முந்தியவர்களை விட பிந்தியவர்கள் தாழ்ந்தவர்களா?

முந்தியவர்களை விட பிந்தியவர்கள் தாழ்ந்தவர்களா?

பிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் (மக்களில்) சிறந்தவர்கள் என் தலைமுறையைச் சேர்ந்தவர்கள்; பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள்; பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள்.

-இந்த ஹதீஸை அறிவிக்கும் அறிவிப்பாளர் இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள்,

இரண்டு தலைமுறைக்குப் பிறகு மூன்றாவதாக ஒரு தலைமுறையை நபி (ஸல்) அவர்கள் சொன்னார்களா என்று எனக்குத் தெரியாது என்று கூறுகிறார்கள்.

நூல் : புகாரி 2651

என்னுடைய கேள்வி என்னவென்றால் நாம் எந்த தலைமுறையைச் சார்ந்தவர்கள்? நாம் கடைசி தலைமுறையாக இருக்கின்றோமே? நமக்கு சிறப்பு இல்லையா? நாம் சிறந்தவர்கள் இல்லையா? இதனுடைய விளக்கம் என்ன?

ஜிஃப்ரீ

பதில் :

நீங்கள் சுட்டிக்காட்டும் முழு ஹதீஸ் இதுதான்:

 حَدَّثَنَا آدَمُ حَدَّثَنَا شُعْبَةُ حَدَّثَنَا أَبُو جَمْرَةَ قَالَ سَمِعْتُ زَهْدَمَ بْنَ مُضَرِّبٍ قَالَ سَمِعْتُ عِمْرَانَ بْنَ حُصَيْنٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَيْرُكُمْ قَرْنِي ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ قَالَ عِمْرَانُ لَا أَدْرِي أَذَكَرَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعْدُ قَرْنَيْنِ أَوْ ثَلَاثَةً قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ بَعْدَكُمْ قَوْمًا يَخُونُونَ وَلَا يُؤْتَمَنُونَ وَيَشْهَدُونَ وَلَا يُسْتَشْهَدُونَ وَيَنْذِرُونَ وَلَا يَفُونَ وَيَظْهَرُ فِيهِمْ السِّمَنُ

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் (மக்களில்) சிறந்தவர்கள் என் தலைமுறையைச் சேர்ந்தவர்கள்; பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள்; பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள்.

-இந்த ஹதீஸை அறிவிக்கும் அறிவிப்பாளர் இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள், இரண்டு தலைமுறைக்குப் பிறகு மூன்றாவதாக ஒரு தலைமுறையை நபி (ஸல்) அவர்கள் சொன்னார்களா என்று எனக்குத் தெரியாது என்று கூறுகிறார்கள்-

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நிச்சயமாக, உங்களுக்குப் பின் ஒரு சமுதாயத்தார் (வர) இருக்கின்றார்கள். அவர்கள் நம்பிக்கை மோசடி செய்வார்கள். அவர்களிடம் எதையும் நம்பி ஒப்படைக்கப்படாது. அவர்கள் சாட்சியாக இருக்கத் தாமாகவே முன் வருவார்கள். ஆனால், சாட்சியம் அளிக்கும்படி அவர்களை யாரும் கேட்க மாட்டார்கள். அவர்கள் நேர்ச்சை செய்வார்கள்; ஆனால் அதை நிறைவேற்ற மாட்டார்கள். அவர்களிடையே பருமனாயிருக்கும் (தொந்தி விழும்) நிலை தோன்றும்.

நூல் : புகாரி 2651

இது தான் நீங்கள் சுட்டிக்காட்டும் ஹதீஸ் ஆகும்.

சிறந்த சமுதாயம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்த அர்த்தத்தில் கூறினார்கள் என்ற விபரமும் இதில் சேர்த்துச் சொல்லப்பட்டுள்ளது.

நபியவர்கள் தம்முடைய தலைமுறை சிறந்த தலைமுறை என்று கூறுகின்றார்கள். அதாவது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடைய காலத்தில் வாழ்ந்த முஸ்லிம்களில் கெட்டவர்கள், நம்பிக்கை மோசடி செய்பவர்கள், இன்னும் மேற்கண்ட ஹதீஸில் நபியவர்கள் சொல்லிக் காட்டக் கூடிய தீய குணங்களைக் கொண்டவர்கள் மிகக் குறைவாகவே இருந்தார்கள் என்பதாகும். தீயவர்கள் அறவே இருக்கவில்லை என்று இதற்குப் பொருள் கொள்ளக் கூடாது.

நபியவர்கள் காலத்தில் முஸ்லிம்கள் என்று வாழ்ந்தவர்களில் கெட்டவர்களும் இருக்கத்தான் செய்தார்கள். ஆனால் நல்லவர்களோடு ஒப்பிடும் போது அவர்கள் மிகக் குறைவானவர்கள் என்பதே இதன் கருத்தாகும்.

