உமர் (ரலி) பேசிய அனைத்தும் வஹியா?

உமர் (ரலி) பேசிய அனைத்தும் வஹியா?

மூன்று விஷயங்களில் அல்லாஹ் உமர் (ரலி) அவர்கள் கூறிய கருத்தை வஹியாகத் தெரிவித்தான் என்ற ஹதீஸ் கேள்விப்பட்டுளேன். அந்த மூன்று  விஷயங்கள் என்ன என்பதை விளக்கவும்.

ஹாலித், துபாய்.

அந்த ஹதீஸ் எது என்பதை விளக்குவதற்கு முன் அந்த ஹதீஸை சிலர் தவறான கொள்கைக்கு ஆதாரமாகப் பயன்படுத்துவதை முதலில் சுட்டிக்காட்டுகிறோம்.

நீங்கள் சுட்டிக்காட்டும் ஹதீஸ் குர்ஆன் ஹதீஸை விட்டும் மக்களை ஓரம் கட்ட நினைப்பவர்கள் அடிக்கடி தங்களின் ஆதாரமாக எடுத்துக் காட்டும் ஹதீஸாகும்.

அதாவது உமர் (ரலி) அவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப அல்லாஹ் தனது வசனங்களை அருளிக் கொண்டு இருந்தான் என்று கூறி மக்களை வழிகெடுத்து வருகின்றனர். உமர் (ரலி) அவர்கள் எதைச் சொன்னாலும் அது வஹீ தான் என்று சொல்லுமளவுக்கு ஆதாரமற்றவைகளையும் நியாயப்படுத்தி வருகின்றனர்.

குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களுக்கு முரணாக உமர் (ரலி) அவர்கள் செய்த சில காரியங்களையும் நியாயப்படுத்த இதைப் பயன்படுத்தி வருகின்றனர்.

உதாரணமாக

صحيح مسلم

3746 – حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ وَمُحَمَّدُ بْنُ رَافِعٍ – وَاللَّفْظُ لاِبْنِ رَافِعٍ – قَالَ إِسْحَاقُ أَخْبَرَنَا وَقَالَ ابْنُ رَافِعٍ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ أَخْبَرَنَا مَعْمَرٌ عَنِ ابْنِ طَاوُسٍ عَنْ أَبِيهِ عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ كَانَ الطَّلاَقُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- وَأَبِى بَكْرٍ وَسَنَتَيْنِ مِنْ خِلاَفَةِ عُمَرَ طَلاَقُ الثَّلاَثِ وَاحِدَةً فَقَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ إِنَّ النَّاسَ قَدِ اسْتَعْجَلُوا فِى أَمْرٍ قَدْ كَانَتْ لَهُمْ فِيهِ أَنَاةٌ فَلَوْ أَمْضَيْنَاهُ عَلَيْهِمْ. فَأَمْضَاهُ عَلَيْهِمْ.

ஒரே நேரத்தில் மூன்று தலாக் என்று கூறினால் அது ஒரு தலாக்காகவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் கருதப்பட்டு வந்தது. அபூபக்ர் (ரலி) ஆட்சிக்காலத்திலும் இவ்வாறே கருதப்பட்டு வந்தது. உமர் (ரலி) அவர்களின் ஆட்சியின் துவக்கத்திலும் இவ்வாறே இருந்தது. நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு விஷயத்தில் மக்கள் அவசரம் காட்டுகிறார்கள். எனவே மூன்று தலாக் எனக் கூறினால் மூன்று தலாக் என்று சட்டம் இயற்றுவேன் என உமர் (ரலி) அவர்கள் கூறிவிட்டு அவ்வாறு சட்டம் இயற்றினார்கள்.

