அத்தியாயம் : 22 அல் ஹஜ்

அத்தியாயம் : 22

அல் ஹஜ் – கடமையான ஒரு வணக்கம்

மொத்த வசனங்கள் : 78

ந்த அத்தியாயத்தின் 27 முதல் 37 வரை உள்ள வசனங்களில் ஹஜ் பற்றியும், அதன் ஒழுங்குகள் பற்றியும் கூறப்படுவதால் இந்த அத்தியாயத்திற்கு இவ்வாறு பெயர் சூட்டியுள்ளனர்.


 

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்…

1. மனிதர்களே! உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அந்த நேரத்தின்1 திடுக்கம் கடுமையான விஷயமாகும்.

2. நீங்கள் அதைக் காணும் நாளில் பாலூட்டும் ஒவ்வொருத்தியும், தான் பாலூட்டியதை (குழந்தையை) மறந்து விடுவாள். ஒவ்வொரு கர்ப்பிணியும், தன் கருவில் சுமந்ததை ஈன்று விடுவாள். போதை வயப்பட்டோராக மனிதர்களைக் காண்பீர்! அவர்கள் போதை வயப்பட்டோர் அல்லர். மாறாக அல்லாஹ்வின் வேதனை கடுமையானது.

3. அல்லாஹ்வின் விஷயத்தில் அறிவின்றி தர்க்கம் செய்வோரும், வழிகெடுக்கும் ஒவ்வொரு ஷைத்தானைப் பின்பற்றுவோரும் மனிதர்களில் உள்ளனர்.

4. "தன்னைப் பொறுப்பாளனாக ஆக்கிக் கொண்டவனை அவன் வழிகெடுத்து விடுவான். நரகத்தின் வேதனைக்கு வழிகாட்டுவான்'' என்று அவனுக்கு எதிராக எழுதப்பட்டு விட்டது.

5. மனிதர்களே! மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவதில் நீங்கள் சந்தேகத்தில் இருந்தால் (உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறோம்.) உங்களை மண்ணாலும்,368 பின்னர் விந்துத் துளியாலும், பின்னர் கருவுற்ற சினைமுட்டையாலும்,365&506 பின்னர் முழுமைப்படுத்தப்பட்டதும் முழுமைப்படுத்தப்படாததுமான தசைக்கட்டியாலும் படைத்தோம்.368 நாம் நாடியதைக் கருவறைகளில் குறிப்பிட்ட காலம் வரை நிலைபெறச் செய்கிறோம்.144 பின்னர் உங்களைக் குழந்தையாக வெளிப்படுத்துகிறோம். பின்னர் நீங்கள் பருவத்தை அடைகின்றீர்கள். உங்களில் கைப்பற்றப்படுவோரும் உள்ளனர். அறிந்த பின் எதையும் அறியாமல் போவதற்காக தள்ளாத வயது வரை கொண்டு செல்லப்படுவோரும் உங்களில் உள்ளனர்.333 பூமியை வறண்டதாகக் காண்கிறீர். அதன் மீது நாம் தண்ணீரை இறக்கும்போது, அது செழித்து வளர்ந்து அழகான ஒவ்வொரு வகையையும் முளைக்கச் செய்கிறது.

6. அல்லாஹ்வே உண்மையானவன் என்பதும், அவன் இறந்தோரை உயிர்ப்பிப்பான் என்பதும், அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன் என்பதுமே இதற்குக் காரணம்.

7. யுகமுடிவு நேரம்1 வந்தேதீரும்! அதில் எந்தச் சந்தேகமும் இல்லை. மண்ணறைகளில் உள்ளவர்களை அல்லாஹ் உயிர்ப்பிப்பான்.

8. அறிவும், நேர்வழியும், ஒளிவீசும் வேதமும் இன்றி அல்லாஹ்வின் விஷயத்தில் தர்க்கம் செய்பவனும் மனிதர்களில் இருக்கிறான்.

9. அல்லாஹ்வின் பாதையை விட்டும் வழிகெடுப்பதற்காக தனது கழுத்தைத் திருப்பிக் கொள்கிறான். அவனுக்கு இவ்வுலகில் இழிவு உண்டு. கியாமத் நாளில்1 சுட்டெரிக்கும் வேதனையை அவனுக்குச் சுவைக்கச் செய்வோம்.

