வருமுன் உரைத்த இஸ்லாம்

வருமுன் உரைத்த இஸ்லாம்

ஆசிரியர் : பீ.ஜைனுல் ஆபிதீன்

வரு முன் உரைத்த இஸ்லாம்

கடந்த 2003 ஆம் ஆண்டு பி.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் நபிகள் நாயகத்தின் முன்னறிவிப்புக்கள் என்ற தலைப்பில் ரமளான் முழுவதும் தொடர் சொற்பொழிவு நிகழ்த்தினார்கள்.

அந்த உரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் தாம் என்பதைச் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கும் வகையில் அமைந்தது. தனியார் தொலைக்காட்சியிலும் சஹர் நேரத்தில் ஒளிபரப்புச் செய்யப்பட்டது.

அந்த உரையில் நபிகள் நாயகத்தின் முன்னறிவிப்புகள் மட்டுமே இடம் பெற்றுள்ளது. அதை விட முக்கியமான அறிவியல் உண்மைகளும், எதிர்கால நிகழ்வுகள் பற்றிய முன்னறிவிப்புகளும் திருக்குர்ஆனில் ஏராளம் உள்ளன. எனவே அவற்றையும் தொகுத்து நபிகள் நாயகத்தின் முன்னறிவிப்புடன் இணைத்து வெளியிட்டுள்ளோம்.

இஸ்லாம் இறைவன் வழங்கிய மார்க்கம் என்பதை நிரூபிக்கும் சான்றாக திருக்குர்ஆனும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முன்னறிவிப்புக்களும் அமைந்துள்ளன என்பதை பின் வரும் தலைப்புகளில் இந்நூல் தெளிவுபடுத்துகிறது.

திருக்குர்ஆன் ஓர் வாழும் அற்புதம்!

அறிவியல் கண்டுபிடிப்புகள்

1 பெருவெடிப்புக் கொள்கை

2 திருப்பித் தரும் வானம்

3 விண்வெளிப் பயணம் சாத்தியமே

4 முகடாக வானம்

5 பூமியில் தான் வாழ முடியும்

6 புவி ஈர்ப்பு சக்தி

7 முளைகளாக மலைகள்

8 ஓரங்களில் குறையும் பூமி

9 பூமியைத் தொட்டிலாக

10 பூமிக்கு அடியில் எவ்வளவு ஆழத்திற்குச் செல்ல முடியும்?

11 நிலத்தடி நீர் எவ்வாறு சேமிக்கப்படுகிறது

12 இரு கடல்களுக்கிடையே தடுப்பு

13 உதிக்கும் பல திசைகள்

14 மனிதர்களால் குறையும் பூமி

15 ஆழ் கடலில் அலை

16 மலட்டுக் காற்று

17 சூரியனும் கோள்களும் ஓடுகின்றன

18 கருவில் குழந்தையின் வளர்ச்சி

19 கலப்பு விந்துவிலிருந்து மனிதனின் உற்பத்தி

20 ஜோடி ஜோடியாக…

21 விந்தின் பிறப்பிடம்

22 கர்ப்ப அறையின் தனித் தன்மை

23 விரல் ரேகையின் முக்கியத்துவம்

24 பால் எவ்வாறு உற்பத்தியாகிறது

25 தேன் எவ்வாறு உற்பத்தியாகிறது

26 நவீன வாகனங்கள்

27 பெருங்கவலை போக்கும் அரு மருந்து

28 வேதனைகளை உணரக் கூடிய நரம்புகள்

29 பாதுகாக்கப்படும் திருக்குர்ஆன்

30 கஃபா பற்றி முன்னறிவிப்பு

31 மனிதர்களால் நபிகள் நாயகத்தைக் கொல்ல முடியாது

32 பாதுகாக்கப்பட்ட ஃபிர்அவ்னின் உடல்

33 நுஹ் நபியின் கப்பல்

34 இஸ்லாமிய ஆட்சி உருவாகும் என்ற முன்னறிவிப்பு

35 மக்காவை நபிகள் நாயகம் (ஸல்) வெற்றி கொள்வார்கள் என்ற முன்னறிவிப்பு

36 பத்ருப் போரில் வெற்றி பற்றிய முன்னறிவிப்பு

37 அபூலஹப் குறித்த முன்னறிவிப்பு

38 பாரசீகம் ரோமாபுரியிடம் தோற்கும்

39 கண்டுபிடிக்கப்பட்ட ஏடு

40 தீய நோக்கத்தில் கட்டப்பட்ட பள்ளிவாசல்

நபிகள் நாயகத்தின் முன்னறிவிப்புகள்

1 பாரசீகம் வெற்றி கொள்ளப்படும்

2 தமது மரணம் குறித்து அறிவித்த முன்னறிவிப்பு

3 தனி நபரைப் பற்றி நரகவாசி என்ற முன்னறிவிப்பு

4 தமது மகளின் மரணம் பற்றிய முன்னறிவிப்பு

5 அம்மாரின் மரணம் பற்றிய முன்னறிவிப்பு

6 ஸைனப் (ரலி) அவர்கள் மரணம் பற்றிய முன்னறிவிப்பு

7 இரண்டு கலீஃபாக்களின் வீர மரணம் பற்றி முன்னறிவிப்பு

8 ஒட்டகப் போர் பற்றி முன்னறிவிப்பு

9 ஹஸன் (ரலி) மூலம் ஏற்பட்ட சமாதான உடன்படிக்கை

10 வழிப்பறிக் கொள்ளைகள் தடுக்கப்படும்

11 பாரசீகம் மற்றும் ரோமப் பேரரசின் வீழ்ச்சி பற்றிய முன்னறிவிப்பு

12 யமன் வெற்றிகொள்ளப்படும் என்ற முன்னறிவிப்பு

13 பைத்துல் முகத்தஸ் வெற்றி கொள்ளப்படுதல்

14 எகிப்து வெற்றி கொள்ளப்படும் என்ற முன்னறிவிப்பு

15 போலி இறைத்தூதர்கள் பற்றிய எச்சரிக்கை

16 ஸம்ஸம் கிணறு பற்றிய முன்னறிவிப்பு

17 தனது எஜமானியைத் தானே பெற்றெடுக்கும் பெண்கள் பற்றிய முன்னறிவிப்புகள்

18 ஆடு மேய்ப்பவர்கள் உயரமான கட்டடங்களைக் கட்டுவர்

19 ஆடை அணிந்தும் நிர்வாணம்

பொதுவான முன்னறிவிப்புகள்

முன்னுரை

இஸ்லாம் மார்க்கம் முஹம்மது நபி (ஸல்) அவர்களால் உருவாக்கப்பட்ட மார்க்கம் என்று முஸ்லிமல்லாதவர்கள் சிலர் கருதுகிறார்கள்.

ஆனால், இஸ்லாம் மார்க்கம் அகில உலகையும் படைத்த இறைவனால் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் வழியாக வழங்கப்பட்டது என்று முஸ்லிம்கள் நம்பி வருகின்றனர்.

முஸ்லிம்கள் கண்மூடித்தனமாக இவ்வாறு நம்புவதில்லை. தக்க காரணங்களின் அடிப்படையில் தான் இஸ்லாம் இறைவனால் வழங்கப்பட்ட மார்க்கம் என்று நம்புகின்றனர்.

இந்த மார்க்கத்தை நிச்சயம் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் சுயமாகக் கற்பனை செய்து உருவாக்கியிருக்க முடியாது என்பதற்கு திருக்குர்ஆன் முதன்மையான சான்றாக உள்ளது.

எதிர்காலத்தில் நிகழவுள்ள பல செய்திகளைத் திருக்குர்ஆன் முன் கூட்டியே அறிவித்திருப்பதை நடுநிலையோடு சிந்திப்பவர்கள் 1400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு மனிதர் இதைக் கூறியிருக்கவே முடியாது என்ற முடிவுக்கு வருவார்கள்.

அது போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எதிர்காலத்தில் நிகழவுள்ள பல நிகழ்ச்சிகளை முன்னரே அறிவித்துள்ளனர். அவர்கள் அறிவித்தவாறு அவை அப்படியே நிறைவேறி வருவதைச் சிந்திப்பவர்கள் – இறைவன் புறத்திலிருந்து தான் இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறிவித்திருக்க வேண்டும் என்பதைச் சந்தேகமற அறிந்து கொள்வார்கள்.

இதைத் தெளிவுபடுத்தும் நோக்கத்தில் வருமுன் உரைத்த இஸ்லாம் எனும் இந்நூலைத் தொகுத்துள்ளேன். இந்நூலை வாசிப்பவர்கள் இஸ்லாம் இறைவனால் அருளப்பட்ட மார்க்கம் என்பதை அறிந்து கொள்வார்கள் என்று நம்புகிறேன்.

திருக்குர்ஆன் ஓர் வாழும் அற்புதம்!

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவர்கள் கி.பி. 570-ல் பிறந்தார்கள்.

இந்தக் காலகட்டத்தில் உலக மக்கள் அறிவியலில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தார்கள். உலகம் உருண்டை என்ற சாதாரண அறிவு கூட அன்றைய மக்களுக்கு இருக்கவில்லை.

இத்தகைய காலத்தில் வாழ்ந்தவர் எவ்வளவு பெரிய மேதையாக இருந்தாலும், அவரது காலத்து அறிவைக் கடந்து எதையும் கூறவே இயலாது. சுமார் நூறு வருடம் கடந்த பின் அவரது நூலை வாசித்தால் அதில் பல தவறுகள் இருப்பதை உலகம் கண்டு கொள்ளும்.

நூறு வருடங்களுக்குப் பின் என்ன நடக்கும்; என்னென்ன கண்டுபிடிக்கப்படும் என்ற விபரங்களை நூறு வருடங்களுக்கு முன் வாழ்ந்தவரால் ஊகம் செய்ய இயலாது என்பதே இதற்குக் காரணம்.

பல அறிஞர்கள் கூட்டாகச் சேர்ந்து உருவாக்கிய நூலாக இருந்தால் கூட நூறு வருடங்கள் கழித்துப் பார்க்கும் போது அதில் பல தவறுகள் இருப்பதைக் காண முடியும். அந்த நூலே காலத்திற்கு ஒவ்வாத நூலாகி விடும்.

ஆனால் எழுதவும், படிக்கவும் தெரியாத, மிகவும் பின்தங்கிய சமுதாயத்தில் வாழ்ந்த ஒருவர் எதை இறைவேதம் என்று அறிமுகம் செய்தாரோ அந்த வேதத்தில் எந்த ஒன்றையும் தவறானது என்று இன்றைக்கும் நிரூபிக்க முடியவில்லை.

திருக்குர்ஆனைப் பொருத்த வரை அது ஆன்மீகத்தைப் பற்றி மட்டும் பேசவில்லை, எல்லாத் துறைகளைப் பற்றியும் ஆங்காங்கே பேசுகிறது.

பூமி மற்றும் ஏனைய கோள்களின் அமைப்பு, வானில் இருக்கின்ற அதிசயங்கள், புவியியல் மற்றும் வானியல் குறித்துப் பேசும் போது, இந்த நூற்றாண்டின் மாமேதையும், வானியல் நிபுணரும் பேசினால் எவ்வாறு இருக்குமோ அதை விடச் சிறப்பாக திருக்குர்ஆன் பேசுகிறது.

அது போல் மனிதன் மற்றும் உயிரினங்கள், அவற்றின் உள் அமைப்புகள், உயிரினங்கள் உற்பத்தியாகும் விதம் எனப் பல விஷயங்களைக் குர்ஆன் பேசுகிறது. 14 நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதன் பேசுவது போல் பேசவில்லை. இந்த நூற்றாண்டின் தேர்ந்த மருத்துவ மேதை பேசுவதை விட அழகாகப் பேசுகிறது.

தாவரங்களைப் பற்றிப் பேசினாலும், மலைகளைப் பற்றிப் பேசினாலும், நதிகளைப் பற்றிப் பேசினாலும் 14 நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் பேசியது போல் திருக்குர்ஆனின் பேச்சு இல்லை.

அது மட்டுமின்றி சென்ற நூற்றாண்டுக்கு முன்னால் வரை கண்டுபிடிக்கப்படாத, தற்போது கண்டுபிடிக்கப்பட்ட பல விஷயங்களை குர்ஆன் அன்றே சொல்லியிருக்கிறது.

பல்வேறு துறைகளிலும் தேர்ந்த அறிவுடைய ஒருவர் பேசுவதை விடச் சிறப்பாக திருக்குர்ஆன் பேசுவதையும், நபிகள் நாயகத்தின் காலச் சூழ்நிலையையும் ஒரு சேர சிந்திப்பவர்கள் இது முஹம்மது நபியின் சொந்த வார்த்தையாக இருக்க முடியாது; முக்காலமும் உணர்ந்த இறைவனின் வார்த்தையாகத் தான் இருக்க முடியும் என்ற முடிவுக்குத் தான் வந்தாக வேண்டும்.

அறிவியல், நவீன கண்டுபிடிப்புகள் மட்டுமின்றி குர்ஆன் கூறுகின்ற அரசியல் சட்டங்கள், குற்றவியல் மற்றும் சிவில் சட்டங்களை ஒருவர் ஆய்வு செய்தால் இன்று உலகமெங்கும் உள்ள எல்லாச் சட்டங்களை விட அது சிறந்து விளங்குவதையும், மனித குலத்துக்கு அதிகப் பயன் தரக்கூடிய வகையில் அமைந்திருப்பதையும் அறிந்து கொள்வார். முஸ்லிமல்லாதவர்கள் கூட குர்ஆன் கூறும் சட்டங்களை அமுல்படுத்தக் கோரும் அளவுக்கு குர்ஆன் கூறும் சட்டங்கள் அமைந்துள்ளன.

ஏராளமான சட்டங்களையும், மரபுகளையும், முன் அனுபவங்களையும் ஆய்வு செய்து பல்வேறு சட்ட மேதைகள் உருவாக்கிய சட்டங்களே ஆண்டு தோறும் திருத்தப்பட்டு வரும் நிலையில் இறைச் சட்டங்கள் என முஹம்மது நபி அவர்கள் அறிமுகப்படுத்திய சட்டங்கள் பலராலும் வரவேற்கப்படுவது முஹம்மது நபியின் சொந்தக் கூற்றாக குர்ஆன் இருக்க முடியாது என்பதற்கு மற்றொரு சான்றாக உள்ளது.

அது போல் உலகம் சந்திக்கின்ற தீர்க்க முடியாத பல பிரச்சனைகளுக்கு ஏற்கத்தக்க அற்புதமான தீர்வுகளைக் குர்ஆன் கூறுவதும் இது முஹம்மது நபியின் சொந்தக் கூற்று இல்லை என்பதற்கான ஆதாரமாக உள்ளது.

குலம், கோத்திரம், சாதி, இவற்றால் ஏற்படும் தீண்டாமை உலகில் பல நாடுகளில் பல நூறு ஆண்டுகளாகத் தீர்க்கப்படாத பிரச்சனையாக உள்ளது. இந்தச் சிக்கலான பிரச்சினைக்கும் திருக்குர்ஆன் மிக எளிதான தீர்வை வழங்கி தீண்டாமையை அடியோடு ஒழித்துக் கட்டியதை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம்.

எதிர்காலத்தில் நடக்கவுள்ள பல செய்திகளைக் குர்ஆன் கூறுகிறது. அது கூறியவாறு அவற்றுள் பல நிகழ்வுகள் நடந்து முடிந்துள்ளன. வார்த்தைக்கு வார்த்தை நிறைவேறிய இத்தகைய முன்னறிவிப்புகள் ஏராளம்.

முஹம்மது நபியின் சொந்தக் கூற்றாக குர்ஆன் இருக்கவே முடியாது என்பதற்கு இவை யாவும் ஆதாரங்களாக உள்ளன.

அவற்றில் சிலவற்றை நாம் இப்போது காண்போம்.

அறிவியல் கண்டு பிடிப்புகள்

1 பெருவெடிப்புக் கொள்கை

வானங்களும், பூமியும் இணைந்திருந்தன என்பதையும், அவ்விரண்டையும் நாமே பிரித்தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொரு பொருளையும் தண்ணீரிலிருந்து அமைத்தோம் என்பதையும் (நம்மை) மறுப்போர் சிந்திக்க வேண்டாமா? அவர்கள் நம்பிக்கை கொள்ள வேண்டாமா?

திருக்குர்ஆன் 21:30

இந்த உலகம் எவ்வாறு படைக்கப்பட்டது என்பது பற்றி பலவிதமான கட்டுக் கதைகளைத் தான் முந்தைய நூல்கள் கூறுகின்றன.

திருக்குர்ஆன் மட்டும் தான் இன்றைய விஞ்ஞானிகள் சொல்கின்ற அதே கருத்தை 1400 ஆண்டுகளுக்கு முன்பே கூறியது. வானம், பூமி உள்ளிட்ட அனைத்தும் ஒரே பொருளாக இருந்தன. அவற்றை நாம் தான் பிரித்துப் பிளந்து எடுத்தோம் என்று அல்லாஹ் கூறுகிறான்.

இதைத் தான் இன்றைய அறிவியல் உலகமும் சொல்கிறது. இந்தப் பேருண்மை 1400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஒரு மனிதருக்கு எப்படித் தெரியும்? படைத்த இறைவனின் வார்த்தையாக திருக்குர்ஆன் இருந்தால் மாத்திரமே இதைக் கூற முடியும்.

இவ்வாறு பிளக்கப்பட்ட பின் முதலில் தூசுப் படலம் உருவானது. பின்னர் அந்தத் தூசுப் படலங்கள் ஆங்காங்கே திரண்டு கோள்கள் உருவாயின என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இதையும் திருக்குர்ஆன் தெளிவாகக் கூறுகின்றது.

பின்னர் வானம் புகையாக இருந்த போது அதை நாடினான். விரும்பியோ, விரும்பாமலோ நீங்கள் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று அதற்கும், பூமிக்கும் கூறினான். விரும்பியே கட்டுப்பட்டோம் என்று அவை கூறின.

திருக்குர்ஆன் 41:11

இவ்வசனத்தில் வானம் புகையாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

இவ்வாறு பிரித்தெடுக்கப்பட்ட பின் வானம் புகை மூட்டமாக இருந்து அதன் பிறகு தான் ஒவ்வொரு கோள்களும் உருவாயின என்று இப்போது விஞ்ஞானிகள் கூறுவதை 14 நூற்றாண்டுகளுக்கு முன் திருக்குர்ஆன் கூறி இது இறை வேதம் தான் என்பதைச் சந்தேகமற நிரூபிக்கிறது.

2 திருப்பித் தரும் வானம்

திருப்பித் தரும் வானத்தின் மீது சத்தியமாக! பிளக்கும் பூமியின் மீது சத்தியமாக! இது தெளிவான கூற்றாகும். இது கேலிக்குரியதல்ல.

திருக்குர்ஆன் :86:11, 12, 13, 14

திருக்குர்ஆன் முஹம்மது நபியின் கற்பனை அல்ல. மாறாக என்னுடைய கூற்றாகும் என்பதைச் சத்தியம் செய்து இறைவன் கூறுகிறான். வானத்தின் மேல் சத்தியம் செய்து இதைக் கூறும் போது திருப்பித் தரும் வானம் என்ற அற்புதமான அடைமொழியை அல்லாஹ் பயன்படுத்துகிறான்.

வானம் எதைத் திருப்பித் தருகிறது என்றால் ஏராளமான விஷயங்களை நமக்கு திருப்பித் தந்து கொண்டே இருக்கிறது.

கடலிலிருந்தும், நீர் நிலைகளிலிருந்தும் உறிஞ்சுகின்ற தண்ணீரை மேலே எடுத்துச் சென்று மழையாக நமக்கு வானம் திருப்பித் தருகிறது.

இங்கிருந்து அனுப்புகின்ற ஒலி அலைகளை வானம் நமக்கே திருப்பி அனுப்புகிறது. திருப்பித் தருகின்ற தன்மையை வானம் பெற்றிருக்கின்ற காரணத்தினால் தான் இன்றைக்கு நாம் ரேடியோ போன்ற வசதிகளை அனுபவிக்க முடிகிறது.

மேல் நோக்கி அனுப்பப்படும் செய்திகள் ஒரு இடத்தில் தடுக்கப்பட்டு திரும்பவும் கீழ் நோக்கி நமக்கே அனுப்பப்படுகின்றன.

இன்றைக்கு செயற்கைக் கோள் மூலம் ஒளிபரப்பப்படும் காட்சிகள் நமக்கு இங்கே வந்து சேருகின்றன. இங்கேயிருந்து நாம் ஒளிபரப்ப நினைப்பதை வானத்திற்கு அனுப்பினால் வானம் உடனே நமக்கு அனுப்புகிறது.

மேலே இருந்து திருப்பித் தருகின்ற அம்சத்தோடு வானத்தை இறைவன் படைத்திருக்கிறான்.

இன்னும் நாம் சிந்திக்கும் போது ஏராளமான விஷயங்களை வானம் நமக்குத் திருப்பித் தருவதை அறியலாம்.

திருப்பித் தரும் வானம் என்று யாராவது வானத்திற்கு அடைமொழி சொல்வார்களா? அதுவும் 14 நூற்றாண்டுகளுக்கு முன்னால் சொல்வார்களா?

இந்த மாபெரும் அறிவியல் உண்மையை எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மது சொல்கிறார் என்றால் நிச்சயமாக இது அவருடைய வார்த்தையாக இருக்க முடியாது; படைத்த இறைவனின் வார்த்தையாகத் தான் இருக்க முடியும்.

3 விண்வெளிப் பயணம் சாத்தியமே

மனிதன் இன்று விண்வெளியில் பயணம் செய்வதற்கேற்ற சாதனங்களை உருவாக்கி அதன் வழியாக சந்திரனுக்குச் சென்று வந்து விட்டான். செவ்வாய்க் கிரகத்துக்கும், இன்ன பிற கோள்களுக்கும் செல்லும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளான். நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதன் விண்வெளிப் பயணம் பற்றி அறிந்திருக்கவில்லை. ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்களின் நிலையைச் சொல்லத் தேவையில்லை.

பூமி உருண்டை வடிவிலானது என்பதையோ, பூமி சுழல்வதையோ, அது சூரியனைச் சுற்றிக் கொண்டிருப்பதையோ, மற்ற கோள்களும் சுற்றிச் சுழல்கின்றன என்பதையோ அவர்கள் அறிந்திருக்கவில்லை.

இத்தகைய காலகட்டத்தில் வாழ்ந்த எழுதப் படிக்கத் தெரியாத ஒருவர் வின் வெளிக்குச் செல்வது பற்றியோ, செல்வதற்கான சரியான வழி பற்றியோ, செல்பவருக்கு ஏற்படும் அனுபவம் பற்றியோ பேச முடியுமா? 1400 ஆண்டுகளுக்கு முன்பே திருக்குர்ஆன் இவை அனைத்தையும் தெளிவான வார்த்தைகளால் கூறியிருக்கிறது

மனித ஜின் கூட்டமே! வானங்கள் மற்றும் பூமியின் விளிம்புகளைக் கடந்து செல்ல நீங்கள் சக்தி பெற்றால் கடந்து செல்லுங்கள்! ஆற்றல் மூலம் தவிர நீங்கள் கடந்து செல்ல மாட்டீர்கள்.

திருக்குர்ஆன் : 55:33

விண்ணுலகம் வரை மனிதன் பயணம் மேற்கொள்ளலாம்; மேற்கொள்ள முடியும் என்று இவ்வசனம் தெளிவாகச் சொல்கிறது. அதே நேரத்தில் அது எவ்வாறு சாத்தியமாகும் என்பதற்கான வழிகளையும் சொல்கிறது.

ஒரு ஆற்றலை உருவாக்கிக் கொள்வதன் மூலமாகவே தவிர நீங்கள் இந்த எல்லைகளையெல்லாம் கடக்க இயலாது என்று கூறுகிறது.

விண்ணில் பறக்க முடியுமா? என்பதைக் கற்பனை செய்து கூட பார்த்திராத அந்தச் சமுதாயத்தில் விண்ணில் பறக்க முடியும் என்பதையும், அதற்கென ஒரு ஆற்றல் தேவை என்பதையும் கூறி, இறைவேதம் தான் என்று திருக்குர்ஆன் தன்னைத் தானே நிரூபித்துக் கொள்கிறது.

விண்வெளிப் பயணம் மேற்கொள்பவர்களின் இதயங்கள் இறுக்கமான நிலையை அடைவதை மனிதன் இன்று அனுபவப்பூர்வமாக விளங்கியிருக்கிறான். விமானங்களில் பயணம் செய்பவர்கள் கூட இந்த அனுபவத்தை உணர முடியும்.

விண்வெளிப் பயணம் செய்பவனின் இதயம் நெருக்கடியைச் சந்திக்கும் என்பதையும் திருக்குர்ஆன் கூறியிருக்கிறது.

ஒருவனுக்கு நேர்வழி காட்ட அல்லாஹ் நாடினால் அவனது உள்ளத்தை இஸ்லாத்திற்காக விரிவடையச் செய்கிறான். அவனை வழிதவறச் செய்ய நாடினால் அவனது உள்ளத்தை வானத்தில் ஏறிச் செல்பவனைப் போல் இறுக்கமாக்கி விடுகிறான். இவ்வாறே நம்பிக்கை கொள்ளாதோருக்கு வேதனையை அல்லாஹ் வழங்குகிறான்.

திருக்குர்ஆன் : 6:125

இந்த அறிவு 1400 வருடங்களுக்கு முன்னர் எவருக்கும் இருந்ததில்லை. விர்ரென்று மனிதன் மேலேறிச் செல்ல முடியும் என்று அவர்கள் கற்பனை கூட செய்திருக்க மாட்டார்கள்.

இத்தகைய காலகட்டத்தில் விண்வெளிப் பயணம் மேற்கொள்பவனின் இதயம் இறுக்கமான நிலையை அடையும் என்று முஹம்மது நபியால் எப்படிக் கூற முடியும்? அன்றைய நிலையில் இது படைத்த இறைவனுக்கு மட்டுமே தெரிந்த உண்மையாகும்.

மேலும் மற்றொரு கோனத்திலும் வின்வெளிப் பயணம் சாத்தியம் என்பதை வேறு வார்த்தைகளில் பின்வருமாறு இறைவன் குறிப்பிடுகிறான்.

பாதைகளையுடைய வானத்தின் மீது சத்தியமாக!

திருக்குர்ஆன் 51:7

பூமியில் மாத்திரமே பாதைகள் உண்டு என்று மனிதன் நம்பி வந்த காலத்தில் வானத்திலும் ஏராளமான பாதைகள் உள்ளன எனக் கூறி விண்வெளிப் பயணத்தின் சாத்தியத்தை 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே அல்லாஹ் கூறியிருப்பது திருக்குர்ஆன் இறை வேதம் என்பதற்கு மற்றொரு சான்றாகும்.

4 முகடாக வானம்

வானத்தை பாதுகாக்கப்பட்ட முகடு என்று திருக்குர்ஆன் பல வசனங்களில் குறிப்பிடுகிறது.

அவனே பூமியை உங்களுக்கு விரிப்பாகவும், வானத்தை முகடாகவும் அமைத்தான். வானிலிருந்து தண்ணீரையும் இறக்கினான். அதன் மூலம் கனிகளை உங்களுக்கு உணவாக (பூமியிலிருந்து) வெளிப்படுத்தினான். எனவே அறிந்து கொண்டே அல்லாஹ்வுக்கு நிகராக எவரையும் கற்பனை செய்யாதீர்கள்!

திருக்குர்ஆன் 2:22

வானத்தைப் பாதுகாக்கப்பட்ட முகடாக்கினோம். அவர்களோ அதில் உள்ள சான்றுகளைப் புறக்கணிக்கின்றனர்.

