்லை; அதன் மீது சாய்ந்து கொள்ளவுமில்லை; இருவருக்கும் நடுவில் அதை எடுத்துப் போடுகிறார்கள்.

தமக்காகச் சிறப்பான மரியாதை தரப்பட வேண்டும் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) விரும்பியதில்லை; அப்படியே தரப்பட்டாலும் அதை ஏற்பதில்லை என்பதையும் இந்நிகழ்ச்சியிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

மாதந்தோறும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பது போதுமே என்றதும் அவர் அதைக் கேட்டிருக்க வேண்டும். மன்னர்களின் கட்டளையை அப்படியே ஏற்பது தான் மனிதர்களின் இயல்பாகவுள்ளது. ஆனால் இவரோ ஐந்து நோன்பு, ஏழு நோன்பு, ஒன்பது நோன்பு, பதினொன்று நோன்பு என்று ஒவ்வொன்றாகக் கேட்கிறார். இவ்வாறு நம்மிடம் ஒருவர் கேட்டால் நமக்கு ஆத்திரம் வராமல் இருக்காது.  ஒரேயடியாகக் கேட்டுத் தொலைக்க வேண்டியது தானே  என்று கூறுவோம். அல்லது என்னப்பா கேலி செய்கிறாயா?  எனக் கேட்போம். இந்தத் தோழரின் நடவடிக்கைகள் இப்படித் தான் இருந்தன.

ஆனால், இந்த மாமனிதர் குழந்தைகளின் சேட்டையைச் சகித்துக் கொள்ளும் தந்தையைப் போல் பொறுமையாகப் பதில் கூறுகிறார்கள்.

நபிகள் நாயகத்தின் இந்தப் பண்பாடு அனைவருக்கும் தெரிந்த ஒன்றாக இருந்ததால் அவரும் இப்படி நடந்து கொள்ள முடிந்தது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஆடு ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அப்போது உணவுகள் குறைவாக இருந்த காலம். தமது குடும்பத்தாரிடம்  இந்த ஆட்டைச் சமையுங்கள்  என்று கூறினார்கள். நான்கு பேர் சுமக்கக் கூடிய பெரிய பாத்திரம் ஒன்று இருந்தது. அதில் அந்த உணவு வைக்கப்பட்டு கொண்டு வரப்பட்டது. உணவு கிடைக்காத தோழர்கள் எல்லாம் அழைக்கப்பட்டனர். உணவுத் தட்டைச் சுற்றி அனைவரும் அமர்ந்து சாப்பிடலானார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அவர்களுடன் அமர்ந்து கொண்டனர். கூட்டம் அதிகமாகச் சேர்ந்ததால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மண்டியிட்டு அமர்ந்து மற்றவர்களுக்கு இடம் கொடுத்தார்கள். அப்போது ஒரு கிராமவாசி  என்ன இப்படி உட்கார்ந்திருக்கிறீர்கள்?  என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்  அல்லாஹ் என்னை அடக்குமுறை செய்பவனாகவும், மமதை பிடித்தவனாகவும் ஆக்கவில்லை. பெருந்தன்மை மிக்க அடியானாகவே ஆக்கியுள்ளான்  என்று விடையளித்தார்கள்.

நூற்கள் : அபூதாவூத் 3773, பைஹகீ 14430

ஒரு உணவுத் தட்டைச் சுற்றி அனைவரும் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது உயர்ந்த நிலையில் உள்ளவர்கள் மற்றவர்களுடன் சேர்ந்து அமர்வதை மரியாதைக் குறைவாகவே கருதுவார்கள். பலரும் கைகளைப் போட்டுச் சாப்பிடும் தட்டில் சாப்பிடுவதை அருவருப்பாகக் கருதுபவர்களும் உள்ளனர்.

ஆனால், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மற்றவர்களுடன் சேர்ந்து மற்றவர்கள் கைகளைப் போட்டுச் சாப்பிடும் அதே தட்டில் தாமும் சாப்பிட்டார்கள். அது மட்டுமின்றி பொதுவாக சம்மணமிட்டு அமர்வது தான் சாப்பிடுவதற்கு வசதியானது. மண்டியிட்டு அமர்வது வசதிக் குறைவானது என்பதை அறிவோம்.

மேலும் அன்றைய சமூக அமைப்பில் மண்டியிட்டு அமர்வது தாழ்த்தப்பட்டவர்களுக்கு உரியதாகக் கருதப்பட்டு வந்ததால் தான் கிராமவாசி அதைக் குறை கூறுகிறார். தாம் ஒரு ஆட்சியாளர் என்றோ, மதத்தின் தலைவர் என்றோ, வீட்டின் உரிமையாளர் என்றோ நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நினைக்கவில்லை. மற்றவர்களைப் போல் பசித்திருக்கக் கூடிய ஒரு மனிதராக மட்டும் தான் தம்மைக் கருதினார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமக்கு வந்த உணவைத் தான் மற்றவர்களுக்கு வழங்கினார்கள். எனவே வீட்டில் தமக்கென எடுத்து வைத்துக் கொண்டு தனியாகச் சாப்பிட்டிருக்க முடியும்.

ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்த விதமான கவுரவமும் பார்க்கவில்லை. மண்டியிட்டு அமர்ந்து சாப்பிட்டது மட்டுமின்றி இன்னொருவர் அமரக்கூடிய இடத்தை ஆக்கிரமித்து வசதியாக அமர்வதைக் கூட அடக்குமுறையாக அவர்கள் கருதுகிறார்கள். பெருந்தன்மை மிக்க அடியானாக இருப்பது தான் தமக்கு விருப்பமானது எனவும் குறிப்பிடுகிறார்கள்.

இத்தகைய பண்பாளர் தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி தனி மரியாதை பெற்றார் எனக் கூற முடியுமா?

ஒரு மனிதர் முதன் முதலாக நபிகள் நாயகத்தைச் சந்திக்க வந்தார். பொதுவாக மன்னர்கள் முன்னிலையில் நடுநடுங்கிக் கொண்டு தான் மக்கள் நிற்பார்கள். நபிகள் நாயகத்தையும் அது போல் கருதிக்கொண்டு உடல் நடுங்கிட வந்தார்.  சாதாரணமாக இருப்பீராக! உலர்ந்த இறைச்சியைச் சாப்பிட்டு வந்த குரைஷி குலத்துப் பெண்ணுடைய மகன் தான் நான்  என்று அவரிடம் கூறி அவரை சகஜ நிலைக்குக் கொண்டு வந்தார்கள்.

நூல் : இப்னு மாஜா 3303

உலகம் முழுவதும் அவர்களை மாபெரும் அதிகாரம் படைத்தவராகப் பார்க்கிறது. அவர்களோ, தம்மை ஏழைத்தாயின் புதல்வன் என்றே நினைக்கிறார்கள். இந்தப் பதவி, அதிகாரத்தால் தமக்கு எந்த மதிப்பும் இல்லை என்பதையும் தெளிவுபடுத்துகிறார்கள்.

பதவியைப் பயன்படுத்தி சொத்து சுகம் சேர்க்காவிட்டாலும் இது போன்ற கவுரவத்தையாவது அவர்கள் பெற்றிருக்கலாம். அதைக் கூட விரும்பாத எளிமை அவர்களுடையது.

ஒரு முறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது தோழர்களுடன் நடந்து சென்றார்கள். அவர்களின் தலை மீது மட்டும் நிழல் படுவதைக் கண்டார்கள். தலையை உயர்த்திப் பார்த்த போது ஒரு துணிக் குடையால் அவர்களுக்கு நிழல் தரப்படுவதைக் கண்டார்கள். விடுங்கள் எனக் கூறி அந்தத் ???துணியை வாங்கி மடக்கி வைத்தார்கள். நானும் உங்களைப் போன்ற மனிதன் தான் எனவும் கூறினார்கள்.

நூல் : தப்ரானி

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எதையும் மறுத்தால் உறுதியாக மறுப்பார்கள். எனவே தான் குடையாகப் பயன்பட்ட துணியை வாங்கி மடித்து வைத்துக் கொள்கிறார்கள். மறுத்தது மட்டுமின்றி குடையைப் பிடுங்கி வைத்துக் கொண்டதிலிருந்து இந்த மறுப்பு உளப்பூர்வமானது என்பதை அறியலாம். அது மட்டுமின்றி  நானும் உங்களைப் போன்ற மனிதனே  என்று கூறி பதவி மற்றும் அதிகாரம் காரணமாக எந்த உயர்வும் இல்லை என்பதைப் பிரகடனம் செய்கிறார்கள்.

அவர்களின் எளிமைக்கு மற்றொரு சான்றைப் பாருங்கள்.

அறுக்கப்பட்ட ஆட்டின் தோலை ஒரு இளைஞர் உரித்துக் கொண்டிருந்தார். அவரைக் கடந்து சென்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்  ஒதுங்கிக் கொள்! உனக்கு எப்படி உரிப்பது என்று காட்டித் தருகிறேன்  என்றார்கள். தோலுக்கும், இறைச்சிக்குமிடையே தமது கையை அக்குள் வரை விட்டு உரித்தார்கள்.

நூற்கள் : அபூதாவூத் 157, இப்னுமாஜா 3170

ஒருவருக்கு ஆடு உரிக்கத் தெரியாவிட்டால் அவர்கள் கண்டு கொள்ளாமல் போய்க் கொண்டிருக்கலாம். அல்லது இப்படித் தான் உரிக்க வேண்டும் என்று வாயால் கூறலாம். போயான எந்தக் கவுரவமும் பார்க்காமல் தாமே ஆட்டுத் தோலை உரித்துக் காட்டிக் கற்றுக் கொடுத்தார்கள்.

அவர்களின் மொத்த வாழ்க்கையே எளிமைக்கு உதாரணமாகத் திகழ்ந்திருக்கிறது எனலாம்.

வீதியில் செல்லும் போது சிறுவர்களைக் கண்டால் அவர்கள் முந்திக் கொண்டு சிறுவர்களுக்கு சலாம் கூறுவார்கள்.

நூல் : புகாரி 6247

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிறுவர்களாகிய எங்களுடன் கலந்து பழகுவார்கள். எனது தம்பி அபூ உமைரிடம்  உனது குருவி என்ன ஆனது?  என்று விசாரிக்கும் அளவுக்கு சிறுவர்களுடன் பழகுவார்கள்.

நூல் : புகாரி 6129

நான் அபீஸீனியாவிலிருந்து வந்தேன். அப்போது நான் சிறுமியாக இருந்தேன். வேலைப்பாடுகள் செய்யப்பட்ட ஆடையை அவர்கள் எனக்கு அணிவித்தார்கள். அந்த வேலைப்பாடுகளைத் தொட்டுப் பார்த்து  அருமை அருமை  என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : உம்மு காலித் (ரலி),

நூல் : புகாரி 3874

நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் முதல் தொழுகையைத் தொழுதேன். பின்னர் அவர்கள் தமது குடும்பத்தாரிடம் சென்றார்கள். அவர்களுடன் நானும் சென்றேன். அப்போது எதிரில் சிறுவர்கள் சிலர் வந்து கொண்டிருந்தனர். அவர்கள் ஒவ்வொருவரின் கன்னத்தையும் தடவிக் கொடுத்துக் கொண்டே சென்றனர்.

அறிவிப்பவர் : ஜாபிர் பின் ஸமூரா (ரலி)

நூல் : முஸ்லிம் 4297

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிகச் சிறந்த நற்குணம் கொண்டவர்களாக இருந்தனர். ஒரு நாள் என்னை ஒரு வேலைக்கு அனுப்பினார்கள். நபிகள் நாயகம் கூறிய வேலையைச் செய்ய வேண்டும் என்று மனதுக்குள் எண்ணிக் கொண்டு  அல்லாஹ்வின் மீது ஆணையாக போக மாட்டேன் எனக் கூறினேன். நான் புறப்பட்டு கடை வீதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களுக்கருகில் வந்தேன். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என் பின்புறமாக எனது பிடரியைப் பிடித்தனர். அவர்களை நான் நோக்கிய போது அவர்கள் சிரித்தனர்.  அனஸ்! நான் கூறிய வேலையைச் செய்தாயா? எனக் கேட்டார்கள்.  அல்லாஹ்வின் தூதரே! இதோ செய்கிறேன் என்று கூறினேன்.  அல்லாஹ்வின் மீது ஆணையாக ஒன்பது வருடங்கள் அவர்களுக்கு நான் பணிவிடை செய்துள்ளேன். நான் செய்த ஒரு காரியம் குறித்து ஏன் இப்படிச் செய்தாய்?  என்றோ, நான் செய்யாத ஒரு காரியம் குறித்து இப்படிச் செய்திருக்க மாட்டாயா?  என்றோ அவர்கள் கடிந்து கொண்டதில்லை  என அனஸ் (ரலி) அறிவிக்கிறார்.

நூல் : முஸ்லிம் 4272

சிறுவர்கள் மீது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அன்பு செலுத்திய நிகழ்ச்சிகள் ஏராளம் உள்ளன. இத்தகைய பண்பாளர் தமது பதவியைப் பயன்படுத்தி மரியாதையையும், புகழையும் எதிர்பார்த்திருக்க முடியுமா?

வீட்டில் தமது செருப்பைத் தாமே தைப்பார்கள். தமது ஆடையின் கிழி சலையும் தாமே தைப்பார்கள். வீட்டு வேலைகளையும் செய்வார்கள்.

நூல் : அஹ்மத் 23756, 24176, 25039

தரையில் (எதுவும் விரிக்காமல்) அமர்வார்கள். தரையில் அமர்ந்து சாப்பிடுவார்கள். ஆட்டில் தாமே பால் கறப்பார்கள். அடிமைகள் அளிக்கும் விருந்தையும் ஏற்பார்கள்.

நூல் : தப்ரானி (கபீர்) 12494

மதீனாவுக்கு வெளியே உள்ள சிற்றூர் வாசிகள் இரவு நேரத்தில் தோல் நீக்கப்படாத கோதுமை ரொட்டியைச் சாப்பிட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அழைப்பார்கள். பாதி இரவு கடந்து விட்டாலும் அந்த விருந்தையும் நபிகள் நாயகம் (ஸல்) ஏற்றுக் கொள்வார்கள்.

நூல் : தப்ரானி (ஸகீர்) 41

அகழ் யுத்தத்தின் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் மக்களுடன் சேர்ந்து அகழ் வெட்டினார்கள். மண் சுமந்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வயிற்றை மண் மறைத்தது.

நூல் : புகாரி 2837, 3034, 4104, 4106, 6620, 7236

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனா வந்தவுடன் பள்ளிவாசலைக் கட்டிய போது அவர்களும் மக்களோடு சேர்ந்து கல் சுமந்தார்கள்.

நூல் : புகாரி 3906

இப்படி எல்லா வகையிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சாதாரண மனிதராகத் தான் வாழ்ந்தார்கள். ஒரு தடவை கூடத் தமது பதவியைக் காரணம் காட்டி எந்த உயர்வையும் அவர்கள் பெற்றதில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது பத்தாண்டு கால ஆட்சியில் தமது பதவிக்காக எந்த மரியாதையையும், புகழையும் மக்களிடம் எதிர்பார்க்கவில்லை. இப்பதவியை அடைவதற்கு முன்னர் அவர்களின் நிலை எதுவோ அதுவே அவர்கள் மிகப் பெரிய பதவியைப் பெற்ற பிறகும் அவர்களின் நிலையாக இருந்தது.

மிகவும் உயர்ந்த நிலையை அடைந்து விட்ட நேரத்தில் மக்களிடம்  மக்கா வாசிகளின் ஆடுகளை அற்பமான கூலிக்காக மேய்த்தவன் தான் நான்  என்பதை அடிக்கடி அவர்கள் நினைவு கூர்ந்துள்ளனர்.

நூல் : புகாரி 2262, 3406, 5453

நான் அதிகாலையில் (என் தம்பி) அப்துல்லாஹ்வை நபிகள் நாயகத்திடம் தூக்கிச் சென்றேன். அவர்கள் ஸகாத் (பொதுநிதி) ஒட்டகங்களுக்குத் தமது கையால் அடையாளமிட்டுக் கொண்டிருக்கக் கண்டேன்.

அறிவிப்பவர் : அனஸ் பின் மாக் (ரலி)

நூல் : புகாரி 1502, 5542

பொது நிதிக்குச் செலுத்தப்பட்ட ஒட்டகங்கள் மற்றவர்களின் ஒட்டகங் களுடன் கலந்து விடாமல் இருப்பதற்காக அவற்றுக்குத் தனி அடையாள மிடும் வழக்கத்தை நபிகள் நாயகம் (ஸல்) மேற்கொண்டிருந்தார்கள். இந்தப் பணியைத் தமது கைகளால் தாமே செய்துள்ளது அவர்களின் எளிமைக்கு மற்றொரு சான்றாக அமைந்துள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடுகளவு கூட பெருமையையும், புகழையும் விரும்பியதில்லை என்பதற்கு மற்றொரு நிகழ்ச்சியைக் காணுங்கள்!

ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) கூறுகிறார்:

நபிகள் நாயகத்துடன் நான் ஒரு போரில் பங்கெடுத்துக் கொண்டேன். என் ஒட்டகம் சண்டித்தனம் செய்து என்னைப் பின்தங்க வைத்தது. (முன்னே சென்று கொண்டிருந்த நபிகள் நாயகம்) என்னிடம் வந்து ஜாபிரா?  என்றனர். நான் ஆம் என்றேன்.  என்ன பிரச்சினை  என்று கேட்டார்கள்.  என் ஒட்டகம் சண்டித்தனம் செய்து என்னை பின்தங்கச் செய்து விட்டது  என்று கூறினேன். உடனே அவர்கள் தமது ஒட்டகத்திலிருந்து இறங்கி தமது குச்சியால் குத்தினார்கள்.  இப்போது ஏறிக் கொள்  என்றார்கள். நான் ஏறிக் கொண்டேன். அது விரைவாகச் சென்றதால் நபிகள் நாயகத்தை முந்தக் கூடாது என்பதற்காக அதைத் தடுத்து நிறுத்தலானேன்.  திருமணம் செய்து விட்டாயா?  என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன்.  கன்னிப் பெண்ணா? விதவைப் பெண்ணா?  எனக் கேட்டார்கள். விதவையைத் தான் என்று நான் கூறினேன்.  (நீர் இளைஞராக இருப்பதால்) கன்னிப் பெண்ணை மணந்திருக்கலாமே! இதனால் இருவரும் மகிழ்ச்சியாக இருப்பீர்களே  என்றனர்.  எனக்குச் சகோதரிகள் உள்ளனர். அவர்களைப் பராமரிக்கக் கூடிய ஒரு பெண் வேண்டும் என்பதற்காக விதவையை மணந்து கொண்டேன்  என்று நான் கூறினேன்.  இதோ ஊருக்குள் நுழையப் போகிறாய். இனி மகிழ்ச்சி தான்  என்று கூறி விட்டு,  உனது ஒட்டகத்தை என்னிடம் விற்கிறாயா?  என்று கேட்டார்கள். நான் சரி என்றேன். நான்கு தங்கக் காசுகளுக்கு அதை வாங்கிக் கொண்டனர். பின்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எனக்கு முன் சென்று விட்டனர். நான் காலையில் போய்ச் சேர்ந்தேன். பள்ளிவாசலுக்கு வந்த போது பள்ளிவாசலின் வாயிலில் நபிகள் நாயகம் நின்றனர். இப்போது தான் வருகிறாயா?  என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன்.  உனது ஒட்டகத்தை விட்டு விட்டு உள்ளே போய் இரண்டு ரக்அத்கள் தொழு  என்றார்கள். நான் உள்ளே போய் தொழுதேன். எனக்குத் தர வேண்டியதை எடை போட்டுத் தருமாறு பிலாலிடம் கூறினார்கள். பிலால் அதிகமாக எடை போட்டுத் தந்தார். அதைப் பெற்றுக் கொண்டு நான் புறப்படலானேன்.  ஜாபிரைக் கூப்பிடுங்கள்  என்று நபிகள் நாயகம் கூறினார்கள். ஒட்டகத்தைத் திருப்பித் தருவதற்குத் தான் அழைக்கிறார்கள் என்று நினைத்தேன். அது எனக்குக் கவலையாக இருந்தது.  உமது ஒட்டகத்தையும் எடுத்துக் கொள்வீராக! அதற்காக நாம் அளித்த கிரயத்தையும் வைத்துக் கொள்வீராக  என்றனர்.

புகாரி: 2097, 2309, 2861, 2967, 5245, 5247, 5667

ஜாபிர் என்பவர் முக்கியமான பிரமுகர் அல்ல. ஒரு இளைஞர். அவரது ஒட்டகம் சண்டித்தனம் செய்து உட்கார்ந்து விட்டதைக் கவனித்த நபிகள் நாயகம் (ஸல்) யாரையாவது அனுப்பி அவருக்கு உதவுமாறு கூறியிருக்கலாம். அவ்வாறு செய்யாமல் அவரை நோக்கி தாமே வருகிறார்கள்.

வந்தவுடன் ஜாபிரா? என்று கேட்கிறார்கள். சாதாரணமானவரையும் பெயர் சொல்லிக் கூப்பிடும் அளவுக்கும், பெயரைத் தெரிந்து வைத்திருக்கும் அளவுக்கும் அவர்கள் மக்களுடன் நெருங்கிப் பழகி வந்தார்கள் என்பது தெரிகிறது.

தமது ஒட்டகத்திலிருந்து இறங்கி அவரது ஒட்டகத்தை எழுப்பி விடுகிறார்கள். எழுப்பி விட்டது மட்டுமின்றி அவருடைய பொருளாதார நிலை, குடும்ப நிலவரம் ஆகிய அனைத்தையும் சாவகாசமாக விசாரிக்கிறார்கள்.

அவரது ஒட்டகம் எதற்கும் உதவாத ஒட்டகம் என்பதை அறிந்து கொண்டு அவர் வேறு தரமான ஒட்டகத்தை வாங்குவதற்காக அதை விலைக்குக் கேட்கிறார்கள்.

அவர் மற்றவர்களுடன் சேரும் வரை கூடவே வந்து விட்டு அதன் பின்னர் வேகமாக அவர்கள் புறப்படுகிறார்கள்.

ஊர் சென்றதும் தாம் கொடுத்த வாக்குப் படி ஒட்டகத்திற்குரிய விலையைக் கொடுப்பதற்காக இவரை எதிர் பார்த்துக் காத்திருக் கிறார்கள். தாம் சொன்ன படி அதற்கான விலையையும் கொடுத்து விட்டு அந்த ஒட்டகத்தையும் அவரிடம் கொடுத்து விடுகிறார்கள்.

இது அவர்களின் வள்ளல் தன்மைக்கும், அவர்கள் ஆட்சி எவ்வளவு செழிப்பாக இருந்தது என்பதற்கும், தேவையறிந்து தாமாகவே உதவி செய்யும் அளவுக்கு அவர்கள் மக்கள் நலனில் அக்கரை செலுத்தினார்கள் என்பதற்கும் சான்றாக உள்ளது.

இவ்வளவு எளிமையாகவும், மிகச் சாதாரண மனிதரைப் போன்றும் நடந்து கொண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது ஆட்சி, அதிகாரத்தைப் பயன்படுத்தி புகழ் சம்பாதித்திருப்பார்களா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சாய்ந்து கொண்டு சாப்பிட்டதையோ, அவர்களுக்குப் பின்னால் இரண்டு பேர் அடியொற்றி நடப்பதையோ எவரும் பார்த்ததில்லை என்று அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) கூறுகிறார்.

நூற்கள்: அபூதாவூத் 3278, இப்னுமாஜா 240 அஹ்மத் 6262

மிகவும் சாதாரண பொறுப்பில் உள்ளவர்கள் கூட தனியாக எங்கும் செல்வதைப் பார்க்க முடிவதில்லை. குறைந்த பட்சம் முன்னால் இருவர், பின்னால் இருவர் இல்லாமல் இவர்கள் வெளியே கிளம்ப மாட்டார்கள். ஆனால், நபிகள் நாயகத்தை அடியொற்றி இரண்டு பேர் சென்றதே கிடையாது.

