சபித்து குனூத் ஓதுவது தடுக்கப்பட்ட செயலா?

சபித்து குனூத் ஓதுவது தடுக்கப்பட்ட செயலா?

ஜ்ரு தொழுகையில் குனூத் ஓத ஆதாரம் என்ன என்று கேட்டால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எதிரிகளைச் சபித்து குனூத் ஓதியதாகவும், பின்னர் சபிக்கக் கூடாது என்று தடை வந்து விட்டதால் சபிக்காமல் குனூத் ஓதியதாகவும் கூறி அதையே சில ஆலிம்கள் ஆதாரமாகக் காட்டுகின்றனர். இது சரியா?

ஐனுன் ரிஃபாயா

பதில் :

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எதிரிகளைச் சாபமிட்டு குனூத் ஓதினார்கள். இதன் பிறகு இறைவன் இதைத் தடுத்து விட்டான் என்ற கருத்தில் ஒரு ஹதீஸ் உள்ளது.

ஆனால் அல்லாஹ் இதை மாற்றிவிட்டு ஃபஜர் தொழுகையில் பிரார்த்தனை குனூத் ஓதச் சொன்னதாக எந்த ஆதாரப்பூர்வமான செய்தியும் இல்லை. உங்களுக்குத் தவறான தகவலைக் கொடுத்துள்ளனர்.

இன்றைக்கு நடைமுறையில் உள்ள ஃபஜர் தொழுகையில் குனூத் ஓதுவது பித்அத் ஆகும். இது தொடர்பாக நமது இணையதளத்தில் குனூத் என்ற தலைப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எதிரிகளைச் சபித்து குனூத் ஓதியதை இறைவன் தடை செய்தான் எனக் கூறும் செய்தியின் சரியான விளக்கத்தை அறிந்து கொள்வோம்.

صحيح البخاري

1002 – حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الوَاحِدِ بْنُ زِيَادٍ، قَالَ: حَدَّثَنَا عَاصِمٌ، قَالَ: سَأَلْتُ أَنَسَ بْنَ مَالِكٍ عَنِ القُنُوتِ، فَقَالَ: قَدْ كَانَ القُنُوتُ قُلْتُ: قَبْلَ الرُّكُوعِ أَوْ بَعْدَهُ؟ قَالَ: قَبْلَهُ، قَالَ: فَإِنَّ فُلاَنًا أَخْبَرَنِي عَنْكَ أَنَّكَ قُلْتَ بَعْدَ الرُّكُوعِ، فَقَالَ: «كَذَبَ إِنَّمَا قَنَتَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعْدَ الرُّكُوعِ شَهْرًا، أُرَاهُ كَانَ بَعَثَ قَوْمًا يُقَالُ لَهُمْ القُرَّاءُ، زُهَاءَ سَبْعِينَ رَجُلًا، إِلَى قَوْمٍ مِنَ المُشْرِكِينَ دُونَ أُولَئِكَ، وَكَانَ بَيْنَهُمْ وَبَيْنَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَهْدٌ، فَقَنَتَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ شَهْرًا يَدْعُو عَلَيْهِمْ»

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ருகூவுக்குப் பிறகு ஒரு மாதம் குனூத் ஓதினார்கள். குர்ஆனை மனனம் செய்த சுமார் எழுபது நபர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இணைவைக்கும் ஒரு கூட்டத்தாரிடம் அனுப்பி வைத்தார்கள். இவர்கள் அந்த இணைவைப்பவர்களை விடக் குறைந்த எண்ணிக்கையினராக இருந்தனர்.  நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும், அந்த இணை வைப்பவர்களுக்கும் இடையே ஒரு உடன்படிக்கையும் இருந்தது.  (அந்த முஷ்ரிக்கீன்கள் எழுபது நபர்களையும் கொன்று விட்டனர்) அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முஷ்ரிக்கீன்களுக்கு எதிராக ஒரு மாதம் குனூத் ஓதினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)

நூல் : புகாரி 1002

இந்த ஹதீஸின் அடிப்படையில் முஸ்லிம் சமுதாயத்திற்குச் சோதனை ஏற்படும் காலத்தில் எதிரிகளுக்கு எதிராகப் பிரார்த்தித்து குனூத் ஓதலாம் என்று விளங்குகின்றது.

