ஆடம்பர விருந்துக்குத் தடை இல்லை என்கிறார்கள். இது சரியா?
இலங்கையைச் சேர்ந்த மார்க்க அறிஞர் திருமணம் தொடர்பான TNTJ, SLTJ யின் நிலைப்பாடு கொஞ்சம் வரம்பு மீறி எடுத்திருப்பதாகச் சொல்கிறார். அதற்கான ஆதாரத்தையும் இவ்வாறு தெரிவித்தார்.
திருமணம் இயன்றளவு செலவு குறைத்து செய்ய வேண்டும்; அதில் தான் பரகத் இருக்கிறது என்ற கருத்திலமைந்த ஹதீஸ் பலவீனமானது.
(2) ரசூல் (ஸல்) அவர்கள் ஸைனப் (ரலி) அவர்களின் திருமணத்தின் போது யார் யாரையெல்லாம் காண்கிறீர்களோ அவர்கள் எல்லோரையும் அழைக்கும்படியும் அத்திருமணத்தில் முன்னூறு பேரளவில் கலந்து கொண்டதாகவும் புகாரியில் செய்தி உள்ளது என்று தெரிவித்தார். முன்னூறு பேருக்கு விருந்து கொடுப்பதென்பது அன்றைய காலத்தில் ஒரு பெரிய செலவு செய்ய வேண்டிய விருந்து என்கிறார்.
(3) அடுத்து, அப்துர்ரஹ்மான் (ரலி) அவர்களிடம் ஓர் ஆட்டையேனும் மணவிருந்தாக அளிப்பீராக! என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னது வலீமாவின் குறைந்த பட்ச அளவே என்றும் வாதிடுகிறார்.
உண்மையில் இது தொடர்பாக தாங்கள் கூறிவருகின்ற கருத்துக்கு இவரின் விளக்கம் முரண்படுவதாக உணர்கிறேன்.
Sheloobeen
Doha, Qatar.
பதில் : திருமணம் தொடர்பாக தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைபாடு வரம்பு மீறுதலாக உள்ளது என்பது குறித்து மூன்று சான்றுகளை நீங்கள் சந்தித்த அந்தப் பிரச்சாரகர் குறிப்பிட்டுள்ளதாகக் கூறியுள்ளீர்கள். அந்தச் சான்றுகளைப் பார்த்த பிறகும் திருமணம் தொடர்பாக நாம் எடுத்துள்ள நிலைப்பாடு தான் மிகச் சரியானது என்பதை யாரும் அறிந்து கொள்ளலாம்.
திருமணத்தில் சிக்கனம் அவசியமற்றது எனக் கூறும் அந்த மவ்லவி அதற்குச் சான்றாக எடுத்து வைக்கும் ஆதாரங்களையும் அவற்றின் உண்மை நிலைகளையும் காண்போம்.
முதல் வாதம் :
பதில் : குறைந்த செலவில் நடத்தப்படுகின்ற திருமணமே பரக்கத் நிறைந்த திருமணம் என்ற ஹதீஸ் பலவீனமானது என்ற அவரது வாதம் தவறாகும். இது குறித்து இலங்கையில் சிலர் பிரச்சாரம் செய்யும் செய்தி நமக்குக் கிடைத்த போது அப்போதே இதற்கான பதிலை ஏகத்துவம் இதழில் வெளியிட்டுள்ளோம். மேலும் அதை நம்முடைய இணைய தளத்திலும் வெளியிட்டுள்ளோம். அந்த ஆக்கத்தைப் பார்க்கவும்.
எனவே அவர் கூறுவது போல் இது பலவீனமான ஹதீஸ் அல்ல. ஆதாரப்பூர்வமான ஹதீஸ் தான்.
இரண்டாவது வாதம் :
பதில் : நபியவர்கள் அளித்த திருமண விருந்திலேயே மிகப் பெரியது ஸைனப் (ரலி) அவர்களின் திருமண விருந்து தான் என்று ஹதீஸ்களில் இடம் பெற்றிருப்பது உண்மையே. ஆனால் அந்தத் திருமண விருந்தின் உச்சகட்டம் என்பது ஒரு ஆடு தான் என்பதும் அந்த ஹதீஸில் இடம் பெற்றுள்ளது.