பலருடன் செல்ல வேண்டிய வேலை இருந்தால் அவர்களும் சேர்ந்து சென்றிருக்கிறார்கள். நபிகள் நாயகத்தின் பாதுகாப்புக்கோ, பகட்டுக்கோ குறைந்தது இருவர் கூட சென்றதில்லை என்பது நபிகள் நாயகத்தின் தன்னடக்கத்திற்கும், துணிச்சலுக்கும் சான்றாக உள்ளது

நீங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அவையில் அமர்ந்ததுண்டா?  என்று ஜாபிர் பின் ஸமுரா (ரலி) இடம் கேட்டேன். அதற்கவர்  ஆம்  என்றார். மேலும் தொடர்ந்து வைகறைத் தொழுகை முடிந்ததும் சூரியன் உதிக்கும் வரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுத இடத்திலேயே அமர்ந்திருப்பார்கள். சூரியன் உதித்த பின்னர் எழுவது தான் அவர்களின் வழக்கம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு அமர்ந்திருக்கும் போது நபித்தோழர்களும் அமர்ந்திருப்பார்கள். அப்போது அறியாமைக் காலத்தின் (இஸ்லாத்தை ஏற்காத காலத்தின்) தமது நடவடிக்கைகள் குறித்து நபித்தோழர்கள் பேசுவார்கள். அதை நினைத்துச் சிரிப்பார்கள். இதைப் பார்க்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் புன்னகைப்பார்கள்.

நூல் : முஸ்லிம் 1074, 4286

இந்த நிகழ்ச்சியைக் கவனியுங்கள்! மாபெரும் வல்லரசின் அதிபரும், ஆன்மீகத் தலைவருமான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அவையில் அன்றாடம் நடக்கும் நிகழ்ச்சி இங்கே கூறப்படுகிறது.

தொழுகையை முடித்ததும் மக்கள் தமது அறியாமைக் காலத்தில் செய்த கிறுக்குத்தனங்களையும், மூடச் செயல்களையும் ஒருவருக் கொருவர் பேசிச் சிரிப்பார்கள்! நபிகள் நாயகம் (ஸல்) அமர்ந்தி ருக்கிறார்களே என்பதற்காக மௌனமாக இருக்க மாட்டார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்களுக்கு ஏதேனும் கூறும் போது மிகவும் கவனமாகச் செவிமடுக்கும் அவர்களின் தோழர்கள் சாதாரணமாக நபிகள் நாயகம் (ஸல்) அமர்ந்திருக்கும் போது இயல்பாகவே நடந்து கொள்வார்கள்.

நபிகள் நாயகத்துக்கு மரியாதை தரக் கூடாது என்பதற்காக அவர்கள் இவ்வாறு நடக்கவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) கட்டளையிட்டால் உயிரையும் கொடுக்க அவர்கள் தயாராக இருந்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமக்கு முன்னால் சாதாரணமாக அமர்ந்தால் போதுமானது என்று பயிற்றுவித்ததன் அடிப்படையிலேயே அவர்கள் இவ்வாறு நடந்து கொண்டனர்.

மழலைகளுக்குப் பாடம் நடத்தும் ஆசிரியர் கூட பாடம் நடத்தாத நேரங்களில் தமக்கு முன்னால் மாணவர்கள் இவ்வாறு நடந்து கொள்வதை ஏற்க மாட்டார். தனக்குக் கீழே உள்ளவர் தன் முன்னே இவ்வாறு நடப்பதை உயர் அதிகாரி விரும்ப மாட்டார். எந்த ஒரு ஆன்மீகத் தலைவரின் முன்னிலையிலும் அவரது சீடர்கள் இவ்வாறு நடந்து கொள்ள மாட்டார்கள். நடக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

இந்த மாமனிதரின் உள்ளம் எந்த அளவுக்குப் பக்குவப்பட்டிருந்தால் அவரால் இவ்வாறு நடந்து கொள்ள முடியும்!

நம்மை விடச் சிறியவர்கள், நமக்குக் கீழே இருப்பவர்கள் நம் முன்னே இப்படி நடந்து கொள்ள நாம் அனுமதிக்க மாட்டோம். அப்படியே நடந்து கொண்டால் நமது மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள பக்குவமாக நாம் அந்த இடத்திலிருந்து நழுவி விடுவோம்.

சராசரி மனிதர்களாகிய நமக்கே இது மரியாதையைப் பாதிக்கும் செயலாகத் தெரிகிறது. இந்த மாமனிதரோ சிரித்துப் பேசிக் கொண்டிருக்கும் சகாக்களை விட்டு நழுவாமல் அங்கேயே இருக்கிறார்கள். அது மட்டுமின்றி மழலைகள் செய்யும் சேட்டைகளைக் கண்டு மகிழும் பெற்றோரைப் போல் தாமும் அந்த மக்களுடன் சேர்ந்து புன்னகை சிந்துகிறார்கள்.

ஒரு நாள், இரு நாட்கள் அல்ல. இது அன்றாடம் நடக்கும் நிகழ்ச்சியாக இருந்துள்ளது.

ஆன்மீகத் தலைவராகவும், மாபெரும் சாம்ராஜ்ஜியத்தின் அதிபராகவும் இருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த உயர் பண்பின் காரணமாகவே மாமனிதர் எனக் குறிப்பிடப்படுகிறார்கள்.

நாகரீகம் வளர்ந்து விட்ட இந்தக் காலத்தில் கூட ஆன்மீகத் தலைவரோ, அரசியல் தலைவரோ, பெரிய தலைவரோ, சிறிய தலைவரோ இவ்வளவு சகஜமாக சாதாரண மக்களுடன் நடப்பதில்லை என்பதைக் கவனிக்கும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அப்பழுக்கற்ற நம்பகத் தன்மை நம்மைப் பிரமிப்பில் ஆழ்த்துகிறது.

மற்றொரு நிகழ்ச்சியைப் பாருங்கள்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நடந்து செல்லும் வழியில் சிலர் அம்பெய்யும் போட்டி நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்  இஸ்மாயீலின் வழித் தோன்றல்களே! அம்பெய்யுங்கள்! உங்கள் தந்தை இஸ்மாயீல் அம்பெய்பவராக இருந்தார். நான் இந்த அணியில் சேர்ந்து கொள்கிறேன்  என்று கூறினார்கள். மற்றொரு அணியினர் அம்பெய்வதை உடனே நிறுத்திக் கொண்டனர். ஏன் நிறுத்தி விட்டீர்கள்? என்று அவர்களிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டனர்.  நீங்கள் அந்த அணியில் இருக்கும் போது உங்களுக்கு எதிராக நாங்கள் எப்படி அம்பெய்வோம்?  என்று அவர்கள் கூறினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்  நான் உங்கள் அனைவருக்கும் பொதுவாக இருக்கிறேன். எனவே நீங்கள் அம்பெய்யுங்கள்  என்றார்கள்.

நூல் : புகாரி 2899, 3507, 3373

இரண்டு அணிகள் அம்பெய்து விளையாட்டில் ஈடுபடும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டு கொள்ளாமல் ஒதுங்கிக் கொண்டிருக்கலாம். அவ்வாறு ஒதுங்காமல் அவர்களை ஊக்குவிக்கிறார்கள். தாமும் ஒரு அணியில் சேர்ந்து சாதாரண மனிதர் நிலைக்கு இறங்கி வருகிறார்கள். எதிரணியினரின் மனம் ஒப்பாததன் காரணமாகவே அதிலிருந்து விலகிக் கொள்கின்றனர்.

மற்றொரு நிகழ்ச்சியைப் பாருங்கள்.

மிக்தாத் (ரலி) என்னும் நபித்தோழர் அறிவிக்கிறார்கள்.

நானும், எனது இரு நண்பர்களும் பசியின் காரணமாக செவிகள் அடைத்து, பார்வைகள் மங்கிய நிலையில் (மதீனா) வந்தோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தோழர்களிடம் எங்களின் நிலையை எடுத்துச் சொன்னோம். எங்களை ஏற்று தங்க வைத்து உணவளிக்க யாரும் முன் வரவில்லை. பின்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நாங்கள் சென்றோம். அவர்கள் எங்களைத் தமது வீட்டுக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கிருந்த மூன்று ஆடுகளைக் காட்டி  இந்த ஆடுகளில் பால் கறந்து நம்மிடையே பங்கு வைத்துக் கொள்வோம்  என்று கூறினார்கள். எனவே நாங்கள் பால் கறந்து எங்களில் ஒவ்வொருவரும் தமது பங்கை அருந்தி விட்டு நபிகள் நாயகத்தின் பங்கை எடுத்து வைத்து விடுவோம்.

அவர்கள் இரவில் வந்து உறங்குபவரை எழுப்பாத வகையிலும், விழித்திருப்பவருக்குக் கேட்கும் வகையிலும் ஸலாம் கூறுவார்கள். பின்னர் பள்ளிவாசலுக்குச் சென்று தொழுது விட்டு தமது பங்கை அருந்துவார்கள்.

ஒரு நாள் என்னிடம் ஷைத்தான் வந்து விட்டான். நான் என் பங்கை அருந்தினேன்.  முஹம்மது அவர்கள் அன்ஸார்களிடம் செல்கிறார்கள்; அன்ஸார்கள் நபிகள் நாயகத்தைக் கவனிப்பார்கள்; எனவே இந்த மிடறுகள் அவர்களுக்குத் தேவைப்படாது  என்று எனக்குள் கூறிக் கொண்டு நபிகள் நாயகத்திற்குரிய பங்கையும் அருந்தி விட்டேன்.

அது வயிற்றுக்குள் சென்றதும் தப்பிக்க எந்த வழியும் இல்லை என்பதை விளங்கிக் கொண்டேன்.

நீ என்ன காரியம் செய்து விட்டாய்! முஹம்மது அவர்களின் பங்கை யும் அருந்தி விட்டாயே! அவர்கள் வந்து பார்க்கும் போது தமது பாலைக் காணாவிட்டால் உனக்கு எதிராகப் பிரார்த்தனை செய்து விடுவார்களே! அவ்வாறு பிரார்த்தனை செய்து விட்டால் நீ அழிந்து விடுவாயே! உனது இவ்வுலக வாழ்வும், மறுமை வாழ்வும் நாசமாகி விடுமே  என்று ஷைத்தான் எனக்குள் பலவாறாக எண்ணங்களை ஏற்படுத்தினான்.

என்னிடம் ஒரு போர்வை இருந்தது. அதனால் காலைப் போர்த்தினால் தலை தெரியும். தலையைப் போர்த்தினால் கால் தெரியும். எனக்குத் தூக்கமும் வரவில்லை. எனது இரு நண்பர்களும் நான் செய்த காரியத்தைச் செய்யாததால் தூங்கி விட்டார்கள்.

அப்போது நபிகள் நாயகம் (ஸல்) வந்தார்கள். வழக்கம் போல் ஸலாம் கூறினார்கள். பள்ளிவாசலுக்குச் சென்று தொழுதார்கள். பின்னர் தமது பானத்தை நோக்கி வந்தார்கள். அதைத் திறந்து பார்த்ததும் அதில் எதையும் காணவில்லை. உடனே தமது தலையை வானத்தை நோக்கி உயர்த்தினார்கள்  இப்போது பிரார்த்தனை செய்யப் போகிறார்கள். நான் அழியப் போகிறேன் என்று நினைத்தேன். அவர்கள்  இறைவா! எனக்கு உணவளித்தவருக்கு நீ உணவளிப்பாயாக! எனக்குப் பருகத் தந்தவருக்கு நீ பருகச் செய்வாயாக!  என்று வழக்கம் போல் பிரார்த்தனை செய்தார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பசியோடு இருப்பதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் போர்வையை இடுப்பில் கட்டிக் கொண்டு, கத்தியை எடுத்துக் கொண்டு ஆடுகளை நோக்கிச் சென்றேன். அந்த ஆடுகளில் நன்கு கொழுத்ததை அறுத்து நபிகள் நாயகத்திற்கு அளிக்க வேண்டும் என்று நினைத்தேன்.

ஆனால் அந்த ஆடு மடியில் பால் சுரந்து நின்றது. மற்ற ஆடுகளும் மடியில் பால் சுரந்து நின்றன. உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் குடும்பத்தினரின் பாத்திரத்தை எடுத்துக் கொண்டு நுரை பொங்கும் அளவுக்கு பால் கறந்தேன். அதை நபிகள் நாயகத்திடம் கொண்டு சென்றேன்.  உங்கள் பங்கை நீங்கள் பருகி விட்டீர்களா?  என்று அவர்கள் கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் பருகுங்கள்  என்றேன். அவர்கள் அருந்திவிட்டு மீதியைத் தந்தார்கள்.

அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் பருகுங்கள்  என்று மீண்டும் கூறினேன். மீண்டும் அருந்திவிட்டு என்னிடம் தந்தார்கள். அவர்களின் பசி அடங்கியது என்பதை அறிந்து கொண்டதும், அவர்களின் பிரார்த்தனைக்குரியவனாக நான் ஆகிவிட்டதை உணர்ந்த போது, நான் விழுந்து விழுந்து சிரித்தேன். நான் கீழே விழுந்து விடுவேனோ என்ற அளவுக்குச் சிரித்தேன்.  மிக்தாதே! ஆடையைச் சரிப்படுத்துவீராக  என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதரே! இப்படி இப்படி நடந்து விட்டேன்  என்று அவர்களிடம் விளக்கினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்,  இது அல்லாஹ்வின் அருள் தவிர வேறில்லை. இதை முன்பே என்னிடம் தெரிவித்திருக்கக் கூடாதா? நமது நண்பர்கள் இருவரையும் எழுப்பி அவர்களுக்கும் பருகக் கொடுத்திருக்கலாமே  என்றார்கள்.

நூல் : முஸ்லிம் 3831

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மாபெரும் சாம்ராஜ்யத்தின் அதிபராக இருக்கும் நிலையிலும் ஆட்டில் கறக்கும் பாலே அவர்களின் உணவாக இருந்ததுள்ளது அவர்களின் தூய வாழ்க்கைக்குச் சான்றாகவுள்ளது.

தம்மிடம் வசதி இல்லாத நிலையிலும் மூன்று நபர்களைப் பல நாட்கள் தமது பொறுப்பில் சுமந்து கொண்டது அவர்களின் வள்ளல் தன்மைக்குச் சான்றாகவுள்ளது.

தமது ஆடுகளில் கறந்த பான் ஒரு பகுதியைத் தமக்குத் தராமல் அருந்தியவர்கள் மீது அவர்களுக்குக் கோபமே வரவில்லை என்பது இந்த மாமனிதரின் மகத்தான நற்பண்புகளைக் காட்டுகிறது.

எனக்கு உணவளித்தவர்களுக்கு நீ உணவளிப்பாயாக  என்று இறைவனிடம் பிரார்த்தனை செய்தது தான் அவர்களின் அதிகபட்ச கண்டனமாக இருந்தது. நபிகள் நாயகத்திற்கு உணவளித்தால் இறைவன் நமக்கு உணவளிப்பான் என்று ஆர்வமூட்டினார்களே தவிர யார் தனது பங்கை அருந்தியவர் என்று கூட விசாரிக்கவில்லை.

தம்மைப் பட்டினி போட்டவர்களை இவ்வளவு மென்மையாக நல்வழிப்படுத்தியது அவர்களின் மகத்தான நற்குணத்திற்கு மற்றொரு சான்றாகவுள்ளது.

தமக்கு உணவளித்தவருக்காக நபிகள் நாயகம் (ஸல்) பிரார்த்தனை செய்து விட்டார்கள். எனவே, எப்படியாவது அவர்களுக்கு உணவ ளித்து அவர்களின் பிரார்த்தனையைப் பெற வேண்டும் என்று மிக்தாத் (ரலி) எண்ணி நபிகள் நாயகத்திற்குச் சொந்தமான ஆட்டை அறுக்கத் துணிகிறார். எவ்வளவு இடையூறு செய்தாலும், இழப்பை ஏற்படுத்தி னாலும் நபிகள் நாயகத்திற்குக் கோபமே வராது என்று மற்றவர்கள் நினைக்குமளவுக்கு அவர்களின் பண்பாடு அமைந்துள்ளது.

இரவில் பால் கறந்து விட்டதால் ஆட்டில் மீண்டும் கறக்க முடியாது என்று எண்ணியே அவர் ஆட்டை அறுக்கத் துணிகிறார். ஆனால் அல்லாஹ்வின் அருளால் மூன்று ஆடுகளின் மடிகளிலும் பால் சுரந்திருப்பதைக் கண்டு அவர் தனது எண்ணத்தை மாற்றிக் கொள்கிறார். செய்த தவறையும் செய்து விட்டு அவர்கள் முன்னிலை யில் விழுந்து விழுந்து இந்த நபித் தோழரால் சிரிக்க முடிகிறது. அப்போது கூட இந்த மாமனிதருக்குக் கோபம் வரவில்லை. அவர் சிரிக்கும் போது ஆடை விலகுவதை மட்டுமே சுட்டிக் காட்டுகிறார்கள்.

வழக்கத்துக்கு மாறாக அல்லாஹ்வின் அருளால் மீண்டும் ஒரு முறை பால் கறக்கப்பட்டு தமக்குத் தரப்படுகிறது என்பதை அறிந்தவுடன் மற்ற இரு நண்பர்களையும் எழுப்பியிருக்கக் கூடாதா? என்று அக்கறையுடன் விசாரித்தது அவர்களின் நற்பண்புக்கு மற்றொரு எடுத்துக்காட்டு.

ஆட்சித் தலைவராகவும், ஆன்மீகத் தலைவராகவும் இருந்து கொண்டு நபிகள் நாயகம் (ஸல்) நடந்து கொண்டது போல் நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களால் கூட நடக்க முடியுமா? என்று கற்பனை செய்து பார்த்தால் தான் இந்த மாமனிதரின் மகத்துவம் நமக்கு விளங்கும்.

யார் என்று தெரியாதவர்களைப் பல நாட்கள் தங்க வைத்து கவனிக்க மாட்டோம். நமது உணவையும் சாப்பிட்டு விட்டு நம்மைப் பட்டினி போட்டால் சும்மா இருக்க மாட்டோம். செய்வதையும் செய்து விட்டு நம் முன்னே சிரித்தால் அதையும் பார்த்துக் கொண்டு இருக்க மாட்டோம். நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களிடமே காணப்பட முடியாத இந்தப் பண்பாடு மாபெரும் சாம்ராஜ்யத்தின் அதிபராகிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் காணப்படுவதால் தான் உலகம் அவர்களை மாமனிதர் எனப் போற்றுகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நம்மோடு இன்னும் எவ்வளவு காலம் இருப்பார்கள் என்பதை நாம் அறிய மாட்டோம். எனவே அவர்கள் நம்மால் சிரமப்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று அப்பாஸ் (ரலி) மக்களிடம் கூறினார். பின்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து  அல்லாஹ்வின் தூதரே! உங்களுக்கு நிழல் தரும் கூடாரத்தைத் தனியாக நாங்கள் அமைத்துத் தருகிறோமே  என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்  மக்கள் என் மேலாடையைப் பிடித்து இழுத்த நிலையிலும், எனது பின்னங்காலை மிதித்த நிலையிலும் அவர்களுடன் கலந்து வாழவே நான் விரும்புகிறேன். அவர்களிடமிருந்து அல்லாஹ் என்னைப் பிரிக்கும் வரை (மரணிக்கும் வரை) இப்படித் தான் இருப்பேன் எனக் கூறினார்கள்.

நூல் : பஸ்ஸார் 1293

மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்களுடன் கலந்து மக்களில் ஒருவராக இருப்பதை தாமாக வேண்டி விரும்பியே தேர்வு செய்து கொண்டார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்களுக்கு அதிகச் சுதந்திரம் கொடுத்ததால் மக்களால் அவர்களுக்குப் பலவிதக் கஷ்டங்கள் ஏற்பட்டன என்பதை முன்னர் நாம் விளக்கியுள்ளோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனியாகத் தங்கும் வகையில் ஒரு இடத்தை ஏற்பாடு செய்தால் மக்கள் சகஜமாக அவர்களை நெருங்க முடியாது. இதனால் அவர்களின் சிரமம் குறையும் என அவர்கள் மீது அக்கரை கொண்ட சில நபித்தோழர்கள் நினைக்கிறார்கள்.

ஆனால், நபிகள் நாயகமோ வேண்டி விரும்பியே இதைத் தேர்வு செய்திருப்பதாகக் கூறி விடுகிறார்கள். பதவியோ, அதிகாரமோ அவர்களை எள்ளளவும் பாதித்து விடவில்லை என்பதற்கு இதுவே சிறந்த சான்றாக உள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்த அளவுக்கு மக்களோடு மக்களாகப் பழகினார்கள் என்றால் குறைந்த பட்சம் தினசரி ஐந்து தடவை யார் வேண்டுமானாலும் அவர்களைச் சந்தித்து விடலாம் என்ற அளவுக்கு மக்களோடு கலந்திருந்தார்கள்.

இஸ்லாத்தின் முக்கியமான கடமைகளில் ஐந்து நேரத் தொழுகை முதன்மையானது என்பதை அனைவரும் அறிவர். அந்தத் தொழுகையைப் பள்ளிவாசலில் கூட்டாக நிறைவேற்றுமாறு இஸ்லாத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்தக் கூட்டுத் தொழுகையை நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் அவர்கள் தாம் தலைமையேற்று நடத்தி வந்தார்கள். தினமும் பள்ளிவாசலுக்கு ஐந்து தடவை வருவார்கள். தினமும் ஐந்து தடவை மக்களைச் சந்திப்பார்கள். நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் கடைசிக் கட்டத்தில் இஸ்லாத்தை ஏற்றவர் கூட அவர்களை நூறு தடவைக்குக் குறையாமல் பார்த்திருப்பார்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனா வந்து பத்து ஆண்டுகள் கூட்டுத் தொழுகை நடத்தினார்கள். பத்து ஆண்டுகளும் விடாமல் பள்ளிவாசலுக்கு வந்தவர்கள் நபிகள் நாயகத்தை 18 ஆயிரம் தடவை பார்த்திருக்க முடியும்.

வெளியூர்ப் பயணம் சென்ற காலத்தைக் கழித்தால் கூட பெரும்பாலானவர்கள் பதினைந்தாயிரம் தடவைக்கு மேல் நபிகள் நாயகத்தைப் பார்த்திருக்கிறார்கள்

உலக வரலாற்றில் இவ்வளவு அதிகமான சந்தர்ப்பங்களில் மக் களைச் சந்தித்த ஒரே தலைவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைத் தவிர வேறு எவரும் இருக்க முடியாது என்பதில் சந்தேகம் இல்லை.

மாபெரும் ஆன்மீகத் தலைவராக இருந்த நபிகள் நாயகம் (ஸல்) பார்வையில் சாமானியரும், பிரமுகரும் சமமாகவே தென்பட்டனர். அவர்களின் வரலாற்றில் இதற்கு ஆயிரக்கணக்கான சான்றுகளைக் காணலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பள்ளிவாசலைக் கூட்டிப் பெருக்கிச் சுத்தம் செய்யும் வேலையை ஒரு கறுப்பு நிற மனிதர் செய்து வந்தார். அவர் திடீரென இறந்து விட்டார். அவரை அற்பமாகக் கருதிய நபித் தோழர்கள் அவரது மரணத்தை நபிகள் நாயகத்திடம் தெரிவிக்காததால் அவர் இறந்ததை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறியவில்லை. ஒரு நாள் அவரைப் பற்றி நினைவு வந்து  அவர் எங்கே?  என விசாரித்தனர். அவர் இறந்து விட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.  அப் போதே எனக்கு இதைத் தெரிவித்திருக்க மாட்டீர்களா?  என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டனர். பின்னர்  அவரது அடக்கத் தலத்தை எனக்குக் காட்டுங்கள்  என்றனர். அவரது அடக்கத் தலத்தைக் காட்டி யதும் அங்கே சென்று அவருக்காகப் பிரார்த்தனை செய்தார்கள்.

நூல் : புகாரி 1337

இறந்தவர் பள்ளிவாசலைக் கூட்டிப் பெருக்குபவர் என்பதால், இவரைப் போன்ற மதிப்பற்றவர்களின் மரணத்தை ஏன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் தெரிவிக்க வேண்டும்?  என எண்ணி நபித் தோழர்கள் அவரை அடக்கம் செய்கின்றனர். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இதை ஏற்க முடியவில்லை.  எனக்கு ஏன் அப்போதே தெரிவிக்கவில்லை? எனக் கேட்கிறார்கள். அறிவித்திருந்தால் அவரை நல்லடக்கம் செய்யும் பணியில் நானும் ஈடுபட்டிருப்பேனே என்ற எண்ணத்தில் இவ்வாறு கேட்கிறார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒப்புக்காக இவ்வாறு கூறவில்லை. மாறாக அவரை நல்லடக்கம் செய்த இடம் எதுவென விசாரித்து அறிந்து அங்கே சென்று அவருக்காகப் பிரார்த்தனை செய்வதைக் காண்கிறோம். அவர்களைப் பொருத்த வரை பிரமுகர்களும், சாமானியர்களும் சமமாகத் தோன்றியதால் தான் இவ்வாறு அவர்களால் நடந்து கொள்ள முடிந்தது.