10. நீ செய்த வினையின் காரணமாகவே இந்த நிலை. அல்லாஹ் அடியார்களுக்கு அநீதி இழைப்பவனாக இல்லை (எனக் கூறுவோம்.)

11. விளிம்பில் இருந்து கொண்டு அல்லாஹ்வை வணங்குபவனும் மனிதர்களில் இருக்கிறான். அவனுக்கு நன்மை ஏற்பட்டால் அதில் நிம்மதியடைகிறான். அவனுக்குச் சோதனை ஏற்பட்டால்484 தலைகீழாக மாறி விடுகிறான். இவ்வுலகிலும், மறுமையிலும் அவன் நட்டமடைந்து விட்டான். இதுவே தெளிவான நட்டம்.

12. அல்லாஹ்வையன்றி தனக்குத் தீங்கிழைக்காததையும், பயன் தராததையும் பிரார்த்திக்கிறான். இதுவே தூரமான வழிகேடாகும்.

13. எவனது நன்மையை விட தீமை மிகவும் அருகில் உள்ளதோ அவனை இவன் அழைக்கிறான். அவன் கெட்ட நண்பன்; கெட்ட பொறுப்பாளன்.

14. நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோரை சொர்க்கச் சோலைகளில் அல்லாஹ் நுழையச் செய்கிறான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அல்லாஹ், நாடியதைச் செய்கிறான்.

15. இவ்வுலகிலும், மறுமையிலும் இவருக்கு (முஹம்மதுக்கு) அல்லாஹ் உதவவே மாட்டான்' என்று எண்ணுபவன் வானத்தை507 நோக்கி ஒரு கயிற்றை நீட்டி பின்னர் (அவருக்கு இறைவன் செய்யும் உதவியை) வெட்டி விடட்டும்! இந்தச் சூழ்ச்சியாவது அவனது வெறுப்பை நீக்கி விடுமா என்று அவன் பார்க்கட்டும்.

16. இவ்வாறே தெளிவான வசனங்களாக இதை அருளினோம். தான் நாடியோருக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுகிறான்.

17. நம்பிக்கை கொண்டோரும், யூதர்களும், ஸாபியீன்களும்,443 கிறித்தவர்களும், நெருப்பை வணங்குவோரும், இணைகற்பித்தோரும் ஆகிய அவர்களிடையே அல்லாஹ் கியாமத் நாளில்1தீர்ப்பு வழங்குவான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் பார்த்துக் கொண்டிருப்பவன்.

18. "வானங்களில்507 உள்ளோரும், பூமியில் உள்ளோரும், சூரியனும், சந்திரனும், நட்சத்திரங்களும், மலைகளும், மரங்களும், உயிரினங்களும், மனிதர்களில் அதிகமானோரும் அல்லாஹ்வுக்குப் பணிகின்றனர்'' என்பதை நீர் அறியவில்லையா?396 இன்னும் அதிகமானோர் மீது வேதனை உறுதியாகி விட்டது. அல்லாஹ் இழிவுபடுத்தியவனுக்கு மதிப்பை ஏற்படுத்துபவன் இல்லை. அல்லாஹ் நாடியதைச் செய்வான்.

19. தமது இறைவனைப் பற்றி தர்க்கித்துக் கொண்டிருந்த இரண்டு வழக்காளிகள் இதோ உள்ளனர். (ஏகஇறைவனை) மறுத்தோருக்காக நெருப்பால் ஆன ஆடை தயாரிக்கப்பட்டுள்ளது. அவர்களின் தலைகள் மீது கொதிக்கும் நீர் ஊற்றப்படும்.

20. அதைக் கொண்டு அவர்களின் வயிறுகளில் உள்ளவைகளும், தோல்களும் உருக்கப்படும்.

21. அவர்களுக்காக இரும்புச் சம்மட்டிகளும் உள்ளன.