திருக்குர்ஆன் 21:32

அல்லாஹ்வே இப்பூமியை உங்களுக்கு நிலையானதாகவும், வானத்தை முகடாகவும் அமைத்தான்.

திருக்குர்ஆன் 40:64

உயர்த்தப்பட்ட முகட்டின் மேல் சத்தியமாக!

திருக்குர்ஆன் 52:5

வானத்தை முகடு என ஏன் திருக்குர்ஆன் கூறுகிறது?

விண்ணிலிருந்து வருகின்ற புற ஊதாக் கதிர்கள் வானத்தில் வடிகட்டப்படுகின்றன. அங்கிருந்து வருகின்ற எரி கற்களின் வேகம் மட்டுப்படுத்தப்பட்டு எரிக்கப்பட்டு கேடு விளைவிக்காத அளவில் கீழே விழுகின்றன.

மேலே இருக்கின்ற முகடு, சூரியனின் அளவு கடந்த வெப்பத்தையும் குறைக்கிறது. இது மாதிரியான பாதுகாப்புகளைச் செய்வதால் வானத்தை முகடு என்று திருக்குர்ஆன் கூறுகிறது. இதுவும் மாபெரும் அறிவியல் உண்மையாகும்.

5 பூமியில் தான் வாழ முடியும்

நாம் வாழ்கின்ற பூமியைப் போலவே இன்னும் பல கோள்கள் இருப்பதையும், பூமியைப் போலவே அவை சுற்றிச் சுழல்வதையும் திருக்குர்ஆன் கூறுகிறது. விண்வெளிப் பயணம் கூட சாத்தியம் எனத் திருக்குர்ஆன் கூறுகிறது.

ஆனாலும் பூமியில் தான் மனிதன் வாழ முடியும்; வேறு எந்தக் கிரகத்திலும் மனிதன் வாழ முடியாது என்பதை அழுத்தமாக எடுத்துரைக்கிறது.

உங்களுக்குப் பூமியில் குறிப்பிட்ட காலம் வரை வாழ்விடமும், வசதியும் உள்ளன என்றும் கூறினோம்.

திருக்குர்ஆன் : 2:36

உங்களுக்குப் பூமியில் குறிப்பிட்ட காலம் வரை தங்குமிடமும், வசதியும் உள்ளன என்று (இறைவன்) கூறினான்.

திருக்குர்ஆன் 7:24

அதிலேயே வாழ்வீர்கள்! அதிலேயே மரணிப்பீர்கள்! அதிருந்தே வெளிப்படுத்தப்படுவீர்கள் என்றும் கூறினான்.

திருக்குர்ஆன் 7:25

பூமியில் உங்களை வாழச் செய்திருக்கிறோம். உங்களுக்கு வசதி வாய்ப்புகளையும் இதில் ஏற்படுத்தினோம்.

திருக்குர்ஆன் 7:10

அவனது கட்டளைப்படி வானமும், பூமியும் நிலை பெற்றிருப்பதும் அவனது சான்றுகளில் உள்ளவை. பின்னர் அவன் உங்களை ஒரே தடவை அழைப்பான். அப்போது பூமியிலிருந்து வெளிப்படுவீர்கள்.

திருக்குர்ஆன் 30:25

பூமியிலிருந்து மீண்டும் எழுப்பப்படுவீர்கள் என்ற சொற்றொடர் முக்கியமாகக் கவனத்தில் கொள்ள வேண்டிய சொற்றொடராகும். எல்லா மனிதர்களும் அழிக்கப்பட்ட பின் அனைவரும் பூமியிலிருந்து எழுப்பப்படுவார்கள் என்பது ஒரு மனிதன் கூட பூமிக்கு வெளியே வாழ முடியாது என்பதைத் தெளிவுபடுத்துகிறது.

இதில் தான் வாழ்வீர்கள் என்ற சொற்றொடர் பூமியைத் தவிர வேறு எங்கும் மனிதர்கள் இயற்கையாக வாழ முடியாது என்பதை எடுத்துரைக்கிறது. சில கோள்களில் உயிரினம் வாழ்ந்த தடயம் தென்படுகிறது என்றெல்லாம் கூறினாலும் அது நிரூபிக்கப்படவில்லை. மனிதன் பூமியில் மட்டும் தான் வாழ முடியும் என்பதை விஞ்ஞானிகளும் ஒப்புக் கொள்கிறார்கள்.

மனிதன் தாங்கிக் கொள்கின்ற அளவுக்கு வெப்பமும், குளிரும் பூமியில் மட்டுமே உள்ளது.

சில கோள்களில் காணப்படும் வெப்பம் மனிதனைக் கரிக் கட்டையாக்கி விடும்.

சில கோள்களில் காணப்படும் குளிர் மனித இரத்தத்தை உறைந்து போகச் செய்து விடும்.

உயிர் வாழ அவசியமான காற்றும் பூமியில் தான் இருக்கிறது. ஆக்ஸிஜன் துணையுடன் சில நாட்கள் விண்வெளியில், அல்லது சந்திரனில் தங்குவதை வாழ்வது என்று கூறக் கூடாது. அது இயற்கைக்கு மாற்றமானது.

அதை விட முக்கியமாகக் கவனிக்க வேண்டியது பூமி மட்டுமே சூரியனிலிருந்து 23 டிகிரி சாய்வாகச் சுழல்கிறது. இப்படிச் சாய்வாகச் சுழல்வதால் தான் கோடை, குளிர், வசந்தம், மற்றும் இலையுதிர் காலங்கள் ஏற்படுகின்றன.

வருடமெல்லாம் ஒரே சீரான வெப்பமோ, குளிரோ இருந்தால் அதுவும் வாழ்வதற்கு ஏற்றதாக இராது. எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மது நபிக்கு இதில் தான் வாழ்வீர்கள் என்று எவ்வாறு அடித்துக் கூற இயலும்? எல்லாக் கோள்களையும் படைத்த இறைவனால் மட்டுமே அன்றைய நிலையில் இதனைக் கூற முடியும். எனவே இதுவும் இறை வேதம் என்பதை நிரூபிக்கும் சான்றாக உள்ளது.

6 புவி ஈர்ப்பு சக்தி

வானத்துக்கும், பூமிக்கும் இடையே எந்தத் தூண்களும் இல்லை என்பதை நாம் காண்கிறோம். வானத்தைப் பற்றிப் பேசும் போது தூண்களில்லாத வானம் என்று தான் அனைவரும் குறிப்பிட்டு வருகிறோம். ஆனால் திருக்குர்ஆன் வழக்கத்துக்கு மாற்றமான வர்னணையுடன் வானத்தைப் பற்றி பேசுகிறது.

நீங்கள் பார்க்கின்ற தூண்களின்றி வானங்களை அல்லாஹ்வே உயர்த்தினான்.

திருக்குர்ஆன் 13:2

நீங்கள் பார்க்கக் கூடிய தூண் இன்றி வானங்களைப் படைத்தான்.

திருக்குர்ஆன் 31:10

வானங்களுக்கும், பூமிக்கும் தூண்கள் உள்ளன; ஆனால் அவைகளைப் பார்க்க முடியாது என்று இவ்வசனங்கள் கூறுகின்றன.

பார்க்க முடியாத தூண்கள் இருக்கின்றனவா? என்றால் நிச்சயமாக இருக்கின்றன. உலகத்தில் இருக்கின்ற பூமி உள்ளிட்ட எல்லாக் கோள்களும் அவற்றிற்குரிய இடங்களில் நீந்துவதற்கு, அவற்றைக் குறிப்பிட்ட வேகத்துடன் இழுத்துப் பிடித்திருக்கின்ற ஒரு ஈர்ப்பு விசை எல்லாப் பகுதியிலும் பரவியிருப்பது தான் காரணம். இந்த ஈர்ப்பு விசையின் காரணமாகத் தான் ஒவ்வொரு கோளும் அந்தரத்தில் எவ்விதப் பிடிமானமும் இன்றி தொங்குகின்ற காட்சியைப் பார்க்கின்றோம்.

எனவே சில நூற்றாண்டுகளுக்கு முன் மனிதன் கண்டறிந்த ஈர்ப்பு விசை எனும் கண்டுபிடிப்பை பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பே திருக்குர்ஆன் கூறுகிறது.

வானத்திற்கும், பூமிக்கும் இடையே எந்தத் தூண்களும் இல்லை என்று தெளிவாகத் தெரியும் போது, திருக்குர்ஆன் பார்க்கின்ற தூண்களின்றி என்ற வார்த்தையைத் தேவையில்லாமல் பயன்படுத்தி இருக்க முடியாது.

வானங்களையும், பூமியையும் படைத்தவன் பேசுகின்ற வார்த்தையாக இருப்பதால் தான் பார்க்கின்ற தூண்களின்றி என்ற சொல்லைப் பயன்படுத்தி, பார்க்காத தூண்கள் இருக்கின்றன என்ற உண்மையை மறைமுகமாகக் குறிப்பிடுகிறான்.

திருக்குர்ஆன், முஹம்மது நபியின் கற்பனையல்ல; ஏக இறைவனின் கூற்றுத் தான் என்பதற்கு மற்றுமொரு சான்றாக இது அமைந்துள்ளது.

பூமிக்கும், வானத்துக்கும் இடையே ஈர்ப்பு விசை இயங்குகிறது என்பதை வேறு வார்த்தைகள் மூலம் மற்றொரு வசனத்திலும் இறைவன் தெளிவுபடுத்துகிறான்.

வானங்களும், பூமியும் இடம் பெயராதபடி அவனே தடுத்து வைத்துள்ளான். அவ்விரண்டும் இடம் பெயருமானால் அவனன்றி எவரும் அவற்றைத் தடுத்து நிறுத்த முடியாது. அவன் சகிப்புத் தன்மையுடையவனாகவும், மன்னிப்பவனாகவும் இருக்கிறான்.

திருக்குர்ஆன் 35:41

வானங்களும், பூமியும் விலகி விடாமல் இருக்குமாறு கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ளது.

வானங்களும், பூமியும் ஒன்றோடு ஒன்று ஈர்ப்பு விசையால் பிணைக்கப்பட்டுள்ளன. ஏதேனும் ஒன்றின் ஈர்ப்பு விசை அதிகரித்தாலோ, குறைந்தாலோ அவை சிதறிச் சின்னா பின்னமாகி விடும் என்ற கருத்து இதனுள் அடங்கியிருப்பதை யாரும் அறியலாம்.

புவி ஈர்ப்பு விசை பற்றி மற்றொரு கோணத்திலும் திருக்குர்ஆன் குறிப்பிடுகிறது.

ஆகாய வெளியில் வசப்படுத்தப்பட்ட நிலையில் பறவையை அவர்கள் பார்க்கவில்லையா? அல்லாஹ்வைத் தவிர யாரும் அவற்றை (அந்தரத்தில்) நிறுத்தவில்லை. நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.

திருக்குர்ஆன் 16:79

வானங்களிலும், பூமியிலும் உள்ளவையும், அணிவகுத்த நிலையில் பறவைகளும் அல்லாஹ்வைத் துதிப்பதை நீர் அறியவில்லையா? ஒவ்வொன்றும் தனது வணக்கத்தையும், துதித்தலையும் அறிந்துள்ளன. அவர்கள் செய்வதை அல்லாஹ் அறிந்தவன்.

திருக்குர்ஆன் 24:41

அவர்களுக்கு மேலே பறவைகள் (சிறகுகளை) விரித்தும், மடக்கியும் இருப்பதை அவர்கள் காணவில்லையா? அளவற்ற அருளாளனைத் தவிர வேறு எதுவும் அவற்றைக் கீழே விழாது தடுத்துக் கொண்டிருக்கவில்லை. அவன் ஒவ்வொரு பொருளையும் பார்ப்பவன்.

திருக்குர்ஆன் 67:19

பறவைகளைப் பற்றிக் குறிப்பிடும் போது அவை ஆகாயத்தில் வசப்படுத்தப்பட்டுள்ளன. உமது இறைவன் தான் அதை வசப்படுத்தி இருக்கின்றான் என்று இறைவன் கூறுகிறான்.

இதில் மிகப் பெரிய அறிவியல் உண்மை உள்ளடங்கி இருக்கிறது. பூமி தன்னைத் தானே சுற்றுவதை நாம் அறிவோம். தன்னைத் தானே சுற்றுவதுடன் சூரியனையும் இந்தப் பூமி ஒரு வருடத்தில் வட்டமடித்து முடிக்கிறது. சூரியனைச் சுற்றுவதற்காக அது செல்கின்ற வேகம் வினாடிக்கு 250 கிலோ மீட்டர் தூரம்.

வினாடிக்கு 250 கிலோ மீட்டர் வேகத்தில் பூமி வேகமாக நகரும் போது, பூமி நகர்கின்ற திசையில் இருக்கின்ற அந்தப் பறவைகள் மீது மோத வேண்டும்.

பூமியின் ஈர்ப்பு சக்தி ஒரு குறிப்பிட்ட தொலைவு வரை இருப்பதால் பூமி, அந்தப் பறவையைச் சேர்த்து இழுத்துக் கொண்டே போகிறது. முன் பக்கம் இருக்கும் பறவையைத் தள்ளிக் கொண்டும், பின்பக்கம் இருக்கின்ற பறவையை இழுத்துக் கொண்டும் பூமி நகர்கிறது. முன்பக்கம் பறக்கின்ற பறவையைத் தள்ளாமல் இந்தப் பூமி வேகமாகச் சென்றால் எந்தப் பறவையும் பறக்க முடியாது, பூமியில் மோதி செத்து விடும்.

இந்தப் பேருண்மையைத் திருக்குர்ஆன் அற்புதமான சொற்களால் குறிப்பிடுகிறது. இதுவும் திருக்குர்ஆன் இறைவேதம் என்பதற்கு மறுக்க முடியாத சான்றாகும்.

7 முளைகளாக மலைகள்

பூமியில் அமைக்கப்பட்டுள்ள மலைகளைப் பற்றி அல்லாஹ் கூறும் போது அதை முளைகளாக நாட்டியிருக்கிறோம் என்று கூறுகிறான்.

மலைகளை முளைகளாக நாட்டினான்.

திருக்குர்ஆன் 79:31

பூமியைத் தொட்டிலாகவும், மலைகளை முளைகளாகவும் நாம் ஆக்கவில்லையா?

திருக்குர்ஆன் 78:6,7

அதில் உயர்ந்த முளைகளை நிறுவினோம். இனிமையான நீரையும் உங்களுக்குப் புகட்டினோம்.

திருக்குர்ஆன் 77:27

பூமியை விரித்தோம். அதில் முளைகளை நட்டினோம். அதில் எடை வரையறுக்கப்பட்ட ஒவ்வொரு பொருளையும் முளைக்கச் செய்தோம்.

திருக்குர்ஆன் 15:19

பூமி, உங்களை அசைத்து விடாதிருக்க அதில் முளைகளையும், நீங்கள் வழியறிவதற்காக பல பாதைகளையும், நதிகளையும், பல அடையாளங்களையும் அவன் அமைத்தான். நட்சத்திரத்தின் மூலம் அவர்கள் வழியை அறிந்து கொள்கின்றனர்.

திருக்குர்ஆன் 16:15,16

பூமி அவர்களைச் சாய்த்து விடாதிருப்பதற்காக முளைகளை ஏற்படுத்தினோம். அவர்கள் வழி காண்பதற்காக பல நீண்ட பாதைகளையும் அதில் ஏற்படுத்தினோம்.

திருக்குர்ஆன் 21:31

(நீங்கள் இணை கற்பித்தவை சிறந்தவையா? அல்லது) பூமியை வசிப்பிடமாக்கி, அவற்றுக்கிடையே ஆறுகளை உருவாக்கி அவற்றுக்கு முளைகளையும் அமைத்து இரண்டு கடல்களுக்கிடையே தடுப்பையும் ஏற்படுத்தியவனா? அல்லாஹ்வுடன் வேறு கடவுளா? இல்லை! அவர்களில் அதிகமானோர் அறிவதில்லை.

திருக்குர்ஆன் 27:61

நீங்கள் பார்க்கக் கூடிய தூண் இன்றி வானங்களைப் படைத்தான். உங்களைச் சாய்த்து விடாதிருக்க பூமியில் முளைகளைப் போட்டான். அதில் ஒவ்வொரு உயிரினத்தையும் பரவச் செய்தான்.

திருக்குர்ஆன் 31:10

அதன் மேலே முளைகளை ஏற்படுத்தினான். அதில் பாக்கியம் செய்தான். நான்கு நாட்களில் அதன் உணவுகளை அதில் நிர்ணயம் செய்தான். கேள்வி கேட்போருக்குச் சரியான விடை இதுவே.

திருக்குர்ஆன் 41:10

ஒரு பொருள் இன்னொரு பொருளை விட்டும் பிரிந்து விடாதிருப்பதற்காக அறையப்படுவதே முளைகளாகும்.

இந்தப் பூமி பல்வேறு அடுக்குகளால் அமைக்கப்பட்டுள்ளது. மேல் அடுக்குகள் எடை குறைந்தவையாகவும், உள் அடுக்குகள் கனத்த எடை உடையவையாகவும் உள்ளன.

வேகமாகப் பூமி சுழலும் போது உள்ளடுக்கில் உள்ள கனமான பொருட்களும், மேலடுக்கில் உள்ள எடை குறைவாக உள்ள பொருட்களும் ஒரே வேகத்தில் சுற்ற இயலாது.

இந்த நிலை ஏற்பட்டால் மேல் அடுக்கில் உள்ள மனிதர்கள் தூக்கி எறியப்படுவார்கள்; கட்டடங்களெல்லாம் நொறுங்கி விடும்.

இதைத் தடுக்க வேண்டுமானால் கனமான அடுக்குகளையும், கனம் குறைந்த அடுக்குகளையும் இணைக்கும் விதமாக முளைகள் நாட்டப்பட வேண்டும். அதைத் தான் மலைகள் செய்கின்றன.

ஆங்காங்கே நிறுவப்பட்டுள்ள மலைகள் காரணமாக மேல் அடுக்குகளும், கீழ் அடுக்குகளும் ஒன்றையொன்று பிரிந்து விடாத வகையில் சுழல முடிகிறது.

இந்த மாபெரும் அறிவியல் உண்மை 14 நூற்றாண்டுகளுக்கு முன்னரே கூறப்பட்டிருப்பது, திருக்குர்ஆன் இறை வேதம் என்பதற்கு மற்றொரு சான்றாகும்.

பூமி முதல் உருவாகி பிறகு தான் மலைகள் உருவாகின என்றும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதற்கு மலைகள் முளைகளாக நாட்டப்பட்டுள்ளன என்ற வசனங்கள் எதிரானவை என்று கருதக் கூடாது.

முதல் இரண்டு நாட்களில் பூமியைப் படைத்ததாகவும், பிறகு இரண்டு நாட்களில் பூமியில் மலைகளை நிறுவி அதிலுள்ள உணவு உற்பத்திக்கான ஏற்பாடுகள் செய்ததாகவும் திருக்குர்ஆன் 41:10 வசனம் கூறுவதைக் கவனிக்கவும்.

8 ஓரங்களில் குறையும் பூமி

நிலப்பரப்பு சிறிது சிறிதாக கடலால் விழுங்கப்பட்டு குறைந்து வருவதை சமீப காலத்தில் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

14 நூற்றாண்டுகளுக்கு முன்பு நிலப்பரப்பு, கடலால் அரிக்கப்பட்டு அதன் ஓரங்கள் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து வருவதை யாரும் அறிந்திருக்க முடியாது.

ஓரங்களில் சிறிது சிறிதாக நிலப்பரப்பு குறைக்கப்பட்டு வருகிறது என்ற இந்த அறிவியல் கண்டுபிடிப்பு 14 நூற்றாண்டுகளுக்கு முன் திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளது.

பூமியை, அதன் ஓரங்களில் நாம் குறைத்து வருவதை அவர்கள் காணவில்லையா? அல்லாஹ்வே தீர்ப்பளிப்பான். அவனது தீர்ப்பை ஒத்திவைப்பவர் எவருமில்லை. அவன் விரைந்து விசாரிப்பவன்.

திருக்குர்ஆன் 13:41

.அவர்களுக்கு ஆயுளை அதிகமாக்கி அவர்களுக்கும், அவர்களின் முன்னோர்களுக்கும் வாழ்க்கை வசதியைக் கொடுத்தோம். பூமியை அதன் ஓரப் பகுதிகளில் குறைத்து வருகிறோம் என்பதை அவர்கள் சிந்திக்க வேண்டாமா? அவர்களா (நம்மை) வெல்பவர்கள்?

திருக்குர்ஆன் 21:44

திருக்குர்ஆன், இறைவனின் வார்த்தையே என்பதற்கு இவ்வசனங்கள் தெளிவான சான்றாக அமைந்திருக்கின்றன.

9 பூமியைத் தொட்டிலாக

திருக்குர்ஆன் பல இடங்களில் பூமியைத் தொட்டிலாக ஆக்கியிருப்பதாகக் குறிப்பிடுகிறது.

அவனே பூமியை உங்களுக்குத் தொட்டிலாக அமைத்தான்.

திருக்குர்ஆன் 20:53

அவனே பூமியை உங்களுக்குத் தொட்டிலாக அமைத்தான். நீங்கள் வழிகளை அடைவதற்காக அதில் பல பாதைகளை அமைத்தான்.

திருக்குர்ஆன் 43:10

பூமியைத் தொட்டிலாகவும், மலைகளை முளைகளாகவும் நாம் ஆக்கவில்லையா?

திருக்குர்ஆன் 78:6,7

பூமி சூரியனால் ஈர்க்கப்பட்டு சூரியனை விட்டு விலகாமல் ரங்கராட்டினம் சுழல்வது போல் சூரியனைச் சுற்றி வருகிறது. சூரியனுடன் ஒரு கயிற்றால் கட்டி இழுக்கப்படுவது போன்ற நிலையில் இந்தப் பூமி சூரியனைச் சுற்றி வருகிறது.

வினாடிக்கு 250 கிலோ மீட்டர் வேகத்தில் சூரியனை ஒரு ரங்கராட்டினம் போல் பூமி சுற்றி வந்தாலும் அதை நம்மால் உணர முடிவதில்லை. அது சுற்றுவது நமக்குத் தெரிவதும் இல்லை. குழந்தைகளைத் தொட்டில் இட்டு ஆட்டும்போது அதன் சுழற்சி குழந்தைகளுக்குத் தெரியாது. அவர்களுக்கு அது சுகமாகவும், நித்திரை தரக் கூடியதாகவும் இருக்கும்.

பூமி வேகமாகச் சுழன்றாலும் அந்தச் சுழற்சி நமக்குத் தெரியாது. எந்த விதமான பாதிப்பும் நமக்கு இருக்காது. தொட்டிலாக என்ற சொல் மூலம் இதைத் தான் அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

10 பூமிக்கு அடியில் எவ்வளவு ஆழத்திற்குச் செல்ல முடியும்?

பூமியில் கர்வத்துடன் நடக்காதே! நீ பூமியைப் பிளந்து, மலைகளின் உயரத்தின் அளவை அடையவே மாட்டாய்!

திருக்குர்ஆன் 17:37

மனிதன் ஆகாயத்தில் லட்சக் கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ளவற்றை எல்லாம் அறியும் திறன் பெற்றிருக்கிறான். அங்கே சென்று வரும் அளவுக்கு ஆற்றலும் பெற்றிருக்கிறான்.

ஆனால் அவன் வசிக்கின்ற பூமியில் பெரிய அளவுக்கு அவன் இன்னும் ஊடுறுவிச் செல்லவில்லை. மிக அதிகமாக அவன் சென்றிருக்கும் தூரம் 3 கிலோ மீட்டர் தூரம் தான்.

3 கிலோ மீட்டர் ஆழத்திற்குக் கீழே இன்னும் மனிதன் சென்றடையவில்லை. சென்றடைய முடியாது என்றும், சாத்தியமற்றது என்றும் விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். பல ஏற்கத்தக்க காரணங்களையும் கூறுகிறார்கள்.

விண்வெளிப் பயணம் போக முடியும் என்று சொல்கின்ற திருக்குர்ஆன், விண்வெளிப் பயணம் செல்லும் போது இதயம் சுருங்கி விடும் என்று விளைவையும் கூட சொல்லித் தருகின்ற திருக்குர்ஆன் பூமிக்கு அடியில் நீண்ட மலையின் நீளத்திற்குப் போக முடியாது என்பதை இவ்வசனத்தின் மூலம் சொல்கின்றது.

உலகின் மிக உயரமான மலை இமய மலையாகும். இம்மலையின் உயரம் சுமார் ஒன்பது கிலோ மீட்டராகும். இத்தகைய மலையின் உச்சியை மனிதன் அடைந்து விட முடியும். ஆனால் அந்த உயரத்திற்குக் கீழே செல்ல முடியுமா? என்றால் ஒருக்காலும் சாத்தியமே ஆகாது. அதிகபட்சம் மனிதன் பூமிக்கு அடியில் சென்றிருக்கும் தூரம் 3 கிலோ மீட்டருக்கும் குறைவானவையே.

நீ மேலே போகலாம்; இன்ன பிற சாதனைகள் நிகழ்த்தலாம்; உன் காலுக்குக் கீழே ஒரு நீண்ட மலை உயரத்திற்குப் போக முடியுமா? என்றால் போக முடியாது என்று 14 நூற்றாண்டுகளுக்கு முன் திருக்குர்ஆன் சொன்னதை இன்றைக்கு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துச் சொல்லும் அதிசயத்தைப் பார்க்கிறோம்.

இது மனிதனின் வார்த்தை அல்ல என்பதற்குச் சான்றாகும்.

11 நிலத்தடி நீர் எவ்வாறு சேமிக்கப்படுகிறது?

வானத்திலிருந்து அளவோடு தண்ணீரை இறக்கினோம். அதைப் பூமியில் தங்க வைத்தோம். அதைப் போக்கி விடுவதற்கும் நாம் ஆற்றலுடையவர்கள்.

திருக்குர்ஆன் 23:18

பூமியின் மேற்பரப்பில் தண்ணீர் இருப்பது போல் பூமியின் கீழ்ப் பரப்பிலும் பெரிய ஆறுகளும், ஏராளமான தண்ணீரும் உள்ளன.

இந்த நிலத்தடி நீர் கடல் வழியாக பூமிக்கு வருவதாகத் தான் முதலில் நம்பினார்கள். உண்மையில் ஆகாயத்திலிருந்து பெய்யும் மழை ஆங்காங்கே பூமியால் உறிஞ்சப்பட்டு அந்த நீர் தான் பூமிக்கு அடியில் நிலத்தடி நீராக சேமித்து வைக்கப்பட்டுள்ளது என்று கி.பி 1580ல் தான் கண்டறிந்தனர். சமீப காலத்தில் தான் மழை நீரை நிலத்தடியில் சேமிப்பதற்கான பலவிதமான நடவடிக்கைகளையும் அரசுகள் எடுத்து வருகின்றன.

இந்தப் பேருண்மைகளை திருக்குர்ஆன் பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே தெளிவுபடுத்தி விட்டது.

பெய்கின்ற மழை நீரை உறிஞ்சுவதற்கு ஏற்ப ஊர்களையும், நகரங்களையும் அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற மறைமுகமான வழிகாட்டுதலும் இந்த வசனத்திற்குள் அடங்கியிருக்கிறது.

12 இரு கடல்களுக்கிடையே தடுப்பு

திருக்குர்ஆன் பல இடங்களில் இரண்டு கடல்கள் சங்கமமாகும் இடத்தில் அவ்விரண்டுக்கும் இடையே ஒரு பலமான தடையையும், தடுப்பையும் ஏற்படுத்தியிருப்பதாகக் கூறுகிறது.