அனஸ் (ரலி) அவர்கள் நபிகள் நாயகத்தின் பணியாளராக இருந்தார். அவரது பாட்டி முளைக்கா (ரலி) தமது இல்லத்துக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை விருந்துக்கு அழைத்து வருமாறு கூறினார். அங்கே சென்று அவர் அளித்த விருந்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உட்கொண்டார்கள். முளைக்கா (ரலி) வசதி படைத்தவர் அல்லர். சமூகத்தில் செல்வாக்குப் பெற்றவரும் அல்லர். மிக மிகச் சாதாரண நிலையில் உள்ளவர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அங்கே சாப்பிட்டு முடித்ததும் அங்கேயே தொழுதார்கள். தொழுவதற்குத் தகுதியான பாய் கூட அவ்வீட்டில் இருக்கவில்லை. நீண்ட நாட்கள் பயன் படுத்தியதால் கறுப்பு நிறமாக மாறிவிட்ட பாய் தான் அங்கே இருந்தது. அதில் தான் தொழுதார்கள்.

நூல் : புகாரி 380, 860

பாய் கூட இல்லாத அளவுக்குப் பரம ஏழை தான் முளைக்கா (ரலி). அவர் அளித்த விருந்து எத்தகையதாக இருந்திருக்கும் என்பதை இதிலிருந்து ஊகிக்கலாம். நம்மைப் போன்ற சாதாரண மனிதர்கள் கூட ஒதுக்கித் தள்ளும் நிலையில் இருந்த ஏழைக் குடிசையின் விருந்தை ஆட்சித் தலைவராகவும், ஆன்மீகத் தலைவராகவும் உள்ள நபிகள் நாயகம் (ஸல்) ஏற்றுள்ளனர். அவர்கள் எல்லா மனிதர்களின் உணர்வுகளையும் மதிப்பவர்களாக இருந்தார்கள். சாதாரண மனிதனும் கூட தன்னை விட அற்பமானவர்களை ஒதுக்கித் தள்ளுவதை வழக்கமாகக் கொண்டிருக்கும் போது மிக உயர்ந்த நிலையில் இருந்த இந்த மாமனிதர் இதிலும் வெற்றி பெறுகிறார்கள்.

ஆன்மீகத் தலைவர்களானாலும், அரசியல் தலைவர்களானாலும், அதிகாரம் படைத்தோராக இருந்தாலும் பிரமுகர்களையும், சாமானியர்களையும் பாரபட்சமாக நடத்துவதைக் காண்கிறோம்.

அதிகாரம் படைத்தோர், அரசியல்வாதிகள் இவ்வாறு நடந்து கொள்வது கண்டிக்கத்தக்கது என்றாலும்,  நாங்கள் பக்குவம் பெற்ற வர்கள், துறந்தவர்கள்  என்றெல்லாம் அவர்கள் தம்மைப் பற்றி கூறிக் கொள்வதில்லை. எனவே அவர்கள் சாமான்யர்களையும், பிரமுகர் களையும் பாரபட்சமாக நடத்துவதை நாம் புரிந்து கொள்ள முடிகிறது.

 மற்ற மனிதர்களை விட தாங்கள் பண்பட்டவர்கள்; பக்குவம் அடைந்தவர்கள்  என்று ஆன்மீகத் தலைவர்கள் தம்மைப் பற்றி அறிவித்துக் கொள்கிறார்கள். இது உண்மை என்றால் அவர்களின் பார்வையில் பிரமுகர்களும், சாமான்யர்களும் சமமாகவே தென்பட வேண்டும்.

ஆனால் இவ்வாறு பாரபட்சம் காட்டுவதில் ஆன்மீகத் தலைவர் என்று தம்மைக் கூறிக் கொள்வோர், மற்றவர்களை விட மிஞ்சி நிற்பதை நாம் சர்வ சாதாரணமாகக் காணலாம்.

அவர்களின் கதவுகள் அதிபர்களுக்கும், அமைச்சர்களுக்கும், கோடீஸ்வரர்களுக்கும், புகழ் பெற்றவர்களுக்கும் தான் திறக்கப்படுகின்றன. மற்ற சாமானியர்களுக்குக் கூட்டத்தோடு கூட்டமாக தர்ம தரிசனம் தான் கிடைக்கின்றது.

அது போல ஆன்மீகத் தலைவர்கள் எத்தகைய மக்களைத் தேடிச் செல்கிறார்கள்? கோடீஸ்வரர்களைத் தேடிச் செல்கிறார்கள். அவர்களது வணிக நிறுவனங்கள், இல்லங்களைத் திறந்து வைக்கச் செல்கிறார்கள். பத்திரிகைகளுக்கு போஸ் கொடுப்பதற்காக அல்லாமல் இவர்கள் எந்தக் குடிசையிலும் கால் வைத்திருக்க மாட்டார்கள்.

இவ்வளவு எளிமையாகவும், பணிவாகவும் நடந்து கொண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம்மையறியாமல், தம் கவனத்துக்கு வராமல் தம்மால் மக்களுக்கு ஏதும் இடையூறு ஏற்பட்டிருக்குமோ என்று அஞ்சுகிறார்கள்.

இந்த நூல் நெடுகிலும் நபித் தோழர்கள் என்ற சொற்றொடர் பரவலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்தச் சமுதாயத்தில் சிலர் நபிகள் நாயகத்துக்குத் தோழராக இருந்திருப்பார்கள் என்று யாரும் நினைக்க வேண்டாம். நபிகள் நாயகத்தின் மார்க்கத்தை ஏற்று அவர்கள் அணியில் சேர்ந்த ஒவ்வொருவரும் தமது தோழர்கள் என்று நபிகள் நாயகம் அறிவித்தார்கள். எந்த மன்னரும் தனது குடிமக்கள் அனைவரும் தனது நண்பர்கள் என அறிவித்ததில்லை. தொண்டர்கள் என்று தான் அறிவித்திருக்கிறார்கள்.

எந்த ஆன்மீகத் தலைவரும் தன்னை ஏற்றுக் கொண்டவர்களை தோழர்கள் என அறிவித்தது கிடையாது. மாறாக அவர்களை ஏற்றுக் கொண்டவர்கள் சீடர்கள் என்றே அறிவிக்கப்படுகின்றனர்.

தொண்டர்களும், சீடர்களும் இல்லாத அனைவரையும் தோழர் என அழைத்த ஒரே தலைவரும் ஒரே மன்னரும் ஒரே ஆன்மீகத் தலைவரும் நபிகள் நாயகம் மட்டுமே.

இதனால் தான் நபிகள் நாயகத்தின் காலத்தில் அவர்களை ஏற்ற அனைவரையும் முஸ்லிம்கள் இன்றளவும் தோழர்கள் எனக் குறிப்பிடுகின்றனர்.

இவ்வாறு அறிவித்து தம்மை மற்றவர்களுக்குச் சமமாகக் கருதி அதைப் பிரகடனம் செய்தவர் புகழுக்காகவோ, மக்களின் செல்வாக்குப் பெறவோ பதவியை ஏற்றிருக்க இயலுமா?

எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தார் போல் தம்மை வரம்பு மீறிப் புகழக் கூடாது எனத் தெளிவான கட்டளையும் பிறப்பித்திருந்தார்கள்.

தம்மை வரம்பு மீறிப் புகழக் கூடாது என்று கடுமையான முறையில் எச்சரிக்கையும் செய்திருந்தார்கள்.

எங்கள் தலைவரே! எங்கள் தலைவரின் மகனே! எங்களில் சிறந்தவரே! எங்களில் சிறந்தவரின் மகனே! என்று ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கூறினார். அதைக் கேட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்  மனிதர்களே! இறையச்சத்தைக் கவனமாகப் பேணிக் கொள்ளுங்கள்! ஷைத்தான் உங்களைத் திசை திருப்பி விட வேண்டாம். நான் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மத் ஆவேன். அல்லாஹ்வின் அடியானும், அவனது தூதருமாவேன். எனக்கு அல்லாஹ் தந்த தகுதிக்கு மேல் என்னை உயர்த்துவதை அல்லாஹ்வின் மீது ஆணையாக நான் விரும்ப மாட்டேன்  என்றார்கள்.

நூல் : அஹ்மத் 12093

இதே கருத்து அஹ்மத் 15726, 15717 ஆகிய ஹதீஸ்களிலும் கூறப்படுகிறது.

கிறித்தவ சமுதாயத்தினர் மர்யமின் மகன் ஈஸாவை வரம்பு மீறிப் புகழ்ந்தது போல் என்னை வரம்பு மீறிப் புகழாதீர்கள். நான் அல்லாஹ்வின் அடியானே. எனவே அல்லாஹ்வின் அடியான் என்றும் அவனது தூதர் என்றும் என்னைப் பற்றிக் கூறுங்கள் என்று மேடையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிரகடனம் செய்தார்கள்.

நூல் : புகாரி: 3445

தம்மை எல்லை மீறிப் புகழக் கூடாது என்று மக்கள் மன்றத்தில் கடுமையாக எச்சரிக்கை செய்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது பதவியின் மூலம் புகழடைய விரும்பியிருப்பார்கள் என்று கருத இயலுமா?

ஆன்மீகத் தலைமையாலும் பலனடையவில்லை

ஆன்மீகத் தலைவர்களாக இருப்போர் எல்லா வகையிலும் மனிதர்களாகவே இருக்கின்றனர். மற்றவர்களைப் போலவே அவர்களுக்கும் பசிக்கிறது; தாகம் எடுக்கிறது; நோய் ஏற்படுகிறது; மலஜல உபாதை ஏற்படுகிறது; முதுமை ஏற்படுகிறது. சாதாரண மனிதர்கள் அளவுக்குக் கூட துன்பங்களைத் தாங்க முடியாத அளவுக்கு அதிக பலவீனம் உடையவர்களாகவும் அவர்கள் இருக்கின்றனர்.

அவ்வாறு இருந்தும் தங்களிடம் கடவுள் அம்சம் இருப்பது போல் மக்களை நம்ப வைக்கின்றனர். தாங்கள் ஆசி வழங்கினால் காரியம் கைகூடும் எனவும் நம்ப வைப்பதில் வெற்றி பெறுகின்றனர். நடை, உடை, பாவனை, பழக்க வழக்கங்கள் அனைத்திலும் தங்களைத் தனித்துக் காட்டிக் கொள்கின்றனர். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களை விட அதிக மோசடிக்காரர்களாகவும் இவர்களே திகழ்கின்றனர்.

* தம்மைக் கடவுளின் அம்சமென வாதிடுவது

* சாபமிடுவதாக அச்சுறுத்துவது

* ஆசி வழங்குவதாகக் கூறி ஏமாற்றுவது

* புலனுக்குத் தெரியாதவை பற்றி புளுகு மூட்டைகளை அவிழ்த்து விடுவது

* கட்டளைகள் யாவும் மற்றவர்களுக்குத் தானே தவிர தனக்குக் கிடையாது என்று நடந்து கொள்வது

* வயிறு வளர்க்கவும், சொத்து சேர்க்கவும் மக்களின் அறியாமையைப் பயன்படுத்திக் கொள்வது

* மக்களால் நெருங்க முடியாத உயரத்தில் இருப்பது

என்றெல்லாம் பலவிதமான மோசடிகள் காலங்காலமாக ஆன்மீகத்தின் பெயரால் அரங்கேறி வருகின்றன. இவற்றில் எதையும் செய்யாதது மட்டுமின்றி இவற்றைக் கடுமையாக எதிர்த்த ஒரே ஆன்மீகத் தலைவராக நபிகள் நாயகம் (ஸல்) திகழ்ந்தார்கள்.

ஆன்மீகத்தின் பெயரால் நடக்கும் மோசடிகளைக் கண்டு ஆன்மீகத்தை முழுமையாக எதிர்த்துப் போராடிய தலைவர்கள் கூட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அளவுக்கு ஆன்மீகத்தின் பெயரால் நடக்கும் மோசடிகளை எதிர்த்திருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு மோசடிகளை எதிர்த்தார்கள்.

ஆன்மீகத் தலைவர்களுக்கு அளவு கடந்த மரியாதை செய்யப்படுவதைக் கண்டு அதை எதிர்த்த எத்தனையோ தலைவர்கள் அது போன்ற மரியாதை தமக்குச் செய்யப்படுவதை இன்முகத்துடன் ஏற்றுக் கொண்டனர். இதற்கு வரலாற்றில் அநேக சான்றுகள் உள்ளன. நாமே இத்தகையவர்களை இன்றளவும் சந்தித்து வருகிறோம்.

ஆனால், ஆன்மீகத் தலைவராக இருந்து கொண்டே ஆன்மீகத் தலைவர்களுக்குச் செய்யப்படும் அளவு கடந்த மரியாதையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எதிர்த்துப் போராடினார்கள். அறியாத மக்களால் தமக்கே அத்தகைய மரியாதை செய்யப்படும் போது கடும் கோபத்தை வெளிப்படுத்தி அதைத் தடுத்தார்கள். அவர்களை மாமனிதர் என்று வரலாறு போற்றுவதற்கு இதுவும் ஒரு முக்கியக் காரணமாகும்.

ஆன்மீகத் தலைமை அரசியல் தலைமையை விட வலிமையானது. இந்தத் தலைமையின் காரணமாகத் தான் அரசியல் தலைமை கூட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை வந்தடைந்தது எனலாம்.

இஸ்லாத்தில் உள்ள பல நூறு ஆன்மீகத் தலைவர்களில் அவர்களும் ஒருவர் என்ற நிலையில் அவர்களின் தலைமை இருக்கவில்லை. மாறாக, முழுமையான அதிகாரம் படைத்த ஒரே ஆன்மீகத் தலைவராக அவர்கள் திகழ்ந்தார்கள்

உயிரைக் கொடுக்கச் சொன்னால் கூட கொடுப்பதற்குத் தயாரான மக்கள் கூட்டம் அவர்களுக்கு இருந்தது.

அவர்களது எந்த உத்தரவையும் அது எவ்வளவு கடினமானதாக இருந்தாலும் எந்தக் கேள்வியுமின்றி நிறைவேற்றக்கூடிய தோழர்களை அவர்கள் பெற்றிருந்தார்கள்.

அப்படி இருந்தும் ஆன்மீகத் தலைமையைப் பயன்படுத்தி எந்த ஆதாயத்தையும் அவர்கள் பெற்றதில்லை.

முதன் முதலில் அவர்கள் செய்த முக்கியமான பிரகடனமே இது தான்!

 எனக்கு இறைவனிடமிருந்து செய்தி வருகிறது என்பதைத் தவிர மற்றபடி நானும் உங்களைப் போன்ற ஒரு மனிதன் தான்  என்று அழுத்தம் திருத்தமாக அவர்கள் கூறினார்கள். அவ்வாறு கூற வேண்டும் என்று இறைவனே தமக்கு கட்டளையிட்டதாகக் கூறினார்கள். இந்தக் கட்டளையை திருக்குர்ஆன் 18:110, 41:6 ஆகிய வசனங்களில் காணலாம்.

நம்மைப் போன்றவர்களுக்கு இது சாதாரண பிரகடனமாகத் தோன்றலாம். ஆன்மீகத் தலைவர்களுக்கு இது ஆபத்தான பிரகடனமாகும்.  நாங்கள் உங்களைப் போன்ற மனிதர்கள் அல்லர்; நாங்கள் தனிப் பிறவிகள்; தெய்வப் பிறவிகள்; அல்லது தெய்வாம்சம் பொருந்தியவர்கள்  என்ற பிரகடனத்தில் தான் அனைத்து ஆன்மீகத் தலைவர்களுக்குப் பாதுகாப்பு இருக்கிறது.

இந்த மாமனிதரோ அந்த ஆணி வேரையே பிடுங்கி வீசுகிறார்.

ஏதோ பெயரளவுக்கு இப்படி அறிவித்து விட்டு நடைமுறையில் அதற்கு மாற்றமாக நடந்திருப்பார்களோ என்று யாரும் நினைக்க வேண்டாம். நடைமுறைப்படுத்தாத ஒரு பேச்சையும் பேசாத தலைவர் நபிகள் நாயகம். தமது வாழ்நாள் முழுவதும் இதை நடைமுறைப் படுத்திக் காட்டி விட்டுச் சென்றார்கள்.

அவர்களின் வரலாற்றில் இதற்கு எண்ணற்ற சான்றுகள் உள்ளன.

எந்த மனிதரும் தனது நல்லறத்தால் சொர்க்கத்தில் நுழைய முடியாது என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! நீங்களுமா?  என்று நபித் தோழர்கள் கேட்டனர். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்  அல்லாஹ் தனது அருள் போர்வையை என் மீது போர்த்தினால் தவிர நானும் அப்படித் தான்  என்றார்கள்.

நூல் : புகாரி 5673, 6463, 6467

மனிதன் தனது வாழ்நாள் முழுவதையும் இறைவனுக்காக அர்ப்பணித்தாலும் அதற்காக சொர்க்கம் எனும் மகத்தான பரிசைப் பெற இயலாது. ஏனெனில் சொர்க்கம் என்பது நினைத்ததெல்லாம் கிடைக்கக் கூடிய அழியாத பெரு வாழ்வாகும். மனிதர்கள் செய்யும் சிறிய செயல்களுக்கு பெரிய அளவில் இறைவன் நன்மைகள் வழங்குவதால் தான் மனிதன் சொர்க்கம் செல்கிறான் என்பது இதன் கருத்தாகும்.

 நீங்களுமா?  என்று நபித்தோழர்கள் கேட்ட போது  எனது நிலை வேறு  என்று அவர்கள் பதிலளித்தால் அந்த மக்கள் அதை அப்படியே நம்பியிருப்பார்கள்.  நான் செய்யும் வணக்கத்திற்கு எத்தனை சொர்க்கம் தந்தாலும் போதாது; அந்த அளவுக்கு நான் வணக்கம் புரிகிறேன்  என்று அவர்கள் கூறினாலும் மக்கள் நம்பியிருப்பார்கள்.

நான் சொர்க்கத்துக்குப் போவதாக இருந்தாலும் அது அல்லாஹ்வின் அருள் இருந்தால் தான் நடக்கும். எனது செயல்களால் அல்ல என்று அறிவிப்பது ஆன்மீகத் தலைவர்களுக்கு மிகவும் கஷ்டமானதாகும்.

ஆன்மீகத் தலைவர்களிடம் ஆசி பெறுவதை பெரும்பாலான மக்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். எந்த ஒரு காரியத்தில் இறங்கினாலும் அதற்கு முன் ஒரு பெரியாரிடம் ஆசி பெறுகின்றனர். இவ்வாறு ஆசி பெற்று விட்டு அக்காரியத்தில் இறங்கினால் அக்காரியம் கை கூடும் எனவும் நம்புகின்றனர்.

ஆசி வழங்கும் பெரியார்களும் இதை உள்ளூர விரும்புகின்றனர். அவர்களும் மற்றவர்களைப் போன்ற மனிதர்கள் தான். ஆன்மீகத் தலைவர்களின் காரியங்கள் கூட பெரும்பாலும் கை கூடுவதில்லை. அவர்களுக்கே ஏராளமான பிரச்சினைகள் உள்ளன. தங்களிடம் எந்த ஆற்றலும் இல்லை என்பது ஆன்மீகத் தலைவர்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரிந்தாலும் மக்களை ஏமாற்றி வருகின்றனர்.

ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த நம்பிக்கையையும் ஒழித்துக் கட்டினார்கள். ஒவ்வொரு முஸ்லிமும் என்னைப் பற்றி பேசும் போது என்னிடம் எதையும் பிரார்த்திக்கக் கூடாது. என்னிடம் ஆசி கேட்கக் கூடாது. எனக்காக இறைவனிடம் நீங்கள் தான் பிரார்த்தனை செய்ய வேண்டும் என மக்களுக்குக் கட்டளை பிறப்பித்தார்கள். இதன் காரணமாகவே ஒவ்வொரு முஸ்லிமும் அவர்களைப் பற்றி பேசும் போது  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  எனக் கூறுகிறார். எழுத்தில் சுருக்கமாக  ஸல்  எனக் குறிப்பிடுகிறார்.  அவர்களுக்கு அல்லாஹ் அருள் புரியட்டும்  என்பது இதன் பொருள்.

மாபெரும் ஆன்மீகத் தலைவரான தமக்காக மற்றவர்கள் இறைவனிடம் இறையருளை வேண்ட வேண்டும் என்று அவர்கள் கற்றுத் தந்ததால் தான் முஸ்லிம்கள் எந்த மனிதனையும் வணங்குவதில்லை; ஆசி வாங்குவதில்லை. ஆன்மீகத்தின் காரணமாக கிடைக்கும் ஆசி வழங்கும் பெருமையைக் கூட இதன் மூலம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒழித்துக் கட்டினார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பெரிய தந்தை அபூதாலிப் நபிகள் நாயகத்துக்குப் பக்கபலமாக இருந்தார். அவர்களின் பிரச்சாரத்துக்கும் உறுதுணையாக இருந்தார். அவர் மரணத்தை நெருங்கிக் கொண்டிருந்த போது அவரைச் சந்தித்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்  அகில உலகையும் படைத்த இறைவன் ஒரே இறைவன் தான்  என்ற கொள்கையின் பால் அவரை அழைத்தார்கள். அவர் அதனை ஏற்க மறுத்து தமது பழைய கொள்கையிலேயே மரணித்து விட்டார். அதனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெரிதும் கவலைப்பட்டார்கள். அப்போது  நீர் நினைத்தவரை உம்மால் நேர்வழியில் செலுத்த இயலாது. தான் நாடியவரை அல்லாஹ் நேர்வழியில் செலுத்துவான்  என்ற வசனம் (28:56) அருளப்பட்டது.

நூல் : புகாரி: 3884

ஒருவரை நேர்வழியில் செலுத்தும் அதிகாரம் தமக்கு இல்லை என்று இறைவன் கண்டித்ததாக அறிவித்ததன் மூலம் அல்லாஹ்வின் தூதராக இருப்பதால் அல்லாஹ்வின் அதிகாரம் ஏதும் தமக்கு வழங்கப்படவில்லை என்பதைத் தெளிவுபடுத்துகிறார்கள்.

இறைவனை வணங்கும் போது மனிதர்களால் மனம் ஒன்றிப் போய் வணங்க முடிவதில்லை. இறைவனை வழிபடும் நேரத்தில் பலவிதமான எண்ணங்கள் குறுக்கிடுவதை ஒவ்வொருவரும் அனுபவப்பூர்வமாக உணர்கிறோம்.

ஆன்மீகத் தலைவர்களின் நிலையும் இதுதான். ஆனாலும் ஆன்மீகத் தலைவர்கள் தங்களைப் பற்றி பொய்யான ஒரு சித்திரத்தை ஏற்படுத்தியுள்ளனர். தாங்கள் இறைவனுடன் இரண்டறக் கலந்து, இறைவனுடன் ஒன்றி வணக்கம் புரிவதாக மக்களை நம்ப வைக்கின்றனர். மக்களும் அதை அப்படியே நம்புகின்றனர்.

இதன் காரணமாகவே இறைவனிடம் தங்கள் கோரிக்கைகளை நேரடியாகக் கேட்காமல் ஆன்மீகக் குருமார்கள் வழியாகக் கேட்டு வருகின்றனர்.

இந்தப் பித்தலாட்டத்தையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முறியடித்தார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வேலைப்பாடு செய்யப்பட்ட ஆடையை அணிந்து தொழுதார்கள். அந்த வேலைப்பாடுகளின் பால் அவர்களின் கவனம் சென்றது. தொழுது முடித்ததும்  எனது இந்த ஆடையை அபூஜஹ்மிடம் கொடுத்து விட்டு அவரது ஆடையை எனக்கு வாங்கி வாருங்கள்! ஏனெனில் இந்த ஆடை எனது தொழுகையில் ஈடுபாட்டை திசை திருப்பிவிட்டது  என்று கூறினார்கள்.

நூல் : புகாரி 752, 373, 5817

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கவனம் ஆடையின் வேலைப்பாடுகளில் சென்றது அவர்களுக்கு மட்டுமே தெரிந்ததாகும்.  நான் உங்களைப் போன்றவன் அல்ல. என்னை எதுவும் கவனத்தைத் திருப்ப முடியாது  என்று அந்த மக்களை நபிகள் நாயகம் (ஸல்) ஏமாற்ற விரும்பவில்லை. மாறாக தொழுகையில் ஈடுபடும் போது உங்கள் கவனம் எவ்வாறு திரும்புமோ அது போல் என் கவனமும் திரும்பும். இந்த ஆடையின் வேலைப்பாட்டைப் பார்த்தவுடன் அதன் பால் என் கவனம் சென்று விட்டது  என்று பகிரங்கமாக அறிவிக்கிறார்கள்.

நீண்ட நேரம் தொழுகை நடத்த வேண்டும் என்ற எண்ணத்தில் தொழுகை நடத்த நிற்கிறேன். அப்போது பின்னால் நின்று தொழும் பெண்ணுடைய குழந்தையின் அழுகுரல் எனக்குக் கேட்கிறது. அக்குழந்தையின் தாய்க்குச் சிரமம் தரக் கூடாது என்பதற்காகத் தொழுகையைச் சுருக்கமாக முடித்துக் கொள்கிறேன்  என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

நூல் : புகாரி 707, 708, 709, 710, 868

தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் போது உங்களுக்குத் தான் கவனம் வேறு பக்கம் செல்லும். என் கவனம் தொழுகையில் மட்டுமே இருக்கும் என்று அவர்கள் மக்களை நம்ப வைத்திருக்க முடியும். அப்படித் தான் ஆன்மீகத் தலைவர்கள் மக்களை நம்ப வைக்கின்றனர்.

ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு குழந்தையின் அழுகுரல் தொழுகின்ற தமது கவனத்தை ஈர்ப்பதாகவும், அது தம் காதில் விழுவதாகவும், அதன் காரணமாகவே தொழுகையைச் சுருக்கமாக முடிப்பதாகவும் தாமே முன் வந்து மக்களிடம் அறிவிக்கிறார்கள்.

தாம் ஆன்மீகத் தலைவராக இருப்பதால்,  தாம் மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்டவர் அல்லர்  என்று இதன் மூலம் அறிவிக்கிறார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். அப்போது வழக்கமாகத் தொழுவதை விட அதிகமாகவோ, அல்லது குறைவாகவோ தொழுதார்கள். தொழுது முடிந்தவுடன் மக்கள் சுட்டிக் காட்டினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்  நான் உங்களைப் போன்ற ஒரு மனிதனே! நீங்கள் மறப்பதைப் போலவே நானும் மறப்பேன். எனவே நான் மறந்து விட்டால் எனக்கு நினைவூட்டுங்கள்  என்று குறிப்பிட்டார்கள்.

நூல் : புகாரி 401

மக்கள் சுட்டிக் காட்டிய போது  எனது நிலை வேறு; உங்கள் நிலை வேறு  என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினால் மக்கள் இதை மறுக்கப் போவதில்லை. இன்று முதல் தொழுகை முறை மாற்றியமைக்கப்பட்டு விட்டது எனக் கூறி நபிகள் தமக்கு மறதி ஏற்பட்டதை மறைத்திருக்கலாம்.

ஆனால், இந்த மாமனிதர் மிக முக்கியமான வழிபாட்டில் தமக்கு மறதி ஏற்பட்டது என்பதை ஒப்புக் கொள்கிறார்கள். இனி மேல் இவ்வாறு ஏற்பட்டால் அதைச் சுட்டிக் காட்டுங்கள் என்கிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக  இதற்குக் காரணம் நானும் உங்களைப் போன்ற ஒரு மனிதனே  என்கிறார்கள்.

சராசரி மனிதனே தனது தவறை சபையில் ஒப்புக் கொள்ளத் தயக்கம் காட்டுவதையும், வெட்கப்படுவதையும் காண்கிறோம். இந்த ஆன்மீகத் தலைவரோ தாமும் மற்றவரைப் போன்ற மனிதர் தாம் என்பதை எந்த நேரத்திலும் பகிரங்கப்படுத்திட தயக்கம் காட்டாதவராக இருக்கிறார்கள்.

நானும் உங்களைப் போன்ற மனிதனே  என்று பிரகடனம் செய்துவிட்டு அதை எந்த அளவுக்கு உறுதியாகக் கடைபிடித்தார்கள் என்பதற்கான மற்றொரு சான்றையும் பாருங்கள்.

தாம்பத்திய உறவுக்குப் பின்னர் குளித்து விட்டுத் தான் தொழ வேண்டும் என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கட்டளை.

ஒரு நாள் வைகறைத் தொழுகையை நிறைவேற்ற நபிகள் நாயகம் (ஸல்) வந்தனர். அனைவரும் வரிசையில் நின்றனர். தொழுகைக்குத் தலைமை தாங்கிட நபிகள் நாயகமும் நின்றனர். தாம்பத்தியத்தில் ஈடுபட்ட பின் குளிக்கவில்லை என்பது அப்போது தான் அவர்களுக்கு நினைவுக்கு வந்தது. உடனே மக்களிடம்  அப்படியே நில்லுங்கள்  எனக் கூறி விட்டுச் சென்றார்கள். குளித்து விட்டு தலையில் தண்ணீர் சொட்ட வந்து தொழுகையை நடத்தினார்கள்.

நூல் : புகாரி 275, 639, 640

அவர்கள் குளிக்கவில்லை என்பது அவர்களுக்கு மட்டுமே தான் தெரியும். என்ன இவர்கள் இவ்வளவு கவனமில்லாமல், அக்கரையில்லாமல் தொழுகை நடத்த வந்து விட்டார்களே என்று மக்கள் நினைப்பார்கள் என்றெல்லாம் இந்த மாமனிதர் வெட்கப்படவில்லை. மற்றவர்களைப் போலவே தாமும் ஒரு மனிதர் தாம்; மற்றவருக்கு ஏற்படுவது போலவே தமக்கும் மறதி ஏற்படும் என்பதை மக்கள் மன்றத்தில் பகிரங்கப்படுத்துகிறார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆட்சித் தலைவராகவும், ஆன்மீகத் தலைவராகவும் இருந்தார்கள். அதன் காரணமாக தலைநகரில் வழக்குகளை விசாரித்துத் தீர்ப்புக் கூறும் பொறுப்பையும் அவர்கள் சுமந்து கொண்டார்கள்.

தலைநகரான மதீனாவைப் பொருத்த வரை அவர்கள் தாம் தலைமை நீதிபதியாகவும் இருந்தார்கள்.

தலைமை நீதிபதியாக இருப்பதுடன் ஆன்மீகத் தலைவராகவும் இருப்பதால் தமது தீர்ப்பில் எந்தத் தவறும் நிகழாது என்று அவர்கள் வாதிட்டிருக்க முடியும். அதை அப்படியே மக்கள் நம்பியிருப்பார்கள். நபிகள் நாயகத்தின் தீர்ப்பால் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர் வேண்டுமானால் தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாகக் கருதலாம். அவரும் கூட வெளிப்படையாக அதை விமர்சிக்க முடியாத அளவுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் செல்வாக்கு இருந்தது. ஆனால் இந்த மாமனிதர் என்ன சொன்னார்கள்?

 மக்களே! என்னிடம் நீங்கள் வழக்கு கொண்டு வருகின்றீர்கள். உங்களில் ஒருவர் மற்றவரை விட தனது வாதத்தை நிலைநாட்டும் திறமை பெற்றவராக இருக்கிறார். நானும் அதைக் கேட்டு அதை உண்மை என நம்பி தீர்ப்பளித்து விடுவேன். ஆனால் மறுமையில் அவனுக்கு அது கேடாக முடியும்  என்று எச்சரித்தார்கள்.

நூல் : புகாரி 2458, 2680, 6967, 7169, 7181, 7185

ஒருவரது வாதத் திறமையைப் பார்த்து நீங்கள் எவ்வாறு தவறான முடிவுக்கு வருவீர்களோ அது போலவே நானும் முடிவு செய்யக் கூடியவன் தான். எனது தீர்ப்புகள் வாதங்களின் அடிப்படையில் தான் அமையுமே தவிர எனது ஆன்மீக சக்தியினால் உண்மையைக் கண்டுபிடித்து அளிக்கப்பட்ட தீர்ப்பாக இருக்காது என்று எந்த ஆன்மீகத் தலைவராவது அறிவித்ததுண்டா?

தான் கூறியது தவறு என்று அம்பலமான பிறகும் அதற்கு ஆயிரம் வியாக்கியானம் கூறி சமாளிக்கும் ஆன்மீகத் தலைவர்களிடையே யாரையும் ஏமாற்றாத, மக்களின் அறியாமையைத் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளாத தலைவராக இவர்கள் காட்சி தருகிறார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அப்போது தான் மதீனா நகருக்கு வந்த நேரம். அங்கே பேரீச்சை மரங்கள் தான் பிரதான உற்பத்தியாக இருந்தது. அங்குள்ள மக்கள் மரங்களுக்கிடையே மகரந்தச் சேர்க்கை செய்வதை நபிகள் நாயகம் (ஸல்) கண்டனர். என்ன செய்கிறீர்கள்?  என்று அவர்களிடம் கேட்டார்கள்.  இப்படிச் செய்வது தான் வழக்கம்  என்று அவர்களிடம் அம்மக்கள் எடுத்துக் கூறினார்கள்.  இதைச் செய்யாதிருந்தால் நன்றாக இருக்குமே  என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்களும் இவ்வாறு செய்வதை விட்டு விட்டனர். அந்த வருடத்தின் மகசூல் குறைந்து விட்டது. இது பற்றி நபிகள் நாயகத்திடம் அவர்கள் கூறினார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்  நானும் ஒரு மனிதன் தான். உங்கள் வணக்க வழிபாடுகள் குறித்து நான் உங்களுக்குக் கட்டளையிட்டால் அதைப் பிடித்துக் கொள்ளுங்கள். எனது சொந்த அபிப்பிராயத்தின் படி ஏதேனும் கட்டளையிட்டால் நானும் மனிதனே  என்றார்கள்.

நூல் : முஸ்லிம் 4357, 4358

இறைவனின் தூதர் என்ற முறையில் வணக்க வழிபாடுகள், தக்கவை, தகாதவை பற்றிக் கூறினால் அதை மட்டும் பின்பற்றுங்கள்! மனிதன் என்ற முறையில் எனது அபிப்பிராயத்தைக் கூறினால் அது சரியாகவும் இருக்கலாம். தவறாகவும் இருக்கலாம். அதைப் பின்பற்ற வேண்டிய அவசியம் உங்களுக்கு இல்லை என்று பிரகடனம் செய்ததன் மூலம் தாம் எப்போதுமே மனிதர் தான். மனிதத் தன்மை அடியோடு நீக்கப்பட்ட தெய்வப்பிறவி அல்ல என்பதை அழுத்தம் திருத்தமாக அறிவிக்கிறார்கள். மற்றொரு நிகழ்ச்சியைப் பாருங்கள்!

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு மண விழாவுக்குச் சென்றார்கள். அங்குள்ள சிறுமிகள் பாட்டு பாடிக் கொண்டிருந்தனர். நபிகள் நாயகத்தைக் கண்டதும்  நாளை நடப்பதை அறியும் நபி நம்மிடம் இருக்கிறார்  என்று கூறினார்கள். இதைக் கேட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்  இவ்வாறு கூறாதே! முன்னர் பாடியதையே பாடு  என்றார்கள்.

நூல் : புகாரி 4001, 5147

சபைகளில் தலைவர்களைக் கூடுதல் குறைவாகப் புகழ்வது வழக்கமான ஒன்று தான். ஆன்மீகத் தலைவர் என்றால் இது இன்னும் சர்வ சாதாரணம். ஆனால் இந்த மாமனிதர் அந்த மக்களின் அறியாமையைத் தமக்குச் சாதகமாக்கிக் கொள்ள விரும்பவில்லை.

நாளை நடப்பதை மனிதன் எப்படி அறிய முடியும்? கடவுள் மட்டும் தானே அறிவார். இந்தத் தன்மை தனக்கு உள்ளதாக இவர்கள் பாடுகிறார்களே என்பதற்காகத் தான் பாட்டை நிறுத்தச் செய்கிறார்கள்.  உங்களுக்கு எப்படி நாளை நடக்கவுள்ளது தெரியாதோ அது போலவே எனக்கும் தெரியாது  என்று இதன் மூலம் அறிவிக்கிறார்கள்.

தமக்கு மறைவானது எதுவும் தெரியாது என்பதை மக்கள் மன்றத்தில் வைத்து விடுமாறு இறைவன் கட்டளையிட்டதாகவும் அவர்கள் கூறுகிறார்கள். இதைத் திருக்குர்ஆன் 6:50, 7:188 வசனங்களில் காணலாம்.

அல்லாஹ்வின் கருவூலங்கள் என்னிடம் உள்ளன; மறைவானதை அறிவேன்; என்று உங்களிடம் கூற மாட்டேன். நான் வானவர் என்றும் உங்களிடம் கூற மாட்டேன். எனக்கு அறிவிக்கப்படுவதைத் தவிர (வேறெதனையும்) நான் பின்பற்றுவதில்லை  என்று (முஹம்மதே!) கூறுவீராக! குருடனும், பார்வையுடையவனும் சமமாவார்களா? சிந்திக்க மாட்டீர்களா?  என்று கேட்பீராக!

(திருக்குர்ஆன் 6:50)

அல்லாஹ் நாடினால் தவிர எனக்கே நன்மை செய்யவோ, தீமை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை. நான் மறைவானதை அறிந்து கொள்பவனாக இருந்திருந்தால் நன்மைகளை அதிகம் அடைந்திருப்பேன். எந்தத் தீங்கும் எனக்கு ஏற்பட்டிருக்காது. நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நான் எச்சரிப்பவனாகவும், நற்செய்தி கூறுபவனாகவுமே இருக்கிறேன்  என்று (முஹம்மதே!) கூறுவீராக!

(திருக்குர்ஆன் 7:188)

எவ்வளவு அற்புதமான முழக்கம் என்று பாருங்கள்! புகழ்ச்சியை வெறுப்பது போல் சிலர் காட்டிக் கொள்வர். ஆனால் உள்ளூர அதை விரும்புவார்கள். இந்த மாமனிதர் தமக்கு மறைவான விஷயம் தெரியாது என்று கூறியது மட்டுமின்றி தமக்கெதிரான ஆதாரத்தையும் தாமே எடுத்துக் காட்டுகிறார்கள். தம்மை வரம்பு மீறி புகழக் கூடாது என்று கூறி அதற்கு ஆதாரத்தையும் தமக்கெதிராக எடுத்து வைத்த அற்புதத் தலைவராக நபிகள் நாயகம் (ஸல்) திகழ்கிறார்கள்.

மறைவானது எனக்குத் தெரிந்திருந்தால் எந்தக் கெடுதியும் எனக்கு ஏற்பட்டிருக்காது. கெடுதி ஏற்படப்போவதை முன்கூட்டியே அறிந்து அதைத் தவிர்த்திருப்பேன். வெறும் நன்மைகளாகவே நான் அடைந்திருக்க வேண்டும். அப்படியெல்லாம் நடக்கவில்லையே? உங்களைப் போலவே நானும் துன்பங்களைச் சுமக்கிறேன்; நாடு கடத்தப்பட்டேன்; கல்லடி பட்டேன்; வறுமையில் வாடுகிறேன்; நோய் வாய்ப்படுகிறேன். இதிலிருந்து எனக்கு மறைவாகவுள்ள எதுவும் தெரியாது என்பதை விளங்க மாட்டீர்களா? என்று மக்களிடம் அறிவிக்குமாறு இறைவன் தமக்குக் கட்டளையிட்டதாகக் கூறுகிறார்கள்!

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த ஆரம்ப நேரம். அன்றைய மக்களால் உயர்ந்த குலமாகக் கருதப்பட்ட குரைஷிக் குலத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்தவர்கள் என்பதால் மரியாதைக்குரியவர்களாக இருந்தனர்.

ஆனாலும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கொள்கைப் பிரச்சாரத்தை முக்கியப் பிரமுகர்களும், உயர் குலத்தவர்களும் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்களைச் சாதாரண மக்கள் தான் அதிக அளவில் ஏற்றிருந்தார்கள்.

இந்த நிலையில் முக்கியப் பிரமுகர்களைச் சந்தித்து அவர்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கொள்கை விளக்கம் அளித்து வந்தனர். ஒரு நாள் அவர்கள் இவ்வாறு கொள்கைப் பிரச்சாரம் செய்த போது நடந்த நிகழ்ச்சி பின் வருமாறு வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எதிரிகளில் முக்கியப் பிரமுகர் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது தாழ்ந்த குலத்தவராகக் கருதப்பட்ட பார்வையற்ற இப்னு உம்மி மக்தூம் என்பார் வந்தார்.  அல்லாஹ்வின் தூதரே! எனக்கு அறிவுரை கூறுங்கள்  என்றார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரைப் புறக்கணித்து விட்டு அந்தப் பிரமுகரிடம் பேசிக் கொண்டிருந்தார்கள். அந்தச் சமயத்தில் தான் பின்வரும் திருக்குர்ஆன் வசனங்கள் நபிகள் நாயகத்துக்கு அருளப்பட்டன.

தன்னிடம் அந்தக் குருடர் வந்ததற்காக இவர் கடுகடுத்தார். அலட்சியம் செய்தார். அவர் தூயவராக இருக்கலாம் என்பது (முஹம்மதே!) உமக்கு எப்படித் தெரியும்? அல்லது அவர் அறிவுரை பெறலாம். அந்த அறிவுரை அவருக்குப் பயன் அளிக்கலாம். யார் அலட்சியம் செய்கிறானோ அவனிடம் வலியச் செல்கிறீர். அவன் பரிசுத்தமாக ஆகாவிட்டால் உம் மீது ஏதும் இல்லை. (இறைவனை) அஞ்சி உம்மிடம் யார் ஓடி வருகிறாரோ அவரை அலட்சியம் செய்கிறீர்

திருக்குர்ஆன்: 80:1-10

நூல்கள் : திர்மிதீ 3254, முஸ்னத் அபீயஃலா 3123

முக்கியமான பிரமுகர்களிடம் பேசிக் கொண்டிருக்கும் போது முக்கியமற்றவர்களை அலட்சியப்படுத்துவது மனிதர்களின் இயல்பாகும். குறிப்பாக, ஆன்மீகத் தலைவர்களிடம் இது அதிகமாகவே காணப்படும். செல்வந்தர்களுடனும், முக்கியப் பிரமுகர்களுடனும் தான் அவர்கள் நெருக்கம் வைத்திருப்பார்கள். அப்போது தான் அவர்கள் மூலம் ஆதாயம் அடைய முடியும்.

இச்சம்பவம் நடந்த கால கட்டத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிகவும் வசதியான நிலையில் இருந்தார்கள். ஆதாயம் அடையும் நோக்கத்திற்காக முக்கியப் பிரமுகரிடம் பேசிக் கொண்டிருக்கவில்லை. முக்கியப் பிரமுகர்கள் நல்வழியின் பால் திரும்பினால் மற்றவர்களும் நல்வழிக்கு வருவார்கள் என்ற நோக்கத்தில் தான் பேசிக் கொண்டிருந்தார்கள்.

இந்தச் சந்தர்ப்பத்தில் தான் கண் பார்வையற்ற அந்தத் தோழர் வருகிறார். நபிகள் நாயகத்தின் குரலை வைத்து அங்கே அவர்கள் இருப்பதை அறிந்து கொண்டு அவர்களிடம் மார்க்க விளக்கம் கேட்கிறார். இதனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சங்கடப்படுகிறார்கள்.  முக்கியப் பிரமுகர்கள் இது போன்ற நபர்களை மதிக்க மாட்டார்கள். நேரம் தெரியாமல் இவர் இந்த நேரத்தில் வந்து விட்டாரே  என்று முகத்தைக் கடுகடுப்பாக ஆக்கிக் கொள்கிறார்கள். இது மனிதனின் இயல்பு தான்.

வந்தவர் பார்வையற்றவராக இருந்ததால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முகம் சுளித்ததை அவர் அறிந்து கொண்டிருக்க முடியாது. அவரை அலட்சியம் செய்ததையும் அவரால் புரிந்து கொண்டிருக்க முடியாது.  நாம் கூறியது நபிகளின் காதுகளில் விழுந்திருக்காது  என்று தான் அவர் கருதியிருப்பார்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முகம் சுளித்ததும், கடுகடுப்படைந்ததும் நபிகள் நாயகத்துக்கு மட்டுமே தெரிந்த விஷயமாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாமாக முன் வந்து கூறியதன் காரணமாகவே நமக்கும், உலகத்துக்கும் தெரிய வருகின்றது.

என் இறைவன் அல்லாஹ் எனது இந்தப் போக்கைக் கண்டித்து விட்டான். நான் முகம் சுளித்ததையும், அலட்சியம் செய்ததையும் இறைவன் தவறென அறிவித்து விட்டான்  என்று மக்கள் மன்றத்தில் அறிவிக்கிறார்கள்.

இது திருக்குர்ஆனில் 80 வது அத்தியாயத்தில் பதிவு செய்யப்பட்டு உலகம் உள்ளளவும் அறிவித்துக் கொண்டிருக்கிறது.

தான் ஒரு மனிதர் தாம்; மனிதர் என்ற முறையில் தம்மிடமும் தவறுகள் ஏற்படும் என்பதை எந்த நேரத்திலும் அவர்கள் மறுத்ததில்லை; மறைத்ததுமில்லை  என்பதை இச்சம்பவம் உணர்த்துகிறது.

நான் தவறு செய்தாலும் தவறு தவறு தான்  என்று அறிவித்த ஆன்மீகவாதிகளை உலக வரலாறு கண்டதே இல்லை.

அது மட்டுமின்றி முகச் சுளிப்புக்கு உள்ளானவர் சமுதாயத்தில் மதிப்புக்குரியவர் அல்லர். தாழ்வாகக் கருதப்பட்ட குலத்தைச் சேர்ந்தவர்; வசதியற்றவர்; அற்பமாகக் கருதப்பட்டவர்; பார்வையுமற்றவர்.

பெருந்தன்மையாளர்கள் என்று பெயரெடுத்தவர்கள் கூட ஓரளவு சுமாரான நிலையில் உள்ளவர்களிடம் தான் பெருந்தன்மையைக் கடைபிடிப்பார்களே தவிர மிகவும் இழிநிலையை அடைந்தவரிடம் பெருந்தன்மையைக் கடைபிடிக்க மாட்டார்கள்.

அற்பத்திலும் அற்பமாகக் கருதப்பட்டவரைக் கூட இந்த மாமனிதர் ஏமாற்ற விரும்பவில்லை. அவரை மதிக்கத் தவறியது தனது குற்றமே என்பதைப் பறைசாற்றுகிறார்கள்.

அது மட்டுமின்றி, கண் பார்வையற்ற இவர் விஷயத்தில் இதன் பிறகு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நடந்து கொண்ட முறை தான் இதை விடச் சிறப்பானது.

இதன் பின்னர் இவரைக் காணும் போதெல்லாம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரியாதை செலுத்துவார்கள்.

நூல் : முஸ்னத் அபீ யஃலா 3123

இவர் மூலம் அல்லாஹ் எனக்கு நல்ல அறிவுரை வழங்கினான் என்று அவரை மிகவும் மரியாதையோடு நடத்தினார்கள்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனா சென்று மாமன்னராக உயர்ந்த பின் அமைத்துக் கொண்ட ஆட்சியில் இவருக்கு முக்கியப் பங்கையும் அளித்தார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் போர்க்களம் சென்ற போது இரண்டு தடவை இவரிடம் ஆட்சியை ஒப்படைத்துச் சென்றார்கள்.

நூல் : அஹ்மத் 11894, 12530, அபூதாவூத் 2542

நபிகள் நாயகத்தின் பள்ளிவாசலில் மக்களைத் தொழுகைக்கு அழைக்கும் பணியை பிலால் (ரலி), இப்னு உம்மி மக்தூம் (ரலி) ஆகிய இருவரிடம் தான் நபிகள் நாயகம் (ஸல்) ஒப்படைத்திருந்தார்கள்.

நூல் : புகாரி 617, 620, 623, 1919, 2656, 7348

இவருக்கு இவ்வளவு உயர்ந்த தகுதியை வழங்கியிருப்பதிலிருந்து இந்த மாமனிதரின் போலித்தனமில்லாத பரிசுத்த ஆன்மீக வாழ்வை அறிந்து கொள்ளலாம்.

மிக எளிதில் மக்களை ஏமாற்ற உதவும் ஆன்மீகத் தலைமையை எவ்வாறு அப்பழுக்கற்றதாக ஆக்கிச் சென்றார்கள் என்பதற்கு மற்றொரு சான்றைப் பாருங்கள்!

