அற்புதம் செய்யும் ஆற்றல் எவருக்கும் இல்லை

அற்புதம் செய்யும் ஆற்றல் எவருக்கும் இல்லை

ல்லாம் வல்ல இறைவன் மனிதர்களைப் படைத்து, மற்ற உயிரினங்களுக்கு வழங்காத பல சிறப்புக்களையும், ஆற்றல்களையும் மனிதர்களுக்கு வழங்கியுள்ளான்.

ஆனால் எல்லையற்ற ஆற்றலை மனிதன் உள்ளிட்ட எந்தப் படைப்புக்கும் அல்லாஹ் வழங்கவில்லை. ஒவ்வொரு படைப்புக்கும் வழங்கப்பட்ட ஆற்றலின் எல்லையை ஆய்வு செய்தும், அனுபவ அறிவு மூலமும் நாம் அறிந்து கொள்ளலாம்.

வேகமாக ஓடும் ஆற்றலை எடுத்துக் கொண்டால் மணிக்கு ஐந்தாறு கிலோ மீட்டர் வேகத்தில் மனிதன் ஓட முடியும். உலக ஓட்டப் பந்தயச் சாம்பியன் ஹுஸைன் போல்டின் ஓட்ட வேகம் மணிக்கு 27 மைல் ஆகும். கடும் முயற்சிகளும், பயிற்சிகளும் செய்தால் சிலர் இந்தச் சாதனையைச் செய்ய முடியும். இது தான் மனிதனின் ஓடும் திறனுக்கு எல்லை.

ஒரு மனிதன் சாதாரணமாக பத்து கிலோ எடையைத் தலைக்கு மேல் தூக்க முடியும். கடுமையான பயிற்சி எடுத்தால் பெண்கள் 120 கிலோவும், ஆண்கள் 170 கிலோவும் தூக்க முடியும். இதுதான் சாதனை அளவாக உள்ளது. இன்னும் பயிற்சி எடுத்தால் ஓரிரு கிலோ அதிகமாகத் தூக்கும் சாதனையாளர்கள் உருவாகலாம். இது தான் மனிதனின் தூக்கும் ஆற்றலின் எல்லை.

அது போல் மனிதனுக்கு ஐந்து புலன்களும் ஆறாவதாக பகுத்தறிவும் வழங்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் ஒரு எல்லைக்கு உட்பட்டவை தான்.

எந்த மனிதனாக இருந்தாலும் அவர் மனிதனுக்கு இயல்பாக வழங்கப்பட்டுள்ள ஆற்றலுக்குட்பட்டு மனிதனைப் போல் தான் செயல்பட முடியும். இறைவனுக்கு மட்டுமே உரித்தான எந்தச் செயலையும் எந்த மனிதனும் செய்ய முடியாது என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை.

உதாரணமாக அல்லாஹ்வுக்கு ஏராளமாக பண்புகள் உள்ளன. அந்தப் பண்புகளில் ஏதாவது ஒரு பண்பு அல்லாஹ்வுக்கு இருப்பது போல் ஒரு மனிதனுக்கு உள்ளது என்று ஒருவன் நம்பினால் அந்தப் பண்பு விஷயத்தில் அல்லாஹ்வைப் போல் அந்த மனிதனைக் கருதியவனாக ஆகிவிடுவான். அதாவது அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தவனாகி விடுவான்.

அவனைப் போல் எதுவும் இல்லை. அவன் செவியுறுபவன்; பார்ப்பவன்.

திருக்குர்ஆன் 42:11

அவனுக்கு நிகராக யாருமில்லை.

திருக்குர்ஆன் 112:4

அல்லாஹ்வைப் போல் கேட்பவன் இல்லை. அவனைப் போல் பார்ப்பவன் இல்லை. அவனைப் போல் செயல்படுபவன் இல்லை என்பது இவ்வசனங்களின் கருத்தாகும்.

உதாரணமாக நமக்குக் கேட்கும் திறன் உள்ளது. அல்லாஹ்வுக்கும் கேட்கும் திறன் உள்ளது. ஆனால் நமக்கு உள்ள கேட்கும் திறன் அல்லாஹ்வுக்கு உரிய கேட்கும் திறன் போல் உள்ளது என்று நம்பலாமா? அப்படி நம்பினால் அது அல்லாஹ்வுக்கு இணையாக மனிதனைக் கருதியதாக ஆகும்.