22. கவலைப்பட்டு அங்கிருந்து அவர்கள் வெளியேற எண்ணும் போதெல்லாம் மீண்டும் அதில் தள்ளப்படுவார்கள். சுட்டெரிக்கும் வேதனையைச் சுவையுங்கள்! (எனக் கூறப்படும்).

23. நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோரை அல்லாஹ் சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். தங்கக் காப்புகளும், முத்தும் அவர்களுக்கு அணிவிக்கப்படும். அங்கே அவர்களின் ஆடை பட்டாகும்.

24. அவர்கள் தூய்மையான கொள்கைக்கு வழிகாட்டப்பட்டனர். புகழுக்குரிய (இறை)வனின் பாதைக்கு வழிகாட்டப்பட்டனர்.

25. (ஏகஇறைவனை) மறுத்தோருக்கும், அல்லாஹ்வின் பாதையையும் (கஅபா எனும்) புனிதப்பள்ளியையும் விட்டுத் தடுத்தோருக்கும், அங்கே அநீதியின் மூலம் குற்றம் புரிய நாடுவோருக்கும் துன்புறுத்தும் வேதனையைச் சுவைக்கச் செய்வோம். (கஅபா எனும்) புனிதப்பள்ளியை (அதன்) அருகில் வசிப்போருக்கும் தூரத்தில் வசிப்போருக்கும் சமமாக ஆக்கினோம்.290

26. "எனக்கு எதையும் இணைகற்பிக்காதீர்! தவாஃப் செய்வோருக்காகவும், நின்று வணங்குவோருக்காகவும், ருகூவு செய்து ஸஜ்தா செய்வோருக்காகவும் எனது ஆலயத்தைத் தூய்மைப்படுத்துவீராக!'' என்று (கூறி) அந்த ஆலயத்தின்33 இடத்தை இப்ராஹீமுக்கு நாம் நிர்ணயித்ததை நினைவூட்டுவீராக!

27. "மக்களுக்கு ஹஜ்ஜைப் பற்றி அறிவிப்பீராக! அவர்கள் உம்மிடம் நடந்தும், ஒவ்வொரு மெலிந்த ஒட்டகத்தின் மீதும் வருவார்கள். அவை அவர்களைத் தொலைவிலுள்ள ஒவ்வொரு பாதையிலிருந்தும் கொண்டு வந்து சேர்க்கும்'' (என்றும் கூறினோம்.)

28. அவர்கள் தங்களுடைய பயன்களை அடைவதற்காகவும், சாதுவான கால்நடைகளை அவர்களுக்கு அளித்ததற்காகக் குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ்வின் பெயரைக் கூறுவதற்காகவும் (வருவார்கள்.) அதை நீங்களும் உண்ணுங்கள்!171 கஷ்டப்படும் ஏழைகளுக்கும் கொடுங்கள்!

29. பின்னர் அவர்கள் தம்மிடம் உள்ள அழுக்குகளை நீக்கட்டும்! தமது நேர்ச்சைகளை நிறைவேற்றட்டும்! பழமையான அந்த ஆலயத்தை33 தவாஃப் செய்யட்டும்.

30. இதுவே (அல்லாஹ்வின் கட்டளை.) அல்லாஹ் புனிதமாக்கியவற்றைக் கண்ணியப்படுத்துபவருக்கு அது இறைவனிடம் அவருக்குச் சிறந்தது. உங்களுக்குக் கூறப்படவுள்ளவற்றைத் தவிர ஏனைய கால்நடைகள் உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. சிலைகள் எனும் அசுத்தத்திலிருந்து விலகிக் கொள்ளுங்கள்! பொய் பேசுவதிலிருந்தும் விலகிக் கொள்ளுங்கள்!

31. அல்லாஹ்வுக்கு அர்ப்பணித்து, அவனுக்கு இணை கற்பிக்காதோராக (ஆகுங்கள்!) அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவன் வானத்திலிருந்து507 விழுந்து பறவைகள் தூக்கிச் சென்றவனைப் போல்,416 அல்லது காற்று தூரமான இடத்தில் கொண்டு போய் வீசிய ஒருவனைப் போல் ஆவான்.

