ஸஹருக்கு பாங்கு சொல்வது குழப்பத்தை ஏற்படுத்துமா?:

ஸஹருக்கு பாங்கு சொல்வது குழப்பத்தை ஏற்படுத்துமா?:

ஹதீஸ் மறுப்பாளர்களுக்கு பதில்!

தற்போது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் எழுச்சியை பொறுத்துக் கொள்ள முடியாமல் எரிச்சல் கண்டவர்கள் நம்மை பார்த்து, ஹதீஸ் மறுப்பாளர்கள் என்று அவதூறு பரப்பி வருகின்றார்கள்.

ஆனால் உண்மை என்ன தெரியுமா?

இப்படி நம்மைப் பார்த்து அவதூறு பரப்புபவர்கள் தான் உண்மையில் ஹதீஸ் மறுப்பாளர்களாக உள்ளார்கள்.

ஸஹருக்கு பாங்கு சொல்வது நபி வழி என்பதை நாம் அறிவோம்.

இது குறித்த முழு தகவல்களைக் காண இங்கே கிளிக் செய்யவும்.

ஸஹருக்கு பாங்கு உண்டா?

குர்ஆன் ஹதீசைச் சரியாக பின்பற்றுவதாகக் கூறிக் கொள்ளும் ஜாக் என்ற இயக்கத்தினர் ஸஹருக்கு பாங்கு சொல்லும் நபிவழியைப் பின்பற்றினால் குழப்பம் ஏற்படும் என்று சொல்லி ஹதீஸை நிராகரித்துள்ளனர்.

இது குறித்து அவர்களது இதழில் கேட்கப்பட்ட கேள்வியும், அதற்கு அவர்களது உளறலும், அதற்கு நமது விளக்கத்தையும் இங்கே காண்போம்.

ஸஹர் பாங்கு குழப்பமா?:

அல்ஜன்னத் மாத இதழில் ஒரு கேள்விக்குப் பதில் அளிக்கும் போது,, ஸஹர் பாங்கு சொல்வதால் குழப்பம் ஏற்படும் என்று கூறி, ஸஹர் பாங்கு சொல்லத் தேவையில்லை என்று எழுதியுள்ளார்கள்.

ஹதீஸைச் செயல்படுத்தினால் குழப்பம் ஏற்படும் என்று மத்ஹபுவாதிகள் கூறிய அதே காரணத்தை இப்போது இவர்கள் கூறியுள்ளார்கள் என்பதைப் பார்க்கும் போது இவர்கள் குர்ஆன், ஹதீஸை விட்டு விலகி எங்கோ சென்று விட்டார்கள் என்பதையே இது காட்டுகின்றது.

அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும் போது நம்பிக்கை கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் தமது அக்காரியத்தில் சுய விருப்பம் கொள்ளுதல் இல்லை. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்பவர் தெளிவாக வழிகெட்டு விட்டார்.

திருக்குர்ஆன் 33:36

அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் ஒன்றைக் கற்றுத் தந்திருக்கும் போது, மனோ இச்சையின் அடிப்படையில் அதை மறுப்பது தெளிவான வழிகேடாகும் என்பதை இந்த வசனம் விளக்குகின்றது.

இந்த ஹதீஸை நிராகரிக்க ஜாக் இயக்கம் சொல்லும் காரணம் இதுதான்:

தூங்குபவர்கள் எழுந்து ஸஹர் செய்ய வேண்டும் என்ற காரணத்தை மட்டும் அடிப்படையாக வைத்துச் சொல்லப்பட்டதாகும். ஸஹர் நேரத்தை மக்களுக்குத் தெரிவிப்பது தான் இதன் நோக்கம். இன்று நேரத்தைத் தெரிந்து கொள்வதற்கு எத்தனையோ வழிமுறைகள் கையாளப்படுகின்றன. நேரத்தை அறிந்து கொள்வது என்ற காரணம் நிறைவேறிவிடுமானால் அதுவே போதுமானதாகக் கொள்ளலாம்

என்று வியாக்கியானம் கூறியுள்ளனர்.

இவர்கள் கூறுகின்ற காரணத்துக்காகத் தான் ஸஹர் பாங்கு என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவில்லை. வணக்க வழிபாடுகளைப் பொருத்தவரை ஒரு காரணத்துக்காக அது ஏற்படுத்தப்பட்டாலும் அது தொடர் வணக்கமாக ஆக்கப்பட்டால் அதை மாற்ற முடியாது.

தொழுகைக்கு அழைக்கப்படும் பாங்கை எடுத்துக் கொள்வோம்.

