ஏகத்துவம் மார்ச் 2007
சிறு துளி! பெரு வெள்ளம்!
இஸ்லாமிய மார்க்கம் உலகில் உள்ள அனைத்து மார்க்கத்தை விடவும் மனித சமுதாயத்திற்கு ஏற்ற அழகிய மார்க்கமாகும். ஏனெனில் அது அகில உலகத்தையும் படைத்து ஆளுகின்ற அல்லாஹ் ஏற்படுத்திய மார்க்கமாகும். அதில் மனித சக்திக்கு உட்பட்ட பல கடமைகளும், உபரியான வணக்கங்களும் உள்ளன. எந்த அளவிற்கென்றால் சின்னச் சின்ன செயல்களுக்கெல்லாம் அதிக நன்மையைப் பெற்றுத் தரும் காரியங்களும் உள்ளன. அதில் ஒன்று தான் கொடுக்கும் தன்மை, அதாவது தர்மம் செய்தல் ஆகும்.
இந்தத் தர்மத்தின் சிறப்பைப் பற்றி அல்லாஹ்வும் அவனது தூதரும் நமக்கு ஏராளமாகச் சொல்லித் தந்துள்ளார்கள். அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.
முதலில் ஒரு மனிதன் தன்னுடைய குடும்பத்தாருக்கு நல்ல முறையில் செலவு செய்ய வேண்டும். ஏனெனில் அது தான் சிறந்தது என்று அல்லாஹ்வும் அவனது தூதரும் நமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள். அடுத்ததாக நம்மிடம் இருக்கும் செல்வத்தைக் கஞ்சத்தனம் செய்யாமல் மற்றவருக்குக் கொடுத்து உதவ வேண்டும். அதனால் நமக்குப் பல விதமான நன்மைகள் கிடைக்கின்றன.
நேர்வழி கிடைக்கும்
பணத்தின் மீதுள்ள பேராசையைக் குறைத்துக் கொண்டு, கொடுக்கும் தன்மையை வளர்த்துக் கொண்டு நம்மால் முடிந்த பொருளைத் தர்மம் செய்தால் அல்லாஹ் நமக்கு நேர்வழி காட்டுவான். நேர்வழி என்பது சுலபமானது கிடையாது. அது அல்லாஹ் நாடியவர்களுக்குத் தான் கிடைக்கும். அப்படியொரு சிறப்பு இந்தத் தர்மத்தின் மூலம் கிடைக்கிறது.
யார் (பிறருக்கு) வழங்கி (இறைவனை) அஞ்சி, நல்லவற்றை உண்மைப்படுத்துகிறாரோ அவருக்கு வசதிக்குரிய வழியை எளிதாக்குவோம். யார் கஞ்சத்தனம் செய்து, தேவையற்றவராகத் தன்னை கருதி, நல்லதை நம்ப மறுக்கிறாரோ, சிரமமானதற்கு அவருக்கு வழியை ஏற்படுத்துவோம்.
அல்குர்ஆன் 92:5-10
மலக்குகளின் துஆ
நமக்கு அல்லாஹ் கொடுத்த செல்வங்களை நமக்கு மட்டும் வேண்டும் என்று நினைக்காமல் மற்றவருக்குக் கொடுக்க வேண்டும் என்று நினைத்து தர்மம் செய்தால் வானவர்களின் துஆ நமக்குக் கிடைக்கும். மலக்குகளின் துஆவுக்கென்று தனிச் சிறப்பு உள்ளது.
ஒவ்வொரு நாளும் இரண்டு மலக்குகள் இறங்குகின்றனர். அவ்விருவரில் ஒருவர், "அல்லாஹ்வே! தர்மம் செய்பவருக்குப் பிரதிபலனை அளித்திடுவாயாக!” என்று கூறுவார். இன்னொருவர், "அல்லாஹ்வே! (தர்மம் செய்யாமல்) தடுத்து வைத்துக் கொள்பவர்களுக்கு அழிவை ஏற்படுத்துவாயாக!” என்று கூறுவார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 1442
அல்லாஹ்வின் அபிவிருத்தி
இவ்வுலகில் மனிதர்கள் அதிகமாக ஆசைப்படுவது பணத்தின் மீது தான். எந்த அளவுக்கென்றால் பெரும்பாலான மக்கள் ஹராம், ஹலால் என்றெல்லாம் பார்க்காமல் யாருக்கு நஷ்டம் வந்தாலும் கவலையில்லை; தங்களுக்குப் பணம் தான் முக்கியம் என்று நினைத்து சம்பாதிக்கிறார்கள். அப்படியில்லாமல் ஹலாலான முறையில் சம்பாதித்த பொருளை நன்மையை நாடி தர்மம் செய்தால் அல்லாஹ் நமக்கு, நாம் எண்ணியிராத விதத்தில் தன்னுடைய அருளை ஏற்படுத்துவான். இதை அல்லாஹ்வே தன் தூதர் மூலமாகச் சொல்லிக் காட்டுகிறான்.