அல்லாஹ்வின் கேட்கும் திறன் எல்லையில்லாதது. நமது கேட்கும் திறன் எல்லைக்கு உட்பட்டதாகும்.

காற்றின் மூலம் அல்லது மின்காந்த அலைகள் மூலம் கடத்தப்படும் ஒலிகளைத் தான் கேட்க முடியும். குறிப்பிட்ட தொலைவு வரை தான் கேட்க முடியும். குறிப்பிட்ட டெசிபல் எனும் அளவில் இருக்கும் ஒலிகளைத் தான் கேட்க முடியும். ஒரு நேரத்தில் ஒன்றைத் தான் கேட்க முடியும். சில பயிற்சிகள் மூலம் மேலும் ஒன்றிரண்டு செய்திகளைக் கூடுதலாகக் கேட்க முடியும். கேட்கும் திறனுக்கும் இப்படி எல்லை இருக்கிறது.

பார்த்தல் என்ற பண்பை எடுத்துக் கொள்வோம். மனிதர்களாகிய நமக்கும் பார்க்கும் திறன் உள்ளது. அல்லாஹ்வுக்கும் பார்க்கும் திறன் உள்ளது. ஆனால் அல்லாஹ்வின் பார்க்கும் திறன் போல் ஒரு மனிதனுடைய பார்க்கும் திறன் உண்டு என்று நம்பினால் அது இணைகற்பித்தலாகும்.

குறிப்பிட்ட தொலைவில் இருந்தால் தான் நாம் பார்க்க முடியும். வெளிச்சம் இருந்தால் தான் பார்க்க முடியும். எந்தத் தடுப்பும் இல்லாமல் இருந்தால் தான் பார்க்க முடியும். ஒரு நேரத்தில் ஒன்றை மட்டும் தான் பார்க்க முடியும். ஆனால் அல்லாஹ்வின் பார்க்கும் திறனுக்கு எந்த எல்லையும் இல்லை.

இந்த மனிதர் எவ்வளவு தொலைவில் உள்ளதையும் பார்ப்பார் என்றும், எத்தனை தடுப்புகள் இருந்தாலும் அதையும் கடந்து இவர் பார்ப்பார் என்றும் நம்பினால் அந்த மனிதரை அல்லாஹ்வைப் போன்றவராக நாம் கருதியவர்களாக ஆவோம்.

அது போல் மனிதர்கள் செய்யும் காரியங்களும் எல்லைக்கு உட்பட்டவையாகும். அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்ய முடிந்த – எந்த மனிதருக்கும் செய்ய முடியத காரியங்களை ஒருவர் செய்வார் என்று நம்புதல் இணை கற்பித்தலில் சேரும்.

ஒருவர் அற்புதம் செய்கிறார் என்று நாம் நம்பினால் அந்த மனிதர் அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்ய முடிந்த காரியங்களைச் செய்கிறார் என்பது அதன் உட்பொருளாகும். இது அப்பட்டமான இணை வைத்தலாகும்.

மகான்கள் அற்புதங்கள் செய்ய வல்லவர்கள் என்ற கொள்கை உள்ளவர் இதற்கு ஒரு பதிலை வைத்துள்ளார்கள். இந்த அற்புதங்களை மகான்கள் சுயமாகச் செய்வதில்லை. அல்லாஹ் கொடுத்த ஆற்றலின் அடிப்படையில் தான் செய்கிறார்கள். எனவே இது இணைகற்பித்தலில் சேராது என்று நியாயம் கற்பிக்கின்றனர்.

இது முற்றிலும் தவறாகும். ஒரு மனிதன் தனக்குரிய அதிகாரத்தைத் கீழே உள்ளவனுக்குக் கொடுக்க மாட்டான். அவ்வாறிருக்க சர்வ வல்லமைபடைத்த அல்லாஹ் தனக்கிருப்பது போன்ற ஆற்றலை மற்றவருக்கு எப்படிக் கொடுப்பான்? இதைப் பின்வரும் வசனத்தில் அல்லாஹ்வே தெளிவுபடுத்துகிறான்.

உங்களில் ஒருவரை விட மற்றவரை செல்வத்தில் அல்லாஹ் சிறப்பித்திருக்கிறான். (செல்வத்தால்) சிறப்பிக்கப்பட்டோர் தமது செல்வத்தைத் தமது அடிமைகளிடம் கொடுத்து, தங்களுக்குச் சமமாக அவர்களை ஆக்குவதில்லை. அல்லாஹ்வின் அருட்கொடையையா இவர்கள் நிராகரிக்கிறார்கள்?