32. இதுவே (அல்லாஹ்வின் கட்டளை.) யார் அல்லாஹ்வின் சின்னங்களைக் கண்ணியப்படுத்துகிறாரோ அது உள்ளங்களில் உள்ள இறையச்சத்தின் வெளிப்பாடாகும்.

33. அவற்றில் (அக்கால்நடைகளில்) குறிப்பிட்ட காலம் வரை பயன்கள் உங்களுக்கு உண்டு.383பின்னர் அது சென்றடையும் இடம் பழமையான அந்த ஆலயமாகும். 33

34. சாதுவான கால்நடைகளை அவர்களுக்கு வழங்கியதற்காக அல்லாஹ்வின் பெயரை நினைப்பதற்கு ஒவ்வொரு சமுதாயத்திற்கும் வழிபாட்டு முறையை ஏற்படுத்தியுள்ளோம். உங்கள் இறைவன் ஒரே இறைவனே. அவனுக்கே கட்டுப்படுங்கள்! பணிந்தோருக்கு நற்செய்தி கூறுவீராக!

35. அல்லாஹ்வைப் பற்றிக் கூறப்பட்டால் அவர்களது உள்ளங்கள் நடுங்கி விடும். தங்களுக்கு ஏற்பட்டதைச் சகித்துக் கொள்வர். தொழுகையை நிலைநாட்டுவர். நாம் அவர்களுக்கு வழங்கியதிலிருந்து (நல்வழியில்) செலவிடுவர்.

36. (பலியிடப்படும்) ஒட்டகங்களை உங்களுக்காக அல்லாஹ்வின் (மார்க்கச்) சின்னங்களில் ஒன்றாக ஆக்கியுள்ளோம். அவற்றில் உங்களுக்கு நன்மையுள்ளது. நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் அதன் மீது அல்லாஹ்வின் பெயரைக் கூறுங்கள்! அது விலாப்புறமாக விழுந்ததும் அதை உண்ணுங்கள்! யாசிப்பவருக்கும், யாசிக்காதவருக்கும் உண்ணக் கொடுங்கள்!171 நீங்கள் நன்றி செலுத்திட இவ்வாறே அதை உங்களுக்குப் பயன்படச் செய்தான்.

37. அவற்றின் மாமிசங்களோ, அவற்றின் இரத்தங்களோ அல்லாஹ்வை அடைவதில்லை. மாறாக உங்களிடமுள்ள (இறை) அச்சமே அவனைச் சென்றடையும்.292 அல்லாஹ் உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக அவனை நீங்கள் பெருமைப்படுத்திட இவ்வாறே அதை அவன் உங்களுக்குப் பயன்படச் செய்தான். நன்மை செய்வோருக்கு நற்செய்தி கூறுவீராக!

38. நம்பிக்கை கொண்டோரை விட்டும் (துரோகத்தை) அல்லாஹ் தடுத்து நிறுத்துகிறான். துரோகம் செய்வோரையும், நன்றி கெட்டவர்களையும் அல்லாஹ் விரும்ப மாட்டான்.

39. "போர் தொடுக்கப்பட்டோர் அநீதி இழைக்கப்பட்டுள்ளனர்'' என்ற காரணத்தால் அவர்களுக்கு (எதிர்த்துப் போரிட) அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அல்லாஹ் அவர்களுக்கு உதவிட ஆற்றலுடையவன்.53

40. "எங்கள் இறைவன் அல்லாஹ்வே'' என்று அவர்கள் கூறியதற்காகவே நியாயமின்றி அவர்களின் இல்லங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர். மனிதர்களில் ஒருவர் மூலம் மற்றவரை அல்லாஹ் தடுத்திருக்காவிட்டால் மடங்களும், ஆலயங்களும், வழிபாட்டுத்தலங்களும், அல்லாஹ்வின் பெயர் அதிகமாகத் துதிக்கப்படும் பள்ளிவாசல்களும் இடிக்கப்பட்டிருக்கும்.433தனக்கு உதவி செய்வோருக்கு அல்லாஹ்வும் உதவுகிறான். அல்லாஹ் வலிமையுள்ளவன்; மிகைத்தவன்.

