ருகூவில் இருந்து எழுந்தபின் கைகளைக் கட்ட வேண்டுமா?

ருகூவில் இருந்து எழுந்தபின் கைகளைக் கட்ட வேண்டுமா?

ருகூவில் இருந்து எழுந்தவுடன் கைகளைத் தொங்கவிடாமல் கைகளைக் கட்டிக் கொள்ள வேண்டுமா? அது தவறு என்றால் ஆதாரங்களுடன் தெளிவுபடுத்தவும்.

ஹிஷாம்

பதில்:

தொழுகையில் ருகூவிலிருந்து எழுந்த பிறகு சிறிது நேரம் நிற்க வேண்டும். இதன் பிறகு ஸஜ்தாவிற்குச் செல்ல வேண்டும். ஸஜ்தாவுக்கு முன்பாக உள்ள இந்த சிறிது நேர நிலையின் போது கைகளைத் தொங்கவிட வேண்டும் என்று அனைத்து அறிஞர்களும் கூறுகின்றனர்.

ஆனால் தற்காலத்தில் வந்தவரான அப்துல்லாஹ் பின் பாஸ் என்ற அறிஞர் இந்த நிலையில் கைகைளக் கீழே தொங்கவிடாமல் நெஞ்சில் கட்டிக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

சவூதி அரசாங்கத்தில் இவருக்கு இருந்த செல்வாக்கு காரணமாக இதை சவூதி மக்களில் கனிசமானவர்கள் பின்பற்றுகின்றனர். விடுபட்ட நபிவழி என்ற பெயரில் தமிழ் உட்பட பல மொழிகளில் கோடிக்கணக்கான இலவச புத்தகத்தை அச்சிட்டு சவூதி அரசாங்கத்தின் மூலம் வினியோகம் செய்தனர். ஜாக் இயக்கத்துக்கும் தமிழில் இந்த நூல்கள் பல்லாயிரம் பிரதிகள் 1990ஆம் ஆண்டு சவூதி மூலம் அனுப்பப்பட்டன. ஆனால் ஜாக் இயக்கம் இவற்றை மூட்டை கட்டி பரணில் போட்டுவிட்டதால் தமிழகத்தில் இது அவ்வளவாக பரவவில்லை.

இந்தக் கூற்றுக்கு ஏற்கத்தகுந்த ஆதாரங்கள் இருந்தால் யார் கூறினாலும் அதைக் கடைப்பிடிப்பது ஒரு முஃமினுடைய கடமை. ருகூவுக்குப் பிறகுள்ள நிலையில் கைகளைக் கட்டிக் கொண்டு நிற்க வேண்டும் என்ற கருத்தில் நேரடியாக ஒரு நபிமொழி கூட இல்லை.

இந்தச் சட்டத்தைக் கூறிய இப்னு பாஸ் அவர்களும், இவரைப் பின்பற்றி இச்சட்டத்தைக் கூறுபவர்களும் தொழுகை பற்றி வந்துள்ள அனைத்து நபிமொழிகளையும் சரியாக ஆராயவில்லை. ஒரு நபிமொழியைத் தவறாகப் புரிந்து கொண்டதின் அடிப்படையில் இப்படிப்பட்ட தவறான சட்டத்தை மக்களிடம் வைத்துள்ளனர்.

இவர்கள் இந்த வாதத்திற்கு பின்வரும் நபிமொழியை மட்டுமே ஆதாரம் காட்டுகின்றனர்.

877أَخْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ قَالَ أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ عَنْ مُوسَى بْنِ عُمَيْرٍ الْعَنْبَرِيِّ وَقَيْسِ بْنِ سُلَيْمٍ الْعَنْبَرِيِّ قَالَا حَدَّثَنَا عَلْقَمَةُ بْنُ وَائِلٍ عَنْ أَبِيهِ قَالَ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا كَانَ قَائِمًا فِي الصَّلَاةِ قَبَضَ بِيَمِينِهِ عَلَى شِمَالِهِ رواه النسائي

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையில் நின்றால் தமது வலது கையை இடது கையின் மீது வைத்து பிடித்துக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன்.

அறிவிப்பவர் : வாயில் பின் ஹுஜ்ர் (ரலி)

நூல் : நஸாயீ 877

இந்த ஹதீஸில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகையில் நின்றால் வலது கையை இடது கையின் மீது வைப்பார்கள் என்று சொல்லப்பட்டுள்ளது. ருகூவுக்குப் பிறகு நிலைக்கு வருவதால் இந்தப் பொதுவான ஹதீஸ் அடிப்படையில் இந்த நிலையிலும் கைகளைக் கட்ட வேண்டும் என்று வாதிடுகின்றனர்.

நிற்குதல் என்பது தொழுகையை ஆரம்பித்தவுடன் நிற்பதைத் தான் குறிக்கும் என்பதை இவர்கள் விளங்காததால் இவ்வாறு வாதிடுகின்றனர்.