صحيح البخاري
5168 – حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، قَالَ: «مَا أَوْلَمَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى شَيْءٍ مِنْ نِسَائِهِ مَا أَوْلَمَ عَلَى زَيْنَبَ، أَوْلَمَ بِشَاةٍ»
5168 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸைனப் (ரலி) அவர்களை மணந்து கொண்ட போது அத்த (வலீமா) மணவிருந்தைப் போன்று தம் மனைவியரில் வேறெவரை மணந்த போதும் அக்கவில்லை; ஸைனப் (ரலி) அவர்களை மணந்த போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஓர் ஆட்டை (அறுத்து) மணவிருந்தளித்தார்கள்.
நூல் : புகாரி 5168
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸைனப் (ரலி) அவர்களைத் திருமணம் செய்த போது ஒரு ஆட்டை அறுத்துத் தான் விருந்து வைக்கிறார்கள். இதுதான் நபியவர்கள் வைத்த திருமண விருந்திலேயே மிகப் பெரும் விருந்தாகும். நபியவர்களின் மிகப் பெரும் விருந்தே ஒரு ஆட்டிற்குள் அடங்கி விடுகிறதென்றால் நபியவர்கள் எவ்வளவு எளிமையாக திருமணத்திற்கு வழிகாட்டியுள்ளார்கள் என்பதை நாம் விளங்கிக் கொள்ள முடியும்.
அதே நேரத்தில் ஸைனப் (ரலி) அவர்களைத் திருமணம் செய்த நேரத்தில் ஒரு அற்புதம் நடைபெறுகிறது. இறைவல்லமையால் நபியவர்கள் நிகழ்த்திக் காட்டிய அந்த அற்புதத்தில் உண்டான உணவு விருந்தில் கலந்து கொண்டவர்கள் தான் முன்னூறுக்கும் அதிகமான ஸஹாபாக்கள் ஆவார்கள். இதனைப் பின்வரும் ஹதீஸிலிருந்து தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும்.
صحيح مسلم
3580 – حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا جَعْفَرٌ – يَعْنِى ابْنَ سُلَيْمَانَ – عَنِ الْجَعْدِ أَبِى عُثْمَانَ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ تَزَوَّجَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- فَدَخَلَ بِأَهْلِهِ – قَالَ – فَصَنَعَتْ أُمِّى أُمُّ سُلَيْمٍ حَيْسًا فَجَعَلَتْهُ فِى تَوْرٍ فَقَالَتْ يَا أَنَسُ اذْهَبْ بِهَذَا إِلَى رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- فَقُلْ بَعَثَتْ بِهَذَا إِلَيْكَ أُمِّى وَهْىَ تُقْرِئُكَ السَّلاَمَ وَتَقُولُ إِنَّ هَذَا لَكَ مِنَّا قَلِيلٌ يَا رَسُولَ اللَّهِ – قَالَ – فَذَهَبْتُ بِهَا إِلَى رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- فَقُلْتُ إِنَّ أُمِّى تُقْرِئُكَ السَّلاَمَ وَتَقُولُ إِنَّ هَذَا لَكَ مِنَّا قَلِيلٌ يَا رَسُولَ اللَّهِ. فَقَالَ « ضَعْهُ – ثُمَّ قَالَ – اذْهَبْ فَادْعُ لِى فُلاَنًا وَفُلاَنًا وَفُلاَنًا وَمَنْ لَقِيتَ ». وَسَمَّى رِجَالاً – قَالَ – فَدَعَوْتُ مَنْ سَمَّى وَمَنْ لَقِيتُ. قَالَ قُلْتُ لأَنَسٍ عَدَدَ كَمْ كَانُوا قَالَ زُهَاءَ ثَلاَثِمِائَةٍ. وَقَالَ لِى رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « يَا أَنَسُ هَاتِ التَّوْرَ ». قَالَ فَدَخَلُوا حَتَّى امْتَلأَتِ الصُّفَّةُ وَالْحُجْرَةُ فَقَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « لِيَتَحَلَّقْ عَشَرَةٌ عَشَرَةٌ وَلْيَأْكُلْ كُلُّ إِنْسَانٍ مِمَّا يَلِيهِ ». قَالَ فَأَكَلُوا حَتَّى شَبِعُوا – قَالَ – فَخَرَجَتْ طَائِفَةٌ وَدَخَلَتْ طَائِفَةٌ حَتَّى أَكَلُوا كُلُّهُمْ. فَقَالَ لِى « يَا أَنَسُ ارْفَعْ ». قَالَ فَرَفَعْتُ فَمَا أَدْرِى حِينَ وَضَعْتُ كَانَ أَكْثَرَ أَمْ حِينَ رَفَعْتُ – قَالَ – وَجَلَسَ طَوَائِفُ مِنْهُمْ يَتَحَدَّثُونَ فِى بَيْتِ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- وَرَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- جَالِسٌ وَزَوْجَتُهُ مُوَلِّيَةٌ وَجْهَهَا إِلَى الْحَائِطِ فَثَقُلُوا عَلَى رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- فَخَرَجَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- فَسَلَّمَ عَلَى نِسَائِهِ ثُمَّ رَجَعَ فَلَمَّا رَأَوْا رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَدْ رَجَعَ ظَنُّوا أَنَّهُمْ قَدْ ثَقُلُوا عَلَيْهِ – قَالَ – فَابْتَدَرُوا الْبَابَ فَخَرَجُوا كُلُّهُمْ وَجَاءَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- حَتَّى أَرْخَى السِّتْرَ وَدَخَلَ وَأَنَا جَالِسٌ فِى الْحُجْرَةِ فَلَمْ يَلْبَثْ إِلاَّ يَسِيرًا حَتَّى خَرَجَ عَلَىَّ. وَأُنْزِلَتْ هَذِهِ الآيَةُ فَخَرَجَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- وَقَرَأَهُنَّ عَلَى النَّاسِ (يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لاَ تَدْخُلُوا بُيُوتَ النَّبِىِّ إِلاَّ أَنْ يُؤْذَنَ لَكُمْ إِلَى طَعَامٍ غَيْرَ نَاظِرِينَ إِنَاهُ وَلَكِنْ إِذَا دُعِيتُمْ فَادْخُلُوا فَإِذَا طَعِمْتُمْ فَانْتَشِرُوا وَلاَ مُسْتَأْنِسِينَ لِحَدِيثٍ إِنَّ ذَلِكُمْ كَانَ يُؤْذِى النَّبِىَّ) إِلَى آخِرِ الآيَةِ. قَالَ الْجَعْدُ قَالَ أَنَسُ بْنُ مَالِكٍ أَنَا أَحْدَثُ النَّاسِ عَهْدًا بِهَذِهِ الآيَاتِ وَحُجِبْنَ نِسَاءُ النَّبِىِّ -صلى الله عليه وسلم-.
2572 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களை) மணமுடித்துத் தாம்பத்திய உறவைத் தொடங்கினார்கள். அப்போது என் தாயார் உம்மு சுலைம் (ரலி) அவர்கள் ஹைஸ் எனும் பலகாரத்தைச் செய்து, அதை ஒரு (கல்) பாத்திரத்தில் வைத்து, அனஸே! இதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டுசென்று, இதை என் தாயார் உங்களுக்காகக் கொடுத்தனுப்பியுள்ளார். அவர் உங்களுக்கு சலாம் சொல்லச் சொன்னார்; அல்லாஹ்வின் தூதரே! இது உங்களுக்கு எங்களால் (முடிந்த) சிறிதளவு (அன்பளிப்பு) ஆகும் என்றும் கூறினார் எனச் சொல் என்றார்கள். அவ்வாறே நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அதைக் கொண்டு சென்று, என் தாயார் உங்களுக்கு சலாம் கூறுகிறார். அல்லாஹ்வின் தூதரே! இது உங்களுக்கு எங்களால் முடிந்த சிறிதளவு (அன்பளிப்பு) ஆகும் என்று கூறினார் என்றேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அதை (ஓரிடத்தில்) வை என்று கூறிவிட்டு, நீ சென்று எனக்காக இன்ன மனிதரையும் இன்ன மனிதரையும் இன்ன மனிதரையும் மற்றும் நீ சந்திப்பவர்களையும் அழைப்பாயாக! என்று கூறி, சிலரது பெயரைக் குறிப்பிட்டார்கள். அவ்வாறே அவர்கள் பெயர் குறிப்பிட்டவர்களையும் நான் சந்தித்தவர்களையும் அழைத்தேன்.
-இதை அறிவிப்பவரான அபூஉஸ்மான் அல்ஜஅத் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: நான் அனஸ் (ரலி) அவர்களிடம், அவர்கள் எத்தனை பேர் இருந்தார்கள்? என்று கேட்டேன். அதற்கு, ஏறக்குறைய முன்னூறு பேர் இருந்தார்கள் என அனஸ் (ரலி) அவர்கள் விடையளித்தார்கள்.-
(தொடர்ந்து அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:) என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அனஸ்! அந்தப் பாத்திரத்தை எடு என்றார்கள். அப்போது மக்கள் வந்து நுழைந்தனர். (வீட்டின்) திண்ணையும் அறையும் நிரம்பியது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பத்துப் பத்துப் பேராக வட்டமாக அமர்ந்து, ஒவ்வொருவரும் தமது கைக்கு அருகிலிருக்கும் பகுதியிலிருந்து (எடுத்து) உண்ணட்டும் என்றார்கள். அவ்வாறே அவர்கள் (பத்துப் பேர் வந்து) வயிறு நிரம்ப உண்டனர். ஒரு குழுவினர் சாப்பிட்டுவிட்டுச் சென்றதும் மற்றொரு குழுவினர் வந்தனர். இவ்வாறு அவர்கள் அனைவரும் உண்டனர். அப்போது, அனஸ்! அந்தப் பாத்திரத்தைத் தூக்கு என்றார்கள். நான் அந்தப் பாத்திரத்தைத் தூக்கியபோது, நான் அதைக் கீழே வைத்த நேரத்தில் அதிகமாக இருந்ததா, அல்லது தூக்கிய நேரத்தில் அதிகமாக இருந்ததா என எனக்குத் தெரியவில்லை.
(எல்லாரும் புறப்பட்டுச் சென்ற பிறகு) மக்களில் ஒரு குழுவினர் மட்டும் (எழுந்து செல்லாமல்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது வீட்டில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அமர்ந்திருந்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் துணைவியார் (ஸைனப் (ரலிரி) அவர்கள்) தமது முகத்தைச் சுவர் பக்கம் திருப்பிக் கொண்டிருந்தார். அ(ங்கு அமர்ந்திருந்த)வர்கள் (எழுந்து செல்லாமல்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குச் சுமையாக இருந்தனர்.
எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறப்பட்டுத் தம்முடைய மற்ற துணைவியரிடம் சென்று சலாம் (முகமன்) சொல்லி (நலம் விசாரித்து)விட்டுத் திரும்பி வந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திரும்பி வந்ததைக் கண்டபோது, அக்குழுவினர் நாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குச் சுமையாக இருந்து விட்டோம் என்று எண்ணினர். ஆகவே, வீட்டு வாசலை நோக்கி விரைந்து வந்து அனைவரும் வெளியேறினர்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து திரையைத் தொங்க விட்டுவிட்டு வீட்டிற்குள் நுழைந்து கொண்டார்கள். நான் அந்த அறையில் அமர்ந்து கொண்டிருந்தேன். சிறிது நேரம் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இருந்திருப்பார்கள். அதற்குள் வெளியேறி என்னிடம் வந்தார்கள். அப்போது (அவர்களுக்கு) இந்த (33:53ஆவது) வசனம் அருளப் பெற்றிருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறப்பட்டு வந்து மக்களுக்கு அவ்வசனங்களை ஓதிக் காட்டினார்கள். இறை நம்பிக்கை கொண்டவர்களே! நபியின் இல்லங்களில் (அழைப்பின்றி) நுழையாதீர்கள். அவ்வாறு (அங்கு நடக்கும்) விருந்திற்காக உங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டாலும், அப்போதும் கூட உணவு தயாராவதை எதிர்பார்த்து (அங்கே காத்து) இராதீர்கள். மாறாக, (உணவு தயார்; வாருங்கள் என) நீங்கள் அழைக்கப்படும் போது நுழையுங்கள். சாப்பிட்டு முடிந்ததும் கலைந்து சென்று விடுங்கள். பேசிக் கொண்டிருப்பதில் ஆர்வமாய் இருந்து விடாதீர்கள். நிச்சயமாக, உங்களது இச்செயல் நபிக்கு வேதனை அளிக்கிறது என்பதே அந்த வசனமாகும்.