"ஆதமின் மகனே! (மற்றவர்களுக்காக) செலவிடு! உனக்கு நான் செலவிடுவேன்” என்று அல்லாஹ் கூறியதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 5352
பல மடங்கு நன்மைகள்
உலக விஷயத்தில் ஆர்வம் காட்டும் மக்கள் மார்க்க விஷயத்தில் ஆர்வம் காட்டுவதில்லை. உதாரணமாக, ஒரு கடையில் ஒரு பொருள் வாங்கினால் இன்னொரு பொருள் இலவசம் என்றால் மக்கள் அங்கே சென்று போட்டி போட்டுக் கொண்டு பொருள் வாங்குவார்கள். தர்மம் செய்தால் அதற்காகப் பல மடங்கு நன்மைகளைத் தருவதாக அல்லாஹ் கூறிக் காட்டுகிறான். ஆனால் மனிதர்கள் இதில் ஆர்வம் காட்டுவதில்லை.
தமது செல்வங்களை அல்லாஹ்வின் பாதையில் செலவிடுவோருக்கு உதாரணம் ஒரு தானியம். அது ஏழு கதிர்களை முளைக்கச் செய்கிறது. ஒவ்வொரு கதிரிலும் நூறு தானியங்கள் உள்ளன. தான் நாடியோருக்கு அல்லாஹ் இன்னும் பன் மடங்காகக் கொடுக்கிறான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.
அல்குர்ஆன் 2:261
அல்லாஹ்வின் திருப்தியைப் பெறுவதற்காகவும், தமக்குள்ளே இருக்கும் உறுதியான நம்பிக்கைக்காகவும் தமது செல்வங்களை (நல் வழியில்) செலவிடுவோரின் உதாரணம், உயரமான இடத்தில் அமைந்த தோட்டம். பெரு மழை விழுந்ததும் அத்தோட்டம் இருமடங்காக தன் உணவுப் பொருட்களை வழங்குகிறது. பெரு மழை விழா விட்டாலும் தூரல் (போதும்). நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் பார்ப்பவன்.
அல்குர்ஆன் 2:265
இரு மடங்கு கூலி
நமது உறவினர்கள் ஏழைகளாக இருந்தால் அவர்களை இழிவாகக் கருதாமல் அவர்களிடம் உறவைப் பேணி, அவர்களுக்குத் தர்மம் செய்தால் அதற்கு இரு மடங்கு கூலி கிடைக்கும்.
நான் ஓர் அடிமைப் பெண்ணை விடுதலை செய்தேன். ஆனால் நபி (ஸல்) அவர்களிடம் அதற்காக அனுமதி கேட்கவில்லை. என்னிடம் நபி (ஸல்) அவர்கள் தங்குகின்ற முறை வந்த போது, "அல்லாஹ்வின் தூதரே! அடிமைப் பெண்ணை விடுதலை செய்து விட்டேனே! அறிவீர்களா?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நீ (விடுதலை) செய்து விட்டாயா?” என்று கேட்க, நான், "ஆம்” என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள், "நீ உன் தாயின் சகோதரர்களுக்கு (அன்பளிப்பாக) அவளைக் கொடுத்து விட்டிருந்தால் உனக்குப் பெரும் நற்பலன் கிடைத்திருக்கும்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அன்னை மைமூனா பின்த் ஹாரிஸ் (ரலி),
நூல்: புகாரி 2592
தீமைகளை அழிக்கும்
உலகில் பிறந்த அனைவருமே தவறு செய்யக் கூடியவர்கள் தான். அப்படியிருக்கும் போது அதற்குப் பரிகாரத்தையும் அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளான். இவ்வாறு பாவங்களுக்குப் பரிகாரமாக இருக்கும் காரியங்களில் ஒன்று தான் தர்மமாகும்.
தர்மங்களை நீங்கள் வெளிப்படையாகச் செய்தால் அது நல்லதே. அதை(ப் பிறருக்கு) மறைத்து ஏழைகளுக்கு வழங்கினால் அது உங்களுக்கு மிகச் சிறந்தது. உங்கள் தீமைகளுக்கு (இதைப்) பரிகாரமாக ஆக்குகிறான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.
