அந்நியப் பெண்ணுடன் நபியவர்கள் தனித்திருந்தார்களா?

அந்நியப் பெண்ணுடன் நபியவர்கள் தனித்திருந்தார்களா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நல்லொழுக்கத்துக்கும், நற்பண்புகளுக்கும், அவர்களின் போதனைகளுக்கும் எதிராக அமைந்த பின் வரும் ஹதீஸ் சில நூல்களில் பதிவாகியுள்ளது. இதன் அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்கள் என்று அறிஞர்களால் கருதப்பட்டாலும் இதன் கருத்து ஏற்கத்தக்க வகையில் இல்லை. அது பற்றி விரிவாகப் பார்ப்போம்.

7001 حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ ، أَخْبَرَنَامَالِكٌ ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ ، أَنَّهُ سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ يَقُولُ : كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدْخُلُ عَلَى أُمِّ حَرَامٍ بِنْتِ مِلْحَانَ، وَكَانَتْ تَحْتَ عُبَادَةَ بْنِ الصَّامِتِ، فَدَخَلَ عَلَيْهَا يَوْمًا فَأَطْعَمَتْهُ، وَجَعَلَتْ تَفْلِي رَأْسَهُ، فَنَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ اسْتَيْقَظَ وَهُوَ يَضْحَكُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உம்மு ஹராம் பின்த் மில்ஹான் (ரலி) அவர்களது வீட்டிற்குச் செல்வது வழக்கம். அவர் உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்களின் துணைவியராக இருந்தார். ஒரு நாள் பகலில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உம்மு ஹராம் (ரலி) அவர்களின் வீட்டிற்குச் சென்ற போது அவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு உணவளித்த பின் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பேன் பார்த்து விடலானார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உறங்கி விட்டார்கள். பிறகு சிரித்தபடி விழித்தார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி) நூல் : புகாரி 7001

புகாரியின் 2878 வது ஹதீஸில்

 دَخَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى ابْنَةِ مِلْحَانَ، فَاتَّكَأَ عِنْدَهَا

உம்மு ஹராம் அவர்களின் வீட்டுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சென்று அவரிடம் சாய்ந்து கொண்டார்கள்

என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

முஸ்லிம் நூலில் பதிவு செய்யப்பட்ட அறிவிப்பில்

  أَتَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ابْنَةَ مِلْحَانَ خَالَةَ أَنَسٍ، فَوَضَعَ رَأْسَهُ عِنْدَهَا

உம்மு ஹராம் வீட்டுக்கு வந்து அவரிடம் தமது தலையை வைத்தார்கள்

என்று பதிவு செய்யப்பட்டுள்ளளது.

முஸ்லிம் நூலின் மற்றொரு அறிவிப்பில்

 أُمِّ حَرَامٍ بِنْتِ مِلْحَانَ ، أَنَّهَا قَالَتْ : نَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا قَرِيبًا مِنِّي

என்னிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வந்து எனக்கு அருகில் பகல் தூக்கம் தூங்கினார்கள்

என்று உம்மு ஹராம் கூறுவதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அந்நியப் பெண்ணின் வீட்டுக்குச் சென்று அவரிடம் சாய்ந்து கொண்டார்கள் என்பதும், அவருக்கு அருகில் உறங்கினார்கள் என்பதும், அவரிடம் தமது தலையை வைத்தார்கள் என்பதும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பேன் பார்த்து விடலானார் என்பதும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் போதனைகளுக்கும் அவர்கள் கொண்டு வந்த மார்க்கச் சட்டத்துக்கும் முரணாக உள்ளதால் இது ஹதீஸ் அல்ல. கட்டுக்கதை என்கிறோம்.

فتح الباري – ابن حجر

 في الحديث ما يدل على الخلوة بأم حرام ولعل ذلك كان مع ولد أو خادم أو زوج أو تابع قلت وهو احتمال قوي لكنه لا يدفع الاشكال من أصله لبقاء الملامسة في تفلية الرأس وكذا النوم في الحجر وأحسن الأجوبة دعوى الخصوصية ولا يردها كونها لا تثبت إلا بدليل لان الدليل على ذلك واضح والله أعلم

இந்த ஹதீஸிற்கு இப்னு ஹஜர் அவர்கள் ஃபத்ஹுல் பாரி என்ற நூலில் விளக்கமளிக்கும் போது

உம்மு ஹராம் என்ற அந்நியப் பெண்ணுடன் நபிகளார் தனித்திருந்தது பற்றி சிலர் விளக்கம் கூறும் போது உம்மு ஹராமுடன் அவரது கணவரோ, உழியரோ, அவரது பிள்ளையோ உடன் இருந்திருக்கலாம் என்று கூறுகின்றனர். இது சாத்தியம் என்று வைத்துக் கொண்டாலும் அவர்களது மடியில் தலை வைத்தது பற்றியோ, அவர்கள் நபிகளாருக்குப் பேன் பார்த்து விட்டது பற்றியோ சொல்லப்படும் இந்தச் செய்தியை எவ்விதத்திலும் சரி காண இயலாது. (ஒரு பெண் கணவருடன் இருக்கிறார் என்பதற்காக அன்னிய ஆணுக்குப் பேன் பார்ப்பது உள்ளிட்ட நெருக்கம் அனுமதிக்கப்பட மாட்டாது. மாறாக, நபிகளாருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து இது என்று நாம் எடுத்துக் கொள்வது தான் இதற்கான சரியான விளக்கம் என்று கூறியுள்ளார்.