நூல் : முஸ்லிம் 3748, 3747, 3746

உமர் (ரலி) அவர்களின் இந்தச் சட்டம் நபிவழிக்கு மாற்றமானது என்பதை இந்த ஹதீஸ் தெளிவாகச் சொல்லி இருந்தும் உமர் (ரலி) அவர்கள் சொன்னால் சரியாகத் தான் இருக்கும் எனக் கூறி இதை எல்லா மத்ஹபுகளும் ஏற்றுக் கொண்டதற்கு உமர் (ரலி) அவர்கள் பேசுவது ஏறக்குறைய வஹீதான் என்ற நம்பிக்கையே காரணமாகும்.

ஆனால் இந்த ஹதீஸில் இவர்கள் வாதிடுவது போன்ற கருத்து எதுவும் இல்லை.

உமர் (ரலி) அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று கவனித்து அதற்கேற்ப அல்லாஹ் சட்டம் இயற்றினான் என்று இந்த ஹதீஸ் கூறவில்லை. உமர் என்ன சொல்கிறார் என்று கவனத்தில் கொள்ள வேண்டிய அவசியம் படைத்தவனுக்கு இல்லை.

நீங்கள் சுட்டிக்காட்டும் ஹதீஸ் இது தான்:

صحيح البخاري

402 – حَدَّثَنَا عَمْرُو بْنُ عَوْنٍ، قَالَ: حَدَّثَنَا هُشَيْمٌ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: قَالَ عُمَرُ بْنُ الخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ، " وَافَقْتُ رَبِّي فِي ثَلاَثٍ: فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ، لَوِ اتَّخَذْنَا مِنْ مَقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى، فَنَزَلَتْ: {وَاتَّخِذُوا مِنْ مَقَامِ إِبْرَاهِيمَ مُصَلًّى} [البقرة: 125] وَآيَةُ الحِجَابِ، قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، لَوْ أَمَرْتَ نِسَاءَكَ أَنْ يَحْتَجِبْنَ، فَإِنَّهُ يُكَلِّمُهُنَّ البَرُّ وَالفَاجِرُ، فَنَزَلَتْ آيَةُ الحِجَابِ، وَاجْتَمَعَ نِسَاءُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الغَيْرَةِ عَلَيْهِ، فَقُلْتُ لَهُنَّ: (عَسَى رَبُّهُ إِنْ طَلَّقَكُنَّ أَنْ يُبَدِّلَهُ أَزْوَاجًا خَيْرًا مِنْكُنَّ)، فَنَزَلَتْ هَذِهِ الآيَةُ "

உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மூன்று விஷயங்களில் என் இறைவனின் கருத்துக்கு ஏற்ப நானும் கருத்துக் கொண்டேன்:

1..அல்லாஹ்வின் தூதரே! மகாமு இப்ராஹீமை தொழுமிடமாக நாம் ஆக்கலாமே என்று கேட்டேன். அப்போது, "மகாமு இப்ராஹீமில் ஒரு பகுதியை தொழும் இடமாக்கிக் கொள்ளுங்கள்'' எனும் (2:125 ஆவது) இறைவசனம் அருளப்பெற்றது.

2. பர்தா (சட்டம்) குறித்த இறைவசனமும் இவ்வாறே இறங்கியது. "அல்லாஹ்வின் தூதரே! தங்களின் மனைவியரிடம் நல்லவரும் கெட்டவரும் உரையாடுகின்றனர். எனவே தங்கள் மனைவியரை ஹிஜாபைப் பேணுமாறு தாங்கள் பணிக்கலாமே! '' என்று சொன்னேன். அப்போது ஹிஜாப் குறித்த இறைவசனம் அருளப்பெற்றது.

3. (ஒரு முறை) நபி (ஸல்) அவர்களின் மனைவியர் அனைவரும் சேர்ந்து கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் வைராக்கியமாக நடந்துகொண்டபோது நான் அவர்களிடம், "இறைத்தூதர் உங்களை மணவிலக்குச் செய்துவிட்டால், உங்களைவிடச்  சிறந்த துணைவியரை அல்லாஹ் அவருக்கு வழங்கலாம்'' என்று சொன்னேன். அப்போது இந்த (66:5ஆவது) இறைவசனம் அருளப்பெற்றது.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)

நூல் : புகாரி 402

முஸ்லிமுடைய அறிவிப்பில் மேலும் ஒரு விஷயம் சொல்லப்படுகிறது.

