சவூதி பிறையும் சமுதாயப் பிரிவினையும்
நோன்பையும் பெருநாளையும் எவ்வாறு முடிவு செய்வது என்பதில் நமக்கிடையே கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. ஒவ்வொரு பகுதியினரும் தத்தமது பகுதியில் பிறை பார்ப்பதன் அடிப்படையில் நோன்பையும் பெருநாளையும் முடிவு செய்ய வேண்டும் என்பது நமது நிலை. இதற்கான சான்றுகளை அல்முபீனில் இரண்டு சிறப்பிதழ்கள் மூலம் விளக்கியுள்ளோம்.
ஜாக் இயக்கத்தினர், உலகில் எந்தப் பகுதியில் பிறை காணப்பட்டாலும் அதை உலக மக்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டு நோன்பையும் பெருநாளையும் முடிவு செய்ய வேண்டும் என்று கூறி வந்தனர்.
மார்க்கத்தைப் புரிந்து கொள்வதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இவ்வாறு கூறுகின்றார்கள் என்றால் அது அவர்களுக்கும் அல்லாஹ்வுக்கும் இடையேயான விவகாரம் என்று நாம் விட்டு விடலாம். உலகில் எங்கே பிறை பார்த்தாலும் ஏற்கலாம் என்பது இவர்களின் நிலையாக இருக்கவில்லை. வெளிப்படையாக இவ்வாறு கூறுகின்றார்களே தவிர உண்மையில் சவூதி எப்போது இதுபற்றி அறிவிக்கின்றதோ அதை ஏற்க வேண்டும் என்பது தான் இவர்களின் கொள்கை. இதை வெளிப்படையாக அறிவித்தால் பல கேள்விகளை சந்திக்க வேண்டி வரும் என்பதால் உலகில் எங்கே பிறை காணப்பட்டாலும் அதை ஏற்றுக் கொள்வோம் என்று பொய்யாகக் கூறி வருகின்றனர்.
இந்தக் குற்றச்சாட்டை ஆதாரமற்ற யூகத்தின் அடிப்படையில் நாம் கூறவில்லை. உரிய ஆதாரங்களுடன் தான் கூறுகின்றோம்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் நெல்லை மாவட்டம் ஏர்வாடியில் உள்ள ஜாக் கிளை மூலம் நோன்பு பற்றி அறிவிப்பு செய்யப் பட்டது. லிபியாவில் பிறை பார்த்த தகவல் கிடைத்துள்ளதால் அதன் அடிப்படையில் இவ்வாறு அறிவித்து இருப்பதாக அந்தக் கிளை கூறிக் கொண்டது.
உலகில் எங்கே பிறை பார்த்தாலும் அதை ஏற்க வேண்டும் என்ற கொள்கையைக் கொண்ட ஜாக் தலைவர் என்ன செய்திருக்க வேண்டும். தமது கிளையின் தகவலை ஏற்று அதன் அடிப்படையில் நோன்பை அறிவித்திருக்க வேண்டும். ஆனால் அதற்கு அடுத்த நாள் தான் நோன்பு என்று ஜாக் தலைமை அறிவித்தது. லிபியா உலகில் உள்ள பகுதியில் ஒரு பகுதி இல்லையா? என்றெல்லாம் கேட்கக் கூடாது. ஏனெனில் சவூதி அரசாங்கம் அறிவித்தால் மட்டுமே இவர்கள் ஏற்பார்கள்.
சவூதி அரசாங்கம் அறிவிக்காத ஒரு நாளில் பாகிஸ்தான் பிறை பார்த்ததாக அறிவித்தால் இவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். தங்களின் சுயநலனுக்காக மக்களுக்குத் தவறான வழி காட்டுகின்றனர். சவூதி விசுவாசத்தின் காரணமாகவே இத்தகைய குழப்பங்களைச் செய்து வருகின்றனர் என்பதை இந்த ஆண்டு ஹஜ்ஜுப் பெருநாள் பற்றி இவர்கள் அறிவித்த இரண்டு அறிவிப்புக்கள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்து விட்டன.