திருக்குர்ஆன் 16:71

தனக்கே உரித்தான எந்தத் தன்மையையும் அல்லாஹ் யாருக்கும் கொடுக்கவே மாட்டான் என்பது இவ்வசனத்தின் மூலம் தெளிவுபடுத்தப்படுகிறது.

இவர்களின் மேற்கண்ட வாதம் தவறானது என்பதற்கு இந்த ஒரு வசனமே போதுமானதாகும். மேலும் நபிமார்களைத் தவிர வேறு யாருக்கும் அற்புதம் செய்யும் ஆற்றல் அளிக்கப்படவில்லை என்பது பின்னர் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

இந்த மனிதன் குழந்தையைக் கொடுப்பான்; ஆனால் அவனாகக் கொடுப்பதில்லை. அல்லாஹ் கொடுத்த ஆற்றல் மூலம் இதைச் செய்கிறான் என்று சொல்லி விட்டால் அது இணைவைத்தல் இல்லை என்று ஆகிவிடுமா என்பதை இவர்கள் சிந்திக்க வேண்டும்.

ஒருவன் சூரியனை வணங்குகிறான். சூரியனுக்குச் சுயமான ஆற்றல் இல்லை. ஆனால் அல்லாஹ் சூரியனுக்கு அந்த ஆற்றலை வழங்கியுள்ளான் என்று சேர்த்துக் கொண்டால் அது இணைவைத்தல் இல்லை என்று ஆகிவிடுமா என்பதையும் இவர்கள் சிந்திக்க வேண்டும்.

இறைத்தூதர்களானாலும், இறைநேசர்களானாலும் அவர்களால் குழந்தை வரம் தர முடியாது. ஏனெனில் இது அல்லாஹ்வின் அதிகாரத்தில் உள்ளதாகும்.

மனிதர்களே! மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவதில் நீங்கள் சந்தேகத்தில் இருந்தால் (உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறோம்.) உங்களை மண்ணாலும், பின்னர் விந்துத் துளியாலும், பின்னர் கருவுற்ற சினைமுட்டையாலும், பின்னர் முழுமைப்படுத்தப்பட்டதும் முழுமைப்படுத்தப்படாததுமான தசைக்கட்டியாலும் படைத்தோம். நாம் நாடியதைக் கருவறைகளில் குறிப்பிட்ட காலம் வரை நிலைபெறச் செய்கிறோம். பின்னர் உங்களைக் குழந்தையாக வெளிப்படுத்துகிறோம். பின்னர் நீங்கள் பருவத்தை அடைகின்றீர்கள். உங்களில் கைப்பற்றப்படுவோரும் உள்ளனர். அறிந்த பின் எதையும் அறியாமல் போவதற்காக தள்ளாத வயது வரை கொண்டு செல்லப்படுவோரும் உங்களில் உள்ளனர். பூமியை வறண்டதாகக் காண்கிறீர். அதன் மீது நாம் தண்ணீரை இறக்கும்போது, அது செழித்து வளர்ந்து அழகான ஒவ்வொரு வகையையும் முளைக்கச் செய்கிறது.

திருக்குர்ஆன் 22:5

வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் நாடியதைப் படைக்கிறான். தான் நாடியோருக்குப் பெண்(குழந்தை)களை வழங்குகிறான். தான் நாடியோருக்கு ஆண்(குழந்தை)களை வழங்குகிறான்.  அல்லது ஆண்களையும், பெண்களையும் சேர்த்து அவர்களுக்கு வழங்குகிறான். தான் நாடியோரை மலடாக ஆக்குகிறான். அவன் அறிந்தவன்; ஆற்றலுடையவன்.

திருக்குர்ஆன் 42:49,50

மனிதனே! மரியாதைக்குரிய உனது இறைவன் விஷயத்தில் உன்னை ஏமாற்றியது எது? அவனே உன்னைப் படைத்து, உன்னைச் சீராக்கி, உன்னைச் செம்மைப்படுத்தினான்.  அவன் விரும்பிய வடிவத்தில் உன்னை அமைத்தான்.

திருக்குர்ஆன் 82:6,7,8

குழந்தையைக் கொடுத்தல் அல்லாஹ்வின் அதிகாரத்தில் உள்ளது என்று இவ்வசனங்களில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. மேலும் 3:6, 3:38-40, 3:47, 11:71,72, 13:8, 14:39, 16:72, 16:78, 19:5, 21:90, 40:64, 64:3ஆகிய வசனங்களும் இதைக் கூறுகின்றன.