(நீங்கள் இணை கற்பித்தவை சிறந்தவையா? அல்லது) பூமியை வசிப்பிடமாக்கி, அவற்றுக்கிடையே ஆறுகளை உருவாக்கி அவற்றுக்கு முளைகளையும் அமைத்து இரண்டு கடல்களுக்கிடையே தடுப்பையும் ஏற்படுத்தியவனா? அல்லாஹ்வுடன் வேறு கடவுளா? இல்லை! அவர்களில் அதிகமானோர் அறிவதில்லை.

திருக்குர்ஆன் 27:61

இரண்டு கடல்கள் சந்திக்குமாறு அவன் ஏற்படுத்தியுள்ளான். இரண்டுக்குமிடையே ஒரு திரை உள்ளது. ஒன்றையொன்று கடக்காது.

திருக்குர்ஆன் 55:19,20

கடல் பற்றி ஆய்வு செய்பவர்கள் ஆராய்ச்சி செய்து இரு கடல்கள் சங்கமமாகும் இடங்களில் இரண்டு தண்ணீரும் சுவையிலும், அடர்த்தியிலும், உப்பின் அளவிலும் வேறுபட்டிருப்பதைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

பிரஞ்சு நாட்டைச் சேர்ந்த கடல் இயல் ஆய்வாளர் ஜேக்கூஸ் கோஸ்டோ என்பவர் ஆராய்ந்து இரண்டு கடல்களுக்கிடையே தடுப்பு இருப்பதை முதலில் கண்டறிந்தார்.

இது எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மது நபிக்கு 14 நூற்றாண்டுகளுக்கு முன் எப்படித் தெரியும்? எனவே திருக்குர்ஆன் இறைவனின் வார்த்தை தான் என்பதற்கு இதுவும் சான்றாக இருக்கிறது.

13 உதிக்கும் பல திசைகள்

சாதாரணமாக திசைகளைப் பற்றி பேசும் போது கிழக்கு, மேற்கு என்று ஒருமையில் தான் குறிப்பிடுவர். ஆனால் திருக்குர்ஆன் இரண்டு கிழக்குகள் இரண்டு மேற்குகள் எனவும் பல கிழக்குகள், பல மேற்குகள் எனவும் பயன்படுத்தியுள்ளது.

(அவன்) வானங்கள், பூமி மற்றும் அவற்றுக்கு இடைப்பட்டவற்றுக்கு இறைவன். கிழக்குகளுக்கும் இறைவன்.

திருக்குர்ஆன் 37:5

(அவன்) இரண்டு கிழக்குத் திசைகளுக்கும் இறைவன். இரண்டு மேற்குத் திசைகளுக்கும் இறைவன்.

திருக்குர்ஆன் 55:17

கிழக்குகளுக்கும், மேற்குகளுக்குமுரிய இறைவன் மேல் ஆணையிடுகிறேன். அவர்களை விடச் சிறந்தோரைப் பகரமாக்கிட நாம் ஆற்றலுடையவர்கள். நாம் தோற்போர் அல்லர்.

திருக்குர்ஆன் 70:40

இரண்டு கிழக்குகள் இரண்டு மேற்குகள் என்ற சொற்றொடரும், பல கிழக்குகள், பல மேற்குகள் என்ற சொற்றொடரும் இந்தப் பூமி உருண்டை என்பதற்குத் தெளிவான சான்றாக அமைந்துள்ளது. பூமி தட்டையாக இருந்தால் சூரியன் ஒரு இடத்தில் உதித்து மறு இடத்தில் மறைந்து விடும். சூரியன் உதிக்கும் திசையைக் கிழக்கு என்போம். மறையும் திசையை மேற்கு என்போம்.

பூமி உருண்டையாக இருந்தால் நமக்கு எந்தத் திசையில் சூரியன் மறைகிறதோ அதே திசையில் சூரியன் உதிப்பதை பூமியின் மறுபக்கத்தில் உள்ளவர் காண்பார். அதாவது நமக்குக் கிழக்காக இருப்பது மறுபக்கம் உள்ளவருக்கு மேற்காக அமைகின்றது. நமக்கு மேற்காக இருப்பது மறுபக்கம் உள்ளவருக்கு கிழக்காக அமைகின்றது. இரண்டு கிழக்குகள், இரண்டு மேற்குகள் என்பது எவ்வளவு பொருள் பதிந்தது என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

பூமி உருண்டையாக இருந்தால் பூமியுடைய ஒவ்வொரு புள்ளியிலும் உதிக்கும் பல திசைகள் உருவாகின்றன; மறையும் திசைகளும் இவ்வாறே இருக்கின்றன.

பல உதிக்கும் திசைகள், பல மறையும் திசைகள் என்ற சொல் மூலம் பூமி உருண்டை வடிவிலானது என்ற அறிவியல் உண்மையை உள்ளடக்கி ஒரு மாபெரும் விஞ்ஞானி பேசுவது போல் திருக்குர்ஆன் பேசுகிறது. இதுவும் திருக்குர்ஆன் இறை வேதம் என்பதற்குச் சான்றாகும்.

14 மனிதர்களால் குறையும் பூமி

அவர்களால் பூமி எவ்வளவு குறைந்திருக்கிறது என்பதை அறிவோம். நம்மிடம் பாதுகாக்கப்பட்ட ஏடு உள்ளது.

திருக்குர்ஆன் 50:4

அல்லாஹ் உங்களைப் பூமியிலிருந்தே வளர்த்துப் பெரிதாக்கினான்.

திருக்குர்ஆன் 71:17

உலகில் வாழும் மனிதர்களால் பூமி குறைகிறது என்ற தத்துவம் இவ்வசனங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. இதில் மிகப் பெரிய அறிவியல் உண்மை அடங்கியிருக்கிறது.

பூமியில் எவ்வளவு உயிரினங்கள் உருவானாலும் அதற்குரிய எடை வெளியிலிருந்து கிடைப்பதில்லை; பூமியுடைய எடை குறைந்து தான் அது மனிதனாக, மிருகங்களாக, மரங்களாக, மற்ற உயிரினங்களாக உற்பத்தியாகின்றன.

இப்படியே முளைக்கின்ற, வளருகின்ற எல்லாப் பொருள்களுமே தங்களின் எடையைப் பூமியிலிருந்து தான் எடுத்துக் கொள்கின்றன.

எத்தனை கோடி மக்கள் பெருகினாலும் அதனால் பூமியுடைய எடை கூடாது. இந்த மக்களோடு சேர்த்து பூமியை எடை போட்டால் ஆரம்பத்தில் பூமியைப் படைத்த போது இருந்த எடை தான் இருக்கும். மனிதன் பூமியிலிருந்து தான் தனது எடையை எடுத்துக் கொண்டு வளர்கிறான் என்ற அறிவியல் உண்மையை 14 நூற்றாண்டுகளுக்கு முன்னால் கூறியிருப்பதன் மூலம் இது இறைவனின் வேதம் தான் என்பது நிரூபணம் ஆகிறது.

இதே தத்துவத்தை மற்றொரு கோனத்திலும் திருக்குர்ஆன் பின் வரும் வசனத்தில் கூறுகிறது.

அவனே உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்தான். (உங்களுக்கு) தங்குமிடமும் ஒப்படைக்கப்படும் இடமும் உள்ளன. புரிந்து கொள்ளும் சமுதாயத்திற்குச் சான்றுகளை விளக்கியுள்ளோம்.

திருக்குர்ஆன் 6:98

இவ்வசனத்தில் கூறப்படும் தங்குமிடம் என்பது இந்த உலகத்தில் வாழுகின்ற பூமியைக் குறிக்கும் என்பதையும், ஒப்படைக்கப்படும் இடம் என்பது மனிதன் மண்ணுக்குள் அடக்கம் செய்யப்படக் கூடிய இடத்தைக் குறிக்கும் என்பதையும் சாதாரணமாக யாரும் புரிந்து கொள்ள முடியும்.

ஆனால் திருக்குர்ஆன் பயன்படுத்தியிருக்கின்ற ஒப்படைக்கப்படும் இடம் என்ற வார்த்தை மிகப் பெரிய உண்மையைச் சொல்கிறது.

மனிதன் இந்த உலகில் சின்னஞ் சிறிய அளவில் பிறப்பெடுக்கிறான். அவன் பிறப்பெடுத்த போது இருந்த அளவை விட பலப் பல மடங்கு பெரிதாக வளர்ந்து பின்னர் மரணிக்கின்றான். அவன் பிறப்பெடுக்கும் போது இருந்த அந்த எடை பல மடங்கு பெரிதாக எப்படி ஆனது என்றால் இந்த மண்ணிலிருந்து சத்துக்களை அவன் பெறுவதால் தான் ஆனது.

மண்ணிலிருந்து உற்பத்தியாகின்ற தானியங்கள், பருப்புகள், இன்ன பிற சத்துக்களைப் பெற்று தன்னைப் பெரிதாக்கிக் கொண்டு பூமியின் எடையை மனிதன் குறைத்தான்.

50 கிலோ எடையுள்ள ஒரு மனிதன் வாழ்கிறான் என்றால் இவன் வாழ்வதனால் மண்ணிலிருந்து 50 கிலோ குறைந்து விட்டது என்பது பொருள். எங்கிருந்து இந்த 50 கிலோ எடையைப் பெற்றிருக்கின்றானோ அதனை அங்கே அவன் ஒப்படைக்க வேண்டும்.

ஒப்படைக்கப்படும் இடம் என்று சொன்னால் இவன் பூமிக்கு உடைமையான ஒரு பொருளாக இருக்கிறான். ஏனெனில் அங்கிருந்து தான் இவன் எடுக்கப்பட்டிருக்கின்றான் என்பது கருத்து.

மனிதன் பூமியிலுள்ள மண்ணை நேரடியாகச் சாப்பிடுவதில்லை. மண் வேறு பொருளாக மாறி அதனை மனிதன் சாப்பிட்டு தன் உடலை வளர்த்துக் கொண்டான் என்ற தத்துவத்தை உள்ளடக்கி ஒப்படைக்கப்படுகின்ற இடம் என்ற சொல்லை அல்லாஹ் மிகப் பொருத்தமாகப் பயன்படுத்தியிருக்கிறான்.

15 ஆழ் கடலில் அலைகள்

கடலின் மேற்பரப்பில் அலைகள் தவழ்வதை அனைவரும் அறிந்துள்ளனர். ஆனால் ஆழ்கடலுக்கு உள்ளேயும் அலைகள் உள்ளன; கடலின் ஆழத்தில் ஏற்படும் பேரலைகள் சுனாமியாகச் சீற்றமடைகிறது என்ற உண்மையை சுனாமிக்குப் பிறகே மனிதர்கள் பரவலாக அறிந்து கொண்டனர்.

ஆழ்கடலிலும் அலைகள் உள்ளன என்ற பேருண்மையைத் திருக்குர்ஆன் கூறியிருக்கிறது.

அல்லது ஆழ்கடலில் உள்ள பல இருள்களைப் போன்றது. ஓர் அலை அதை மூடுகிறது. அதற்கு மேலே மற்றொரு அலை! அதன் மேலே மேகம்! ஒன்றுக்கு மேல் ஒன்றாகப் பல இருள்கள்! அவன் தனது கையை வெளிப்படுத்தும் போது அதை (கூட) அவனால் பார்க்க முடியாது.

திருக்குர்ஆன் 24:40

இவ்வசனத்தில் கடலைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடும் போது, ஒருவன் கடலுக்குள் மூழ்கும் போது அங்கே அவன் மேல் அலை அடிக்கும் எனவும். அதற்கு மேலேயும் அலை இருக்கும் எனவும் கூறுகிறான்.

கடலின் மேற்பரப்பில் அதுவும் கடற்கரை ஓரங்களில் மாத்திரமே அலை இருக்கும் என்று கருதப்பட்ட காலத்தில் கடலின் அடியில் அலைக்கு மேல் அலை இருக்கும் என்ற மாபெரும் அறிவியல் உண்மையை இவ்வசனம் கூறுகிறது.

கடலின் ஆழத்தில் கடுமையான அலைகளின் சுழற்சி இருப்பதை சமீபத்தில் தான் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

கடல் ஆழத்தைப் பற்றிய அறிவு எதுவும் இல்லாத காலத்தில் வாழ்ந்த நபியால் இதைச் சொந்தமாகக் கூறியிருக்க முடியாது.

எனவே திருக்குர்ஆன் அல்லாஹ்வின் வேதம் தான் என்பது இவ்வசனத்தின் மூலம் நிரூபணம் ஆகிறது.

16 மலட்டுக் காற்று

ஆது சமுதாயத்திடமும் (படிப்பினை) உள்ளது. அவர்கள் மீது மலட்டுக் காற்றை அனுப்பினோம். அது எப்பொருளில் பட்டாலும் அதை மக்கிப் போனதைப் போன்று ஆக்காமல் இருந்ததில்லை.

திருக்குர்ஆன் 51:41,42

காற்றை அனுப்பி ஒரு சமுதாயத்தை எப்படி அழிக்க முடியும்? இக்கேள்விக்கு இவ்வசனத்திலேயே விடை அமைந்துள்ளது. அதாவது இந்தக் காற்று மலட்டுக் காற்றாக இருந்ததே காரணம் என்று இறைவன் கூறுகிறான்.

காற்று மனிதனுக்குப் பயன்பட வேண்டுமானால் அதில் ஆக்ஸிஜன் போன்றவை இருந்தாக வேண்டும். காற்றில் உள்ள ஆக்ஸிஜனைப் பிரித்து எடுத்து விட்டால் காற்று இருந்தாலும் மனிதனால் உயிர் வாழ முடியாது. இதையே மலட்டுக் காற்று என்று இவ்வசனம் கூறுகிறது.

நவீன உலகில் சில வகையான வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதை ஒரு பகுதியில் வீசினால் அப்பகுதியில் உள்ள கட்டடங்கள் எதுவும் சேதமாகாது. ஆனால் காற்றில் உள்ள ஆக்ஸிஜனை மட்டும் இல்லாமல் ஆக்கி விடும். இதனால் குறிப்பிட்ட பகுதியில் உள்ள உயிரினங்கள் செத்து விடும். இது போன்ற காற்றையே இறைவன் அனுப்பியிருக்க வேண்டும் என்பதை மலட்டுக் காற்று என்ற சொல் மூலம் அறிந்து கொள்ளலாம்.

17 சூரியனும் கோள்களும் ஓடுகின்றன

சூரியன் குறிப்பிட்ட காலம் வரை ஓடிக் கொண்டே இருக்கிறது என்று திருக்குர்ஆன் பல வசனங்களில் கூறுகிறது. ஏனைய எல்லா கோள்களும் இவ்வாறே ஓடுவதாகத் திருக்குர்ஆன் கூறுகிறது.

சூரியனையும், சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான். ஒவ்வொன்றும் குறிப்பிட்ட தவணை வரை ஓடுகின்றன. காரியத்தை அவனே நிர்வகிக்கிறான். உங்கள் இறைவனின் சந்திப்பை நீங்கள் உறுதியாக நம்புவதற்காக சான்றுகளை அவன் தெளிவுபடுத்துகிறான்.

திருக்குர்ஆன் 13:2

அல்லாஹ் இரவைப் பகலில் நுழைப்பதையும், பகலை இரவில் நுழைப்பதையும், சூரியனையும் சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதையும் நீர் அறியவில்லையா? ஒவ்வொன்றும் குறிப்பிட்ட காலக்கெடு வரை சென்று கொண்டிருக்கும். அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவன்.

திருக்குர்ஆன் 31:29

அவன் இரவைப் பகலில் நுழைக்கிறான். பகலை இரவில் நுழைக்கிறான். சூரியனையும், சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான். ஒவ்வொன்றும் குறிப்பிட்ட காலக்கெடு வரை செல்கின்றன. அவனே அல்லாஹ்; உங்கள் இறைவன். அவனுக்கே அதிகாரம். அவனன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள், அணுவளவும் அதிகாரம் படைத்தவர்களல்லர்.

திருக்குர்ஆன் 35:13

சூரியன் அதற்குரிய இடத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. இது அறிந்தவனாகிய மிகைத்தவனுடைய ஏற்பாடாகும்.

திருக்குர்ஆன் 36:38

தக்க காரணத்துடனேயே வானங்களையும், பூமியையும் அவன் படைத்தான். பகலின் மீது இரவைச் சுருட்டுகிறான். இரவின் மீது பகலைச் சுருட்டுகிறான். சூரியனையும், சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான். ஒவ்வொன்றும் குறிப்பிட்ட கால கட்டம் வரை ஓடும். கவனத்தில் கொள்க! அவனே மிகைத்தவன்; மன்னிப்பவன்.

திருக்குர்ஆன் 39:5

பூமி தட்டையாக இருக்கிறது என்று மனிதன் ஒரு காலத்தில் நம்பினான்.

பிறகு உருண்டையாக இருக்கிறது என்றான்.

உருண்டையாக இருக்கின்ற பூமி தான் இந்தக் குடும்பத்தின் மையப் பகுதி என்று கூறி, சூரியன் தான் பூமியைச் சுற்றி வருகிறது என்றான்.

பிறகு சூரியனைத் தான் பூமி சுற்றி வருகிறது என்றான். இன்றைய அறிவியல் கண்டு பிடிப்பிற்குப் பிறகே பூமி தன்னைத் தானே சுற்றிக் கொள்கிறது; சூரியனையும் சுற்றுகிறது என்றும், தன்னைத் தானே சுற்றுவதற்கு ஒரு நாள் என்றும், சூரியனைச் சுற்றி முடிக்கின்ற காலம் ஒரு வருடம் என்றும் மனிதன் அறிந்து கொண்டான்.

பூமி இவ்வாறு சூரியனைச் சுற்றும் போது சூரியன் என்ன செய்கிறது என்றால் அது தன்னைத் தானே சுற்றிக் கொண்டு இந்தப் பூமியையும், தன் குடும்பத்தைச் சேர்ந்த மற்ற கோள்களையும் இழுத்துக் கொண்டு ஓடிக் கொண்டே இருக்கின்றது.

ஆக சூரியன் சுழன்று கொண்டே இருக்கின்றது என்பது மட்டுமல்ல; ஓடிக் கொண்டே இருக்கின்றது. அதுவும் ஒரு குறிப்பிட்ட காலம் வரை ஓடிக் கொண்டே இருக்கின்றது என்று சொல்ல வேண்டுமானால் நிச்சயம் அது இறைவனின் கூற்றாகத் தான் இருக்க முடியும்.

இந்த உண்மையை 14 நூற்றாண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த, எழுதப் படிக்கத் தெரியாத முஹம்மது நபியால் ஒருக்காலும் சொல் இருக்கவே முடியாது.

இங்கே பயன்படுத்தி இருக்கின்ற வார்த்தைப் பிரயோகத்தை நேர்மையான பார்வையுடன் ஒருவர் யோசித்தால் நிச்சயமாக இது மனிதனது வார்த்தையல்ல; கடவுளின் வார்த்தை என்பதைத் தெளிவாக அறிந்து கொள்வார்.

19 கருவில் குழந்தையின் வளர்ச்சி

பின்னர் விந்துத் துளியை கருவுற்ற சினைமுட்டையாக்கினோம். பின்னர் கருவுற்ற சினைமுட்டையைச் சதைத் துண்டாக ஆக்கினோம். சதைத் துண்டை எலும்பாக ஆக்கி எலும்புக்கு இறைச்சியையும் அணிவித்தோம். பின்னர் அதை வேறு படைப்பாக ஆக்கினோம். அழகிய படைப்பாளனாகிய அல்லாஹ் பாக்கியசாலியாவான்.

திருக்குர்ஆன் 23:14

இவ்வசனத்தில் கருவளர்ச்சியின் பல்வேறு நிலைகளைக் கூறி வரும் பொழுது பின்னர் அதனை வேறு படைப்பாக ஆக்கினோம் என்று திருக்குர்ஆன் கூறுகிறது.

இது ஆழமான அறிவியல் உண்மையைப் பேசும் சொல்லாகும். ஏனெனில் கருவில் வளர்கின்ற உயிர்கள் சுமார் மூன்று மாதங்கள் வரை அவற்றுக்கான வடிவத்தைப் பெறுவதில்லை. வெறும் சதைப் பிண்டமாகவே வளரும். மனிதன் அல்லாத உயிரினத்தின் கருவும், மனிதனின் கருவும் இந்தக் கால கட்டத்தில் ஒரே மாதிரியாகவே அமைந்திருக்கும். மூன்று மாதங்கள் கழிந்த பிறகு தான் ஒவ்வொரு உறுப்புகளும் எங்கெங்கே அமைய வேண்டுமோ அங்கே அதற்கான செல்கள் நகர்ந்து வடிவம் உருவாகும்.

இதைத் தான் பின்னர் வேறு படைப்பாக மாற்றினோம் என்ற சொற்றொடர் மூலம் திருக்குர்ஆன் குறிப்பிடுகிறது.

20 கலப்பு விந்துவிலிருந்து மனிதனின் உற்பத்தி

மனிதனைச் சோதிப்பதற்காக கலப்பு விந்துத்துளியிலிருந்து அவனை நாம் படைத்தோம். அவனைக் கேட்பவனாகவும், பார்ப்பவனாகவும் ஆக்கினோம்.

திருக்குர்ஆன் 76:2

மனிதன் படைக்கப்பட்டதைக் கூறும் போது விந்துத் துளியிலிருந்து படைத்ததாகப் பல வசனங்களில் அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

துளி என நாம் மொழி பெயர்த்திருந்தாலும், விந்துத் துளியில் உள்ள ஒரு உயிரணுவிருந்து மனிதனைப் படைத்ததாகவும், அது கலப்பு விந்துத் துளி எனவும் இந்த வசனத்தில் இறைவன் கூறுகிறான்.

ஆணிடமிருந்து வெளிப்படும் உயிரணு, பெண்ணிடமிருந்து வெளிப்படுகின்ற சினைமுட்டையுடன் இரண்டறக் கலந்து, பிறகு தான் அது பெண்ணின் கருவறைக்குச் சென்று மனிதனாக உருவாகிறது.

மனித உற்பத்தியில் ஆணுடைய உயிரணுவும், பெண்ணுடைய சினை முட்டையும் கலந்தாக வேண்டும் என்ற அறிவியல் உண்மையை 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே திருக்குர்ஆன் கூறி இது இறைவனின் வார்த்தை தான் என்பதை நிரூபிக்கிறது.

21 ஜோடி ஜோடியாக…

திருக்குர்ஆன் பல வசனங்களில் உயிரினங்களில் மட்டுமின்றி தாவரங்களிலும் ஜோடிகளை அமைத்திருப்பதாகக் குறிப்பிடுகின்றது.

பூமி முளைக்கச் செய்வதிலிருந்தும், அவர்களிலிருந்தும், அவர்கள் அறியாதவற்றிலிருந்தும் ஜோடிகள் அனைத்தையும் உருவாக்கியவன் தூயவன்.

திருக்குர்ஆன் 36:36

அவனே பூமியை விரித்தான். மலைகளையும், நதிகளையும் அதில் அமைத்தான். ஒவ்வொரு கனிகளிலும் ஒரு ஜோடியை அமைத்தான். இரவைப் பகலால் மூடுகிறான். சிந்திக்கும் சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.

திருக்குர்ஆன் 13:3

அவனே பூமியை உங்களுக்குத் தொட்டிலாக அமைத்தான். உங்களுக்காக அதில் பாதைகளை எளிதாக்கினான். வானத்திலிருந்து தண்ணீரை இறக்கி, அதன் மூலம் பல தரப்பட்ட தாவரங்களை ஜோடிகளாக வெளிப்படுத்தினோம்.

திருக்குர்ஆன் 20:53

அவனே ஜோடிகள் அனைத்தையும் படைத்தான். கப்பல்களிலும், கால்நடைகளிலும் நீங்கள் ஏறிப் பயணம் செய்வதையும் உங்களுக்காக ஏற்படுத்தினான்.

திருக்குர்ஆன் 43:12

நீங்கள் சிந்திப்பதற்காக ஒவ்வொரு பொருளிலும் ஜோடிகளைப் படைத்தோம்.

திருக்குர்ஆன் 51:49

தாவரங்களிலும் ஆண், பெண் உள்ளன என்பது தற்காலக் கண்டுபிடிப்பாகும்.

தாவரங்களிலும் ஜோடிகள் இருப்பதாகப் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே திருக்குர்ஆன் கூறியிருப்பது இது இறைவனின் வார்த்தை என்பதற்குச் சான்றாக அமைந்துள்ளது.

மேலும் ஜோடிகளைப் பற்றிக் குறிப்பிடும் சில வசனங்களில் இவர்கள் அறியாமல் இருப்பவற்றிலிருந்தும் ஜோடிகளைப் படைத்திருப்பதாக இறைவன் கூறுகிறான்.

அன்றைய மனிதர்கள் அறியாமல் இருந்த பல ஜோடிகளை இன்றைக்கு மனிதன் கண்டுபிடித்திருக்கின்றான்.

மின்சாரத்தில் பாஸிட்டிவ், நெகட்டிவ் என்ற ஜோடிகள் இருக்கின்றன.

அது போல் அணுவில் கூட ஒவ்வொரு அணுவிலும் புரோட்டான், எலக்ட்ரான் என்று ஜோடிகள் இருக்கின்றன.

இப்படி மனிதர்கள் அறியாமல் இருக்கின்ற பல விஷயங்களிலும் ஜோடிகளாகவே அமைத்திருப்பதாக இறைவன் குறிப்பிடுவதிலிருந்து இது முஹம்மது நபியின் சொந்தச் சொல் இல்லை; இறைவனின் வார்த்தை தான் என்பதை அறிந்து கொள்ளலாம்.

22 விந்தின் பிறப்பிடம்

மனிதன் எதிலிருந்து படைக்கப்பட்டான் என்பதைச் சிந்திக்கட்டும். குதித்து வெளிப்படும் நீரிலிருந்து படைக்கப்பட்டான். அது முதுகுத் தண்டுக்கும், முன் பகுதிக்கும் இடையிலிருந்து வெளிப்படுகிறது.

திருக்குர்ஆன் 86:5,6,7

சமீப காலத்திற்கு முன்பு வரை மனிதனின் விதைப் பையிலிருந்து தான் விந்து வெளிப்படுகிறது என்று நம்பி வந்தனர்.

ஆனால் விதைப் பையில் விந்து உற்பத்தியானாலும் அது மேலேறிச் சென்று முதுகுத் தண்டிற்கும், முன் பகுதிக்கும் இடையே உள்ள ஒரு குறிப்பிட்ட இடத்தை அடைந்து அங்கிருந்து தான் வேகமாகத் தள்ளப்படுகிறது என்பதை சமீப காலத்தில் கண்டுபிடித்தனர்.

இதை 1400 ஆண்டுகளுக்கு முன் திருக்குர்ஆன் அது முதுகுத் தண்டுக்கும், முன் பகுதிக்கும் இடையிலிருந்து வெளிப்படுகிறது என்ற சொற்றொடர் மூலம் குறிப்பிட்டிருப்பது, இது முஹம்மது நபியின் வார்த்தை இல்லை. மாறாக இறைவனின் வார்த்தையே என்பதை நிரூபிக்கும் சான்றாக அமைந்துள்ளது.

23 கர்ப்ப அறையின் தனித் தன்மை

ஒவ்வொரு பெண்ணும் (கருவறையில்) சுமப்பதையும், கருவறைகள் சுருங்குவதையும், விரிவடைவதையும் அல்லாஹ் அறிகிறான். ஒவ்வொரு பொருளுக்கும் அவனிடம் நிர்ணயிக்கப்பட்ட அளவு உள்ளது.

திருக்குர்ஆன் 13:8

திருக்குர்ஆனின் இவ்வசனம் மிகப் பெரும் அறிவியல் உண்மையைக் கூறும் வசனமாகும்.