41. அவர்களுக்கு பூமியில் நாம் வாய்ப்பளித்தால் தொழுகையை நிலைநாட்டுவார்கள். ஜகாத்தும் கொடுப்பார்கள். நன்மையை ஏவுவார்கள். தீமையைத் தடுப்பார்கள். காரியங்களின் முடிவு அல்லாஹ்வுக்கே உரியது.

42, 43, 44. (முஹம்மதே!) இவர்கள் உம்மைப் பொய்யரெனக் கருதினால் இவர்களுக்கு முன் நூஹுடைய சமுதாயமும், ஆது மற்றும் ஸமூது சமுதாயமும், இப்ராஹீமின் சமுதாயமும், லூத்தின் சமுதாயமும், மத்யன்வாசிகளும் பொய்யெனக் கருதியுள்ளனர். மூஸாவும் பொய்யரெனக் கருதப்பட்டார். எனவே (என்னை) மறுத்தோருக்கு அவகாசம் அளித்தேன். பின்னர் அவர்களைப் பிடித்தேன். எனது வேதனை எவ்வாறு இருந்தது?26

45. எத்தனையோ ஊர்கள் அநீதி இழைத்து வந்த நிலையில் அவற்றை அழித்துள்ளோம். அவை முகடுகளுடன் சேர்ந்து விழுந்து கிடக்கின்றன. கேட்பாரற்ற கிணறுகள்! பாழடைந்த கோட்டைகள்!

46. அவர்கள் பூமியில் பயணம் செய்யவில்லையா? (அவ்வாறு செய்தால்) விளங்குகிற உள்ளங்களும், கேட்கும் செவிகளும் அவர்களுக்கு இருந்திருக்கும். பார்வைகள் குருடாகவில்லை. மாறாக உள்ளங்களில் உள்ள சிந்தனைகளே குருடாகி விட்டன.

47. (முஹம்மதே!) அவர்கள் வேதனையை உம்மிடம் அவசரமாகத் தேடுகின்றனர். அல்லாஹ் தனது வாக்கை மீறவே மாட்டான். உமது இறைவனிடம் ஒரு நாள் என்பது நீங்கள் கணக்கிடும் வருடங்களில் ஆயிரம் வருடங்கள் போன்றது.293

48. எத்தனையோ ஊர்களுக்கு அவை அநீதி இழைத்த நிலையில் அவகாசம் அளித்தேன். பின்னர் அதைத் தண்டித்தேன். என்னிடமே திரும்பி வருதல் உண்டு.

49. "மனிதர்களே! நான் உங்களுக்குத் தெளிவாக எச்சரிப்பவன்'' என்று (முஹம்மதே!) கூறுவீராக!187

50. நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோருக்கு மன்னிப்பும், மரியாதையான உணவும் உண்டு.

51. நம்முடைய வசனங்களை வெல்ல முயற்சிப்போரே நரகவாசிகள்.

52. (முஹம்மதே!) உமக்கு முன் நாம் அனுப்பிய எந்த நபியானாலும், தூதரானாலும்398 அவர் ஓதும்போது அவர் ஓதிக்காட்டிய செய்தியில் ஷைத்தான் (தவறான குழப்பத்தைப்) போடாமல் இருந்ததில்லை.294 உடனே ஷைத்தான் போட்டதை அல்லாஹ் மாற்றி தனது வசனங்களை அல்லாஹ் உறுதிப்படுத்துகிறான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.

53. எவரது உள்ளங்களில் நோய் இருக்கிறதோ அவர்களுக்கும், கடினசித்தம் கொண்டோருக்கும் ஷைத்தான் போட்டதை அல்லாஹ் சோதனையாக ஆக்குகிறான். அநீதி இழைத்தோர் தூரமான பிளவில் உள்ளனர்.

54. (முஹம்மதே!) கல்வி கொடுக்கப்பட்டோர் இது உமது இறைவனிடமிருந்து வந்த உண்மை என அறிந்து அதை நம்புவதற்காகவும், அவர்களது உள்ளங்கள் அவனுக்குப் பணிவதற்காகவும் (இவ்வாறு செய்கிறான்). நம்பிக்கை கொண்டோருக்கு அல்லாஹ் நேரான பாதையைக் காட்டுகிறான்.

55. அவர்களிடம் யுகமுடிவு நேரம்1 திடீரென வரும் வரை, அல்லது பயனளிக்காத நாளின் வேதனை அவர்களுக்கு வரும் வரை (ஏகஇறைவனை) மறுப்போர் அதில் சந்தேகத்திலேயே இருந்து வருவார்கள்.

56. அந்நாளில் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் அவர்களிடையே தீர்ப்பு வழங்குவான். நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்தோர் நிலையான சொர்க்கச் சோலைகளில் இருப்பார்கள்.

57. (நம்மை) மறுத்து நமது வசனங்களைப் பொய்யெனக் கருதியோருக்கு இழிவு தரும் வேதனை உள்ளது.

58. அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத்460 செய்து பின்னர் கொல்லப்படுவோர், அல்லது மரணிப்போருக்கு அல்லாஹ் அழகிய உணவை வழங்குவான். அல்லாஹ் உணவளிப்போரில் சிறந்தவன்.463

59. அவர்கள் திருப்தியடையும் நுழைவிடத்தில் அவர்களை நுழையச் செய்வான். அல்லாஹ் அறிந்தவன்; சகிப்புத் தன்மையுள்ளவன்.

60.இதுவே (அல்லாஹ்வின் கட்டளை.) யாரேனும் தாம் துன்புறுத்தப்பட்டது போல் (அதற்குக் காரணமானவர்களைத்) துன்புறுத்தும்போது அதற்காக அவர் மீது மீண்டும் அநீதி இழைக்கப்பட்டால் அல்லாஹ் அவருக்கு உதவுவான். அல்லாஹ் மன்னிப்பவன்; பிழை பொறுப்பவன்.

61.அல்லாஹ் பகலில் இரவை நுழைக்கிறான். இரவில் பகலை நுழைக்கிறான். அல்லாஹ் செவியுறுபவன்;488 பார்ப்பவன்488 என்பதே இதற்குக் காரணம்.

62. அல்லாஹ்வே உண்மையானவன். அவனையன்றி அவர்கள் பிரார்த்திப்பவை பொய்யானவை. அல்லாஹ் உயர்ந்தவன்; பெரியவன் என்பதும் இதற்குக் காரணம்.

63. வானிலிருந்து507 அல்லாஹ் தண்ணீரை இறக்குவதையும், (அதனால்) பூமி பசுமையடைவதையும் நீர் அறியவில்லையா? அல்லாஹ் நுட்பமானவன்; நன்கறிந்தவன்.

64. வானங்களில்507 உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அல்லாஹ் புகழுக்குரியவன்; தேவைகளற்றவன். 485

65. (முஹம்மதே!) பூமியில் உள்ளதையும், அவனது கட்டளைப்படி கடலில் செல்லும் கப்பலையும் அல்லாஹ் உங்களுக்காகப் பயன்படச் செய்திருப்பதை நீர் அறியவில்லையா? தான் கட்டளையிட்டால் தவிர பூமியின் மேல் வானம்507 விழாதவாறு தடுத்து வைத்துள்ளான்.240அல்லாஹ் மனிதர்கள் மீது இரக்கமுள்ளவன்; நிகரற்ற அன்புடையோன்.

66. அவனே உங்களுக்கு உயிர் கொடுத்தான். பின்னர் உங்களை மரணிக்கச் செய்வான். பின்னர் உங்களை உயிர்ப்பிப்பான். மனிதன் நன்றி கெட்டவனாக இருக்கிறான்.

67. (முஹம்மதே!) ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒரு வழிபாட்டு முறையை ஏற்படுத்தியிருந்தோம். அதை அவர்கள் கடைப்பிடித்தனர். இது விஷயத்தில் அவர்கள் உம்முடன் தர்க்கம் செய்ய வேண்டாம். உமது இறைவனை நோக்கி அழைப்பீராக! நீர் நேரான வழியில் இருக்கிறீர்.

68. அவர்கள் உம்மிடம் தர்க்கம் செய்தால் "நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிபவன்'' என (முஹம்மதே!) கூறுவீராக!