صحيح البخاري

606 – حَدَّثَنَا مُحَمَّدٌ هُوَ ابْنُ سَلاَمٍ، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ الوَهَّابِ الثَّقَفِيُّ، قَالَ: أَخْبَرَنَا خَالِدٌ الحَذَّاءُ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: «لَمَّا كَثُرَ النَّاسُ» قَالَ: «ذَكَرُوا أَنْ يَعْلَمُوا وَقْتَ الصَّلاَةِ بِشَيْءٍ يَعْرِفُونَهُ، فَذَكَرُوا أَنْ يُورُوا نَارًا، أَوْ يَضْرِبُوا نَاقُوسًا فَأُمِرَ بِلاَلٌ أَنْ يَشْفَعَ الأَذَانَ، وَأَنْ يُوتِرَ الإِقَامَةَ»

தொழுகைக்கான நேரத்தை மக்களுக்கு அறிவிப்பதற்காகத் தான் பாங்கு அறிமுகப்படுத்தப்பட்டது. மக்களின் எண்ணிக்கை அதிகமான போது, அவர்கள் அறிந்திருக்கின்ற ஏதாவது ஒரு முறையில் தொழுகையின் நேரத்தை அறிந்து கொள்ள ஆலோசித்தனர். அப்போது நெருப்பை மூட்டுவதன் மூலமோ, மணி அடிப்பதன் மூலமோ அறிந்து கொள்ளலாம் என கருத்துச் சொல்லப்பட்டது. ஆனால் பாங்கின் வாசகங்களை இரட்டை இரட்டையாகவும் இகாமத்தின் வாசகங்களை ஒற்றையாகவும் சொல்லுமாறு பிலால் (ரலி) கட்டளையிடப்பட்டார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)

நூல்: புகாரி 606

தொழுகையின் நேரத்தை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பது தான் தொழுகைக்கான பாங்கின் நோக்கம் என்பது தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இன்று நேரத்தைத் தெரிந்து கொள்வதற்கு எத்தனையோ வழிமுறைகள் கையாளப்படுகின்றன. நேரத்தை அறிந்து கொள்வது என்ற காரணம் நிறைவேறிவிடுமானால் அதுவே போதுமானதாகக் கொள்ளலாம் என்று இவர்கள் கூறும் வியாக்கியானத்தின் அடிப்படையில் ஐவேளைத் தொழுகைக்கு பாங்கு சொல்லத் தேவையில்லை என்று இவர்கள் வாதிடுவார்களா?

காரணத்தோடு ஒரு விஷயம் சொல்லப்பட்டால் அந்தக் காரணம் இல்லாவிட்டால் பின்பற்றத் தேவையில்லை என்பது வணக்க வழிபாடுகளுக்குப் பொருந்தாது என்பதை விளங்கிக் கொள்ள இதுவே போதுமானதாகும்.

தங்களது கருத்தை நியாயப்படுத்துவதற்காக மேலும் சில வாதங்களையும் முன் வைத்துள்ளனர்.

இரண்டு பாங்குக்கும் இடையிலுள்ள இடைவெளி மேடையில் ஏறி இறங்கும் நேரம் தான் என்று ஹதீஸில் இடம் பெறுகின்றது. அதாவது இரண்டு பாங்குக்கும் இடையில் அதிகப்படியாக ஐந்து நிமிட இடைவெளி தான் இருக்கும் என்று தெரிய வருகின்றது… ஐந்து நிமிட இடைவெளிக்குள் இரண்டு பாங்குகள் சொல்லும் போது மக்களிடம் குழப்பமான நிலை ஏற்படும்

என்றும் ஜாக் பத்திரிகையில் கூறியுள்ளனர்.

மேடையில் ஏறி, இறங்கும் நேரம் தான் என்று ஒரு அறிவிப்பாளர் கூறுவதை மட்டும் அடிப்படையாக வைத்து, ஐந்து நிமிட இடைவெளி என்று முடிவு செய்ய முடியாது. ஏனெனில் மற்றொரு அறிவிப்பில்,

صحيح البخاري

1921 – حَدَّثَنَا مُسْلِمُ بْنُ إِبْرَاهِيمَ، حَدَّثَنَا هِشَامٌ، حَدَّثَنَا قَتَادَةُ، عَنْ أَنَسٍ، عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: «تَسَحَّرْنَا مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ قَامَ إِلَى الصَّلاَةِ»، قُلْتُ: كَمْ كَانَ بَيْنَ الأَذَانِ وَالسَّحُورِ؟ " قَالَ: «قَدْرُ خَمْسِينَ آيَةً»

ஸஹருக்கும், சுப்ஹுக்கும் இடையில் ஐம்பது வசனங்கள் ஓதும் அளவுக்கு இடைவெளி இருக்கும் என்று அனஸ் (ரலி) அறிவிக்கின்றார்கள்.

நூல் : புகாரி 1921

ஐம்பது வசனங்கள் ஓதும் நேரம் என்பது சாதாரணமாக நிறுத்தி நிதானமாக ஓதினால் இருபது நிமிடத்திலிருந்து அரை மணி நேரம் வரை தேவைப்படும். எனவே இரண்டு பாங்குக்கும் இடையில் அரை மணி நேரம் இடைவெளி விடலாம். ஆனால் இவர்களாக ஐந்து நிமிட இடைவெளி என்று தீர்மானித்துக் கொண்டு அதனால் குழப்பம் ஏற்படும் என்று கூறுகின்றனர்.