திருக்குர்ஆனின் 3:128 வது வசனம் அருளப்பட்டவுடன் இவ்வாறு குனூத் ஓதுவது தடை செய்யப்பட்டதாக சில ஹதீஸ்கள் உள்ளதால் அதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

صحيح البخاري

7346 – حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ سَالِمٍ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ فِي صَلاَةِ الفَجْرِ وَرَفَعَ رَأْسَهُ مِنَ الرُّكُوعِ قَالَ: «اللَّهُمَّ رَبَّنَا، وَلَكَ الحَمْدُ فِي الأَخِيرَةِ»، ثُمَّ قَالَ: «اللَّهُمَّ العَنْ فُلاَنًا وَفُلاَنًا»، فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ: {لَيْسَ لَكَ مِنَ الأَمْرِ شَيْءٌ أَوْ يَتُوبَ عَلَيْهِمْ أَوْ يُعَذِّبَهُمْ فَإِنَّهُمْ ظَالِمُونَ} [آل عمران: 128]

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஃபஜ்ருத் தொழுகையில் கடைசி ரக்அத்தின் போது தமது தலையை உயர்த்தி, "அல்லாஹும்ம ரப்பனா லக்கல் ஹம்து'' என்று சொல்லி விட்டுப் பிறகு, "இறைவா! இன்னாரையும், இன்னாரையும் உன் கருணையிலிருந்து அப்புறப்படுத்துவாயாக!'' என்று பிரார்த்தித்தார்கள்.  உடனே "(முஹம்மதே!) அதிகாரத்தில் உமக்கு ஏதுமில்லை. அவன் அவர்களை மன்னிக்கலாம். அல்லது அவர்களைத் தண்டிக்கலாம். ஏனெனில் அவர்கள் அநீதி இழைத்தவர்கள்'' என்ற (3:128) வசனத்தை அல்லாஹ் அருளினான்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)

நூல் : புகாரி 7346

இந்த ஹதீஸில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குனூத் ஓதியதை 3:128 வசனத்தை அருளி அல்லாஹ் தடை செய்து விட்டதாகக் கூறப்படுகின்றது. எனவே எவருக்கும் எதிராகப் பிரார்த்தனை செய்து குனூத் ஓதுவது கூடாது என்று சிலர் வாதிக்கின்றனர்.

இதே கருத்தில் பல ஹதீஸ்கள் உள்ளன. இந்த ஹதீஸ்களின் அறிவிப்பாளர் தொடரில் எந்தக் குறைபாடும் இல்லை. எனினும் இந்த ஹதீஸ்களுக்கு மாற்றமாக உஹதுப் போரின் போது தான் 3:128 வசனம் இறங்கியது என்ற கருத்திலும் ஹதீஸ்கள் உள்ளன. அவையும் ஆதாரப்பூர்வமானவையாக இருப்பதால் அது குறித்தும் நாம் ஆய்வு செய்ய வேண்டும்.

صحيح مسلم ـ مشكول 
4746 – حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ بْنِ قَعْنَبٍ حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ عَنْ ثَابِتٍ عَنْ أَنَسٍ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- كُسِرَتْ رَبَاعِيَتُهُ يَوْمَ أُحُدٍ وَشُجَّ فِى رَأْسِهِ فَجَعَلَ يَسْلُتُ الدَّمَ عَنْهُ وَيَقُولُ « كَيْفَ يُفْلِحُ قَوْمٌ شَجُّوا نَبِيَّهُمْ وَكَسَرُوا رَبَاعِيَتَهُ وَهُوَ يَدْعُوهُمْ إِلَى اللَّهِ ». فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ (لَيْسَ لَكَ مِنَ الأَمْرِ شَىْءٌ)

உஹதுப் போரில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முன்பற்கள் உடைக்கப்பட்டன. அவர்களுடைய தலையில் காயம் ஏற்பட்டது.  அவர்கள் இரத்தத்தைத் துடைத்துக் கொண்டு, "தங்களுடைய நபிக்குக் காயத்தை ஏற்படுத்தி, தங்களது நபியின் முன்பற்களை உடைத்த சமுதாயம் எப்படி வெற்றி பெறும்? அவர், அவர்களை அல்லாஹ்வின் பாதையில் அழைக்கின்றார்'' என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ், "(முஹம்மதே!) அதிகாரத்தில் உமக்கு ஏதுமில்லை. அவன் அவர்களை மன்னிக்கலாம். அல்லது அவர்களைத் தண்டிக்கலாம். ஏனெனில் அவர்கள் அநீதி இழைத்தவர்கள்'' என்ற (3:128) வசனத்தை அருளினான்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)

நூல் : முஸ்லிம் 3346

3:128 வசனம் அருளப்பட்டது குறித்து இப்படி இரண்டு விதமான கருத்துக்கள் உள்ளன.

இரண்டு சந்தர்ப்பத்திலுமே இந்த வசனம் அருளப்பட்டது என்று சிலர் கூறுகின்றனர். இதை ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனெனில் இரண்டு சந்தர்ப்பங்களிலும் அருளப்பட்டிருந்தால் குர்ஆனில் இரண்டு இடங்களில் அந்த வசனம் இருக்க வேண்டும். பல தடவை அருளப்பட்ட ஒரே வாசகம் கொண்ட வசனங்கள் பல தடவை குர்ஆனில் இடம் பெற்றுள்ளன. ஆனால் இந்த வசனம் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே உள்ளது.

இந்த ஒரு வசனம் அருளப்பட்டதற்கு இரு வேறு காரணங்கள் கூறப்படுவதால் இரண்டில் ஏதாவது ஒன்று தான் சரியாக இருக்க முடியும்.

ஒன்று, நபித்தோழர்களைக் கொன்ற கூட்டத்தினருக்கு எதிராக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குனூத் ஓதிய போது இவ்வசனம் இறங்கியிருக்க வேண்டும்.

அல்லது உஹதுப் போரில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், முஷ்ரிக்குகளைச் சபித்த போது இவ்வசனம் இறங்கியிருக்க வேண்டும்.

இதில் எந்தச் சந்தர்ப்பத்தில் இவ்வசனம் இறங்கியது என்பதை நாம் ஆய்வு செய்யும் போது, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குனூத் ஓதியதைக் கண்டித்து இவ்வசனம் அருளப்பட்டிருக்க முடியாது என்பதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன.

குர்ஆனை மனனம் செய்த 70 நபித்தோழர்களை, உடன்படிக்கைக்கு மாற்றமாகக் கொலை செய்த கூட்டத்திற்கு எதிராக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தார்கள்.  கண்டித்து வசனம் அருளும் அளவுக்கு இதில் வரம்பு மீறல் எதுவும் இல்லை. அநீதி இழைத்த ஒரு கூட்டத்திற்கு எதிராகப் பிரார்த்தனை செய்வது அல்லாஹ் அங்கீகரித்த ஒரு செயல் தான். இதற்கு குர்ஆனிலேயே சான்றுகள் உள்ளன.

"என் இறைவா! பூமியில் வசிக்கும் (உன்னை) மறுப்போரில் ஒருவரையும் விட்டு வைக்காதே!'' என்று நூஹ் கூறினார்.

திருக்குர்ஆன் 71:26

இந்த வசனத்தில் இறை மறுப்பாளர்களை அழித்து விடுமாறு நூஹ் (அலை) அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்கின்றார்கள். அதை அல்லாஹ்வும் ஏற்றுக் கொண்டு பெருவெள்ளத்தின் மூலம் அம்மக்களை அழித்தான். அநியாயக்காரர்களுக்கு எதிராகப் பிரார்த்தனை செய்வது நபிமார்களின் நடைமுறைக்கு மாற்றமானதல்ல என்பதை இதிலிருந்து அறியலாம்.

صحيح البخاري

1496 – حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا زَكَرِيَّاءُ بْنُ إِسْحَاقَ، عَنْ يَحْيَى بْنِ عَبْدِ اللَّهِ بْنِ صَيْفِيٍّ، عَنْ أَبِي مَعْبَدٍ، مَوْلَى ابْنِ عَبَّاسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لِمُعَاذِ بْنِ جَبَلٍ حِينَ بَعَثَهُ إِلَى اليَمَنِ: «إِنَّكَ سَتَأْتِي قَوْمًا أَهْلَ كِتَابٍ، فَإِذَا جِئْتَهُمْ، فَادْعُهُمْ إِلَى أَنْ يَشْهَدُوا أَنْ لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، فَإِنْ هُمْ أَطَاعُوا لَكَ بِذَلِكَ [ص:129]، فَأَخْبِرْهُمْ أَنَّ اللَّهَ قَدْ فَرَضَ عَلَيْهِمْ خَمْسَ صَلَوَاتٍ فِي كُلِّ يَوْمٍ وَلَيْلَةٍ، فَإِنْ هُمْ أَطَاعُوا لَكَ بِذَلِكَ، فَأَخْبِرْهُمْ أَنَّ اللَّهَ قَدْ فَرَضَ عَلَيْهِمْ صَدَقَةً تُؤْخَذُ مِنْ أَغْنِيَائِهِمْ فَتُرَدُّ عَلَى فُقَرَائِهِمْ، فَإِنْ هُمْ أَطَاعُوا لَكَ بِذَلِكَ، فَإِيَّاكَ وَكَرَائِمَ أَمْوَالِهِمْ وَاتَّقِ دَعْوَةَ المَظْلُومِ، فَإِنَّهُ لَيْسَ بَيْنَهُ وَبَيْنَ اللَّهِ حِجَابٌ»

