மையித்தைக் குளிப்பாட்டியவர் குளிக்க வேண்டுமா?

மையித்தைக் குளிப்பாட்டியவர் குளிக்க வேண்டுமா?

னாஸாவைக் குளிப்பாட்டியவர் குளிப்பது அவசியமா? என்பதில் அறிஞர்களிடையே இரண்டு கருத்து நிலவுகின்றது. எனவே இது பற்றி நாம் விரிவாக ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வர வேண்டும்.

இறந்தவரின் உடலைக் குளிப்பாட்டியவர் குளிக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: அஹ்மத் 9229, 9727, 9485

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாக ஸாலிஹ் என்பார் அறிவிக்கின்றார். தல்அமா என்பவரால் விடுதலை செய்யப்பட்ட அடிமையான இவர் பலவீனமானவர் என்பதால் இதை ஆதாரமாகக் கொள்ள இயலாது.

மேற்கண்ட ஹதீஸ் வேறு அறிவிப்பாளர்கள் வழியாக அஹ்மதில் (7443) பதிவு செய்யப் பட்டுள்ளது. இதை அபூஹுரைரா (ரலி) கூறியதாக அபூ இஸ்ஹாக் அறிவிக்கின்றார். அபூ இஸ்ஹாக் கூறியதாக அறிவிப்பவரைப் பற்றிக் கூறும் போது, "ஒரு மனிதர் அறிவித்தார்'' என்று கூறப்பட்டுள்ளது.

யாரென்று தெரியாதவர்களால் அறிவிக்கப்படும் ஹதீஸ்கள் பலவீனமானவை என்பதால் இதையும் ஆதாரமாகக் கொள்ள முடியாது.

இந்த ஹதீஸ் வேறு அறிவிப்பாளர்கள் வழியாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. (அஹ்மத் 7442) அபூஹுரைரா (ரலி) கூறியதாக அறிவிப்பவர் "அபூ இஸ்ஹாக் என்ற நபர்' அறிவிப்பதாகக் கூறப்படுகின்றது.

அபூ இஸ்ஹாக் என்ற புனைப் பெயரில் ஏராளமான அறிவிப்பாளர்கள் இருந்துள்ளனர். இதில் குறிப்பிடப்படும் அபூஇஸ்ஹாக் யாரென்று தெரியவில்லை. எனவே இந்த ஹதீசும் பலவீனமானதாகும். இதையும் ஆதாரமாகக் கொள்ள முடியாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்ட பின்பும்,வெள்ளிக்கிழமையும், இரத்தம் குத்தி வாங்கும் போதும், இறந்தவரின் உடலைக் கழுவும் போதும் ஆகிய நான்கு சந்தர்ப்பங்களில் குளிப்பவர்களாக இருந்தனர்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: அபூதாவூத் 294

ஆயிஷா (ரலி) அவர்கள் வழியாக அறிவிக்கும் மூன்றாவது அறிவிப் பாளர் முஸ்அப் பின் ஷைபா என்பவர் பலவீனமானவர் என்று இந்த ஹதீஸைப் பதிவு செய்துள்ள அபூதாவூத் அவர்களே (2749வது ஹதீஸில்) குறிப்பிடுகின்றார்கள். மேலும் இமாம் புகாரி, அஹ்மத் பின் ஹம்பல் அபூஸுர்ஆ உள்ளிட்ட மற்றும் பல அறிஞர்களும் இவரைப் பலவீன மானவர் என்று குறிப்பிட்டுள்ளனர். எனவே இதையும் ஆதாரமாகக் கொள்ள முடியாது.

இறந்தவரின் உடலை யார் குளிப்பாட்டுகின்றாரோ அவர் குளிப்பது அவசியம். யார் சுமந்து செல்கின்றாரோ அவர் உளூச் செய்வது அவசியம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: திர்மிதீ 914

இப்னுமாஜாவில் சுமந்து செல்பவர் உளூச் செய்ய வேண்டும் என்று கூறப்படவில்லை. குளிப்பாட்டியவர் குளிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இப்னுமாஜா 1452

அபூஹுரைரா (ரலி) அறிவிப்பதாகக் கூறும் அபூஸாலிஹ் என்பார் அபூஹுரைராவிடமிருந்து எதையும் செவியுற்றதில்லை என்பதால் இது அறிவிப்பாளர்களுக்கிடையில் தொடர்பு அறுந்த ஹதீஸாகும். எனவே இதையும் ஆதாரமாகக் கொள்ள முடியாது.