பொதுவாக மனித உடலுக்கு சில தனித் தன்மைகள் உள்ளன. தனக்குள் அன்னியப் பொருள் எதனையும் அது ஏற்றுக் கொள்ளாது என்பது அவற்றுள் ஒன்றாகும். இதற்கு உதாரணமாக கண்களைக் குறிப்பிடலாம். கண்களில் ஏதேனும் தூசுகள் விழுந்து விட்டால் அதை எப்படியாவது வெளியேற்றவே கண்கள் முயற்சிக்கும்.

இது போலவே பெண்களின் கருவறைகளும் அமைந்துள்ளன. ஆயினும் கருவறை அன்னிய உயிரைத் தனக்குள் ஏற்றுக் கொள்கிறது. கருவைப் பல மாதங்கள் வளர்த்து திடீரென அதை வெளியேற்றுவதற்காக முயற்சிக்கிறது. இவ்வாறு முயற்சிக்கும் போது கருவறை சுருங்கி விரிகின்றது. இதன் காரணமாகவே பிரசவ வேதனை ஏற்படுகிறது. இதனைத் தான் இவ்வசனம் கூறுகிறது.

ஒவ்வொரு பொருளும் குறிப்பிட்ட கால நிர்ணயப்படியே அவனிடத்தில் உள்ளன என்ற சொற்றொடர் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியதாகும். இயற்கைக்கு மாறாக அன்னியப் பொருளை ஏற்றுக் கொண்டிருந்த கருவறை ஒரு குறிப்பிட்ட நேரம் வந்ததும் வெளியேற்றுவதற்கு இன்று வரை காரணம் கண்டுபிடிக்கப்படவில்லை.

அன்னியப் பொருளை கருவறை பல மாதங்களாக ஏற்றுக் கொண்டது எப்படி? என்ற கேள்விக்கும் இது வரை விடையில்லை.

இயற்கைக்கு மாறாக இறைவன் தனது வல்லமையைப் பயன்படுத்தி ஒரு காலக் கெடுவை நிர்ணயிக்கிறான். அந்த நிர்ணயத்தின் படியே நீண்ட காலம் அன்னியப் பொருளை கருவறை சுமந்து கொண்டிருக்கிறது என இந்தச் சொற்றொடர் விளக்குகிறது.

24 விரல் ரேகையின் முக்கியத்துவம்

அவ்வாறில்லை! அவனது விரல் நுனிகளையும் சீராக்க நாம் ஆற்றலுடையவர்கள்.

திருக்குர்ஆன் 75:4

மனிதனை மீண்டும் என்னால் படைக்க முடியும் என்று குறிப்பிடும் இறைவன், விரல் நுனிகளையும் என்னால் சீராக்க முடியும் என்று கூறுகிறான்.

விரல் நுனிகளைக் குறிப்பிட்டுக் கூறக் காரணம் என்ன? இதை விட முக்கியமான பகுதிகளெல்லாம் மனித உடல் இருக்கும் போது விரல் நுனிகளை மட்டும் குறிப்பிட்டுச் சொல்வதற்குரிய காரணம் என்னவென்றால், மனிதனின் எந்த அங்கமாக இருந்தாலும் அந்த அங்கம் குறிப்பிட்ட மனிதனுடையது தான் என்று அடித்துச் சொல்ல முடியாது.

ஏனென்றால் அது போல் பலரது அங்கங்கள் அமைந்திருக்கும். ஒரு மனிதனிடமிருந்து இன்னொரு மனிதன் முழுமையாக வேறுபடுவது விரல்களில் அமைந்திருக்கும் ரேகைகளால் தான்.

ஒருவரது ரேகைகள் போல இன்னொருவரது ரேகைகள் இருக்காது. இந்த ரேகைகளைக் கூட நாம் திரும்பக் கொண்டு வந்து விடுவோம் என்று இந்த அறிவியல் உண்மையை உள்ளடக்கி அல்லாஹ் கூறுகிறான்.

25 பால் எவ்வாறு உற்பத்தியாகிறது?

கால் நடைகள் மூலம் மனிதர்களுக்குக் கிடைக்கும் பால் எப்படி உற்பத்தியாகிறது என்பதை இன்றைய விஞ்ஞானிகள் கூறுவது போல் 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே திருக்குர்ஆன் கூறியுள்ளது.

கால்நடைகளில் உங்களுக்குப் படிப்பினை உள்ளது. அதன் வயிறுகளில் உள்ள செறிக்கப்பட்ட உணவுக்கும், இரத்தத்திற்கும் இடைப்பட்ட நிலையில் தூய்மையான பாலை உங்களுக்குப் புகட்டுகிறோம். அருந்துவோருக்கு அது இனிமையானது.

திருக்குர்ஆன் 16:66

தலைசிறந்த உணவாகக் கருதப்படும் பால் எவ்வாறு உற்பத்தியாகிறது என்பது மிகப் பிற்காலத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. பல வருடங்களுக்கு முன்னால் வரை இரத்தம் தான் பாலாக மாறுகிறது என்று நம்பி வந்தனர்.

உண்மையில் இரத்தம் பாலாக ஆவதில்லை. மாறாக உண்ணுகின்ற உணவுகள் சிறு குடலுக்குச் சென்று அரைக்கப்பட்டுக் கூழாக இருக்கும் போது அங்குள்ள உறிஞ்சுகள் மூலமாக அதிலிருந்து உறிஞ்சப்படும் சத்துகள் தான் இரத்தமாகவும், இன்ன பிற பொருட்களாகவும் மாற்றப்படுகின்றன.

இவ்வாறு உறிஞ்சப்படும் பொருட்களை இரத்தம் இழுத்துச் சென்று பாலை உற்பத்தியாக்கும் மடுக்களில் சேர்க்கிறது. அங்கே பாலாக உருமாறுகிறது.

அதாவது அறைக்கப்பட்ட உணவுக் கூழுக்கும், இரத்தமாக மாறுகின்ற நிலைக்கும் இடைப்பட்ட பொருளில் இருந்து தான் பால் உற்பத்தியாகிறது என்ற 21 ஆம் நூற்றாண்டு விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பை, சுற்றி வளைக்காமல் அதே வார்த்தைகளை நேரடியாக திருக்குர்ஆன் கூறியிருப்பது, இது மனிதனின் வார்த்தையே அல்ல என்பதற்கும், கடவுளின் வார்த்தையே என்பதற்கும் மறுக்க முடியாத சான்றாக அமைந்துள்ளது.

26 தேன் எவ்வாறு உற்பத்தியாகிறது

மலைகளிலும், மரங்களிலும், மனிதர்கள் கட்டுபவற்றிலும் கூடுகளை நீ அமைத்துக் கொள்! பின்னர் ஒவ்வொரு கனிகளிலிருந்தும் சாப்பிடு! உனது இறைவனின் பாதைகளில் எளிதாகச் செல்! என்று உமது இறைவன் தேனீக்களுக்கு அறிவித்தான். அதன் வயிறுகளிலிருந்து மாறுபட்ட நிறங்களையுடைய பானம் வெளிப்படுகிறது. அதில் மனிதர்களுக்கு நோய் நிவாரணம் உள்ளது. சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் சான்று உள்ளது.

திருக்குர்ஆன் 16:68,69

இவ்வசனத்தில் தேன் எவ்வாறு உற்பத்தியாகின்றது என்ற உண்மை கூறப்படுகிறது.

பெரும்பாலான மக்கள் இன்று கூட தேன் எப்படி உற்பத்தியாகிறது என்பதை அறிந்திருக்கவில்லை. தேனீக்கள் மலர்களிலிருந்து தேனை உறிஞ்சி வந்து கூடுகளில் சேமித்து வைக்கின்றன என்று தவறாக விளங்கி வைத்திருக்கின்றனர்.

உண்மை என்னவென்றால் மலர்களிலும், கனிகளிலும் உள்ள குளூக்கோஸை, தேனீக்கள் உணவாக உட்கொள்கின்றன. உட்கொண்ட பிறகு அவற்றின் வயிற்றுக்குள் சென்ற பொருள் மாற்றமடைந்து, அதன் வயிற்றிலிருந்து வெளிப்படுகின்ற ஒரு கழிவு தான் தேன்.

இதை இன்றைய விஞ்ஞானிகள் நிரூபித்திருக்கின்றார்கள். ஆனால் 14 நூற்றாண்டுகளுக்கு முன்னால் அருளப்பட்ட திருக்குர்ஆன் தேனீக்கள் தேனை உணவாகச் சாப்பிடுகின்றன எனக் கூறுகிறது. நீ சாப்பிடு! என்ற கட்டளையிலிருந்து இதனை விளங்கலாம்.

சாப்பிட்ட பிறகு அதன் வாயிலிருந்து தேன் வெளிப்படுகிறது என்று சொல்லாமல், அதன் வயிறுகளிலிருந்து தேன் வெளிப்படுகிறது என்று 14 நூற்றாண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த எந்த மனிதனாலும் கூறுவதற்குச் சாத்தியமில்லை.

அத்துடன் தேனீக்கள் தேனைத் தேடுவதற்காக மிக எளிதாகச் சென்று விட்டு, எளிதாகத் தங்கள் கூட்டுக்கு வந்து சேர்ந்து விடுகின்றன என்ற அறிவியல் உண்மையும் இணைத்துச் சொல்லப்படுகிறது.

தேனில் இருக்கின்ற மருத்துவக் குணத்தை எல்லா விதமான மருத்துவத் துறையினரும் ஒப்புக் கொள்கின்றனர். அதுவும் இவ்வசனத்தில் கூறப்படுகிறது. இவை மனிதனது வார்த்தை இல்லை என்பதை மிகத் தெளிவாக உணர்த்துகின்ற வசனமாகும்.

27 நவீன வாகனங்கள்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் குதிரை ஒட்டகம் ஆகிய உயிரினங்களையே மனிதன் வாகனமாகப் பயன்படுத்தி வந்தான். இன்று நாம் பயன்படுத்தும் நவீன வாகனங்கள் பற்றி மனிதன் கற்பனை கூட செய்திருக்க முடியாது. இதற்கான எந்த அறிகுறியும் அப்போது இருக்கவில்லை.

இத்தகைய காலகட்டத்தில் தான் நவீன வாகனங்கள் இனி மேல் கண்டுபிடிக்கப்படும் என்று தெளிவான வார்த்தைகளால் திருக்குர்ஆன் முன்னறிவிப்பு செய்தது.

கால்நடைகளை உங்களுக்காகவே அவன் படைத்தான். அவற்றில் குளிரைத் தடுப்பவை (கம்பளி) உண்டு. பல பயன்களும் உள்ளன. அவற்றிலிருந்து சாப்பிடுகிறீர்கள். மாலையில் ஓட்டிச் செல்லும் போதும், காலையில் ஓட்டிச் செல்லும் போதும், அதில் உங்களுக்கு அந்தஸ்து இருக்கிறது. பெரும் சிரமத்துடனே நீங்கள் சென்றடையும் ஊருக்கு உங்கள் சுமைகளை அவை சுமந்து செல்கின்றன. உங்கள் இறைவன் நிகரற்ற அன்புடையோன்; இரக்கமுள்ளவன். குதிரைகள், கோவேறுக் கழுதைகள், கழுதைகள் ஆகியவற்றை நீங்கள் ஏறிச் செல்லவும், மதிப்புக்காகவும் (அவன் படைத்தான்.) நீங்கள் அறியாதவற்றை (இனி) படைப்பான்.

திருக்குர்ஆன் : 16:5,6,7,8

மனிதர்கள் அன்றைக்குப் பயன்படுத்தி வந்த குதிரை, கோவேறுக் கழுதை, கழுதை ஆகிய வாகனங்களைக் குறிப்பிட்டு விட்டு, நீங்கள் அறியாதவற்றை இனி படைப்பான் என்று இவ்வசனங்களில் கூறப்படுகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்திற்குப் பின் எத்தனையோ விதமான வாகனங்கள் படைக்கப்படவிருப்பதை முன் கூட்டியே அறிவிப்பதாக இது அமைந்துள்ளது.

28 பெருங்கவலை போக்கும் அரு மருந்து

உஹதுப் போரில் வெற்றி நழுவிப் போனதுடன் உயிரிழப்புகளும், காயங்களும் முஸ்லிம்களுக்கு அதிக அளவில் ஏற்பட்டன.

இதனால் முஸ்லிம்கள் மனச் சோர்வு அடைந்து தளர்ந்து போயிருந்த நேரத்தில் அதை விடப் பெருங் கவலையாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கொல்லப்பட்டார்கள் என்ற வதந்தி அமைந்தது.

முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட அந்தக் கவலைகள் இதனால் மறைந்தன. நபிகள் நாயகம் (ஸல்) அவர்க்ள் கொல்லப்பட்டு விட்டார்களே என்ற ஒரே கவலை தான் அப்போது இருந்தது.

அந்தக் கவலையைப் போக்கும் விதமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உயிருடன் உள்ள செய்தி கிடைத்தவுடன் நபித்தோழர்கள் பெரும் உத்வேகம் பெற்றனர். மீண்டும் வெற்றி வாகை சூடினார்கள்.

மனோதத்துவ ரீதியாக இது போன்ற நடவடிக்கைகளால் தான் கவலையை மறக்கடிக்கச் செய்ய இயலும் என்று இன்று கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் இதைக் கண்டுபிடிப்பதற்கு பல நூறு வருடங்களுக்கு முன்பே திருக்குர்ஆன் இந்த வழிமுறையைக் கற்றுத் தருகிறது.

உங்களுக்குப் பின்னால் இத்தூதர் (முஹம்மத்) உங்களை அழைத்துக் கொண்டிருக்கும் போது எவரையும் திரும்பிப் பார்க்காமல் நீங்கள் (மலை மேல்) ஏறிச் சென்றதை எண்ணிப் பாருங்கள்! உங்களுக்கு (வெற்றி) தவறியதற்காகவும், துன்பம் ஏற்பட்டதற்காகவும் நீங்கள் கவலைப்படாமலிருப்பதற்காக அதை விடப் பெருங்கவலையை அவன் உங்களுக்குப் பரிசளித்தான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். பின்னர் கவலைக்குப் பிறகு உங்களுக்கு மன அமைதியை ஏற்படுத்த சிறு தூக்கத்தைத் தந்தான்.

திருக்குர்ஆன் :3:153, 154

உங்களுக்கு வெற்றி தவறியதற்காகவும், துன்பம் ஏற்பட்டதற்காகவும் நீங்கள் கவலைப்படாமலிருப்பதற்காக அதை விடப் பெருங்கவலையை அவன் உங்களுக்குப் பரிசளித்தான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். பின்னர் கவலைக்குப் பிறகு உங்களுக்கு மன அமைதியை ஏற்படுத்த சிறு தூக்கத்தைத் தந்தான் என்ற வாசகம் சிந்திக்கத் தக்கது.

மனக் கவலையில் ஆழ்ந்திருப்பவர்களையும், மன நோய்க்கு ஆளானவர்களையும் குணப்படுத்த அதை விடப் பெரும் கவலையை அவர்களுக்கு கற்பனையாக ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு பெரும் கவலையை ஏற்படுத்தியவுடன் ஏற்கனவே இருந்த சிறிய கவலைகள் மறைந்து விடும். பெரும் கவலை மட்டுமே முழு உள்ளத்தையும் ஆக்ரமித்துக் கொள்ளும். கற்பனையாக ஏற்படுத்திய கவலையை கற்பனை எனப் புரிய வைத்தால் அனைத்துக் கவலைகளிலிருந்தும் அவர் விடுபடுவார்.

மனோதத்துவ நிபுணர்கள் கையாளும் இந்த வழிமுறையைக் காரண காரியத்துடன் குர்ஆனும் விளக்குகின்றது.

தூக்கத்தைக் கொடுத்தது மேலும் பயன் தந்ததாக இதைத் தொடர்ந்து திருக்குர்ஆன் கூறுகிறது.

பெரும் கவலையை ஏற்படுத்தி, தூக்கத்தையும் ஏற்படுத்தி பெரும் கவலையை நீக்கினால் எல்லா விதமான கவலைகளும் பறந்து போய் விடும்.

20ஆம் நூற்றாண்டில் மிகப் பெரிய ஆய்வுகளுக்குப் பின் கண்டறியப்பட்ட இந்த வழிமுறையை 14 நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் என்றால் நிச்சயம் இது இறைவன் புறத்திலிருந்து கிடைத்த செய்தியாகத் தான் இருக்க வேண்டும்.

29 வேதனைகளை உணரக் கூடிய நரம்புகள்

மறுமை நாள் எனும் நியாயத் தீர்ப்பு நாளில் தீயவர்கள் நரக நெருப்பினால் வேதனை செய்யப்படுவார்கள் என்று திருக்குர்ஆன் கூறுகிறது. இதைக் கூறும் போது நரகவாசிகளின் தோல்கள் கருகும் போது உடனே வேறு தோலை மாற்றுவோம் என்று இறைவன் கூறுகிறான். வேறு தோலை ஏன் மாற்ற வேண்டும் என்பதற்கான காரணத்தையும் அதைத் தொடர்ந்து இறைவன் குறிப்பிடுகிறான்.

நமது வசனங்களை மறுப்போரை நரகில் கருகச் செய்வோம். அவர்களின் தோல்கள் கருகும் போதெல்லாம் அவர்கள் வேதனையை உணர்வதற்காக வேறு தோல்களை அவர்களுக்கு மாற்றுவோம். அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்.

திருக்குர்ஆன் 4:56

வேதனைகளை உணரக் கூடிய நரம்புகள் மனிதனின் தோலில் தான் உள்ளன. தோல் கரிந்து விட்டால் எந்த வேதனையையும் மூளை உணராது என்பது சமீபத்திய கண்டு பிடிப்பு.

இதனால் தான் மேல் தோலை மட்டும் மரத்துப் போகச் செய்யும் ஊசிகளைப் போட்டு அறுவை சிகிச்சை செய்கின்றனர். முழு உடலையும் மரத்துப் போகச் செய்வதில்லை. அவ்வாறு மரத்துப் போகச் செய்தால் மனிதன் செத்து விடுவான்.

அது போல் தீக்காயத்தில் தோல் கருகிப் போனவர்கள் வேதனையால் துடிக்காமல் இருப்பதையும் காண்கிறோம். பதினான்கு நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த முஹம்மது நபிக்கு இது எப்படித் தெரியும்? அவர்களின் தோல் கருகும் போது அதை மாற்றுவோம் என்று கூறாமல் வேதனையை அவர்கள் உணர்வதற்காகவே மாற்றுவோம் என்று 14 நூற்றாண்டுகளுக்கு முன்னால் கூறுவதென்றால் மனிதனைப் படைத்த இறைவனால் தான் சாத்தியமாகும். திருக்குர்ஆன் இறைவனின் வேதம் என்பதற்கு இதுவும் வலுவான சான்றாக அமைந்துள்ளது.

வரலாறு தொடர்பான முன்னறிவிப்புகள்

30 பாதுகாக்கப்படும் திருக்குர்ஆன்

நாமே இந்த அறிவுரையை அருளினோம். நாமே இதைப் பாதுகாப்போம்.

திருக்குர்ஆன் 15:9

திருக்குர்ஆன் அருளப்பட்ட காலத்தில் வாழ்ந்த மக்களும், அதை ஏற்றுக் கொண்ட மக்களும் பெரும்பாலும் படிப்பறிவற்றவர்களாக இருந்தனர். மேலும் அந்தக் காலத்தில் எழுதி வைத்துக் கொள்ளக் கூடிய சாதனங்களாக மரப்பட்டைகளும், தோல்களுமே பயன்பட்டன.

இத்தகைய காலகட்டத்தில் 23 வருடங்களில் சிறிது சிறிதாக அருளப்பட்ட திருக்குர்ஆன் 14 நூற்றாண்டுகள் கடந்து விட்ட பிறகும் இன்றளவும் பாதுகாக்கப்பட்டு வருகிறது. எவ்வித மாறுதலுக்கும் இடம் தராமல் அருளப்பட்ட மூல மொழியிலேயே இவ்வேதம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஆனால் இவ்வேதம் அருளப்பட்ட காலத்திற்கு நம் மனக் குதிரையை ஓடவிட்டால் அந்த மக்களால் இந்தக் குர்ஆனைப் பாதுகாக்க முடியும் என்று நம்ப முடியாது. மிகவும் பலவீனமான நிலையிலும், எதிரிகளால் பல வகையான இன்னல்களுக்கு இலக்காக்கப்பட்ட நிலையிலும், படிப்பறிவற்ற நிலையிலும் உள்ள சமுதாயம் தமக்கு வழங்கப்படும் போதனையை எழுத்துப் பிசகாமல் பாதுகாக்கும் என்று யாராலும் எண்ணிப் பார்க்க முடியாது.

ஆனால் திருக்குர்ஆன் இவ்வசனத்தில் இதை நாமே அருளினோம், நாமே பாதுகாப்போம் என்று உத்தரவாதம் அளிக்கிறது. திருக்குர்ஆனுக்குப் பிறகு உருவாக்கப்பட்ட எத்தனையோ நூல்கள் இருந்த இடம் தெரியாமல் அழிந்து போன நிலையில் திருக்குர்ஆன் அருளப்பட்ட வடிவத்திலேயே பாதுகாக்கப்பட்டு வருவது இது இறைவனின் வேதம் என்பதற்குச் சான்றாக உள்ளது.

31 கஅபா பற்றி முன்னறிவிப்பு

உலகில் இறைவனை வணங்குவதற்காக முதன் முதலில் எழுப்பப்பட்ட ஆலயம் கஅபா. இந்த ஆலயம் மக்களின் அபய பூமியாகத் திகழும் எனத் திருக்குர்ஆன் கூறுகிறது.

அந்த ஆலயத்தை மக்களின் ஒன்று கூடுமிடமாகவும், பாதுகாப்பு மையமாகவும் நாம் அமைத்ததை நினைவூட்டுவீராக!

திருக்குர்ஆன் 2:125

அதில் தெளிவான சான்றுகளும் மகாமே இப்ராஹீமும் உள்ளன. அதில் நுழைந்தவர் அபயம் பெற்றவராவார். அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை. யாரேனும் (ஏக இறைவனை) மறுத்தால் அல்லாஹ் அகிலத்தாரை விட்டும் தேவையற்றவன்.

திருக்குர்ஆன் 3:97

இறைவா! இவ்வூரை அபயமளிக்கக் கூடியதாக ஆக்குவாயாக! என்னையும், என் பிள்ளைகளையும் சிலைகளை வணங்குவதை விட்டும் காப்பாயாக! என்று இப்ராஹீம் கூறியதை நினைவூட்டுவீராக!

திருக்குர்ஆன் 14:35

இவர்களைச் சுற்றியுள்ள மனிதர்கள் வாரிச் செல்லப்படும் நிலையில் (இவர்களுக்கு) அபயமளிக்கும் புனிதத் தலத்தை நாம் ஏற்படுத்தியிருப்பதை அவர்கள் கவனிக்கவில்லையா? வீணானதை நம்பி, அல்லாஹ்வின் அருளுக்கு நன்றி மறக்கிறார்களா?

திருக்குர்ஆன் 29:67

அபயமளிக்கும் இவ்வூர் மீதும் சத்தியமாக!

திருக்குர்ஆன் 95:3

கஅபா, அபய பூமி என அறிவிக்கப்பட்டு 14 நூற்றாண்டுகளைக் கடந்த பின்பும், எத்தனையோ ஆட்சி மாற்றங்கள் நடந்த பின்பும் அது இன்றளவும் அபய பூமியாகவே அமைந்துள்ளது. 14 நூற்றாண்டுகளாக எந்தத் தாக்குதலுக்கும் உள்ளாகாத வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலயமாகவும் அது இருந்து வருகிறது.

திருக்குர்ஆன் கூறியவாறு அது அபய பூமியாகவே நீடித்து வருவது திருக்குர்ஆன் இறைவனின் வார்த்தைகள் தாம் என்பதற்குச் சான்றாக அமைந்துள்ளது.

சில சந்தர்ப்பங்களில் கஅபா ஆலயத்துக்குள் விஷமிகள் புகுந்து ஆயுதத் தாக்குதல் நடத்தியுள்ளனர். இது அபயபூமி என்பதற்கு எதிராக உள்ளதே என்று கேட்கலாம்.

அபய பூமியாக இருப்பதால் சிலர் தமக்குள் சண்டை போட மாட்டார்கள் என்று பொருளல்ல. ஆயுதம் தரித்து சிலர் புரட்சி செய்ய மாட்டார்கள் என்பதும் இதன் பொருளல்ல. அப்படி முயற்சிப்பவர்கள் முறியடிக்கப்படுவார்கள் என்பது தான் இதன் பொருள்.

அவர்களின் கைகள் ஓங்கி மக்காவின் புனிதத்தை மறுப்பவர்களின் கைகளுக்கு மக்கா நகரம் செல்லாது என்பது இதன் பொருளாகும்.

அகிலத்தையே கட்டி ஆண்ட பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இந்தப் பூமிக்கு அருகில் உள்ள பகுதிகளை எல்லாம் தன் கைவசத்தில் கொண்டு வந்த காலத்தில் கூட மக்காவை அவர்களால் நெருங்க முடியவில்லை. சிலுவைப் போர் என்ற பெயரில் இஸ்லாம் மதத்துக்கு எதிராக நடத்தப்பட்ட போர்களிலும் கூட மக்காவைக் கையகப்படுத்துவது தான் கிறித்தவர்களின் மெய்யான வெற்றி என்ற நிலையிலும் மக்காவை நெருங்க முடியவில்லை.

எனவே மக்கா அபயபூமியாகவே அன்றும் இன்றும் நீடித்து வருகிறது என்பதில் ஐயம் இல்லை.

திருக்குர்ஆன் இறைவேதமே என்பதற்கான சான்றுகளில் ஒன்றாக இவ்வசனங்கள் அமைந்துள்ளன.

மக்கா நகரம், நபிகள் நாயகம் காலத்திலும், அதற்கு முன்னரும் எவ்விதக் கனி வர்க்கமும் முளைக்காத பாலைவனப் பெருவெளியாக இருந்தது.

இந்த பாலைவனப் பெருவெளிக்கு உலகத்தின் பல பாகங்களிலிருந்து கனிகள் கொண்டு வரப்படும் எனத் திருக்குர்ஆன் முன்னறிப்பு செய்கிறது.

நாங்கள் உம்முடன் சேர்ந்து நேர்வழியைப் பின்பற்றினால் எங்களின் பூமியிலிருந்து வாரிச் செல்லப்பட்டு விடுவோம் என்று அவர்கள் கூறுகின்றனர். அபயம் அளிக்கும் புனிதத் தலத்தை அவர்களுக்காக வசிப்பிடமாக நாம் ஆக்கவில்லையா? ஒவ்வொரு கனி வர்க்கமும் நம்மிடமிருந்து உணவாக அதை நோக்கிக் கொண்டு வரப்படுகிறது. எனினும் அவர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்.

திருக்குர்ஆன் 28:57

இந்த முன்னறிவிப்பு நிறைவேறியதை ஹஜ்ஜுக்குச் செல்லும் ஒவ்வொருவரும் கண்கூடாகக் காண முடியும்.

உலகத்தில் உள்ள எல்லா விதமான கனி வகைகளும் அந்த மக்களை நோக்கிக் கொண்டு செல்லப்படுகின்ற காட்சியை உலகம் இன்றைக்கும் பார்த்துக் கொண்டிருக்கிறது. திருக்குர்ஆன் இறை வேதம் என்ற சான்றுகளில் இதுவும் ஒன்றாகும்.

32 மனிதர்களால் நபிகள் நாயகத்தைக் கொல்ல முடியாது

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உலகத் தலைவர்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட தலைவராகத் திகழ்ந்தார்கள்.