இரட்டை நிலையும் இரட்டை அறிக்கையும்
ஜாக் இயக்கத்தின் தலைவர் தனது கிளைகள் அனைத்துக்கும் துல்ஹஜ் பிறை பார்த்தவுடன் சுற்றறிக்கை அனுப்பினார். அந்த அறிக்கையின் வாசகம் இது தான்.
"20.1.05 வியாழனன்று ஹாஜிகள் அரபா மைதானத்தில் ஒன்று கூடுவதால் அன்றைய தினம் ஹாஜிகள் அல்லாத முஸ்லிம்கள் நோன்பு நோற்க வேண்டும். அதை அடுத்த நாளான 21.01.05 அன்று வெள்ளியன்று ஹஜ்ஜுப் பெருநாள் அனுஷ்டிக்க வேண்டும். இதைக் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டியது''
தமிழகத்தில் பிறை பார்த்ததன் அடிப்படையில் வெள்ளிக்கிழமை தான் பெருநாள் என்று அனைத்து முஸ்லிம் அமைப்புகளும் அறிவித்திருந்தன. ஜாக் இயக்கத்தின் இந்த அறிக்கை தமிழக முஸ்லிம்களின் நிலைபாட்டுக்கு ஒத்ததாக அமைந்திருந்தது.
இந்த அறிக்கைக்கு ஏற்ப கடந்த 14.01.2005 அன்று ஜாக் இயக்கத்தினரின் பள்ளிவாசல்களிலும் 21ம் தேதி வெள்ளிக்கிழமை தான் பெருநாள் என்று அறிவிப்பு செய்தனர்.
திடீரென்று சவூதியின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டது. சவூதியா அலைவரிசையில் ஓடிய நஸ்ரீழ்ர்ப்ப்ண்ய்ஞ் செய்தி துல்ஹஜ் பிறை 1 புதன் கிழமையாகும் என்ற கருத்துப்பட தெரிவித்தது.
சவூதி அரசு அங்கு அறிவித்த மாத்திரத்திலேயே இங்குள்ள அமீரின் அறிக்கையும் மாறி விட்டது.
பெருநாளைக்கு நான்கு நாட்களுக்கு முன்னால், கடந்த 17.01.05 அன்று ஜாக் தலைவர் மற்றொரு அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கை 17ம் தேதி தினமணி நாளிதழிலும் வெளியானது. அந்த அவசர அறிக்கை சவூதியை அப்படியே காப்பி அடித்திருந்தது. "19ந்தேதி அரஃபாவில் கூடுவதால் 20ந் தேதி எல்லா கிளைகளிலும் பெருநாள் அனுசரிக்க வேண்டும்'' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
இங்கு தான் இவர்களது பிறை பார்த்தல் பற்றிய குட்டு வெளியாகி, நமது குற்றச்சாட்டு ஊர்ஜிதமானது.
- பிறை பார்த்து
- அல்லது தகவல் கேட்டு
- அல்லது கணிப்பின் அடிப்படையில்
நோன்பு மற்றும் பெருநாளை முடிவு செய்ய வேண்டும் என்ற முரண்பட்ட மூன்று கருத்துக்களை ஒன்றாகக் கூறி வந்தவர்கள் இந்த மூன்றையும் விட்டு விட்டு சவூதி எப்போது அறிவிக்கின்றதோ அப்போது நோன்பையும் பெருநாளையும் அறிவிக்கின்றனர். இவர்கள் குர்ஆன் ஹதீஸைப் பின்பற்றவில்லை, சவூதியைத் தான் பின்பற்றுகின்றனர் என்பது ஊர்ஜிதமானது.
பிறை பார்த்தல் அல்லது தகவல் அல்லது கணிப்பு எதுவாக இருந்தாலும் முதல் பிறை அன்றே தீர்மானிக்கப்பட்டு விடும். ஆனால் பிறை தென்பட்டு ஐந்து, ஆறு நாட்கள் கடந்த பிறகு பிறை அறிவிப்பில் மாற்றம் ஏற்பட்டது எப்படி? என்பது அவர்களுக்கே வெளிச்சம்.
