இது கொடி தூக்கும் கழகமல்ல! கொள்கை காக்கும் காப்பகம்

இது கொடி தூக்கும் கழகமல்ல! கொள்கை காக்கும் காப்பகம்

ல்லாஹ்வின் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நான்காவது செயற்குழு பிப்ரவரி 6 அன்று விழுப்புரத்தில் சிறப்பாக நடைபெற்றது. ஓராண்டு கழியாத, ஒரு வயது கூட நிறையாத பத்து மாதக் குழந்தை என்றாலும் பாராளும் பேரமைப்புகளின் செயற்குழுக்களை விஞ்சும் விதமாக அது அனுபவ முதிர்ச்சியைக் கொண்டிருந்தது.

திட்ட வரை நேரத்திற்குள்ளாக தடம் புரளாமல் சென்று நேரத்தை சேமித்த விதம்,குறித்த நேரத்தில் அரங்கினுள் வந்து குவிந்த கொள்கைவாதிகளின் எண்ணிக்கை,மாநிலமெங்கும் மாவட்ட ரீதியிலான வளர்ச்சி பற்றிய பார்வை, எட்டிய மற்றும் எட்ட வேண்டிய இலக்குகளை நோக்கி நிர்வாகிகள் செலுத்திய தூர நோக்குப் பார்வை,சுனாமி சோதனைக் களத்தில் டிஎன்.டி.ஜே. தொண்டர்கள் ஆற்றிய சுயநலமில்லாத சேவை பற்றிய விளக்கம், அவ்வப்போது ஆலிம்கள் ஆற்றிய அறிவுரைகள் என இவை அனைத்தும் ஓராண்டு கூட நிறையாத அமைப்புக்குரிய அம்சங்கள் இல்லை. மாறாக ஒரு நூறாண்டு பின்னணியாகக் கொண்ட முன்னணி பேரியக்கங்களின் பாரம்பரியங்கள் என்பதை இவை பறை சாற்றின.

கொள்கையை மையமாக வைத்து ஓரியக்கம் செயல்பட ஆரம்பித்தால் அதில் ஒருவர் கூட தேற மாட்டார் என்று உலகக் கணக்குப் போட்டவர்களின் தப்புக் கணக்கு தவிடு பொடியாகி, கொள்கைக்காகக் கூடும் உருப்படியான உறுப்பினர்கள் இங்கு உண்டு என்ற உண்மை இந்த செயற்குழுவில் நிரூபணமானது தான் இதில் நம்மைப் பிரமிக்க வைத்த விஷயம்.

இப்படி வான் முகட்டை நோக்கி வளர்ச்சிச் சிறகில் பறக்கும் நமக்கு ஏகத்துவம் வழங்கும் இறையச்சச் செய்திகள்.

இந்த இயக்கத்தின் உயிர் மூச்சு, இதயத் துடிப்பு எல்லாமே ஏகத்துவம் தான். ஷிர்க் என்ற பாவத்தின் நிழலில் கூட தவறியும் நாம் மிதித்து விட மாட்டோம். இந்த விஷயத்தில்,

உங்களை விட்டும் அல்லாஹ்வையன்றி எதனை வணங்குகிறீர்களோ அதை விட்டும் நாங்கள் விலகியவர்கள். உங்களை மறுக்கிறோம். அல்லாஹ்வை மட்டும் நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை எங்களுக்கும் உங்களுக்குமிடையே பகைமையும் வெறுப்பும் என்றென்றும் ஏற்பட்டு விட்டது என்று கூறிய விஷயத்தில் இப்ராஹீமிடமும் அவருடன் இருந்தோரிடமும் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது.

அல்குர்ஆன் 60:4

என அல்லாஹ் கூறுவது போன்று இப்ராஹீம் (அலை) அவர்களாக இருப்போம். அவர்களது வழியில் நின்று, ஒடுக்கப்பட்டவர்களுக்காகக் குரல் கொடுப்பதில்,அடக்குமுறைக்கு எதிராக ஆர்ப்பரிப்பதில் மூஸா, ஹாரூன் (அலை) அவர்களைப் போன்று செயல்படுவோம்.