பல்லாயிரம் ஆண்டுகள் மக்களிடம் ஊறித் திளைத்த மூட நம்பிக்கைகளைத் தாட்சண்யமில்லாமல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எதிர்த்தார்கள்.

கடவுளின் பெயராலும், மதத்தின் பெயராலும் சுரண்டிக் கொழுத்தவர்களையும் ஆள் பலம், பண பலம் காரணமாக பலவீனர்களுக்குக் கொடுமை செய்த வலிமை மிக்க தலைவர்களையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மூர்க்கமாக எதிர்த்தார்கள்.

அனைத்து விதமான தீமைகளையும் எதிர்த்து வீரியத்துடன் பிரச்சாரம் செய்ததால் அதிகமான எதிரிகளையும் சம்பாதித்து வைத்திருந்தார்கள்.

இவரைக் கொன்றொழித்தால் தான் நமக்கு நல்லது என்று தீயவர்கள் பல சந்தர்ப்பங்களில் திட்டமிடும் அளவுக்கு அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருந்து வந்தது. இதன் காரணமாகவே மக்காவில் இரகசியமாகப் பிரச்சாரம் செய்து வந்தனர். எதிரிகள் அனைவரும் கூட்டுச் சேர்ந்து கொலை செய்யத் திட்டம் தீட்டியதை அறிந்து சொந்த ஊரை விட்டு வெளியேறி மதீனாவுக்கு அடைக்கலம் தேடிச் சென்றார்கள்.

மதீனா சென்ற பிறகு அவர்களின் ஆதரவுத் தளம் விரிவடைந்தாலும் அங்கேயும் அவர்களுக்கு எதிரிகள் இருந்தனர். நல்லவர்களைப் போல் நடித்து திட்டம் தீட்டியவர்கள் மதீனாவில் இருந்தனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (எதிரிகள் பற்றிய அச்சம் காரணமாக) தூக்கமில்லாதவர்களாக இருந்தனர். மதீனாவுக்கு வந்த போது இரவில் என்னைப் பாதுகாக்கும் நல்லவர் ஒருவர் இல்லையா? என்று கூறினார்கள். அப்போது ஆயுதத்தின் சப்தத்தை நாங்கள் கேட்டோம். யாரது? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டனர். நான் தான் ஸஅது பின் அபீ வக்காஸ்; உங்களுக்குப் பாதுகாப்பு கொடுக்க வந்துள்ளேன் என்று ஆயுதத்திற்கு உரியவர் கூறினார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உறங்கினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நுல் : புகாரி 2885,7231

இரவில் உறக்கம் வராத அளவுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எதிரிகள் பற்றி அச்சம் இருந்தது என்பதை இதிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம்.

பத்ருப் போர், உஹதுப் போர், அகழ்ப் போர், கைபர் போர், ஹூனைன் போர் வரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அப்பாஸ் (ரலி) உள்ளிட்ட மெய்க்காப்பாளர்கள் இருந்தனர்.

இந்த நிலையில் தான் பின்வரும் வசனத்தை அல்லாஹ் அருளினான்.

தூதரே! உமது இறைவனிடமிருந்து உமக்கு அருளப்பட்டதை எடுத்துச் சொல்வீராக! (இதைச்) செய்யவில்லையானால் அவனது தூதை நீர் எடுத்துச் சொன்னவராக மாட்டீர்! அல்லாஹ் உம்மை மனிதர்களிடமிருந்து காப்பாற்றுவான். (தன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் வழிகாட்ட மாட்டான்.

திருக்குர்ஆன் 5.67

சத்திய மார்க்கத்தை அச்சமின்றி எடுத்துச் சொல்லுமாறும், எடுத்துச் சொல்வதால் எதிரிகளால் எந்த ஆபத்தும் நேராமல் காப்பது தன் கடமை என்றும் இறைவன் இவ்வசனத்தில் அறிவிக்கிறான்.

இறைவன் இவ்வாறு அறிவித்ததாக ஒருவர் கூறினால் அதன் விளைவு என்ன? இறைவனே பாதுகாப்பதாகக் கூறுவதால் இனி மேல் அவருக்குப் பாதுகாப்பு தேவையில்லை என்பது பொருள். மேலும் தன்னை எவராலும் கொல்ல முடியாது என்று அறைகூவல் விடுகிறார் என்பதும் பொருள்.

இந்த உத்தரவாதம் இறைவனிடமிருந்து வந்திருக்காவிட்டால் இப்படி அறிவித்த காரணத்துக்காகவே எதிரிகள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கொலை செய்து அவர்கள் இறைத்தூதர் அல்ல என்று நிரூபித்திருப்பார்கள்.

நபிகள் நாயகம் (ஸல் அவர்களின் அன்றாட நடவடிக்கைகளையும், வாழ்க்கை முறைகளையும் ஒருவர் ஆராய்ந்தால் உலகிலேயே மிகவும் எளிதாகக் கொல்லப்பட முடியும் என்ற நிலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இருந்தார்கள் என்பதை அறிந்து கொள்வார்.

நபிகள் நாயகம் (ஸல் அவர்கள் குடிசையில் தான் வசித்தார்கள். அந்தக் குடிசைக்கு தாழிடப்படும் வசதியான கதவுகள் கூட இருக்கவில்லை. யார் வேண்டுமானாலும் பட்டப்பகலிலோ, நள்ளிரவிலோ வீட்டுக்குள் புகுந்து அவர்களைக் கொல்ல முடியும் என்ற அளவுக்குப் பலவீனமான நிலையில் இருந்தார்கள்.

மேலும் தினசரி ஐந்து நேரமும் பள்ளிவாசலில் வந்து தொழுகை நடத்தி வந்தார்கள். தினமும் குறிப்பிட்ட ஐந்து நேரத்தில் மக்களால் சந்திக்கப்படும் நிலையில் உள்ள ஒருவரைத் தக்க தருணம் பார்த்துக் கொல்வதாக இருந்தால் கொன்று விட முடியும்.

மேலும் வெளிப்படையாக ஒருவர் இஸ்லாத்தை ஏற்பதாகக் கூறினால் அவரைப் பற்றி எதையும் விசாரிக்காமல் அவரது வாக்குமூலத்தை நம்பி முஸ்லிம்கள் பட்டியலில் அவரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இணைத்துக் கொள்வார்கள்.

உள்ளங்களில் உள்ளதை அல்லாஹ் மட்டுமே அறிவான். நம்மால் வெளிப்படையானதை மட்டும் தான் அறிய முடியும் என்பதைக் கொள்கையாகவே கொண்டிருந்தனர். பள்ளிவாசலுக்கு வரும் யாரும் எந்தச் சோதனைக்கும் உட்படுத்தப்பட மாட்டார்கள்.

இதனால் தான் முஸ்லிம்களாக இல்லாமல் முஸ்லிம்களாக நடித்த நயவஞ்சகர்கள் பள்ளிவாசலில் வந்து தொழுவதாக நடித்து வந்தனர். அவர்களில் ஒருவர் கூட தடுக்கப்படவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கொல்ல நினைக்கும் ஒருவர் அவர் யாரென்றே அறியப்படாதவராக இருந்தாலும் சாதாரணமாகப் பள்ளிவாசலுக்குள் நுழையலாம். யாரும் கேட்டால் நானும் முஸ்லிம் தான் என்று கூறினால் உள்ளே நுழைய அதுவே போதுமானதாக இருந்தது.

அரண்மனையிலும், கோட்டைகளிலும் வாழாமல் எந்த மனிதரும் எப்போது வேண்டுமானாலும் சந்திக்கலாம் என்ற நிலையில் அவர்கள் வாழ்ந்திருந்தும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை எவரும் கொல்ல முடியாது என்று இறைவன் அறிவித்தான்.

கொல்லப்படுவதற்கான வழிகளைத் திறந்து வைத்து விட்டு அனைத்து தீமைகளையும் எதிர்த்ததன் மூலம் எதிரிகளின் எண்ணிக்கையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதிகப்படுத்திக் கொண்டு இருந்தும் அவர்களை யாராலும் கொல்ல முடியாது என்று இறைவன் அறிவித்தான். இறைவன் அறிவித்தபடியே இயற்கையான முறையில் தமது 63வது வயதில் அவர்கள் மரணம் அடைந்தார்கள்.

34 நுஹ் நபியின் கப்பல்

நுஹ் நபி அவர்கள் முக்கியத்துவத்துடன் குர்ஆனில் குறிப்பிடப்படும் இறைத் தூதர்களில் ஒருவராக இருந்தார்கள்.

950 ஆண்டுகள் வாழ்ந்த இவர்களின் பிரச்சாரத்தை சொற்பமானவர்களே ஏற்றனர். பெரும் பகுதி மக்கள் அவர்களை நம்ப மறுத்தனர். சொல்லவொண்ணாத துன்பங்களையும் கொடுத்தனர்.

இறுதியாக இறைவனிடம் நுஹ் நபி அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள். இனிமேல் இவர்கள் திருத்த மாட்டார்கள். இவர்களை அழித்து விடு என்று அவர்கள் பிரார்த்தனை செய்ததால் இறைவன் ஒரு கப்பலைச் செய்யுமாறு கட்டளையிட்டான்.

கப்பல் செய்து முடித்ததும் நம்பிக்கை கொண்டவர்களைக் கப்பலில் ஏற்றிக் கொள்ளுமாறும் ஒவ்வொரு உயிரினங்களில் ஒரு ஜோடியை ஏற்றிக் கொள்ளுமாறும் இறைவன் கட்டளையிட்டான்.

இதன் பின்னர் பயங்கரமான வெள்ளப் பிரளயம் ஏற்பட்டது. வானத்திலிருந்து மழை கொட்டியது. பெரிய மலைகளே மூழ்கும் அளவுக்கு வெள்ளத்தின் கடுமை இருந்தது. கப்பல் ஏறிக் கொண்ட நன்மக்கள் காப்பாற்றப்பட்டனர். ஏற்காத மக்கள் முழுவதுமாக அழிக்கப்பட்டனர்.

வெள்ளம் வடியத் தொடங்கியவுடன் இந்தக் கப்பல் ஜுதி எனும் மலை மீது இறங்கியது. இது பற்றி திருக்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது.

பூமியே! உனது தண்ணீரை நீ உறிஞ்சிக் கொள்! வானமே நீ நிறுத்து! என்று (இறைவனால்) கூறப்பட்டது. தண்ணீர் வற்றியது. காரியம் முடிக்கப்பட்டது. அந்தக் கப்பல் ஜூதி மலை மீது அமர்ந்தது. அநீதி இழைத்த கூட்டத்தினர் (இறையருளை விட்டும்) தூரமாயினர் எனவும் கூறப்பட்டது.

திருக்குர்ஆன் 11:44

நூஹை அவரது சமுதாயத்திடம் அனுப்பினோம். அவர்களுடன் ஆயிரம் ஆண்டுகளுக்கு ஐம்பது ஆண்டுகள் குறைவாக வசித்தார். அவர்கள் அநீதி இழைத்த நிலையில் அவர்களைப் பெரு வெள்ளம் பிடித்துக் கொண்டது. அவரையும், கப்பலில் இருந்தோரையும் காப்பாற்றினோம். இதை அகிலத்தாருக்குச் சான்றாக்கினோம்.

திருக்குர்ஆன் 29:14.15

நான் தோற்கடிக்கப்பட்டு விட்டேன்; எனவே நீ உதவி செய்வாயாக! என்று அவர் தமது இறைவனிடம் பிரார்த்தித்தார். அப்போது வானத்தின் வாசல்களைக் கொட்டும் நீரால் திறந்து விட்டோம். பூமியில் ஊற்றுகளைப் பீறிட்டு ஓடச் செய்தோம். ஏற்கனவே திட்டமிட்டபடி தண்ணீர் இணைந்தது. பலகைகள் மற்றும் ஆணிகள் உடைய (கப்பல்) ஒன்றில் அவரை ஏற்றினோம். அது நமது கண்காணிப்பில் ஓடியது. இது (தன் சமுதாயத்தால்) மறுக்கப்பட்டவருக்கு (நூஹுக்கு) உரிய கூலி. அதைச் சான்றாக விட்டு வைத்தோம். படிப்பினை பெறுவோர் உண்டா? எனது வேதனையும், எனது எச்சரிக்கைகளும் எவ்வாறு இருந்தன? இக்குர்ஆனை விளங்குவதற்கு எளிதாக்கியுள்ளோம். படிப்பினை பெறுவோர் உண்டா?

திருக்குர்ஆன் 54:10-17

மலை போன்ற உயரத்திற்கு வெள்ளம் வந்ததால் ஜூதி மலைக்கு மேல் கப்பல் நிலைகொண்டது. இம்மலை துருக்கி நாட்டின் எல்லையில் அமைந்துள்ளது. இதன் உயரம் 16 ஆயிரம் அடியாகும். துருக்கியில் உள்ள அராராத் மலை (ஜுதி மலை) மீது பணிகளுக்கிடையில் கப்பல் ஒன்று புதைந்து கிடப்பதை அமெரிக்க ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.

இவ்வளவு பெரிய கப்பல் மலையின் மீது அமர வேண்டுமானால் அந்த அளவுக்குப் பெருவெள்ளம் ஏற்பட்டால் தான் சாத்தியம். இந்தக் கப்பலை அத்தாட்சியாக விட்டு வைத்தோம் என்று இறைவன் கூறுவது நிறைவேறி திருக்குர்ஆன் இறைவனின் வார்த்தை தான் என்பதைச் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கிறது.

35 இஸ்லாமிய ஆட்சி உருவாகும் என்ற முன்னறிவிப்பு

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில் மிகவும் சிரமத்திற்குரிய நிலையிலும், பலவீனமான நிலையிலும் இருந்த போது பின்வரும் வசனம் அருளப்பட்டது. இறைவனை எவ்வாறு தொழ வேண்டும் என்பதை விளக்குவதற்காக இவ்வசனம் அருளப்பட்டாலும் இதில் ஒரு முன்னறிவிப்பும் அடங்கியுள்ளது.

(முஹம்மதே!) நீரும், உம்முடன் உள்ள ஒரு தொகையினரும் இரவில் மூன்றில் இரு பகுதிக்கு நெருக்கமாகவும், இரவில் பாதியும், இரவில் மூன்றில் ஒரு பகுதியும் நின்று வணங்குகின்றீர்கள் என்பதை உமது இறைவன் அறிவான். அல்லாஹ்வே இரவையும், பகலையும் அளவுடன் அமைத்துள்ளான். நீங்கள் அதைச் சரியாகக் கணிக்க மாட்டீர்கள் என்பதையும் அவன் அறிவான். எனவே அவன் உங்களை மன்னித்தான். ஆகவே குர்ஆனில் உங்களுக்கு இயன்றதை ஓதுங்கள். உங்களில் நோயாளிகளும், அல்லாஹ்வின் அருளைத் தேடி பூமியில் பயணம் செய்வோரும், அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோரும் உருவாவார்கள் என்பதை அவன் அறிந்து வைத்துள்ளான். எனவே அதில் உங்களுக்கு இயன்றதை ஓதுங்கள்! தொழுகையை நிலைநாட்டுங்கள்! ஸகாத் கொடுங்கள்! அல்லாஹ்வுக்கு அழகிய கடன் கொடுங்கள்! உங்களுக்காக நீங்கள் முற்படுத்தும் நன்மையை அல்லாஹ்விடம் பெற்றுக் கொள்வீர்கள். அதுவே சிறந்தது. மகத்தான கூலி. அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுங்கள்! அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

திருக்குர்ஆன் 73:20

பாதி இரவோ, மூன்றில் ஒரு பகுதி இரவோ தொழுதால் போதும் என்று அல்லாஹ் கூறுகிறான்.

இப்படிக் கூறும் போது உங்களில் நோயாளிகளும், அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோரும் இனி மேல் உருவாவார்கள் என்பதை அல்லாஹ் அறிந்து வைத்திருக்கிறான் எனக் கூறுகிறான்.

நோயாளிகள் உருவாவதை யாரும் சொல்லி விட முடியும். முஸ்லிம்களாக வாழ்வதே சிரமமாக இருக்கும் நிலையில் இந்தச் சமுதாயத்தில் அல்லாஹ்வின் பாதையில் போரிடுபவர்கள் உருவாவார்கள் என்று இவ்வசனம் கூறுகிறது.

அல்லாஹ்வின் பாதையில் போரிடுவது என்றால் ஒரு ஆட்சியை அமைத்து படை திரட்டிக் கொண்டு போர் புரிவதைக் குறிக்கும்.

இப்படி போர் புரியக் கூடியவர்கள் உருவாவார்கள் என்பதை அன்றைய சூழ்நிலையில் கணிக்கவே முடியாது. ஆனாலும் இறைவன் கூறியவாறு மிகச் சில வருடங்களிலேயே நபிகள் நாயகம் (ஸல்) தலைமையில் ஒரு ஆட்சி உருவானது. இதனால் அல்லாஹ்வின் பாதையில் போரிடக் கூடியவர்கள் உருவானார்கள்.

திருக்குர்ஆன் இறைவனின் வேதம் என்பதற்குரிய மற்றொரு சான்றாக இந்த முன்னறிவிப்பு அமைந்துள்ளது.

36 மக்காவை நபிகள் நாயகம் (ஸல்) வெற்றி கொள்வார்கள் என்ற முன்னறிவிப்பு

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது நாற்பதாம் வயதில் தம்மை இறைத்தூதர் என்று அறிவித்தது முதல் பதிமூன்று ஆண்டு காலம் சொந்த ஊரான மக்காவில் பலவிதமான எதிர்ப்புகளைச் சந்தித்தார்கள். சமூகப் புறக்கணிப்பு உள்ளிட்ட கொடுமைகளைத் தாங்கினார்கள்.

அவர்களையும், அவர்களை ஏற்றுக் கொண்ட தோழர்களையும் அவர்களின் எதிரிகள் சொல்லொண்ணாத இன்னல்களுக்கு உட்படுத்தினார்கள்.

சொந்த ஊரில் இனிமேல் வாழவே முடியாது என்ற அளவுக்குக் கொடுமைகள் எல்லை மீறிய போது தமது தோழர்களில் ஒரு பகுதியினரை அபீஸீனியா நாட்டுக்கு அகதிகளாக அனுப்பி வைத்தார்கள்.

தாமும், தமது நெருக்கமான தோழர்கள் சிலரும் சொந்த ஊரில் இருந்து கொண்டு துன்பங்களைத் தாங்கிக் கொண்டு இஸ்லாத்தைப் பிரச்சாரம் செய்தனர்.

நபிகள் நாயகத்தையே கொன்று விட எதிரிகள் திட்டம் தீட்டிய போது உயிரைக் காப்பாற்றிக் கொண்டு இரவோடு இரவாக மதீனாவுக்குச் சென்றார்கள்.

இந்த ஊரில் இனிமேல் வாழவே முடியாது என்ற நிலையில் ஊரை விட்டுப் புறப்பட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின்வரும் உறுதி மொழியை இறைவன் வழங்கினான்.

(முஹம்மதே!) உமக்கு இந்தக் குர்ஆனை விதித்தவன் உம்மை வந்த இடத்திலேயே மீண்டும் சேர்ப்பவன். நேர்வழியைக் கொண்டு வந்தவன் யார்? தெளிவான வழிகேட்டில் உள்ளவன் யார்? என்பதை என் இறைவன் நன்கறிந்தவன் என்று கூறுவீராக!

திருக்குர்ஆன் 28:85

இதன் பொருள் என்ன? எந்த ஊரிலிருந்து விரட்டியடித்தார்களோ அதே ஊருக்குள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நுழைவார்கள் என்பது தான் இதன் பொருள்.

ஒரு மனிதன் தோல்வியடையும் போது இறுதி வெற்றி எனக்குத் தான் என்று கூறுவதைப் பார்க்கிறோம். தோல்வியடையும் நாட்டின் தலைவன் மீண்டும் வெல்வேன் என்று கூறுவது சகஜமான ஒன்று தான்.

ஊரை விட்டு விரட்டப்பட்ட எத்தனையோ பேர் இதே ஊருக்கு மீண்டும் வருவேன் என்று கூறியிருக்கிறார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறியதில் என்ன ஆச்சரியம் உள்ளது? என்று சிலருக்குத் தோன்றலாம்.

தோற்றவர்கள் கூறுவது போல் சில வேளை நடக்கலாம். சில வேளை நடக்காமலும் போகலாம். அவர்கள் கூறியவாறு நடந்தால் அவர்கள் பெருமைப்பட்டுக் கொள்வார்கள். அவர்கள் கூறியவாறு நடக்காவிட்டால் நான் மனிதன் தானே? ஏதோ ஒரு நம்பிக்கையில் அப்படிக் கூறி விட்டேன் எனக் கூறிச் சமாளிப்பார்கள். இதை மக்களும் ஏற்றுக் கொள்வார்கள்.

ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நான் மீண்டும் மக்கா வருவேன் என்று கூறவில்லை. மாறாக உம்மை உமது இறைவன் மீண்டும் மக்காவுக்குக் கொண்டு வந்து சேர்ப்பான் என்று இறைவனே தன்னிடம் கூறினான் என்பது தான் நபிகள் நாயகத்தின் முன்னறிவிப்பு. அதாவது என்னை மக்காவுக்குள் மீண்டும் கொண்டு வருவதாக இறைவன் எனக்கு உத்தரவாதம் தந்துள்ளான் என்ற பொருள்படும் வகையில் அவர்களின் முன்னறிவிப்பு அமைந்துள்ளது.

இறைவனே இவ்வாறு கூறியதாக அறிவிப்பதென்றால் அது நிச்சயம் நிறைவேற வேண்டும். அவ்வாறு நிறைவேறாவிட்டால் அது இறைவன் கூறியதல்ல; முஹம்மது கற்பனை செய்து கூறியது என்று ஆகிவிடும். இதனால் முஹம்மது இறைத்தூதர் அல்ல என்பதும் வெளிச்சமாகிவிடும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிரச்சாரம் செய்த மார்க்கமே பொய் என்றும் ஆகி விடும்.

ஆம் மக்காவிலிருந்து விரட்டப்பட்டு ஆறு ஆண்டுகளில் எவ்வித எதிர்ப்புமின்றி கத்தியின்றி இரத்தமின்றி மக்காவுக்குள் வெற்றி வீரராக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நுழைந்தார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இறைவன் அளித்த உத்தரவாதம் முழுமையாக நிறைவேறியது. திருக்குர்ஆன் இறைவனின் வார்த்தை என்பதும் நிருபணமாகிறது.

37 பத்ருப் போர் வெற்றி பற்றிய முன்னறிவிப்பு

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவிற்குச் சென்ற பின் ஒரு ஆட்சியை நிறுவினார்கள். அவ்வாறு நிறுவிய பின் முஸ்லிம்களின் எதிரி நாட்டவரான மக்காவாசிகள் தமது வியாபாரப் பயணத்தை மதீனா வழியாக மேற்கொண்டு வந்தனர்.

எனவே தமது நாட்டுக்குள் சட்ட விரோதமாகப் புகுந்து பயணம் செய்யும் எதிரிகளைத் தடுத்து நிறுத்திட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திட்டமிட்டார்கள். இந்த நிலையில் மக்காவின் முக்கியப் பிரமுகர் அபூஸுஃப்யான் தலைமையில் ஒரு வணிகக் கூட்டம் இஸ்லாமிய நாட்டு எல்லையில் புகுந்து செல்லும் தகவல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் கிடைத்தது.

அவர்களை வழிமறித்து அவர்களின் பொருட்களைப் பறிமுதல் செய்ய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் படையுடன் புறப்பட்டனர். இச்செய்தி மக்காவில் உள்ள தலைவர்களுக்குக் கிடைத்து, அவர்கள் தமது வணிகக் கூட்டத்தைக் காப்பாற்றும் நோக்கில் படைதிரட்டி வந்தனர்.

வணிகக் கூட்டத்தை வழிமறிப்பதா? அல்லது போருக்குப் புறப்பட்டு வரும் கூட்டத்துடன் மோதுவதா? என்ற சிக்கல் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டது. இரண்டில் முஸ்லிம்கள் எதைத் தேர்வு செய்தாலும் அதில் வெற்றி என்று இறைவன் புறத்திலிருந்து வாக்களிக்கப்பட்டது.

எதிரிகளின் இரண்டு கூட்டத்தினரில் ஒன்று உங்களுக்கு (சாதகமாக இருக்கும்) என்று அல்லாஹ் உங்களுக்கு வாக்களித்ததை எண்ணிப் பாருங்கள்! ஆயுதம் தரிக்காத (வியாபாரக்) கூட்டம் உங்களுக்கு வேண்டும் என்று நீங்கள் விரும்புகின்றீர்கள். அல்லாஹ் தனது கட்டளைகள் மூலம் உண்மையை நிலை நாட்டவும், (தன்னை) மறுப்போரை வேரறுக்கவும் விரும்புகிறான்.

திருக்குர்ஆன் 8:7

முஸ்லிம்களின் படை பலம் சுமார் 300 ஆக இருக்கையில் எதிரிப்படையினர் சுமார் 1000 நபர்கள் இருந்தனர். இந்த விபரம் முஸ்லிம் 1763 வது ஹதீஸில் கூறப்பட்டுள்ளது.

பலவீனமான நிலையில் இருந்த முஸ்லிம்கள் வெற்றி பெறுவார்கள் என்று மேற்கண்ட வசனத்தில் இறைவன் முன்னறிவிப்புச் செய்தது போலவே போர் நடப்பதற்குச் சற்று முன்னர் மீண்டும் வெற்றியை உறுதி செய்து பின் வரும் வசனத்தை இறைவன் அருளினான்.

இக்கூட்டம் தோற்கடிக்கப்படும். புறங்காட்டி ஓடுவார்கள்.

திருக்குர்ஆன் 54:45

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூடாரத்தில் இருந்து கொண்டு இறைவா! நீ அளித்த வாக்குறுதியை நீ நிறைவேற்றக் கோருகிறேன். இறைவா நீ நாடினால் இன்றைய தினத்துக்குப் பின் உன்னை வணங்க யாரும் இருக்க மாட்டார்கள் என்று பிரார்த்தனை செய்தார்கள். உடனே அபூபக்கர் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கையைப் பிடித்துக் கொண்டு அல்லாஹ்வின் தூதரே போதும்; உங்கள் இறைவனிடம் கெஞ்ச வேண்டிய அளவு கெஞ்சிவிட்டீர்கள் எனக் கூறினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கவசத்தை அணிந்து கொண்டு இக்கூட்டம் தோற்கடிக்கப்படும். புறங்காட்டி ஓடுவார்கள் என்ற வசனத்தை ஓதிக் கொண்டே வெளியே வந்தார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பஸ் (ரலி)

நூல் : புகாரி 2915, 3953, 4875, 4877

இயந்திரங்களும், வெடி மருந்துகளும் போர்க் கருவிகளாக பயன்படுத்தாத காலத்தில் எண்ணிக்கை பலத்தைக் கொண்டு மட்டுமே வெற்றி பெற முடியும். எதிரியின் பலத்துடன் ஒப்பிடும் போது முஸ்லிம்களை விட எதிரிகள் மூன்று மடங்கு அதிகமாக இருந்தும் இறைவன் வாக்களித்த படி முஸ்லிம்கள் மகத்தான வெற்றி பெற்றார்கள்.

குர்ஆன் இறைவனின் வேதம் என்பதும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்பதும் இந்த முன்னறிவிப்பு நிறைவேறியதன் மூலம் நிரூபனமானது.

38 அபூலஹப் குறித்த முன்னறிவிப்பு

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைத்தூதராக நியமிக்கப்பட்ட பின் மக்களுக்குப் பிரச்சாரம் செய்யும் எந்தக் கட்டளையும் அவர்களுக்கு வரவில்லை.