நூல் : முஸ்லிம்
صحيح مسلم
3581 – وَحَدَّثَنِى مُحَمَّدُ بْنُ رَافِعٍ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ حَدَّثَنَا مَعْمَرٌ عَنْ أَبِى عُثْمَانَ عَنْ أَنَسٍ قَالَ لَمَّا تَزَوَّجَ النَّبِىُّ -صلى الله عليه وسلم- زَيْنَبَ أَهْدَتْ لَهُ أُمُّ سُلَيْمٍ حَيْسًا فِى تَوْرٍ مِنْ حِجَارَةٍ فَقَالَ أَنَسٌ فَقَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « اذْهَبْ فَادْعُ لِى مَنْ لَقِيتَ مِنَ الْمُسْلِمِينَ ». فَدَعَوْتُ لَهُ مَنْ لَقِيتُ فَجَعَلُوا يَدْخُلُونَ عَلَيْهِ فَيَأْكُلُونَ وَيَخْرُجُونَ وَوَضَعَ النَّبِىُّ -صلى الله عليه وسلم- يَدَهُ عَلَى الطَّعَامِ فَدَعَا فِيهِ وَقَالَ فِيهِ مَا شَاءَ اللَّهُ أَنْ يَقُولَ وَلَمْ أَدَعْ أَحَدًا لَقِيتُهُ إِلاَّ دَعَوْتُهُ فَأَكَلُوا حَتَّى شَبِعُوا وَخَرَجُوا وَبَقِىَ طَائِفَةٌ مِنْهُمْ فَأَطَالُوا عَلَيْهِ الْحَدِيثَ فَجَعَلَ النَّبِىُّ -صلى الله عليه وسلم- يَسْتَحْيِى مِنْهُمْ أَنْ يَقُولَ لَهُمْ شَيْئًا فَخَرَجَ وَتَرَكَهُمْ فِى الْبَيْتِ فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ (يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لاَ تَدْخُلُوا بُيُوتَ النَّبِىِّ إِلاَّ أَنْ يُؤْذَنَ لَكُمْ إِلَى طَعَامٍ غَيْرَ نَاظِرِينَ إِنَاهُ) قَالَ قَتَادَةُ غَيْرَ مُتَحَيِّنِينَ طَعَامًا وَلَكِنْ إِذَا دُعِيتُمْ فَادْخُلُوا حَتَّى بَلَغَ (ذَلِكُمْ أَطْهَرُ لِقُلُوبِكُمْ وَقُلُوبِهِنَّ)
2573 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஸைனப் (ரலி) அவர்களை மணந்து கொண்டபோது. (என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்கள் ஒரு கல் பாத்திரத்தில் ஹைஸ் எனும் பலகாரத்தை வைத்து அதை (என்னிடம் கொடுத்து) நபி (ஸல்) அவர்களிடம் அன்பளிப்பாக அனுப்பி வைத்தார்கள். (அவ்வாறே நான் கொண்டு சென்று கொடுத்தேன்.) அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நீ சென்று, நீ சந்திக்கின்ற முஸ்லிம்களை எனக்காக அழை(த்து வா) என்றார்கள். அவ்வாறே நான் சந்தித்தவர்களை அழைத்(து வந்)தேன். அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து சாப்பிட்டுவிட்டுப் புறப்பட்டுச் சென்றனர். நபி (ஸல்) அவர்கள் தமது கையை அந்தப் பலகாரத்தின் மீது வைத்துப் பிரார்த்தித்தார்கள். அப்போது அல்லாஹ் நாடிய சில பிரார்த்தனையை அவர்கள் கூறினார்கள்.
நான் சந்தித்த அனைவரையும் ஒருவர் விடாமல் அழைத்தேன். அவர்கள் அனைவரும் (வந்து) வயிறு நிரம்பச் சாப்பிட்டுவிட்டுச் சென்றனர். அவர்களில் ஒரு குழுவினர் மட்டும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இருக்க, நீண்ட நேரம் பேசிக் கொண்டே (அமர்ந்து) இருந்தனர். அவர்களிடம் (எழுந்து செல்லுமாறு) கூற நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வெட்கப்பட்டார்கள். எனவே, அவர்களை நபியவர்கள் அப்படியே வீட்டில் விட்டுவிட்டு (தாம் மட்டும் எழுந்து) வெளியே சென்றார்கள். அப்போது அல்லாஹ், இறை நம்பிக்கை கொண்டவர்களே! நபியின் இல்லங்களில் (அழைப்பின்றி) நுழையாதீர்கள் என்று தொடங்கும் (33:53ஆவது) வசனத்தை அருளினான்.
நூல் : முஸ்லிம்
ஸைனப் (ரலி) அவர்களைத் திருமணம் செய்த போது நபியவர்கள் தமது சொந்தச் செலவில் வைத்த திருமண விருந்து ஒரு ஆடு தான். இது தான் திருமண விருந்திற்கு நபியவர்களின் வழிகாட்டுதல் ஆகும். ஸைனப் (ரலி) அவர்களைத் திருமணம் செய்த நேரத்தில் உம்மு சுலைம் (ரலி) அவர்கள் அன்பளிப்பாக வழங்கிய உணவின் மூலம் ஏற்பட்ட அற்புதத்தில் 300 நபித்தோழர்கள் சாப்பிட்டார்கள். இந்த அற்புதங்கள் நபித்துவத்தின் அடையாளத்திற்குச் சான்றாகும். எனவே இதனை திருமண விருந்திற்கு அளவு கோலாகக் கொள்வது கூடாது.
மூன்றாவது வாதம்
பதில் : ஒரு ஆட்டையேனும் அறுத்து வலீமா விருந்து கொடுப்பீராக என்பது திருமணத்தில் வலீமா விருந்து அவசியம் என்ற கருத்தைத் தான் தரும். குறைந்தபட்சம் ஒரு ஆடாவது கொடுக்க வேண்டும் என்ற கருத்தைத் தராது.
صحيح البخاري
4213 – حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرِ بْنِ أَبِي كَثِيرٍ، قَالَ: أَخْبَرَنِي حُمَيْدٌ، أَنَّهُ سَمِعَ أَنَسًا رَضِيَ اللَّهُ عَنْهُ، يَقُولُ: «أَقَامَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَيْنَ خَيْبَرَ، وَالمَدِينَةِ ثَلاَثَ لَيَالٍ يُبْنَى عَلَيْهِ بِصَفِيَّةَ»، فَدَعَوْتُ المُسْلِمِينَ إِلَى وَلِيمَتِهِ، وَمَا كَانَ فِيهَا مِنْ خُبْزٍ وَلاَ لَحْمٍ، وَمَا كَانَ فِيهَا إِلَّا أَنْ أَمَرَ بِلاَلًا بِالأَنْطَاعِ فَبُسِطَتْ، فَأَلْقَى عَلَيْهَا التَّمْرَ وَالأَقِطَ وَالسَّمْنَ، فَقَالَ المُسْلِمُونَ: إِحْدَى أُمَّهَاتِ المُؤْمِنِينَ، أَوْ مَا مَلَكَتْ يَمِينُهُ؟ قَالُوا: إِنْ حَجَبَهَا فَهِيَ إِحْدَى أُمَّهَاتِ المُؤْمِنِينَ، وَإِنْ لَمْ يَحْجُبْهَا فَهِيَ مِمَّا مَلَكَتْ يَمِينُهُ، فَلَمَّا ارْتَحَلَ وَطَّأَ لَهَا خَلْفَهُ، وَمَدَّ الحِجَابَ
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கைபருக்கும், மதீனாவுக்கும் இடையில் மூன்று நாட்கள் தங்கினார்கள். அங்கு ஸஃபிய்யா (அவர்களை மணந்து) அவர்களுடன் வீடு கூடினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மணவிருந்துக்கு முஸ்லிம்களை நான் அழைத்தேன். அந்த விருந்தில் ரொட்டியோ, இறைச்சியோ இருக்கவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், பிலால் (ரலி) அவர்களிடம் தோல் விரிப்பைக் கொண்டு வருமாறு உத்தரவிட அவ்வாறே அது விரிக்கப்பட்டது. பிறகு பேரீச்சம்பழம், பாலாடைக்கட்டி, நெய் போன்றவற்றை இட்டார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி 4213
صحيح البخاري
5172 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ مَنْصُورِ بْنِ صَفِيَّةَ، عَنْ أُمِّهِ صَفِيَّةَ بِنْتِ شَيْبَةَ، قَالَتْ: «أَوْلَمَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى بَعْضِ نِسَائِهِ بِمُدَّيْنِ مِنْ شَعِيرٍ»
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திருமணம் செய்த போது இரண்டு முத்து (சுமார் 1 லிட்டர்) கோதுமையையே வலீமா விருந்தாக அளித்தார்கள்.
அறிவிப்பவர் : சபிய்யா (ரலி)
நூல் : புகாரி 5172
நபியவர்கள் எது கிடைத்ததோ அத்தகைய எளிமையான உணைவை திருமண விருந்தாக வழங்கியிருக்கிறார்கள். இதிலிருந்து திருமண விருந்திற்கு மிகவும் கஷ்டப்படத் தேவையில்லை. எது கிடைக்கிறதோ அதை வழங்கினால் போதுமானதாகும் என்பதை நாம் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.
30.05.2011. 12:11 PM