பிறையும் பிரிவினையும்
சர்வதேசப் பிறையின் மூலமாக சமுதாய ஒற்றுமையை ஏற்படுத்த முனைந்த இந்தச் சந்தர்ப்பவாதிகள் சமுதாயத்தைப் பல கூறுகளாப் பிரித்து விட்டனர். ஏற்கனவே தமிழகத்தில், இந்தியாவில் பெருநாட்களில் ஒரு நாள் மட்டுமே வித்தியாசம் ஏற்பட்டுக் கொண்டிருந்தது. மக்கள் அதை சகஜமாக எடுத்துக் கொண்டனர்.
இவர்களோ சவூதியா, லிபியாவை அடிப்படையாகக் கொண்டு பெருநாள் கொண்டாடி,இரண்டு மூன்று நாட்கள் வித்தியாசத்தை ஏற்படுத்தி விட்டனர். இது தான் இவர்கள் ஏற்படுத்திய சமுதாய ஒற்றுமையாகும்.
கிறித்தவத்திற்கு ஒரு வாட்டிகன் இருப்பது போல் முஸ்லிம்களுக்கு மக்கா என்பது போன்ற ஒரு சித்திரத்தைத் தோற்றுவித்து சமுதாயத்தில் குழப்பத்தையும்,பிரிவினையையும் ஏற்படுத்துகின்றனர். இன்று பெருநாள், அதனால் நோன்பு நோற்பது ஹராம் என்று இவர்களுடைய பெருநாள் கணக்கைக் கொண்டு வந்து மற்றவர்களது கடமையான மற்றும் சுன்னத்தான நோன்புகளைத் தடுக்கும் மாபாதகத்தைச் செய்கின்றனர்.
இவர்களது இந்தத் தான்தோன்றித் தனமான விளக்கங்களால் சத்தியத்திற்கு வரக் கூடியவர்கள் கூட, பெருநாளையே உடைத்து சிதறடித்து விட்டார்களே? இவர்களது கருத்தை நாம் எப்படிக் கேட்பது? என்று எண்ணி சத்தியப் பாதைக்கு வராமல் ஒதுங்கி விடுகின்றனர். இந்த வகையில் இது சத்தியப் பாதைக்கு மற்ற மக்கள் வருவதற்கு ஒரு தடைக் கல்லாக நிற்கின்றது.
ஒரு கொள்கைப் பிரச்சனையாக இருந்து, அதைக் கண்டு அம்மக்கள் ஒதுங்கினால் அதை நாம் தடைக் கல் என்று கூற மாட்டோம். ஏனெனில் கொள்கைப் பிரச்சனையில் சமரசம் செய்யக் கூடாது, அதில் மக்களைப் பற்றிக் கவலைப் படத் தேவையில்லை என்று அல்லாஹ்வும் அவனது தூதரும் வழி காட்டியுள்ளார்கள். எனவே அது போன்ற பிரச்சனையில் மக்கள் ஒதுங்கினால் நம் மீது குற்றமில்லை.
ஆனால் இவர்கள் கொள்கை அடிப்படையில் முடிவு செய்யவில்லை. சவூதி அரசாங்க அபிமானத்தைப் பெறுவதற்காக மார்க்கத்தில் விளையாடி, பிரிவினையை ஏற்படுத்தி விட்டனர். அதனால் இதுபற்றி நாம் கவலைப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஒற்றுமைக்கு வேட்டு வைத்த அமீர்
1997 இறுதியில் தவ்ஹீத் பிரச்சாரக் குழு என்ற பெயரில் செயல்பட்டு வந்த நமக்கும் ஜாக்குக்கும் இடையில் நீண்ட நாட்கள் நடந்த பல அமர்வுகளுக்குப் பிறகு ஓர் உடன்பாடு ஏற்பட்டது. அந்தச் சமயத்தில் சென்னை ஜாக் மர்கஸில், ஈமானின் கிளைகள் என்ற தலைப்பில் பி.ஜே. உரையும் நிகழ்த்தினார். ஆனால் அந்த இணக்கம் உடைந்து சுக்கு நூறாக நொறுங்கிப் போனதற்கும், சமாதான நடவடிக்கைக்கு சாவு மணி அடித்ததற்கும் சவூதி பிறை அறிவிப்பும் ஒரு காரணம்.
