உஸ்மான் (ரலி) இரண்டாவது பாங்கை அறிமுகப்படுத்தியதன் மூலம் பித்அத்தை ஏன் ஏற்படுத்தினார்கள்?

உஸ்மான் (ரலி) இரண்டாவது பாங்கை அறிமுகப்படுத்தியதன் மூலம் பித்அத்தை ஏன் ஏற்படுத்தினார்கள்?

ஸ்மான் (ரலி) இரண்டாவது பாங்கை அறிமுகப்படுத்தியதன் மூலம் பித்அத்தை ஏன் ஏற்படுத்தினார்கள்? நபி (ஸல்) அவர்களால் சுவர்க்கம் என்று சொல்லப்பட்ட நபித்தோழரின் இந்தச் செய்கை மூலம் பித்அத் என்பது கடுமையான குற்றம் இல்லை, சாதாரண பாவம் தான் என்று எடுத்துக் கொள்ளலாமா?

ஜே. அப்துல் அலீம், அய்யம்பேட்டை

பதில் :

செய்திகளில் மிகவும் உண்மையானது அல்லாஹ்வுடைய வேதமாகும். நடைமுறையில் மிகவும் சிறந்தது முஹம்மது (ஸல்) அவர்களுடைய நடைமுறையாகும். காரியங்களில் தீயது (மார்க்கம் என்ற பெயரில்) புதிதாக உருவானவையாகும். புதிதாக உருவாகக் கூடியவைகள் அனைத்தும் பித்அத்துகள் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி),

நூல்: நஸயீ 1560

இந்த ஹதீஸிலும் இன்னும் இது போன்ற பல்வேறு ஹதீஸ்களிலும் நபி (ஸல்) அவர்கள், தமக்குப் பிறகு உருவாக்கப்படும் பித்அத்துக்கள் அனைத்தும் வழிகேடு,அவை நரகத்தில் கொண்டு போய் சேர்க்கும் என்று கூறியுள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு விஷயத்தைக் கூறி விட்ட பிறகு,அதற்கு மாற்றமாக மற்ற எவருடைய கருத்தையோ அல்லது செயலையோ ஆதாரமாகக் காட்டுவதை மார்க்கம் மிக வன்மையாகக் கண்டிக்கின்றது.

அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும் போது நம்பிக்கை கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் தமது அக்காரியத்தில் சுய விருப்பம் கொள்ளுதல் இல்லை. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்பவர் தெளிவாக வழி கெட்டு விட்டார்.

அல்குர்ஆன் 33:36

உஸ்மான் (ரலி) அவர்கள் ஜும்ஆவில் இரண்டாவது பாங்கைத் தான் ஏற்படுத்தினார்களா? அல்லது கடைவீதியில் போய் தொழுகைக்கு அழைக்கும் வழக்கத்தை ஏற்படுத்தினார்களா? என்பது குறித்தே சரியான தெளிவில்லாத நிலையில் அதை ஆதாரமாகக் காட்டி, நபி (ஸல்) அவர்களின் கட்டளையை மறுப்பதை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும்?

ஒருவேளை உஸ்மான் (ரலி) அவர்கள் இரண்டாவது பாங்கையே அறிமுகப்படுத்தியிருந்தாலும் நபிவழி தெளிவாக இருக்கும் போது அதையே நாம் பின்பற்ற வேண்டும். சுவனத்தைக் கொண்டு நற்செய்தி சொல்லப்பட்ட நபித்தோழர் ஏன் இவ்வாறு செய்தார் என்று நாம் ஆராயத் தேவையில்லை. அவர்கள் என்ன நோக்கத்தில் செய்தார்கள் என்பதை அல்லாஹ்வே அறிவான்.

அவர்கள், சென்று விட்ட சமுதாயம். அவர்கள் செய்தது அவர்களுக்கு. நீங்கள் செய்தது உங்களுக்கு. அவர்கள் செய்தது குறித்து நீங்கள் விசாரிக்கப்பட மாட்டீர்கள்.

அல்குர்ஆன் 2:134


கேள்வி-பதில்  : ஏகத்துவம்,ஜனவரி 2005