ஆட்சியையும், அதிகாரத்தையும் எந்த இறைநேசரும் எவருக்கும் வழங்க முடியாது. இது அல்லாஹ்வின் அதிகாரத்தில் உள்ளது என்று அல்லாஹ் கூறுகிறான்.

"அல்லாஹ்வே! ஆட்சியின் அதிபதியே! நீ நாடியோருக்கு ஆட்சியை வழங்குகிறாய். நீ நாடியோரிடமிருந்து ஆட்சியைப் பறித்துக் கொள்கிறாய். நாடியோரைக் கண்ணியப்படுத்துகிறாய். நாடியோரை இழிவுபடுத்துகிறாய். நன்மைகள் உன் கைவசமே உள்ளன. நீ அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்'' என்று கூறுவீராக!

திருக்குர்ஆன் 3:26

இவ்வசனமும் 2:247, 3:26, 12:101, 38:35 ஆகிய வசனங்களும் ஆட்சியை வழங்குவது அல்லாஹ்வின் தனிப்பட்ட அதிகாரம் என்று கூறுகின்றன.

ஒரு மனிதனைச் செல்வந்தனாக்குவதும், ஏழையாக ஆக்குவதும் அல்லாஹ்வின் அதிகாரத்தில் உள்ளதாகும். எந்த மகானும் யாருக்கும் இதை வழங்கிட முடியாது என்றும், இதில் யாருக்கும் எந்தப் பங்கும் இல்லை என்றும் அல்லாஹ் கூறுகிறான்.

வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவளிப்பவன் யார்? செவிப்புலனையும், பார்வைகளையும் தன் கைவசம் வைத்திருப்பவன் யார்? உயிரற்றதிலிருந்து உயிருள்ளதையும், உயிருள்ளதிலிருந்து உயிரற்றதையும் வெளிப்படுத்துபவன் யார்? காரியங்களை நிர்வகிப்பவன் யார்?'' என்று கேட்பீராக! 'அல்லாஹ்' என்று கூறுவார்கள். "அஞ்ச மாட்டீர்களா'' என்று நீர் கேட்பீராக!

திருக்குர்ஆன் 10:31

பூமியில் உள்ள உயிரினம் எதுவாக இருந்தாலும் அவற்றுக்கு உணவளிப்பது அல்லாஹ்வின் பொறுப்பாகும். அவற்றின் வசிப்பிடத்தையும், அவை சென்றடையும் இடத்தையும் அவன் அறிவான். ஒவ்வொன்றும் தெளிவான பதிவேட்டில்157 உள்ளது.

திருக்குர்ஆன் 11:6

தான் நாடியோருக்கு அல்லாஹ் செல்வத்தைத் தாராளமாக வழங்குகிறான். குறைத்தும் வழங்குகிறான். அவர்கள் இவ்வுலக வாழ்க்கையின் மூலம் மகிழ்ச்சியடைகின்றனர். மறுமையுடன் ஒப்பிடும்போது இவ்வுலக வாழ்க்கை அற்பசுகம் தவிர வேறில்லை.

திருக்குர்ஆன் 13:26

எந்தப் பொருளாயினும் அதன் கருவூலங்கள் நம்மிடமே உள்ளன. நிர்ணயிக்கப்பட்ட அளவிலேயே அதை இறக்குகிறோம்.

திருக்குர்ஆன் 15:21

அல்லாஹ்வை விட்டு விட்டு வானங்களிலும், பூமியிலும் இவர்களுக்கான உணவில் சிறிதளவும் கைவசம் வைத்திராதவர்களையும், சக்தியற்றோரையும் இவர்கள் வணங்குகின்றனர்.

திருக்குர்ஆன் 16:73

தான் நாடியோருக்கு உமது இறைவன் செல்வத்தைத் தாராளமாக வழங்குகிறான். குறைத்தும் வழங்குகிறான். அவன் தனது அடியார்களை நன்கறிந்தவனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கிறான்.

திருக்குர்ஆன் 17:30

(முஹம்மதே!) தொழுமாறு உமது குடும்பத்தினரை ஏவுவீராக! அதில் (ஏற்படும் சிரமங்களை) சகித்துக் கொள்வீராக! உம்மிடம் நாம் செல்வத்தைக் கேட்கவில்லை. நாமே உமக்குச் செல்வத்தை அளிக்கிறோம். (இறை) அச்சத்திற்கே (நல்ல) முடிவு உண்டு.

திருக்குர்ஆன் 20:132

வறுமையை நீக்குவதும், செல்வத்தை அளிப்பதும், உணவு வழங்குவதும் அல்லாஹ்வின் தனிப்பட்ட அதிகாரத்தில் உள்ளது என்று இவ்வசனங்களும் 2:155, 2:212, 2:245, 3:27, 3:37, 4:130, 5:64, 6:151, 9:28, 10:107, 16:71, 24:32, 24:38, 24:43, 25:10, 28:82, 29:17, 29:60, 29:62, 30:37, 30:48, 34:24, 34:36, 34:39, 35:3, 35:15, 39:52, 41:10, 42:12, 42:19, 42:27, 47:38, 51:58, 65:3, 67:21, 89:16, 93:8 ஆகிய வசனங்களும் தெளிவாகக் கூறுகின்றன.

வானிலிருந்து மழையை இறக்கி அருள் புரிவதும் அல்லாஹ்வின் அதிகாரத்தில் உள்ளது என்று திருக்குர்ஆன் கூறுகிறது.

அவனே பூமியை உங்களுக்கு விரிப்பாகவும், வானத்தை முகடாகவும் அமைத்தான். வானிலிருந்து தண்ணீரையும் இறக்கினான். அதன் மூலம் கனிகளை உங்களுக்கு உணவாக (பூமியிலிருந்து) வெளிப்படுத்தினான். எனவே அறிந்து கொண்டே அல்லாஹ்வுக்கு நிகராக எவரையும் கற்பனை செய்யாதீர்கள்!

திருக்குர்ஆன் 2:22

வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும், இரவு பகல் மாறிமாறி வருவதிலும், மக்களுக்குப் பயனளிப்பவற்றுடன் கடலில் செல்லும் கப்பலிலும், அல்லாஹ் வானத்திலிருந்து இறக்கி வைக்கும் மழையிலும், பூமி வறண்ட பின் அதன் மூலம் அதைச் செழிக்கச் செய்வதிலும், ஒவ்வொரு உயிரினத்தையும் அதில் பரவ விட்டிருப்பதிலும், காற்றுகளை மாறிமாறி வீசச் செய்திருப்பதிலும், வானத்திற்கும், பூமிக்கும் இடையே வசப்படுத்தப்பட்டுள்ள மேகத்திலும் உணரும் சமுதாயத்திற்குப் பல சான்றுகள் உள்ளன.

திருக்குர்ஆன் 2:164

"வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவளிப்பவன் யார்? செவிப்புலனையும், பார்வைகளையும் தன் கைவசம் வைத்திருப்பவன் யார்? உயிரற்றதிலிருந்து உயிருள்ளதையும், உயிருள்ளதிலிருந்து உயிரற்றதையும் வெளிப்படுத்துபவன் யார்? காரியங்களை நிர்வகிப்பவன் யார்?'' என்று கேட்பீராக! 'அல்லாஹ்' என்று கூறுவார்கள். "அஞ்ச மாட்டீர்களா'' என்று நீர் கேட்பீராக!

திருக்குர்ஆன் 10:31

சூல் கொண்ட காற்றுகளை அனுப்புகிறோம். அப்போது வானிலிருந்து தண்ணீரை இறக்கி உங்களுக்கு அதைப் புகட்டுகிறோம். அதை (வானில்) நீங்கள் சேமித்து வைப்போராக இல்லை.

திருக்குர்ஆன் 15:22

அல்லாஹ்வே வானிலிருந்து தண்ணீரை இறக்கினான். பூமி இறந்த பின் அதன் (தண்ணீர்) மூலம் இதற்கு உயிரூட்டினான். செவியுறும் சமுதாயத்துக்கு இதில் தக்க சான்று இருக்கிறது.

திருக்குர்ஆன் 16:65

வானிலிருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்குவதையும், (அதனால்) பூமி பசுமையடைவதையும் நீர் அறியவில்லையா? அல்லாஹ் நுட்பமானவன்; நன்கறிந்தவன்.

திருக்குர்ஆன் 22:63

வானத்திலிருந்து அளவோடு தண்ணீரை இறக்கினோம். அதைப் பூமியில் தங்க வைத்தோம். அதைப் போக்கி விடுவதற்கும் நாம் ஆற்றலுடையவர்கள்.

திருக்குர்ஆன் 23:18

அல்லாஹ் மேகங்களை இழுத்து அவற்றை ஒன்றாக்குவதையும், பின்னர் அதை அடுக்கடுக்காக அமைப்பதையும் நீர் அறியவில்லையா? அதன் மத்தியில் மழை வெளிப்படுவதைக் காண்கிறீர்! வானத்திலிருந்து அதில் உள்ள (பனி) மலைகளிலிருந்து ஆலங்கட்டியையும் இறக்குகிறான். தான் நாடியோருக்கு அதைப் பெறச் செய்கிறான். தான் நாடியோரை விட்டும் திருப்பி விடுகிறான். அதன் மின்னல் ஒளி பார்வைகளைப் பறிக்கப் பார்க்கிறது.

திருக்குர்ஆன் 24:43

(நீங்கள் இணைகற்பித்தவை சிறந்தவையா? அல்லது) வானங்களையும், பூமியையும் படைத்து வானத்திலிருந்து தண்ணீரை உங்களுக்காக இறக்கி வைத்தவனா? அதன் மூலம் செழிப்பான தோட்டங்களை முளைக்கச் செய்கிறோம். அதில் ஒரு மரத்தைக் கூட உங்களால் முளைக்கச் செய்ய இயலாது. அல்லாஹ்வுடன் வேறு கடவுளா? இல்லை. அவர்கள் (இறைவனுக்கு மற்றவர்களை) சமமாக்கும் கூட்டமாகவே உள்ளனர்.

திருக்குர்ஆன் 27:60

"வானத்திலிருந்து தண்ணீரை இறக்கி பூமி செத்த பின் அதன் மூலம் அதற்கு உயிரூட்டுபவன் யார்?'' என்று அவர்களிடம் நீர் கேட்டால் 'அல்லாஹ்' என்றே கூறுவார்கள். "அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்'' என்று கூறுவீராக! மாறாக அவர்களில் அதிகமானோர் விளங்கிக் கொள்வதில்லை.

திருக்குர்ஆன் 29:63

எந்த நல்லடியாரும் மழையை இறக்கி அருள் புரிய முடியாது. மழையைத் தருவது அல்லாஹ்வின் அதிகாரம் என்று இவ்வசனங்களும், 6:6, 6:99, 7:57, 11:52, 13:12, 13:17, 14:32, 16:10, 20:53, 22:5, 25:48, 27:64, 30:24, 30:48, 31:10, 31:34, 32:27, 35:9, 35:27, 39:21, 40:13, 41:39, 42:28, 43:11, 45:5, 50:9, 56:68, 67:30, 71:11, 78:14, 80:25 ஆகிய வசனங்களும் கூறுகின்றன.

நோய்களைக் கொடுப்பதும், அதிலிருந்து நிவாரணம் அளிப்பதும் அல்லாஹ்வின் தனிப்பட்ட அதிகாரத்தில் உள்ளவையாகும்.

ஓரளவு அச்சத்தாலும், பசியாலும் செல்வங்களையும், உயிர்களையும், பலன்களையும் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக!

திருக்குர்ஆன் 2:155

அல்லாஹ் உமக்குத் துன்பத்தை ஏற்படுத்தினால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. அவன் உமக்கு நன்மையை ஏற்படுத்தி விட்டால் அவன் அனைத்துப் பொருட்களின் மீது ஆற்றலுடையவன்.

திருக்குர்ஆன் 6:17

(முஹம்மதே!) உமக்கு முன் சென்ற சமுதாயங்களுக்கும் தூதர்களை அனுப்பினோம். அவர்கள் பணிவதற்காக அவர்களை வறுமையாலும், நோயாலும் தண்டித்தோம்.

திருக்குர்ஆன் 6:42

மனிதனுக்குத் தீங்கு ஏற்படுமானால் படுத்தவனாகவோ, அமர்ந்தவனாகவோ, நின்றவனாகவோ நம்மிடம் பிரார்த்திக்கிறான். அவனது துன்பத்தை அவனை விட்டு நாம் நீக்கும்போது அவனுக்கு ஏற்பட்ட துன்பத்திற்காக நம்மை அழைக்காதவனைப் போல் நடக்கிறான். இவ்வாறே வரம்பு மீறியோருக்கு அவர்கள் செய்து வந்தவை அழகாக்கப்பட்டுள்ளன.

திருக்குர்ஆன் 10:12

அல்லாஹ் உமக்கு ஒரு தீங்கை அளித்தால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. உமக்கு அவன் ஒரு நன்மையை நாடினால் அவனது அருளைத் தடுப்பவன் யாரும் கிடையாது. தனது அடியார்களில் நாடியோருக்கு அதை அளிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

திருக்குர்ஆன் 10:107

உங்களிடம் உள்ள ஒவ்வொரு அருட்கொடையும் அல்லாஹ்வுடையது. பின்னர் உங்களுக்கு ஒரு தீங்கு ஏற்பட்டால் அவனிடமே முறையிடுகின்றீர்கள். பின்னர் அத்துன்பத்தை உங்களை விட்டும் அவன் நீக்கியதும் நாம் அவர்களுக்கு வழங்கியதற்கு துரோகம் செய்து, உங்களில் ஒரு பிரிவினர் தமது இறைவனுக்கு இணை கற்பிக்கின்றனர். அனுபவியுங்கள்! பின்னர் அறிந்து கொள்வீர்கள்.

திருக்குர்ஆன் 16:53,54,55

"அல்லாஹ்வையன்றி நீங்கள் கற்பனை செய்தோரைப் பிரார்த்தித்துப் பாருங்கள்! உங்களை விட்டும் கஷ்டத்தை நீக்கவோ, மாற்றவோ அவர்களுக்கு இயலாது'' என்று கூறுவீராக!

திருக்குர்ஆன் 17:56

நான் நோயுறும்போது அவனே எனக்கு நிவாரணம் தருகிறான். (என்று இப்ராஹீம் நபி கூறினார்)

திருக்குர்ஆன் 26:80

நோய்களைக் கொடுப்பதும், அதற்கு நிவாரணமளிப்பதும் அல்லாஹ்வின் தனிப்பெரும் அதிகாரத்தில் உள்ளதாகும் என்று இவ்வசனங்களும், 2:214, 7:94, 10:21, 11:10, 21:84, 23:75, 27:62, 39:38, 57:22, 64:11 ஆகிய வசனங்களும் கூறுகின்றன.

ஐந்து புலன்களுக்கும், ஆறாவதான பகுத்தறிவுக்கும் அடங்காத மறைவான காரியங்களை அல்லாஹ் மட்டுமே அறிவான். எந்த மகானும் இவற்றை அறிய முடியாது. அடுத்த விநாடி எது நடக்கும் என்பதைக் கூட அறிய முடியாது என்று திருக்குர்ஆன் கூறுகிறது.

மறைவானவற்றின் திறவுகோல்கள் அவனிடமே உள்ளன. அவனைத் தவிர யாரும் அதை அறிய மாட்டார். தரையிலும், கடலிலும் உள்ளவற்றை அவன் அறிவான். ஓர் இலை கீழே விழுந்தாலும் அதை அவன் அறியாமல் இருப்பதில்லை. பூமியின் இருள்களில் உள்ள விதையானாலும், ஈரமானதோ காய்ந்ததோ ஆனாலும் தெளிவான ஏட்டில்157 இல்லாமல் இல்லை.

திருக்குர்ஆன் 6:59

"வானங்களிலும், பூமியிலும் மறைவானதை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய மாட்டார்கள். தாங்கள் எப்போது உயிர்ப்பிக்கப்படுவோம் என்பதையும் அவர்கள் அறிய மாட்டார்கள்'' என்று கூறுவீராக!

திருக்குர்ஆன் 27:65

எந்த மகானும் மறைவானதை அறிய இயலாது என்பதை இவ்வசனங்களும் 10:20, 31:34, 34:3 ஆகிய வசனங்களும் தெளிவாகக் கூறுகின்றன.

எந்த நல்லடியாரும் மற்றவர்களுக்கு இதைச் செய்து கொடுப்பது இருக்கட்டும். தமக்கே இவற்றைச் செய்து கொள்ள முடியாது என்பதுதான் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாகும்.

அப்படியானால் நபிமார்கள் எப்படி அற்புதங்கள் நிகழ்த்தினார்கள்? தனக்குரிய ஆற்றலை நபிமார்களுக்கு அல்லாஹ் எப்படி வழங்கினான் என்று கேட்டால் அதற்கு இஸ்லாத்தில் தக்க விடை உள்ளது.

Leave a Reply