صحيح مسلم ـ مشكول وموافق للمطبوع (7/ 115)

6359 – حَدَّثَنَا عُقْبَةُ بْنُ مُكْرَمٍ الْعَمِّىُّ حَدَّثَنَا سَعِيدُ بْنُ عَامِرٍ قَالَ جُوَيْرِيَةُ بْنُ أَسْمَاءَ أَخْبَرَنَا عَنْ نَافِعٍ عَنِ ابْنِ عُمَرَ قَالَ قَالَ عُمَرُ وَافَقْتُ رَبِّى فِى ثَلاَثٍ فِى مَقَامِ إِبْرَاهِيمَ وَفِى الْحِجَابِ وَفِى أُسَارَى بَدْرٍ.

உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மூன்று விஷயங்களில் என் இறைவனின் கருத்துக்கு ஏற்ப என் கருத்து அமைந்து விட்டது.

அவை: 1. மகாமு இப்ராஹீம் விஷயத்தில், 2. பர்தா விஷயத்தில், 3. பத்ருப் போரில் பிடிக்கப்பட்ட கைதிகள் விஷயத்தில்.

நூல் : முஸ்லிம் 6359

இதில் பத்ருப்போரில் கைது செய்யப்பட்டவர்கள் விஷயம் மூன்றாவது விஷயமாக சொல்லப்பட்டுள்ளது.

صحيح البخاري

1269 – حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ، قَالَ: حَدَّثَنِي نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ أُبَيٍّ لَمَّا تُوُفِّيَ، جَاءَ ابْنُهُ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، أَعْطِنِي قَمِيصَكَ أُكَفِّنْهُ فِيهِ، وَصَلِّ عَلَيْهِ، وَاسْتَغْفِرْ لَهُ، فَأَعْطَاهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَمِيصَهُ، فَقَالَ: «آذِنِّي أُصَلِّي عَلَيْهِ»، فَآذَنَهُ، فَلَمَّا أَرَادَ أَنْ يُصَلِّيَ عَلَيْهِ جَذَبَهُ عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ، فَقَالَ: أَلَيْسَ اللَّهُ نَهَاكَ أَنْ تُصَلِّيَ عَلَى المُنَافِقِينَ؟ فَقَالَ: " أَنَا بَيْنَ خِيَرَتَيْنِ، قَالَ: {اسْتَغْفِرْ لَهُمْ أَوْ لاَ تَسْتَغْفِرْ لَهُمْ إِنْ تَسْتَغْفِرْ لَهُمْ سَبْعِينَ مَرَّةً، فَلَنْ يَغْفِرَ اللَّهُ لَهُمْ} [التوبة: 80] " فَصَلَّى عَلَيْهِ، فَنَزَلَتْ: {وَلاَ تُصَلِّ عَلَى أَحَدٍ مِنْهُمْ مَاتَ أَبَدًا، وَلاَ تَقُمْ عَلَى قَبْرِهِ} [التوبة: 84]

முனாபிக்குகளின் தலைவன் அப்துல்லாஹ் பின் உபை மரணித்த போது அவருக்கு ஜனாஸா தொழுகை நடத்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முயன்ற போது அதை உமர் (ரலி) அவர்கள் ஆட்சேபித்தார்கள். அதையும் மீறி நபிகள் நாயகம் ஸல் அவர்கள் அவனுக்கு ஜனாஸா தொழுகை நடத்தினார்கள். இனிமேல் இவ்வாறு செய்யக் கூடாது என்று அதைத் தடை செய்து அல்லாஹ் வசனத்தை அருளினான்.

பார்க்க : புகாரி 1269, 1366, 4670, 4671, 4672, 5796

இது தான் நீங்கள் குறிப்பிடும் அந்தச் செய்தி. இந்தச் செய்தியில் உமர் (ரலி) அவர்கள் பயன்படுத்திய வாசகம் முதலில் கவனிக்கத்தக்கது. வாஃபக்து ரப்பீ என்று அவர் கூறுகிறார். என் இறைவனின் கருத்துக்கு  ஏற்ப என் கருத்து அமைந்துவிட்டது என்பது இதன் பொருள்.

என்  கருத்துக்கு  ஏற்ப  வஹீ  வந்தது  எனக்  கூறாமல்  இறைவனின் கருத்துக்கு  ஏற்ப என்  கருத்தும்  அமைந்து  விட்டது  தற்செயலானது  என்று  கூறுகிறார்.

இறைவன்  முன்னரே  இப்படித்தான்  முடிவு  செய்து  வைத்திருந்தான்.  நான் சொன்னதைப் பார்த்து  அதற்கேற்ப  வஹீ  அருளவில்லை  என்ற  பொருள்பட இவ்வாசகத்தை  அவர்  பயன்படுத்தியுள்ளார்.

குர்ஆனை  அறியாத  ஒருவர்  குர்ஆனில்  இப்படி  ஒரு  வசனம்  இருந்தால்  நன்றாக இருக்குமே  என  நினைக்கிறார் . பின்னர்  அவர் குர்ஆனை  வாசிக்கும்  போது  அவர் எண்ணியது  போல்  ஒரு  வசனம்  இருப்பதைக்  காண்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.

இதை  நாம்  எப்படிப்  புரிந்து  கொள்வோம்?  இவர்  எண்ணியதைப்  பார்த்து  விட்டு அல்லாஹ்  அந்த  வசனத்தை  அருளினான்  என்று  சொல்வோமா?  அல்லது  இப்படி ஒரு  வசனம்  அருளப்படும்  என்பதை  ஞானக்  கண்ணால்  இவர்  அறிந்து  கொண்டு இப்படி நினத்தார்  என்று கூறுவோமா?

இரண்டுக்கும்  எந்தச்  சம்மந்தமும் இல்லை. தற்செயலாக இது அமைந்து விட்டது என்று தான் கூறுவோம்.

இது போல் தான் உமர் (ரலி) அவர்கள் கூற்றையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

மனிதர்கள் விஷயத்தில் இது போன்ற நிலை ஏற்படும் போது சரியாகப் புரிந்து கொள்ளும் நாம் இறைவன் விஷயத்தில் மட்டும் ஏறுக்கு மாறாக புரிந்து கொள்கிறோம்.

ஒரு மனிதர் ஒரு கருத்தை நம்மிடம் சொல்லும் போது இதைத் தான் நானும் நினைத்தேன் என்று பல்வேறு சந்தர்ப்பங்களில் நாம் கூறுகிறோம். அந்த மனிதர் நமது கருத்தைத் தான் சொல்லப் போகிறார் என்பது நமக்குத் தெரியாது. நாமும் அவரது கருத்தில் தான் இருக்கிறோம் என்பது அவருக்குத் தெரியாது. இரண்டும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு இல்லாமல் தற்செயலாக ஒத்துப் போன விஷயங்கள். இது போல் தான் உமர் (ரலி) அவர்களின் கூற்றையும் புரிந்து கொள்ள வேண்டும்.

அடுத்து கவனிக்க வேண்டிய இன்னொரு செய்தியும் இதில் உள்ளது. உமர் (ரலி) அவர்கள் தற்செயலாக இறைவன் கருத்துடன் ஒத்துப் போன விஷயங்கள் மொத்தமே ஐந்து தான். இவற்றைத் தவிர வேறு விஷயங்கள் இல்லை என்பது தான் அந்தச் செய்தி. இந்த ஐந்தைத் தவிர மற்ற விஷயங்களில் வஹீ வருவதற்கு முன் அதற்கேற்ப இவர் கருத்துக் கூறியதில்லை எனும் போது அவர் சொல்வதெல்லாம் வஹீ தான் என்பது போல் வியாக்கியானம் கொடுப்பது பகிரங்க வழிகேடு என்பதில் சந்தேகம் இல்லை.

Leave a Reply