ஏகத்துவத்தை அடிப்படையாகக் கொள்ளாமல் நடத்தப்படும் எந்தவொரு போராட்டமும், ஆர்ப்பாட்டமும் நமக்குத் தேவையேயில்லை. இந்த இலட்சியத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படுகையில் எண்ணிக்கை நமக்கு ஒரு பொருட்டே கிடையாது. இது நம்முடைய அளவு கோல் மட்டுமல்ல, வல்ல அல்லாஹ்வின் அளவு கோலும் இது தான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

நமக்கு ஆட்கள் முக்கியமல்ல! அவர்களிடம் குடி கொண்டிருக்கும் கொள்கை உரம்,ஒழுக்கத் தரம் தான் முக்கியம். எனவே, இத்தகைய கொள்கை விஷயத்தில் ஒரு போதும் சமரசம் செய்து கொள்ளாத உறுதியான நிலைபாட்டைக் கடைப்பிடிப்போமாக!

இதயத்தில் தேவை இக்லாஸ்

தன்னை வஞ்சித்து, தன் வியர்வையையும் உழைப்பையும் சுரண்டி, கசக்கிப் பிழிந்து சக்கையாக வெளியே தள்ளிய அமைப்பை விட நாம் எல்லா வகையிலும் விஞ்சி விட வேண்டும் என்ற உணர்வு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உறுப்பினர்களிடம் ஏற்படுவது இயற்கை தான்.

ஏகத்துவக் கொள்கையை, அந்தப் பிரச்சாரத்தை அழிக்க வேண்டும் என்ற உணர்வு மேலோங்கி, அதற்கான முயற்சிகளிலும் அவர்கள் இறங்கி வருகின்றார்கள். "இவர்கள் (தவ்ஹீத் ஜமாஅத்தினர்) உங்களிடம் நிதி கேட்டு வருகின்றனர். ஆனால் உங்களை இணை வைப்பவர்கள் என்று கூறி வேண்டாம் என்கிறார்கள். இவர்களுக்கு நீங்கள் நிதி கொடுக்கலாமா?'' என்று சுன்னத் வல் ஜமாஅத் எனப்படுவோரை நோக்கி மேடைகளில் பகிரங்கமாகவே பேசுகின்றார்கள். அதாவது தவ்ஹீத் ஜமாஅத்தினர் உங்களுக்கு எதிரி, நாங்கள் தான் உங்கள் நண்பர்கள், அதனால் எங்களைச் சேர்த்துக் கொள்ளுங்கள் என்ற ரீதியில் பேசி வருகின்றனர்.

இதன் மூலம் நம்மை முடக்கி விடலாம் என்று நினைத்து மனப்பால் குடிக்கின்றனர். நாம் எதற்காகவும் கொள்கையில் வளைந்து கொடுப்பவர்கள் கிடையாது. சு.ஜ.வினர் நிதி கொடுத்தால் அதை வாங்குவதற்கு மார்க்கத்தில் தடை உள்ளதா என்று தான் பார்ப்போமே தவிர, அவர்கள் தரும் காசுக்காக கொள்கையை அடகு வைத்து விட மாட்டோம் என்பதைச் சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.

தவ்ஹீதுவாதிகளிடம், நாங்களும் தவ்ஹீதுவாதிகள் தான் என்று இவர்கள் முகம் காட்டுகின்றனர். சு.ஜ.வினரிடம் நாங்கள் உங்களோடு தான் என்று அசடு வழிகின்றார்கள். இவர்களின் இந்த மனப்பாங்கை திருக்குர்ஆன் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகின்றது.

நம்பிக்கை கொண்டோரை அவர்கள் சந்திக்கும் போது, "நம்பிக்கை கொண்டுள்ளோம்''எனக் கூறுகின்றனர். தமது ஷைத்தான்களுடன் தனித் திருக்கும் போது "நாங்கள் உங்களைச் சேர்ந்தவர்களே. நாங்கள் (அவர்களை) கேலி செய்வோரே'' எனக் கூறுகின்றனர்.

அல்குர்ஆன் 2:14

எனவே நடிப்பை, நிஜ வாழ்க்கையில் கடைப்பிடிக்கும் இவர்களிடமிருந்து, இவர்கள் விரிக்கும் வலையிலிருந்து மக்களைக் காப்பது நம்முடைய கடமை என்பதில் கடுகளவும் சந்தேகமில்லை. ஆனால் நாம் இந்தப் போராட்டத்தில் இக்லாஸ் எனும் உளத்தூய்மையை ஒரு போதும் இழந்து விடக் கூடாது. உளத்தூய்மை இல்லாமல்,முகஸ்துதிக்காக செய்யப்படும் எந்தவொரு அமலும் செய்தவரின் முகத்திலேயே தூக்கி எறியப்பட்டு விடும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

வணக்கத்தை அல்லாஹ்வுக்கே கலப்பற்றதாக்கி வணங்குமாறும், உறுதியாக நிற்குமாறும், தொழுகையை நிலை நாட்டு மாறும், ஸகாத்தைக் கொடுக்கு மாறும் தவிர அவர்களுக்கு வேறு கட்டளை பிறப்பிக்கப் படவில்லை. இதுவே நேரான மார்க்கம்.

அல்குர்ஆன் 98:5

நம்முடைய எந்த ஒரு காரியமும், அது ஏகத்துவக் கொள்கையை நிலைநாட்டுவதற்காக என்றாகி விடும் போது அது நிச்சயமாக இக்லாஸான அமலாக ஆகி விடும்.

"அல்லாஹ்வின் திருப்தியை நாடி, நீர் எதைச் செலவு செய்தாலும் அதற்காக நீர் கூலி வழங்கப்படுவீர். உமது மனைவியின் வாயில் நீர் ஊட்டும் ஒரு கவள உணவு உட்பட''என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸஃத் பின் அபீவக்காஸ் (ரலி)

நூல்: புகாரி 56

இந்த ஹதீஸின்படி நாம் நடத்துகின்ற போராட்டம், ஆர்ப்பாட்டம், இரத்த தானம்,சுனாமி நிவாரணப் பணிகள் அனைத்தும் நன்மை வழங்கப்படும் செயலாக, இறை திருப்தியைப் பெற்றுத் தரும் இனிய திருப்பணிகளாக மாறி விடும். இது நாம் நம்முடைய செயல்பாடுகளில் கவனத்தில் கொள்ள வேண்டிய அடிப்படை அம்சமாகும்.

இறை உதவியா? எண்ணிக்கையா?

இன்று இறைவனின் அருளால் நமது ஜமாஅத் தமிழகத்தில் தனியொரு சக்தியாக உருவெடுத்து வருகின்றது. இவர்கள் தவ்ஹீதுவாதிகள், உங்களை முஷ்ரிக் என்று கூறுகின்றார்கள் என்றெல்லாம் பிரச்சாரம் செய்தும் நாம் நடத்தும் போராட்டங்களில் மக்கள் வெள்ளமெனப் பாய்கின்றனர்.

நாம் நடத்தும் மார்க்க விளக்கப் பொதுக் கூட்டங்களில் கடல் போல் மக்கள் கூட்டம் வருவதும், மற்றவர்கள் நடத்தும் கூட்டங்களில் கடல் போல் திடல் காலியாகக் காட்சியளிப்பதும் நம்முடைய உள்ளங்களில் ஒரு வித மயக்கத்தை உண்டு பண்ணி விடக் கூடாது. இந்த விஷயத்தில் நம்முடன் கடுகளவு கூட ஒப்பிட்டுப் பார்க்க முடியாத உயர்ந்த சமுதாயமான நபித்தோழர்களுக்குக் கூட அல்லாஹ் உரிய பாடத்தைப் படித்துக் கொடுக்கத் தவறவில்லை.