அநீதி இழைக்கப்பட்டவனின் பிரார்த்தனையை அஞ்சிக் கொள், அவனுக்கும் ,அல்லாஹ்வுக்கும் இடையில் எந்தத் திரையும் இல்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

நூல் : புகாரி 1496

எனவே பாதிக்கப்பட்டவர்கள் தங்களுக்கு அநீதி இழைத்தவர்களுக்கு எதிராக இறைவனிடம் பிரார்த்தனை செய்வதற்கு எந்தத் தடையும் இல்லை என்பதை இதில் இருந்து விளங்க முடிகின்றது.

குர்ஆனை மனனம் செய்தவர்கள் மிகவும் குறைவாக இருந்த அந்தக் காலத்தில் எழுபதுக்கும் மேற்பட்ட காரிகள் எனும் அறிஞர்களைப் படுகொலை செய்தது மிகப் பெரும் பாதிப்பை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஏற்படுத்தியது.

இந்நிலையில்தான் அந்தக் கூட்டத்தினருக்கு எதிராக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள்.  இது அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு செயல் தான்.  இதைக் கண்டித்து அல்லாஹ் வசனம் அருளினான் என்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இல்லை.

"அதிகாரத்தில் உமக்கு எந்தப் பங்கும் இல்லை'' என்று 3:128 வசனத்தில் அல்லாஹ்கூறுகின்றான். அல்லாஹ்வின் அதிகாரத்தில் தலையிடும் எந்தச் செயலும் இந்தச் சம்பவத்தில் நடக்கவில்லை. அல்லாஹ்விடம் பிரார்த்திப்பது அவனது அதிகாரத்தில் தலையிடுவதாக ஒரு போதும் ஆகாது.  இன்னும் சொல்வதென்றால் இப்படிப் பிரார்த்திப்பது அல்லாஹ்வின் அதிகாரத்தை, அவனது வல்லமையை நிலை நிறுத்துவதாகவே அமைந்துள்ளது.

எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முஷ்ரிக்குகளுக்கு எதிராக குனூத் ஓதிய போது இந்த வசனம் அருளப்பட்டிருக்க முடியாது.  மாறாக உஹதுப் போரின் போது இந்த வசனம் அருளப்பட்டிருக்க நியாயமான காரணங்கள் உள்ளன.

உஹதுப் போரில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காயப்படுத்தப்பட்ட போது, நபியின் முகத்தில் காயம் ஏற்படுத்திய இந்தச் சமுதாயம் எப்படி வெற்றி பெறும்? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள்.

இந்த இடத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கவில்லை. தாம் ஒரு நபியாகவும், நேர்வழிக்கு மக்களை அழைத்துக் கொண்டும் இருப்பதால் தம்மைக் காயப்படுத்தியவர்கள் வெற்றி பெற மாட்டார்கள் என்று அவர்களாகவே முடிவு செய்வது போல் இந்த வார்த்தைகள் அமைந்துள்ளன.

தாங்க முடியாத துன்பம் ஏற்படும்போது மனிதர்கள் இது போன்ற வார்த்தைகளைக் கூறி விடுவதுண்டு. பாதிக்கப்பட்டவனின் வாயில் இத்தகைய வார்த்தைகள் வெளிவருவதை அல்லாஹ்வும் பொருட்படுத்துவது கிடையாது என்பதை திருக்குர்ஆன் 4:148 வசனத்திலிருந்து அறியலாம்.

ஆனால் இறைவனின் தூதர் இவ்வாறு கூறினால், ஒருவரை வெற்றி பெற வைக்கவும், தோல்வியுறச் செய்யவும் அந்தத் தூதருக்கு அதிகாரம் இருக்கிறதோ என்ற கருத்தை அது விதைத்து விடும். எனவே தான் "எனக்கு இரத்தச் சாயம் பூசியவர்கள் எவ்வாறு வெற்றி பெறுவார்கள்?'' என்று வேதனை தாளாமல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதை அல்லாஹ் கண்டிக்கிறான்.

உம்மைத் தாக்கியவர்களுக்குக் கூட நான் நினைத்தால் வெற்றியளிப்பேன்; அல்லது அவர்களை மன்னித்தும் விடுவேன். இது எனது தனிப்பட்ட அதிகாரத்தில் உள்ள விஷயம். இதில் தலையிட ஒரு நபிக்குக் கூட உரிமையில்லை என்ற தோரணையில் தான் இவ்வாறு இறைவன் கூறுகிறான். இறைவனுடைய அதிகாரத்தில் தமக்குப் பங்கு இருக்கிறது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நினைக்க மாட்டார்கள்; என்றாலும் இது போன்ற வார்த்தைகள் கூட இறைவனுக்குக் கோபம் ஏற்படுத்துகிறது என்பதை இந்த வசனம் பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.

