கடனை எழுதிக் கொள்ளுதல்

கடனை எழுதிக் கொள்ளுதல்

கொடுக்கும் கடன்களை எழுதிக் கொள்ள வேண்டும்; இதில் தயவு தாட்சண்யம் பார்க்கக் கூடாது என்று இஸ்லாம் வழிகாட்டுகிறது.

வெளித்தோற்றத்தை நம்பி கடன் கொடுத்து பலர் ஏமாந்து போகின்றனர்.

ஒரு மனிதன் நல்லவனா? கெட்டவனா என்பதை இன்னொரு மனிதனால் அறிய முடியாது என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாகும். நம்மிடம் நல்லவர் போல் ஒருவர் பழகி விட்டால் அதனால் அவரை நம்பி எந்தப் பிடிமானமும் இல்லாமல் கடன் கொடுக்கக் கூடாது. அவர் உடன் பிறந்த சகோதரர் ஆனாலும், உற்ற நண்பரே ஆனாலும் எழுத்துப்பூர்வமான ஆதாரம் அல்லது அடைமானம் இல்லாமல் கடன் கொடுக்கக் கூடாது.

ஒருவர் எவ்வளவுதான் நல்லவர் என்று நமக்குத் தோற்றமளித்தாலும் அவர் நல்லவராக இருப்பதற்கு வாய்ப்பு உள்ளது போல் அவ்வாறு இல்லாமல் இருப்பதற்கும் வாய்ப்பு உள்ளது.

நம்பிக்கை கொண்டோரே! குறிப்பிட்ட காலக்கெடு விதித்து ஒருவருக்கொருவர் கடன் கொடுத்தால் அதை எழுதிக் கொள்ளுங்கள்! எழுதுபவர் உங்களுக்கிடையே நேர்மையான முறையில் எழுதட்டும். அல்லாஹ் தமக்குக் கற்றுக் கொடுத்தது போல் எழுதிட எழுத்தர் மறுக்காது எழுதட்டும். கடன் வாங்கியவர், எழுதுவதற்குரிய வாசகங்களைச் சொல்லட்டும்! தனது இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும். அதில் எதையும் குறைத்து விடக் கூடாது. கடன் வாங்கியவர் விபரமறியாதவராகவோ, பலவீனராகவோ, எழுதுவதற்கு ஏற்பச் சொல்ல இயலாதவராகவோ இருந்தால் அவரது பொறுப்பாளர் நேர்மையாகச் சொல்லட்டும். உங்கள் ஆண்களில் இருவரை சாட்சிகளாக்கிக் கொள்ளுங்கள்! இரு ஆண்கள் இல்லாவிட்டால் சாட்சிகள் என நீங்கள் திருப்தியடையும் ஓர் ஆணையும், இரண்டு பெண்களையும் (ஆக்கிக் கொள்ளுங்கள்!) அவ்விரு பெண்களில் ஒருத்தி மறந்து விட்டால் மற்றொருத்தி நினைவுபடுத்துவாள். அழைக்கப்படும்போது சாட்சிகள் மறுக்கக் கூடாது. சிறிதோ, பெரிதோ தவணையைக் குறிப்பிட்டு எழுதிக் கொள்வதை அலட்சியம் செய்யாதீர்கள்! இதுவே அல்லாஹ்விடம் நேர்மையானது; சாட்சியத்தை நிரூபிக்கத்தக்கது; ஒருவருக்கொருவர் சந்தேகம் கொள்ளாமல் இருப்பதற்கு ஏற்றது. உங்களுக்கிடையே உடனுக்குடன் நடைபெறும் வியாபாரமாக இருந்தால் தவிர, (கடனில்லாத) வியாபாரத்தை எழுதிக் கொள்ளாமல் இருப்பது உங்களுக்குக் குற்றமாகாது. ஒப்பந்தம் செய்யும்போதும் சாட்சிகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்! எழுத்தருக்கோ, சாட்சிக்கோ எந்த இடையூறும் அளிக்கப்படக் கூடாது. அவ்வாறு செய்தால் அது உங்கள் மீது குற்றம். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் உங்களுக்குக் கற்றுத் தருவான். அல்லாஹ் அனைத்துப் பொருட்களையும் அறிந்தவன்.

திருக்குர்ஆன் 2:282

வாங்கிய கடனை எழுதி வாங்கும்போது என் மீது உனக்கு நம்பிக்கை இல்லையா? நமக்குள் எழுத்துமானம் எதற்கு என்றெல்லாம் சொல்ல இஸ்லாத்தில் இடமில்லை. இத்தகைய சமாதானங்களை நம்மிடம் ஒருவர் சொன்னால் அதை நாம் ஏற்க வேண்டியதில்லை. எழுதிக் கேட்டால் அவர் புண்படுவார் என்று நாம் கருத வேண்டியதில்லை. அவர் புண்படாத வகையில் இதை நாம் எதிர்கொள்ள முடியும்.

உங்கள் மீது எனக்கு நம்பிக்கை இருந்தாலும் அல்லாஹ் எழுதிக் கொள்ளும்படி கட்டளை இடுவதால் நாம் எழுதிக் கொள்வது அவசியம் என்று நாம் கூறி விட்டால் அவர் புண்படும் நிலை ஏற்படாது.

ஒவ்வொரு காலத்திலும் எவ்வாறு எழுதிக் கொள்வது பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறதோ அவ்வாறு எழுதிக் கொள்ள வேண்டும்.

சாதாரண காகிதத்தில் எழுதிக் கொள்வது ஒரு காலத்தில் போதுமானதாக இருந்தது. ஆனால் இன்று கடன் தொகைக்கு ஏற்ப ஸ்டாம்ப் பேப்பரில் அல்லது ஸ்டாம்ப் ஒட்டி எழுதிக் கொள்ள வேண்டும். அப்போதுதான் அந்தக் கடனைச் சட்டப்படி திரும்பப்பெற இயலும். கடன் வாங்கியவர் அடைமானமாக பொருளைக் கொடுத்து நம்மிடம் கடன் கேட்டால் எழுதி வாங்குவதுதான் நல்லது என்று நமக்குத் தோன்றினால் எழுதிக் கொள்ளலாம். தேவை இல்லை என்று கருதினால் எழுதாமலும் இருக்கலாம்.

நீங்கள் பயணத்தில் இருக்கும்போது எழுத்தர் கிடைக்காவிட்டால் அடைமானத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும். உங்களில் ஒருவர் மற்றவரை நம்பினால் நம்பப்பட்டவர் தனது நாணயத்தை நிறைவேற்றட்டும். தனது இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளட்டும்! சாட்சியத்தை மறைத்து விடாதீர்கள்! அதை மறைப்பவரின் உள்ளம் குற்றம் புரிந்தது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிந்தவன்.

திருக்குர்ஆன் 2:283

மேற்கண்ட வசனங்களில் இருந்து இதை அறிந்து கொள்ளலாம்.

திரும்பப் பெறும் எண்ணத்தில் கொடுக்கும் கடனைத்தான் எழுதி வாங்க வேண்டும். வந்தால் வாங்கிக் கொள்வோம். வராவிட்டால் பரவாயில்லை என்ற எண்ணத்தில் கடன் கொடுத்தால் அப்போது எழுதி வாங்கும் அவசியம் இல்லை.

அதுபோல் அற்பமான பொருள்கள், அற்பமான தொகைகள் என்றால் அதை எழுதிக் கொள்ள வேண்டியதில்லை. ஒரு பத்து ரூபாய் ஒருவர் கடன் கேட்டால் அதை எழுத வேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் பத்து ரூபாயை அவர் தராவிட்டால் அதற்காக நாம் பஞ்சாயத்து வைக்க மாட்டோம். நீதிமன்றத்தை அணுக மாட்டோம்.

12.01.2017. 1:41 AM

Leave a Reply