ஒரே ஊரில் பல பள்ளிகள் இருப்பதால் எல்லா பள்ளிகளிலும் பாங்கு சொல்லும் போது இது முதலாவதா, இரண்டாவதா என்பது தெரியாமல் மக்களிடம் குழப்பம் அதிகரித்து விடும் என்றும் கூறியுள்ளனர்.

ஸஹர் பாங்கு என்ற நபிவழியைப் புறக்கணிப்பதற்காக, நேரம் அறிந்து கொள்ள எத்தனையோ வழிமுறைகள் இருப்பதாக வாதிட்டார்கள். ஆனால் அதே சமயம், இரண்டு பாங்கு சொல்லப்படும் போது பாங்கின் நேரத்தை வைத்து இது எந்த பாங்கு என்பதைத் தீர்மானிக்கலாம் என்று கூறாமல் குழப்பம் அதிகரிக்கும் என்று கூறுகின்றனர் என்றால் இவர்களுக்கு ஹதீஸைச் செயல்படுத்துவதில் எந்த அளவுக்கு ஈடுபாடு உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம்.

இந்த ஹதீஸை எப்படியாவது நிராகரித்துவிட வேண்டும் என்பதுதான் இவர்களது நோக்கம் என்பது இதன் மூலம் வெட்ட வெளிச்சமாகின்றது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த ஸஹர் பாங்கை, இது போன்ற பொருந்தாத காரணங்களைக் கூறி புறக்கணிக்கின்றனர். மக்களிடம் வழக்கத்தில் இல்லை என்றால் உரிய முறையில் அறிவிப்புச் செய்து விட்டு அதை நடைமுறைப்படுத்த வேண்டும். இத்தனை மணிக்கு ஸஹர் பாங்கு சொல்லப்படும், இத்தனை மணிக்கு சுப்ஹ் பாங்கு சொல்லப்படும் என்பதை போஸ்டர்கள் மூலமோ, பிரசுரங்கள் மூலமோ அறிவிப்புச் செய்தால் எந்தக் குழப்பமும் ஏற்படாது.

இன்று பல ஊர்களில் தவ்ஹீது ஜமாஅத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் ஸஹர் பாங்கு சொல்லப்படுகின்றது. அந்த ஊர்களிலெல்லாம் எந்தக் குழப்பமும் ஏற்படவில்லை. குழப்பம் இவர்களுடைய கொள்கையில் தான் உள்ளது.

விரலசைத்தல், நெஞ்சின் மீது கை கட்டுதல், இரவுத் தொழுகை போன்றவற்றுக்குத் தெளிவான ஆதாரங்கள் இருந்த போதும், மக்களிடம் நடைமுறையில் இல்லை என்பதால் அதைக் குழப்பம் என்று குராஃபிகள் கூறினர். இப்போது அதே வழிமுறையைப் பயன்படுத்தி, இவர்களும் தாங்கள் செயல் படுத்தவில்லை என்பதற்காக, நபிவழியைக் குழப்பம் என்று கூறுகின்றார்கள் என்றால் இவர்கள் எந்த நிலைக்குச் சென்று விட்டார்கள் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இதன் மூலம் இவர்கள் ஹதீஸ்களைத் திருப்பவும், வளைக்கவும் முனைந்துள்ளார்கள். இதுதான் தெளிவான ஹதீஸ் நிராகரிப்பு. இவர்கள் தான் உண்மையிலேயே ஹதீஸ் மறுப்பாளர்கள்.

18.06.2015. 5:11 AM

Leave a Reply

About Me

இறைவனின் திருப்பெயரால்…

  • இந்த தளத்தில் உள்ள செய்திகள் ஏகத்துவ கொள்கையை சொல்லும் பல்வேறு இணையதளத்தில் இருந்து எடுத்து தொகுக்கப்பட்டவை (ஆன்லைன்பீஜே, ஆன்லைன் டிஎன்டிஜே, etc).
  • இதில் தவறான கருத்துகள் ஏதேனும் இருப்பின் அதை Facebook page https://www.facebook.com/Thowheed.org என்ற முகவரிக்கு அனுப்பி தெரிவிக்கலாம்.
  • உங்கள் ஆக்கங்களையும்
  • Facebook page https://www.facebook.com/Thowheed.org என்ற முகவரிக்கு
  • என்ற முகவரிக்கு அனுப்பவும். ஆசிரியர் சரிபார்த்தபின் வெளியிடப்படும்.
  • இந்த தளத்திற்கும் எந்த அமைப்பிற்கும் எந்த தொடர்பும் கிடையாது.

You may want to read

Follow Us

Sign up for our Newsletter

Click edit button to change this text. Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit