ஏகத்துவம் ஆகஸ்ட் 2005
அழுகின்ற இம்ரானாக்களும் எழுகின்ற கேள்விகளும்
மத்ஹபுகள் அறிவை மழுங்கடிக்கக் கூடியவை. அபின் போதை தலைக்கேறியவர்களைக்கூட அதிலிருந்து காப்பாற்றி, கரையேற்றி விடலாம். ஆனால் மத்ஹபு போதைதலைக்கேறியவர்களை , குர்ஆன் ஹதீஸ் என்ற பாதையை விட்டு மாறியவர்களைஎளிதில் மாற்ற முடியாது. மார்க்க அறிஞர்கள் என்ற பெயரில் உள்ளவர்களிடம் இந்தக்கருத்து புதையுண்டு விட்டதால் இத்தகையவர்கள் குர்ஆன் ஹதீசுக்கும், மனித இயற்கைஉணர்வுகளுக்கும் எதிரான முரட்டுத் தனமான, மூர்க்கத்தனமான தீர்ப்புகளை வழங்கிவருகின்றனர். எல்லாம் வல்ல அல்லாஹ் இம்மார்க்கத்தைப் பற்றி, இது அல்லாஹ்வின்இயற்கையான மார்க்கம் (அல்குர்ஆன் 30:30) என்று கூறுகின்றான்.
அப்படிப்பட்ட, ஆக்கப்பூர்வமான, அறிவுப்பூர்வமான, மனித இயல்புக்கும் இயற்கை அமைப்புக்கும் இயைந்த ஓர் இனிய எளிய மார்க்கத்தை மிகக் கொடிய, கடின மார்க்கமாக பத்திரிகைகளும் பார்வையாளர்களும் காட்டுவதற்கு இந்த மத்ஹபுவாதிகள் காரணமாகி விட்டனர்.
இம்ரானா விவகாரத்தில் இப்படியொரு கடினப் போக்கைக் கடைப்பிடித்ததைத் தான்இங்கு குறிபிப்பிடுகின்றோம். இம்ரானா விவகாரத்தில் இந்த மவ்லவிமார்கள் வழங்கிய மார்க்கத் தீர்ப்பு (?) நாடாளுமன்றத்தையே உலுக்குவதற்குத் தயாராக இருக்கின்றது என்றால் இவர்கள் சுய விருப்பத்தின் படி அளிக்கும் முரட்டுத்தனமான தீர்ப்புகள், வரட்டுவாதங்கள் எவ்வளவு பெரிய விளைவை ஏற்படுத்தியுள்ளன என்பதை இதன் மூலம் நாம் உணர்ந்து கொள்ளலாம்.
தாரத்தைத் தாயாக மாற்றும் தாரக மந்திரம்
இம்ரானாவை அவருடைய மாமனார் அதாவது கணவனின் தந்தை கற்பழித்துவிடுகின்றார். அல்லது கற்பழித்ததாகக் கூறப்படுகின்றது. இந்த விவகாரம் ஹனபிமத்ஹபின் அகில உலக மையம் என்று கூறப்படும் தேவ்பந்த் தாருல் உலூம் கல்லூரிஉலமாக்களிடம் மார்க்கத் தீர்ப்பு கோரி வருகின்றது.
கணவனின் தந்தை கற்பழித்து விட்டதால் இம்ரானாவுக்கும் அவளது கணவனுக்கும் இனி திருமண பந்தம் கிடையாது என தாருல் உலூம் தேவ்பந்த் தீர்ப்பை அல்ல, திருமண பந்தத்தைச் சுட்டெரிக்கும் தீப்பந்தத்தைக் கொளுத்தி விட்டிருக்கின்றது.
மாமனார் மருமகளிடம் உறவு கொண்டு விட்டதால் அவள் தனது கணவருக்கே தாயாகிவிட்டாள் . அதனால் தன்னைக் கற்பழித்த காமுகனான மாமனாரிடமே சேர்ந்து வாழவேண்டும், அதாவது மருமகளை நிரந்தரமாக அடைவதற்கு அவளைக் கற்பழிப்பது தான்சிறந்த வழி என்ற தாரக மந்திரத்தையும் இந்தத் தீர்ப்பு உருவாக்கியுள்ளது.
தாருல் உலூம் தேவ்பந்த் வழங்கிய ஃபத்வாவுக்கும் இந்தத் தாரக மந்திரத்துக்கும் எவ்விதத் தார்மீக சம்பந்தமும் இல்லை. மாமனாருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்ற தீர்ப்பை வழங்கியது கிராமப் பஞ்சாயத்து தானே தவிர தேவ்பந்த் மதரஸா அல்ல என்று தேவ்பந்திற்குக் காவடி தூக்கும் இங்குள்ள பக்த கோடிகள் சப்பைக்கட்டு கட்டி, பிரசுரங்களை சுற்றுக்கு விட்டுக் கொண்டிருக்கின்றனர்.
கணவனின் தந்தையுடன் சேர்ந்து தான் வாழ வேண்டும் என்று தேவ்பந்தி மதரஸாஃபத்வா கொடுக்கவில்லை என்று வைத்துக் கொண்டாலும், கிராமக்கட்டப்பஞ்சாயத்தினர் இவ்வாறு தீர்ப்பளிப்பதற்குக் காரணமாக அமைந்தது தேவ்பந்தின்ஃபத்வா தான். அதாவது தம்பதியர் சேர்ந்து வாழக் கூடாது என்று தேவ்பந்த் வழங்கியஅந்த மார்க்கத் தீர்ப்பு தான். எனவே இந்தப் பாவத்திற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லைஎன்று கூறி தேவ்பந்த் தாருல் உலூம் தப்பித்துக் கொள்ள முடியாது. குர்ஆன் ஹதீஸைப் பின்னுக்குத் தள்ளி விட்டு ஹனபி மத்ஹபை முன்னால் நிறுத்தியது தான் இந்த நிலை தோன்றியிருப்பதற்குக் காரணம்.
தேவ்பந்த் தாருல் உலூம் ஃபத்வாவுக்குக் பக்காவாக வக்காலத்து வாங்கி அதே போன்ற தீர்ப்பை பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் மதரஸாவும் வழங்கியுள்ளது.
மகளிருக்கு எதிரான மத்ஹபுகள்
இம்ரானாவைப் போல் ஆயிரக்கணக்கான பெண்களை தங்கள் கணவன்மார்களையும்பிள்ளைகளையும் விட்டு முத்தலாக் என்ற பெயரில் இந்த மத்ஹபுகள் கதறக் கதறபிரித்து அலைக்கழிக்கின்றன. மத்ஹபுகள் என்ற போர்வையில் மகளிர் எப்படியெல்லாம் பாதிக்கப்பட்டு பரிதவிக்கின்றனர்? அவர்களைப் பாதிப்புக்கு உள்ளாக்கும் மத்ஹபு சட்டங்கள் எவை என்பதை நாம் அடையாளம் காட்டவுள்ளோம்.
அது மட்டுமல்ல. மத்ஹபுகள் பெண்களை பாலியல் அடிப்படையில் எப்படியெல்லாம்போகப் பொருளாகச் சித்தரித்துக் காட்டுகின்றன? எப்படியெல்லாம் விபச்சாரத்தைத் தூண்டுகின்றன? என்பதை எடுத்துக் கூறி மத்ஹபுகளைத் தோலுரித்துக்காட்டவுள்ளோம்.
ஒரு கணவன் தன்னுடைய மனைவியை ஆத்திரத்தில் முத்தலாக் என்று கூறி விட்டார்.பிறகு அதற்காக மிகுந்த வேதனைப் படுகின்றார். இந்நிலையில் இந்த விவகாரம் மகளிர்காவல் நிலையத்திற்குச் செல்கின்றது. கணவனும் மனைவியும் மகளிர் காவல்நிலையத்திற்கு வந்து, காவல் ஆய்வாளரிடம், நாங்கள் இருவரும் சேர்ந்து வாழவிரும்புகின்றோம் என்று தெரிவிக்கின்றனர். ஆனால் இம்ரானாவுடைய வாழ்க்கையில்குறுக்கே வந்து நின்ற மாமனாரைப் போல் இங்கும் மாமனார் குறுக்கே வந்து நிற்கின்றார்.மாமனாருக்கு தன் மகன் அந்தப் பெண்ணுடன் வாழ்வது பிடிக்கவில்லை. அவள் தன்மகனுடன் சேர்ந்து வாழக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கின்றார். அதற்கு மத்ஹபுஅடிப்படையில் முத்தலாக்கைக் கையில் எடுத்துக் கொண்டு, தன் மகன் முத்தலாக் கூறிவிட்டதால் இனி இருவரும் சேர்ந்து வாழ முடியாது என்று வாதிடுகின்றார்.
இந்த வழக்கு முல்லாக்களிடம் வந்த போது, தேவ்பந்த் ஆலிம்கள் ஹனபி மத்ஹபில் உறுதியாக இருந்தால் அவர்களுக்கு நாங்கள் சளைத்தவர்களா? நாங்கள் ஷாபிமத்ஹபில் உறுதியானவர்கள் என்று கூறி அதை நிரூபிக்கும் வகையில், “முத்தலாக்கூறி விட்டதால் இருவரும் அறவே சேர்ந்து வாழ முடியாது. பிரிந்து தான் ஆகவேண்டும்” என்று மாமனாருக்குச் சாதகமாக அந்தப் பெண்ணை கணவனிடமிருந்துபிரித்து விட்டனர். இது தொடர்பாக பெண் வீட்டினர் நம்மை அணுகி மார்க்கத் தீர்ப்புகோரினர். குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் ஒரு தலாக் தான் நிறைவேறியுள்ளது.எனவே அவ்விருவரும் சேர்ந்து வாழலாம் என்று தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மார்க்கத்தீர்ப்பு வழங்கப்பட்டது. இது தொடர்பாக விளக்கம் கேட்டு மகளிர் காவல் ஆய்வாளர்நேரடியாக நமது அலுவலகத்திற்கே வருகையளித்தார். அவரிடம் குர்ஆன் ஹதீஸ்அடிப்படையில் தலாக் பற்றி விரிவாக விளக்கப்பட்டது.
இதை இங்கே குறிப்பிடக் காரணம், இதுபோல் ஆயிரமாயிரம் பெண்களின்வாழ்க்கையைக் கருவறுத்தது இந்த முத்தலாக். இந்த முத்தலாக்கைத் தூக்கிப் பிடிப்பதுமத்ஹபுகள் தான்.
பெண்களின் வாழ்க்கைக் கப்பலை நடுக்கடலில் முத்தலாக் என்ற ஓட்டையைப் போட்டு மூழ்கடிக்கும் கொடுமையை இந்த இதழ் விலாவாரியாக விவரித்து மத்ஹபுவாதிகளின் முகமூடியைக் கிழித்தெறிகின்றது.
இது போன்ற எண்ணற்ற கொடுமைகளை மத்ஹபுகளும் மத்ஹபுவாதிகளும்பெண்களுக்கு இழைத்து வருகின்றனர்.
உத்திரபிரதேசத்தில் நடந்த இம்ரானா விவகாரம் இந்தியாவில் மட்டுமல்ல, உலகஅளவில் பேசப் படுகின்றது. அதற்குக் காரணம் தேவ்பந்த் மதரஸாவின் மார்க்கத் தீர்ப்புதான் .
ஏற்கனவே இஸ்லாமிய தீவிரவாதம், இஸ்லாமிய பழமை வாதம் என்று இஸ்லாத்திற்குஎதிராக தீ(ய)க் கருத்துக்களைக் கக்கிக் கொண்டி ருக்கும் செய்தி ஊடகங்களுக்குஇம்ரானா விவகாரம் ஒரு தீனியாக ஆனது.
இதற்கு செய்தி ஊடகங்களை ஒரேயடியாகக் குறை கூறி விடவும் முடியாது. வரம்புகடந்து வாய் நீட்டிய வம்புக்கார செய்தி ஊடகங்களைத் தவிர்த்து நியாயமானவிமர்சனங்களைச் செய்த ஊடகங்களை நாம் குறை சொல்ல முடியாது.
கைப்புண்ணுக்குக் கண்ணாடி தேவையில்லை என்பது போல், இங்குள்ளமுல்லாக்களிடம் குறையை வைத்துக் கொண்டு, மத்ஹபுகள் என்ற குப்பைகளைவைத்துக் கொண்டு நாம் ஊடகங்களைக் குறை கூறி அழுவதில் பயனில்லை.
செய்தி ஊடகங்களைக் குற்றம் சொல்வதை விட்டு விட்டு இங்குள்ள குப்பைகளைக்கொண்டு தொட்டியில் கொட்டும் பணியை நாம் செய்தாக வேண்டும்.
இப்போது ஒரு கேள்வி எழலாம். சில அமைப்புகள் இம்ரானாவின் ஊருக்குச் சென்றுஅந்தக் குடும்பத்தாரிடம் பேட்டி கண்டு, அப்படியெல்லாம் நடக்கவில்லை என்றும் பத்திரிகைகள் தான் திரித்து செய்திகளை வெளியிட்டு விட்டதாகவும் கூறியுள்ளன. மேலும் இம்ரானாவே தொலைக்காட்சிப் பேட்டிகளில், தன் மாமனார் தன்னைக் கற்பழிக்கவில்லை என்று கூறியுள்ளாரே! இப்போது இந்த விவாதம் தேவை தானா?என்பது தான் அந்தக் கேள்வி.
தேவை புலன் விசாரணை அல்ல தெளிவான தீர்ப்பு தான்
இங்குள்ள விவகாரம் இம்ரானா கற்பழிக்கப்பட்டாளா? இல்லையா? என்று புலன்விசாரணை நடத்துவதல்ல. மாறாக இம்ரானா என்ற பெண் கற்பனைப் பாத்திரமாகவேஇருந்து விட்டுப் போகட்டும். ஒரு மாமனார் மருமகளை, அதாவது மகனின்மனைவியைக் கற்பழித்து விட்டால் அதற்குரிய மார்க்கத் தீர்ப்பு என்ன? இதற்கு ஹனபிமத்ஹபின் சட்டம் என்ன தீர்ப்பு வழங்குகின்றது? என்பது தான் இங்குள்ள விவகாரம்.
இந்த விவகாரத்திற்கு, மாமனார் மருமகளைக் கற்பழித்ததால் இனி அந்தப் பெண் தனது கணவனுடன் சேர்ந்து வாழ முடியாது, அவளுடன் உறவு கொள்வது தடுக்கப்பட்டகாரியம் என்று ஹனபி மத்ஹபு நூல்கள் தெளிவாகக் கூறுகின்றன. இதைத் தான்இம்ரானா விவகாரத்தில் தேவ்பந்த் மதரஸா தன் ஃபத்வாவில் குறிப்பிட்டுள்ளது.
இந்தத் தீர்ப்புக்கு ஆதாரமாகக் கீழ்க்கண்ட வசனத்தையும் சமர்ப்பித்துள்ளது.
உங்கள் தந்தையர் மணமுடித்த பெண்களை மணக்காதீர்கள்! ஏற்கனவே நடந்துமுடிந்ததைத் தவிர. இது வெட்கக்கேடானதும், வெறுப்புக்குரியதும், கெட்ட வழியுமாகும்.
(அல்குர்ஆன் 4:22)
இந்த வசனத்தில் இடம் பெற்றுள்ள தன்கிஹூ என்ற வார்த்தையின் வேர்ச் சொல்நிகாஹ் என்பதாகும். அதற்கு அகராதியில் ஒப்பந்தம் என்பது மட்டும் பொருளல்ல,உடலுறவையும் குறிக்கும் என்றெல்லாம் இவர்கள் விளக்கம் கூறியுள்ளனர். இந்தவிளக்கம் சரியா? இந்த வசனத்தில் நிகாஹ் என்பது எதைக் குறிக்கின்றது? என்பதற்கானவிளக்கத்தையும், மத்ஹபு நூல்களில் பெண்களைப் பற்றி இன்னும் என்னென்ன கேலிக்கூத்தான, அசிங்கமான சட்டங்கள் எல்லாம் கூறப்பட்டுள்ளன? என்பதையும் இன்ஷாஅல்லாஹ் வரும் இதழில் காண்போம்.
அல்லாஹ் கூறும் முத்தலாக்கும் முல்லாக்கள் கூறும் முத்தலாக்கும்
இஸ்லாமிய மார்க்கம் பெண் களுக்குப் பல்வேறு பாதுகாப்புகளை வழங்கியுள்ளது. அதில் மிக முக்கியமானது தலாக் எனும் விவாகரத்தாகும். மனைவியைப் பிடிக்காத கணவன்அவளை விவாக ரத்து செய்து பிரிவதற்குப் பதிலாக கொலை செய்யும் கொடுமைகள்நிகழ்வதற்கு விவாக ரத்துச் சட்டங்களில் காட்டப்படும் கடுமை தான் காரணம் என்பதைமறுக்க முடியாது. ஆனால் இஸ்லாமிய மார்க்கம் விவாக ரத்து சட்டத்தைஎளிதாக்கியிருப்பதால் இதுபோன்ற கொலைகளை விட்டும் பெண்கள் பாதுகாப்புபெற்றுள்ளார்கள்.
அகிலங்களைப் படைத்த இறைவனால் அருளப்பட்ட இந்த அற்புதமான சட்டம்,அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டிய முறையில் நடைமுறைப் படுத்தப் படாததால்இன்று மாற்று மதத்தவர்கள் இஸ்லாத்தைக் குறித்து விமர்சனம் செய்யும் நிலைஏற்பட்டுள்ளது.
மார்க்கத்தின் பல்வேறு விஷயங்களில் குர்ஆன், ஹதீசுக்கு மாற்றமான சட்டங்களை உருவாக்கி நடைமுறைப் படுத்தி வரும் மத்ஹபுகள் தலாக் விஷயத்திலும் தலையிட்டு தவறான நடைமுறையை உருவாக்கி வைத்துள்ளன. இதன் காரணமாகமுஸ்லிம்களிலேயே பலர் தலாக் சட்டம் குறித்த உண்மை நிலை தெரியாததால்தங்களது வாழ்க்கையைப் பாழ் படுத்திக் கொண்டுள்ளனர்.
எனக்கும், என் மனைவிக்கும் ஏற்பட்ட சிறிய பிரச்சனையில் அவசரப்பட்டு, அவளை முத்தலாக் கூறி விட்டேன். ஆனால் தற்போது நான் செய்தது தவறு என்று எண்ணிமீண்டும் சேர்ந்து வாழ முடியுமா? என்று கேட்டால் ஆலிம்களும், ஜமாஅத்தாரும் கூடாது என்கின்றனர். இதற்கு மார்க்க அடிப்படையில் தீர்வு என்ன? என்று மார்க்கத் தீர்ப்பு கோரிநமது ஜமாஅத்துக்கு வரும் கடிதங்கள் ஏராளம். நம்மை அணுகாமல் ஜமாஅத்தினரின்தீர்ப்பைக் கேட்டு பிரிந்து வாழும் கணவன் மனைவியர் எத்தனையோ அல்லாஹ்வேஅறிவான். எனவே முத்தலாக் குறித்த முழுமையான விளக்கத்தைப் பார்ப்பது அவசியமாகும்.
விவாக ரத்துச் சட்டம் இஸ்லாத்தில் எளிமையாக்கப் பட்டிருந்தாலும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று விவாகரத்துச் செய்யுமாறு இஸ்லாம் கூறவில்லை. அதற்கு முன்பல விஷயங்களைக் கவனத்தில் கொள்ளுமாறு வழிகாட்டுகிறது. கடைசி கடைசியாகவே”தலாக்’ எனும் ஆயுதத்தைக் கையில் எடுக்க வேண்டும் எனக் கூறுகிறது.
*சொல்லித் திருத்துதல்*
இல்லற வாழ்வில் பிரச்சினையைச் சந்திக்கும் கணவன், மனைவியிடம் பக்குவமாகஅவளது குறைகளைச் சுட்டிக் காட்டி அவளது குடும்பக் கடமைகளை உணர்த்தி,குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றி எடுத்துச் சொல்லி, தான் அவளைப் பராமரிக்கும்பொறுப்பில் இருப்பதையும் விவாகரத்தினால் அவள் சந்திக்க நேரும் பாதிப்புகளையும்இனிய மொழிகளால் எடுத்துரைக்க வேண்டும்.
“அப்பெண்கள் உங்களுக்கு மாற்றமாக நடப்பார்கள் என்றஞ்சினால் அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள்” (அல்குர்ஆன் 4:34) என்று இறைவன் குறிப்பிடுகிறான்.
இப்போதனையிலிருந்து, பெண்கள் மட்டுமே தவறு செய்யக் கூடியவர்கள் என்றும் ஆண்களிடம் தவறே ஏற்படாது என்றும் கருதி விடக் கூடாது. ஏனெனில் இஸ்லாம் இதை விடவும் அழுத்தமாக ஆண்களுக்கு அறிவுரை சொல்லத் தவறவில்லை.
“நீங்கள் மனைவியருடன் கனிவோடு நடந்து கொள்ளுங்கள். நீங்கள் அவர்களைவெறுத்தால் ( அது முறையில்லை; ஏனெனில்) நீங்கள் ஒன்றை வெறுக்கலாம்; நீங்கள்வெறுக்கும் ஒன்றில் அனேக நன்மைகளை அல்லாஹ் ஏற்படுத்தியிருக்கலாம்”. (அல்குர்ஆன் 4:19) என்று இறைவன் கூறுகிறான்.
“நீங்கள் உங்கள் துணைவிகளிடம் ஏதேனும் தீய குணங்களைக் கண்டால் உடனேஅவர்களை வெறுத்து விடாதீர்கள். நீங்கள் கவனிப்பீர்களாயின், அவர்களிடம் வேறு நல்ல குணங்களைக் காண்பீர்கள்!” என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் சிறந்தஅறிவுரையைக் கூறியுள்ளனர்.
(நூல்கள்: புகாரி, முஸ்லிம்)
*தள்ளித் திருத்தல்*
இனிய மொழியில் எடுத்துரைத்தும் மனைவி தன் போக்கிலிருந்து திருந்தாத போது,அடுத்த கட்டமாக, தனது அதிருப்தியையும், அவள் மீதுள்ள கோபத்தையும்
வெளிப்படுத்துவதற்காகவும் தாம்பத்ய உறவின் தேவையை அவளுக்குஉணர்த்துவதற்காகவும் நிரந்தரமாகவே பிரிய நேரிடும் என்பதை அவளுக்குப்புரியவைப்பதற்காகவும் அவளுடன் தாம்பத்ய உறவு கொள்வதைத் தற்காலிகமாகத்தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
“அவர்களைப் படுக்கையிலிருந்து (தற்காலிகமாக) விலக்கி விடுங்கள்” (அல்குர்ஆன் 4:34)என்று இறைவன் அடுத்த அறிவுரையை வழங்குகிறான்.
தன் மீது கணவன் மோகமும் இச்சையும் கொண்டிருக்கிறான்; தன்னை அவனால்தவிர்க்க முடியாது என்று பெண் இயல்பாகவே இறுமாந்திருக்கிறாள். இந்த நிலையில்,அவளது பெண்மையும், அண்மையும் கணவனால் புறக்கணிக்கப்படும் போது, அவளதுதன்மானம் சீண்டப் படுவதையும் தனது உறவைக் கணவனால் தவிர்த்துக் கொள்ளமுடியும் என்பதையும் தெளிவாக உணரும் போது, நிலைமையின் விபரீதத்தை அவள்புரிந்து கொள்ள முடியும். இதனால் தலாக் தவிர்க்கப் பட்டு குடும்பத்தில் சுமூக உறவுஏற்படலாம்.
*அடித்துத் திருத்துதல்*
மேற்சொன்ன இரு நடவடிக்கைகளும் கூட மனைவியிடம் மாற்றத்தை ஏற்படுத்தவில்லையாயின் மூன்றாவது நடவடிக்கையாக அவளை அடித்துத் திருத்தஇஸ்லாம் அனுமதிக்கிறது!
“அவர்களை (இலேசாக) அடியுங்கள்”
(அல்குர்ஆன் 4:34)
அடித்தல் என்று சொன்னால், பலவீனமான பெண் மீது தனது பலத்தைப் பிரயோகிப்பதோஅல்லது மிருகங்களை அடிப்பது போன்றோ அடிப்பது என்று அர்த்தமில்லை.
ஏனெனில் எந்தச் சந்தர்ப்பத்திலும் மனைவியின் முகத்தில் அடிப்பதையும், காயம் ஏற்படும் படி அடிப்பதையும் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மிக வன்மையாகத் தடுத்துள்ளார்கள்.
(நூல்: முஸ்லிம்)
கணவனால் அடிக்கப் பட்டால், அவளது பெண்மையும், தன்மானமும் சீண்டப்படுவதைஇன்னும் தெளிவாக அவள் உணர்ந்து கொள்வதோடு கணவன் “எதற்கும்’ தயாராகஇருப்பதையும் புரிந்து கொள்கிறாள். இதனால் அவளது போக்கில் நிச்சயமாக மாற்றம்ஏற்பட்டு விவாகரத்துச் செய்யப்படும் நிலை தவிர்க்கப்படுகிறது.
விவாகரத்து என்ற அளவுக்குச் செல்வதைத் தடுக்கவே இலேசாக அடிக்க இஸ்லாம் அனுமதிக்கிறது. இதையும் பெண்ணுரிமை பேசுவோர் குறை கூறுவார்கள்.
இலேசாக அடியுங்கள் என்று கூறும் இஸ்லாமிய மார்க்கத்தை நம்பியவர்களை விடஅடிப்பது பற்றிப் பேசாத மற்ற சமுதாயத்தினர் தான் பெண்களை அதிகமாக அடித்துஉதைத்துச் சித்திரவதை செய்கிறர்கள்.
ஆண் வலிமை உள்ளவனாகவும் பெண் வலிமை குறைந்தவளாகவும்படைக்கப்பட்டுள்ளார்கள். இருவரும் தனித்திருக்கும் போது இரண்டு போலீசாரைக்காவலுக்கு நிறுத்தி வைக்க முடியாது. இந்த நிலையில் கோபம் ஏற்பட்டால் பலம்வாய்ந்தவர்கள் பலவீனர்கள் மீது பாய்வது வழக்கமான ஒன்றுதான். இதை எந்தச்சட்டத்தினாலும் தடுக்க முடியாது.
இலேசாக அடியுங்கள் என்று கூறுவதன் மூலம் கண் மண் தெரியாமல் அடிப்பதைத்தடுத்து நிறுத்த முடியும்! மனைவியரைச் சித்திரவதைப் படுத்துவது முஸ்லிம்களிடம் மற்றவர்களை விட குறைவாகவே இருப்பதற்கு இதுவே காரணம் என்பதை உணரவேண்டும்.
*ஜமாஅத் தீர்வு*
கணவன் மனைவியருக் கிடையேயுள்ள பிணக்கு மேற் சொன்ன மூன்றுநடவடிக்கைகளுக்குப் பின்னரும் தொடரு மானால், அவர்கள் பிரச்சனையில் ஜமாஅத்(முஸ்லிம்களின் கூட்டமைப்பு) தலையிடும்.
“(கணவன் மனைவி ஆகிய) அவ்விருவரிடையே பிளவு ஏற்படும் என்று நீங்கள்அஞ்சினால் அவன் குடும்பத்தின் சார்பில் ஒரு நடுவரையும், அவள் குடும்பத்தின் சார்பில்ஒரு நடுவரையும் அனுப்புங்கள்! அவ்விருவரும் நல்லிணக் கத்தை விரும்பினால்அல்லாஹ் அவ்விரு வருக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துவான். அல்லாஹ்அறிந்தவனாகவும், நன்றாகவே அறிந்தவனாகவும் இருக்கிறான்.”
(அல்குர்ஆன் 4:35)
எந்தப் பிரச்சனையிலும் சம்மந்தப் பட்டவர்களே பேசித் தீர்க்க விரும்பினால் பெரும்பாலும் தீர்வு ஏற்படுவதில்லை. ஏனெனில் உணர்வுப் பூர்வமாகப் பிரச்சனையை அணுகுவதால் சில வேளை சிக்கல் மேலும் முற்றிப் போகலாம். தத்தம் நிலையிலேயே பிடிவாதமாக நிற்பர். தம்பதியர் உறவும் இதில் விதிவிலக்கில்லை.
இதன் காரணமாக இந்தப் பிரச்சனையில் நேரடித் தொடர்பில்லாத ஆனால் தம்பதியர்இணைந்து மகிழ்ச்சியாக வாழ்வதில் அக்கறையும் ஆசையும் கொண்ட அவர்களதுகுடும்பத்தைச் சேர்ந்தவர்களையே நடுவர்களாக, ஜமாஅத் நியமித்துச் சிக்கலைத் தீர்க்கமுயல வேண்டும். இதனால் தம்பதியர் தரப்புக் குற்றச் சாட்டுக்கள், விருப்பு வெறுப்பற்ற ,ஒருதலைப் பட்சமற்ற கோணத்தில் அணுகப்பட்டு, சமூகமான, ஒத்த தீர்வு காணப்படும். இதனால் தலாக் தவிர்க்கப்படும்.
இந்த நான்கு நடவடிக்கைகளாலும் கூட இணக்கம் ஏற்படவில்லையானால் அவர்கள்இணைந்து வாழ்வதில் அர்த்தமேயில்லை! இந்நிலையில் வேறு வழி ஏதுமின்றிதலாக்கை இஸ்லாம் அனுமதிக்கிறது.
*தலாக் கூறிட மூன்று வாய்ப்புக்கள்*
தலாக் கூறிட ஆண்களுக்கு மூன்று வாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன. முதல் இரண்டு வாய்ப்புக்களைப் பயன்படுத்திய பின் அவர்கள் திரும்பவும் சேர்ந்து வாழலாம். மூன்றாவது வாய்ப்பையும் பயன்படுத்தி விட்டால் அவர்கள் சேர்ந்து வாழ முடியாது. இதுதான் தலாக் கூறுவதற்கு இஸ்லாம் காட்டும் நெறியாகும்.
ஒரு கணவன், தன் மனைவியை முதல் தலாக் கூறினால் அவர்களிடையே நிலவியஉறவு முழுமையாக நீங்கி விடுவதில்லை. தற்காலிகமாக நீங்கி விடுகின்றது. கணவன்விரும்பினால் குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் மனைவியுடன் சேர்வதன் மூலம்,இல்லறத்தைத் தொடங்குதல் மூலம், சேர்ந்து கொள்வோம் என்று கூறுவதன் மூலம்இப்படி ஏதேனும் ஒரு முறையில் மீண்டும் சேர்ந்து வாழலாம்.
அந்தக் காலக்கெடு எது?
ஒருவன் தன் மனைவியை ஒரு தடவை தலாக் கூறுகிறான் என்று வைத்துக்கொள்வோம். அப்போது அவள் கர்ப்பினியாக இருந்தால் அவள் குழந்தையைப்பெற்றெடுப்பதற்குள் மீண்டும் அவர்கள் சேர்ந்து கொள்ளலாம்.
உதாரணமாக அவள் மூன்று மாதக் கர்ப்பிணியாக இருந்தால் சுமார் ஏழு மாதங்களுக்குள் அவர்கள் மீண்டும் சேர வாய்ப்பு உள்ளது. அவள் நிறை மாத கர்ப்பிணியாக இருந்தால் குழந்தையைப் பெற்றெடுத்த உடன் கெடு முடிந்து விடும்.
ஒருவன் தன் மனைவியை ஒரு தடவை தலாக் கூறும் போது மனைவி கர்ப்பிணியாக இல்லாவிட்டால் மூன்று மாதவிடாய் ஏற்பட்டு தூய்மை யாவதற்குள் இருவரும் சேர்ந்து கொள்ளலாம். (ஏறத்தாழ இரண்டரை முதல் மூன்று மாதங்கள் இதற்கு ஆகலாம்)
ஒருவன் தன் மனைவியை ஒரு தடவை தலாக் கூறும் போது மனைவி மாதவிடாய்நின்று போன வயதான பருவத்தில் இருந்தால் மூன்று மாதங்களுக்குள் அவர்கள்மீண்டும் சேர்ந்து கொள்ளலாம்.
இதற்கு என எந்தச் சடங்கும் கிடையாது.
இதற்கான திருக்குர்ஆன் சான்றுகள் வருமாறு:
உங்கள் பெண்களில் மாதவிடாய் அற்றுப் போனவர்கள் விஷயத்தில் நீங்கள் சந்தேகப்பட்டால் அவர்களுக்கும், மாதவிடாய் ஏற்படாதோருக்கும் உரிய காலக் கெடு மூன்று மாதங்கள். கர்ப்பிணிகளின் காலக் கெடு அவர்கள் பிரசவிப்பதாகும்.
(அல்குர்ஆன் 65:4)
விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய்க் காலம் (மறுமணம்செய்யாமல் ) காத்திருக்க வேண்டும். அல்லாஹ்வையும், இறுதி நாளையும் அவர்கள்நம்பி இருந்தால் தமது கருவறைகளில் அல்லாஹ் படைத்திருப்பதை மறைப்பதற்குஅவர்களுக்கு அனுமதி இல்லை . இருவரும் நல்லிணக்கத்தை விரும்பினால் அவர்களின்கணவர்கள் அவர்களைத் திரும்பச் சேர்த்துக் கொள்ளும் உரிமை படைத்தவர்கள்.
(அல்குர்ஆன் 2:228)
முதல் தடவை தலாக் கூறியவுடன் திருமண உறவு அடியோடு முறிந்து விடுவதில்லை;மாறாக மனைவியின் பிரிவை உணர்ந்து மீண்டும் சேரும் வாய்ப்பு இருக்கிறது என்பதை இவ்வசனங்களிலிருந்து புரிந்து கொள்ளலாம்.
மேற்கூறப்பட்ட காலக் கெடுவுக்குள் இருவரும் சேர்ந்து கொள்ளாவிட்டால் அதன் பிறகு சேரவே முடியாதா என்றால் அதுவும் இல்லை. பத்து வருடங்கள் கழித்து இருவரும் சேர்ந்து வாழ விரும்பினாலும் சேர வழியுண்டு. அதாவது இருவரும் மீண்டும்இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்வது தான் அந்த வழி.
1. மூன்று மாதவிடாய்க் காலம், 2. மூன்று மாதங்கள், 3. பிரசவித்தல் ஆகிய கெடுவுக்குள் சேர்வதாக இருந்தால் திருமணம் செய்யாமல் சேர்ந்து கொள்ளலாம்.
குறிப்பிட்ட கெடு முடிந்து விட்டால் திருமணத்தின் மூலம் சேர்ந்து வாழலாம்.
இது முதல் தடவை தலாக் கூறிய பின் ஏற்படும் விளைவாகும்.
குறிப்பிட்ட கெடுவுக்குள் அவர்கள் சேர்ந்து கொண்டாலும், குறிப்பிட்ட கெடு கடந்த பின்திருமணம் செய்து கொண்டாலும் விவாகரத்துச் செய்வதற்கு வழங்கப்பட்ட மூன்று வாய்ப்புகளில் ஒன்று குறைந்து விடும். இன்னும் இரண்டு தடவை மட்டுமே தலாக்கூறும் உரிமையைப் பயன்படுத்த முடியும்.
இவ்வாறு சேர்ந்து வாழும் போது மீண்டும் அவர்களிடையே பிணக்கு ஏற்பட்டு, வாழ்வைத் தொடர இயலாத நிலை ஏற்பட்டால் இரண்டாவது தலாக்கைக் கூறலாம்.
தலாக் கூறும் இரண்டாவது வாய்ப்பைப் பயன்படுத்தினால் அப்போதும் திருமண உறவு அடியோடு முறிந்து விடுவதில்லை; மாறாக மனைவியின் பிரிவை உணர்ந்து மீண்டும்சேரும் வாய்ப்பு இருக்கிறது.
முதல் வாய்ப்பைப் பயன் படுத்திய பின் சேர்ந்து கொண்டது போன்று அந்தக் கெடுவுக்குள்திரும்ப அழைத்துக் கொள்ளலாம்; அல்லது கெடு முடிந்த பிறகு அவள் சம்மதித்தால்மீண்டும் அவளைத் திருமணம் செய்து கொள்ளலாம்; அல்லது அப்படியே விட்டுவிடலாம்.
இவ்வாறு விவாகரத்துச் செய்தல் இரண்டு தடவைகளே. (இதன் பிறகு) நல்ல முறையில் சேர்ந்து வாழலாம். அல்லது அழகான முறையில் விட்டு விடலாம்.
(அல்குர்ஆன் 2:229)
என்ற வசனத்திலிருந்து இதை அறியலாம்.
இரண்டாவது முறையும் திரும்ப அழைத்துக் கொண்டாலோ, கெடு முடிந்து மீண்டும்அவளையே மணந்து கொண்டாலோ மூன்று தடவை தலாக் கூறலாம் என்ற உரிமையில்ஒன்று தான் மிச்சமாகவுள்ளது.
எனவே எஞ்சியுள்ள அந்த ஒரு வாய்ப்பை – கடைசி வாய்ப்பை – மிகக் கவனமாகவேஒருவன் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக, அவனது மனம் எளிதில் ஒப்பாத,அவனால் ஜீரணிக்க இயலாத, மிகக் கடுமையான நிபந்தனையை இஸ்லாம்விதித்துள்ளது. அந்த நிபந்தனையை அறிந்த எந்தக் கணவனும் இந்தக் கடைசிவாய்ப்பைப் பயன்படுத்தத் தயங்குவான்.
(இரண்டு தடவை விவாகரத்துச் செய்து சேர்ந்து கொண்ட பின் மூன்றாவது தடவையாக)அவளை அவன் விவாகரத்துச் செய்து விட்டால் அவள் வேறு கணவனை மணம்செய்யாத வரை அவனுக்கு அனுமதிக்கப்பட்டவளாக ஆக மாட்டாள். (இரண்டாம்கணவனாகிய) அவனும் அவளை விவாகரத்துச் செய்து, (மீண்டும் முதல் கணவனும்அவளும் ஆகிய) இருவரும் அல்லாஹ்வின் வரம்புகளை நிலை நாட்ட முடியும் எனக்கருதினால் (திருமணத்தின் மூலம்) சேர்ந்து கொள்வது குற்றமில்லை. இவைஅல்லாஹ்வின் வரம்புகள். அறிகின்ற சமுதாயத்திற்கு அவன் இதைத் தெளிவுபடுத்துகிறான்.
(அல்குர்ஆன் 2:230)
இந்தக் கடைசி ஒரு வாய்ப்பையும் அவன் பயன்படுத்தி விட்டால் அந்த நிமிடமேதிருமண உறவு நிரந்தரமாக நீங்கி விடும். மீண்டும் சேர்வதற்கு எந்தக் கெடுவும் இல்லை. அவளை மறு திருமணம் செய்ய விரும்பினால் அவள் இன்னொருவனுக்குவாழ்க்கைப்பட்டு அவனும் தலாக் கூறி விட்டால் மட்டுமே அது சாத்தியமாகும்.
இவை தவிர மாதவிடாய்க் காலத்தில் தலாக் கூறி விட்டால் அது தலாக்காக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது என்ற கருத்தில் புகாரியில் 5332வது ஹதீஸில் காணப்படுகின்றது.
முத்தலாக் – ஒரு விளக்கம்
இவ்வாறு விவாகரத்துச் செய்தல் இரண்டு தடவைகளே. (இதன் பிறகு) நல்ல முறையில் சேர்ந்து வாழலாம். அல்லது அழகான முறையில் விட்டு விடலாம்.
(அல்குர்ஆன் 2:229)
இந்த வசனத்தில் இடம் பெற்றுள்ள இரண்டு தடவை என்பது திரும்பப் பெறுவதற்குரிய இரண்டு தலாக்குகள் ஆகும். அதாவது இவ்விரு தலாக்குகளுக்குப் பிறகு மூன்றாவதுமுறை தலாக் விட்டால் அவர் தனது மனைவியைத் திரும்ப அழைத்துக் கொள்ளமுடியாது. எனவே இத்தலாக் ஒன்றன் பின் ஒன்றாக நிகழ வேண்டும் என்பதை இந்தவசனம் விளக்குகிறது.
தடவை என்பதன் பொருளைத் தவறாக விளங்கிக் கொண்டதால் ஒருவன் ஒருசந்தர்ப்பத்தில் மூன்று தலாக் என்றோ, முத்தலாக் என்றோ, தலாக் தலாக் தலாக் என்றோகூறினால் அவன் மூன்று வாய்ப்புக்களையும் பயன்படுத்தி விட்டான், அவன்மனைவியை நிரந்தரமாகப் பிரிந்து விட்டான் என்று மத்ஹபுகளில் சட்டம் இயற்றிவைத்துள்ளார்கள்.
எல்லாம் வல்ல அல்லாஹ் இரண்டு தலாக்குகள் என்று கூறவில்லை. மாறாக தலாக்என்பது இரண்டு தடவைகள் என்று கூறுகின்றான். குறிப்பிட்ட காலக் கெடுமுடிவடையாத வரை ஒரு தடவை என்பது பூர்த்தியாகாது. ஒருவர் தன் மனைவியைநோக்கி ஒரே சமயததில், உன்னை மூன்று முறை தலாக் சொல்லி விட்டேன் என்றுகூறினாலும் முன்னூறு முறை தலாக் சொல்லி விட்டேன் என்று கூறினாலும் அவர் ஒருதடவை தலாக் கூறியதாகத் தான் பொருள்.
தடவை என்பதன் பொருளை விளங்கிக் கொள்ள சில உதாரணங்களைக் கூறலாம்.
ஒருவர் ஒரு மணி நேரம் குளித்துக் கொண்டேயிருக்கின்றார். அதன் பிறகு அவர்தலையைத் துவட்டிக் கொள்கிறார். இவர் எத்தனை தடவை குளித்தார் என்று கேட்டால்நாம் ஒரு தடவை என்று தான் கூறுவோம்.
இன்னொருவர் பத்து நிமிடம் குளிக்கின்றார். பிறகு வெளியே வந்து தலையைத் துவட்டிக்கொள்கிறார். மீண்டும் போய்க் குளிக்கின்றார். இப்படியே ஒரு மணி நேரத்தில் 5 தடவைஇது போன்று செய்கின்றார். இவர் எத்தனை தடவை குளித்தார் என்று கேட்டால் 5தடவை என்று கூறுவோம்.
ஒருவர் சாப்பிடுவதற்கு அமர்ந்து 10 இட்லி சாப்பிட்டு விட்டு கை கழுவுகின்றார். இவர்ஒரு தடவை சாப்பிட்டுள்ளார்.
மற்றொருவர் இரண்டு இட்லி சாப்பிட்டு விட்டு கை கழுவுகின்றார். பிறகு சிறிது நேரத்தில்மீண்டும் அமர்ந்து இரண்டு இட்லி சாப்பிடுகின்றார். இவர் முன்னவரை விடக்குறைவாகச் சாப்பிட்டிருந்தாலும் இரண்டு தடவை சாப்பிட்டார் என்று தான் கூறுவோம்.
இதை இங்கு குறிப்பிடக் காரணம் ஒரு தடவை என்றால் அதற்கு ஒரு ஆரம்பமும்முடிவும் இருக்க வேண்டும்.
இது போலத் தான் தலாக்கின் தடவை என்பதையும் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒருதலாக் விட்டால் மூன்று மாத விடாய்க்குள்ளாக மீட்டி விட்டால் ஒரு தடவை தலாக்நிறைவேறி விட்டதாகப் பொருள். ஒரு தலாக் கூறி விட்டு, உரிய காலக் கெடுவுக்குள்மீட்டாமல் ஒருவர் ஆயிரம் முறை தலாக் என்று கூறினாலும் அது ஒரு தலாக் தான்.ஏனென்றால் ஒரு தடவை என்பது இன்னும் முடிவுக்கு வராத நிலையில் அதை எத்தனைமுறை கூறினாலும் ஒரு தடவை தான்.
இது தான் மேலே நாம் சுட்டிக் காட்டிய வசனத்தில் இடம் பெறும் தடவை என்பதன்பொருள் .
இதை வெறும் அறிவுப் பூர்வமாக நாம் சொல்லவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தின் நடைமுறையை ஆராய்ந்து தான் கூறுகின்றோம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நமக்குக் கற்றுத் தந்தது என்னவெனில், ஒரு சந்தர்ப்பத்தில் மூன்று தலாக் என்றோ, முத்தலாக் என்றோ, தலாக் தலாக் தலாக் என்றோ கூறினால் ஒருவன் தலாக் கூறத் தனக்கு வழங்கப்பட்டுள்ள மூன்று வாய்ப்புக்களில் ஒருவாய்ப்பைத் தான் பயன்படுத்தியிருக்கிறான் என்பது தான்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ஒரு சந்தர்ப்பத்தில் மூன்று தலாக் கூறுவதுஒரு தலாக்காகவே கருதப்பட்டது
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: முஸ்லிம் 2689
நபி (ஸல்) அவர்கள் காலத்திலும் அபூபக்ர் (ரலி) காலத்திலும் உமர் (ரலி) அவர்களின்ஆட்சியில் மூன்று ஆண்டு காலத்திலும் மூன்று (தலாக் என்பது) ஒரு தலாக்காகவேகருதப்பட்டு வந்தது என்பது உங்களுக்குத் தெரியுமா? என்று அபுஸ்ஸஹ்பா என்பவர்இப்னு அப்பாஸிடம் கேட்டார். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ஆம் என்றுபதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: தாவூஸ்
நூல்: முஸ்லிம் 2690, 2691
அப்து யஸீத் மகனான ருகானா தனது மனைவியை ஒரே அமர்வில் முத்தலாக் விட்டுவிட்டார் . பின்னர் அதற்காகப் பெரிதும் கவலைப் பட்டார். அவரிடம் அல்லாஹ்வின்தூதர் (ஸல்) அவர்கள், “நீ அவளை எப்படி தலாக் விட்டாய்?” என்று கேட்டார்கள். நான்அவளை முத்தலாக் விட்டேன் என்று அவர் பதில் கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ஒரே அமர்விலா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர் ஆம் என்றார். “அது ஒரு தலாக்தான் . நீ விரும்பினால் அவளை மீட்டிக் கொள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே அவர் அவளை மீட்டிக் கொண்டார்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: அஹ்மத் 2266
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் வெறுமனே இவ்வாறு நடைமுறையில் இருந்தது என்று மட்டும் கூறவில்லை. அதற்குச் சான்றாக ருகானாவுடைய சம்பவத்தைச்
சமர்ப்பிக்கின்றார்கள்.
நாம் இவ்வாறு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் ஹதீஸை ஆதாரமாகக் காட்டும்போது, முத்தலாக் கூடும் என்ற கருத்துடைய மத்ஹபுக்காரர்கள் அதற்கு எதிராக ஒருசான்றை முன் வைக்கின்றார்கள்.
நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “என்னுடைய மனைவியை நான் ஒரேயடியாகதலாக் விட்டு விட்டேன்” என்று சொன்னேன். அதற்கு அவர்கள், “நீ அதைக் கொண்டுஎன்ன நாடினாய்?” என்று கேட்டார்கள். நான் அதற்கு, “ஒரேயொரு தலாக்கைத் தான்”என்று பதிலளித்தேன். “அல்லாஹ்வின் மீதாணையாகவா?” என்று கேட்டார்கள். நான், ” அல்லாஹ்வின் மீதாணையாக” என்றேன். “அப்படியானால் நீ என்ன நாடினாயோ அதுதான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ருகானா
நூல்: திர்மிதீ 1097
இந்த ஹதீஸில் முத்தலாக் என்று ருகானா கூறியதும், அதைக் கொண்டு என்னநாடினாய்? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்கின்றார்கள். அதற்கு அவர், ஒன்றைத் தான்என்று கூறுகின்றார் அல்லவா? எனவே தான் ஒரு தலாக் நிறைவேறுகின்றது. மூன்றை நாடியிருந்தால் மூன்று நிறைவேறி விடும் என்று இவர்கள் வாதிடுகின்றார்கள். ஆனால் இவர்கள், நபி (ஸல்) அவர்கள் காலத்திலும், அபூபக்ர் (ரலி) காலத்திலும் முத்தலாக்என்பது ஒரு தலாக்காக இருந்தது என்ற ஹதீசுக்கு எந்தப் பதிலும் கூறுவதில்லை.அதைக் கண்டு கொள்வதுமில்லை.
எல்லாவற்றுக்கும் மேலாக மேற்கண்ட திர்மிதீ ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதல்ல. இமாம் திர்மிதீ அவர்களே இதைத் தெளிவு படுத்தியுள்ளார்கள். இந்த ஹதீஸைப் பற்றி இமாம் புகாரியிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் இதில் குழப்பம் இருக்கிறது என்று பதிலளித்தார்கள் என்று இமாம் திர்மிதீ அந்த ஹதீஸின் அடியில்
குறிப்பிடுகின்றார்கள்.மேலும் இதில் இடம் பெறும் அப்துல்லாஹ் பின் யஸீத் என்பார் பலவீனமானவர் என்றுஹாபிழ் இப்னு ஹஜர் தமது தக்ரீபில்
குறிப்பிடுகின்றார்கள். எனவே இந்த வாதம்வலுவிழந்து விடுகின்றது.
இரண்டாவது ஆதாரம்
ருகானா என்பவர் தனது மனைவியை ஒரேயடியாக தலாக் கூறினார். அதைக் கொண்டுஎன்ன நாடினாய்? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். ஒன்றைத் தான் நினைத்தேன்என்று அவர் கூறியதும், நீ நாடியது போலவே அது ஒன்று தான் என்று நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள் என்ற கருத்தில் அபூதாவூதில் இடம் பெற்றுள்ளது.
முத்தலாக் கூடும் என்ற கருத்துடையவர்கள் இதைத் தங்களின் ஆதாரமாகக் காட்டுகின்றார்கள். அதாவது ருகானா என்பவர் மூன்று தலாக் என்று கூறியதாக வரும் அறிவிப்பு சரியில்லை. ஒரேயடியாக கூறியதாக வரும் அறிவிப்பு தான் சரியானதுஎன்பது அவர்களது வாதம். இதை வலுப்படுத்தும் விதமாக அபூதாவூத் அவர்களின்அடிக்குறிப்பை எடுத்துக் காட்டுகின்றனர்.
“இந்த ஹதீஸ் தான் மிகச் சரியானதாகும். காரணம், அந்த ஹதீஸை அறிவிக்கும் அறிவிப்பாளர் ருகானாவின் மகனும், அவரது உறவினரும் ஆவார். ஒருவரின் பிள்ளைதான் அவரது தந்தையைப் பற்றி நன்கு தெரிந்தவராவார்” என்று இமாம் அபூதாவூத் குறிப்பிடுகிறார்கள்.
இமாம் அபூதாவூதின் இந்தக் கூற்றை ஆதாரமாகக் கொண்டு, ஒரேயடியாக தலாக் விட்டஹதீஸ் தான் சரியானது என்று இவர்கள் வாதிக்கின்றார்கள்.
ருகானா என்பவர் முத்தலாக் கூறினார் என்ற அறிவிப்பு சரியானதா? அல்லதுஒரேயடியாக தலாக் கூறினார் என்ற அறிவிப்பு சரியானதா? என்பதற்கு விடை கண்டுவிட்டால் இதற்குத் தெளிவு கிடைத்து விடும். முரண்பட்ட இரண்டில் ஏதேனும் ஒன்றுதான் உண்மையாக இருக்க முடியும்.
அபூதாவூத் அவர்கள் எதைச் சரியானது என்று கூறுகின்றார்களோ அந்த ஹதீஸ்சரியானதல்ல . அபூதாவூத் அவர்கள் தமது நூலில், “ருகானா முத்தலாக் கூறினார்” என்றஹதீஸையும் வெளியிட்டுள்ளார்கள்; “ஒரேயடியாக தலாக் சொன்னார்” என்றஹதீஸையும் வெளியிட்டுள்ளார்கள். அவர் வெளியிட்ட இரண்டு ஹதீஸ்களும்பலவீனமானவை என்றாலும் இரண்டையும் ஒப்பிடும் போது ஒரேயடியாக என்ற ஹதீஸ்பலவீனம் குறைந்ததாக உள்ளது.
ஆனால் முத்தலாக் கூறினார் என்று பலமான அறிவிப்பு ஒன்று உள்ளது. அதை அஹ்மத்இமாம் பதிவு செய்துள்ளார்கள். அதனுடன் ஒப்பிடும் போது ஒரேயடியாக என்ற ஹதீஸ் ஏற்கத்தக்கதாக இல்லை.
அஹ்மதில் இடம் பெறும் அந்த ஹதீஸ் இது தான்.
அப்து யஸீத் மகனான ருகானா தனது மனைவியை ஒரே அமர்வில் முத்தலாக் விட்டுவிட்டார் . பின்னர் அதற்காகப் பெரிதும் கவலைப் பட்டார். அவரிடம் அல்லாஹ்வின்தூதர் (ஸல்) அவர்கள், “நீ அவளை எப்படி தலாக் விட்டாய்?” என்று கேட்டார்கள். நான்அவளை முத்தலாக் விட்டேன் என்று அவர் பதில் கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ஒரே அமர்விலா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர் ஆம் என்றார். “அது ஒரு தலாக்தான் . நீ விரும்பினால் அவளை மீட்டிக் கொள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே அவர் அவளை மீட்டிக் கொண்டார்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: அஹ்மத் 2266
ஷைகுல் இஸ்லாமின் சரியான பதில்
ருகானா ஒரே சமயத்தில் முத்தலாக் விட்டு விட்டார் என்று அபூதாவூதின் 1886 ஹதீஸ் மற்றும் நபி (ஸல்) அவர்கள் சத்தியம் செய்யச் சொன்ன திர்மிதீ 1097 ஹதீஸ் ஆகியவற்றின் அறிவிப்பாளர்களை விட மேற்கண்ட ஹதீஸில் தரமும், வலுவும் மிக்க அறிவிப்பாளர்கள் ஆவர் என்று இமாம் அஹ்மத் அவர்கள் தெளிவு படுத்தி, இந்த ஹதீஸ் தான் மிகச் சரியானது என்று நிரூபிக்கின்றார்கள்.
ஏனெனில் அபூதாவூதின் ஹதீஸ்களில் அறிவிப்பாளர்கள் எப்படிப் பட்டவர்கள்? அவர்கள் நீதமானவர்களா? நினைவாற்றல் உள்ளவர்களா? என்ற விபரமெல்லாம்அறியப்படாதவர்கள். இதனாலேயே இதை இமாம் புகாரி அவர்களும், இமாம் அஹ்மத்,அபூஉபைத், இப்னு ஹஸ்மு இன்னும் ஏனைய அறிஞர்களும் பலவீனமானது என்றுதெரிவிக்கின்றனர்.
ஆனால் இதற்கு நேர் மாற்றமாக, மேற்கூறப்பட்ட அஹ்மதின் 2266வது ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசை மிக அழகான வரிசையாகும். ஏனெனில் இந்த ஹதீஸைஅறிவிப்பவர் இப்னு அப்பாஸ் (ரலி) ஆவார். அவர்களின் இந்த ஹதீஸ் அவர்களேஅறிவிக்கும் முஸ்லிம் 2689 ஹதீசுக்கு முழுமையாக ஒத்திருக்கின்றது. மேலும் இந்தஅஹ்மத் ஹதீஸின் அறிவிப்பாளர்கள் இப்னு அப்பாஸ், இக்ரிமா, தாவூத் பின் ஹுசைன்,முஹம்மத் பின் இஸ்ஹாக், ஸஃத் பின் இப்ராஹீம் ஆகியோர் மார்க்கச் சட்டவல்லுநர்கள் ஆவார்கள்.
முத்தலாக்கும் ஒரே தலாக் தான் என்று தாவூஸ், இக்ரிமா, இப்னு இஸ்ஹாக் ஆகியோர் தீர்ப்பளித்ததைப் போன்று அதை நடைமுறைப் படுத்தியிருக்கின்றார்கள். எனவே முத்தலாக்கையும் ஒரே அமர்வில் சொன்னவர் நபிவழிக்கு எதிராக நடந்தவராவார். அத்தகையவர் நபி வழியின் பக்கமே திருப்பப் படவேண்டும் என்று இந்த அறிஞர்களில் சிலர் தெளிவாகவே குறிப்பிட்டுள்ளனர்.
இமாம் அபூதாவூத் அவர்கள் முத்தலாக் தொடர்பான இரண்டு ஹதீஸ்களை அறிவித்துவிட்டு, அதில் ஒன்றை விட மற்றொன்று வலுவானது என்று கூறியுள்ளார்கள். அதாவதுஒரு அறியாத தொடரை விட மற்றொரு அறியாத தொடர் வலுவானது என்றுமுற்படுத்தியுள்ளார்கள் என்று தான் ஆகுமே தவிர ஒரேயடியாக என்ற அறிவிப்புசரியானது என்றாகி விடாது.
எனவே தாவூத் பின் ஹுசைன் அறிவிக்கும் அஹ்மத் 2266 ஹதீஸ் தான் இத்துறையைச் சார்ந்த விற்பன்னர்களின் ஒருமித்த கருத்துப்படி ருகானாவின் எல்லா ஹதீஸ்களையும் விட முதலிடத்தில் இருக்கின்றது. ஆனால் இந்த ஹதீஸ் அதிகமான மார்க்க அறிஞர்களுக்குக் கிடைக்காதது தான் வேதனைக்குரிய விஷயம்.
இவ்வாறு ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா அவர்கள் தமது பதாவா, பாகம் 33,பக்கம் 67 ல் விளக்கி, மத்ஹபுகளின் கோட்டையைத் தகர்த்தெறிகின்றார்கள்.
ஒரு மனிதர் இப்னு அப்பாஸ் (ரலி)யிடம் வந்து, நான் என் மனைவியை மூன்று தலாக் கூறிவிட்டேன் என்று கேட்ட போது, உன் மனைவி உன்னை விட்டு பிரிந்து விடுகின்றாள் என்று தீர்ப்பளித்ததாக முஜாஹித் அறிவிக்கும் செய்தி அபூதாவூத் 1878ல் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நபி (ஸல்) அவர்களது காலத்து நடைமுறையை அறிவித்த இப்னு அப்பாஸ் (ரலி)அவர்களே அதற்கு மாற்றமாகவும் தீர்ப்பளித்துள்ளதால் இதை வைத்து எந்த முடிவுக்கும்வர முடியாது என்று சிலர் வாதிக்கின்றனர்.
இந்த இரு அறிவிப்புகளும் முரண்பட்டிருந்தாலும் இரண்டுக்கும் பெருத்த வேறுபாடு உள்ளது. முதலாவது ஹதீஸ் நபி (ஸல்) அவர்களது காலத்து நடைமுறையைவிளக்குகின்றது. ஆனால் மேற்கண்ட ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள்சம்பந்தப்படவில்லை. இப்னு அப்பாஸ் ( ரலி) அவர்களின் சொந்த முடிவுகூறப்படுகின்றது. இப்னு அப்பாஸ் (ரலி) சொந்த முடிவை ஏற்பதை விடவும் நபி (ஸல்)அவர்களின் முடிவு தான் ஏற்கத் தக்கது என்பதை எந்த முஸ்லிமும் மறுக்க முடியாது.
எனது பாட்டனார் தனது மனைவியை 1000 தலாக் என்று கூறி விட்டார். இது பற்றி நான் நபி (ஸல்) அவர்களிடம் கேட்ட போது, உன் பாட்டனார் அல்லாஹ்வை அஞ்சவில்லை.மூன்று தலாக் இப்போது நிகழ்ந்து விடும். மீதி 997 தலாக் வரம்பு மீறியதாகும். அல்லாஹ் நாடினால் அதற்காக அவரை மன்னிக்கலாம். அல்லது தண்டிக்கலாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என உபாதா பின் ஸாமித் (ரலி) அறிவிக்கும் ஹதீஸ் முஸன்னப் அப்துர்ரஸாக்கில் 11339வது ஹதீஸாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
முத்தலாக் செல்லும் என்று கூறுபவர்கள் இதையும் ஆதாரமாகக் காட்டுகின்றார்கள். ஆனால் இது பலவீனமானதாகும். இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெறும் அலா என்பவரும், உபைதுல்லாஹ் பின் வலீத் என்வரும் பலவீனமானவர்கள். மேலும் இதில்இடம் பெறும் இப்ராஹீம் பின் உபைதுல்லாஹ் என்பவர் யாரென்று அறியப்படாதவர்.எனவே இதை ஆதாரமாகக் கொள்ள முடியாது.
மனைவியைப் பிரிந்து செல்லும் அளவுக்கு வெறுப்பைக் காட்ட இறைவன் வழங்கியமூன்று சந்தர்ப்பங்களே தலாக். ஒரு தடவை கோபம் கொண்டு அவன் ஆயிரம் தலாக்என்று கூறினாலும் அவன் பயன்படுத்தியது ஒரு சந்தர்ப்பத்தைத் தான்.
மனைவியின் மீது கடுமையான வெறுப்பு ஏற்பட்டு நிதானம் தவறியே தலாக் கூறுகிறான். இதில் எந்த வார்த்தையையும் அவன் பயன்படுத்தி விடக் கூடும். இப்படி இரண்டு சந்தர்ப்பங்கள் அவனுக்கு வழங்கப்பட்டுள்ளன.
சந்தர்ப்பத்தைக் கருத்தில் கொள்ள வேண்டிய இவ்விஷயத்தில் பயன்படுத்தும்சொல்லைக் கருத்தில் கொண்டதால் முத்தலாக் பற்றி இப்படி ஒரு தவறான கருத்துமுஸ்லிம்களில் சிலரிடையே ஏற்பட்டு விட்டது. நபிவழியைப் பின்பற்றும் எந்தமுஸ்லிமும் இப்படிப்பட்ட தவறான கருத்தை ஏற்க மாட்டார்.
அதாவது மூன்று தலாக் கூறிவிட்டேன் என்று ஒருவன் மனைவியிடம் கூறினால் அவன்ஒரு சந்தர்ப்பத்தைத் தான் பயன்படுத்தியுள்ளான்.
குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் அவன் அவளுடன் சேரலாம். காலம் கடந்து விட்டால் மீண்டும் திருமணம் செய்து கொள்ளலாம். இதன் பிறகு மேலும் இரண்டு தடவை விவாகரத்துக் கூறும் உரிமை அவனுக்கு உள்ளது.
மூன்று தலாக் என்ற சொல்லைப் பயன்படுத்தி விட்டால் இனி மேல் மனைவியுடன்சேரவே முடியாது என்ற மத்ஹபுகளின் தீர்ப்புகள் தான் மற்றவர்களால் அதிகம்விமர்சிக்கப் படுகிறது. முஸ்லிம்கள் இஸ்லாத்தில் இல்லாத இந்த நம்பிக்கையைவிட்டொழிக்க வேண்டும்.
கணவன் காணாமல் போய் விட்டால்?
மத்ஹபுகள் பெண்களுக்கு இழைத்து வரும் அநீதிகளில் மிக முக்கியமானது, காணாமல்போன கணவன் பற்றி சட்டமாகும். மனைவியை விட்டு விட்டு கணவன் காணாமல்போய் விட்டான். அவனது மனைவி என்ன செய்வாள்? இதோ ஹனபி மத்ஹப்கூறுவதைக் கேளுங்கள்.
இருவரது திருமண உறவைப் பிரிக்கக் கூடாது, தொன்னூறு ஆண்டுகள் கழிந்த பின்அவன் இறந்து விட்டதாக முடிவு செய்யப்படும். அவனது மனைவி அப்போது இத்தாஇருப்பாள்.
கன்ஸுத்தகாயிக், பாகம்1, பக்கம் 220
கணவன் பிறந்ததிலிருந்து தொன்னூறு வருடம் எனக் கணக்கிட்டுக் கொள்ள வேண்டும் என்பது ஹனபி மத்ஹபின் கருத்து. இதையே கன்ஸ் என்ற நூலில் அதன் ஆசிரியர்தேர்வு செய்திருக்கின்றார். அது தான் மிகவும் மிதமானது என்கின்றார் ஹிதாயாவின்ஆசிரியர் . இந்தக் கருத்தில் தான் தீர்ப்பு உள்ளது என்கிறார் தகீரா ஆசிரியர். 120 வருடங்கள் என பிற்கால அறிஞர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்.
எனது சமுதாயத்தின் வயது அறுபதுக்கும் எழுபதுக்கும் இடைப்பட்டதாகும் என்று நபி( ஸல்) அவர்களின் சொல்லை அடிப்படையாகக் கொண்டு எழுபது வருடம் என்று இப்னுஹுமாம் குறிப்பிடுகின்றார். எனவே இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடுவது பெரும்பான்மையான கருத்தாக உள்ளது.
இது காணாமல் போனவருக்கு மத்ஹபு கூறும் சட்டமாகும்.
இவர்கள் வழங்கும் தீர்ப்பு ஆண்டிகள் சேர்ந்து மடம் கட்டுவது போல் உள்ளதல்லவா? ஒருமார்க்கத் தீர்ப்பைச் சொல்லும் போது கெஞ்சமாவது தங்கள் சிந்தனை ஓட்டத்தைச் செலுத்த வேண்டாமா?
30 வயதிலுள்ள ஒருவனுக்கு 20 வயது மனைவி இருக்கின்றாள் என்று வைத்துக்கொள்வோம். இப்போது கணவன் காணாமல் போய் விட்டால் அந்தப் பெண் இன்னும் 40வருடங்கள் அல்லது 60 வருடங்கள் அல்லது 90 வருடங்கள் காத்திருக்க வேண்டும்.அதன் பிறகு அவள் வேறு திருமணம் செய்து கொள்ள வேண்டும். இது நடைமுறைக்குச்சாத்தியமா? பெண் என்பவள் எந்த உணர்ச்சியும் அற்ற மரக் கட்டையா? அவளுக்கென்றுஎந்த ஆசையும் கிடையாதா? என்ன அர்த்தத்தில் இவர்கள் இவ்வாறு உளறியுள்ளார்கள்?
இப்போது இந்த மத்ஹபுவாதிகளிடம் நாம் கேட்பது, எந்தக் குர்ஆன் வசனத்திலிருந்து இந்தச் சட்டத்தை எடுத்தீர்கள்? எந்த ஹதீஸின் அடிப்படையில் இதை எடுத்தீர்கள்?
இந்தக் கேள்வியை நாம் இன்று கேட்கவில்லை. எட்டு வருடங்களுக்கு முன், பெண்கொடுமை என்று தலைப்பிட்டு நாம் இந்தக் கேள்வியை எழுப்பிய போது, ஷரீஅத்தின் பாதுகாவலர்கள் என்று தங்களைக் கூறிக் கொண்டு தமிழக உலமாக்கள்பதிலளித்தார்கள். ஷரீஅத் பாதுகாப்புப் பேரவை என்ற பெயரில் நூலாகவும் வெளியிடப்பட்டது. அதிலாவது ஏதேனும் ஆதாரத்தைக் காட்டினார்களா? என்றால் அதுவும் இல்லை.
ஷரீஅத்தின் பாதுகாவலர்கள் கூறுவதைக் கேளுங்கள்.
அல்லாஹ் குர்ஆனில் வலிமை மிகுந்த ஒப்பந்தம் 4 : 25 என்று குறிப்பிட்டிருப்பதை சற்றேனும் சிந்திக்க வேண்டாமா? திருமண உறவைத் துண்டிப்பவர்கள், காணாமல்போய் விட்டவனின் சொத்தைப் பங்கீடு செய்கின்ற விஷயத்தில், அதுபோல்பிறரிடமிருந்து அவருக்கு வரக்கூடிய அனந்தரச் சொத்துடைய விஷயத்தில் எந்தக் காலஅளவைக் கருத்தில் கொள்கின்றனர் என்பதை குர்ஆன், ஹதீஸ் மூலம் எடுத்துக்காட்டட்டுமே பார்க்கலாம். பெண்ணின் இளமை, சுற்றுச் சூழல், மோசமான நிலை,செலவினச் சிக்கல் போன்ற காரியங்களை முன் வைத்து காணாமல் போய் விட்டகணவனுடைய திருமண உறவிலிருந்து பிரிந்து கொள்ள வழி செய்யும் இலகுவான சட்டதிட்டங்களை உலமாக்கள் ஆதாரப்பூர்வமாகத் தொகுத்துக் கொடுத்து பெண்ணினத்தின்மீது பேருபகாரம் புரிந்தது இவர்களுக்குத் தெரியாதா என்ன?
மேற்கூறப்பட்ட சட்டம் உண்மையில் பெண்ணுக்குக் கொடுக்கப் பட்ட மகிமை. புரிய முடியாத மூடர்கள் இதற்கு பெண் கொடுமை என்று தலைப்பு கொடுத்திருப்பது அவர்கள் இஸ்லாத்திற்குத் செய்துள்ள கொடுமையாகும்.
உண்மையில் கணவன் மனைவி மத்தியில் உள்ள திருமண ஒப்பந்தம் கணவன்இறந்தால் அல்லது அவனாக முறித்தால்தான் முடியும். வேறு எவராலும் சாதாரணமாகமுறிக்க முடியாது. ஆனால் கணவன் மறைந்து விட்டால், மரணித்து விட்டானா?உயிருடன் இருக்கின்றானா? என்ற சந்தேகமிருக்கும் போது வேறு யார் இந்த பந்தத்தைமுறிக்க முடியும்? முறிப்பதாக இவர்கள் தீர்ப்பு செய்த பின் மறுபடி கணவன் வந்துவிட்டால் என்னவாகும்? அல்லாஹ் அவனுக்கு மட்டும் அளித்த உரிமையில் கை வைக்கஅதிகாரம் பெற்றவர் யார்? எனவே தான் ஹழ்ரத் அலீ (ரலி) அவர்கள் கீழ்க்கண்டவாறுதீர்ப்புச் செய்தார்கள்.
தாரகுத்னீ அடிக்குறிப்பு 3/313
மறைந்தவன் உயிரோடு இருக்கிறானா? அல்லது மரணித்து விட்டானா? என்றுஉறுதியாக அறியப்படுகின்ற வரை அப்பெண் எதிர்பார்ப்பாள்.
மேலும் இதே கருத்துடைய ஒரு ஹதீஸ் தாரகுத்னீயில் (3/313) உள்ளது. அது லயீபாக( பலவீனமான ஹதீஸாக) இருப்பினும் வேறு முறையில் அதன் கருத்து ஸஹீஹாகஉள்ளது. அதுவும் தாரகுத்னீ உடைய அடிக்குறிப்பில் காணப்படுகின்றது.
ஒரு பெண் தன் கணவன் காணாமல் போய்விட்டால் அவன் வருகின்ற வரை அல்லதுஅவன் மரணிக்கின்ற வரை திருமணம் செய்யக் கூடாது. இது தான் அடிப்படை. இந்தஹதீஸை வைத்துத் தான் மார்க்க அறிஞர்கள் அந்தக் கணவன் மரணித்த செய்தி வரவேண்டும். அல்லது அவனோடு வாழ்ந்தவர்கள் மரணித்து விடுவதைக் கொண்டுஇவனுடைய மரணம் உறுதி செய்யப்பட வேண்டும் என்று கூறியுள்ளனர். இவ்வாறுமரணித்து விட்டான் என்று நம்புகின்ற கால அளவை அன்று சிலர் 100 வயது என்றும்சிலர் 90 வயது என்றும் நிர்ணயம் செய்தார்கள். காலத்திற்கேற்ப இது மாறுபடும்.
இந்த நிலை லட்சத்தில் ஒருவருக்கு ஏற்படலாம். அப்படி ஏற்பட்டால் அல்லாஹ்வின் சோதனை என்று எண்ணி அவள் பொறுமை கொள்ள வேண்டும். கணவன் காணாமல்போன மனைவி விஷயத்தில், “அவள் அல்லாஹ்வினால் சோதிக்கப்பட்ட பெண்” எனஅலீ (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.
(தாரகுத்னீ 3/313)
ஆனால் இன்று பொறுமையற்ற காலச் சூழ்நிலையாக இருப்பதால் அவன் மனைவியைப் பராமரிக்கவில்லை, செலவுக்குக் கொடுக்கவில்லை என்ற காரணங்களை முன் வைத்து,ஊர் ஜமாஅத்தினரும் சட்டம் தெரிந்த ஆலிம்களும் கலந்தாலோசித்து, காஜியிடம் பிரச்சனையைக் கொண்டு சென்று, வேறு ஹதீஸ்களின் அடிப்படையை வைத்துஷாஃபியீ, மாலிகீ மத்ஹபுகளில் கூறப்பட்டுள்ள தீர்ப்பின் அடிப்படையில் கணவன்,மனைவி பந்தத்தைப் பிரித்து வைப்பதற்குரிய வழிவகைகளைச் செய்ய வேண்டும்.
சட்டங்கள் விளங்காவிட்டால் விளங்கியவர்களிடத்தில் கேட்டு விளங்கிக் கொள்ள வேண்டும். ஒருவன் தன்னை விடப் பெரிய அறிவாளி இல்லை என்று நினைத்தால்அவன்,
ஒவ்வொரு அறிவாளிக்கும் மேல் ஓர் அறிஞர் உண்டு (12 : 76) என்ற அல்லாஹ்வின் சொல்லைப் புறக்கணித்தவனாவான்.
இது தான் ஷரீஅத் பேரவை அளித்த விளக்கம்.
90 வருடம் கழித்து மறுமணம் செய்ய வேண்டும் என்ற சட்டம் பெண்ணுக்குக் கொடுக்கப்பட்ட மகிமையாம். அதைப் புரியாமல் நாம் பெண் கொடுமை என்று கூறி விட்டோமாம். சுய நினைவோடு தான் இதை எழுதியுள்ளார்களா என்று எண்ணத்தோன்றுகின்றது .
நாம் கேட்ட கேள்வி என்ன? இவர்கள் அந்தக் கேள்விக்கு உரிய பதில் தந்துள்ளார்களா? என்பதை மீண்டும் ஆராய்வோம்.
கணவன் காணாமல் போய் விட்டால் 90 ஆண்டுகளுக்குப் பிறகு அவன் மரணித்துவிட்டதாக முடிவு செய்ய வேண்டும். அதற்கு முன் திருமண உறவைப் பிரிக்கக் கூடாதுஎன்று ஹனபி மத்ஹபில் கூறப்பட்டுள்ளதை ஒப்புக் கொண்டுள்ளனர்.
குர்ஆனின் எந்த வசனத்தின் அடிப்படையில் இவ்வாறு முடிவு செய்தனர்? எந்தஹதீஸின் அடிப்படையில் முடிவு செய்தனர்? என்பது தான் நமது அடிப்படையானகேள்வி!
காணாமல் போனவனின் மனைவி 90 வருடம் வரை திருமணம் செய்யக் கூடாது என்றுஅல்லாஹ் கூறவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் கூறவில்லை.
திருமண ஒப்பந்தத்தை கணவன் தான் முறிக்க வேண்டும் அல்லது இறந்தால் தான்முறிக்க முடியும், வேறு எவராலும் சாதாரணமாக முறிக்க முடியாது என்பது தான்இவர்களின் பதிலாக உள்ளது.
90 ஆண்டுகள் வரை அப்பெண் காத்திருக்க வேண்டும் என்று கூறும் இவர்கள், அலீ (ரலி) அவர்களின் கூற்றைத் தான் ஆதாரமாகக் காட்டியுள்ளனர். அந்தக் கூற்றைக் கூட மூல நூலிலிருந்து எடுத்துக் காட்ட இவர்களால் இயலவில்லை. தாரகுத்னீயின் அடிக்குறிப்பிலிருந்து எடுத்துக் காட்டுகின்றனர்.
நபித்தோழர்கள் இதுகுறித்து ஏராளமான முரண்பட்ட கருத்துக்களைக் கொண்டிருந்ததாகபல அறிவிப்புக்கள் உள்ளன. உமர் (ரலி) அவர்கள், நான்கு ஆண்டுகள் கழித்து அப்பெண்மறுமணம் செய்யலாம் எனக் கூறியதாகவும் அறிவிப்புக்கள் உள்ளன. எனவே ஒவ்வொருவரும் ஒவ்வொரு நபித்தோழரின் கூற்றின் அடிப்படையில் சட்டம் வகுத்தால் தேவையற்ற குழப்பமும் முரண்பாடுகளும் தான் ஏற்படும்.
எனவே நபித்தோழர்களின் கூற்றைத் தவிர்த்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின்கூற்றை ஆதாரமாகக் காட்ட வேண்டும் என்பதே நமது கேள்வி!
இவர்கள் எடுத்துக் காட்டிய அலீ (ரலி) அவர்களின் கூற்றிலும் 90 வருடங்கள் கழித்துமறுமணம் செய்யுமாறு கூறப்படவில்லை. மாறாக, அவன் வரும் வரை அல்லது சாகும்வரை காத்திருப்பாள் என்றே கூறப்பட்டுள்ளது. அவள் மறுமணம் செய்ய உரிமை இல்லை என்ற கருத்தில் தான் அலீ (ரலி) அவர்களின் கூற்று அமைந்துள்ளது.
ஆயினும் ஷரீஅத் பேரவையினரை ஒரு வகையில் நாம் பாராட்டியே ஆக வேண்டும்.
திருமணம் வலிமையான ஒப்பந்தம்.
கணவன் தான் முறிக்க முடியும்.
அல்லது கணவனின் மரணம் தான் முறிக்கும்.
வேறு யாருக்கும் முறிக்கும் அதிகாரம் இல்லை.
என்றெல்லாம் வாதிட்டு வந்து விட்டு இறுதியில் ஹனபி மத்ஹபின் இந்தச் சட்டம் கிறுக்குத்தனமானது. நடைமுறைப் படுத்த முடியாதது. இதை அமுல்படுத்தக் கூடாது என்று தங்கள் பதிலை நிறைவு செய்துள்ளனர்.
“ஆனால் இன்று பொறுமையற்ற காலச் சூழ்நிலையாக இருப்பதால் அவன் மனைவியைப் பராமரிக்கவில்லை, செலவுக்குக் கொடுக்கவில்லை என்ற காரணங்களை முன் வைத்து,ஊர் ஜமாஅத்தினரும் சட்டம் தெரிந்த ஆலிம்களும் கலந்தாலோசித்து, காஜியிடம் பிரச்சனையைக் கொண்டு சென்று, வேறு ஹதீஸ்களின் அடிப்படையை வைத்துஷாஃபியீ, மாலிகீ மத்ஹபுகளில் கூறப்பட்டுள்ள தீர்ப்பின் அடிப்படையில் கணவன்,மனைவி பந்தத்தைப் பிரித்து வைப்பதற்குரிய வழிவகைகளைச் செய்ய வேண்டும்.”
என்று முடித்துள்ளதைக் காண்க! இதன் மூலம் காணாமல் போனவனின் மனைவி 100வருடம், 90 வருடம் காத்திருக்க வேண்டும் என்று ஹனபி மத்ஹபில் கூறப்பட்டுள்ளதைஎடுத்து நடக்க இயலாது என்பதை ஒப்புக் கொண்டு விட்டார்கள்.
மேலும் திருமண பந்தத்தைப் பிரிக்கும் அதிகாரம் கணவனுக்கு மட்டுமின்றி மனைவிக்கும், காஜிக்கும், உலமாக்களுக்கும் உண்டு என்பதை ஒப்புக் கொண்டு, ” கணவனுக்கு மட்டுமே பிரிக்கும் அதிகாரம் உண்டு” என்ற ஹனபி மத்ஹபின்அடிப்படையைத் தவறு எனவும் ஏற்றுக் கொண்டு விட்டனர்.
இமாம்கள் காலத்துக்குப் பிறகும் உலமாக்கள் கூடி ஆய்வு செய்யும் வாசல் அடைக்கப்படவில்லை. தங்களுக்கு அந்த அதிகாரம் உண்டு என்பதையும் ஒப்புக்கொண்டு விட்டார்கள்.
மத்ஹபு என்பது மக்களை ஏமாற்றுவதற்கான கேடயம் தான். காலச் சூழ்நிலைக்கேற்ப நாங்களும் சட்டங்களை உருவாக்குவோம் என்பதைச் சொல்லாமல் சொல்லியுள்ளனர்.
மத்ஹபுகளை விட குர்ஆன் ஹதீஸ் வழி தான் சிறந்தது. குர்ஆன் ஹதீஸ் மட்டுமேதான் அடிப்படை என்பதை இவர்கள் ஏற்றுக் கொண்டிருந்தால் இத்தகைய உளறல்களை நியாயப்படுத்தி, பின்னர் மறுக்கும் இழிவு அவர்களுக்கு ஏற்பட்டிருக்காது.
மனைவியை விட்டு விட்டுக் கணவன் காணாமல் போய்விட்டால் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் என்ன தான் தீர்வு?
மனைவியை விட்டு கணவன் காணாமல் போய் விட்டால் அந்த மனைவி எவ்வளவுநாட்கள் மறுமணம் செய்யாமல் காத்திருக்க வேண்டும் என்பது குறித்து நேரடியாககுர்ஆன் ஹதீஸில் எந்த ஆதாரமும் இல்லை.
இந்த விஷயத்தில் பல்வேறு கருத்துக்கள் கூறப்படுகின்றன. உமர் (ரலி) அவர்கள் உள்ளிட்ட சில நபித்தோழர்கள் நான்கு ஆண்டுகள் மனைவி காத்திருக்க வேண்டும் என்று கூறுகின்றார்கள். ஆனால் அவர்கள் தங்களது சொந்தக் கருத்தாகவே
தெரிவிக்கின்றார்கள். இதற்காக ஆதாரம் எதையும் சமர்ப்பிக்கவில்லை.
இது குறித்து நேரடியாக குர்ஆன் ஹதீஸில் எந்த ஆதாரமும் இல்லை என்பதற்காகஇடிந்து போகத் தேவையில்லை. ஏனெனில் கணவன் காணாமல் போகாது இருக்கும்போதே திருமண பந்தத்தில் இருந்து விடுபட முடியும். அதே உரிமையைப் பயன் படுத்திகணவன் காணாமல் போகும் போதும் திருமண பந்தத்தில் இருந்து விடுபடலாம்.
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் காலத்தில் ஸாபித் பின் கைஸ்(ரலி)யின் மனைவி நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! எனது கணவரின்நன்னடத்தையையோ நற்குணத்தையோ நான் குறை கூற மாட்டேன். ஆனாலும்இஸ்லாத்தில் இருந்து கொண்டே ( இறைவனுக்கு) மாறு செய்வதை நான் வெறுக்கிறேன்”என்றார். (அதாவது கணவர் நல்லவராக இருந்தாலும் அவருடன் இணைந்து வாழத்தனக்கு விருப்பமில்லை என்கிறார்) உடனே நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள்”அப்படியானால் (அவர் உனக்கு மஹராக வழங்கிய) அவரது தோட்டத்தைத் திருப்பிக்கொடுத்து விடுகிறாயா?” என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண்மணி “சரி” என்றார்.உடனே நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் அவரது கணவரிடம் ” தோட்டத்தைப் பெற்றுக்கொண்டு அவளை ஒரேயடியாக விடுவித்து விடு” என்றார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),
நூல்கள்: புகாரி 5273, நஸயீ 3409
மற்றொரு அறிவிப்பில் பின்வருமாறு காணப் படுகின்றது.
ஸாபித் பின் கைஸ்(ரலி) அவர்கள் ஜமீலா எனும் தம் மனைவியை அடித்தார். அவரதுகை ஒடிந்து விட்டது. இதைக் கண்ட அப்பெண்மணியின் சகோதரர் அன்றைய சமுதாயத்தலைவரான நபிகள் நாயகம்(ஸல்) அவர்களிடம் வந்து முறையிட்டார். நபிகள்நாயகம்(ஸல்) அவர்கள் ஸாபித் பின் கைஸை அழைத்து வரச் செய்து, “அவள் உமக்குத்தர வேண்டியதை(மஹரை)ப் பெற்றுக் கொண்டு அவளை அவள் வழியில் விட்டுவிடுவீராக!” என்றார்கள். அவர் “சரி ” என்றார். அப்பெண்மணியிடம் “ஒரு மாதவிடாய்க்காலம் வரை (திருமணம் செய்யாமல்) பொறுத்திருக்குமாறும் தாய் வீட்டில் சேர்ந்துகொள்ளுமாறும் கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பவர்: ருபய்யிஃ (ரலி)
நூல்: நஸயீ 3440
மேற்கண்ட செய்தியிலிருந்து நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் காலத்திலிருந்த நடைமுறையை அறியலாம்.
ஒரு பெண்ணுக்கு, கணவனைப் பிடிக்கா விட்டால் அவள் சமுதாயத் தலைவரிடம்முறையிட வேண்டும். அந்தத் தலைவர், கணவனிடமிருந்து பெற்றிருந்த மஹர்தொகையை அவள் திரும்பக் கொடுக்குமாறும் அந்த மஹர் தொகையைப் பெற்றுக்கொண்டு கணவன் அவளை விட்டு விலகுமாறும் கட்டளையிட வேண்டும்;திருமணத்தையும் ரத்துச் செய்ய வேண்டும் என்பதை இந்தச் செய்தியிலிருந்துஅறியலாம்.
பெண் என்பவள் உணர்ச்சிகள் இல்லாத கட்டை அல்ல. கணவன் இருக்கும் போதேஅவளது உணர்வுகள் கணவனின் உணர்வுகளுடன் ஒத்துப் போகாவிட்டால்திருமணத்தை ரத்து செய்ய சமுதாயத் தலைவருக்கு அனுமதி உண்டு எனும் போதுகணவன் காணாமல் போய் விடும் போது தாராளமாக ரத்து செய்யலாம்.
மத்ஹபு நூற்களில் 120 வருடங்கள் அவள் காத்திருக்க வேண்டும் என்று கூறுகெட்டு, ஆதாரம் ஏதுமின்றி எழுதியிருப்பதை நம்பி சில ஜமாஅத் நிர்வாகிகள் பெண்களின் இந்த உரிமையை மறுக்கின்றனர்.
திருமணம் செய்வதற்கான நோக்கம் என்ன?
அல்லாஹ் யாருக்கேனும் அநியாயம் செய்பவனா?
ஒரு பெண் தவறான வழியில் செல்வதற்கான வாசலை இஸ்லாம் அடைக்காமல்இருக்குமா?
என்றெல்லாம் சிந்தித்துப் பார்த்தால் கணவனுக்காக காலமெல்லாம் காத்திருக்க வேண்டும் என்று கூற மாட்டார்கள்.
இவ்வாறு கூறும் ஊர் ஜமாஅத்தினர் தங்கள் மகளுக்கு இது போன்ற நிலை ஏற்பட்டால் நபிவழியைப் பின்பற்ற முன்வருகின்றனர்.
எத்தனையோ மவ்லவிமார்கள் தங்கள் மகளுக்கோ, சகோதரிக்கோ இதுபோன்ற நிலைஏற்படும் போது மத்ஹபைத் தூக்கி எறிந்து விட்டு நபிவழியைத் தேடுகின்றனர். மக்களுக்கு மட்டும் அந்த உரிமையை மறுப்பது சரிதானா? என்பதைச் சிந்திக்கவேண்டும்.