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தளபதியாகக் கலந்து கொண்ட போர்களில் உஹதுப் போரும் ஒன்றாகும்.

இப்போரில் அவர்களின் பற்கள் உடைக்கப்பட்டன. அவர்களின் தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டு இரத்தம் வழிந்தது. அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்  இறைத் தூதரைக் காயப்படுத்தி பற்களையும் உடைத்தவர்கள் எவ்வாறு வெற்றி பெறுவார்கள்  என்று கூறினார்கள். உமக்கு அதிகாரத்தில் எந்தப் பங்குமில்லை என்ற குர்ஆன் வசனம் (3:128) அப்போது அருளப்பட்டது.

நூல் : முஸ்லிம் 3346

வேதனைப்படுத்தப்பட்டவர்கள் எதிரிகளைக் குறித்து இவ்வாறு கூறுவது சாதாரணமான ஒன்று தான். இறைத் தூதரைக் காயப்படுத்தியவர்கள் எவ்வாறு வெற்றி பெறுவார்கள் என்று அவர்கள் பயன்படுத்திய வாசகத்தை இந்த வகையில் குறை கூற முடியாது.  தனக்கு ஏதோ ஆற்றல் இருப்பதாகவும் தன்னுடன் மோதியவர்களைச் சபித்தே அழித்து விடுவேன் என்பது போன்ற ஆன்மீக ஆணவமும் இந்தச் சொற்றொடரில் இல்லை. இது ஒரு வேதனையின் வெளிப்பாடு தானே தவிர வேறு இல்லை  என்று தான் நாம் நினைப்போம். ஆனால், இறைவன் இதை விரும்பவில்லை.

இறைத் தூதரைக் காயப்படுத்தினால் காயப்படுத்தியவர்கள் தோல்வியைத் தான் தழுவ வேண்டும் என்பதில்லை. இறைவன் நாடினால் இத்தகைய கொடூரமானவர்களுக்கும் இவ்வுலகில் வெற்றியை வழங்குவான். மறுமையில் தான் இவர்களுக்கான சரியான தண்டனை கிடைக்கும்.

இறைத் தூதரைத் தாக்குவதோ, ஆதரிப்பதோ இவ்வுலகின் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்காது. அது இறைவனாக எடுக்கின்ற முடிவாகும். இது தான் இஸ்லாத்தின் அடிப்படைக் கோட்பாடு. இதை போதிக்கத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுப்பப்பட்டார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயன்படுத்திய சொற்றொடர் இந்த அடிப்படைக்கு எதிரானது என்று இறைவன் கருதுகிறான். தமக்கு இறைத்தன்மை உள்ளது என்பதை அறிவிப்பதற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்தச் சொற்றொடரைப் பயன்படுத்தா விட்டாலும், வேதனையின் வெளிப்பாடாகவே இருந்தாலும் இறைவன் இந்த வார்த்தைப் பிரயோகத்தைக் கூட விரும்பவில்லை.

தனது அதிகாரத்தில் தலையிடுவதாக இறைவன் எடுத்துக் கொள்கிறான்.

எனவே தான் முஹம்மதே அதிகாரத்தில் உமக்கு எந்தப் பங்கும் இல்லை என்று அறிவுறுத்துகிறான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பட்ட வேதனையை விட அவர்கள் கடவுளாகக் கருதப்படும் வாசலை முழுமையாக அடைக்க வேண்டும் என்பதில் தான் இறைவன் கவனம் செலுத்தினான்.

 யாராவது இவரிடம் மோதினால் தோல்வி நிச்சயம்  என்ற நிலை ஏற்பட்டால் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கிற அதிகாரம் இறைத் தூதரிடமும் உள்ளது என்ற நிலை ஏற்பட்டு விடும். எனவே தான் நபிகள் நாயகம் (ஸல்) அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்ற நேரத்திலும் அதை விட முக்கியமான இந்த அறிவுரையை வழங்குகிறான்.

 இவர்கள் எப்படி வெற்றி பெறுவார்கள்  என்று வேதனை தாள முடியாமல் கூறிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அடுத்த சில நிமிடங்களில் இறைவனின் இந்தக் கட்டளையையும் மக்களுக்குத் தெரிவிக்கிறார்கள்.

என்னைத் தாக்கியவர்கள் எப்படி வெற்றி பெறுவார்கள் என நான் கூறியது தவறு தான். இதை இறைவன் தான் முடிவு செய்ய வேண்டும். என்னை என் இறைவன் கண்டித்து விட்டான் என்று அந்த வேதனையிலும் மக்களிடம் தெரிவித்து விடுகிறார்கள்.

(குர்ஆன் என்பது அவர்களாகக் கற்பனை செய்து கொண்டதாக இருந்தால் இந்த வேதனையான நேரத்தில் இப்படிக் கற்பனை செய்து தன்னைத் தானே எவரும் கண்டித்துக் கொள்ளவே மாட்டார். இயல்பாகவே இது சாத்தியமாகாது. திருக்குர்ஆன் அல்லாஹ்வின் வேதம் தான் என்பதற்கு இதுவும் ஒரு ஆதாரமாக அமைந்துள்ளது தனி விஷயம்.)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முதல் மனைவி கதீஜா (ரலி) மூலம் அவர்களுக்கு நான்கு பெண் குழந்தைகளும், சில ஆண் குழந்தைகளும் பிறந்தனர். ஆனாலும், ஆண் குழந்தைகள் அனைவரும் சிறு பிராயத்திலேயே மரணித்து விட நான்கு பெண் மக்கள் மாத்திரமே அவர்களுக்கு இருந்தனர்.

மதீனாவுக்கு வந்து அங்கே மாபெரும் சாம்ராஜ்யத்தை நிறுவிய பின் அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. தமது பாட்டனார் இப்ராஹீம் நபியின் பெயரை அக் குழந்தைக்குச் சூட்டி மகிழ்ந்தார்கள்.

நான்கு பெண் குழந்தைகளுக்கு மத்தியில் ஒரு ஆண் குழந்தை பிறந்ததால் எல்லா தந்தையரும் மகிழ்ச்சியடைவதைப் போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் மகிழ்ச்சியடைந்தனர்.

ஆனால், ஆண் குழந்தையைக் கொடுத்த இறைவன் சிறு வயதிலேயே அக்குழந்தையைத் தன் வசம் எடுத்துக் கொண்டான். பதினாறு மாதக் குழந்தையாக இருந்த போது நபிகள் நாயகத்தின் மகன் இப்ராஹீம் இறந்தார்.

நூல் : அஹ்மத் 17760

இக்குழந்தை மீது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வைத்திருந்த அன்பைப் பின் வரும் ஹதீஸிலிருந்து நாம் அறியலாம்.

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது…

இப்ராஹீமின் உயிர் பிரிந்து கொண்டிருந்த நேரத்தில் நாங்கள் நுழைந்தோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கண்களிலிருந்து கண்ணீர் வடிந்தது.  அல்லாஹ்வின் தூதரே நீங்களுமா?  என்று அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்  இது இரக்க உணர்வாகும்  என்று கூறி விட்டு மீண்டும் அழுதார்கள்.  கண்கள் இரத்தக் கண்ணீர் வடிக்கின்றன; உள்ளம் வேதனைப்படுகிறது; எங்கள் இறைவனுக்குப் பிடிக்காத எதையும் நாம் பேச மாட்டோம்; இப்ராஹீமே! உமது பிரிவுக்காக நாம் கவலைப்படுகிறோம்  என்றும் கூறினார்கள்.

நூல் : புகாரி : 1303

தமது ஆண் குழந்தை இறந்ததற்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்த அளவு கவலைப்பட்டார்கள் என்பதை இந்த நிகழ்ச்சியின் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம். இந்த நாளில் மதீனா நகரில் சூரியக் கிரகணம் ஏற்பட்டது.

சூரிய, சந்திர கிரகணம் எதனால் ஏற்படுகிறது என்ற அறிவு அன்றைய மக்களுக்கு இருந்ததில்லை. உலகில் முக்கியமான யாரோ ஒருவர் மரணித்து விட்டார் என்பதைச் சொல்வதற்கே கிரகணம் ஏற்படுகிறது என்பது தான் கிரகணத்தைப் பற்றி அவர்களுக்கு இருந்த அறிவு.

யார் இறந்து விட்டார் என்பது அவர்களுக்குத் தெரியாவிட்டாலும் உலகின் ஏதோ ஒரு பகுதியில் யாரோ ஒரு முக்கியமானவர் மறைந்து விட்டார் என்று நினைத்துக் கொள்வார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மகன் இப்ராஹீம் மரணித்தவுடன் கிரகணம் ஏற்பட்டதால் இப்ராஹீமின் மரணத்திற்காகவே இது நிகழ்ந்துள்ளது என்று மக்கள் பரவலாகப் பேசிக் கொண்டனர்.

மக்கள் பேசிக் கொள்வது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காதுகளிலும் விழுந்தது.

அவர்கள் இதைக் கண்டு கொள்ளாமல் விட்டிருக்கலாம். இதனால் அவர்களது மதிப்பு உயரும். நபிகள் நாயகத்தின் மகனுக்கே சூரிய கிரகணம் ஏற்படுகிறது என்றால் இவர் எவ்வளவு ஆற்றல் மிக்கவராக இருக்க வேண்டுமென்ற நம்பிக்கை மக்களிடம் ஏற்படும்.

மக்கள் இது போல் பரவலாகப் பேசிக் கொண்டது தெரிய வந்தாலும் அதைக் கண்டிக்கின்ற மனநிலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இருக்கவில்லை.

சாதாரண நேரத்தில் தவறுகளை உடனுக்குடன் தயவு தாட்சண்யமின்றி கண்டிக்கின்ற எத்தனையோ பேர், சோகத்தில் மூழ்கிக் கிடக்கும் போது தமது கண் முன்னே நடக்கின்ற தவறுகளைக் கண்டு கொள்ளாது இருந்து விடுவார்கள். தவறைக் கண்டிப்பதை விட முக்கியமான இழப்பு அவர்களுக்கு ஏற்பட்டிருப்பதே இதற்குக் காரணம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் இது போன்ற கவலையில் தான் இருந்தார்கள்.

ஆனால், தமக்கு ஏற்பட்ட மாபெரும் துன்பத்தை விட மக்கள் அறியாமையில் விழுவது தான் அவர்களுக்கு மிகப் பெரிய துன்பமாகத் தெரிகின்றது. உடனே மக்களைக் கூட்டி அவர்களின் அறியாமையை அகற்றுகிறார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் (அவர்களது மகன்) இப்ராஹீம் மரணித்த அன்று சூரிய கிரகணம் ஏற்பட்டது. இப்ராஹீமின் மரணத்திற்காகவே சூரிய கிரகணம் ஏற்பட்டதாக மக்கள் பேசிக் கொண்டனர். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்  எவரது மரணத்திற்காகவோ, வாழ்வுக்காகவோ சூரிய, சந்திர கிரகணம் ஏற்படுவதில்லை. எனவே, நீங்கள் (கிரகணத்தைக்) கண்டால் தொழுது அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்  என்று கூறினார்கள்.

நூல் : புகாரி: 1043, 1061, 1063

இது போன்ற நிகழ்ச்சிகள் யாருடைய மரணத்திற்காகவும் ஏற்படாது. யாருடைய பிறப்பிற்காகவும் ஏற்படாது எனக் கூறி தமது மகனின் மரணத்துக்கும், இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று அறிவிக்கிறார்கள்.

ஒரு அரசியல் தலைவர் ஒரு ஊருக்கு வந்தவுடன் மழை பெய்தது என்றால் மகராசன், அல்லது மகராசி வந்தவுடன் மழை பொழிகிறது என்று மக்கள் கூறுகின்றனர். அந்தத் தலைவரை மேடையில் வைத்துக் கொண்டே இவ்வாறு புகழ்ந்து பேசுகின்றனர்.

இதைக் கேட்கின்ற அவர் முகத்தில் தான் எத்தனை பிரகாசம்! பகுத்தறிவு பேசும் தலைவரும், அதை எதிர்க்கும் தலைவரும் இதில் சமமானவர்களாகவே உள்ளனர். தெய்வீக அம்சம் அற்றவர்கள் எனக் கருதப்படும் அரசியல் தலைவருக்கே இந்த வார்த்தை இனிக்கிறது என்றால் ஆன்மீகத் தலைமையை என்ன வென்பது?

ஆனால், இந்த ஆன்மீகத் தலைவரோ இதைக் கேட்டு அருவருப்படைகிறார். நானே நாளை மறையும் போது இத்தகைய நிகழ்வு ஏற்பட்டாலும் அதற்கு என் மரணம் காரணம் அல்ல என்ற கருத்தையும் உள்ளடக்கி அறிவுரை கூறுகிறார். அதுவும் தமது சோகத்தை மூட்டை கட்டி வைத்து விட்டு மக்களுக்கு ஏற்பட்ட அறியாமைத் துன்பத்தை அகற்றிட முன்னுரிமை தருகிறார்.

உலக வரலாற்றில் இத்தகைய அற்புத மனிதரை யாரேனும் கண்டதுண்டா?

தேடித் தேடிப் பார்த்தாலும் எள்ளின் முனையளவு கூட மக்களை ஏமாற்றாதவராக இவர் மட்டும் தான் தென்படுகிறார். ஏமாற்றுவதற்கு எல்லா விதமான வாய்ப்புகள் இருந்தும் மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டுகிறார்.

அன்பு மேலிட்டு அல்லது அறியாமையின் காரணமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தோழர்கள் வரம்பு மீறிப் புகழும் விதமாக சில வார்த்தைகளைப் பயன்படுத்தி விடுவதுண்டு. அல்லது வரம்பு மீறி நடந்து கொள்வதுண்டு. இது போன்ற எல்லாச் சந்தர்ப்பங்களிலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அம்மக்களை எச்சரிக்காது இருந்ததில்லை. தம்மை மனித நிலைக்கு மேல் உயர்த்த வேண்டாம் என்று அறிவுரை கூறி அவர்களின் அறிவை மேம்படுத்தாமல் இருந்ததில்லை.

நாம் மதிக்கின்ற ஒரு மனிதர் இன்று மழை பெய்யும் போல் தெரிகிறதே எனக் கூறுவார். பல நேரங்களில் அவர் கூறுவது போல் நடக்கா விட்டாலும் சில நேரங்களில் அவ்வாறு நடந்து விடுவதுண்டு.  நீங்கள் கூறியவாறு மழை பெய்து விட்டதே  என்று அவரிடம் நாம் குறிப்பிடுவோம். அவர் எதைக் கூறினாலும் அது நடந்தே தீரும் என்ற எண்ணத்தில் நாம் அவ்வாறு கூறுவதில்லை. இந்த முறை அவர் கூறியது போல் தற்செயலாக நடந்து விட்டது என்று உணர்ந்து தான் இவ்வாறு கூறுகிறோம்.

இது போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைச் செய்தியின் அடிப்படையில் அறிவித்த அனைத்தும் நிறைவேறின. இறைச் செய்தியின் அடிப்படையில் இல்லாமல் மனிதர் என்ற முறையில் ஊகம் செய்து கூறிய விஷயங்களில் சில விஷயங்கள் நடந்து விடும். இது போன்ற சந்தர்ப்பங்களில் நபிகள் நாயகத்தின் தோழர்கள்  இது அல்லாஹ் நினைத்ததும், நீங்கள் நினைத்ததுமாகும்  என்ற கூறுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்கள்.

மரியாதை வைத்திருக்கின்ற மனிதரைப் பற்றி நாம் கூறும் சொல்லை விட நபித் தோழர்களின் இந்தக் கூற்று இறைநினைவுக்கு நெருக்கமானதாகும். ஏனெனில்  நீங்கள் கூறியபடி நடந்து விட்டதே  என்று தான் நாம் குறிப்பிடுவோம்.  அல்லாஹ்வும், நீங்களும் நினைத்தபடி  எனக் கூற மாட்டோம். ஆனால், நபித்தோழர்கள்  அல்லாஹ் நினைத்தபடியும் நீங்கள் நினைத்தபடியும் நடந்து விட்டது  எனக் கூறி அல்லாஹ்வை முன்னிலைப்படுத்தினார்கள்.

அல்லாஹ்வை முதலில் கூறி விட்டு அதன் பின்னர் நபிகள் நாயகத்தைக் கூறியதாலும், அந்த மக்களின் இதயத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெய்வீக அம்சம் கொண்டவர்கள் அல்ல என்பது ஆழமாகப் பதிந்திருந்ததாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் இந்த வார்த்தைப் பிரயோகத்தைத் தடை செய்யாமல் இருந்து வந்தனர். இந்த நிலையில் பின்வரும் நிகழ்ச்சி நடந்தது.

ஒரு பாதிரியார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்தார். முஹம்மதே! நீங்கள் (கடவுளுக்கு) இணை கற்பிக்காமல் இருந்தால் நீங்கள் தான் சிறந்த சமுதாயம்  என்று அவர் கூறினார். இதைக் கேட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சுப்ஹானல்லாஹ்  (அல்லாஹ் தூயவன் என்பது இதன் பொருள். ஆச்சரியத்தை வெளிப்படுத்தும் போது இவ் வாறு கூறுவது வழக்கம்) என்று ஆச்சரியத்துடன் கூறி விட்டு  அது என்ன? என்று வினவினார்கள். அதற்கு அந்தப் பாதிரியார்  நீங்கள் சத்தியம் செய்யும் போது கஅபாவின் மீது ஆணையாக எனக் கூறுகிறீர்களே அது தான்  என்று அவர் விளக்கினார். சற்று நேரம் மவுனமாக இருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்  இனி மேல் சத்தியம் செய்வதாக இருந்தால் கஅபாவின் எஜமான் மீது ஆணையாக  எனக் கூறுங்கள் என்று (முஸ்லிம்களுக்குக்) கூறினார்கள். பின்னர் அந்தப் பாதிரியார்  முஹம்மதே, நீங்கள் அல்லாஹ்வுக்கு நிகரானவர்களைக் கற்பனை செய்யாமல் இருந்தால் நீங்கள் தான் சிறந்த சமுதாயம்  என்று கூறினார். சுப்ஹானல்லாஹ்  என்று ஆச்சரியத்தை வெளிப்படுத்திய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்  அது என்ன?  என்ற கேட்டார்கள்.  இது அல்லாஹ் நினைத்ததும் நீங்கள் நினைத்ததுமாகும் என்று கூறுகிறீர்களே அது தான்  என்று அவர் விடையளித்தார். சற்று நேரம் மவுனமாக இருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்  இவர் விமர்சித்து விட்டார். எனவே, இனி மேல் யாரேனும்  அல்லாஹ் நினைத்த படி  என்று கூறினால் சற்று இடைவெளி விட்டு  பின்னர் நீங்கள் நினைத்தீர்கள்  என்று கூறுங்கள் என்று (முஸ்லிம்களுக்குக்) கூறினார்கள்.

நூல் : அஹ்மத் 25845

 இது அல்லாஹ் நினைத்ததும் நீங்கள் நினைத்ததுமாகும்  என்று கூறுவதன் மூலம் நபித்தோழர்கள் அல்லாஹ்வுக்கு நிகராக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கருதவில்லை. ஆயினும், அந்த வார்த்தைப் பிரயோகம் அல்லாஹ்வுக்கு இணைகற்பிப்பது போல் உள்ளதாக மாற்று மதத்தவர் ஒருவர் சுட்டிக் காட்டுகிறார். இதை ஏற்றுக் கொண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்  இது அல்லாஹ் நினைத்ததாகும். பின்னர் நீங்கள் நினைத்தீர்கள்  என்று கூறுமாறு கட்டளையிடுகிறார்கள்.

விபரீதமான எண்ணத்தில் நபித் தோழர்கள் கூறியிருந்தால் அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆரம்பத்திலேயே தடை செய்திருப்பார்கள்.

ஆயினும், வார்த்தை அமைப்பு நபிகள் நாயகத்தையும், அல்லாஹ்வையும் சமமாக ஆக்குவது போல் இருப்பதாகச் சுட்டிக் காட்டப்பட்டவுடன் அதில் உள்ள நியாயத்தை ஏற்கிறார்கள்.

 ஐயா! பாதிரியாரே! நாங்கள் அந்த எண்ணத்தில் அவ்வாறு கூறவில்லை  என்று வாதம் செய்திருக்க முடியும். ஆன்மீகத் தலைவர் என்பதால் மனிதத் தன்மைக்கு அப்பாற்பட்டவர் என்று சாதித்திருக்க முடியும். அப்படித் தான் ஆன்மீகத் தலைவர்கள் சாதித்து வருகின்றனர். அவ்வாறு சாதிக்காமல் அந்த வார்த்தைகள் தவிர்க்கப்பட வேண்டியவை என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இதன் பின்னர் இந்த நிகழ்ச்சியை அறியாதவர் யாரேனும் பழைய வழக்கப்படி பேசினால் அதைக் கடுமையாகக் கண்டித்து விடுவார்கள்.

ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம்  இது அல்லாஹ் நினைத்ததும், நீங்கள் நினைத்ததுமாகும்  என்று கூறினார். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்  என்னையும், அல்லாஹ்வையும் நீ சமமாக ஆக்குகிறாயா? அவ்வாறில்லை. அல்லாஹ் மட்டும் நினைத்தது தான் இது  என்று கூறினார்கள்.

நூல் : அஹ்மத் 1742, 1863, 2430, 3077

இது அல்லாஹ் நினைத்தது தான். பின்னர், நீங்கள் நினைத்தீர்கள் என்ற சொற்றொடரை தமக்கு மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் எனக் கூறாமல் இது போன்று யாருக்கு வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று பொது அனுமதியும் கொடுக்கிறார்கள்.

இது அல்லாஹ் நினைத்ததும் இன்னார் நினைத்ததுமாகும் என்று கூறாதீர்கள். மாறாக இது அல்லாஹ் நினைத்தது தான். பின்னர் இன்னார் நினைத்தார் எனக் கூறுங்கள்  என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்கள் : அபூதாவூத் 4328, அஹ்மத் 22179, 22257, 22292

எந்தச் சொல்லைத் தமக்குப் பயன்படுத்தலாம் என அனுமதித்தார்களோ அதை எந்த மனிதருக்கும் பயன்படுத்தலாம் என்று அறிவிக்கிறார்கள்.

ஆன்மீகத் தலைவர்கள் என்று கருதப்படுவோருக்கு மற்றவர்களுக்குச் செய்யப்படுவதை விட அதிகப்படியான மரியாதை செய்யப்படுவது உலகெங்கும் காணப்படும் வழக்கமாகவுள்ளது.

நாட்டின் அதிபரே ஆனாலும் அவரால் மதிக்கப்படும் ஆன்மீகத் தலைவரின் முன்னால் கைகட்டி நிற்கும் நிலையை நாம் சர்வ சாதாரணமாகப் பார்க்கிறோம். நாட்டின் மிக உயர்ந்த அதிகாரம் வழங்கப்பட்டவர்கள் ஆன்மீகத் தலைவர்களின் கால்களில் விழுந்து கும்பிடும் காட்சியையும் காண்கிறோம்.

அன்று முதல் இன்று வரை உலகெங்கும் காணப்படும் நிலை இது தான்.

ஆன்மீகத் தலைவர்களின் கால்களில் விழுந்து கும்பிடுவது, அவர்களின் கால்களைக் கழுவி, கழுவப்பட்ட தண்ணீரை பக்தியுடன் அருந்துவது என்றெல்லாம் ஆன்மீகத் தலைவர்களுக்கு மரியாதை செய்யப்பட்டு வருகிறது.

அரசியல் தலைவர்களுக்கு இது போன்ற மரியாதை செய்யப்படும் போது அவர்கள் கண்டு கொள்ளாமல் இருப்பதை நாம் மன்னித்து விடலாம். ஆனால், ஆன்மீகத் தலைவர்கள் இத்தகைய மரியாதையை ஏற்றுக் கொள்வதை மன்னிக்க முடியாது. ஆன்மீகத் தலைவர் என்பவர் மற்றவர்களை விட அதிகம் பக்குவப்பட்டவராக இருத்தல் அவசியம்.

மற்றவர்கள் மரியாதையை எதிர்பார்ப்பது போல் ஆன்மீகத் தலைவர் எதிர்பார்க்கக் கூடாது. மற்றவர்களை விட அதிகமான அடக்கம் அவரிடம் காணப்படுதல் வேண்டும்.

மக்களிடம் அதிகமான மரியாதையை எதிர்பார்ப்பவர் நிச்சயம் மனப்பக்குவம் அடையவில்லை என்பது தான் பொருள். அறிவுடைய மக்கள் இப்படித்தான் முடிவு செய்ய வேண்டும். ஆனால், இந்த அடிப்படை அறிவு கூட பெரும்பாலான மக்களுக்கும் இல்லை. ஆன்மீகத் தலைவர்களுக்கும் இல்லை. உலகிலேயே இதை உறுதியாகக் கடைபிடித்த ஒரே ஆன்மீகத் தலைவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது வாழ்நாளில் ஒருக்காலும் தமது கால்களில் விழுந்து மக்கள் கும்பிடுவதை விரும்பவில்லை. அறியாத சிலர் அவ்வாறு செய்ய முயன்ற போது கடுமையாக அதைத் தடுக்காமலும் இருந்ததில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியைப் பாருங்கள்.

நான் ஹியரா என்னும் நகருக்குச் சென்றேன். அங்குள்ளவர்கள் தமது தலைவருக்குச் சிரம் பணிந்து கும்பிடுவதைப் பார்த்தேன். இவ்வாறு சிரம் பணிவதற்கு நபிகள் நாயகமே அதிகத் தகுதியுடையவர்கள்  என்று (எனக்குள்) கூறிக் கொண்டேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து  நான் ஹியரா என்னும் ஊருக்குச் சென்றேன். மக்கள் தமது தலைவருக்குச் சிரம் பணிவதைக் கண்டேன். நாங்கள் சிரம் பணிந்திட நீங்களே அதிகம் தகுதியுடையவர்  என்று கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்  (எனது மரணத்திற்குப் பின்) எனது அடக்கத் தலத்தைக் கடந்து செல்ல நேர்ந்தால் அதற்கும் சிரம் பணிவீரோ?  எனக் கேட்டார்கள்.  மாட்டேன்  என்று நான் கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்  ஆம்; அவ்வாறு செய்யக் கூடாது. ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்குச் சிரம் பணியலாம் என்றிருந்தால் கணவனுக்காக மனைவியை அவ்வாறு செய்யச் சொல்லியிருப்பேன்  என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : கைஸ் பின் ஸஅத் (ரலி)

நூல் : அபூதாவூத் 1828

தமது காலில் விழுவதற்கு அனுமதி கேட்கப்பட்ட போது  எந்த மனிதரும் எந்த மனிதரின் காலிலும் விழக் கூடாது  என்று பொதுவான விதியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காரணம் காட்டுகிறார்கள். காலில் விழுபவரும், விழப்படுபவரும் இருவருமே மனிதர்கள் தான் என்று கூறி சிரம் பணிதல் கடவுளுக்கு மட்டுமே உரியது எனக் கூறுகிறார்கள்.

உலகம் முழுவதும் கணவர் காலில் மனைவியர் விழுவது அன்றைக்கு வழக்கமாக இருந்தது. அதையே நான் அனுமதிக்காத போது என் காலில் எப்படி விழலாம் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

ஆன்மீகத் தலைவர்கள் என்ற பெயரில் மக்களை ஏமாற்றுவோரைக் கண்டித்து எத்தனையோ சீர்திருத்தவாதிகள் இங்கே போராடியதுண்டு. ஆன்மீகவாதிகளின் முகத்திரையைக் கிழித்துக் காட்டியதுண்டு. ஆனால், அது போன்ற மரியாதை தங்கள் அபிமானிகளால் தங்களுக்குச் செய்யப்படும் போது அதை அவர்கள் இன்முகத்துடன் ஏற்றுக் கொள்வதை நாம் பார்க்கிறோம்.

வாழும் போதே தமக்குச் சிலை அமைத்த சீர்திருத்தவாதிகளையும், அறியாத மக்கள் தமக்குச் சிலை வைக்கும் போது அதைத் தடுக்காமல் மகிழ்ச்சியடைந்த தலைவர்களையும், தமது மரணத்திற்குப் பின் தமக்குச் சிலை அமைக்க வலியுறுத்திச் சென்றவர்களையும் பார்க்கிறோம். இவர்கள் எதை எதிர்த்தார்களோ அதே காரியம் தமக்குச் செய்யப்படும் போது ஏற்றுக் கொண்டனர். நம்பகத் தன்மையை இதனால் இழந்தனர்.

ஆனால் ஆன்மீகத் தலைவராக இருந்து கொண்டே இந்தச் சீர்திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்திய ஒரே தலைவர் நபிகள் நாயகமே.

உங்கள் கால்களில் நாங்கள் விழுகிறோமே என்று மக்கள் கேட்கும் போது தமது மரணத்திற்குப் பிறகு தனது அடக்கத் தலத்தில் விழுந்து பணிவார்களோ என்று அஞ்சி அதையும் தடுக்கிறார்கள். எனது மரணத்திற்குப் பின் எனது அடக்கத்தலத்தில் கும்பிடாதீர்கள் என்று வாழும்போதே எச்சரித்துச் சென்றனர்.

எனது அடக்கத்தலத்தை வணக்கத் தலமாக ஆக்கி விடாதே என்று (மக்களுக்குத் தெரியும் வகையில்) இறைவனிடம் நபிகள் நாயகம் (ஸல்) பிரார்த்தனை செய்தார்கள்.

நூல் : அஹ்மத்: 7054

எனது அடக்கத்தலத்தில் எந்த நினைவு விழாவும் நடத்தாதீர்கள்!

நூல்கள் : அபூதாவூத்: 1746 அஹ்மத் 8449

யூதர்களும், கிறித்தவர்களும் தங்கள் இறைத் தூதர்களின் அடக்கத் தலங்களை வணக்கத் தலங்களாக ஆக்கி விட்டனர். இதனால் அவர்களுக்கு அல்லாஹ்வின் சாபம் ஏற்படும் என்று தமது மரணப் படுக்கையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்தனர்.

நூல் : புகாரி 436, 1330, 1390, 3454, 4441, 4444, 5816

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு எச்சரிக்கை செய்யாவிட்டால் அவர்களின் அடக்கத் தலத்தையும் உயர்த்திக் கட்டியிருப்பார்கள் என நபிகள் நாயகத்தின் மனைவி ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்.

நூல் : புகாரி 1330, 1390, 4441

பதினான்கு நூற்றாண்டுகள் கடந்த பின்னரும் அவர்களின் அடக்கத்தலத்தில் இன்று வரை எந்த நினைவு நாளும் அனுசரிக்கப்படுவதில்லை. அடக்கத்தலத்தில் எவரும் விழுந்து கும்பிடுவதில்லை. இந்த அளவுக்குத் தெளிவான எச்சரிக்கை விடுத்து மனித குலம் முழுமையாக நம்புவதற்கு ஏற்ற ஒரே தலைவராக நபிகள் நாயகம் (ஸல்) பிரகாசிக்கிறார்கள்.

மனிதன் சுய மரியாதையை விட்டு விடக் கூடாது என்று அழுத்தமாகக் கூறிய அவர்கள் தமக்காகக் கூட மற்றவர்கள் சுயமரியாதையை இழக்கக் கூடாது என்று கூறினார்கள்.

சிலைகளுக்கு எந்தச் சக்தியும் இல்லை என்று பிரச்சாரம் செய்த பலர் தமது தலைவரின் சிலைகளுக்கு இன்று மாலை மரியாதை செய்து தங்கள் சுயமரியாதையை இழப்பதைக் காண்கிறோம். தமது தலைவர் அடக்கம் செய்யப்பட்ட திசை நோக்கி வணங்குவதாக வெளிப்படையாக அறிவிப்பதைக் காண்கிறோம். இறந்து போனவர் உணர மாட்டார் என்பது நன்றாகத் தெரிந்தும் அவரது நினைவிடத்தில் மலர் தூவுவதைப் பார்க்கிறோம்.

இவையெல்லாம் பகுத்தறிவுக்கும், சுயமரியாதைக்கும் அப்பாற்பட்டது என்று நன்றாகத் தெரிந்திருந்தும் அதைச் செய்வதைப் பார்க்கிறோம்.

நபிகள் நாயகத்தையும் பார்க்கிறோம்.

ஐம்பது வருடத்துக்குள் பகுத்தறிவு, மூட நம்பிக்கையாக இங்கே மாறியது போல் அந்த மாமனிதரின் சமுதாயம் மாறவில்லை.

அவர் மீது உயிரையே வைத்திருக்கும் முஸ்லிம் சமுதாயம் அவருக்காகச் சிலை வடிக்கவில்லை.

* அவரது சமாதியில் விழுந்து கும்பிடவில்லை.

* அவருக்காக எந்த நினைவு விழாவும் நடத்தவில்லை.

* அவரது அடக்கத்தலத்தில் மலர் தூவுதலும் இல்லை. மலர்ப் போர்வையும் சாத்தப்படுவதில்லை.

* எந்த முஸ்லிமுடைய சுயமரியாதைக்கும் அவரால் எள்ளளவும் பங்கம் ஏற்படவில்லை.

 * காலில் விழுந்து கும்பிடுவது கிடக்கட்டும்! அதற்கும் குறைவான மரியாதையைக் கூட நபிகள் நாயகம் ஏற்கவில்லை.

வயதில் பெரியவர், ஆசிரியர், தலைவர்கள், முதலாளிகள், நிர்வாகிகள், மேலதிகாரிகள் போன்றோருக்காக மற்றவர்கள் எழுந்து நின்று மரியாதை செய்வதை உலகமெங்கும் காண்கிறோம்.

மேல் நிலையில் உள்ளவர்கள் இந்த மரியாதையை உளமார விரும்புவதையும் நாம் காண்கிறோம். எழுந்து நிற்பவனும் நம்மைப் போன்ற மனிதன் தானே! நமக்காக எழுந்து நின்றால் அவரது சுயமரியாதைக்கு அது இழுக்கு அல்லவா? என்று ஒரு தலைவரும் சிந்தித்ததாக உலக வரலாற்றில் நாம் அறியவில்லை.

மேடையில் பல தலைவர்கள் முன்கூட்டியே வந்து அமர்ந்திருப்பார்கள். கடைசியாக சுயமரியாதையைப் பேசும் தலைவர் மேடைக்கு வருவார். உடனே மேடையில் அமர்ந்திருக்கும் குட்டித் தலைவர்கள் அனைவரும் எழுந்து நிற்பதை நாம் பார்க்கிறோம்.  நானும் உங்களைப் போன்ற மனிதன் தானே! எனக்காக எழுந்து நிற்பது உங்களுக்கு இருக்க வேண்டிய சுயமரியாதைக்கு இழுக்கு அல்லவா?  என்ற எந்தத் தலைவரும் அறிவுரை கூறியதாக நாம் காணவில்லை.

அரசியல் தலைவர்களும் இவ்வாறு கூறியதில்லை. சுயமரியாதைத் தலைவர்களும் இவ்வாறு கூறியதில்லை. ஆன்மீகத் தலைவர்களும் கூறியதில்லை.

இந்த மாமனிதரோ எந்த மனிதரும் எந்த மனிதருக்காகவும் மரியாதை செய்யும் விதமாக எழுந்து நிற்கக் கூடாது என்று கட்டளை பிறப்பித்தார்கள்.

நபிகள் நாயகத்துக்குப் பின் முஸ்லிம் சாம்ராஜ்யத்தின் ஐந்தாவது அதிபராகத் திகழ்ந்தவர் முஆவியா (ரலி). அவர் வெளியே வந்த போது அவரைக் கண்ட அப்துல்லாஹ் பின் ஸுபைர் அவர்களும், இப்னு சப்வான் அவர்களும் எழுந்து நின்றனர். உடனே முஆவியா (ரலி)  அமருங்கள்  என்றார். தனக்காக மக்கள் எழுந்து நிற்க வேண்டும் என்று யார் விரும்புகிறாரோ அவர் தனது தங்குமிடத்தை நரகத்தில் ஏற்படுத்திக் கொள்கிறார்  என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியதை நான் செவியுற்றுள்ளேன் என்றும் முஆவியா (ரலி) கூறினார்.

நூல்கள் : திர்மிதி 2769 அபூதாவூத் 4552

மன்னருக்காகக் கூட மக்கள் எழக் கூடாது. அவ்வாறு எழ வேண்டும் என்று எந்த முஸ்லிமும் எதிர்பார்க்கக் கூடாது என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவாக அறிவித்துச் சென்றதை இந்த வரலாற்றிலிருந்து நாம் அறிகிறோம்.

மற்றவர்களுக்கு இவ்வாறு போதித்தாலும் தாம் ஆன்மீகத் தலைவராக இருப்பதால் தமக்காக மட்டும் மக்கள் எழுந்து நின்று மரியாதை செய்வதை விரும்பினார்களா? நிச்சயமாக இல்லை.

உலகத்தில் நபிகள் நாயகத்தை விட எங்களுக்கு விருப்பமான ஒருவரும் இருந்ததில்லை. ஆயினும் அவர்கள் எங்களை நோக்கி வரும் போது நாங்கள் அவர்களுக்காக எழ மாட்டோம். இதை அவர்கள் கடுமையாக வெறுப்பார்கள் என்பதே இதற்குக் காரணம்.

நபிகள் நாயகத்துக்கு பத்தாண்டுகள் பணிவிடை செய்த அனஸ் (ரலி) இதை அறிவிக்கிறார்.

நூல்கள் : அஹ்மத் 12068, 11895 திர்மிதீ 2678

நபிகள் நாயகத்தை அந்த மக்கள் நேசித்தது போல் எந்த மக்களும் எந்தத் தலைவரையும் நேசித்ததில்லை. ஆனாலும் நபிகள் நாயகம் (ஸல்) வரும் போது சபையில் இருக்கும் ஒருவரும் அவர்களுக்காக எழக் கூடாது என்பதைத் தெளிவாக அவர்கள் அறிவித்திருக்கிறார்கள். ஒரு மனிதனுக்குச் செய்யப்படும் சாதாரண மரியாதையைக் கூட மாபெரும் ஆன்மீகத் தலைவரான நபிகள் நாயகம் (ஸல்) ஏற்கவில்லை. இதனால் மற்றவர்களின் சுயமரியாதை பாதிக்கப்படும் என்பதில் கவனம் செலுத்துகிறார்கள்.

தமக்காக மக்கள் எழக் கூடாது என்பதை எந்த அளவுக்கு நபிகள் நாயகம் (ஸல்) வெறுத்தார்கள் என்பதற்கு பின்வரும் நிகழ்ச்சி சான்றாகவுள்ளது.

ஒரு முறை நபிகள் நாயகம் (ஸல்) நோய் வாய்ப்பட்டார்கள். அப்போது அவர்கள் உட்கார்ந்த நிலையில் தொழுகை நடத்தினார்கள். நாங்கள் அவர்களுக்குப் பின்னால் நின்று தொழுதோம். அவர்கள் திரும்பிப் பார்த்த போது நாங்கள் நின்று கொண்டிருப்பதைக் கண்டார்கள். சைகை மூலம் எங்களை உட்காரச் சொன்னார்கள். நாங்கள் உட்கார்ந்த நிலையில் அவர்களைப் பின் பற்றித் தொழுதோம். தொழுகையை முடித்தவுடன்  பாரசீக, ரோமாபுரி மன்னர்கள் அமர்ந்திருக்க மக்கள் நிற்பார்களே அது போன்ற செயலைச் செய்ய முற்பட்டு விட்டீர்களே! இனி மேல் அவ்வாறு செய்யாதீர்கள். உங்கள் தலைவர்களைப் பின்பற்றித் தொழுங்கள்! அவர் நின்று தொழுகை நடத்தினால் நீங்களும் நின்று தொழுங்கள்! அவர் உட்கார்ந்து தொழுகை நடத்தினால் நீங்களும் உட்கார்ந்து தொழுகை நடத்துங்கள்  என்று கூறினார்கள்.

நூல் : முஸ்லிம் 624

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உட்கார்ந்து தொழுத போது மக்களும் உட்கார்ந்து தொழுததாக புகாரி 689, 732, 733, 805, 1114, 688 ஆகிய ஹதீஸ்களிலும் காணலாம். யாருக்கேனும் நிற்க இயலாத அளவுக்கு உடல் உபாதை ஏற்பட்டால் அவர் உட்கார அனுமதி உண்டு.

அந்த அடிப்படையில் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உட்கார்ந்து தொழுவித்தார்கள். ஆனால் பின்னால் தொழுதவர்களுக்கு எந்த உபாதையும் இல்லாததால் அவர்கள் நின்று தொழுதார்கள். அவர்கள் நபிகள் நாயகத்துக்கு மரியாதை செய்வதற்காக நிற்கவில்லை. தொழுகையில் அது ஒரு நிலை என்பதற்காகவே நின்றார்கள். எனவே, அவர்களைக் கண்டிக்க வேண்டிய அவசியம் இல்லை.

ஆனாலும் நபிகள் நாயகம் (ஸல்) முன்னால் அமர்ந்திருக்க மற்றவர்கள் பின்னால் நிற்பதைப் பார்க்கும் போது நபிகள் நாயகத்தின் முன்னே யாரும் அமரக் கூடாது என்பதற்காக நிற்பது போன்ற தோற்றம் ஏற்படுகிறது. ஏனைய நாட்டு மன்னர்களுக்கு முன் மக்கள் நிற்பது போல் இது தோன்றுகிறது. அந்த வாடை கூட தம் மீது வீசக் கூடாது என்பதற்காக அனைவரையும் அமர்ந்து தொழுமாறு நபிகள் நாயகம் ஆணையிடுகிறார்கள். தமக்கு மரியாதை செலுத்துவ தற்காக அம்மக்கள் நிற்கவில்லை என்பது நன்றாகத் தெரிந்திருந்தும் அப்படியொரு தோற்றம் கூட ஏற்படக் கூடாது என்று கருதி இதற்கும் தடை விதித்ததை அறியும் போது இந்த மாமனிதரின் அப்பழுக்கற்றத் தூய்மை நம் கண்களைக் கலங்க வைக்கிறது.

கண்ணை மூடிக் கொண்டு ஒருவரின் பின்னே செல்ல நினைத்தால் அதற்கான முழுத் தகுதியும் இவருக்கு மட்டுமே உள்ளது. எந்த வகையிலும் இவர் நம்மை ஏமாற்றவே மாட்டார். தமது அற்பமான சுயநலனுக்குக் கூட நம்மைப் பயன்படுத்த மாட்டார் என்று ஒருவரைப் பற்றிக் கருதுவதாக இருந்தால் இவர் ஒருவருக்கு மட்டும் தான் அந்தத் தகுதியிருக்கிறது என்பதற்கு இந்த நிகழ்ச்சியும் சான்றாக உள்ளது.

இந்த இடத்தில் ஒரு விஷயத்தை முஸ்லிம்கள் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

வரவேற்பதற்காகவும், அன்பை வெளிப்படுத்துவதற்காகவும் ஒருவருக்காக மற்றவர் எழலாம். மரியாதைக்காகத் தான் எழக்கூடாது. பெற்ற மகள் தம்மைத் தேடி வந்த போது வாசல் வரை சென்று நபிகள் நாயகம் (ஸல்) வரவேற்றுள்ளனர்.

நூல் : திர்மிதீ 3807

நம் வீட்டுக்கு ஒருவர் வரும் போது நாம் எழலாம். அது போல் அவர் வீட்டுக்கு நாம் போகும் போது அவர் எழ வேண்டும். இதற்குப் பெயர் தான் வரவேற்பு.

ஒருவர் நம்மிடம் வரும் போது நாம் எழுந்து வரவேற்கிறோம். ஆனால் அவரிடம் நாம் சென்றால் அவர் எழுந்து வரவேற்பதில்லை என்றால் மரியாதை நிமித்தமாகவே அவருக்கு நாம் எழுந்துள்ளோம் என்பது பொருள். இது இஸ்லாத்தில் தடை செய்யப்பட்டுள்ளது. எழுந்து நிற்பது இரு தரப்புக்கும் பொதுவாக இருந்தால் மட்டுமே அது வரவேற்பில் அடங்கும்.

தமக்காக எழுந்து நிற்பதைக் கூட நிராகரித்த ஒரே தலைவராக நபிகள் நாயகம் (ஸல்) திகழ்வதால் தான் முஸ்லிம்கள் அவரை நூறு சதவிகிதம் பின்பற்றுகின்றனர்.

மக்களிடமிருந்து தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்வதிலும், எல்லா வகையிலும் மக்களிடமிருந்து தாங்கள் வேறுபட்டவர்கள் என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதிலும் தான் ஆன்மீகத் தலைவர்களின் எதிர்காலம் அடங்கியுள்ளது.

மக்களுடன் சர்வ சாதாரணமாக அவர்கள் நடந்து கொண்டால் ,மனிதத் தனிமைக்கு அப்பாற்பட்ட எந்தச் சிறப்பும் அவர்களுக்கு இல்லை என்பது மக்களிடம் வெளிச்சமானால் அவர்களை மக்கள் ஏற்க மாட்டார்கள்.

ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மாத்திரம் தான் தாம் ஒரு ஆன்மீகத் தலைவராக இருந்த போதும் எந்த வகையிலும் தாம் மனிதத் தனிமைக்கு அப்பாற்பட்டவர் அல்லர் என அறிவித்துக் கொண்டே இருந்தார்கள். அறியாத மக்கள் அவர்களை மனித நிலையை விட்டும் அப்பாற்பட்டவர்களாகக் கருதினாலோ, அல்லது அவர்கள் பயன்படுத்தும் சொற்களில் இத்தகைய கருத்துக்கு இடமிருந்தாலோ அதை உடனடியாகக் கண்டித்துத் திருத்தி விடுவார்கள்.

அவர்களின் வரலாற்றில் இதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. இந்த நிகழ்ச்சியைப் பாருங்கள்!

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்களுக்குக் கட்டளையிடும் போது அவர்களுக்கு இயன்றதையே கட்டளையிடுவார்கள். அப்போது சில நபித் தோழர்கள்  அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உங்களைப் போன்றவர்களாக இல்லை. அல்லாஹ் உங்களின் முன் பாவங்களையும், பின் பாவங்களையும் மன்னித்து விட்டான்.  என்று கூறினார்கள். இதைக் கேட்டதும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடும் கோபம் கொண்டார்கள். அந்தக் கோபத்தின் அறிகுறி அவர்களின் முகத்தில் தென்பட்டது.   நான் உங்களை விட இறைவனை அறிந்தவன். அவனை அதிகம் அஞ்சுபவன்  எனக் கூறினார்கள்.

நூல் : புகாரி: 20

பொதுவாக ஆன்மீகத் தலைவர்கள் தாம் கூறும் ஆன்மீக நெறியைத் தாம் கடைப் பிடிக்காவிட்டாலும் தமது சீடர்களும், பக்தர்களும் முழுமையாகக் கடைப் பிடிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். வீடு வாசல் குழந்தை குட்டிகள் என அனைத்தையும் மறந்து தனது குருநாதரே கதி என்று கிடப்பவர்களைத் தான் இவர்கள் மிகவும் விரும்புவார்கள்.

இத்தகையோர் கூட்டம் பெருகப் பெருகத் தான் இவர்களது மதிப்பும், செல்வமும் உயரும்.

ஆனால் மாமனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்  எது இயலுமோ அதைத் தான் செய்ய வேண்டும். ஆன்மீகத்தின் பெயரால் சுமக்க முடியாத சுமைகளைச் சுமந்து விடக் கூடாது  என்று அறிவுரை கூறி வந்தார்கள்.

குடும்பம், ஆட்சி, நிர்வாகம், பிரச்சாரம் என்று பல்வேறு பொறுப்புகள் அவர்கள் மீது இருந்ததால் முழு நேரத்தையும் வணக்க வழிபாடுகளிலேயே அவர்களும் செலவிட மாட்டார்கள்.

ஆயினும் சில நபித் தோழர்கள் வேறு விதமாக நினைத்தனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைவனுடைய தூதராக இருப்பதால் அவர்கள் குறைவாக வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவது போதுமானது. ஏனெனில், இறைத் தூதர் என்ற தகுதியின் மூலம் மறுமையில் அவர்கள் மகத்தான பதவியைப் பெற்று விட முடியும். நம்மைப் போன்ற சாதாரண மக்கள் அப்படி நடக்கக் கூடாது. அவர்களை விட நாம் அதிகமதிகம் மார்க்கத்திற்காகச் செலவிட்டாக வேண்டும் என்பது தான் அவர்களின் நினைப்பு.

