ராசியில்லாத வீடுகள் உண்டா?
ஒரு வீட்டிற்கு நாம் குடிவந்தது முதல் சிரமங்களும், துன்பங்களும் அதிமாகி விட்டன. இழப்புகளும் ஏற்படுகின்றன. வீடு சரியில்லை; ராசி இல்லை என்பது போன்ற காரணங்களைச் சிலர் சொல்கிறார்கள். இப்படி நம்புவதற்கு இஸ்லாத்தில் இடம் உண்டா
அமீர் ஹுசைன்.
பதில்:
இஸ்லாத்தில் இது போன்ற மூட நம்பிக்கைகளுக்கு அறவே இடமில்லை. அல்லாஹ் ஒவ்வொரு மனிதனுக்கும் இன்னின்ன நாட்களில் இன்னின்னது நடக்கும் என்று தீர்மானம் செய்துள்ளான். ஒவ்வொரு நபருக்கும் இறைவன் விதித்திருக்கும் இந்த விதியை நாள் பார்ப்பதன் மூலமும் மாற்ற முடியாது. வேறு வீடு மாறுவதன் மூலமும் விதியில் எந்த மாறுதலும் ஏற்படாது.
இந்தப் பூமியிலோ, உங்களிடமோ எந்தத் துன்பம் நிகழ்ந்தாலும் அதை நாம் உருவாக்குவதற்கு முன்பே பதிவேட்டில் இல்லாமல் இருக்காது. இது அல்லாஹ்வுக்கு எளிதானது.
இவளைத் திருமணம் செய்தது முதல் இந்த வீட்டை வாங்கியது முதல் எனக்குத் தரித்திரம் பிடித்து ஆட்டுகிறது; ஒரே கஷ்டமாக உள்ளது என்று புலம்புவதற்கு இஸ்லாத்தில் அனுமதி இல்லை. இதனால் தான் இது வந்தது என்று கூறுவதானால் ஒன்று அதற்கு அறிவுப் பூர்வமான காரணம் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அல்லாஹ்வோ, அவனது தூதரோ அப்படிச் சொல்லி இருக்க வேண்டும்.
இவ்விரு காரணங்கள் இல்லாமல் ஒரு விளைவை ஒரு காரணத்துடன் தொடர்புபடுத்தினால் மறைவான ஞானத்துக்கு நாம் உரிமை கொண்டாடியவர்களாக ஆவோம்.
ஒருவன் விஷம் குடித்து இறந்து விட்டால் அவன் விஷம் குடித்ததால் இறந்தான் என்று சொல்ல முடியும். ஏனெனில் விஷத்தில் உயிரைப் பறிக்கும் தன்மை உள்ளது என்பதை நாம் நிரூபிக்க முடியும்.
ஆனால் பூணை குறுக்கே போனதால் நான் போன காரியம் நடக்கவில்லை என்று கூறுவதாக இருந்தால் அதை லாஜிக்காகவோ, அறிவியல் பூர்வமாகவோ நிரூபிக்க வேண்டும். அல்லது அனைத்தையும் படைத்த அல்லாஹ் அதைச் சொல்லி இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் நாம் காரணம் கற்பித்தால் அது பொய்யாகவும், மூட நம்பிக்கையாகவும் அமைந்து விடும்.
இந்த அடிப்படையில் ஒரு பெண் வாழ்க்கைப்பட்டு வந்ததால் ஒருவனுக்குச் சிரமம் ஏற்படும் என்று கூறுவதானால் அதற்கு அறிவியல் நிரூபணம் இருக்க வேண்டும். ஒரு வீட்டுக்கு மாறிய பின்னர் நமக்குத் துன்பம் வந்தால் அத்துன்பத்துக்கு வீடுதான் காரணம் என்பதற்கு நிரூபணம் இருக்க வேண்டும்.
இதற்கு அறிவியல் பூர்வமாக நிரூபணம் இல்லை என்பது தெரிந்த விஷயம் தான். ஆனால் அல்லாஹ்வின் தூதர் இப்படி சொல்லி இருக்கிறார்களா என்று பார்க்கும் போது சில ஹதீஸ்கள் கிடைக்கின்றன.
حدثنا أبو اليمان أخبرنا شعيب عن الزهري قال أخبرني سالم بن عبد الله أن عبد الله بن عمر رضي الله عنهما قال سمعت النبي صلى الله عليه وسلم يقول إنما الشؤم في ثلاثة في الفرس والمرأة والدار
குதிரை, பெண், வீடு ஆகியவற்றில் பீடை உண்டு என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
நூல் : புகாரி 2858, 5093
புகாரி 5094, 5753 ஆகிய ஹதீஸ்களிலும் இக்கருத்து பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த மூன்று விஷயங்களில் மட்டும் பீடை சகுனம் உண்டு என்று இந்த ஹதீஸ் கூறுவதால் இம்மூன்று மட்டும் இதில் இருந்து விதிவிலக்கு பெறுகின்றது என்று சில அறிஞர்கள் கூறி இதை நியாயப்படுத்தியும் எழுதி உள்ளனர்.
ஆனால் இது குறித்த ஹதீஸ்களை ஆய்வு செய்த ஹதீஸ் துறை அறிஞர்கள் இந்தச் செய்தி ஏற்கத்தக்கதல்ல என்று தக்க காரணங்களுடன் விளக்கியுள்ளனர்.
இந்த ஹதீஸ் வேறு விதமான வார்த்தைகளைக் கொண்டு அதே புகாரியில் அதே இப்னு உமர் (ரலி) வழியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
حدثنا محمد بن منهال حدثنا يزيد بن زريع حدثنا عمر بن محمد العسقلاني عن أبيه عن ابن عمر قال ذكروا الشؤم عند النبي صلى الله عليه وسلم فقال النبي صلى الله عليه وسلم إن كان الشؤم في شيء ففي الدار والمرأة والفرس
சகுனம் என்று ஒன்று இருக்குமானால் அது வீடு, பெண், குதிரை ஆகியவற்றில் தான் இருக்க முடியும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)
நூல் : புகாரி 5094
சகுனம் என ஒன்று இருக்குமானால் இந்த மூன்றில் தான் இருக்க முடியும் என்ற வாசகம் சகுனம் இல்லை என்ற கருத்தைத் தான் தரும்.
ஒரு மனிதனை இன்னொரு மனிதனுக்கு ஸஜ்தா செய்ய நான் கட்டளை இடுவதாக இருந்தால் ஒரு பெண்ணை அவளது கணவனுக்கு சஜ்தா செய்யுமாறு கட்டளையிட்டிருப்பேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இதன் கருத்து யாரும் யாருக்கும் சஜ்தா செய்யக் கூடாது என்பது தான்.
அது போல்
صحيح البخاري
3469 – حَدَّثَنَا عَبْدُ العَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: إِنَّهُ قَدْ كَانَ فِيمَا مَضَى قَبْلَكُمْ مِنَ الأُمَمِ مُحَدَّثُونَ، وَإِنَّهُ إِنْ كَانَ فِي أُمَّتِي هَذِهِ مِنْهُمْ فَإِنَّهُ عُمَرُ بْنُ الخَطَّابِ
உங்களுக்கு முன் சென்ற சமுதாயங்களில், முன்கூட்டியே அறிவிக்கப்பட்டவர்கள் இருந்திருக்கிறார்கள். அத்தகையவர்களில் எவராவது எனது இந்தச் சமுதாயத்தில் இருப்பாராயின் அது உமர் பின் கத்தாப் அவர்கள் தாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : புகாரி 3469, 3689
இப்படி யாராவது இருப்பதாக இருந்தால் அவர் உமராக இருப்பார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதன் மூலம் இது போன்றவர் இனிமேல் கிடையாது என்று தான் புரிந்து கொள்ள வேண்டும்.
அது போல் சகுனம் என்று இருக்குமானால் மேற்கண்ட மூன்றில் தான் இருக்க முடியும் என்பது சகுனம் இல்லை என்ற கருத்தை தருகிறது.
ஆனால் முதலில் எடுத்துக்காட்டிய அறிவிப்புகள் மேற்கண்ட மூன்றிலும் சகுனம் இருப்பதாகச் சொல்கிறது. இரண்டுமே ஒரே அற்விப்பாளரைக் கொண்டு அறிவிக்கப்படுவதால் குர்ஆனின் கருத்துக்கு நெருக்கமாக உள்ள இரண்டாம் அறிவிப்பை ஏற்று முதலாம் அறிவிப்பை நபிகள் சொன்னது அல்ல எனக் கூறி நிராகரித்து விட வேண்டும்.
அல்லது இரண்டும் முரண்படுவதால் இரண்டையும் நாம் நிறுத்தி வைத்து விட்டு வேறு ஆதாரங்கள் அடிப்படையில் முடிவு செய்ய வேண்டும்.
வேறு ஆதாரங்கள் மூலம் எதிலும் சகுனம் இல்லை என்று பொதுவாக்க் கூறும் ஹதீஸ்கள் அடிப்படையில் இம்மூன்றிலும் சகுனம் இல்லை என்ற முடிவுக்குத் தான் நாம் வரவேண்டும்.
முரண்பட்ட இரண்டையும் நாம் தள்ளி விட்டாலும் குர்ஆனுக்கு நெருக்கமான அறிவிப்பை மட்டும் ஏற்றுக் கொண்டாலும் இம்முன்றிலும் சகுனம் இல்லை என்ற கருத்து நிரூபணமாகி விடும்.
இது குறித்து ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்ட போது அவர்கள் அளித்த விளக்கத்தையும் நாம் கூடுதல் தகவலாக அறிந்து கொள்ளலாம்.
مسند أحمد بن حنبل
26076 – حدثنا عبد الله حدثني أبى ثنا يزيد قال أنا همام بن يحيى عن قتادة عن أبى حسان قال دخل رجلان من بنى عامر على عائشة فأخبراها ان أبا هريرة يحدث عن النبي صلى الله عليه و سلم انه قال : الطيرة من الدار والمرأة والفرس فغضبت فطارت شقة منها في السماء وشقة في الأرض وقالت والذي أنزل الفرقان على محمد ما قالها رسول الله صلى الله عليه و سلم قط إنما قال كان أهل الجاهلية يتطيرون من ذلك – تعليق شعيب الأرنؤوط : إسناده صحيح على شرط مسلم
இரண்டு மனிதர்கள் ஆயிஷா (ரலி) அவர்களிடம் வந்து சகுணம் என்பது பெண், கால்நடை, வீடு ஆகியவற்றில் மட்டும் தான் இருக்கிறது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஹுரைரா அறிவித்துக் கொண்டிருக்கிறார் என்று கூறினார்கள். உடனே அவர்கள் மேலும் கீழும் பார்த்துவிட்டு அபுல்காசிமிற்கு (நபி (ஸல்) அவர்களுக்கு) இந்தக் குர்ஆனை அருளியவன் மீது சத்தியமாக இப்படி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லவில்லை. மாறாக அறியாமைக் கால மக்கள் சகுணம் என்பது பெண் கால்நடை, வீடு ஆகியவற்றில் உண்டு எனக் கூறி வந்தார்கள் என்று தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று சொல்லி விட்டு இந்தப் பூமியிலோ, உங்களிடமோ எந்தத் துன்பம் நிகழ்ந்தாலும் அதை நாம் உருவாக்குவதற்கு முன்பே பதிவேட்டில் இல்லாமல் இருக்காது. இது அல்லாஹ்வுக்கு எளிதானது (57 : :22) என்ற வசனத்தை ஓதினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹஸ்ஸான் (ரஹ்)
நூல் : அஹ்மத் 24894