நபியவர்களுடைய தலைமுறைக்குப் பிறகு தோன்றக் கூடிய முஸ்லிம் சமுதாயத்தில் கெட்டவர்கள் அதிகரித்துக் கொண்டே செல்வார்கள் என்பதுதான் நபியவர்களுடைய முன்னறிவிப்பாகும்.

நபியவர்களின் முன்னறிவிப்பை இன்றைக்கு நாம் நடைமுறையில் கண்கூடாகக் காண்கிறோம்.

நபியவர்கள் கூறிய கெட்ட தன்மைகள் அனைத்தும் இன்றைக்கு முஸ்லிம்கள் என்று கூறும் பெரும்பாலானவர்களிடத்தில் காணப்படுகிறது. அல்லாஹ் இத்தகைய தன்மைகளை விட்டும் நம்மைப் பாதுகாப்பானாக.

நபியவர்கள் காலத்தில் வாழ்ந்தவர்கள் சிறந்த தலைமுறை என்றால் அதிகமான நல்லவர்கள் வாழ்ந்தார்கள் என்றுதான் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். அதிகமான நல்லவர்கள் வாழ்ந்ததால் அன்றைய காலத்தில் வாழ்ந்த கெட்டவர்களுக்கும் சுவர்க்கம் கிடைக்கும் என்பது இதன் கருத்தல்ல.

அதிக நல்லவர்கள் வாழ்ந்த காலத்தில் பிறந்ததால் சிறப்பு என்பது கிடையாது. நல்லவர்களாக வாழ்வதில்தான் சிறப்பு இருக்கிறது.

அது போன்று இன்று கெட்ட தன்மை உடையவர்கள் அதிகம் வாழும் காலகட்டத்தில் நாம் இருந்தாலும் நாம் நல்லவர்களாக வாழ்ந்தால் அதற்கேற்ற சிறப்பை நம்முடைய தியாகத்திற்குத் தகுந்தவாறு நமக்கும் அல்லாஹ் வழங்குவான்.

நாம் நபியவர்கள் காலத்தில் பிறக்காவிட்டாலும் நபியவர்கள் சொன்ன அடிப்படையில் வாழ்ந்தால் நாமும் நபியின் நண்பர்கள் தான். நமக்கும் மறுமையில் பல பாக்கியங்கள் உள்ளன என்று நபியவர்கள் சிறப்பித்துக் கூறியுள்ளார்கள்.

அது போன்று கெட்டவர்களுக்கு நாசம் உண்டென்றும் கூறியுள்ளார்கள்.

حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ وَسُرَيْجُ بْنُ يُونُسَ وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ وَعَلِيُّ بْنُ حُجْرٍ جَمِيعًا عَنْ إِسْمَعِيلَ بْنِ جَعْفَرٍ قَالَ ابْنُ أَيُّوبَ حَدَّثَنَا إِسْمَعِيلُ أَخْبَرَنِي الْعَلَاءُ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَتَى الْمَقْبُرَةَ فَقَالَ السَّلَامُ عَلَيْكُمْ دَارَ قَوْمٍ مُؤْمِنِينَ وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ بِكُمْ لَاحِقُونَ وَدِدْتُ أَنَّا قَدْ رَأَيْنَا إِخْوَانَنَا قَالُوا أَوَلَسْنَا إِخْوَانَكَ يَا رَسُولَ اللَّهِ قَالَ أَنْتُمْ أَصْحَابِي وَإِخْوَانُنَا الَّذِينَ لَمْ يَأْتُوا بَعْدُ فَقَالُوا كَيْفَ تَعْرِفُ مَنْ لَمْ يَأْتِ بَعْدُ مِنْ أُمَّتِكَ يَا رَسُولَ اللَّهِ فَقَالَ أَرَأَيْتَ لَوْ أَنَّ رَجُلًا لَهُ خَيْلٌ غُرٌّ مُحَجَّلَةٌ بَيْنَ ظَهْرَيْ خَيْلٍ دُهْمٍ بُهْمٍ أَلَا يَعْرِفُ خَيْلَهُ قَالُوا بَلَى يَا رَسُولَ اللَّهِ قَالَ فَإِنَّهُمْ يَأْتُونَ غُرًّا مُحَجَّلِينَ مِنْ الْوُضُوءِ وَأَنَا فَرَطُهُمْ عَلَى الْحَوْضِ أَلَا لَيُذَادَنَّ رِجَالٌ عَنْ حَوْضِي كَمَا يُذَادُ الْبَعِيرُ الضَّالُّ أُنَادِيهِمْ أَلَا هَلُمَّ فَيُقَالُ إِنَّهُمْ قَدْ بَدَّلُوا بَعْدَكَ فَأَقُولُ سُحْقًا سُحْقًا حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ يَعْنِي الدَّرَاوَرْدِيَّ ح و حَدَّثَنِي إِسْحَقُ بْنُ مُوسَى الْأَنْصَارِيُّ حَدَّثَنَا مَعْنٌ حَدَّثَنَا مَالِكٌ جَمِيعًا عَنْ الْعَلَاءِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَرَجَ إِلَى الْمَقْبُرَةِ فَقَالَ السَّلَامُ عَلَيْكُمْ دَارَ قَوْمٍ مُؤْمِنِينَ وَإِنَّا إِنْ شَاءَ اللَّهُ بِكُمْ لَاحِقُونَ بِمِثْلِ حَدِيثِ إِسْمَعِيلَ بْنِ جَعْفَرٍ غَيْرَ أَنَّ حَدِيثَ مَالِكٍ فَلَيُذَادَنَّ رِجَالٌ عَنْ حَوْضِي روا مسلم  

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (முஸ்லிம்களின்) பொது மையவாடிக்குச் சென்று "அஸ்ஸலாமு அலைக்கும் தார கவ்மின் முஃமினீன். வ இன்னா இன்ஷா அல்லாஹு பி(க்)கும் லாஹிகூன்' (அடக்கத் தலங்களிலுள்ள இறை நம்பிக்கையாளர்களே! உங்கள்மீது சாந்தி பொழியட்டும். இறைவன் நாடினால் நிச்சயமாக நாங்களும் உங்களை வந்து சேருபவர்கள் தாம்) என்று கூறி விட்டு,

"நம் சகோதரர்களை (இவ்வுலகிலேயே) பார்க்க நான் ஆசைப்படுகிறேன்'' என்று சொன்னார்கள்.

"அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உங்கள் சகோதரர்கள் இல்லையா?'' என்று மக்கள் கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீங்கள் என் தோழர்கள்தாம். (நான் கூறுவது) இதுவரை (பிறந்து) வந்திராத நம் சகோதரர்கள்'' என்று கூறினார்கள். "உங்கள் சமுதாயத்தாரில் இதுவரை (பிறந்து) வராதவர்களை நீங்கள் எவ்வாறு அறிந்து கொள்வீர்கள், அல்லாஹ்வின் தூதரே?'' என்று மக்கள் கேட்டார்கள்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஒரு மனிதரிடம் முகமும், கை கால்களும் வெண்மையாக உள்ள குதிரை ஒன்று இருந்தது. அது கறுப்புக் குதிரைகளுக்கிடையே இருந்தால் தமது குதிரையை அவர் அறிந்து கொள்ள மாட்டாரா? கூறுங்கள்'' என்று கேட்டார்கள். மக்கள், "ஆம் (அறிந்து கொள்வார்), அல்லாஹ்வின் தூதரே!'' என்று பதிலளித்தனர். "(அவ்வாறே) அவர்கள் உளூ செய்வதனால் உளூசெய்யும் உறுப்புக்கள் பிரகாசிக்கும் நிலையில் (மறுமையில்) வருவார்கள். நான் அவர்களுக்கு முன்பே (அல்கவ்ஸர் எனும் எனது) தடாகத்திற்குச் சென்று அவர்களுக்கு நீர் புகட்டக் காத்திருப்பேன். அறிந்து கொள்ளுங்கள்! வழி தவறி (விளைச்சல் நிலத்திற்குள் நுழைந்து) விட்ட ஒட்டகம் துரத்தப்படுவதைப் போன்று, சிலர் எனது தடாகத்திலிருந்து துரத்தப்படுவார்கள். அவர்களை நான் "வாருங்கள்' என்று சப்தமிட்டு அழைப்பேன். அப்போது, "இவர்கள் உங்களுக்குப் பின்னால் (உங்களது மார்க்கத்தை) மாற்றி விட்டார்கள்'' என்று சொல்லப்படும். அப்போது நான் "(இவர்களை) இறைவன் தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துவானாக; அப்புறப்படுத்துவானாக!'' என்று கூறுவேன்.

நூல் : முஸ்லிம் 419

இந்த ஹதீஸில் நபித்தோழர்களை தோழர்கள் என்று கூறிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், பிற்காலத்தில் வரும் நல்ல முஸ்லிம்களை சகோதரர்கள் என்று கூறுகிறார்கள்.

தோழர்களை விட தம்பிகள் சிறந்தவர்கள் என்பதை நாம் அறிவோம். பின்னால் வரக்கூடியவர்களுக்கு தம்பிமார்கள் என்ற தகுதியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழங்கியுள்ளதால் அதுவும் ஒர் சிறந்த தகுதி தான்.

மேலும் இந்த ஹதீஸில் சிறந்த தலைமுறை என்று அவர்கள் வர்ணித்த தோழர்களிலும் கெட்டவர்கள் இருப்பார்கள் எனவும் அவர்கள் கவ்ஸர் தடாகத்தில் இருந்து அப்புறப்படுத்தப்படுவார்கள் எனவும் கூறி நடத்தையைத் தான் அல்லாஹ் கவனிப்பான் என்ற உண்மையைத் தெளிவாக்குகிறார்கள்.

Leave a Reply