பல களங்களில் அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்திருக்கிறான். ஹுனைன் (போர்) நாளில் உங்களின் அதிக எண்ணிக்கை உங்களுக்கு மமதையளித்த போது, அது உங்களுக்கு எந்தப் பயனும் அளிக்கவில்லை. பூமி விசாலமாக இருந்தும் உங்களுக்கு அது சுருங்கி விட்டது. பின்னர் புறங்காட்டி ஓடினீர்கள்.

அல்குர்ஆன் 9:25

உயர்ந்த, உறுதி மிக்க சமுதாயத்தையே அல்லாஹ் இப்படி வாட்டி விடுகின்றான் எனும் போது நாம் எம்மாத்திரம்?

எனவே, இப்படை தோற்கின் எப்படை வெல்லும்? இந்தப் படை போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா? என்பது போன்ற மமதையான வார்த்தைகள் எள்ளளவு கூட,மறந்தும் வாயிலிருந்து வந்து விடக் கூடாது.

இந்த எண்ணம் வந்து விட்டால் நாம் அழிவுக்கு ஆளாகி விடுவோம். அல்லாஹ் காப்பானாக! நாம் வளர்த்த இயக்கம் அழிவுப் பாதைக்குப் போனதற்கு இது தான் காரணம் என்பது நம் கண் முன்னால் கண்ட உண்மையாகும்.

எனவே இறை உதவி என்பது எண்ணிக்கை அடிப்படையில் வருவதல்ல. உறுதியான ஈமானின் அடிப்படையில் வருவதாகும். இதை மனதில் கொண்டு நாம் செயல்பட வேண்டும்.

கொள்கையும் தொழுகையும்

பொதுவாகவே ஏகத்துவவாதிகள் என்றால் அவர்களிடம் தொழுகை இருக்காது என்ற தோற்றம் மக்களிடம் இருந்து வருகின்றது. அதற்கு ஏதுவாக நாமும் இரவு நேரங்களில் 1 மணி வரை ஏகத்துவத்தைப் பேசி விட்டு, ஃபஜ்ரு தொழுகைக்கு வேக்காடு வைத்து விடுகின்றோம்.

அவர்கள் தொழுகையைப் பாழாக்கினர். மனோ இச்சைகளைப் பின்பற்றினர். அவர்கள் நஷ்டத்தைச் சந்திப்பார்கள். திருந்தி நம்பிக்கை கொண்டு நல்லறம் செய்தவரைத் தவிர. அவர்கள் சொர்க்கத்தில் நுழைவார்கள். சிறிதளவும் அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.

அல்குர்ஆன் 19:59,60

இந்த வசனத்தில் தொழுகையை விட்டால், தவ்பா செய்தால் மட்டும் போதாது,அவர்கள் ஈமானும் கொள்ள வேண்டும் என்று அல்லாஹ் கூறுவதிலிருந்து தொழுகையை விட்டவர் இஸ்லாத்தை விட்டு வெளியே போய் விட்டார் என்பதை அறியலாம். அல்லாஹ் நம்மைக் காக்க வேண்டும். அதனால் ஒரு கொள்கைவாதி ஃபஜ்ர் மட்டுமல்ல, ஃபஜ்ர் முதல் இஷா வரை அனைத்து தொழுகைகளையும் ஜமாஅத்துடன் தொழுவதுடன் சுன்னத்தான தொழுகை களையும் பேணிக் கொள்ள வேண்டும்.

ஒழுக்க வாழ்வின் அவசியம்

தாடி வைத்தல் போன்ற வெளிப்படையான சுன்னத்துக் களையும் ஒரு கொள்கைவாதி பேண வேண்டும்.

நம் சகோதரர்கள் யாரும் வட்டி கொடுப்பது, வட்டி வாங்குவது போன்ற பாவத்தில் ஈடுபடுவது கிடையாது. ஆனால் தொழில் நடத்துவதற்காக வங்கிகளில் வாங்கும் கடனைப் பெரிது படுத்தாமல் அதன் வலைகளில் சாதாரணமாக விழுந்து விடுகின்றனர். நிரந்தர நரகத்திற்கு இழுத்துச் செல்லும் இது போன்ற பாவங்களில் வீழ்ந்து விடக் கூடாது. இத்தகைய பாவங்களில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

தீய பழக்க வழக்கங்கள், பீடி, சிகரெட், புகையிலை போன்ற தீமைகளை விட்டும் ஒரு கொள்கைவாதி விலக வேண்டும்.

பெரும் பாவங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அடையாளம் காட்டியிருக்கும் விபச்சாரம் மற்றும் அதன் தூண்டுகோல்களான சினிமா போன்ற ஒழுக்கக் கேடுகள் நம்மிடம் ஒரு போதும் வந்து விடக் கூடாது.

வரதட்சணை ஒரு வன்கொடுமை என்று பிரச்சாரம் செய்யும் நாம், அந்தத் தீமை நடக்கும் திருமணங்களில் கலந்து கொள்ளாமல் புறக்கணிக்க வேண்டும்.

நம்பிக்கை நட்சத்திரமாக…

பேரலைகளுக்கும் பெரும் புயல்களுக்கும் ஈடு கொடுத்து சமுதாயக் கடலில் நீந்திய எத்தனையோ இயக்கக் கப்பல்கள் ஊழல், பொருளாதார மோசடி என்ற ஓட்டைகள் விழுந்தவுடன் அடையாளம் தெரியாத அளவுக்கு மூழ்கிப் போய் விட்டன. அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும். இன்று அவனது கருணையால் எந்தவொரு இயக்கமும் படைத்திராத சாதனையை, சரித்திரத்தை இந்தப் பத்து மாதக் கத்துக் குட்டி இயக்கம் படைத்திருக்கின்றது. சுனாமி நிவாரணத் திற்கான இதன் வசூல் முக்கால் கோடி ரூபாயைத் தாண்டி விட்டது.

அந்த அளவுக்கு இந்த அமைப்பு சோரம் போகாத அமானிதத் தன்மையில் ஆழ்ந்த பிடிப்பு, அழுத்தமான பிணைப்பு கொண்டிருக்கின்றது. இந்த வகையில் இந்த இயக்கம் இஸ்லாமிய சமுதாயத்தின் நம்பிக்கை! நாணய அஸ்திவாரம்! எனவே இந்த இயக்கத்தின் பொறுப்பாளர்கள், ஊழல் கரையான்களிடம் ஒரு போதும் மாட்டி விடக் கூடாது. அது போல் இதன் கிளைகளின் வரவு செலவு கணக்குகள் எப்போதும் சரியாகப் பேணப்பட வேண்டும்.

நம்முடைய அமைப்பின் ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளுக்குக் கொடி அவசியம் என்ற கருத்து செயற்குழுவில் முன் வைக்கப்பட்டது. இந்தக் கொடியை அவசியத்திற்கு ஏற்றாற்போல், அடையாளத்திற்காக ஆக்கிக் கொள்வோமாக! மற்ற கழகங்கள், கட்சிகள், கொடிக்கு முக்கியத்துவம் அளித்து கொள்கையைப் பறக்க விட்டது போன்று நாமும் ஆகி விடக் கூடாது என்பதில் கருத்தும் கவனமும் கொள்வோமாக!

சுருக்கமாகச் சொல்லப் போனால் எல்லா வகைகளிலும் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில், நபி (ஸல்) அவர்கள் தம் கண் முன் வளர்த்த நபித்தோழர்களைப் போன்ற சமுதாயமாகப் பரிணமிப்போமாக!


ஏகத்துவம் 2005 மார்ச் இதழில் வெளிவந்தது