மூன்று தடவைக்கு மேல் சொரியக்கூடாதா?

மூன்று தடவைக்கு மேல் சொரியக்கூடாதா?

தொழும் போது மூன்று முறை சொரிந்தால் தொழுகை கூடாது என்கிறாகளே இது உண்மையா?

நைய்னா முஹம்மத்,  முத்துப்பேட்டை.

பதில்:

இத்தனை தடவை தான் சொரிய வேண்டும் என்றெல்லாம் எந்த வரம்பும் ஹதீஸில் கிடையாது. சொரிய வேண்டிய அவசியம் ஏற்பட்டால் எத்தனை தடவை சொரிந்தால் சொரிய வேண்டும் என்ற உணர்வு நீங்குமோ அது வரை சொரியலாம்.  மூன்று தடவை தான் சொரிய வேண்டும் என்று கூறுவது இறை நினைவிலிருந்து திருப்பக் கூடியதாகவும் உள்ளது.

சொரிவதற்கு வரம்பு ஏதும் இல்லை என்றால் சொரியும் போது கவனம் தொழுகையிலிருந்து திரும்பாது. இயல்பாக சொரிந்து விட்டு நிறுத்திக் கொள்வான்.  மூன்று தடவை தான் சொரிய வேண்டும் என்று ஆதாரம் இல்லாமல் வரம்பு கட்டினால் மூன்று தடவை சொரிந்த பின்பும் அரிப்பு போகாவிட்டால் அவன் தொழுகையில் ஈடுபாட்டுடன் இருக்க முடியாது.

இறை நினைவிலிருந்து கவனம் திரும்பக் கூடாது என்று காரணம் கற்பித்துக் கொண்டு தான் இவ்வாறு சட்டம் வகுத்துள்ளனர். இவர்களின் இந்தச் சட்டம் தான் இறை நினைவிலிருந்து திருப்பிவிடும் என்று இவர்கள் உணரவில்லை.

மூன்று தடவைக்கு மேல் சொரியக் கூடாது என்பதற்கு என்ன ஆதாரம் என்று அவர்களிடம் கேளுங்கள்!

மூன்று தடவைக்கு மேல் சொரியக் கூடாது என்று கூறுவோர் பின்வரும் ஆதாரங்களை எடுத்துக் காட்டுகின்றனர்.

صحيح البخاري

1207 – حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا شَيْبَانُ، عَنْ يَحْيَى، عَنْ أَبِي سَلَمَةَ، قَالَ: حَدَّثَنِي مُعَيْقِيبٌ: أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: فِي الرَّجُلِ يُسَوِّي التُّرَابَ حَيْثُ يَسْجُدُ، قَالَ: «إِنْ كُنْتَ فَاعِلًا فَوَاحِدَةً»

முஐகீப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ஸஜ்தாச் செய்யுமிடத்தில் கிடக்கும் சிறு கற்களை அப்புறப்படுத்துவது பற்றிக் கூறுகையில், "அவ்வாறு செய்துதான் ஆக வேண்டும் என்றிருந்தால் ஒரு தடவை மட்டும் செய்துகொள்க'' என்றார்கள்.

நூல் : புகாரி 1207

இந்த ஹதீஸ் சொரிவதற்குப் பொருந்தாது. தரையில் ஏதாவது கிடந்தால் தள்ளிவிட்டு ஸஜ்தாச் செய்தல் என்பது வேறு. உடல் அரிப்பது என்பது வேறு.

தரையில் கிடப்பதை ஒதுக்கிவிடுதல் என்பது ஒரு தடவையுடன் முடிந்து விடக்கூடியது. ஆனால் உடலில் ஏற்படும் நமைச்சல் தொடர்ந்து கொண்டிருந்தால் அதை நீக்குவதற்காகச் சொரிய வேண்டும் என்பதும் தொடரும். எனவே இதைச் சொரிவதுடன் தொடர்பு படுத்துவது சரியானதல்ல.

பாம்பு ஒன்று நம்மை நோக்கி வந்தால் மேற்கண்ட ஹதீஸை ஆதாரமாகக் காட்டி ஒருதடவை தட்டிவிடு. அதன் பிறகு ஒன்றும் செய்யாதே என்று கூறி மேற்கண்ட ஹதீஸை ஆதாரமாகக் காட்டினால் இவர்கள் ஒப்புக் கொள்வார்களா?

மேலும் மேற்கண்ட ஹதீஸை ஆதாரமாக்க் காட்டினால் ஒரு தடவை தான் சொரிய வேண்டும் எனக் கூற வேண்டும். மூன்று தடவை என்பதற்கு இதில் ஆதாரம் இல்லை என்பதும் கவனிக்கத்தக்கது,

Leave a Reply