எல்லாக் காலத்திலும் மக்களின் நம்பிக்கை இப்படித் தான் இருக்கிறது. இதனால் தான் ஆன்மீகத் தலைவர்கள் கஞ்சா அடிக்கின்றனர். பெண்களுடன் உல்லாசம் புரிகின்றனர். இதைப் பார்க்கும் பக்தர்கள் அவர் எப்படி வேண்டுமானாலும் நடக்கலாம். அவர் கடவுளுக்கு வேண்டப்பட்டவர் (?) என்பதால் அவரது தவறைக் கடவுள் கண்டு கொள்ள மாட்டார்; நாம் அப்படி நடந்தால் மட்டும் தான் கடவுள் தண்டிப்பார் என்று அன்றும் இன்றும் ஒரே மாதிரியாக நினைக்கின்றனர்.

ஆனால் அறியாத மக்களின் இந்தப் பலவீனத்தைத் தமக்குச் சாதகமாக இந்த மாமனிதர் பயன்படுத்திக் கொண்டாரா?  ஆமாம்! நீங்கள் சொல்வது சரி தான். நான் உங்களை விட்டு வேறுபட்டவன் தான்  எனக் கூறினார்களா?

மாறாகக் கடும் கோபம் கொள்கிறார்கள். அந்தக் கோபம் அவர்களது முகத்திலும் தென்படுகிறது. இறைவனை அதிகமாக அஞ்சுகின்ற நானே இயன்றதை மட்டுமே செய்யும் போது உங்களை நீங்கள் வருத்திக் கொள்வது எப்படிச் சரியாகும்? எனக் கூறி அந்த மக்களின் அறியாமையை நீக்குகிறார்கள்.

இத்தகைய அறியாத மக்கள் மற்ற ஆன்மீகத் தலைவர்களின் கைகளில் சிக்கியிருந்தால் நிலைமை எப்படியிருக்கும் என்று நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

வெளிப்படையாக நான் செய்கிற வணக்கம் மட்டும் தான் உங்களுக்குத் தெரிகிறது. உங்களுக்குத் தெரியாத முறையில் நான் கடவுளோடு எப்படி ஒன்றிப் போய் வணங்குகிறேன் என்பது உங்களுக்குத் தெரியுமா? இரவு முழுவதும் உறங்காமல் தவத்திலேயே நான் மூழ்கி இருப்பது உங்களுக்குத் தெரியுமா என்றெல்லாம் புளுகி மக்களைத் தங்களின் அடிமைகளாகவே வைத்திருப்பார்கள்.

மற்றொரு நிகழ்ச்சியைப் பாருங்கள்!

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உரை நிகழ்த்திக் கொண்டிருந்த போது ஒரு மனிதர் வெளியில் நின்று கொண்டிருப்பதைக் கண்டார்கள். அவரைப் பற்றி விசாரித்தார்கள்.  அவர் பெயர் அபூ இஸ்ராயீல். உட்காராமல் நின்று கொண்டிருப்பது என்றும், நிழலை அனுபவிப்பதில்லை எனவும், பேசுவதில்லை எனவும், நோன்பு நோற்பது எனவும் அவர் நேர்ச்சை செய்திருக்கிறார்  என்று மக்கள் விளக்கினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உட்காருமாறும், நிழலை அனுபவிக்குமாறும், பேசுமாறும், நோன்பை மட்டும் முழுமைப் படுத்துமாறும் அவருக்குக் கூறச் சொன்னார்கள்.

நூல் : புகாரி: 6704

எந்த ஆன்மீக வழியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டினார்களோ அந்த ஆன்மீகத்தின் பெயரைச் சொல் ஒருவர் அதி தீவிரமாக ஈடுபாடு காட்டுகிறார்.

இம்மாமனிதர் இறைவனின் தூதராக இல்லாமல் வேறு நோக்கத்திற்காக இந்த மார்க்கத்தைத் தோற்றுவித்திருந்தால் இத்தகையோரை ஊக்குவித்திருப்பார்கள்.

இது போன்ற கிறுக்குத்தனமான காரியங்களைச் செய்வோர் தான் ஆன்மீகத் தலைவர்களின் முக்கியமான பலம்.

தனக்கு ஒரு துன்பம் ஏற்பட்டால் தனது தொண்டன் தனக்குத் தானே தீ வைத்துக் கொண்டு சாவதை சாதாரண அரசியல் தலைவர்களே உள்ளூர விரும்புகின்றனர். ஆன்மீகம் இதை விட அதிகம் போதை தரக் கூடியது. தன்னால் மதிக்கப்படும் குரு, தன்னை மிதித்துச் செல்ல வேண்டும் என்பதற்காக மனிதப் படுக்கைகளாக மாறும் பக்தர்களை இன்றைக்கும் பார்க்கிறோம்.

தன்னைக் காண்பதற்காக வாகனத்தில் செல்ல வசதி இருந்தும் சுட்டெரிக்கும் வெயிலில் கால்நடையாகவே பக்தர்கள் நடந்து வருவதைக் கண்டு ஆனந்தம் அடையும் ஆன்மீகத் தலைவர்களைப் பார்க்கிறோம்.

ஆண்கள் மட்டுமின்றி பெண்களும், சிறுவர்களும் கூட பல நாட்கள் நடையாக நடந்து தங்கள் குருநாதரைக் காண வருகின்றனர்.

இருபதாம் நூற்றாண்டில் விரைவான வாகனங்களை யாரும் பயன்படுத்த முடியும். ஆனாலும் அறியாத மக்கள் சாரைசாரையாக பல நாட்கள் நடந்து வருவதில் கிடைக்கும் விளம்பரங்கள் வாகனத்தில் வந்தால் கிடைக்காதே!

இந்த மாமனிதரைப் பாருங்கள்!

1) உட்காராமல் நிற்க வேண்டும் என்று மார்க்கத்தின் பெயரால் ஒருவர் முடிவு செய்கிறார்.

2) யாருடனும் பேசவே மாட்டேன்

3) பகலெல்லாம் வெயிலில் தான் நிற்பேன். நிழலை அனுபவிக்க மாட்டேன்.

4) காலமெல்லாம் நோன்பு நோற்பேன்

என்று நான்கு காரியங்களைச் செய்வதாக இவர் செய்த தீர்மானத்தை நபிகள் நாயகம் (ஸல்) அடியோடு நிராகரிக்கிறார்கள்.

 நோன்பு மட்டும் வைத்துக் கொள்! மற்ற மூன்று தீர்மானங்களையும் மாற்றிக் கொள்  என ஆணையிடுகிறார்கள்.

ஆன்மீகத்தின் பெயரால் நடக்கும் மோசடிகளை அம்பலப்படுத்த முயன்றவர்கள் கூட இந்த இடத்தில் தோற்று விட்டனர். தமக்காக மற்றவர்கள் வெயில் காத்திருக்க வேண்டும்! கஷ்டப்பட வேண்டும் என்றெல்லாம் ஆசைப்பட்டனர்.

ஆனால் ஆன்மீகத் தலைவராக இருந்து கொண்டே அனைவரும் தோற்ற இடத்தில் இந்த மாமனிதர் வென்று காட்டுகிறார்!

அபூ ஜுஹைபா (ரலி) கூறியதாவது:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸல்மான் (ரலி), அபுத்தர்தா (ரலி) இருவரையும் சகோதரர்களாக ஆக்கினார்கள். ஸல்மான் (ரலி), அபூ தர்தாவைச் சந்திக்கச் சென்ற போது (அபூ தர்தாவின் மனைவி) உம்முதர்தாவை அழுக்கடைந்த ஆடை அணிந்திருக்கக் கண்டார்.  உமக்கு என்ன நேர்ந்தது?  என்று அவரிடம் ஸல்மான் (ரலி) கேட்டார். அதற்கு உம்முதர்தா (ரலி), உம் சகோதரர் அபூ தர்தாவுக்கு இவ்வுலகில் எந்தத் தேவையும் இல்லை  என்று விடையளித்தார். (சற்று நேரத்தில்) அபூ தர்தா வந்து ஸல்மானுக்காக உணவு தயாரித்தார். ஸல்மான் அபூ தர்தாவிடம்,  உண்பீராக!  என்று கூறினார். அதற்கு அபூ தர்தா, நான் நோன்பு வைத்திருக்கிறேன்  என்றார்.  நீர் உண்ணாமல் நான் உண்ண மாட்டேன்  என்று ஸல்மான் கூறியதும் அபூ தர்தாவும் உண்டார். இரவானதும் அபூ தர்தா (ரலி) நின்று வணங்கத் தயாரானார். அப்போது ஸல்மான் (ரலி)  உறங்குவீராக!  என்று கூறியதும் உறங்கினார். பின்னர் நின்று வணங்கத் தயாரானார். மீண்டும் ஸல்மான்,  உறங்குவீராக!  என்றார். இரவின் கடைசி நேரம் வந்ததும் ஸல்மான் (ரலி)  இப்போது எழுவீராக!  என்று கூறினார். இருவரும் தொழுதனர். பிறகு அபூ தர்தாவிடம்   உம் இறைவனுக்கு நீர் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன; உமக்கு நீர் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன; உம் குடும்பத்தினருக்கு நீர் செய்ய வேண்டிய கடமைகள் இருக்கின்றன; அவரவருக்குரிய கடமைகளை நிறைவேற்றுவீராக!  என்று ஸல்மான் (ரலி) கூறினார். பின்பு அபூ தர்தா (ரலி), நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து இந்த விஷயத்தைக் கூறினார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்,  ஸல்மான் உண்மையையே கூறினார்!  என்றார்கள்.

நூல் : புகாரி: 1968, 6139

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், அவர்களின் தோழர்களும் கொண்ட கொள்கையில் உறுதியாக நின்றதால் சொந்த நாட்டை விட்டு விரட்டப்பட்டனர். மதீனா நகரில் அகதிகளாகத் தஞ்சமடைந்தனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இங்கே தஞ்சமடைவதற்கு முன்பே அவர்களின் பிரச்சாரத்தைக் கேள்விப்பட்ட மதீனாவைச் சேர்ந்த பலர் மக்கா சென்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை ஏற்கனவே ஏற்றிருந்தனர்.  நாட்டை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டால் எங்களிடம் வாருங்கள்! உயிரைக் கொடுத்தும் உங்களைக் காப்போம்  என்று உறுதி மொழியும் கொடுத்தனர்.

எனவே தான் தஞ்சமடைய மதீனா நகரை நபிகள் நாயகம் (ஸல்) தேர்வு செய்தனர். அவர்கள் மட்டுமின்றி அவர்களுடன் ஏராளமானவர்கள் அகதிகளாக வந்து குவிந்திருந்தனர்.

அகதிகள் பிரச்சனையை நபிகள் நாயகம் (ஸல்) சமாளித்த விதம் அவர்களின் மார்க்கத்திற்குக் கிடைத்த மகத்தான வெற்றி எனலாம்.

மதீனாவைச் சேர்ந்த ஒவ்வொருவரும் அகதியாக வந்துள்ள ஒருவரைத் தமது சகோதரராக ஏற்றுக் கொள்ள வேண்டும்  என்பது தான் நபிகள் நாயகம் (ஸல்) முன் வைத்த திட்டம்.

மதீனத்து நன் மக்கள் ஒவ்வொருவரும் வெளியூரைச் சேர்ந்த ஒருவரை ஏற்று சோறு போடுவதுடன் நின்று விடவில்லை. சொத்தில், வியாபாரத்தில், தோட்டம் துறவுகளில், ஆடைகளில், வீட்டில் என அனைத்திலும் பாதியைத் தமது கொள்கைச் சகோதரருக்கு வழங்கினார்கள். உடன் பிறந்த சகோதரர்கள் கூட இப்படி பங்கு போட்டுக் கொடுக்க முடியுமா என்று நினைக்குமளவுக்கு நடந்து கொண்டனர்.

அரவணைத்து உதவுவதில் இவர்களை யாருமே வெல்ல முடியாது என்பதால் அன்ஸாரிகள் (உதவியாளர்கள்) என்ற சிறப்புப் பெயரும் பெற்றார்கள்.

நாம் மேலே சுட்டிக் காட்டிய நிகழ்ச்சியைப் புரிந்து கொள்வதற்கு இந்த வரலாற்றுப் பின்னணி தெரிந்திருக்க வேண்டும் என்பதற்காகவே இதைக் குறிப்பிட்டோம்.

அபூ தர்தா என்பார் மதீனாவைச் சேர்ந்தவர். சல்மான் ஈரானைச் சேர்ந்தவர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிரச்சாரம் பற்றிக் கேள்விப்பட்டு அதில் இணைவதற்காகவே வந்தவர் சல்மான். சல்மானை அபூ தர்தாவுக்குச் சகோதரராக நபிகள் நாயகம் (ஸல்) நியமித்தார்கள்.

ஆனால் அபூ தர்தாவோ ஆழ்ந்த மார்க்கப் பற்றுள்ளவர். நபிகள் நாயகம் (ஸல்) காட்டிய வழிபாட்டில் முழுமையாக மூழ்கி விட வேண்டுமென்பதற்காக இரவெல்லாம் தொழுகையிலேயே நிற்பார். மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமையைக் கூட இவர் செய்யத் தவறினார். அது மட்டுமின்றி ஒரு நாள் விடாமல் தினமும் நோன்பு நோற்றும் வரலானார்

இதனால் தாம்பத்தியத்தையே மறந்த நிலைக்கு ஆளான போது தான் சல்மானுக்கு விபரம் தெரிந்து கண்டிக்கிறார். அவரைத் தடுத்து நிறுத்துகிறார்.

முடிவில் இந்த விவகாரம் நபிகள் நாயகத்திடம் வந்த போது, சல்மான் கூறியது தான் சரி என ஒற்றை வரியில் நபிகள் நாயகம் விடையளித்தார்கள்.

தனது மார்க்கத்தையும், வழிமுறையையும் கண்ணை மூடிக் கொண்டு பின்பற்றும் கூட்டம் உருவானதைக் கண்டு நபிகள் நாயகம் (ஸல்) ஆனந்தம் கொள்ளவில்லை; அவரைப் பாராட்டவில்லை; அவரைப் போல் நடக்குமாறு மக்களை ஊக்குவிக்கவுமில்லை.

மாறாக, நான் கூறியதைச் செய்வதென்றாலும், மனைவி, மக்கள், உடல், கண் போன்ற அனைத்துக்கும் செய்ய வேண்டிய கடமைகளுக்குத் தடையாக ஆகி விடக் கூடாது எனக் கூறி அவரது அறியாமையை விலக்கி நெறிப்படுத்துகிறார்கள்.

நபிகள் நாயகத்துக்கு வேறு நோக்கம் ஏதும் இருந்திருந்தால் இது போன்ற செயல்களை அவர்கள் ஊக்குவித்திருக்க வேண்டும். அதில் தான் அதிக விளம்பரமும், புகழும் கிடைத்திருக்கும்.

இது போல் மற்றொருவர் பக்தியிலேயே மூழ்கி உலகில் ஆற்ற வேண்டிய கடமைகளை மறந்த போது அவரைத் தேடிச் சென்று இது போன்ற ஒரு அறிவுரையைச் சொல்ல அவர்கள் தவறவில்லை

இதோ அந்த நிகழ்ச்சியைப் பாருங்கள்

அப்துல்லா பின் அம்ரு பின் ஆஸ் (ரலி) கூறியதாவது:

அப்துல்லாஹ்வே! நீர் பகலெல்லாம் நோன்பு நோற்று, இரவெல்லாம் நின்று வணங்குவதாக எனக்குக் கூறப்படுகின்றதே!  என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னிடம் கேட்டார்கள். நான்,  ஆம்! அல்லாஹ் வின் தூதரே! என்றேன்.  இனி அவ்வாறு செய்யாதீர்! (சில நாட்கள்) நோன்பு வையும்! (சில நாட்கள்) விட்டு விடும்! (சிறிது நேரம்) தொழும்! (சிறிது நேரம்) உறங்கும்! ஏனெனில், உம் உடலுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் உமக்கு இருக்கின்றன; உம் கண்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கு இருக்கின்றன; உம் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கு இருக்கின்றன; உம் விருந்தினர்க்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கு இருக்கின்றன! ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நீர் நோன்பு நோற்பது உமக்குப் போதுமானதாகும்! ஏனெனில் (நீர் செய்யும்) ஒவ்வொரு நற்செயலுக்குப் பகரமாக உமக்கு அது போன்ற பத்து மடங்கு (நன்மை)கள் உண்டு. (இந்தக் கணக்குப்படி) இது காலமெல்லாம் நோன்பு நோற்றதாக அமையும்!  என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். நான் சிரமத்தை வந்து ஏற்றுக் கொண்டேன்; அதனால், என் மீது சிரமம் சுமத்தப்பட்டு விட்டது! அல்லாஹ்வின் தூதரே நான் வலு உள்ளவனாக இருக்கிறேன்! என்று நான் கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாவூத் நபி (அலை) அவர்கள் நோன்பு நோற்றவாறு நீர் நோன்பு நோற்பீராக! அதை விட அதிகமாக்க வேண்டாம்!  என்றார்கள். தாவூத் நபியின் நோன்பு எது? என்று நான் கேட்டேன்  வருடத்தில் பாதி நாட்கள்!  என்றார்கள். அப்துல்லாஹ் பின் அம்ரு பின் ஆஸ் (ரலி) அவர்கள் வயோதிகம் அடைந்த பின்  நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சலுகையை நான் ஏற்காமல் போய் விட்டேனே!  என்று (வருத்தத்துடன்) கூறுவார் என அபூ ஸலமா கூறுகிறார்.

நூல் : புகாரி: 1975

மக்களின் அறியாமையை நீக்கி அவர்களை மேம்படுத்தத் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விரும்பினார்களே தவிர அவர்களது அறியாமையில் குளிர்காய விரும்பவில்லை என்பதை இந்நிகழ்ச்சியும் உறுதி செய்கின்றது.

நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் ஓர் இரவில் தங்கினேன். (விடிந்ததும்) அவர்கள் தூய்மைப்படுத்திக் கொள்ளும் தண்ணீரையும், தேவையான இன்னபிறவற்றையும் எடுத்து வைத்தேன். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னிடம் எதையாவது கேள்  என்றனர். அதற்கு நான் சொர்க்கத்தில் உங்களுடன் தோழமையாக இருப்பதை உங்களிடம் கேட்கிறேன்  என்று கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்  இதைத் தவிர வேறு ஏதாவது (கேள்) என்ற கூறினார்கள்.  அது தான் வேண்டும்  என நான் கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்  உனது நன்மைக்காக அதிகமதிகம் வணக்கத்தில் ஈடுபட்டு எனக்கு உதவுவாயாக  என விடையளித்தார்கள்.

அறிவிப்பவர் : ரபீஆ பின் கஅப் (ரலி),

நூல் : முஸ்லிம் 754

தமக்குத் தண்ணீர் எடுத்து வைத்ததற்காக இவ்வுலகப் பொருட்களில் எதையாவது கொடுக்கலாம் என்ற கருதியே என்னிடம் கேள் என நபிகள் நாயகம் (ஸல்) கேட்டனர். ஆனால், அவரோ இவ்வுலகப் பொருட்களைப் பற்றி அலட்டிக் கொள்ளாமல் உங்களுடன் சொர்க்கத்தில் இருப்பதைத் தான் கேட்கிறேன் எனக் கூறுகிறார்.

நபிகள் நாயகம் (ஸல்) இறைத் தூதராக இல்லாதிருந்தால், அப்படியே ஆகட்டும் எனக் கூறியிருக்கலாம். அவரும் மன நிறைவு அடைந்திருப்பார். மறுமை என்ற வாழ்க்கை இல்லை என்றும் முஹம்மது நபி அல்லாஹ்வின் தூதர் இல்லை என்றும் வைத்துக் கொண்டால் இப்படிச் சொல்வது மிக எளிதானது தான்.

ஆனால் மறுமை நாளில் அனைவரும் இறைவனின் அடிமைகளாகத் தான் வந்தாக வேண்டும் என்பதில் அவர்களுக்கு நம்பிக்கை இருந்ததாலும், அவர்கள் இறைவனின் தூதராக இருந்ததாலும்  ஒருவரைச் சொர்க்கவாசியாக அல்லது நரகவாசியாக ஆக்குவது இறைவனின் கட்டளைப்படி நடக்கக்கூடியது தானே தவிர என் கட்டளைப்படி நடக்கக்கூடியது அல்ல என்பதை உணர்த்தும் விதமாக வேறு கோரிக்கையைக் கேட்கச் சொல்கிறார்கள்.

அவர் தனது பழைய கோரிக்கையிலேயே பிடிவாதமாக இருப்பதைக் கண்டவுடன்  நீ சொர்க்கம் செல்வது, எனக்குத் தண்ணீர் எடுத்துத் தந்து உதவுவதால் மட்டும் ஆகக் கூடியதல்ல. மாறாக, இறைவன் உனக்கு விதித்துள்ள கடமைகளைச் செய்து அவனது அன்பைப் பெற வேண்டும். இறைவன் உன் மீது அன்பு கொள்ளும் வகையில் நீ நடந்து கொண்டால் மட்டுமே அது சாத்தியம்  என்ற கருத்தைத் தெரிவிக்கிறார்கள்.

சாதாரண ஊழியம் செய்தவரை விட்டு விடுவோம். தமது குடும்பத்தாருக்கும், தமது நெருங்கிய உறவினருக்கும் அவர்கள் செய்த எச்சரிக்கையும் இதுவாகத் தான் இருந்தது.

தமது உறவினர் அத்தனை பேரையும் அழைத்து  நீங்கள் என் செல்வத்தைக் கேளுங்கள் உங்களுக்குத் தருகிறேன். உங்களை அல்லாஹ்விடமிருந்து என்னால் காப்பாற்ற முடியாது. நீங்கள் தான் நல்லவர்களாக நடக்க வேண்டும் என்பது தான் அந்த எச்சரிக்கை.

அப்து முனாபின் சந்ததிகளே! அல்லாஹ்விடமிருந்து உங்களைக் காத்துக் கொள்ளுங்கள்! அப்துல் முத்தலிபின் சந்ததிகளே! அல்லாஹ்விடமிருந்து உங்களைக் காத்துக் கொள்ளுங்கள்! எனது மாமியாகிய உம்முஸ் ஸுபைரே! எனது மகளாகிய ஃபாத்திமாவே! நீங்கள் இருவரும் அல்லாஹ்விடமிருந்து உங்களைக் காத்துக் கொள்ளுங்கள்! எனது சொத்துகளில் நீங்கள் விரும்பியதைக் கேளுங்கள்! அல்லாஹ்விடமிருந்து உங்களை நான் காப்பாற்ற முடியாது  என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

நூல் : புகாரி: 2753, 3527, 4771

ஆன்மீகக் குருவாக ஒருவர் மதிக்கப்பட்டால் அவருக்குப் பிறந்த தறுதலைகளும் அவ்வாறே இன்றைக்கு மதிக்கப்படுவதை மக்களிடம் காண்கிறோம்

இந்த மாமனிதரோ வாரிசு முறையில் எவரும் நல்லவராகவோ, கெட்டவராகவோ ஆக முடியாது. தனது வாரிசே ஆனாலும் நடத்தையின் மூலமாக மட்டுமே நல்லவராக முடியும் என்பதை அழுத்தம் திருத்தமாக அறிவிக்கிறார்கள்.

ஆன்மீக வாதிகளால் நமக்கு நன்மை செய்ய முடிகிறதோ, இல்லையோ அவரைப் பகைத்துக் கொண்டால் நிச்சயமாக அவரால் நமக்குத் தீமை செய்ய முடியும் என்ற தோற்றத்தை ஆன்மீக வாதிகள் ஏற்படுத்தியுள்ளனர்.  பிடி சாபம்  என்று சொல்லி??? விட்டால் நமது கதி அதோ கதி தான் என்று மக்களை நம்ப வைத்து விடுகிறார்கள்.

பெண்களைக் கற்பழிப்பார்கள். வெளியே சொன்னால் சாபம் போட்டு விடுவேன் என்பார்கள்.

பணத்தை மோசடி செய்வார்கள். கேள்வி கேட்டால் சாபம் போடுவேன் என்பார்கள்.

இவ்வளவு ரூபாய் கொடுத்தால் சிறப்பு பூஜை செய்து உன்னை எங்கேயோ கொண்டு போகிறேன் என்பார்கள். ஒன்றும் நடக்கவில்லை என்பதற்காக மக்கள் கேள்வி கேட்க மாட்டார்கள்.

இந்த அயோக்கியனின் சாபம் நம்மை என்ன செய்து விடும் என்ற சாதாரண அறிவு கூட மக்களுக்கு இல்லாத நிலையை இவர்கள் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளனர்.

உலகில் உள்ள எல்லா ஆன்மீக வாதிகளைப் பற்றியும் இத்தகைய ஒரு நம்பிக்கை மக்களிடம் உள்ளது.