இந்த ஹதீஸில் உள்ள மையக் கருத்து இஸ்லாமின் அடிப்படைக்கு எதிரானது என்பதை இப்னு ஹஜர் அவர்கள் ஒப்புக் கொள்கிறார்கள். இது தவறுதான் ஆனாலும் நபிக்கு மட்டும் உள்ள சிறப்புச் சலுகை என்று தான் சமாளிக்கிறார்கள். ஒழுக்கக்கேடான விஷயங்களில் சிறப்புச் சலுகை இல்லை என்பதை அவர் கவனிக்கத் தவறி விட்டார்.

ஒரு ஆண் ஒரு அன்னியப் பெண்ணிடத்தில் இது போன்று படுத்து உறங்குபவனாகவும், அடிக்கடி அங்கு சென்று வருபவனாகவும் இருந்தால் அவன் ஒழுக்கங்கெட்டவன் என்று மக்கள் கூறுவார்கள். சாதாரண மனிதன் இதைச் செய்தாலும் அதை யாரும் அங்கீகரிக்காத போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இதைச் செய்தார்கள் என்று எந்த ஒரு முஸ்லிமாலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

மகத்தான குணம் கொண்ட மாநபி

நபிகள் நாயகம் (ஸல்) மகத்தான குணம் கொண்டவர்கள் என்று அல்லாஹ் அவர்களைச் சிலாகித்துச் சொல்லிக் காட்டுகின்றான்.

நீர் மகத்தான குணத்தில் இருக்கிறீர்.

திருக்குர்ஆன் 68:4

அன்னியப் பெண்களைக் கண்டால் பார்வையைத் தாழ்த்துமாறு குர்ஆன் கட்டளையிடுகிறது. இதற்கு மாற்றமாக பார்ப்பதைத் தாண்டி அன்னியப் பெண்ணின் தோல் தன் மீது படும் அளவிற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நடந்து கொண்டார்கள் என்று கூறும் இந்த ஹதீஸை நம்பினால் குர்ஆனிற்கு மாற்றமாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நடந்தார்கள் என்று நம்ப வேண்டிவரும்.

(முஹம்மதே!) தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்பைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட ஆண்களுக்குக் கூறுவீராக! இது அவர்களுக்குப் பரிசுத்தமானது. அவர்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.

திருக்குர்ஆன் 24:30

7214 حَدَّثَنَا مَحْمُودٌ ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ ، أَخْبَرَنَا مَعْمَرٌ ، عَنِ الزُّهْرِيِّ ، عَنْ عُرْوَةَ ، عَنْعَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ : كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُبَايِعُ النِّسَاءَ بِالْكَلَامِ بِهَذِهِ الْآيَةِ { لَا يُشْرِكْنَ بِاللَّهِ شَيْئًا } قَالَتْ : وَمَا مَسَّتْ يَدُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدَ امْرَأَةٍ، إِلَّا امْرَأَةً يَمْلِكُهَا.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 60:12 வது வசனத்தை பெண்களிடம் ஓதி வாய் மொழியாக விசுவாசப் பிரமாணம் வாங்குவார்கள். (கையால் தொட்டு வாங்க மாட்டார்கள்). அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கை அவர்களுக்குச் சொந்தமான பெண்களை (துணைவியரை)த் தவிர வேறெந்த பெண்ணின் கையையும் தொட்டதில்லை.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : புகாரி 7214

இவ்வளவு பேணுதலாக நடந்து கொண்ட நபி (ஸல்) அவர்கள் முறையின்றி உம்மு ஹராம் (ரலி) அவர்களிடத்தில் சென்று வந்திருக்க முடியாது.

இதை மார்க்க அடிப்படையில் நியாயப்படுத்த முடியாது என்பதால் உம்மு ஹராம் (ரலி) அவர்கள் நபிகளாரின் பால்குடித் தாயார் என்று பொய்க் காரணம் கூறி சிலர் சமாளிக்கின்றனர்.

உம்மு ஹராம் அவர்கள் நபிகளாரின் பால்குடித் தாய் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

நபிகளார் இறந்து பல நூறு வருடங்களுக்குப் பின் எழுதப்பட்ட சில நூல்களில் எவ்வித ஆதாரமும் இல்லாமல் அடித்துவிடப்பட்டுள்ள செய்தியை மேற்கோள்காட்டி உம்மு ஹராம் (ரலி) அவர்கள் நபிகளாரின் சின்னமாகவும் இருக்கலாம்; மஹரமான உறவு அல்லாத நபராகவும் இருக்கலாம்; செவிலித்தாயாகவும் இருக்கலாம்; மாமியாகவும் இருக்கலாம் என்று அனுமானத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட ஆதாரமில்லாத பொய்யான செய்தியைத்தான் தங்களது பொய் வாதத்திற்கு ஆதாரமாக காட்டுகின்றனர்

உண்மையிலேயே உம்மு ஹராம் (ரலி) அவர்கள் நபிகளாரின் செவிலித்தாயாக இருந்திருந்தால் புகாரியில் வரும் இந்தச் செய்திக்கு விரிவுரை எழுதிய இப்னு ஹஜர் அவர்கள் அந்தப் பதிலையே சொல்லியிருப்பார்கள். ஆனால் அவரோ உம்மு ஹராம் (ரலி) அவர்கள் அண்ணலாருக்கு அந்நியப் பெண் தான்; அதனால் தான் அவர்களது மடியில் தலை வைத்துப் படுத்ததாக வரும் இந்தச் செய்திக்கு எவ்வித விளக்கம் சொன்னாலும் அதை ஏற்க முடியாது; மாறாக அது அண்ணலாருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து என்று விளக்கமளித்துள்ளார்.

Leave a Reply