இதை வைத்துப் பார்க்கும் போது, உஹதுப் போர் சமயத்தில் இந்த வசனம் அருளப்பட்டிருக்க வேண்டும் என்பது தெளிவாகின்றது. மேலும் இந்த வசனத்திற்கு முந்தைய வசனங்களும் உஹதுப் போர் குறித்த வசனங்களாகவே உள்ளன என்பதும் இந்தக் கருத்துக்கு வலு சேர்ப்பதாக அமைந்துள்ளது.

மேற்கண்ட ஆதாரங்களின் அடிப்படையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முஷ்ரிக்குகளுக்கு எதிராக குனூத் ஓதியதைத் தடை செய்து 3:128 வசனம் அருளப்படவில்லை என்பது தெளிவாகின்றது.

புகாரியில் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கும் 4560 வது ஹதீஸில், "நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எவருக்கேனும் எதிராகவோ, ஆதரவாகவோ பிரார்த்திக்க விரும்பினால் குனூத் ஓதுவார்கள்'' என்று கூறப்பட்டுள்ளது.

70  காரிகள் எனும் அறிஞர்கள் கொல்லப்பட்ட இந்த ஒரு சந்தர்ப்பத்தில் மட்டும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு குனூத் ஓதவில்லை; பொதுவாக யாருக்கேனும் எதிராகவோ, ஆதரவாகவோ பிரார்த்திக்க விரும்பினால் குனூத் ஓதுவார்கள் என்று இந்த செய்தி தெரிவிக்கின்றது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபித்து குனூத் ஓதியதைக் கண்டித்து மேற்கண்ட வசனம் அருளப்பட்டது என்று கூறும் செய்தி புகாரியில் இடம் பெற்றிருந்தாலும் முஸ்லிமிலும் மற்றும் பல நூல்களிலும் கூறப்படும் காரணம் தான், அதாவது உஹதுப் போரின் போது அருளப்பட்டது என்பது தான் ஏற்புடையதாக உள்ளது.

மேலும் குனூத் பற்றியே இவ்வசனம் அருளப்பட்டது என்ற ஹதீஸ் இப்னு ஷிஹாப் எனும் ஸுஹ்ரி வழியாகவே அறிவிக்கப்படுகின்றது. அவர் நபித்தோழரிடம் கேட்டு அறிவிப்பது போல் புகாரியின் வாசக அமைப்பு இருந்தாலும், முஸ்லிமில் இடம் பெற்றுள்ள இதே ஹதீஸின் வாசக அமைப்பு ஸுஹ்ரி நபித்தோழர்கள் வழியாக இல்லாமல் சுயமாக அறிவிக்கின்றார் என்று தெளிவுபடுத்துகின்றது.

"நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மேற்கண்ட கொலையாளிகளைச் சபித்து குனூத் ஓதினார்கள். மேற்கண்ட வசனம் அருளப்பட்டவுடன் குனூத்தை விட்டு விட்டார்கள் என்று நமக்குத் தகவல் கிடைத்துள்ளது'' என்று ஸுஹ்ரி கூறியதாக முஸ்லிம் 1082 ஹதீஸ் கூறுகின்றது.

இவ்வசனம் குனூத் குறித்துத் தான் அருளப்பட்டது என்ற விபரத்திற்கு நபித்தோழர்கள் வழியான சான்று ஏதும் ஸுஹ்ரியிடம் இல்லை என்பதை இதிலிருந்து அறியலாம்.  ஸுஹ்ரியின் கூற்றுடன் ஹதீஸ் கலந்து விட்டது என்று ஹாஃபிழ் இப்னு ஹஜர் அவர்களும் தமது ஃபத்ஹுல் பாரியில் கூறுகின்றார்கள்.

எனவே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குனூத் ஓதியதாகக் கூறப்படும் செய்தி மட்டுமே ஏற்றுக் கொள்ளக் கூடியதாக அமைந்துள்ளது.  அதைத் தடை செய்து வசனம் இறங்கியதாகக் கூறப்படும் செய்திகள் ஏற்றுக் கொள்ளத் தக்கவையாக இல்லை.

ஆனால் பஜ்ரு தொழுகையில் அன்றாடம் குனூத் ஓதும் வழக்கத்துக்கு இது ஆதரமாகாது.

Leave a Reply