உமது நெருங்கிய உறவினர்களுக்கு எச்சரிக்கை செய்வீராக (26.214) என்பது தான் பிரச்சாரம் செய்வது பற்றிய முதல் கட்டளையாக இருந்தது. இந்தக் கட்டளையை ஏற்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது குடும்பத்தினரையும், உறவினரையும் அழைத்து அவர்களிடம் பிரச்சாரத்தைத் துவக்கினார்கள்.

உமது நெருங்கிய உறவினரை எச்சரிப்பீராக (26.214) என்ற வசனம் அருளப்பட்ட பின் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸஃபா எனும் குன்றின் மேல் ஏறினார்கள். குறைஷ்களின் உட்கிளைகளான பனூ ஃபஹ்ர், பனூ அதீ ஆகியோரை அழைத்தார்கள். அனைவரும் அங்கே குழுமினார்கள். வர முடியாதவர், என்ன நடக்கிறது என்பதைக் கவனிக்க தன் பிரதிநிதி ஒருவரை அனுப்பினார். (நபிகள் நாயகத்தின் பெரிய தந்தை) அபூலஹபும், குறைஷ்களும் வந்தனர். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்தப் பள்ளத்தாக்கிலிருந்து குதிரைப் படை ஒன்று உங்களைத் தாக்க வந்து கொண்டிருக்கிறது என்று நான் கூறினால் என்னை நம்புவீர்களா? என்று கேட்டார்கள். அதற்கவர்கள் ஆம் நீங்கள் உண்மையைத் தவிர வேறு எதையும் பேசியதாக நாங்கள் கண்டதில்லை என்று கூறினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடுமையான வேதனை பற்றி நான் உங்களை எச்சரிக்கிறேன் என்று கூறினார்கள். இதைக் கேட்டதும் அபூலஹப் என்றென்றும் உனக்கு நாசம் உண்டாகட்டும்; இதற்காகத்தானா எங்களை ஒன்று கூட்டினாய்? என்று கேட்டான். அப்போது அபூலஹபின் இரு கைகளும் அழிந்தன. அவனும் அழிந்தான். அவனது செல்வமும், அவன் சம்பாதித்தவையும் அவனைக் காப்பாற்றவில்லை என்ற வசனம் இறங்கியது.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

நூல் : புகாரி 4770

இந்த நிகழ்ச்சி 1394, 4801, 4971, 4972, 4973 ஆகிய எண்களைக் கொண்ட ஹதீஸாகவும் புகாரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் சுட்டிக்காட்டப்படும் அத்தியாயம் இதுதான்:

அபூலஹபுடைய இரு கைகளும் அழிந்தன. அவனும் அழிந்தான். அவனது செல்வமும், அவன் செய்தவையும் அவனைக் காக்கவில்லை. கொளுந்து விட்டெரியும் நெருப்பில் அவனும் விறகு சுமக்கும் அவனது மனைவியும் கருகுவார்கள். அவள் கழுத்தில் முறுக்கேறிய ஈச்சமரக் கயிறு உள்ளது.

திருக்குர்ஆன் 111 வது அத்தியாயம்

நபிகள் நாயகத்தின் பெரிய தந்தையான அபூலஹப் நபிகள் நாயகத்தின் மீது அதிக அன்பு வைத்திருந்தான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பாட்டனார் இறந்த பின் நபிகள் நாயகத்தைத் தன் பொறுப்பில் வளர்க்க ஆசைப்பட்டான். ஒரே இறைவனைத் தான் வணங்க வேண்டும்; சிலைகளையோ, வேறு எதனையுமோ வணங்கக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிரச்சாரம் செய்த போது அதை அவனால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இரத்தத்தில் ஊறிப் போன கொள்கையை தன் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரே குழி தோண்டிப் புதைக்க புறப்பட்டு வந்து விட்டாரே என்று எண்ணியதால் அவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

இதன் காரணமாகவே தனது தம்பி மகன் என்று பாராமல் நபிகள் நாயகத்தைச் சபித்தான். இதற்குப் பதிலடியாகத் தான் மேற்கண்ட அத்தியாயம் அருளப்பட்டது.

இது ஒரு வரலாற்று நிகழ்ச்சியானாலும் இதில் முக்கியமான முன்னறிவிப்பும் அடங்கியுள்ளது. இஸ்லாம் உண்மையான மார்க்கம் என்பதற்கு அசைக்க முடியாத சான்றுகளில் ஒன்றாகவும் இது அமைந்துள்ளது.

கேரிமில்லர் என்ற கிறித்தவப் பாதிரியார் இந்த அத்தியாயத்தை ஆய்வு செய்து விட்டு இஸ்லாத்தை ஏற்றார். அத்தகைய அற்புதமான முன்னறிவிப்பு இது.

அபூலஹபும், அவனது மனைவியும் நாசமாவார்கள் என்றும் இருவரும் நரகத்தில் நுழைவார்கள் என்றும் இதில் கூறப்பட்டுள்ளது. இஸ்லாமிய நம்பிக்கையின் படி இதன் கருத்து என்னவென்றால் அவ்விருவரும் இஸ்லாத்தை ஏற்க மாட்டார்கள். இஸ்லாத்தை ஏற்க மறுத்து அதன் காரணமாக நரகத்தை அடைவார்கள் என்பதாகும்.

அவ்விருவரும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால் அவர்கள் நரகில் நுழைய மாட்டார்கள்.

இஸ்லாத்தை எப்படியாவது ஒழித்துக்கட்ட வேண்டும் என்று ஆரம்பம் முதல் அயராது பாடுபட்டவன். அபூலஹப்.

நானும், என் மனைவியும் இஸ்லாத்தை ஏற்கிறோம் என்று அபூலஹப் நடித்திருந்தால் அன்றோடு இஸ்லாத்தை ஒழித்திருக்க முடியும்.

அபூலஹபும், அவன் மனைவியும் இஸ்லாத்தை ஏற்க மாட்டார்கள் என்று இறைவன் கூறியது பொய்யாகி விட்டது; எனவே இது இறைவனின் கூற்று அல்ல; முஹம்மதின் கற்பனை தான்; எனவே முஹம்மது இறைத்தூதர் அல்லர் என்று மறைமுகமாகப் பிரச்சாரம் செய்து இஸ்லாத்தை இல்லாது ஒழித்திருக்க முடியும்.

அவ்வாறு செய்ய வேண்டும் என்று அவனுக்குத் தோன்றக் கூட இல்லை. இது இறைவனின் கூற்றாக இருந்ததால் தான் இவ்வாறு அவனுக்கும் தோன்றவில்லை. அவனுக்குப் பக்க பலமாக இருந்த நபிகள் நாயகத்தின் எதிரிகளுக்கும் இப்படிச் செய்து இஸ்லாத்தை ஒழிக்கலாமே என்று தோன்றவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் அவர்களை நம்பி ஏற்றுக் கொண்டவர்களில் ஓரிருவரைத் தவிர மற்ற அனைவரும் ஆரம்பத்தில் நபிகள் நாயகத்தைக் கடுமையாக எதிர்த்தவர்கள் தான். இவ்வாறு எதிர்த்தவர்கள் எல்லாம் நபிகள் நாயகத்துடன் வந்து இணைந்து கொண்டிருக்கும் வேளையில் குறிப்பிட்ட இருவரைப் பற்றி இவ்விருவரும் ஒருக்காலும் இஸ்லாத்தை ஏற்க மாட்டார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சுயமாக அறிவித்திருக்க முடியாது.

மற்றவர்களைப் போலவே இவர்களும் இஸ்லாத்தில் இணைவார்கள் என்று கருதுவதற்குத் தான் அதிக வாய்ப்புகள் இருந்தன.

அவ்விருவரும் இஸ்லாத்தை ஏற்க மாட்டார்கள் என்று நபிகள் நாயகம் மனதால் நினைத்தாலும் அதைச் சொல்லியிருக்க மாட்டார்கள். ஏனெனில் இவ்வாறு சொல்விட்டால் இதைப் பொய்யென்று நிரூபிக்கும் திட்டத்துடன் அவ்விருவரும் இஸ்லாத்தில் சேருவதாக அறிவித்து மற்றவர்களை இஸ்லாத்தை விட்டும் விரட்டினால் என்ன ஆகும் என்று எண்ணி இதை வெளிப்படுத்தாமல் இருந்திருப்பார்கள்.

இறைவாக்கு நிச்சயம் நிறைவேறும். அதை எந்த மனிதனாலும் மீற முடியாது என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதை வெளிப்படையாக மக்கள் முன்னே வைத்தார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவர்கள் அறிவித்தவாறு அபூலஹபும், அவனது மனைவியும் இஸ்லாத்தின் எதிரிகளாகவே இருந்து மரணித்தார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைத்தூதர் தான் என்பதற்கு இதுவும் வலுவான சான்றாக அமைந்துள்ளது.

39 பாரசீகம் ரோமாபுரியிடம் தோற்கும்

பாரசீகமும், இத்தாலியின் ரோம் சாம்ராஜ்யமும் இருபெரும் வல்லரசுகளாகத் திகழ்ந்தன. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில் இருந்த போது இரண்டு நாடுகளுக்கிடையே போர் மூண்டது. இப்போரில் பாரசீகம் ரோமாபுரியை வென்றது. ரோமாபுரி அரசு படுதோல்வியடைந்தது.

பாரசீகத்தின் வெற்றி மக்காவில் இருந்த நபிகள் நாயகத்தின் எதிரிகளுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. ஏனெனில் பாரசீக நாட்டவர் மக்காவாசிகளைப் போல் உருவச் சிலைகளை வணங்குபவர்களாக இருந்தனர்.

ரோம் நாட்டவர் கிறித்தவ மதத்தைப் பின்பற்றுவோராகவும், மறுமை, சொர்க்கம் ஆகியவற்றை முஸ்லிம்களைப் போல் நம்புபவர்களாகவும் இருந்தனர். இறைவனிடமிருந்து வேதங்கள் அருளப்படும் என்பதும் அவர்களின் நம்பிக்கையாக இருந்தது. இதனால் நபிகள் நாயகத்தின் கொள்கைக்கு இவர்கள் நெருக்கமானவர்களாக இருந்தனர்.

எங்கள் கொள்கைக்கு நெருக்கமானவர்கள் வெற்றி பெற்று விட்டார்கள். சிலைகளுக்குச் சக்தி உள்ளது என்ற எங்கள் நம்பிக்கை வெற்றி பெற்று விட்டது என்று முஸ்லிம்களிடம் மக்காவாசிகள் இதனால் பெருமையடித்தனர்.

முஸ்லிம்களின் நம்பிக்கை இதனால் பாதிக்கப்படவில்லையென்றாலும் பதில் சொல்ல முடியாமல் கவலைப்பட்டனர்.

இந்த நேரத்தில் தான் பின் வரும் வசனங்கள் இறைவனால் அருளப்பட்டன.

ரோமப் பேரரசு அருகில் உள்ள பூமியில் வெற்றி கொள்ளப்பட்டு விட்டது. அவர்கள் தோல்விக்குப் பிறகு சில வருடங்களில் அல்லாஹ்வின் உதவியால் வெற்றி பெறுவார்கள். முன்னரும், பின்னரும் அதிகாரம் அல்லாஹ்வுக்கே உரியது. நம்பிக்கை கொண்டோர் அந்நாளில் மகிழ்ச்சியடைவார்கள். தான் நாடியோருக்கு அவன் உதவி செய்கிறான். அவன் மிகைத்தவன்; நிகரற்ற அன்புடையோன்.

திருக்குர்ஆன் 30.14

பாரசீகர்களால் சின்னாபின்னமாக்கப்பட்ட ரோம் இனிமேல் தலையெடுக்க முடியாது என்ற நிலையில் இருந்தது. இனிமேல் ரோம் சாம்ராஜ்யம் தலை தூக்கவே முடியாது என்ற நேரத்தில் தான் மிகச் சில ஆண்டுகளில் பாரசீகம் ரோமானியர்களால் தோற்கடிக்கப்படும் என்று இறைவன் கூறுவதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்.

சில ஆண்டுகள் என்று மொழி பெயர்த்த இடத்தில் ஒன்று முதல் ஒன்பது வரையிலான எண்களைக் குறிக்கும் பிள்வு என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதாவது இந்த வெற்றி ஒன்பது ஆண்டுகளுக்குள் நடந்தேறும் என்று இறைவன் கூறுவதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்தார்கள். அவர்கள் சொன்னது போலவே ஆறு ஆண்டுகளில் ரோமானியர்கள் எழுச்சி பெற்று பாரசீகர்களைத் தோற்கடித்தனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைத்தூதர் தான் என்பது இதன் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.

40 கண்டுபிடிக்கப்பட்ட ஏடு

அந்தக் குகை மற்றும் அந்த ஏட்டுக்குரியோர் நமது சான்றுகளில் ஆச்சரியமானோர் என்று நீர் நினைக்கிறீரா? சில இளைஞர்கள் குகையில் ஒதுங்கிய போது எங்கள் இறைவா! உன் அருளை எங்களுக்கு வழங்குவாயாக! எங்கள் பணியை எங்களுக்குச் சீராக்குவாயாக! என்றனர். எனவே அக்குகையில் பல வருடங்கள் அவர்களை உறங்கச் செய்தோம்.

திருக்குர்ஆன் 18:9,10,11

இந்த வசனத்தில் குகையில் தங்கியவர்களைப் பற்றிக் குறிப்பிடும் போது குகைவாசிகள் என்று மட்டும் குறிப்பிட்டால் போதும். அத்துடன் ஏட்டுக்குரியவர்கள் (சுவடிக்கு உரியவர்கள்) என்றும் அல்லாஹ் கூறுகிறான்.

அப்படியானால் ஒரு சுவடி இவர்கள் வரலாற்றோடு முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கிறது என்பதை அறிந்து கொள்ளலாம்.

ஏதோ ஓர் ஏட்டை அவர்கள் வைத்திருந்தார்கள் என்பதற்காக மட்டும் இவ்வாறு நிச்சயமாகக் கூறப்பட்டிருக்காது. அந்த ஏடு என்று குறிப்பிட்டுச் சொல்வதென்றால் அது ஒரு முக்கியமான ஏடாக இருக்க வேண்டும்.

அந்த ஏடு ஒரு காலத்தில் கண்டெடுக்கப்பட்டு மக்களுக்கு அதில் உள்ள உண்மைகள் தெரிய வேண்டும் என்பதற்காகவே அந்த ஏட்டுக்குரியவர்கள் என்று அல்லாஹ் கூறியிருக்க முடியும். அந்த ஏடு யாருக்குமே கிடைக்காது என்றால் அந்த ஏடு என்று முக்கியத்துவப்படுத்தி இறைவன் கூறியிருக்க முடியாது.

அது என்ன சுவடி? அது என்ன ஏடு? என்பதெல்லாம் பல வருடங்களாக உலகத்திற்குத் தெரியவில்லை. ஆனால் சமீப காலங்களில் அந்த ஏடுகளில் இருந்த செய்திகள் இப்போது அம்பலமாகியுள்ளன.

சாவுக்கடல் சாசனச் சுருள்கள் என்ற தலைப்பில் 1998 ஆம் ஆண்டு ஒரு மாதத்தில் பல தடவை பி.பி.சி.யில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு நிகழ்ச்சி ஒளி பரப்பப்பட்டது. அதில் சொல்லப்பட்ட செய்திகள் கேட்போர் அனைவரையும் வியப்பில் ஆழ்த்துவதாக இருந்தது.

இந்த நிகழ்ச்சியின் முதல் ஒளிபரப்பு 1993 ஆம் ஆண்டிலேயே காட்டப்பட்டதாகவும் சொல்லப்பட்டது. அதன் விபரங்கள்:

1947-ம் ஆண்டு ஒரு நாள் ஆடு மேய்க்கும் ஓர் அரபுச் சிறுவன், காணாமல் போன தனது ஆட்டுக் குட்டி ஒன்றைத் தேடி சாவுக்கடலை ஒட்டிய ஜோர்டான் நாட்டு மலைப் பகுதிகளில் தேடி அலைந்தான். அந்த மலைப்பகுதி கும்ரான் மலைப்பகுதி என்று அழைக்கப்படுகிறது.

ஆட்டுக் குட்டியைத் தேடிய சிறுவன் அங்கிருந்த குகைக்குள் பார்த்த போது, மண் பாண்டங்களில் சுருட்டி நிரப்பி வைக்கப்பட்ட தோல் ஆவணங்களைக் கண்டிருக்கின்றான். அவைகளில் சிலவற்றை எடுத்து வந்து செருப்புத் தொழிலாளியான தன் தந்தையிடம் கொடுக்க, மறுநாள் தந்தையும், மகனும் சேர்ந்து குகைக்குள் இருந்த அனைத்துச் சுருள்களையும் வீட்டுக்குக் கொண்டு வந்து சேர்த்தார்கள்.

அந்தப் பழைய தோல்களைத் தமது செருப்புத் தொழிலுக்குப் பயன்படுத்த எண்ணிய அந்தச் சிறுவனின் தந்தை தோல்களில் ஹிப்ரு மொழியில் எழுதப்பட்டிருந்த வார்த்தைகளின் பொருள் புரியாமல், அதை அப்பொழுது ஜோர்டான் மன்னரின் ஆட்சியிலிருந்த கிழக்கு ஜெருஸலத்தைச் சேர்ந்த ஒரு பழைய புத்தகக் கடைக்காரரிடம் காண்பித்திருக்கிறார்.

ஓரளவு ஹிப்ரு மொழியறிந்த அந்தக் கடைக்காரர் அந்தச் சுருள்கள் பழங்காலச் செய்திகளைக் கொண்டதாக இருக்க வேண்டும் என்று கருதி, ஒரு சில தீனார்களுக்கு அத்தனை சுருள்களையும் அந்த செருப்புத் தொழிலாளியிடமிருந்து விலைக்கு வாங்கிக் கொண்டார்.

கிறித்தவரான அந்தப் புத்தகக் கடைக்காரர் அந்தச் சுருள்களை அந்நகரில் இருந்த கிறித்தவ ஆலயத்தில் ஒப்படைத்து விட்டார்.

இந்தச் சந்தர்ப்பத்தில் சுருள்கள் கண்டெடுக்கப்பட்ட விஷயம் வெளிப்பட்டது. அதில் உள்ள செய்திகளைத் தெரிந்து கொள்வதற்கு யூதர்களும், முஸ்லிம்களும் ஆர்வம் காட்டினர்.

அப்போது ஜோர்டானை ஆட்சி செய்த மன்னர் ஹுசைன், அந்தச் சாசனச் சுருள்கள் முஸ்லிம், யூத, கிறித்தவர்கள் அடங்கிய ஒரு குழுவிடம் பொதுவாக ஒப்படைக்கப்பட்டு அவை ஆராயப்பட வேண்டும் என்று விண்ணப்பித்தார்.

ஆனால் கிறித்தவப் பாதிரியார்கள், அது தனியார் சொத்து என்று வாதிட்டு அதைப் பொதுவில் வைக்க மறுத்து விட்டனர். கிறித்தவர்களில் பல அறிஞர்களுக்கும் கூட அவற்றைப் படிப்பதற்குச் சந்தர்ப்பம் அளிக்கப்படவில்லை.

இடைப்பட்ட ஐந்தாண்டு காலங்களில் ஜெருஸலத்தில் இருந்த பாதிரிமார்கள் சில குழுக்களை ஏற்படுத்தி கும்ரான் மலைப் பகுதிகளில் இருந்த பொதுங்குகளில் தேடியலைந்து அங்கிருந்த சாசனச் சுருள்கள் அனைத்தையும் தங்கள் கைவசம் கொண்டு வந்து விட்டனர்.

1952-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அனைத்துச் சுருள்களும் கிறித்தவப் பாதிரிமார்கள் கையில் போய்ச் சேர்ந்து விட்டன. பதினைந்தாயிரம் கையெழுத்துப் பிரதிகள் இவ்வகையில் இருப்பதாகத் தற்பொழுது கணக்கிட்டுள்ளனர்.

கடந்த ஐம்பதாண்டுகளுக்கு மேல் அந்தச் சாசனச் சுருள்களில் அடங்கிய செய்திகளைக் குறிப்பிட்ட கிறித்தவப் பாதிரிகள் அடங்கிய குழு இருட்டடிப்புச் செய்து வந்தது.

பல கிறித்தவ அறிஞர்களும், ஆராய்ச்சியாளர்களும் அதைப் படிப்பதற்கு ஆர்வம் கொண்டு கேட்டபோதெல்லாம், அவர்களுக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டது.

சாசனச் சுருள்களைக் கைவசம் கொண்ட குழுவில் ஒருவர் இறக்க நேரிட்டால் அவருக்குப் பதில் அக்குழுவில் உள்ள மற்றவர்களால் வேறொரு பாதிரியார் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவருக்கு மட்டுமே அதைப் படிப்பதற்கு உரிமை வழங்கப்பட்டு வந்தது.

இவ்விதமாகவே இவ்வளவு காலமும் அந்தச் சாசனச் சுருள்களின் செய்திகள் ரகசியமாக வைக்கப்பட்டு வந்தன. இந்த இரகசியக் காப்பில் போப்பாண்டவரின் வாட்டிகன் சபை முன்னணியில் இருந்தது.

தோலில் பதிந்த அந்தப் பழங்காலச் சாசனம் அழிந்து விடும் நிலையைக் கண்ட அதன் ரகசியக் காப்பாளர்கள் அச்சாசனங்களை நுண்ணிய படச்சுருள் எடுத்தார்கள்.

அதன் ஒரு செட் போட்டோ காப்பிகள் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரிலிருக்கும் ஒரு நூலகத்துக்கு பாதுகாப்புக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

1990-ம் ஆண்டு அந்த நூலகத்துக்குத் தலைவராக ஐஸ்மேன் என்ற அறிஞர் நியமிக்கப்பட்டார். அவர் முன்பே அந்த சாசனச் சுருள்களைப் படிப்பதற்கு ஆர்வம் காட்டி, அதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டவர்.

இப்போது தனது அதிகாரத்தில் உள்ள நூலகத்தில் இருந்து சாசனச் சுருள்களின் நுண்ணிய போட்டோக்களைப் பெரிய அளவில் போட்டோ எடுக்கச் செய்து அவற்றைப் படித்தார்.

அவற்றைப் படித்த போது தமக்கு வியப்பு ஏற்பட்டதாக வாக்குமூலம் அளிக்கின்றார். இத்தனை காலமும் கிறித்தவ சபை அந்த சாசனச் சுருள்களை மற்றவர்களுக்குக் காட்டாமல் இருந்ததன் உள் நோக்கம் என்ன என்பதையும் புரிந்து கொண்டதாகக் கூறுகின்றார்.

மைக்கேல் வைஸ் என்னும் சிகாகோ பல்கலைக் கழக ஹிப்ரு மொழிப் பேராசிரியர் ஒருவரின் உதவியைக் கொண்டு அந்தச் சாசனச் சுருள்களில் முக்கியமானது என்று அவர் கருதிய 100 கையெழுத்துப் பிரதிகளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து வெளியிட்டார். அந்தப் புத்தக வெளியீடு கிறித்தவ உலகத்தை உலுக்கியது என்றும், குறிப்பாக கிறித்தவ மத ஆலயங்கள் பேரதிர்ச்சியில் உறைந்து போயின என்றும் அந்த டாக்குமென்டரியின் செய்தியாளர் கூறுகின்றார்.

மேற்கத்திய மக்களின் மத நம்பிக்கையைத் தகர்ப்பதாக அந்தப் புத்தக வெளியீடு இருந்தது என்றும், ஆகவே அந்த இரு அறிஞர்களும் சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்ற அச்சம் இருந்தது என்றும் அதன் செய்தியாளர் குறிப்பிடுகின்றார்.

அப்படி எது நடந்தாலும் அதைத் தாங்கள் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும், இதற்கு அஞ்சி ஒரு மிகப் பெரும் பேருண்மையை உலகத்திலிருந்து தாங்கள் மறைக்க விரும்பவில்லை என்றும், அவ்விரு அறிஞர்களும் வெளிப்படையாகக் கூறுவதையும் அந்தத் தொலைக்காட்சி டாக்குமெண்டரி பதிவு செய்து காட்டுகின்றது.

கிறித்தவ மத ஆலயங்களில் இப்போது ஏசுவின் பெயரால் செய்யப்படும் மதச் சடங்குகளும், வழிபாடுகளும் ஆரம்ப கிறித்தவர்களிடையே நடைபெறவில்லை என்பதையே சாசனச் சுருள்கள் நிரூபிக்கின்றன.

இந்தச் சடங்குகளுக்கும், ஏசுவின் பிரச்சாரத்திற்கும், கொள்கைக் கோட்பாடுகளுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அவை அனைத்தும் பவுல் என்பவரால் பிற்காலத்தில் ஏற்படுத்தப்பட்டவை.

மொத்தத்தில் இப்போது ஏசுவின் பெயரால் சொல்லப்படும் அனைத்துக் கிறித்தவக் கொள்கைகளும் பொய்யானவை. அவற்றை ஏசுவிற்கு அடுத்த தலைமுறையில் வாழ்ந்த உண்மையாளர்களின் வாழ்வில் காண முடியவில்லை.

மேற்கண்டவாறு அறிஞர் ஐஸ்மேன் கூறி வரும் போது, ஒரு யூதரிடம் அவற்றைப் பற்றி வாதம் செய்யும் போது, ஒற் அது குர்ஆனை உறுதிப்படுத்துகிறது என்று ஆணித்தரமாகக் கூறுகின்றார். அவ்விடத்தில் அந்த வாதம் நிறுத்தப்பட்டு மறு காட்சி காட்டப்படுகின்றது.

இதே முறையில் மைக்கேல் வைஸ் என்ற அறிஞர் பேசும் போது, அது இஸ்லாத்தை உறுதிப்படுத்துகின்றது என்று கூறுகின்றார். இங்கும் காட்சி மாற்றப்படுகின்றது.

ஆகவே இந்தச் சாசனச் சுருள்கள் எப்படி குர்ஆனையும், இஸ்லாத்தையும் உண்மைப்படுத்துகின்றன என்று அவர்கள் கூறுகின்றார்கள் என்பதைப் பார்வையாளர்கள் அறிய முடியவில்லை.

அந்தச் செய்தியிலிருந்து நாம் ஆச்சரியமான ஓர் உண்மையைத் தெரிந்து கொள்கிறோம்.

ஈஸா (அலை) அவர்களுக்கு இறைவன் இஞ்ஜீல் எனும் வேதத்தை வழங்கியதாகத் திருக்குர்ஆன் பல இடங்களில் கூறுகின்றது. ஆனால் கிறித்தவ சமுதாயத்திடம் அந்த வேதம் நிச்சயமாக இல்லை எனலாம்.

ஏனெனில் பைபிளின் புதிய ஏற்பாடு என்பது இயேசுவுக்குக் கடவுள் வழங்கியதன்று. மாறாக ஏசுவைப் பற்றி மற்றவர்கள் எழுதிய குறிப்புகள் தான் புதிய ஏற்பாடு.

பைபிளின் பல இடங்களில் ராஜ்ஜியத்தின் சுவிஷேசத்தை இயேசு பிரசங்கித்தார் என்று கூறப்பட்டுள்ளது. எந்த இறைவேதத்தை மறைத்தார்களோ அதைத் தான் இயேசுவின் வழி வந்த நல்ல மனிதர்கள் தங்களுடன் எடுத்துச் சென்று குகையில் தங்கினார்கள் என்று முடிவு செய்யப் போதுமான காரணம் இருக்கிறது.

குர்ஆனை ஒத்திருக்கின்றது என்பது தான் அந்தச் சுருள்களைப் படித்த கிறித்தவ அறிஞர்களின் கருத்தாகும்.