அல்குர்ஆன் 2:271
நரகத்தை விட்டுக் காக்கும்
சிறு துன்பம் வந்தாலும் தாங்க முடியாமல் துடிக்கும் மக்கள் உண்மையிலேயே தாங்க முடியாத துன்பமான நரக வேதனையை விட்டுப் பாதுகாப்புத் தேடுவது கடமையாகும். இதை அல்லாஹ் பல இடங்களில் சொல்லிக் காட்டுகிறான். நபி (ஸல்) அவர்களும் பல சந்தர்ப்பங்களில் இதை வலியுறுத்தியுள்ளர்கள்.
நரக நெருப்பு என்பது இவ்வுலக நெருப்பை விட எழுபது மடங்கு அதிகமாகும். இந்தக் கொடிய வேதனையை விட்டு பாதுகாக்கக் கூடியதாக தர்மம் அமைந்துள்ளது.
"அல்லாஹ் மறுமை நாளில் உங்களில் ஒவ்வொருவருடனும் பேசாமல் இருப்பதில்லை. அப்போது அல்லாஹ்வுக்கும் உங்களுக்கும் இடையில் மொழி பெயர்ப்பாளர் எவரும் இருக்க மாட்டார். பிறகு அவர் கூர்ந்து பார்ப்பார். தமக்கு முன்புறம் எதையும் அவர் காண மாட்டார். பிறகு தமக்கு எதிரே பார்ப்பார். அப்போது அவரை (நரக) நெருப்பு தான் வரவேற்கும். ஆகவே முடிந்தால், பேரீச்சம் பழத்தின் சிறு துண்டையேனும் தர்மம் செய்து நரகத்திலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அதீ பின் ஹாத்திம் (ரலி)
நூல்: புகாரி 1413, 6539
சுவனத்தில் தனி மரியாதை
சுவனம் கிடைப்பது சாதாரண விஷயமல்ல! அதிலும் அங்கு நமக்கென்று தனிச் சிறப்பு கிடைப்பது உண்மையில் மிகப் பெரும் பாக்கியமாகும். தர்மம் செய்பவர்களுக்கு அப்படிப்பட்ட தனிச் சிறப்பு உண்டு. மேலும் அவர்களுக்கென தனி வாசலும் உண்டு.
"ஒருவர் அல்லாஹ்வின் பாதையில் ஒரு ஜோடிப் பொருட்களைச் செலவு செய்தால் அவர் சொர்க்கத்தின் வாசல்களிலிருந்து, "அல்லாஹ்வின் அடியாரே! இது நன்மையாகும். (இதன் வழியாகப் பிரவேசியுங்கள்)” என்று அழைக்கப்படுவார். தொழுகையாளிகளாக இருந்தவர்கள் தொழுகையின் வாசல் வழியாக அழைக்கப்படுவர். அறப்போர் புரிந்தவர்கள் ஜிஹாத் எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர். நோன்பாளிகளாய் இருந்தவர்கள் ரய்யான் எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர். தர்மம் செய்தவர்கள் ஸதகா எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! என் தாயும் தந்தையும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும். இந்த வாசல்கள் அனைத்திலிருந்தும் அழைக்கப்படும் ஒருவருக்கு எந்தத் துயரும் இல்லையே! எனவே எவரேனும் எல்லா வாசல்கள் வழியாகவும் அழைக்கப்படுவாரா?” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "ஆம்! நீரும் அவர்களில் ஒருவராவீர் என்று நான் நம்புகிறேன்” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 1897
அர்ஷின் நிழல்
கோடை காலத்து வெயில் நம்மை வாட்டியெடுக்கத் துவங்கியுள்ளது. சிறிது தூரம் கூட செருப்பில்லாமல் நம்மால் நடக்க முடியவில்லை. ஆனால் மிகப் பெரும் நாளான அந்த மறுமை நாளில் சூரியன் நமக்கு மிக அருகில் வந்து விடும். ஒவ்வொருவரும் தங்களது செயலுக்குத் தக்க வியர்வையில் குளிப்பார்கள். அப்படிப்பட்ட நேரத்தில் தன்னுடைய அர்ஷின் நிழலில் அல்லாஹ் சில மனிதர்களுக்கு நிழல் கொடுப்பான். அவர்களில் ஒருவர் தான் இரசியமாக தர்மம் செய்தவர்.