அஹ்மத் பின் ஹம்பல், அலீ பின் அல் மதீனி, ஹாகிம், தஹபீ, இப்னுல் முன்திர்,இப்னு அபீஹாத்தம், ராபியீ உள்ளிட்ட ஏராளமான அறிஞர்கள், "இறந்தவர்கள் உடலைக் குளிப்பாட்டியவர் குளிக்க வேண்டும் என்ற கருத்தில் ஆதாரப்பூர்வமான ஒரு ஹதீஸ் கூட இல்லை'' என்று குறிப்பிட்டுள்ளனர்.

ஆயினும் இப்னு ஹஜர் அவர்கள் இவர்களின் கூற்றை நிராகரிக்கின்றார். இது பற்றி ஏற்கத்தக்க ஹதீஸ் உள்ளது என்று வாதிடுகின்றார்.

இறுதியாக நாம் எடுத்துக் காட்டிய ஹதீஸில் அபூஹுரைராவிடமிருந்து அபூஸாலிஹ் அறிவிப்பதாகக் கூறப்படுகின்றது. அபூஸாலிஹ் என்பார் அபூஹுரைராவிடமிருந்து எதையும் செவியுற்றதில்லை என்று குறிப்பிட்டிருந்தோம்.

இந்த ஹதீஸ் மற்றொரு வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அபூஹுரைராவிடமிருந்து ஸாயித் என்பவரால் விடுதலை செய்யப்பட்ட அபூஇஸ்ஹாக் அறிவிக்கின்றார். அவரிடமிருந்து அபூஸாலிஹ் அறவிக்கின்றார் என்று இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

அபூஸாலிஹுக்கும் அபூஹுரைராவுக்கும் இடையே அறிவிப்பாளர் தொடர் அறுந்துள்ளது என்ற குறைபாடு இந்த அறிவிப்பின் மூலம் நீங்கி விடுகின்றது. இந்த அறிவிப்பு பைஹகீ 1334வது ஹதீஸாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அபூதாவூதிலும் (2749) இந்த அறிவிப்பு இடம் பெற்றுள்ளது.

அபூஹுரைராவுக்கும் அபூஸாலிஹுக்கும் இடையே வருகின்ற "ஸாயிதால் விடுதலை செய்யப்பட்ட அபூஇஸ்ஹாக்' என்பவர் அறிவிக்கும் ஹதீஸ்கள் முஸ்லிமிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இது ஆதாரப்பூர்வமானது என்று இப்னு ஹஜர் அவர்கள் வாதிடுகின்றார்கள்.

இது ஏற்றுக் கொள்ளத் தக்க வாதம் என்பதில் சந்தேகம் இல்லை. இறந்தவரின் உடலைக் குளிப்பாட்டியவர் குளிக்க வேண்டும் என்ற கருத்தில் இடம் பெறும் எல்லா அறிவிப்புக்களும் பலவீனமானவை என்றாலும் இப்னு ஹஜர் அவர்கள் சுட்டிக் காட்டும் அறிவிப்பு பலமான அறிவிப்பாகவே உள்ளது.

இந்த ஹதீஸின் அடிப்படையில் இறந்தவரின் உடலைக் குளிப்பாட்டியவர் குளிப்பது அவசியம் என்ற முடிவுக்கு வர இயலும் என்றாலும் இதை மறுக்கும் ஹதீஸ்களும் உள்ளன. இதனால் தான் இந்த ஹதீஸைப் பற்றி அபூதாவூத் அவர்கள் குறிப்பிடும் போது, "இது மாற்றப்பட்டு விட்டது'' என்று குறிப்பிடுகின்றார்கள். (அபூதாவூத் 2749)

இந்த ஹதீஸின் கருத்துக்கு மாற்றமாக அமைந்த ஹதீஸ்கள் வருமாறு:

இறந்தவரின் உடலைக் குளிப்பாட்டுவதால் உங்கள் மீது குளிப்பு கடமையாகாது. உங்களில் இறந்தவர் அசுத்தமானவர் அல்ல. எனவே உங்கள் கைகளைக் கழுவிக் கொள்வதே உங்களுக்குப் போதுமாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: ஹாகிம் 1426

இதே ஹதீஸை பைஹகீ அவர்களும் பதிவு செய்து விட்டு, அபூஷைபா என்பவர் வழியாக அறிவிக்கப்படுவதால் இது பலவீனமானது என்று கூறுகின்றார்கள்.