இஞ்ஜீல் எனும் வேதத்தைத் திருக்குர்ஆன் மெய்ப்பிப்பதாக திருக்குர்ஆனும் பல இடங்களில் குறிப்பிடுகின்றது.

அதை வாசித்த பாதிரியார்கள் திட்டமிட்டு மறைத்ததும் இந்தக் கருத்தை உறுதிப்படுத்துகின்றது.

மனிதர்களால் எழுதப்பட்ட ஏட்டுக்கு இவ்வளவு முக்கியத்துவம் அளித்து இறைவன் கூறியிருக்க மாட்டான் என்பதும் இக்கருத்தை மேலும் உறுதிப்படுத்துகின்றது.

41 தீய நோக்கத்தில் கட்டப்பட்ட பள்ளிவாசல்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த பின் அது வரை மதீனாவில் ஆதிக்கம் செலுத்தி வந்த யூதர்களின் தலைமைக்கு ஆபத்து வந்தது.

பெரும்பாலான மக்கள் நபிகள் நாயகத்தை ஏற்றுக் கொண்டதால் ஆட்சியும் அவர்கள் கைக்கு வந்தது. முஹம்மது நபியை எப்படியாவது கொலை செய்தால் தான் ஆட்சி நம் கைக்கு மீண்டும் வரும் என்று யூதர்கள் சதித் திட்டம் தீட்டினார்கள்.

இந்தச் சதித் திட்டத்தை நிறைவேற்றுவதற்காக மதீனாவுக்கு வெளியே ஒரு பள்ளிவாசலைக் கட்டினார்கள். தங்களை முஸ்லிம்கள் என்று அறிவித்துக் கொண்டார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைத் தங்களின் பள்ளிவாசலுக்கு அழைத்து வந்து மறைந்திருந்து தாக்கி அவர்களைக் கொல்வது அவர்களின் நோக்கமாக இருந்தது.

பள்ளிவாசலுக்குள்ளே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கொல்லத் திட்டம் தீட்டிக் கொண்டு நபிகள் நாயகத்தை அழைத்தார்கள். தங்கள் பள்ளிவாசலுக்கு வருகை தந்து முதல் தொழுகை தொழுது ஆரம்பித்து வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

ஊருக்கு வெளியே இப்பள்ளிவாசல் கட்டப்பட்டதால் இதன் பின்னணியில் உள்ள சதித்திட்டம் நபிகள் நாயகத்திற்கும், மற்ற முஸ்லிம்களுக்கும் தெரியவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் இவர்களின் சதித் திட்டத்தை அறியாமல் அந்தப் போலிப் பள்ளிவாசலுக்குச் செல்ல ஒப்புக் கொண்டனர். இந்தச் சந்தர்ப்பத்தில் தான் பின் வரும் வசனங்களை இறைவன் அருளினான்.

தீங்கிழைப்பதற்காகவும், (ஏக இறைவனை) மறுப்பதற்காகவும், நம்பிக்கை கொண்டோரிடையே பிரிவை ஏற்படுத்திடவும், இதற்கு முன் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் எதிராகப் போரிட்டோருக்குப் புகலிடமாகவும் ஒரு பள்ளிவாசலை ஏற்படுத்திக் கொண்டோர் நாங்கள் நல்லதைத் தவிர வேறெதனையும் நாடவில்லை என்று சத்தியம் செய்கின்றனர். அவர்கள் பொய்யர்களே என்று அல்லாஹ் சாட்சி கூறுகிறான். (முஹம்மதே!) அதில் நீர் ஒரு போதும் வணங்காதீர்! ஆரம்ப நாள் முதல் இறையச்சத்தின் அடிப்படையில் நிர்மாணிக்கப்பட்ட பள்ளிவாசலே நீர் வணங்குவதற்குத் தகுதியானது. அதில் தூய்மையை விரும்பும் ஆண்கள் உள்ளனர். அல்லாஹ் தூய்மையானவர்களை விரும்புகிறான்.

திருக்குர்ஆன் 9.107,108

அல்லாஹ் அறிவித்தவாறு அப்பள்ளிவாசலைச் சோதனையிட்ட போது சதிகாரர்களின் சதி அம்பலமானது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் தான் என்பது இதன் மூலம் நிரூபனமானது.

நபிகள் நாயகத்தின் முன்னறிவிப்புகள்

இஸ்லாம் இறைவனால் வழங்கப்பட்ட மார்க்கம் என்பதற்கு திருக்குர்ஆன் எவ்வாறு ஆதாரமாக உள்ளதோ அது போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முன்னறிவிப்புகளும் ஆதாரங்களாக அமைந்துள்ளன. அவற்றில் சிலவற்றைக் காண்போம்.

1 பாரசீகம் வெற்றி கொள்ளப்படும்

நபிகள் நாயகம் (ஸல) அவர்கள் மரணிக்கும் வேளையில் பாரசீகம் மிகப் பெரிய வல்லரசாகத் திகழ்ந்தது. இந்த வல்லரசை முஸ்லிம்கள் வெற்றி கொள்வார்கள் என்றும், இந்த வெற்றி மிகவும் குறுகிய காலத்தில் கிட்டும் என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்தார்கள்.

பாரசீக மன்னன் கிஸ்ராவின் கருவூலங்கள் வெற்றி கொள்ளப்படுவதை உனக்கு நீண்ட ஆயுள் வழங்கப்பட்டால் நிச்சயம் காண்பாய் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதீ பின் ஹாதிம் (ரலி) அவர்களிடம் கூறினார்கள்.

நூல் : புகாரி 3595

பாரசீகப் பேரரசு முஸ்லிம்களால் வெற்றி கொள்ளப்படும் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.

அதீ பின் ஹாதிம் (ரலி) அவர்கள் அந்த வெற்றியைத் தம் கண்களால் காண்பார் என்பதையும் கூறுகிறார்கள்.

பலநுறு வருடங்கள் காத்திருக்கத் தேவையில்லை. உன் வாழ்நாளிலேயே அதைக் காண்பாய் என்றும் அதீ பின் ஹாதிமிடம் தெரிவிக்கிறார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்தவாறு பாரசீகத்தை உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் முஸ்லிம்கள் கைப்பற்றினார்கள். அதன் கருவூலங்களையும் தமதாக்கிக் கொண்டார்கள்.

பாரசீக மன்னன் கிஸ்ராவின் கருவூலங்களை வெற்றி கொண்டவர்களில் நானும் ஒருவனாக இருந்தேன் என்று அதீ பின் ஹாதம் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.

நூல் : புகாரி 3595

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இந்த முன்னறிவிப்பும் மாற்றம் ஏதுமின்றி முழுமையாக நிறைவேறியது.

2 தமது மரணம் குறித்த முன்னறிவிப்பு

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நாற்பதாம் வயதில் துவக்கிய இஸ்லாமியப் பிரச்சாரத்தை 63 வது வயதில் முடித்துவிட்டு மரணம் அடைந்தார்கள்.

மனிதன் தீராத நோய்க்கு ஆளாகும் போதும், படுத்த படுக்கையில் நாட்களைக் கழிக்கும் போதும் தனக்கு மரணம் நெருங்கி விட்டதை ஓரளவுக்கு ஊகித்து அறிந்து கொள்வான்.

ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தள்ளாத வயதை அடைவதற்கு முன் திடகாத்திரத்துடன் இருக்கும் போதே தமக்கு மரணம் மிக விரைவில் வந்து விடும் என்று பல்வேறு சந்தர்ப்பங்களில் முன்னறிவிப்புச் செய்தார்கள். அவர்கள் முன்னறிவிப்புச் செய்தவாறு மரணத்தைத் தழுவினார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணிப்பதற்கு சுமார் நான்கு மாதங்களுக்கு முன் ஹஜ் செய்தனர். மதீனாவிலிருந்து மக்கா சென்று ஹஜ் செய்ய அன்றைக்கு நல்ல திடகாத்திரமும், உடல் வலிவும் இருக்க வேண்டும். அந்த நிலையில் அவர்கள் இருந்ததால் தான் ஹஜ் கடமையை மேற்கொண்டார்கள்.

நபிகள் நாயகத்தின் முதல் ஹஜ்ஜாகவும். கடைசி ஹஜ்ஜாகவும் திகழ்ந்த அந்த ஹஜ்ஜின் போது பின்வரும் வசனம் தமக்கு அருளப்பட்டதாகக் கூறினார்கள்.

இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாகப் பொருந்திக் கொண்டேன்.

திருக்குர் ஆன் 5.3

இன்றுடன் மார்க்கத்தை இறைவன் முழுமைப்படுத்தி விட்டான் என்றால் இனிமேல் இறைவனிடமிருந்து எந்தச் சட்ட திட்டமும் வராது. அதைப் பெற்று மக்கள் மன்றத்தில் வைக்கக் கூடிய தூதருக்கு இனி வேலையில்லை என்ற கருத்தும், மிக விரைவிலேயே அவர்கள் இவ்வுலகை விட்டுப் பிரிவார்கள் என்ற கருத்தும் இதனுள் அடங்கியுள்ளது.

இந்த ஆண்டுக்குப் பின் இனிமேல் உங்களை நான் சந்திக்க முடியாமல் போகலாம் என்று தமது இறுதிப் பேருரையில் குறிப்பிட்டார்கள்.

நூல் : தப்ரானி அல்கபீர்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் (உஹத் போர் நடந்து) எட்டு ஆண்டுகள் கழிந்து உஹத் போரில் கொல்லப்பட்டவர்களுக்காக ஜனாஸா தொழுகை நடத்தினார்கள். இது உயிரோடு உள்ளவர்களிடமும், இறந்தவர்களிடமும் விடைபெறுவது போல் அமைந்திருந்தது. பின்னர் மேடையில் ஏறினார்கள். நான் உங்களுக்கு முன்னே செல்கிறேன். உங்களுக்கு நான் சாட்சியாக இருப்பேன். ஹவ்லுல் கவ்ஸர் எனும் தடாகத்தில் (மறுமையில்) உங்களைச் சந்திப்பேன் என்று உரை நிகழ்த்தினார்கள். அது தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நான் கடைசியாகப் பார்த்ததாகும் என்று உக்பா பின் ஆமிர் (ரலி) அறிவிக்கிறார்கள்.

நூல் : புகாரி 4042

ஆண்டு தோறும் ஜிப்ரீல் (அலை) அவர்கள் என்னிடம் வந்து (அது வரை அருளப்பட்ட) குர்ஆன் வசனங்களை ஓதச் செய்து வந்தனர். இந்த ஆண்டு இரண்டு தடவை என்னிடம் வந்தார்கள். என் மரணம் நெருங்கி விட்டதாகவே எண்ணுகிறேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) தமது மகள் ஃபாத்திமாவிடம் தெரிவித்தார்கள்.

நூல் : புகாரி 3624, 6285

ஏமன் நாட்டின் ஆளுநராக முஆத் பின் ஜபலை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தார்கள். முஆது அவர்கள் குதிரையில் ஏறி அமர்ந்து வர அவருடன் நடந்தே வந்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வழி அனுப்பி வைத்தார்கள். அப்போது பல அறிவுரைகளைக் கூறிவிட்டு அடுத்த ஆண்டு நீ என்னைச் சந்திக்க மாட்டாய் என்றே நினைக்கிறேன் என்று கூறினார்கள்.

நூல் : அஹ்மத் 22404

அவர்கள் அறிவித்தபடியே அந்த ஆண்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்தார்கள்.

3 தனி நபரைப் பற்றி நரகவாசி என்ற முன்னறிவிப்பு

நியாயத்திற்காகக் களம் இறங்கிப் போராடுவதற்கு நிகரான நன்மை வேறு எதிலும் கிடைக்காது. இவ்வாறு தன் உயிரைத் தியாகம் செய்ய போர்க்களத்திற்கு வந்த ஒருவரைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நரகவாசி என்று குறிப்பிட்டார்கள். அவர்கள் நரகவாசி என்று அடையாளம் காட்டிய அந்த நபர் கடைசியாக நரகில் செல்வதற்குரிய வழியைத் தேர்வு செய்து கொண்டார். இது பற்றிய நிகழ்ச்சி பின்வருமாறு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், இணைவைப்பவர்களும் போர்க்களத்தில் மோதினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது படையினரைச் சார்ந்து போரிட்டார்கள். இணைவைப்பவர்கள் தமது படையினரைச் சார்ந்து போரிட்டனர். நபித்தோழர்களில் ஒரு மனிதர் மட்டும் தனது படையினரைச் சாராமல் விரட்டிச் சென்று போரிட்டார். இவரைப் போல் நம்மில் யாரும் வீரமிக்கவர் இல்லை என்று நபித்தோழர்கள் பேசிக் கொண்டனர். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவர் நரகவாசியாவார் என்று அவரைப் பற்றிக் கூறினார்கள். அங்கே சபையில் இருந்த ஒருவர் நான் இவருடன் சேர்ந்து இவரைக் கண்கானிக்கிறேன் என்று புறப்பட்டார். அவர் ஓடினால் இவரும் ஓடுவார். இந்த நிலையில் அந்த அந்த மனிதருக்குக் கடுமையான காயம் ஏற்பட்டது. (வேதனை தாள முடியாமல்) தனது வாளைத் தரையில் ஊன்றி அதன் மீது தனது மார்பை அழுத்தி தற்கொலை செய்து விட்டார். அவரைக் கண்காணிக்க முன் வந்த அந்த மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து நீங்கள் அல்லாஹ்வின் தூதர் என்று நான் உறுதி கூறுகிறேன் எனக் கூறி நடந்ததை விளக்கினர்.

நூல் : புகாரி 2898

தற்கொலை செய்பவர்கள் என்றென்றும் நரகில் கிடப்பார்கள் என்பது இஸ்லாத்தின் கொள்கை. இது பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் எச்சரிக்கை செய்திருந்தனர். இதன் அடிப்படையில் அந்த மனிதர் தற்கொலை செய்து கொண்டதன் மூலம் நரகவாசியாக மரணித்தார்.

போர்க்களத்தில் வீரதீரமாகப் போரிடும் ஒருவரைப் பற்றி நரகவாசி என்று எந்த மனிதராலும் கூற முடியாது. கடைசியில் அவர் தற்கொலை செய்து கொள்வார் என்பது இறைவனுக்கு மட்டுமே தெரிந்த உண்மையாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைவனின் தூதராக இருந்ததால் இதை இறைவன் முன்பே அறிவித்துக் கொடுத்திருக்கிறான் என்பதால் தான் இவ்வாறு அறிவிக்க முடிந்தது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைவனின் தூதர் என்பதற்கு இதுவும் ஓர் ஆதாரமாக அமைந்துள்ளது.

4 தமது மகளின் மரணம் பற்றிய முன்னறிவிப்பு

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் நான்கு பெண் குழந்தைகளை வழங்கியிருந்தான். ஸைனப், ருகையா, உம்மு குல்ஸும் ஆகிய மூவரும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வுலகில் வாழும் போதே மரணித்து விட்டார்கள். கடைசி மகள் ஃபாத்திமா (ரலி) அவர்கள் மட்டும் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை உயிரோடு இருந்தார்கள்.

தமது குடும்பத்து உறுப்பினர்களில் ஃபாத்திமா (ரலி) அவர்கள் தான் முதலில் மரணிப்பார்கள் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்தார்கள்.

என் குடும்பத்தார்களில் (நான் மரணித்த பின்) என்னை முதலில் வந்து சேர்பவர் நீ தான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஃபாத்திமா (ரலி) அவர்களிடம் தெரிவித்தார்கள்.

நூல் : புகாரி 3626, 3716, 4434

நபிகள் நாயகத்தின் மனைவியரிலும், அவர்களின் உறவினர்களிலும் அதிக வயதுடைய பலர் இருந்தனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணிக்கும் போது ஃபாத்திமா (ரலி) அவர்கள் சுமார் 25 வயதுடையவராகத் தான் இருந்தார்கள். மரணத்தை நெருங்கிய வயதுடையவராக அவர்கள் இருக்கவில்லை.

அப்படி இருந்தும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்தபடி ஃபாத்திமா (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் மரணித்து ஆறாவது மாதத்தில் மரணத்தைத் தழுவினார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைவனின் தூதர் தான் என்பதை இச்செய்தியை இறைவன் அறிவித்துக் கொடுத்ததன் மூலம் மெய்ப்படுத்தினான்.

5 அம்மாரின் மரணம் பற்றிய முன்னறிவிப்பு

ஆரம்ப கால முஸ்லிம்களில் யாஸிர், சுமய்யா தம்பதிகள் முக்கியமானவர்கள். சுமய்யா (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதற்காக அவர்களது எஜமானனால் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். இஸ்லாத்திற்காக முதன் முதலில் உயிர் நீத்தவர் என்ற பெருமையைப் பெற்றார்கள்.

இவர்களின் புதல்வரான அம்மார் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நெருக்கமான தோழராக இருந்தார்கள். மக்காவிலிருந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்த அம்மார் (ரலி) அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அன்புக்குப் பாத்திரமானவராகத் திகழ்ந்தார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனா வந்தவுடன் மதீனாவில் பள்ளிவாசல் ஒன்றை எழுப்பினார்கள். கூலி ஆட்கள் இன்றி தன்னார்வத் தொண்டர்களான நபித்தோழர்களே அப்பள்ளிவாசலைக் கட்டினார்கள். ஒவ்வொரு நபித்தோழரும் ஒவ்வொரு கல்லாகச் சுமந்து வந்தனர். அம்மார் (ரலி) அவர்கள் இரண்டிரண்டு கற்களாகச் சுமந்து வந்தார். இதைக் கண்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரது தலையில் படிந்த புழுதியைத் துடைத்து விட்டனர். பாவம் அம்மார்! இவரை வரம்பு மீறிய கூட்டத்தினர் கொலை செய்வார்கள் என்று முன்னறிவிப்புச் செய்தார்கள்.

நூல் : புகாரி 2812, 447

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த பின் அபூபக்கர் (ரலி), அவர்களுக்குப் பின் உமர் (ரலி), அவர்களுக்குப் பின் உஸ்மான் (ரலி) ஆட்சி புரிந்தனர். உஸ்மான் (ரலி) கொல்லப்பட்ட பின் அலீ (ரலி) ஆட்சிப் பொறுப்பேற்றனர்.

இவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்ற போது சிரியாவின் ஆளுநராக இருந்த முஆவியா (ரலி) அவர்கள் அலீ (ரலி) அவர்களின் கட்டுப்பாட்டில் வராமல் சிரியாவைத் தனி நாடாக அறிவித்துக் கொண்டார்கள். இதன் காரணமாக அலீ (ரலி) அவர்களுக்கும், முஆவியா (ரலி) அவர்களுக்கும் இடையே பல்வேறு சண்டைகள் நிகழ்ந்தன. சிஃப்பீன் என்ற இடத்தில் இரு தரப்புப் படைகளும் மோதிக் கொண்ட யுத்தம் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது.

கி.பி.657 ஆம் ஆண்டு நடந்த இப்போரில் அம்மார் (ரலி) அவர்கள் அலீ (ரலி) அவர்களின் படையில் அங்கம் வகித்தனர். இப்போரில் அவர்கள் கொல்லப்பட்டனர்.

அலீ (ரலி) அவர்கள் அதிபராக இருக்கும் போது அவர்களுக்குக் கட்டுப்படாமல் முஆவியா (ரலி) அவர்கள் வரம்பு மீறினார்கள்.

வரம்பு மீறிய கூட்டம் அம்மாரைக் கொல்லும் என்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் இந்த முன்னறிவிப்பு நிறைவேறியது. அவர்கள் இறைவனின் தூதர் என்பது நிரூபணமானது.

6 ஸைனப் (ரலி) அவர்கள் மரணம் பற்றிய முன்னறிவிப்பு

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவியரில் ஸைனப் (ரலி) அவர்கள் முக்கியமானவர்கள். நபிகள் நாயகத்தின் மாமி மகளான ஸைனபை ஸைது எனும் அடிமைக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மணமுடித்து வைத்தார்கள். ஸைது அவர்களுக்கும், ஸைனப் அவர்களுக்கும் மனக் கசப்பு ஏற்பட்டதால் ஸைத் அவர்கள் ஸைனபை விவாகரத்துச் செய்தார்கள்.

இதன் பின்னர் அல்லாஹ்வே ஸைனபை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குத் திருமணம் செய்து வைத்தான்.

பார்க்க திருக்குர்ஆன் : 33:37

தமது மனைவியரில் யார் முதலில் மரணிப்பார்கள் என்பது பற்றிய பேச்சு வந்த போது உங்களில் நீளமான கைகளை உடையவரே முதலில் மரணிப்பார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டனர். இதைக் கேட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவியர் ஒரு குச்சியின் மூலம் ஒவ்வொருவரின் கைகளையும் அளந்து பார்த்தனர். மற்றவர்களின் கைகளை விட ஸவ்தா (ரலி) அவர்களின் கைகளே நீளமாக இருந்தன. ஆனால் நபிகள் நாயகத்தின் மனைவியரில் ஸைனப் (ரலி) தான் முதலில் மரணித்தனர். தாரளமாக வாரி வழங்குபவர் என்ற கருத்திலேயே கைகள் நீளமானவர் என்ற சொல்லை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பயன்படுத்தியதை அவர்களின் மனைவியர் புரிந்து கொண்டார்கள்.

இந்த விபரம் புகாரி 1420 வது ஹதீஸில் கூறப்பட்டுள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்தவாறு அவர்களின் மனைவியரில் ஸைனப் அவர்கள் முதலில் மரணித்தார்கள்.

7 இரண்டு கலீஃபாக்களின் வீர மரணம் பற்றி முன்னறிவிப்பு

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த பின் ஆட்சிப் பொறுப்பேற்ற அபூபக்ர் (ரலி) அவர்கள் இயற்கை மரணம் அடைந்தார்கள்.

அவர்களுக்குப் பின் ஆட்சிப் பொறுப்பேற்ற உமர் (ரலி) அவர்கள் யூதன் ஒருவனால் கொல்லப்பட்டார்கள்.

அவர்களுக்குப் பின் ஆட்சிப் பொறுப்பேற்ற உஸ்மான் (ரலி) அவர்கள் கலகக்காரர்களால் படுகொலை செய்யப்பட்டார்கள்.

உமர் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகிய இருவரும் இயற்கை மரணத்தைத் தழுவ மாட்டார்கள். கொல்லப்பட்டு வீர மரணம் தான் அடைவார்கள் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்திருந்தார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகியோரும் ஒரு முறை உஹத் மலை மீது ஏறினார்கள். அப்போது உஹத் மலை நடுங்கியது. அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உஹத் மலையே அசையாமல் நில். உன் மீது ஓர் இறைத் தூதரும், ஒரு (சித்தீக்) உண்மையாளரும், வீர மரணம் அடையும் இருவரும் உள்ளனர் என்று குறிப்பிட்டார்கள்.

நூல் புகாரி 3675

உமர் (ரலி) அவர்களும், உஸ்மான் (ரலி) அவர்களும் இயற்கையாக மரணத்தைத் தழுவ மாட்டார்கள். எதிரிகளால் கொல்லப்பட்டே மரணிப்பார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்தவாறு இருவரும் எதிரிகளால் கொல்லப்பட்டனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைவனின் தூதர் தாம் என்பதை நிரூபிக்கும் சான்றாக இந்த முன்னறிவிப்பும் அமைந்துள்ளது.

8 ஒட்டகப் போர் பற்றி முன்னறிவிப்பு

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) அவர்களுக்கும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மருமகன் அலீ (ரலி) அவர்களுக்குமிடையே போர் நடக்கும் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல்வேறு வழிகளில் முன்னறிவிப்புச் செய்தனர்.

உஸ்மான் (ரலி) அவர்கள் இஸ்லாமிய அரசின் தலைநகரமான மதீனா நகரில் கலகக்காரர்களால் கொல்லப்பட்டனர். அவர்கள் கொல்லப்பட்ட பின் இக்கொலைப் பழி அலீ (ரலி) அவர்கள் மீது விழுகிறது. தான் ஆட்சிக்கு வருவதற்காக அலீ தான் உஸ்மானைக் கொல்லத் திட்டம் தீட்டினார் என்று சில விஷமிகள் பிரச்சாரம் செய்தனர்.

மற்றும் சிலர் அலீ (ரலி) அவர்களுக்கு இக்கொலையில் தொடர்பு இல்லாவிட்டாலும் கொலையாளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் தாமதம் செய்கிறார் என்றும் அவர்களைக் காப்பாற்ற முனைகிறார் என்றும் பிரச்சாரம் செய்தனர்.

உஸ்மான் (ரலி) அவர்களின் கொலைக்கு நியாயம் கேட்டு ஆயிஷா (ரலி) அவர்கள் படை திரட்டினார்கள். அலீ (ரலி) அவர்களுக்கும், ஆயிஷா (ரலி) அவர்களுக்கும் இடையே பெரிய அளவில் போர் மூண்டது. இப்போரில் ஆயிஷா (ரலி) அவர்கள் வீற்றிருந்த ஒட்டகத்தின் கால்கள் வெட்டப்பட்டன. அவர்கள் கீழே விழுந்ததும் அவர்களின் படையினர் நிலைகுலைந்து தோற்றுப் போனார்கள். இதன் காரணமாக இப்போர் ஒட்டகப் போர் என்று குறிப்பிடப்படுகிறது.

ஒட்டகப் போருக்காக ஆயிஷா (ரலி) அவர்கள் புறப்பட்ட போது வழயில் ஒரு இடத்தில் தங்கினார்கள். அந்த இடத்தில் நாய்கள் குரைத்தன. இதைக் கண்ட ஆயிஷா (ரலி) அவர்கள் இந்த இடத்தின் பெயரென்ன என்று கேட்டார்கள். அவர்களின் சகாக்கள் ஹவ்அப் என்று கூறினார்கள். உடனே ஆயிஷா (ரலி) அவர்கள் திரும்பிச் செல்ல முற்பட்டனர். தோழர்கள் காரணம் கேட்ட போது (என் மனைவியராகிய) உங்களில் ஒருவருக்கு எதிராக ஹவ்அப் என்ற இடத்தில் நாய்கள் குரைக்கும். அப்போது அவரது நிலை மோசமானதாக இருக்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதை நினைவு கூர்ந்தார்கள்.

நூல் : அஹ்மத் 24758

ஆனாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முன்னறிவிப்பின் படி தமது நிலை தவறு என்று புரிந்து கொண்டாலும் அவர்களின் சகாக்கள் செய்த நிர்பந்தத்தால் அவர்கள் போருக்குச் செல்லும் முடிவை மாற்றிக் கொள்ள முடியவில்லை.

தமது மனைவிக்கு மட்டுமின்றி மருமகன் அலீ (ரலி) அவர்களுக்கும் இது குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்தார்கள்.

அலீயே உனக்கும் என் மனைவி ஆயிஷாவுக்கும் இடையே பிரச்சினை ஏற்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அலீ (ரலி) அவர்கள் உங்கள் மனைவிக்கும், எனக்கும் இடையே சண்டை ஏற்படுமா? அப்படி நடந்தால் என்னைவிட துர்பாக்கியசாலி இருக்க முடியாது என்று கூறினார்கள். அந்தச் சம்பவம் நிகழும் போது ஆயிஷாவைப் பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பி வைத்துவிட வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : அஹ்மத் 25943

இந்த இரண்டு முன்னறிவிப்புகளும் அப்படியே முழுமையாக நிறைவேறின. அலீ (ரலி) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களைக் கன்னியமான முறையில் பாதுகாப்பாக அனுப்பி வைத்தார்கள்.