69. நீங்கள் முரண்பட்ட விஷயத்தில் அல்லாஹ் உங்களுக்கிடையே கியாமத் நாளில்1தீர்ப்பளிப்பான்.

70.(முஹம்மதே!) வானத்திலும்,507 பூமியிலும் உள்ளதை அல்லாஹ் அறிகிறான் என்பதை நீர் அறியவில்லையா? இது பதிவேட்டில்157 உள்ளது. இது அல்லாஹ்வுக்கு எளிதானது.

71. அல்லாஹ்வை விட்டு விட்டு எதைக் குறித்து எந்தச் சான்றையும் அவன் அருளவில்லையோ அதையும், எதைப் பற்றிய அறிவு அவர்களுக்கு இல்லையோ அதையும் அவர்கள் வணங்குகின்றனர். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளனும் இல்லை.

72. நமது தெளிவான வசனங்கள் அவர்களுக்குக் கூறப்பட்டால் (நம்மை) மறுப்போரின் முகங்களில் வெறுப்பைக் காண்கிறீர். நமது வசனங்களை அவர்களிடம் கூறுவோரைத் தாக்கவும் முற்படுவர். "இதை விட கெட்டதை உங்களுக்கு நான் கூறட்டுமா?'' என (முஹம்மதே!) கேட்பீராக! அதுதான் நரகம். மறுத்தோருக்கு அதையே அல்லாஹ் வாக்களித்துள்ளான். அது சென்றடையும் இடங்களில் மிகவும் கெட்டது.

73.மனிதர்களே! உங்களுக்கு ஓர் உதாரணம் கூறப்படுகிறது. அதைக் கவனமாகக் கேளுங்கள்! அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டாலும் ஓர் ஈயைக் கூட படைக்க முடியாது. ஈ அவர்களிடமிருந்து எதையேனும் பறித்துக் கொண்டால் அதை அந்த ஈயிடமிருந்து அவர்களால் மீட்கவும் முடியாது. தேடுவோனும், தேடப்படுவோனும் பலவீனமாக இருக்கிறார்கள்.

74. அவர்கள் அல்லாஹ்வைக் கண்ணியப்படுத்த வேண்டிய அளவுக்கு கண்ணியப்படுத்தவில்லை. அல்லாஹ் வலிமை மிக்கவன்; மிகைத்தவன்.

75.வானவர்களிலும்,507 மனிதர்களிலும் அல்லாஹ் தூதர்களைத் தேர்வு செய்கிறான்.161அல்லாஹ் செவியுறுபவன்;488 பார்ப்பவன். 488

76. அவர்களுக்கு முன்னும், பின்னும் உள்ளதை அவன் அறிகிறான். காரியங்கள் அல்லாஹ்விடமே கொண்டு செல்லப்படும்.

77.நம்பிக்கை கொண்டோரே! ருகூவு செய்யுங்கள்! ஸஜ்தாச் செய்யுங்கள்!396 உங்கள் இறைவனை வணங்குங்கள்! நன்மையைச் செய்யுங்கள்! நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.

78.அல்லாஹ்வுக்காக அறப்போர் செய்ய வேண்டிய விதத்தில் அறப்போர் செய்யுங்கள்! இந்தத் தூதர் (முஹம்மத்) உங்களுக்கு எடுத்துச் சொல்பவராகத் திகழவும், நீங்கள் ஏனைய மக்களுக்கு எடுத்துச் சொல்வோராகத் திகழவும் அவன் உங்களைத் தேர்ந்தெடுத்தான். உங்கள் தந்தை இப்ராஹீமின் மார்க்கமான இம்மார்க்கத்தில் அவன் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்தவில்லை.68 இதற்கு முன்னரும், இதிலும் அவனே உங்களுக்கு முஸ்லிம்கள்295 எனப் பெயரிட்டான். எனவே தொழுகையை நிலைநாட்டுங்கள்! ஜகாத்தைக் கொடுங்கள்! அல்லாஹ்வைப் பற்றிப் பிடியுங்கள்! அவனே உங்கள் பாதுகாவலன். அவன் சிறந்த பாதுகாவலன்; சிறந்த உதவியாளன்.

 

Leave a Reply