அபூஷைபா என்னும் இப்ராஹீம் பின் அப்துல்லாஹ் என்பார் பலவீனமானவர் அல்லர். நஸயீ உள்ளிட்ட அறிஞர்கள் பலர் இவரை ஆதாரமாகக் கொண்டுள்ளனர் என்று ஹாபிழ் இப்னு ஹஜர் மறுப்பு தெரிவிக்கின்றார்கள்.

இறந்தவரின் உடலை நாங்கள் குளிப்பாட்டுவோம். (குளிப்பாட்டிய பின்) எங்களில் குளிப்பவரும் இருப்பார்கள். குளிக்காதவர்களும் இருப்பார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: பைஹகீ 1363

இது ஆதாரப்பூர்வமான அறிவிப்பு என்று ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் தமது தல்கீஸ் என்ற நூலில் குறிப்பிடுகின்றார்கள்.

இப்னு உமர் (ரலி) அவர்கள் தமது காலத்தில் வாழ்ந்த மக்களிடம் இதைக் கூறுகின்றார்கள். தமது காலத்தில் வாழ்ந்த மக்களிடம் கூறுவதாக இருந்தால் நபிகள் நாயகம் காலத்து நடைமுறையைத் தான் கூறியிருக்க வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் நடந்த நடைமுறையைத் தான் அவர்கள் குறிப்பிடுகின்றார்கள் என்பதில் சந்தேகம் இல்லை. குளிப்பது கட்டாயம் என்றிருந்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குளிக்காத மக்களைக் கண்டித்திருப்பார்கள்.

குளிக்க வேண்டும் என்ற ஹதீசும், குளிப்பது அவசியம் இல்லை என்ற ஹதீசும் ஆதாரப்பூர்வமானவையாக அமைந்துள்ளதால் முரண்பட்ட இரண்டில் எதை ஏற்பது?என்ற குழப்பம் ஏற்படலாம்.

குளிக்க வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியது கட்டாயம் என்ற அடிப்படையில் அல்ல. விரும்பத்தக்கது என்ற அடிப்படையிலேயே கூறினார்கள் என்று புரிந்து கொண்டால் இந்தக் குழப்பம் நீங்கி விடும்.

குளிப்பது சிறந்தது, குளிக்காமல் விட்டால் குற்றம் ஏற்படாது என்பதே சரியான கருத்தாகும் என்பதை இதிலிருந்து அறிந்து கொள்ளலாம்.


ஏகத்துவம் 2005 பிப்ரவரி இதழில் வெளிவந்தது

About Me

இறைவனின் திருப்பெயரால்…

  • இந்த தளத்தில் உள்ள செய்திகள் ஏகத்துவ கொள்கையை சொல்லும் பல்வேறு இணையதளத்தில் இருந்து எடுத்து தொகுக்கப்பட்டவை (ஆன்லைன்பீஜே, ஆன்லைன் டிஎன்டிஜே, etc).
  • இதில் தவறான கருத்துகள் ஏதேனும் இருப்பின் அதை Facebook page https://www.facebook.com/Thowheed.org என்ற முகவரிக்கு அனுப்பி தெரிவிக்கலாம்.
  • உங்கள் ஆக்கங்களையும்
  • Facebook page https://www.facebook.com/Thowheed.org என்ற முகவரிக்கு
  • என்ற முகவரிக்கு அனுப்பவும். ஆசிரியர் சரிபார்த்தபின் வெளியிடப்படும்.
  • இந்த தளத்திற்கும் எந்த அமைப்பிற்கும் எந்த தொடர்பும் கிடையாது.

You may want to read

Follow Us

Sign up for our Newsletter

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit