குர்ஆனை முத்தமிடலாமா?

குர்ஆனை முத்தமிடலாமா?

குர்ஆன் ஓதிய பிறகு குர்ஆனை முகத்தில் வைத்து முத்தமிடுவது கூடுமா?

அனீஸ்

குர்ஆனுடைய புனிதம் பற்றி சரியான தெளிவு இல்லாத காரணத்தால் இவ்வாறு பலர் செய்கின்றனர். அல்லாஹ்வின் வார்த்தை என்பதால் தான் குர்ஆன் மகத்துவமடைகின்றது. இந்தக் குர்ஆன் அல்லாஹ்விடமிருந்து நபியவர்களுக்கு எழுத்து வடிவில் புத்தகமாக வரவில்லை. மாறாக ஓசை வடிவில் அருளப்பட்டது.

குர்ஆனை ஓசை வடிவில் கொண்டு வருவதற்கு எழுத்து உதவியாக இருக்கின்ற காரணத்தால் நமது வசதிக்காக அதை எழுத்து வடிவில் ஆக்கிக் கொண்டோம். மனிதர்களால் எழுதப்பட்ட காகிதங்களுக்கு எந்தப் புனிதமும் இல்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாது என்பதால் அவர்கள் குர்ஆனைப் பார்த்து ஓதி இருக்க முடியாது, அதனால் அவர்கள் குர்ஆன் எழுதப்பட்ட ஏடுகளை முத்தமிட்டிருக்கவும் முடியாது.

ஆனாலும் அவர்கள் காலத்தில் எழுதப்படிக்கத் தெரிந்தவர்களும், குர்ஆனை எழுதி வைத்துக் கொண்டவர்களும் இருந்தனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லச் சொல்ல எழுதியவர்களும் இருந்தனர். குர்ஆன் எழுதப்பட்ட ஏட்டை முத்தமிடுமாறு இவர்களில் யாருக்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எந்தக் கட்டளையும் பிறப்பிக்கவில்லை. அல்லது தமது முன்னிலையில் மற்றவர்கள் முத்தமிட்டு அவர்கள் அங்கீகரிக்கவும் இல்லை.

குர்ஆனை மதிக்கும் வழிமுறைகளில் இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிடாததால் குர்ஆனை முத்தமிடுவது அதிகப் பிரசங்கித்தனமாகும். நபிக்குத் தெரியாதது எனக்குத் தெரிந்து விட்டது என்று காட்டி நபியை அவமதிப்பதாகும்.

صحيح مسلم 
4590 – وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ وَعَبْدُ بْنُ حُمَيْدٍ جَمِيعًا عَنْ أَبِى عَامِرٍ قَالَ عَبْدٌ حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ عَمْرٍو حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ جَعْفَرٍ الزُّهْرِىُّ عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ قَالَ سَأَلْتُ الْقَاسِمَ بْنَ مُحَمَّدٍ عَنْ رَجُلٍ لَهُ ثَلاَثَةُ مَسَاكِنَ فَأَوْصَى بِثُلُثِ كُلِّ مَسْكَنٍ مِنْهَا قَالَ يُجْمَعُ ذَلِكَ كُلُّهُ فِى مَسْكَنٍ وَاحِدٍ ثُمَّ قَالَ أَخْبَرَتْنِى عَائِشَةُ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ « مَنْ عَمِلَ عَمَلاً لَيْسَ عَلَيْهِ أَمْرُنَا فَهُوَ رَدٌّ ».

எனது கட்டளையில்லாமல் யாரேனும் ஒரு அமலைச் செய்தால் அது நிராகரிக்கப்படும் என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் எச்சரிக்கை.

நூல் : முஸ்லிம், 3442

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிடாத ஒன்றை நபித்தோழர் ஒருவர் செய்திருந்தால் அல்லது கட்டளையிட்டிருந்தால் அதைப் பின்பற்றக் கூடாது என்பதை மேற்கண்ட நபிமொழி மிகத்தெளிவாக அறிவிக்கிறது.

صحيح البخاري
2697 – حَدَّثَنَا يَعْقُوبُ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ أَبِيهِ، عَنِ القَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ أَحْدَثَ فِي أَمْرِنَا هَذَا مَا لَيْسَ فِيهِ، فَهُوَ رَدٌّ»

இந்த மார்க்கத்தில் இல்லாத ஒன்றை யாரேனும் உருவாக்கினால் அது நிராகரிக்கப்படும் என்பதும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் எச்சரிக்கை.

நூல் : புகாரி, 2697

صحيح البخاري
7277 – حَدَّثَنَا آدَمُ بْنُ أَبِي إِيَاسٍ، حَدَّثَنَا شُعْبَةُ، أَخْبَرَنَا عَمْرُو بْنُ مُرَّةَ، سَمِعْتُ مُرَّةَ الهَمْدَانِيَّ، يَقُولُ: قَالَ عَبْدُ اللَّهِ: «إِنَّ أَحْسَنَ الحَدِيثِ كِتَابُ اللَّهِ، وَأَحْسَنَ الهَدْيِ هَدْيُ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَشَرَّ الأُمُورِ مُحْدَثَاتُهَا، وَإِنَّ مَا تُوعَدُونَ لَآتٍ، وَمَا أَنْتُمْ بِمُعْجِزِينَ»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உரை நிகழ்த்தும் போது “செய்திகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம்; வழிகளில் சிறந்தது முஹம்மது காட்டிய வழி; (மார்க்கத்தின் பெயரால்) புதிதாக உருவாக்கப்பட்டவை காரியங்களில் மிகவும் கெட்டவை; மார்க்கத்தின் பெயரால் புதிதாக உருவாக்கப்பட்டவை (பித்அத்கள்) அனைத்தும் வழிகேடு என்று குறிப்பிடுவது வழக்கம்.

நூல் : முஸ்லிம், 1435

குர்ஆன் இடும் கட்டளைகளுக்குக் கட்டுப்படுவதும், அது தடை செய்த காரியங்களை விட்டு விலகுவதும் தான் நாம் குர்ஆனுக்குக் கொடுக்கும் மரியாதையாகும். இவ்வாறு செய்தாலே நாம் குர்ஆனுடைய புனிதத்தைக் காத்தவர்களாகலாம்.  எனவே குர்ஆன் பிரதிகளை முத்தமிடுவது பித்அத் ஆகும்.

Leave a Reply