முஸ்லிம் சமுதாயத்திலும் கூட பத்துவா  (சாபம்) செய்து விடுவார் என்று பயந்தே பலரும் போகளிடம் ஏமாந்து வருகின்றனர்.

மாபெரும் ஆன்மீகத் தலைவராகத் திகழ்ந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மட்டுமே இதையும் ஒழித்துக் கட்டியுள்ளார்கள்.

ஆன்மீகவாதிகளின் மிக முக்கியமான கேடயத்தையும் முறித்துப் போடுகிறார்கள்

சில நிகழ்ச்சிகளைப் பாருங்கள்:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் இரண்டு மனிதர்கள் வந்து எதையோ பேசினார்கள். என்னவென்று எனக்குத் தெரியவில்லை, அவர்களின் பேச்சு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கோபத்தை ஏற்படுத்தியது. உடனே அவ்விருவரையும் ஏசியதுடன் சபிக்கவும் செய்தார்கள். அவ்விருவரும் சென்ற பின் இவ்விருவருக்கும் கிடைத்த நன்மையை வேறு எவரும் அடைய முடியாது என்று நான் கூறினேன். நீ என்ன சொல்கிறாய்? என்று நபிகள் நாயகம் (ஸல்) கேட்டார்கள்.  அவ்விருவரையும் திட்டிச் சபித்தீர்களே  என்று நான் கூறினேன்.  ஆம்! நானும் ஒரு மனிதனே. எனவே நான் யாரையாவது திட்டினாலோ, சபித்தாலோ அதை அவருக்கு அருளாக ஆக்கி விடு என்று என் இறைவ னிடம் நான் உறுதி மொழி பெற்றுள்ளேன்  என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி),

நூல் : முஸ்லிம் 4705

உம்மு சுலைம் (ரலி) அவர்களிடம் ஒரு அனாதைப் பெண் இருந்தாள். அப்பெண்ணை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பார்த்த போது  நீ பெரியவளாகி விட்டாய்! உன் வயது பெரிதாகாமல் போகட்டும்  எனக் கூறினார்கள். உடனே அந்த அனாதைப் பெண் உம்மு சுலைம் அவர்களிடம் அழுது கொண்டே சென்றார்.  மகளே என்ன நேர்ந்தது  என்று உம்மு சுலைம் கேட்டார்கள்.  என் வயது அதிகமாகாது என்று நபிகள் நாயகம் (ஸல்) எனக்கெதிராகச் சபித்து விட்டார்களே! இனி மேல் நான் வளராது போய் விடுவேனே  எனக் கூறினார். உடனே அவசரமாக உம்மு சுலைம் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து எனது அனாதைக் குழந்தைக்கு எதிராகச் சாபம் இட்டீர்களா? எனக் கேட்டார்கள். இதைக் கேட்டதும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிரித்தார்கள்.  நான் எனது இறைவனிடம் உறுதி மொழி பெற்றுள்ளது உனக்குத் தெரியாதா? நானும் ஒரு மனிதனே! மற்ற மனிதர்கள் திருப்தியுறுவது போல் (சிலர் மீது) நானும் திருப்தியுறுவேன். மற்ற மனிதர்கள் கோபம் கொள்வது போல் நானும் கோபப்படுவேன். எனவே என் சமுதாயத்தில் எவருக்கு எதிராகவேனும் நான் பிரார்த்தனை செய்து அவர்கள் அதற்குத் தகுதியுடையவர்களாக இல்லாவிட்டால் அதை அவர்களைப் பரிசுத்தப்படுத்துவதாகவும் மறுமை நாளில் உன்னிடம் நெருக்கத்தை ஏற்படுத்தும் வணக்கமாகவும் ஆக்குவாயாக  என்று இறைவனிடம் பிரார்த்தித்துள்ளேன் என்றார்கள்.

நூல் : முஸ்லிம் 4712

 இறைவா! நம்பிக்கையாளர் எவரையேனும் நான் ஏசினால் அதை மறுமையில் உன்னிடம் நெருங்குவதற்குக் காரணமாக ஆக்கி விடு!  என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்ததை நான் செவியுற்றுள்ளேன் என அபூஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்.

நூல் : புகாரி: 6361  

என் சாபத்திற்கு யாரும் பயப்பட வேண்டாம்!  என்று கூறியது மட்டுமின்றி நான் கோபத்தில் யாரையாவது சபித்தால் அது அவருக்கு நன்மையாகத் தான் முடியும் எனவும் கூறிய ஆன்மீகத் தலைவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தவிர வேறு யாரும் இருக்க முடியாது.

இப்படி அறிவித்ததன் மூலம் தமக்கு எதிராகக் கருத்துக் கூறுவோர், விமர்சனம் செய்வோரின் அச்சத்தைப் போக்குகிறார்கள்.

நியாயத் தீர்ப்பு நாளில் நான் தடாகத்தின் அருகே நிற்பேன். அப்போது என்னுடன் தோழமை கொண்டிருந்த சிலர் தடாகத்தை நோக்கி தண்ணீர் அருந்த வருவார்கள். அவர்களை நான் காணும் போது, வெட்கப்பட்டு என்னை விட்டும் திரும்பிக் கொள்வார்கள்.  என் இறைவா! இவர்கள் என் தோழர்கள் ஆயிற்றே!  என்று நான் முறையிடுவேன்.  உமக்குப் பின் அவர்கள் என்ன செய்தார்கள் என்று உமக்குத் தெரியாது  என்று எனக்குப் பதில் கூறப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

நூல் : புகாரி 4740, 6576, 6582, 6585, 6586, 7049

என்னுடைய தோழர்கள் சிலர் (மறுமையில்) பிடிக்கப்படுவார்கள். அப்போது  என் தோழர்கள், என் தோழர்கள்  என்று நான் கூறுவேன்.  நீர் அவர்களைப் பிரிந்தது முதல் அவர்கள் வந்த வழியே திரும்பிச் சென்று கொண்டே இருந்தனர்  என்று என்னிடம் கூறப்படும் என நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

நூல் : புகாரி: 3349, 3447, 4625, 6526

கெட்டவர்களையெல்லாம் தீட்சைக் கொடுத்து நல்லவர்களாக்கு கிறோம் என்று கூறும் போகள் எங்கே? நல்லவன் யார் கெட்டவன் யார்  என்பதை இறைவனால் மட்டுமே கண்டு கொள்ள இயலும் என அறிவித்த இந்த மாமனிதரின் போதனை எங்கே!

இத்தகைய ஆன்மீகத்தினால் யாருடைய சுயமரியாதைக்காவது பங்கம் ஏற்படுமா? யாரேனும் சுரண்டப்பட முடியுமா?

எப்படி நடப்பது நல்லது என்று அறிவுரை கூறத் தான் இறைவனால் தேர்வு செய்யப்பட்டுள்ளேனே தவிர மறுமையில் உங்களைக் காப்பாற்றிக் கரை சேர்க்கும் அதிகாரத்தைப் பெற்று வரவில்லை என்பதைப் பல முறை அவர்கள் தெளிவுபடுத்தி யுள்ளார்கள். அவர்களின் கீழ்க்கண்ட அறிவுரைகளைப் பாருங்கள்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்களிடையே எழுந்து நின்று போர்ச் செல்வங்களை மோசடி செய்வது குறித்துக் கூறினார்கள். அது கடுங்குற்றம் என்பதையும் அது பெரிய பாவம் என்பதையும் எடுத்துரைத்தார்கள்.  கத்திக் கொண்டிருக்கும் ஆட்டையும், கனைத்துக் கொண்டிருக்கும் குதிரையையும் மறுமை நாளில் தன் கழுத்தில் சுமந்து கொண்டு வந்து,  அல்லாஹ்வின் தூதரே என்னைக் காப்பாற்றுங்கள்  என்று (அபயம் தேடி) அலறும் நிலையில் உங்களில் எவரையும் நான் அப்போது காண வேண்டாம். (ஏனெனில்)  உனக்கு எந்த உதவியும் என்னால் செய்ய முடியாது. உனக்கு நான் எடுத்துரைத்து விட்டேன்  என்று அப்போது நான் கூறி விடுவேன். கத்திக் கொண்டிருக்கும் ஒட்டகத்தைத் தன் கழுத்தில் சுமந்து வந்து,  அல்லாஹ்வின் தூதரே! என்னைக் காப்பாற்றுங்கள்  என்று அலறும் நிலையில் உங்களில் எவரையும் நான் காண வேண்டாம். (ஏனெனில்)  என்னால் உனக்கு எந்த உதவியும் செய்ய முடியாது. உனக்கு நான் எடுத்துரைத்து விட்டேன் என்று அப்போது நான் கூறி விடுவேன். இவ்வாறே (அந்நாளில்) தன் கழுத்தில் வெள்ளியையும், தங்கத்தையும் சுமந்து கொண்டு வந்து,  அல்லாஹ்வின் தூதரே! என்னைக் காப்பாற்றுங்கள்  என்று அலறும் நிலையில் உங்களில் எவரையும் நான் காண வேண்டாம். (ஏனெனில்)  என்னால் உனக்கு எந்த உதவியும் செய்ய முடியாது. உனக்கு நான் எடுத்துரைத்து விட்டேன்  என்று அப்போது நான், கூறி விடுவேன். அல்லது அசைகின்ற எந்தப் பொருளையாவது தன் கழுத்தில் சுமந்து கொண்டு வந்து  அல்லாஹ்வின் தூதரே! என்னைக் காப்பாற்றுங்கள்  என்று அலறிய நிலையில் உங்களில் எவரையும் நான் காண வேண்டாம். (ஏனெனில்),  என்னால் உனக்கு எந்த உதவியும் செய்ய முடியாது. உனக்கு நான் எடுத்துரைத்து விட்டேன் என்று அப்போது நான் கூறி விடுவேன்  என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

நூல் : புகாரி 1402, 3073

எத்தகைய அக்கிரமத்தையும் நாம் செய்யலாம். செய்து விட்டு ஒரு ஆன்மீகக் குருவைப் பிடித்து, அவருக்கு தட்சணை கொடுத்து விட்டால், அவரிடம் ஆசி வாங்கி விட்டால் அல்லது அவரிடம் அருள்வாக்கு பெற்றால் எல்லாம் சரியாகி விடும் என்பது தான் பெரும்பாலான மக்களின் ஆன்மீக நம்பிக்கையாக உள்ளது.

கொள்ளையடிப்பவர்கள், ஊழல் செய்வோர், சுரண்டுவோர் அதில் சிறு பகுதியைக் கடவுளுக்குக் காணிக்கை செலுத்தினால் தப்பித்துக் கொள்ள முடியும் என்று 20 ஆம் நூற்றாண்டிலும் நம்புகிறார்கள்.

இத்தகைய ஆன்மீகத்தால் யாருக்கு என்ன நன்மை? குற்றம் புரிவதை வாடிக்கையாகக் கொண்டவனை இத்தகைய நம்பிக்கைகள் திருத்துமா? ஒருக்காலும் திருத்தாது. மாறாக அவன் மேலும், மேலும் குற்றங்கள் புரிவதைத் தான் இந்த நம்பிக்கை உருவாக்கும்.

இத்தகைய நம்பிக்கை அவனை மட்டும் பாதிப்பதில்லை. மற்றவர்கள் அவனது அக்கிரமத்தால் பாதிக்கப்படவும் இந்த நம்பிக்கை தான் காரண மாக அமைகிறது. போ ஆன்மீக குருமார்கள் பலவிதத்திலும் மக்களை ஏமாற்ற இந்த நம்பிக்கை தான் முழு முதற்காரணமாக இருக்கிறது.

மனிதர்களை நல்வழிப்படுத்தாமல் மீண்டும் மீண்டும் அவர்களை தீமை செய்யத் தூண்டுகிற ஒரு நெறி தேவை தானா? என்று அறிவுடையோர் விமர்சனம் செய்கின்றனர்.

இந்த மாமனிதரோ இது போன்ற விமர்சனங்கள் வரவே முடியாத அளவுக்கு அணை போடுகிறார்.

அரசியல் அதிகாரத்தின் மூலம் இவர் எந்தப் பலனையும் அடையாதது போல் ஆன்மீகத் தலைமையின் மூலமாகவும் எதையுமே அடையவில்லை; யாரையும் ஏமாற்றவில்லை என்று அறியலாம்.

முரண்பாடின்மை

எத்தனையோ துறைகளில் தலைமை தாங்குவோரை நாம் காண்கிறோம். அவர்கள் தமக்கே முரண்படுவதையும் காண்கிறோம். அதிலும் ஆன்மீகவாதிகள் மற்றவர்களை விட அதிக அளவில் தமக்குத் தாமே முரண்படுவதைக் காணமுடியும். ஆசையை அறுக்கச் சொல்வார்கள். அவர்கள் தான் அறுசுவையுடனும், அதிகமாகவும் சாப்பிடுவார்கள்.

எளிமை, அடக்கம் பற்றிப் போதிப்பார்கள். தங்கள் கால்களில் மக்கள் விழுந்து எழுவதை விரும்புவார்கள்.

ஆடையில் மாத்திரம் தான் வித்தியாசம் காட்டுவார்களே தவிர மற்ற விஷயங்களில் சராசரி மனிதனின் அளவுக்குக் கூட அவர்கள் பக்குவப்பட்டிருக்க மாட்டார்கள்.

இப்படி ஏராளமான முரண்பாடுகளை ஆன்மீகத் தலைவர்களிடம் நாம் காண்கிறோம். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லுக்கும், செயலுக்கும் முரண்பாடில்லாத ஒரே ஆன்மீகத் தலைவராகத் திகழ்கிறார்கள். இதுவரை நாம் எடுத்துக் காட்டிய அத்தனை நிகழ்ச்சிகளுமே இதற்குரிய ஆதாரங்களாக உள்ளன.

அவர்களின் முரண்பாடில்லாத தூய வாழ்க்கையை நம் கண் முன்னே நிறுத்தும் இன்னும் பல சான்றுகளும் உள்ளன.

அகில உலகுக்கும் ஒரே கடவுள் தான் இருக்கிறான். அந்த ஒரு கடவுளை ஏற்காமல் பல கடவுளை வணங்கினால் அவர்கள் மறுமையில் நரகத்தை அடைவார்கள் என்பது நபிகள் நாயகம் (ஸல்) போதித்த முக்கியக் கொள்கை. இஸ்லாத்தின் உயிர் நாடியான கொள்கையும் இது தான்.

இப்படி ஒரு கொள்கையைச் சொன்ன நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதில் எந்தக் கட்டத்திலும் முரண்பட்டதேயில்லை.

ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து  என் தந்தை எங்கே இருக்கிறார்  என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நரகத்தில்  என்றார்கள். அவர் கவலையுடன் திரும்பிச் சென்றார். அவரை மீண்டும் அழைத்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்  என் தந்தையும், உன் தந்தையும் நரகத்தில் தான் இருப்பார்கள்  என்று கூறினார்கள்.

நூல் : முஸ்லிம் 302

கேள்வி கேட்டவரின் தந்தை ஒரு கடவுளை நம்பாமல் சிலைகளைக் கடவுளாக கருதி வணங்கி வந்தார். அந்த நிலையிலேயே மரணித்தும் விட்டார். நபிகள் நாயகம் (ஸல்) கூறிய ஆன்மீக நெறியின் படி அவர் நரகத்தில் தான் இருப்பார் என்று தயக்கமின்றி விடையளிக்கிறார்கள். யாருடைய மனமும் புண்படக் கூடாது என்பதற்காக எந்த விதமான சமரசமும் அவர்கள் செய்யவில்லை.

ஆனால் வந்தவர் நபிகள் நாயகத்தின் தந்தை பற்றி எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. வேறு யாரும் இத்தகைய கேள்விகளைக் கேட்கவில்லை. ஆனாலும் வலிய வந்து  தமது தந்தையும் நரகத்தில் தான் இருப்பார்  என்று கூறுகிறார்கள்.

இது அவர்களின் மாசு மருவற்ற நேர்மைக்கும், கொள்கைப் பிடிப்புக்கும் எடுத்துக் காட்டாக உள்ளது.

கேள்வி கேட்டவரின் தந்தை எவ்வாறு பல தெய்வ நம்பிக்கையுடையவரோ, அது போல் தான் நபிகள் நாயகத்தின் தந்தையும் இருந்தார். பல தெய்வ நம்பிக்கையுடையோரை இறைவன் நரகத்தில் தள்ளுவான் என்ற விதியில் எனது தந்தை என்பதற்காக எந்த விதி விலக்கும் இல்லை என்று அறிவிக்கிறார்கள்.

தந்தையைப் பற்றி மட்டுமின்றி தமது தாயாரைப் பற்றியும் இவ்வாறே அறிவிப்புச் செய்தார்கள்.

என் தாயாரின் பாவங்களை மன்னிக்கும் படி பிரார்த்திக்க இறைவனிடம் நான் அனுமதி கேட்டேன். அவன் மறுத்து விட்டான்  என்று அவர்கள் கூறினார்கள்.

நூல் : முஸ்லிம் 1621, 1622

அவர்களின் தந்தையைப் போலவே தாயாரும் பல தெய்வ நம்பிக்கையுடையவராகவே இருந்து மரணித்திருந்தார். நபிகள் நாயகத்தின் தாயார் என்பதற்காக எவ்வித விதி விலக்கும் அளிக்கப்பட மாட்டாது என்று தெளிவுபடுத்துகிறார்கள்.

ஆன்மீகத் தலைவர்கள் மற்றவர்களுக்கு விலக்கு அளிக்கிறார்களோ இல்லையோ தங்களுக்கு விலக்கு அளித்துக் கொள்வார்கள்.

எதைப் போதித்தார்களோ அதற்கு மாற்றமாக நடப்பார்கள். யாரேனும் கேள்வி எழுப்பினால் நாங்கள் தனிப் பிறவிகள் என்பார்கள்.

ஆனால் நபிகள் நாயகம் அவர்கள்  இந்தக் கொள்கையை நான் மீறினாலும் எனக்குக் கிடைப்பது நரகமே  என்று தெளிவான வார்த்தைகளால் பிரகடனம் செய்தார்கள்.

என் இறைவனுக்கு நான் மாறு செய்தால் மகத்தான நாளின் தண்டனையை நான் அஞ்சுகிறேன் எனக் கூறுவீராக!

அல்குர்ஆன் 6:15, 10:15, 39:13,

இந்த வசனங்கள் தமக்கு இறைவனிடமிருந்து வந்தவை என நபிகள் நாயகம் கூறினார்கள். மற்றவர்கள் எவ்வாறு இறைவனை வணங்கி வழிபடுவது அவசியமோ அது போல் நானும் அவனை வழிபட்டாக வேண்டும். ஆன்மீகத் தலைவர் என்பதால் உங்களுக்குக் கூறுவதை நான் கடைபிடிக்காது வாழ்ந்தால் உங்களைத் தண்டிப்பது போலவே என்னையும் இறைவன் தண்டிப்பான். இப்படித் தான் எனக்கு இறைவனிடமிருந்து செய்தி வருகிறது என்று பிரகடனம் செய்கிறார்கள்.

ஆன்மீகத் தலைமை காரணமாக எந்த விதிவிலக்கும் கிடையாது என்று அறிவித்த ஒரே தலைவராக அவர்கள் திகழ்கின்றார்கள். இதையும் கடந்து மற்றவர்களை விட நான் தான் ஆன்மீக நெறியைக் கூடுதலாகக் கடைபிடிப்பேன் எனவும் கூறி அதன் படி வாழ்ந்தும் காட்டினார்கள். இதைப் பின்வரும் செய்தியிலிருந்து அறிந்து கொள்ளலாம்.

தமது கால்கள் வீங்கி விடும் அளவிற்கு நபிகள் நாயகம் (ஸல்) இரவில் நின்று வணங்குவார்கள். இது பற்றி அவர்களிடம் கேட்கப்பட்டால்  நான் நன்றியுள்ள அடியானாக இருக்கக் கூடாதா?  என்பார்கள்.

நூல் : புகாரி 1130, 4836, 6471

அனைவருக்கு சம நீதி

ஒரு மனிதனின் நேர்மையை உரசிப் பார்த்திட அனைவரையும் அவன் சமமாகக் கருதுகிறானா? என்பது முக்கியமான உரைகல்லாகும். குறிப்பாக ஆன்மீகத் தலைவர்களை இந்த உரைகல்லால் உரசிப் பார்ப்பது மிகவும் அவசியமாகும்.

தாமும் பக்குவப்பட்டு மற்றவரையும் பக்குவப்படுத்துவதாகக் கூறிக் கொள்வோரின் கண்களுக்கு செல்வாக்குமிக்கவனும், சாமான் யனும் சமமாகவே தென்பட வேண்டும். இன்னும் சொல்வதென்றால் பலவீனர்களிடம் அதிகம் கருணையுடன் நடந்து கொள்ள வேண்டும்.

இந்த அளவுகோலின் படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நூறு சதவீதம் தமது நடவடிக்கைகளை அமைத்திருந்தார்கள் என்பதற்கு மேலும் சில சான்றுகளைப் பார்ப்போம்.

குரைஷ் கோத்திரத்தில் நபிகள் நாயகம் (ஸல்) பிறந்தார்கள். இந்தக் கோத்திரம் அன்றைய மக்களிடம் மிக உயர்ந்த கோத்திரமாக மதிக்கப்பட்டது.

குரைஷ் கோத்திரத்தின் உட்பிரிவான மக்ஸுமியா கோத்திரத்தைச் சேர்ந்த ஒரு பெண் திருடி விட்டார். இது குரைஷ் குலத்தவருக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியது. (தம் குலத்துப் பெண்ணின் திருட்டுக் குற்றத் திற்காக கைகள் வெட்டப்படுவது அவர்களுக்கு இழிவாகத் தோன்றியது) இது பற்றி நபிகள் நாயகத்திடம் யார் பேசுவது என்று ஆலோசனை செய்தனர்.  நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அன்புக்குப் பாத்திரமான உஸாமாவைத் தவிர வேறு யார் நபிகள் நாயகத்திடம் பேச முடியும்  என்று கருதினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் உஸாமா (ரலி) இது பற்றிப் பேசினார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் குற்றவியல் சட்டத்தில் என்னிடம் நீர் பரிந்துரைக்கிறீரா?  என்று உஸாமாவிடம் கேட்டார்கள். உடனே மக்களைத் திரட்டி உரை நிகழ்த்தினார்கள்,  உங்களுக்கு முன் சென்றவர்கள் தங்களில் உயர்ந்தவர் திருடினால் அவரை விட்டு விடுவார்கள். பலவீனர் திருடினால் அவருக்குத் தண்டனையை நிறைவேற்றுவார்கள். அதனால் அவர்கள் நாசமாயினர். அல்லாஹ்வின் மேல் ஆணையிட்டுச் சொல்கிறேன். இந்த முஹம்மதின் மகள் ஃபாத்திமா திருடினாலும் அவரது கையை நான் வெட்டுவேன்  எனப் பிரகடனம் செய்தார்கள்.

நூல் : புகாரி 3475, 3733, 4304, 6787, 6788

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பார்வையில் தமது குலத்தைச் சேர்ந்த பெண்மணியும், மற்றவர்களும் சமமாகவே தென்படுகிறார்கள். நபிகள் நாயகத்தின் அன்புக்குப் பாத்திரமான உஸாமாவின் பரிந்துரையையும் கூட அவர்கள் ஏற்கத் தயாராகயில்லை.

மிகப்பெரிய காரியங்களில் மட்டுமின்றி அற்பமான காரியங்களில் கூட மக்களை அவர்கள் சமமாகவே நடத்தியுள்ளனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பாத்திரத்தில் பால் கொண்டு வரப்பட்டது. அதில் சிறிதளவு அவர்கள் அருந்தினார்கள். அவர்களின் வலப்புறத்தில் குறைந்த வயதுடைய ஒரு இளைஞர் இருந்தார். இடப்பக்கம் பெரியவர்கள் பலர் இருந்தனர். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இளைஞரே! பெரியவர்களுக்கு முதலில் கொடுக்க எனக்கு அனுமதி தருகிறீரா?  என்று கேட்டார்கள். அதற்கு இளைஞர் உங்கள் மூலம் எனக்குக் கிடைக்கும் பாக்கியத்தை மற்றவருக்கு நான் கொடுக்க மாட்டேன்  என்று கூறினார். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்த இளைஞருக்கு முதலில் கொடுத்தார்கள் மற்றவர்களுக்குப் பின்னர் கொடுத்தார்கள்.

நூல் : புகாரி 2351, 2366, 2451, 2602, 2605, 5620

அனஸ் (ரலி) வீட்டில் வளர்க்கப்பட்ட ஆட்ட