10087حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ عَنْ سَعِيدِ بْنِ سِمْعَانَ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ تَرَكَ النَّاسُ ثَلَاثَةً مِمَّا كَانَ يَعْمَلُ بِهِنَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا قَامَ إِلَى الصَّلَاةِ رَفَعَ يَدَيْهِ مَدًّا ثُمَّ سَكَتَ قَبْلَ الْقِرَاءَةِ هُنَيَّةً يَسْأَلُ اللَّهَ مِنْ فَضْلِهِ فَيُكَبِّرُ كُلَّمَا خَفَضَ وَرَفَعَ رواه أحمد

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையில் நின்றால் கைகளை உயர்த்துவார்கள். பிறகு ஓதுவதை ஆரம்பிப்பதற்கு முன்பாக சிறிது நேரம் மௌனமாக இருப்பார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : அஹ்மது 10087

நிற்கும் போது கைகளைக் கட்டிக் கொள்வார்கள் என்ற ஆதாரத்தின் அடிப்படையில் ருகூவுக்குப் பிறகு நிற்கும் போதும் கைகளைக் கட்டிக் கொள்ள வேண்டும் என்ற இவர்களின் வாதப்படி மேற்கண்ட ஹதீஸையும் புரிந்து கொள்வார்களா? அதாவது ருகூவில் இருந்து எழுந்து நிற்கும் போது அதில் குர்ஆன் ஓதுவார்களா?

இந்த ஹதீஸிலும் நின்றால் என்று பொதுவாகத் தான் கூறப்பட்டுள்ளது. இந்த நிலை ருகூவைக் குறிக்காது. குர்ஆன் ஓதுவதற்குரிய நிலையை மட்டுமே குறிக்கும் என்பதை அனைவரும் ஒத்துக்கொள்வார்கள்.

வலது கையை இடது கையின் மீது வைத்து கைகட்டுவது தொடர்பாக வரும் நபிமொழியைப் படித்தால் இந்தச் செயலை குர்ஆன் ஓதுவதற்குரிய நிலையில் செய்ய வேண்டும். ருகூவுக்குப் பிறகுள்ள நிலையில் செய்யக் கூடாது என்பதை தெளிவாக அறியலாம்.

608حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ حَدَّثَنَا عَفَّانُ حَدَّثَنَا هَمَّامٌ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جُحَادَةَ حَدَّثَنِي عَبْدُ الْجَبَّارِ بْنُ وَائِلٍ عَنْ عَلْقَمَةَ بْنِ وَائِلٍ وَمَوْلًى لَهُمْ أَنَّهُمَا حَدَّثَاهُ عَنْ أَبِيهِ وَائِلِ بْنِ حُجْرٍ أَنَّهُ رَأَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَفَعَ يَدَيْهِ حِينَ دَخَلَ فِي الصَّلَاةِ كَبَّرَ وَصَفَ هَمَّامٌ حِيَالَ أُذُنَيْهِ ثُمَّ الْتَحَفَ بِثَوْبِهِ ثُمَّ وَضَعَ يَدَهُ الْيُمْنَى عَلَى الْيُسْرَى فَلَمَّا أَرَادَ أَنْ يَرْكَعَ أَخْرَجَ يَدَيْهِ مِنْ الثَّوْبِ ثُمَّ رَفَعَهُمَا ثُمَّ كَبَّرَ فَرَكَعَ فَلَمَّا قَالَ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ رَفَعَ يَدَيْهِ فَلَمَّا سَجَدَ سَجَدَ بَيْنَ كَفَّيْهِ رواه مسلم

வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள் :

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகையை ஆரம்பித்தபோது தம்மிரு கைகளையும் உயர்த்தி, தக்பீர் கூறியதை நான் பார்த்தேன். பின்னர் தமது ஆடையால் (இரு கைகளையும்) மூடி இடக்கையின் மீது வலக் கையை வைத்தார்கள். அவர்கள் ருகூஉச் செய்ய விரும்பிய போது தம் கைகளை ஆடையிலிருந்து வெளியே எடுத்துப் பின்னர் அவற்றை உயர்த்தித் தக்பீர் கூறி ருகூஉச் செய்தார்கள். (ருகூவிலிருந்து நிமிரும் போது) சமிஅல்லாஹு லிலிமன் ஹமிதஹ்' என்று கூறுகையில் (முன் போன்றே) தம்மிரு கைகளையும் உயர்த்தினார்கள். பிறகு ஸ்ஜ்தாச் செய்யும் போது தம்மிரு உள்ளங்கை(களை நிலத்தில் வைத்து அவை)களுக்கிடையே (நெற்றியை வைத்து) ஸஜ்தாச் செய்தார்கள்.

நூல் : முஸ்லிம் 671

இந்த நபிமொழி தொழும் முறையை விவரிக்கின்றது. வலது கையை இடது கையின் மீது எப்போது வைக்க வேண்டும் என்பதைத் தெளிவாக விவரிக்கின்றது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முதலாவது நிலையில் தான் கைகளைக் கட்டிய நிலையில் நின்றுள்ளார்கள். இதே செய்தி ருகூவுக்குப் பிறகுள்ள நிலையைப் பற்றியும் பேசுகின்றது. ஆனால் இங்கே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கைகளைக் கட்டினார்கள் என்று கூறப்படவில்லை.

எனவே குர்ஆன் ஓதுவதற்குரிய நிலையில் தான் கைகளை கட்ட வேண்டும். ருகூவுக்குப் பிறகுள்ள நிலையில் கைகளைக் கட்டாமல் தொங்க விட வேண்டும். இது தான் நபிவழி. இதற்கு மாற்றமாக ருகூவுக்குப் பிறகுள்ள நிலையில் கைகளை கட்டினால் அது நபியவர்கள் செய்துகாட்டிய தொழுகைக்கு மாற்றமான பித்அத்தான செயலாகும்.

Leave a Reply