"அல்லாஹ்வுடைய நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத நாளான மறுமை நாளில் அல்லாஹ் தனது நிழலை ஏழு பேருக்கு அளிக்கிறான். அவர்கள்: நீதியை நிலை நாட்டும் தலைவர், அல்லாஹ்வுடைய வணக்க வழிபாட்டில் ஊறிய இளைஞர், பள்ளிவாசல்களுடன் தமது உள்ளத்தைத் தொடர்புபடுத்திக் கொண்ட ஒரு மனிதர், அல்லாஹ்விற்காகவே இணைந்து அல்லாஹ்விற்காகவே பிரிகின்ற இரு நண்பர்கள், உயர் அந்தஸ்திலுள்ள அழகான ஒரு பெண் தவறான வழிக்குத் தம்மை அழைக்கின்ற போது "நான் அல்லாஹ்வை அஞ்சுகின்றேன்’ என்று சொல்லும் மனிதர், தம்முடைய வலக்கரம் செய்யும் தர்மத்தை இடக்கரம் அறியாதவாறு இரகசியமாக தர்மம் செய்பவர், தனிமையில் அல்லாஹ்வை நினைத்துக் கண்ணீர் சிந்துபவர் ஆகியோர் ஆவர்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர-)
நூல்: புகாரி 660, 1423
மன்னிப்பும் நற்கூலியும்
இறைவனின் மன்னிப்பை விரும்பாதவர்கள் யாருமே இருக்க முடியாது. அத்தகைய ஒரு சிறப்பு தர்மத்தின் மூலம் கிடைக்கிறது.
தமது செல்வங்களை இரவிலும், பகலிலும், இரகசியமாகவும், வெளிப்படையாகவும் (நல் வழியில்) செலவிடுவோருக்கு தமது இறைவனிடம் அவர்களுக்கான கூலி உண்டு. அவர்களுக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.
அல்குர்ஆன் 2:274
அல்லாஹ்வின் வேதத்தைப் படித்து, தொழுகையை நிலை நாட்டி நாம் அவர்களுக்கு வழங்கியதிலிருந்து இரகசியமாகவும், வெளிப்படையாகவும் (நல் வழியில்) செலவிடுவோர் நஷ்டமில்லாத ஒரு வியாபாரத்தை எதிர்பார்க்கின்றனர். ஏனெனில் அவர்களின் கூலிகளை அவன் முழுமையாக அளிப்பான். தனது அருட்கொடைகளில் அவர்களுக்கு இன்னும் அதிகமாகவும் அளிப்பான். அவன் மன்னிப்பவன்; நன்றி செலுத்துபவன்.
அல்குர்ஆன் 35:29, 30
நிரந்தர நன்மை
ஒரு மனிதன் செய்யும் எந்தச் செயலாக இருந்தாலும் சரி! அவன் இறந்து விட்டால் அவற்றின் நன்மை நின்று விடும். ஆனால் இறந்த பிறகும் நன்மைகள் நம்மை வந்தடைவதற்கு தர்மம் வழிவகை செய்கிறது. நாம் செய்கின்ற தர்மம் நிலையானதாக இருக்கும் போது அதற்கான நன்மைகள் இறுதி நாள் வரை நமக்கு வந்து கொண்டே இருக்கும்.
"ஒரு முஸ்லிம் ஒரு மரத்தை நட்டு அல்லது விதை விதைத்து விவசாயம் செய்து அதிலிருந்து ஒரு பறவையோ அல்லது ஒரு மனிதனோ அல்லது ஒரு பிராணியோ உண்டால் அதன் காரணத்தால் ஒரு தர்மம் செய்ததற்கான பிரதிபலன் அவருக்குக் கிடைக்கும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல்: புகாரி 2320
ஒரு மனிதன் இறந்து விட்டால் அவனுடைய செயல்பாடு நின்று விடுகின்றது. மூன்று விஷயங்களை தவிர. 1. நிலையான தர்மம், 2. பயனளிக்கக் கூடிய கல்வி, 3. அவருக்காகப் பிரார்த்தனை செய்யும் நல்ல பிள்ளை.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 1631
இன்னும் ஏராளமான நன்மைகள் தர்மத்தின் மூலம் நமக்குக் கிடைக்கின்றன. சிறு துளி பெரு வெள்ளமாக ஆவதைப் போன்று நம்மால் முடிந்த சிறு சிறு தர்மங்களைச் செய்து அதிகமான நன்மைகளைப் பெற அல்லாஹ் அருள் செய்வானாக!