ஜாக் தலைவர் யாரையும் கலக்காமல் தன்னிச்சையாக சவூதி பிறையை அறிவித்தார். யாரையும் கலக்காமல் எப்படி அறிவிக்கலாம்? என்று நமது தரப்பில் கேட்டதற்கு அப்படித் தான் அறிவிப்úன் என்று பதிலளித்தார்.
இரு அமைப்புகளுக்கும் இடையிலுள்ள இணக்கத்தை அருள்மிகு குர்ஆன் இறங்கிய ரமளான் மாதம் துவங்கும் முன்பே போட்டு உடைத்தெறிந்தார்.
ஏகத்துவவாதிகளுக்கு மத்தியில் மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த சமுதாயத்திற்கு மத்தியிலும் சவூதி பிறையில் அந்த அமீர் எனப்படுபவர் பிரச்சனையையும் பிரிவினையையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றார்.
ஸஹாபாக்களின் விளக்கத்தைச் சகட்டு மேனிக்கு மறுப்பது யார்?
இவர்களின் அற்புத ஆராய்ச்சிக்கு, சவூதி பிறைத் திணிப்பிற்கு அத்தாட்சியாக இவர்கள் கொண்டு வந்து நிறுத்தும் சாட்சி, தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பப்படும் அரஃபா நாள் காட்சி தான். அரஃபா பெருவெளியில் மக்கள் கூடி நிற்கும் இந்த நாள் தான் அரஃபாவா? அல்லது அதற்கு அடுத்த நாள் அரஃபாவா? என்று இவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
அரஃபா தினத்தில் இறங்கிய, இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன் என்ற 5:3 வசனத்தை மேடைக்கு மேடை முழங்கி வரும் இந்தப் பண்டிதர்கள், அந்த வசனம் பிறை விஷயத்திற்குப் பொருந்தாது என்று கருதுகின்றனர்.
மார்க்கம் முழுமையடைந்து விட்டது என்ற வசனம் இறங்கிய காலத்தில், மக்காவில் அரஃபா நாளாக இருக்கும் அதே நாள் மதீனாவில் துல்ஹஜ் பிறை எட்டாம் நாளாக இருக்கின்றது. அதாவது மதீனாவில் அதற்கு அடுத்த நாள் தான் அரஃபா நாள். அறிவியல் வளராத அந்தக் காலகட்டத்தில் உள்ள நிலை அது தான். அன்றைய காலத்தில் ஒரே பிறை, உலகப் பிறை என்ற நிலைபாடு ஏற்பட சாத்தியமே கிடையாது. நபித்தோழர்கள் இப்படித் தான் விளங்கினார்கள்.
நபித்தோழர்கள் சுயமாக இப்படி விளங்கவில்லை. நபி (ஸல்) அவர்கள் இப்படித் தான் கட்டளையிட்டார்கள் என்று கூறி, இது நபி (ஸல்) அவர்களுடைய விளக்கம் என்பதை உறுதி செய்கின்றார்கள் என்பதைக் கீழே நாம் சுட்டிக் காட்டியுள்ள குரைப், மஸ்ரூக் ஆகியோர் அறிவிக்கும் செய்திகள் உறுதிப் படுத்துகின்றன.
எனவே மார்க்கம் முழுமையடையும் வரை இந்த நிலை தான் இருந்தது. அதில் மாற்றம் தேவையிருப்பின் அல்லாஹ்வும் அவனது தூதரும் சூசகமாக அல்ல,தெளிவாகவே அதைச் சொல்லி இருப்பார்கள். அவ்வாறு அவர்கள் சொல்லாததால்,மார்க்கம் நிறைவு பெற்ற அந்த நாளிலிருந்து உலகம் அழியும் நாள் வரைக்கும் இது தான் வழிமுறையாகும் என்று அல்லாஹ்வும் அவனது தூதரும் தெளிவு படுத்தி விட்டனர்.
இதன் பின்னர் அறிவியல் என்ற போர்வையில், அறிவியலை அல்ல, சவூதிப் பிறையைத் திணிப்பதற்கு இவர்களுக்கு என்ன அதிகாரம் இருக்கின்றது?
இந்த லட்சணத்தில் நம்மைப் பார்த்து, மார்க்கத்திற்கு சுய விளக்கம் கொடுப்பவர்கள்,ஸஹாபாக்களின் விளக்ககங்களுக்கு மாறுபடுபவர்கள் என்ற மாயையை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.
இவர்களது இயக்க இதழில் கொள்கைச் சகோதரனுக்கு எழுதிய குழப்பக் கடிதத்தைப் பாருங்கள்.
சத்திய ஸஹாபாக்களான நபித்தோழர்களின் வாயிலாகத் தான் இந்த மார்க்க சட்ட திட்டங்கள் நம் வரை வந்தடைந்திருக்கின்றன. அவர்கள் வாழையடி வாழையாகப் பின்பற்றி வந்த குர்ஆன், சுன்னாவின் நெறிமுறைகள் பாதுகாப்பானவை.
பரிசுத்த குர்ஆனை விளங்கு வதிலும் நபி (ஸல்) அவர்களின் போதனைகளை விளங்குவதிலும் நபித்தோழர்கள், அவர்களுக்குப் பின்னால் வந்தவர்களை விட அதிகம் ஆர்வம் உள்ளவர்களாகவும் அதிகம் விளங்கும் திறன் உள்ளவர் களாகவும் இருந்தார்கள்.
குர்ஆனும் சுன்னாவும் தான் மூலாதாரங்கள் என்பதை உறுதியாக நம்பும் நாம் அதே வேளையில் அந்த மூலாதாரங் களுக்கு நம் இஷ்டத்திற்கு விளக்கங்கள் கொடுப்பதும் கூடாது. சில சட்டப் பிரச்சனை களை நம்மால் புரிந்து கொள்ள முடியாத நிலை ஏற்படும் போது, அல்லது ஒரு சட்டத்திற்கு மாறுபட்ட கருத்துக்கள் நம்ம வர்களிடம் நிலவும் போது அந்த சத்திய ஸஹாபாக்கள் அதை எப்படிப் புரிந்து தங்களின் வாழ்க்கையில் செயல்படுத்தி னார்கள் என்பதைக் கவனிக்க வேண்டும். அவர்களின் விளக்கத் திற்கே முன்னுரிமை கொடுக்க வேண்டும். அப்படிச் செயல் படும் போதே குழப்பமற்ற சூழல் ஏற்படும்.
இந்த அணுகு முறையை விட்டு நாம் புரிந்தது போன்றே எல்லா மக்களும் புரிய வேண்டும், அது தான் சரியானது என்று அடம் பிடித்தால், நிச்சயம் அந்த நிலை நம்மை வழிகேட்டில் கொண்டு செல்லும் என்பதை அறிந்து செயல் படுவோமாக!
இது தான் அகில உலக அமீருல் முஃமினீன் தனது தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடித வாசகங்கள். குறிப்பாக அடிக் கோடிட்டுள்ள வாசகங்களை சற்று நிதானமாகப் படியுங்கள். படித்து விட்டீர்களா! இப்போது பிறை தொடர்பாக முஸ்லிமில் இடம் பெறும் இந்த ஹதீஸைப் படியுங்கள்.
உம்முல் ஃபழ்ல் (ரலி) அவர்கள் என்னை சிரியாவிலிருந்த முஆவியா (ரலி)யிடம் அனுப்பி வைத்தார்கள். நான் சிரியாவுக்குச் சென்று அவரது வேலையை முடித்தேன். நான் சிரியாவில் இருக்கும் போது, ரமளானின் தலைப்பிறை எனக்கு வந்தது. வெள்ளிக்கிழமை இரவு நான் பிறையைப் பார்த்தேன். பின்னர் அம்மாதத்தின் கடைசியில் நான் மதீனாவுக்கு வந்தேன். இப்னு அப்பாஸ் (ரலி) என்னிடம் அம்மாதத்தின் கடைசியில் விசாரித்தார்கள். பின்னர் பிறையைப் பற்றி பேச்சை எடுத்தார்கள்.
"நீங்கள் எப்போது பிறையைப் பார்த்தீர்கள்?'' என்று கேட்டார்கள். "நாங்கள் வெள்ளி இரவில் பிறையைப் பார்த்தோம்'' என்று கூறினேன். "நீயே பிறையைப் பார்த்தாயா?''என்று கேட்டார்கள். "ஆம். மக்களும் பார்த்தார்கள். நோன்பு நோற்றார்கள்.முஆவியா (ரலி) அவர்களும் நோன்பு நோற்றார்கள்'' என்று கூறினேன்.
அதற்கவர்கள், "ஆனால் நாங்கள் சனிக்கிழமை இரவில் தான் பிறையைப் பார்த்தோம். எனவே நாங்கள் (மறு) பிறையைப் பார்க்கும் வரை அல்லது முப்பது நாட்களை முழுமையாக்கும் வரை நோன்பு நோற்போம்'' என்றார்கள். "முஆவியா (ரலி) அவர்கள் பிறை பார்த்ததும் அவர்கள் நோன்பு நோற்றதும் உங்களுக்குப் போதாதா?'' என்று கேட்டேன். அதற்கவர்கள், "போதாது. நபி (ஸல்) அவர்கள் இப்படித் தான் எங்களுக்குக் கட்டளை யிட்டுள்ளார்கள்'' என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: குரைப்
நூல்: முஸ்லிம் 1819
இந்த ஹதீஸ் நபித்தோழர்கள் பிறை பற்றி எப்படி விளங்கியிருக்கின்றார்கள் என்பதைச் சந்தேகமில்லாமல் படம் பிடித்து மட்டும் காட்டவில்லை. நபி (ஸல்) அவர்களின் காலத்தில் இருந்த நிலைபாட்டை கண்ஸ்ங் ஆக, நேர்முகமாக அல்லவா காட்டி நிற்கின்றது.
அடுத்து இவர்கள் ஆதாரமாகக் காட்டும் அரஃபா நாளின் நேரடிக் காட்சிகளுக்கு வருவோம்.
நான் அரஃபா நாளில் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றேன். "இவருக்குக் கோதுமைக் கஞ்சியைக் கொடுங்கள். அதில் இனிப்பை அதிகமாக்குங்கள்'' என்று கூறினார்கள். "(அரஃபா நாளாகிய) இன்று நான் நோன்பு நோற்காததற்குக் காரணம் இன்று (மக்காவில்) ஹஜ்ஜுப் பெருநாளாக இருக்கலாம் என்று நான் அஞ்சுவதே''என்று நான் கூறினேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், "ஹஜ்ஜுப் பெருநாள் என்று மக்கள் முடிவு செய்யும் நாளே ஹஜ்ஜுப் பெருநாள். நோன்புப் பெருநாள் என்று மக்கள் முடிவு செய்யும் நாளே நோன்புப் பெருநாள்'' என்று விளக்கம் அளித்தார்கள்.
நூல்: பைஹகீ 7998
மஸ்ரூக் அறிவிக்கும் இந்த ஹதீஸ் எதைக் காட்டுகின்றது?
நபித்தோழர்களின் செயல்பாட்டை, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஹதீஸை நபித் தோழர்கள் எப்படி விளங்கியிருக்கின்றார்கள் என்று காட்டுகின்றதல்லவா?
இப்போது மீண்டும் கொள்கைச் சகோதரனுக்கு எழுதப்பட்ட குழப்பக் கடிதத்தில் நாம் அடிக் கோடிட்டிருக்கும் அந்த வாசகங்களை ஒன்றன் பின் ஒன்றாக இத்துடன் பொருத்திப் பாருங்கள். யார் ஸஹாபாக்களின் விளக்கத்தை அப்படியே ஏற்கின்றார்கள்? யார் தூக்கி எறிகின்றார்கள், யார் அவமதிக்கின்றார்கள்? என்பது தெளிவாகப் புரியும்.
யார் கோஷமும் வேஷமும் போடுகின்றார்கள்? யார் கொள்கைக்காகப் பாடுபடுகின்றார்கள்? யார் கூலிக்கு மாரடிக்கின்றார்கள்? என்பது இதிலிருந்து தெளிவாக விளங்கும். இந்த அடிப்படையில் இவர்களிடம் குடி கொண்டிருப்பது சந்தர்ப்ப வாதம் தான் என்பதும் உறுதியாகின்றது.
ஏகத்துவம் 2005 பிப்ரவரி இதழில் வெளிவந்தது