9 ஹஸன் (ரலி) மூலம் ஏற்பட்ட சமாதான உடன்படிக்கை

நான்காவது ஜனாதிபதியான அலீ (ரலி) அவர்கள் இப்னு முல்ஜிம் என்பவனால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட பின் அவர்களின் மூத்த மகன் ஹஸன் (ரலி) அவர்களை மக்கள் ஜனாதிபதியாக ஏற்றுக் கொண்டனர்.

இஸ்லாமிய அரசை இரண்டாகக் கூறு போட்டு விட்டார் என்று முஆவியா (ரலி) அவர்கள் மீது கோபமாக இருந்த மக்கள் முஆவியாவுக்கு எதிராகப் போர் செய்யுமாறு ஹஸன் (ரலி) அவர்களை வலியுறுத்தி வந்தனர். ஆரம்பத்தில் இதற்கு உடன்படாத ஹஸன் (ரலி) அவர்கள் வேறு வழியின்றி முஆவியா (ரலி) அவர்களுடன் போருக்குத் தயாரானார்கள்.

போருக்குச் செல்லும் வழியில் ஓரிடத்தில் ஹஸன் (ரலி) அவர்கள் தமது படையினருடன் தங்கினார்கள். அப்போது ஹஸன் (ரலி) அவர்களின் வலதுகரமாக விளங்கிய கைஸ் என்பார் கொல்லப்பட்டதாக வதந்தி பரவியது. இதனால் ஹஸன் (ரலி) அவர்களின் படையினர் தங்களுக்குள் மோதிக் கொள்ளும் நிலைமை ஏற்பட்டது. ஹஸன் (ரலி) அவர்களும் காயமடைந்தனர்.

கட்டுப்பாடற்ற இந்தப் படையை வைத்துப் போர் செய்வதை விட முஆவியா (ரலி) அவர்களுடன் சமாதானம் செய்து கொள்வதே சிறந்தது என்று கருதி முஆவியா (ரலி) அவர்களுக்கு ஹஸன் (ரலி) அவர்கள் மடல் எழுதினார்கள்.

தமக்குத் தேவையான மாணியத்தைப் பெற்றுக் கொள்வதாக ஒப்புக் கொண்டு தமது கட்டுப்பாட்டில் இருந்த ஆட்சியை முஆவியா (ரலி) அவர்களிடம் ஒப்படைத்து விட்டார்கள். பிரிந்து கிடந்த இஸ்லாமிய அரசு ஒரே அரசாக இதன் மூலம் வலிமை பெற்றது. முஸ்லிம்கள் தமக்கிடையே இரத்தம் சிந்துவது இதன் மூலம் தடுத்து நிறுத்தப்பட்டது.

ஹிஜ்ரி 41ஆம் ஆண்டு ரபிய்யுல் அவ்வல் மாதம் பிறை 5ல் நடந்த இந்தச் சமாதான உடன்படிக்கை பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்திருந்தார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிம்பர் மீது இருந்தார்கள். அவர்களின் அருகில் ஹஸன் (ரலி) அவர்கள் இருந்தனர். எனது இந்தப் பேரப்பிள்ளை மூலமாக முஸ்லிம்களின் இருபெரும் அணிகளிடையே அல்லாஹ் சமாதானத்தை ஏற்படுத்துவான் என்று அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : புகாரி 2704

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்தவாறு இது நிறைவேறியது.

10 வழிப்பறிக் கொள்ளைகள் தடுக்கப்படும்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து வழிப்பறிக் கொள்ளை பற்றி முறையீடு செய்தார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னிடம் ஹீரா என்ற ஊர் உனக்குத் தெரியுமா? என்று கேட்டார்கள். கேள்விப்பட்டிருக்கிறேன் என்று நான் கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கஅபாவை வலம் வருவதற்காக ஒரு பெண் ஹீரா எனும் ஊரிலிருந்து ஒட்டகத்தில் பயணம் செய்து வருவாள். அல்லாஹ்வைத் தவிர யாருக்கும் அஞ்ச மாட்டாள். உன் வாழ்நாள் அதிகரித்தால் நீ இதைக் காண்பாய் என்று என்னிடம் கூறினார்கள். வழிப்பறிக் கொள்ளை செய்வதில் வல்லவரான தய்யி கோத்திரத்தார் அப்போது எங்கே சென்றிருப்பார்கள்? என்று எனக்குள் நான் கூறிக் கொண்டேன் என்று அதீ பின் ஹாதிம் (ரலி) கூறுகிறார்.

நூல் : புகாரி 3595

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதைக் கூறும் போது ஹீரா என்ற ஊருக்கும், மக்காவுக்கும் இடையே வாழ்ந்த தய்யி எனும் கோத்திரத்தார் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்டு வந்தனர். இந்தக் கூட்டம் ஒடுக்கப்படும் என்றும், ஹீரா முதல் மக்கா வரை உள்ள பகுதிகள் முஸ்லிம்களின் கைவசம் வரும் என்றும், மிகச் சீக்கிரத்தில் இது ஏற்படும் என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்தார்கள்.

அவர்கள் முன்னறிவிப்புச் செய்தவாறு அபூபக்கர் (ரலி) அவர்களின் ஆட்சியில் ஹீரா எனும் பகுதியும், தய்யி கூட்டத்தர் வாழ்ந்த பகுதியும் முஸ்லிம்கள் கைவசம் வந்தன. கொள்ளைக் கூட்டம் ஒடுக்கப்பட்டது. தன்னந்தனியாக ஒரு பெண் ஹீராவிலிருந்து மக்கா வரை எவ்வித அச்சமுமின்றி வந்து செல்லும் உன்னதமான நிலை ஏற்பட்டது. அதீ பின் ஹாதிம் (ரலி) வாழ்நாளிலேயே இது நிறைவேறியது.

11 பாரசீகம் மற்றும் ரோமப் பேரரசின் வீழ்ச்சி பற்றிய முன்னறிவிப்பு

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இரண்டு சக்திகள் உலகின் பல நாடுகளைக் கைப்பற்றி மாபெரும் சாம்ராஜ்ஜியங்களாகத் திகழ்ந்தன.

இத்தாலியைத் தலைமையாகக் கொண்ட ரோமப் பேரரசு உலகின் பல நாடுகளைத் தனக்குக் கீழ் அடிமைப்படுத்தி மிகப் பெரும் சாம்ராஜ்யமாக விளங்கியது.

இது போல் ஈரானைத் தலைமையிடமாகக் கொண்ட பாரசீகப் பேரரசு பல்வேறு நாடுகளை அடிமைப்படுத்தி மற்றொரு சாம்ராஜ்யமாக விளங்கியது.

ரோமப் பேரரசின் மன்னர் கைஸர் என்று அழைக்கப்பட்டார்.

பாரசீகப் பேரரசின் மன்னர் கிஸ்ரா என அழைக்கப்பட்டார்.

உலகின் இருபெரும் வல்லரசுகளாகத் திகழ்ந்த பாரசீகப் பேரரசு பற்றியும், ரோமப் பேரரசு பற்றியும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்தர்கள்.

கிஸ்ரா வீழ்ந்து விட்டால் அதன் பிறகு கிஸ்ரா எவரும் இருக்க மாட்டார். கைஸர் வீழ்ந்து விட்டால் அவருக்குப் பின் கைஸர் எவரும் இருக்க மாட்டார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்தார்கள்.

நூல் : புகாரி 3618

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்தவாறு பாரசீகம் முஸ்லிம்களால் வெற்றி கொள்ளப்பட்டது. அன்று முதல் இன்று வரை பாரசீகம் எனும் ஈரான் முஸ்லிம்கள் வசமே இருந்து வருகிறது. அதன் பின்னர் கிஸ்ரா எவரும் வர முடியவில்லை.

அது போல் ரோமப் பேரரசின் கீழ் அடிமைப்பட்டுக் கிடந்த பல நாடுகள் முஸ்லிம்களின் கைவசம் வந்தன. ரோமப் பேரரசு இத்தாலியாகச் சுருங்கியது. இதன் பின்னர் இரண்டாவது கைஸர் யாரும் வர முடியவில்லை. இன்றளவும் இந்த முன்னறிவிப்பு நிறைவேறிக் கொண்டிருக்கிறது.

12 யமன் வெற்றிகொள்ளப்படும் என்ற முன்னறிவிப்பு

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில் பிரச்சாரம் செய்த ஆரம்ப காலத்தில் மகிப் பெரும் துன்பங்களை எதிர்கொண்டனர். நபிகள் நாயகத்தை நம்பி ஏற்றுக் கொண்ட மக்கள் கடுமையான சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டனர்.

சித்திரவதை தாங்காமல் நபிகள் நாயகத்தின் தோழர்கள் முறையீடு செய்தனர். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கீழ்க்கண்ட முன்னறிவிப்பை வெளியிட்டார்கள்.

அல்லாஹ்வின் மேல் ஆணையாக! இந்த மார்க்கத்தை அல்லாஹ் முழுமைப்படுத்துவான். யமனில் உள்ள ஒருவர் ஹள்ரமவ்த் என்னும் ஊரிலிருந்து ஸன்ஆ எனும் ஊர் வரை அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் அஞ்சாமல் பயணம் செய்வார். தனது ஆடுகள் விஷயத்தில் ஓநாய்கள் பற்றி அஞ்சுவதைத் தவிர (கொலை கொள்ளை போன்ற) அச்சம் எதுவும் அவருக்கு இருக்காது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : புகாரி 3612

உயிர் வாழ்வதே கேள்விக் குறியாக இருந்த நெருக்கடியான காலகட்டத்தில் வெற்றிக்கான எந்த அறிகுறியும் தென்படாத காலத்தில் ஏமன் நாடு முஸ்லிம்களால் வெற்றி கொள்ளப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிரகடனம் செய்தார்கள். அவர்கள் பிரகடனம் செய்தது போலவே உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் ஏமன் நாடு முஸ்லிம்களின் கீழ் வந்தது. இஸ்லாத்தின் கடுமையான குற்றவியல் சட்டம் காரணமாக ஹள்ரமவ்த்திலிருந்து ஸன்ஆ வரை அச்சமின்றி பயணம் மேற்கொள்ளும் பொற்காலமும் வந்தது.

13 பைத்துல் முகத்தஸ் வெற்றி கொள்ளப்படுதல்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் ரோமப் பேரரசின் கீழ் தான் பைத்துல் முகத்தஸ் என்ற புனிதத் தலம் இருந்தது. முஸ்லிம்களின் மூன்று புனிதப் பள்ளிவாசல்களில் ஒன்றான இப்பள்ளியிலிருந்து தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விண்ணுலகப் பயணத்துக்கு இறைவனால் அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதைப் பற்றியும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்தார்கள்.

உலகம் அழிவதற்கு முன் ஆறு நிகழ்வுகள் நிகழும். அவற்றை எண்ணிக் கொள் என்று கூறிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முதலாவதாக தமது மரணத்தைக் குறிப்பிட்டார்கள். இரண்டாவது பைத்துல் முகத்தஸ் வெற்றி கொள்ளப்படும் என்பதைக் குறிப்பிட்டார்கள்.

நூல் : புகாரி 3176

ஜெருசலம் நகரமும், அதில் உள்ள பைத்துல் முகத்தஸ் பள்ளிவாசலும் முஸ்லிம்களுக்கு மட்டுமின்றி கிறித்தவர்களுக்கும், யூதர்களுக்கும் புனிதத் தலங்களாக இருந்தன. ரோமப் பேரரசின் கீழ் இருந்த நாடுகளில் ஜெருசலம் முக்கியத்துவம் வாய்ந்ததாகத் திகழ்ந்தது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்தது போலவே பைத்துல் முகத்தஸ் முஸ்லிம்கள் கைவசம் வந்தது.

முஸ்லிம்களில் எழுச்சியைக் கண்டு திகைத்த கிறித்தவ பாதிரிமார்கள் எவ்வித எதிர்ப்புமின்றி உமர் (ரலி) அவர்களிடம் ஜெரூசலத்தை ஒப்படைத்தார்கள்.

14 எகிப்து வெற்றி கொள்ளப்படும் என்ற முன்னறிவிப்பு

உலகின் பழமையான நாடுகளில் ஒன்றாகத் திகழ்ந்த எகிப்து ரோமப் பேரரசின் கீழ் அடிமைப்பட்டுக் கிடந்தது.

எகிப்தை முஸ்லிம்கள் வெற்றி கொள்வார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்தார்கள்.

நூல் : முஸ்லிம்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்து பத்து ஆண்டுகளில் உமர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் எகிப்தை முஸ்லிம்கள் வெற்றி கொண்டனர்.

நபிகள் நாயகத்தின் இந்த முன்னறிவிப்பும் நிறைவேறி அவர்கள் இறைவனின் தூதர் தான் என்பதை நிரூபித்தது.

15 போலி இறைத்தூதர்கள் பற்றிய எச்சரிக்கை

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறைவனின் தூதர் என்று தம்மை அறிமுகம் செய்தார்கள். அதற்கான சான்றுகளையும் முன் வைத்தார்கள்.

இதனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் செல்வாக்கு அதிகரித்து மாபெரும் தலைவராக உருவெடுத்தார்கள். இதைக் கண்ட போலிகள் சிலர் தம்மையும் இறைத்தூதர்கள் என்று அறிவித்துக் கொண்டனர். இதனால் நபிகள் நாயகத்தைப் போலவே தாங்களும் தனிப் பெரும் தலைவர்களாக உருவெடுக்கலாம் என்று எண்ணத் தலைப்பட்டனர்.

இதில் முக்கியமானவன் முஸைலாமா என்பவன். யமாமா என்ற பகுதியைச் சேர்ந்த இவன் நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் மதீனா வந்து நபிகள் நாயகத்தைச் சந்தித்தான். உங்களுக்குப் பின் நான் ஒரு நபி என்பதை நீங்கள் ஏற்றுக் கொண்டால் உங்களை நபி என்று நான் ஏற்றுக் கொள்கிறேன் என்று நபிகள் நாயகத்திடம் பேரம் பேசினான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவனை எச்சரித்து அனுப்பினார்கள்.

நூல் : புகாரி 3620

இவனைப் போலவே அஸ்வத் அல் அன்ஸீ என்பவனும் தன்னை நபியெனப் பிரகடனப்படுத்தி ஏமன் மக்களை வழி கெடுத்தான். இவ்விரு போலி நபிகளின் பிரச்சினை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பெரும் கவலையில் ஆழ்த்தியது. மக்களை வழி கெடுக்கிறார்களே என்று ஆதங்கப்பட்டார்கள். ஆனாலும் இவர்கள் தோல்வியடைவார்கள் என்று இறைவன் அறிவித்துக் கொடுத்தான். அதைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின்வருமாறு அறிவிப்புச் செய்தார்கள்.

நான் தூங்கிக் கொண்டிருந்த போது என் கைகளில் இரண்டு தங்கக் காப்புகளைக் கண்டேன். அவை எனக்குப் பாரமாக இருந்தன. அதை ஊதி விடுவீராக என்று எனக்குக் கூறப்பட்டது. நான் ஊதியவுடன் அவை பறந்து விட்டன. இந்தக் கனவு அஸ்வத் மற்றும் யமாமாவின் முஸைலமா ஆகிய போலி நபிகள் பற்றியது என்று விளங்கிக் கொண்டேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

நூல் : புகாரி 3621, 4374, 4375, 4379

இவ்விருவரும் வெளித் தோற்றத்தில் வலிமை மிக்கவர்களாகக் காட்சி தந்தாலும் உண்மையில் அவர்களின் வாதம் அழிந்து போகும் என்று இறைவன் புறத்திலிருந்து நபிகள் நாயகத்துக்கு அறிவிக்கப்பட்டது. அவ்வாறே இவ்விருவரின் கதையும் முடிந்தது.

யமாமாவில் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்த முஸைலமாவை ஒழிக்க படை ஒன்றை அபூபக்கர் (ரலி) அவர்கள் அவர்கள் தமது ஆட்சியின் போது அனுப்பினார்கள். இப்போரில் முஸைலமா கொல்லப்பட்டான். உஹதுப் போரில் ஹம்ஸா (ரலி) அவர்களைக் கொன்ற வஹ்ஷி அவர்கள் தான் அவர்கள் தான் இவனைக் கொன்றார்கள்.

பிற்காலத்தில் இது பற்றி வஹ்ஷி (ரலி) அவர்கள் கூறும் போது மனிதர்களில் மிகவும் சிறந்தவரை (ஹம்ஸாவை) நான் தான் கொன்றேன். மிக மோசமான மனிதனையும் (முஸைலமாவை) நான் தான் கொன்றேன் என்று குறிப்பிட்டார்கள். இது போலவே ஏமன் நாட்டில் தன்னை நபியென வாதிட்டு மக்களை வழிகெடுத்த அஸ்வத் அல் அன்ஸியும், பைரோஸ் என்பவரால் கொல்லப்பட்டான்.

இவ்விருவராலும் போலியான இரண்டு மதங்கள் தோன்றி நிலைத்து விடுமோ என்று ஆரம்பத்தில் நபிகள் நாயகம் அஞ்சினாலும் பின்னர் இறைவனின் அறிவிப்பால் அந்த அச்சம் விலகியது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறுதி நபி என்பதால் அவர்களுக்குப் பின் எந்த இறைத்தூதரும் வரமுடியாது. வருவதற்கான எந்த அவசியமும் இல்லை என்பதை நாம் அறிந்து வைத்துள்ளோம்.

அவர்களுக்கு அருளப்பட்ட இஸ்லாம் முழுமையாக்கப்பட்டதாகவும் பாதுகாக்கப்பட்டதாகவும் உள்ளதால் எந்தத் தூதரும் வரவேண்டிய தேவை இல்லை.

தனக்குப் பின் எந்த நபியும் வர மாட்டார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவாகவும் அறிவித்துள்ளனர். திருக்குர்ஆனிலும் இதற்கு ஏரளமான சான்றுகள் உள்ளன.

ஆனாலும் இறைத்தூதர் என்று ஒருவரை மக்கள் நம்பினால் எவ்விதக் கேள்வியும் ஆதாரமும் கேட்காமல் மக்கள் அவரைப் பின்பற்றுவார்கள் என்பதால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின் பலர் தம்மை இறைத்தூதர் என்று அறிவித்துக் கொண்டார்கள். இதைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பின்வருமாறு அறிவித்தார்கள்.

எனக்குப் பின் முப்பது பொய்யர்கள் தோன்றுவார்கள். அனைவரும் தம்மை நபியெனக் கூறிக் கொள்வார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : புகாரி 7121

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியது போலவே தலீஹா, முக்தார் சில ஆண்டுகளுக்கு முன் மிர்சா குலாம் அஹ்மத் காதியானி என்பவன் உள்ளிட்ட பொய்யர்கள் தம்மை இறைத்தூதர் என்று வாதிட்டனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்தவாறு பொய்யர்கள் வந்து கொண்டு தான் இருப்பார்கள்.

16 ஸம்ஸம் கிணறு பற்றிய முன்னறிவிப்பு

மக்காவில் ஸம்ஸம் என்ற கிணறு உள்ளது. ஆண்டு முழுவதும் மக்காவாசிகளும், புனிதப் பயணம் செய்வோரும் இந்தத் தண்ணீரைத் தான் பயன்படுத்துகின்றனர்.

ஹஜ் காலத்திலும், புனித ரமளான் மாதத்திலும் இருபது லட்சத்துக்கும் அதிகமான மக்கள் குழுமி இந்தத் தண்ணீரைப் பயன்படுத்துகின்றனர். கேன்களில் அடைத்து தமது ஊர்களுக்கும் எடுத்துச் செல்கின்றனர்.

பாலைவனத்தில் நிலத்தடி நீர் போதுமான அளவில் இருக்காது. இத்தகைய பாலைவனத்தில் உள்ள ஒரு கிணறு பல ஆயிரம் ஆண்டுகள் வற்றாத நீரூற்றாகவும் எத்தனை இலட்சம் மக்கள் குழுமினாலும் அவர்களின் தேவையை நிறைவு செய்வதாகவும் அமைந்துள்ளது. இது எப்படிச் சத்தியம் உலகமே அதிசயிக்கும் இந்தக் கிணறு பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்தார்கள். இக்கிணறு உருவான வரலாற்றையும் அவர்கள் விளக்குகிறார்கள்.

இப்ராஹீம் (அலை) அவர்கள் இறைவனின் கட்டளைப்படி தமது மனைவி ஹாஜர் அவர்களையும் குழந்தை இஸ்மாயீலையும் இப்போது மக்கா நகரம் அமைந்துள்ள இடத்தில் விட்டுச் சென்றார்கள். அப்போது யாரும் குடியிருக்காத பாலை நிலமாக அது இருந்தது. குழந்தை இஸ்மாயீல் தாகத்தால் துடித்த போது ஜிப்ரீல் எனும் வானவரை இறைவன் அனுப்பி அவர் மூலம் நீரூற்றை வெளிப்படுத்தினான். ஹாஜர் அவர்கள் அந்தத் தண்ணீரை ஓடவிடாமல் தடுப்பு ஏற்படுத்தினார்கள். அவர்கள் அவ்வாறு செய்திருக்காவிட்டால் அது வற்றாத ஜீவநதியாக ஓடிக் கொண்டிருக்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : புகாரி 3364

அந்தக் கிணறு இறைவன் கட்டளைப்படி உருவாக்கப்பட்டது என்பதையும் வற்றாத நதியாக ஓடும் அளவுக்கு அதன் நீரோட்டம் அமைந்துள்ளது என்பதையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்ததற்கு ஏற்ப இன்று வரை இலட்சக்கணக்கான மக்களுக்கு தினசரி தண்ணீரை வழங்கிக் கொண்டிருக்கிறது.

17 தனது எஜமானியைத் தானே பெற்றெடுக்கும் பெண்கள் பற்றிய முன்னறிவிப்புகள்

யுக முடிவு நாள் நெருங்கும் போது ஏற்படும் மாற்றங்கள் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல முன்னறிவிப்புகளைச் செய்துள்ளனர். அவற்றுள் முக்கியமான அடையாளங்களைத் தனி நுலாக ஏற்கனவே நாம் வெளியிட்டுள்ளோம்.

ஒரு பெண் தனது எஜமானியைத் பெற்றெருப்பாள் என்பதும் அவற்றுள் ஒன்றாகும்.

நூல் : புகாரி 4777

ஒரு பெண் தனது எஜமானியைப் பெற்றெடுப்பாள் என்பதன் கருத்து என்ன?

பொதுவாகப் பெண்கள் தங்கள் முதுமையில் தங்கள் புதல்வர்களால் கவனிக்கப்படுபவார்கள். இது தான் ஆரம்ப முதல் வழக்கமாக இருந்து வருகிறது.

ஆனால் பெற்ற தாயைக் கவனிப்பாரற்று விடும் ஆண்கள் இன்று அதிகரித்து வருகின்றனர். இதனால் தாய் தனது மகளைச் சார்ந்து அவள் வீட்டில் அடைக்கலமாவது அதிகரித்து வருகிறது.

அந்த வீட்டின் எஜமானியாக மகள் இருப்பாள்; அந்த எஜமானியின் கீழ் அவளைப் பெற்ற தாய் அண்டி வாழும் நிலை ஏற்படுகிறது.

பெற்ற தாயை ஆண்பிள்ளைகள் கவனிக்க மாட்டார்கள். பெண் பிள்ளைகள் தான் அவர்களைச் சுமப்பார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சுட்டிக் காட்டிய இந்தச் சீரழிவு இன்று அதிகரித்து வருவதை நாம் காண்கிறோம்.

18 ஆடு மேய்ப்பவர்கள் உயரமான கட்டடங்களைக் கட்டுவர்

கறுப்பு ஒட்டகங்களை மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் உயரமான கட்டடங்களைக் கட்டுவார்கள்

நூல் : புகாரி 50

ஆடு மேய்த்துக் கொண்டிருந்தவர்கள் உயர்ந்த கட்டடங்களை எழுப்புவார்கள்

நூல் : முஸ்லிம் 9

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் உயரமான கட்டடங்களைக் கட்டுவது எளிதானதாக இருக்கவில்லை. அரசாங்கம் மட்டுமே இதைச் செய்ய முடியும் என்ற அளவுக்கு இது சிரமமானதாக இருந்தது.

இந்த நிலை மாறும்; சர்வ சாதாரணமாக உயரமான கட்டடங்கள் கட்டும் தொழில் நுட்பம் கண்டுபிடிக்கப்படும் என்ற கருத்து மேற்கண்ட சொற்றொடரில் அடங்கியுள்ளது. இதற்கேற்ப எளிதாக உயரமான கட்டடங்களைக் கட்டும் தொழில் நுட்பம் இன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஏழைகள் தீடீர் பணக்காரர்களாக ஆவதற்கான வழிகள் கடந்த காலங்களில் இல்லை. இன்றோ புதிய வகையான தொழில் முறைகளால் அடித்தட்டு மக்கள் கூட திடீரென்று வசதி மக்கவர்களாக ஆக முடிகின்றது.

இந்த இரண்டு மாறுதலையும் மேற்கண்ட சொற்கள் மூலம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்கிறார்கள்.

19 ஆடை அணிந்தும் நிர்வாணம்

எதிர்காலத்தில் இரண்டு சாரார் தோன்றுவார்கள். இவர்களை இன்னும் நான் காணவில்லை. ஒரு சாரார் மாட்டு வால்களைப் போன்ற சாட்டைகளை வைத்துக் கொண்டு மக்களைச் சித்திரவதை செய்வார்கள். இன்னொரு சாரார் சில பெண்கள். அவர்கள் ஆடை அணிந்தும் நிர்வாணமாக இருப்பார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : முஸ்லிம் 3971

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்துக்குப் பின் மக்களை அடக்கி ஒடுக்கும் சர்வாதிகாரிகள் தோன்றினார்கள்.

இன்று நாம் வாழ்கின்ற காலத்தில் பெண்கள் மெல்லிய சருகுகள் போன்ற ஆடைகளை அணிகின்றனர். இதனால் ஆடை அணிந்தும் நிர்வாணமாக அவர்கள் காட்சி தருகின்றனர்.

மேலும் பலர் அரை குறை ஆடைகள் அணிந்து மறைக்க வேண்டிய பகுதிகளை வெளிப்படுத்திக் காட்டுகின்றனர்.

ஆடை அணிந்தும் நிர்வாணமாக இருப்பார்கள் என்ற நபிகள் நாயகத்தின் முன்னறிவிப்பு நிறைவேறிக் கொண்டிருக்கிறது.

பொதுவான முன்னறிவிப்புகள்

விபச்சாரம் பெருகும்

கொலைகள் அதிகரிக்கும்

நாணயமும், நேர்மையும் அரிதாகி விடும்

பெண்களின் எண்ணிக்கை அதிகமாகும்

பூகம்பங்கள் அதிகமாகும்

செல்வம் பெருகும்

என்றெல்லாம் பொதுப்படையாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் முன்னறிவிப்புச் செய்துள்ளனர்.

இவையனைத்தும் இன்று நிறைவேறி வருவதை நாம் காண்கிறோம்.

இதுவரை நாம் எடுத்துக் காட்டியவை நம்முடைய சிற்றறிவில் பட்டவை மட்டும் தான். சிந்தனையாளர்களும், அறிஞர்களும் திருக்குர்ஆனை ஆழமாகச் சிந்தித்தால் இன்னும் எண்ணற்ற அதிசயங்களைத் திருக்குர்ஆனில் நிச்சயம் காண்பார்கள். திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ள அறிவியல் உண்மைகளும், எதிர்கால நிகழ்வுகளை எடுத்துக் கூறும் வசனங்களும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முன்னறிவிப்புக்களும் இஸ்லாம் இறைவன் புறத்திலிருந்து அருளப்பட்ட மார்க்கம் என்பதைச் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபித்துக் கொண்டிருக்கின்றன.

12.07.2009. 10:30 AM

Leave a Reply